Karna censured the practices of the Vahlikas! | Karna-Parva-Section-44 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுடைய அவையில் பல்வேறு நாடுகளைக் குறித்துப் பேசுகையில் பாஹ்லீக நாடு குறித்துப் சொல்லப்பட்டதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; பாஹ்லீகர்களின் நடைமுறை மற்றும் ஒழுக்கங்களைக் குறித்தும், பாஹ்லீக மகளிரின் நடத்தைகள் மற்றும் குடிவெறியைக் குறித்தும் பழித்துப் பேசிய கர்ணன்; இழிகுணங்கள் கொண்ட அந்தப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் எவனும் வாழலாமா என்று கேட்டது; பிராமணர்கள் மற்றும் ராட்சசப் பெண்மணிகள் பாஹ்லீகர்களைக் குறித்துச் சொன்னதை எடுத்துரைத்துச் சல்லியனைப் பழித்த கர்ணன்...
சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, எதிரி குறித்து நீ சொல்லும் இவை வெறும் பிதற்றல்களே! என்னைப் பொறுத்தவரை, ஆயிரம் கர்ணர்கள் இல்லாமலேயே நான் எதிரியைப் போரில் வெல்லவல்லவனாவேன்” என்றான்.(1)
சஞ்சயன் {கர்ணனனிடம்} தொடர்ந்தான், “கர்ணனிடம் இத்தகு இனிமையற்ற காரியங்களைச் சொன்னவனும், கடும் குணங்களைக் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அவன் {கர்ணன்}, இரு மடங்கு கசப்பான வார்த்தைகளால் மீண்டும் பேசினான்.(2)
கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, திருதராஷ்டிரரின் முன்னிலையில உரைக்கப்படும்போது என்னால் கேட்கப்பட்ட இவற்றைக் கவனமான ஈடுபாட்டுடன் கேட்பீராக.(3) இனிமை நிறைந்த பல்வேறு நிலப்பகுதிகள், பழங்காலத்தின் மன்னர்கள் பலர் ஆகியவை குறித்துத் திருதராஷ்டிரரின் வசிப்பிடத்தில் பிராமணர்கள் உரை நிகழ்த்துவது வழக்கமாகும்.(4) பிராமணர்களில் முதன்மையானவரும், வயது முதிர்ந்தவருமான ஒருவர், பழங்கால வரலாறுகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பாஹ்லீகர்கள் மற்றும் மத்ரகர்களைப் பழித்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(5)
அறமற்றவர்களும், இமயம், கங்கை, சரஸ்வதி, யமுனை, குருக்ஷேத்திரம், சிந்து மற்றும் {அதன்} ஐந்து கிளை ஆறுகளைக்[1] கடந்து வாழ்பவர்களும், தூய்மையற்ற மக்களுமான பாஹ்லீகர்களை ஒருவன் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(6,7) பசுக்களைக் கொல்லும் களமும், போதையுண்டாக்கும் மதுவகைகளைச் சேமிப்பதற்கான இடமும் எப்போதும் (பாஹ்லீக) மன்னர்களுடைய வசிப்பிட நுழைவாயில்களின் அடையாளங்களாக விளங்கியதை நான் என் இளமைக்கால நாட்களில் இருந்து நினைவுகூர்கிறேன்[2].(8) மிகக் கமுக்கமான இயக்கம் {இரகசியமான காரியம்} ஒன்றிற்காக நான் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். அப்படி அங்கே தங்கியதன் விளைவாக நான் அந்த மக்களை நன்றாக அறிந்திருக்கிறேன்.(9)
[1] சிந்து நதியின் ஐந்து கிளை ஆறுகள், பஞ்சாபின் ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சத்லெஜ் ஆகிய ஆறுகளே. சதத்ரு, விபாசை, ஐராவதி, சந்திரபாகை, விதஸ்தை ஆகியவையே அவை என்று இந்தப் பகுதியிலேயே ஒரு குறிப்பு இருக்கிறது. சிந்து நதியைக் கடந்து, அதற்கு மேற்கே வாழும் பாஹ்லீகர்கள் என்று இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.[2] வேறொரு பதிப்பில், “பசுமாடுகளைக் கொல்லுகிற இடமானதால் கோவர்த்தனம் என்கிற பெயருள்ள ஆலமரமும் ஸுபாண்டமென்கிற பட்டணமும், கலிபுருஷன் பிரவேசிப்பதற்குரிய வாயில்களென்பதை நான் இளமை தொடங்கியே அறிந்திருக்கிறேன்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “அவர்களுடைய {பாஹ்லீகர்களுடைய} மன்னர்களின் பரம்பரையானது, கோவர்த்தனம் என்ற பெயரிலான ஓர் அத்திமரத்தையும், வாயிலினருகே சுபாண்டம் என்ற பெயருடைய ஒரு நாற்கர இடத்தையும் கொண்டிருந்ததை நான் என் இளமைக் கால நாட்களில் இருந்தே நினைவில் கொண்டிருக்கிறேன்” என்றிருக்கிறது. மேலும் பிபேக்திப்ராயின் பதிப்பில், இவ்வரிக்கான அடிக்குறிப்பில், “இஃது ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாற்கர இடமானது கால்நடைகளைக் கொல்வதற்கான இடமாகவும், சுபாண்டம் என்பது மதுவைச் சேகரித்து வைத்திருக்கும் இடமாகவும் சில வேளைகளில் பொருள் கொள்ளப்படுகிறது. இதற்கான சாத்தியங்கள் இருந்தாலும், இங்கே இது பொருந்துவதாகத் தெரியவில்லை” எனப் பிபேக் திப்ராய் விளக்கியிருக்கிறார்.
சாகலம் என்ற பெயரில் ஒரு நகரமும், ஆபகம் {நிம்நகை} என்ற பெயரில் {கீழ்நோக்கிப் பாயும்} ஓர் ஆறும், ஜார்த்திகர்கள் {சண்டாளர்கள்}[3] என்ற பெயரால் அறியப்படும் பாஹ்லீகர்களின் ஓர் இனக்குழுவும் அங்கே {பாஹ்லீக நாட்டில்} இருக்கின்றன. அம்மக்களின் நடைமுறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கனவாகும்.(10) வறுத்த வாற்கோதுமையை {பார்லியை} உண்டு, கௌடம் என்றழைக்கப்படும் மதுவை அவர்கள் குடிக்கிறார்கள். பூண்டுடன் {வேறு சில பதிப்புகளில் வெங்காயம் என்றிருக்கிறது} சேர்த்து மாட்டிறைச்சியையும் அவர்கள் உண்கிறார்கள். மேலும் அவர்கள், இறைச்சி கலந்த மாவு உருண்டைகளையும், பிறரிடம் இருந்து பெறப்பட்ட சோற்றையும்[4] உண்கிறார்கள். நல்லொழுக்கங்கள் எவையும் அவர்களிடம் கிடையாது[5].(11) அவர்களது மகளிர், மலர்மாலைகளும், கண்மையும் இல்லாமல், மதுவால் போதையுண்டு, ஆடைகளை இழந்து, சிரித்துக் கொண்டும், நகரங்களிலுள்ள வீடுகளின் சுவர்களுக்கு வெளியே ஆடிக் கொண்டும்,(12) கழுதை கத்துவது போலவும், ஒட்டகம் கதறுவதைப் போலவும் பல்வேறு வகைகளிலான ஆபாசப் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருப்பார்கள். புணர்ச்சியில் அவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாதவர்களாகவும், வேறு காரியங்கள் அனைத்திலும் அவர்கள் விருப்பப்படியே செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். குடிவெறியுடன் கூடிய அவர்கள், ஈர்க்கும் அடைமொழிகளால் {காமக்குறிப்பு வார்த்தைகளால்} ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வார்கள்.(13) தங்கள் கணவர்கள் மற்றும் தலைவர்களிடம் குடிபோதையின் வியப்பொலிகள் பலவற்றால் பேசுபவர்களும், பாஹ்லீகர்களில் வீழ்ந்துவிட்ட மகளிருமான அவர்கள், புனிதமான நாட்களிலும் கூட எக்கட்டுப்பாட்டையும் பின்பற்றாமல், ஆடிக் கொண்டே இருப்பார்கள்[6].(14)
[3] தற்கால அப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களே பாஹ்லீகர்கள் என்றாலும், பஞ்சாபைச் சுற்றியே அவர்கள் வசித்து வந்தனர். சாகலம் என்பது தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் என்ற நகரத்தைக் குறிக்கிறது. அபகம் என்ற நதியானது சந்திரபாகை அதாவது செனாப் நதியைக் குறிக்கிறது. ஜாட் என்பது ஜார்த்திக என்ற சொல்லில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. மத்ரர்கள் பாஹ்லீகர்களுடன் மிக நெருங்கியவர்களாவர்.[4] “கட்டுப்பாடான இந்துக்கள், பிறரிடம் இருந்து சோற்றைப் பெறாமல், தங்கள் அரிசியைத் தாங்களே {சோறாகப்} பொங்க வேண்டும். இந்த நடைமுறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.[5] வேறொரு பதிப்பில், “(அந்தப் பாஹ்லீக தேசத்தில்) சாகலமென்கிற நகரம் இருக்கின்றது, நிம்நகை என்கிற நதி இருக்கின்றது, சண்டாளர்களென்கிற பாஹ்லீகர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய நடை மிக இழிவானது. சீலமற்றவர்களான அவர்கள் வெல்லம் சேர்ந்த சாராயத்தைப் பானஞ்செய்துவிட்டு, வெங்காயங்களுடன் கோமாம்ஸத்தையும் பக்ஷிக்கின்றார்கள். அந்தப் பாஹ்லீகர்கள் பணியாரங்களையும், மாவையும் தின்கிறார்கள். கள்ளையும் குடிக்கிறார்கள்” என்றிருக்கிறது.[6] வேறொரு பதிப்பில், “புணர்ச்சியில் தம்புருஷர், அயல்புருஷர் என்கிற விவேகமில்லாதவர்களாகவும், எல்லா விதத்தினாலும் தம் இஷ்டப்படி செய்கின்றார்கள். மதத்தினாலே வரம்பு கடந்தவர்களான அம்மாதர்கள் ஒருவரோடொருவர் காமக்குறிப்பான வார்த்தைகளை உரக்கச் சொல்லுகின்றார்கள். வராத்யர்களான அந்த ஸ்திரீகள் கட்டுப்படாதவர்களாக, “ஓ அடிபட்டவளே, ஓ அடிபட்டவளே” என்றும், “எஜமானனாலடிபட்டவளே, கணவனாலடிப்பட்டவளே” என்றும் உரக்கக்கூச்சலிட்டுக் கொண்டு உத்ஸவ தினங்களில் கூத்தாடுகிறார்கள்” என்றிருக்கிறது.
தீய பாஹ்லீகர்களில் ஒருவனும், ஆணவம் கொண்ட அந்தப் பெண்களுக்கு மத்தியில் வாழ்ந்தவனும், சில நாட்கள் குருஜாங்கலத்தில் வாழ நேர்ந்தவனுமான ஒருவன், உற்சாகமற்ற இதயத்துடன்,(15) “ஐயோ, பருத்த அங்கங்களைக் கொண்டவளும், மெல்லிய கம்பளிகளை {ஆடைகளை} உடுத்தியவளுமான அந்த (பாஹ்லீகக்) கன்னிகை, கட்டிலுக்கு {படுக்கைக்குப்} போகும் இந்த வேளையில், இப்போது குருஜாங்கலத்தில் நாட்களைக் கடத்தி வரும் அவளது காதலனான என்னை நினைத்திருப்பாளே.(16) சத்லஜ் மற்றும் இனிமை நிறைந்த ஐராவதி ஆகியவற்றை {ஆறுகளைக்} கடந்து, என் சொந்த நாட்டை அடைந்து, தடித்த நுதலெலும்பை {நெற்றியைக்} கொண்டவர்களும், நெற்றியில் சிவந்த அரிதாரத்தாலான சுடர்மிக்க வளையங்களைக் கொண்டவர்களும், கண்களில் கருப்பு மையிலான இழைகளைக் கொண்டவர்களும், தங்கள் அழகிய வடிவங்களின் மேல் கம்பளிகள் மற்றும் தோல்களால் உடுத்தியிருப்பவர்களும், கீச்சுக் குரலால் பேசுபவர்களுமான அந்த அழகு நிறைந்த பெண்கள் மீது எப்போது நான் என் கண்களைச் செலுத்த போகிறேன்?(17,18) கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றின் கதறல்களைப் போலவே, இனிமையான மிருதங்கங்கள், ஆனகங்கள் மற்றும் சங்குகளின் இசைக்கு மத்தியில் போதையிலிருக்கும் அம்மகளிரின் தோழமையில் நான் எப்போது இன்புற்றிருக்கப் போகிறேன்?(19) வன்னி, பீலு மற்றும் மூங்கில் மரங்கள் அடர்ந்த காடுகளின் இனிய பாதைகளில், மோருடன் கூடிய பணியாரங்கள், மாவு உருண்டைகளை உண்ணும் அந்த மகளிருக்கு மத்தியில் நான் எப்போது இருக்கப்போகிறேன்?(20) தங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு, நெடுஞ்சாலைகளில் வரும் வழிப்போகர்களின் மீது பாய்ந்து, அவர்களது மேலங்கிகளையும், உடைகளையும் பறித்துக் கொண்டு, அவர்களை மீண்டும் மீண்டும் தாக்கும் என் சொந்த நாட்டு மக்களுக்கு மத்தியில் நான் எப்போது இருக்கப்போகிறேன்?” என்று வெடித்துச் சொல்கிறான் {பாடுகிறான்}.(21)
இந்த அளவுக்கு வீழ்ந்துவிட்டவர்களும், தீயவர்களும், நடைமுறைகள் தவறியவர்களுமான அந்தப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் ஒரு கணமாவது விருப்பத்துடன் வசிக்க எந்த மனிதன்தான் இருக்கிறான்?(22) ஓ! சல்லியரே, எவரின் தகுதிகள் {புண்ணியம்} மற்றும் குறைகளில் {பாவங்களில்} ஆறில் ஒரு பங்கை நீர் கொண்டிருக்கிறீரோ, அந்தப் பாஹ்லீகர்களின் இழிவான நடத்தையை இவ்வாறே அந்தப் பிராமணர் விளக்கினார்.(23) இதைச் சொன்ன அந்த நல்ல பிராமணர், தீய பாஹ்லீகர்களைக் குறித்து மீண்டும் சொன்னதை நான் உமக்குத் திரும்பச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக.(24) பெரியதும், மக்கள் தொகை அதிகம் கொண்டதுமான அந்தச் சாகல நகரத்தில், ஒவ்வொரு தேய்பிறை பதினான்காம் நாளிலும் {சதுர்த்தசியிலும்} ஒரு ராட்சசப் பெண், தனது துந்துபியின் {இசைக்கருவியின்} துணையுடன், “மாட்டிறைச்சியைக் கழுத்துவரை உண்டு, கௌட மதுவை உண்டு, பாஹ்லிகர்கள் குறித்த பாடல்களை நான் இனி எப்போது சாகல நகரத்தில் பாடப்போகிறேன்?(26), ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பருத்த அங்கங்களைக் கொண்ட அந்தக் கன்னிகைகள் மற்றும் மகளிருடன் சேர்ந்து, பெரும் அளவிலான ஆட்டிறைச்சியையும், பெரும் அளவிலான பன்றி, மாடு, வளர்ப்புப்பறவை {கோழி}, கழுதைகள் மற்றும் ஒட்டங்கங்களின் இறைச்சியையும் நான் எப்போது கழுத்துவரை உண்ணப் போகிறேன்? ஆட்டிறைச்சி உண்ணாதவர்கள் வீணாகவே வாழ்கிறார்கள்” என்று பாடுவாள்.(27,28) ஓ! சல்லியரே, இவ்வாறே இளைஞர்களும், முதிர்ந்தவர்களுமான சாகலவாசிகள், மதுவால் போதையுற்று பாடிக் கதறுகின்றனர். இத்தகு மக்களுக்கு மத்தியில் எவ்வாறு அறமிருக்க முடியும்?(29)
இதையும் நீர் அறியவேண்டும். எனினும், குரு சபையில் மற்றுமொரு பிராமணர் எங்களிடம் சொன்னதை நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன்:(30) “பீலு மரங்களைக் கொண்ட காடுகள் எங்கிருக்கின்றனவோ, தங்களில் ஆறாவதாகச் சிந்துவை {சிந்து நதியைக்} கொண்ட சதத்ரு, விபாசை, ஐராவதி, சந்திரபாகை, விதஸ்தை ஆகிய ஐந்து ஆறுகளும் எங்குப் பாய்கின்றனவோ, இமயத்தில் இருந்து அகன்று இருப்பவையான அந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் ஆரட்டாகள்[7] என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. அப்பகுதிகள் அறமும், அறநெறிகளும் அற்று இருக்கின்றன. அங்கே எவரும் செல்லக்கூடாது.(31,32) தேவர்களும், பித்ருக்களும், பிராமணர்களும், வீழ்ந்துவிட்டவர்களிடமிருந்தோ, பிற வர்ணப் பெண்களிடம் சூத்ரர்களால் பெறப்பட்டவர்களிடமிருந்தோ, வேள்விகளைச் செய்யாதவர்களும், மிகவும் அறமற்றவர்களுமான பாஹ்லீகர்களிடமிருந்தோ கொடையேதும் பெறுவதில்லை” என்றார். கல்விமானான அந்தப் பிராமணர் அந்தக் குரு சபையில் மேலும்,(33,34) “பாஹ்லீகர்கள், அகன்ற வயிறுகளைக் கொண்ட மரப் பாத்திரங்களிலும், மண் பாத்திரங்களிலும், நாயால் நக்கப்பட்டவையும், அழுகிய வாற்கோதுமை மற்றும் பிற தானியங்களால் கறைபட்டவையுமான பாத்திரங்களிலும் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்கிறார்கள்.(35) பாஹ்லீகர்கள், ஆடு, ஒட்டகம் மற்றும் கழுதைகளின் பாலைக் குடித்து, பல்வேறு வகையான அந்தப் பால்களில் உண்டாகும் தயிரையும், பிற உணவுகளையும் உண்கிறார்கள்.(36) அந்தத் தரமிழந்த மக்கள், தங்களில் பல வேசி மகன்களையும் கொண்டுள்ளனர். அவர்கள் உண்ணாத உணவோ, பாலோ எதுவும் கிடையாது. அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆரட்டா-பாஹ்லீகர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்களாவர்” என்றும் சொன்னார்.(37)
[7] ஆரட்டாவின் சரியான இருப்பிடம் குறித்துப் பல ஊகங்கள் இருக்கின்றன. இந்தப் பெயர் சுமேரியக் கதைகளிலும் வருகிறது.
ஓ! சல்லியரே இதையும் நீர் அறிய வேண்டும். எனினும், குரு சபையில் என்னிடம் பேசிய மற்றொரு பிராமணர் சொன்னதையும் நான் உமக்குச் சொல்ல வேண்டும். அவர்,(38) “யுகந்தரம் என்றழைக்கப்படும் நகரத்தில் பாலைக் குடித்துவிட்டு, அச்யுதஸ்தலம் என்ற இடத்தில் வசித்து, பூதிலயம் என்ற இடத்தில் நீராடிய ஒருவனால் எவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்?[8](39) மலைகளில் இருந்து பாய்ந்தவுடன் எங்கே ஐந்து ஆறுகள் இருக்கின்றனவோ, அங்கே ஆரட்டா பாஹ்லீகர்களுக்கு மத்தியில், மதிப்பிற்குரிய எந்த மனிதனும் {எந்த ஆரியனும்} இரு நாட்களுக்குக்கூடத் தங்கக் கூடாது.(40) விபாசை ஆற்றில், பாஹி மற்றும் ஹீகன் என்ற பெயரில் இரு பிசாசங்கள் வசிக்கின்றன. அவை படைப்பாளனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் இல்லை. இவ்வளவு இழிந்த பிறவிகளைக் கொண்ட அவர்களால் {பாஹ்லீகர்களால்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை எவ்வாறு அறிய முடியும்?(41) காரஷ்கரர்கள், மாஹிஷகர்கள், கலிங்கர்கள், கேரளர்கள், கார்க்கோடகர்கள், வீரகர்கள் மற்றும் அறமற்ற வேறு மக்கள் ஆகியோரை ஒருவன் தவிர்க்க வேண்டும்[9]” என்றார்.(42)
[8] “யுகந்தரத்தில் அனைத்து வகைப் பால்களும் விற்கப்படுகின்றன, அருந்தப்படுகின்றன. அந்த நகரத்தில் பால் குடித்தவன் எவனும் தூய பாலை அருந்தியதாகச் சொல்ல முடியாது. அச்யுதஸ்தலத்தில் மகளிர் கற்பில்லாதவர்களாக இருந்தனர், மக்களின் நடத்தையும் அறமற்றிருந்தது. அங்கு வசிப்பவனால் சீர்கேட்டைத் தவிர்க்க முடியாது. மேலும், பூதிலயத்தில், பிராமணர்களும், சண்டாளர்களும் சேர்ந்து நீராடிய நீர் நிலை ஒன்றுண்டு. இவ்வாறே நீலகண்டர் சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] வேறொரு பதிப்பில், “காரஷகரத்தையும், மாஹிஷகத்தையும், கரம்பத்தையும், கரகாலிரதத்தையும், காரகாசத்தையும், வீரகத்தையும் உன்மதத் தேசத்தையும் வீரர்கள் (நேர்ந்தால்) ஓரிரவு வாசம் செய்து விலக வேண்டும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “காரஷ்கரர்கள், மாஹிஷகர்கள், கலிங்கர்கள், கிகடர்கள், அடவிகள், கார்க்கோடகர்கள், வீரர்கள் ஆகிய அறமற்றோரை ஒருவன் தவிர்க்க வேண்டும்” என்றிருக்கிறது.
இவ்வாறே பெரும் இடையைக் கொண்ட ஒரு ராட்சசப் பெண்மணி, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் புனித நீராடுவதற்காக அந்நாட்டிற்குச் சென்று ஒரு நாளை கடக்க நேர்ந்த அந்தப் பிராமணரிடம் சொன்னாள்.(43) அந்தப் பகுதிகள் ஆரட்டாகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அங்கே வசிக்கும் மக்கள் பாஹ்லீகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மிகப் புராதனமான காலங்களில் இருந்தே பிராமணர்களில் இழிந்தோர் அங்கே வசித்து வருகின்றனர்.(44) அவர்கள் வேதமற்றவர்களாக, அறிவற்றவர்களாக, வேள்வியற்றவர்களாக, பிறரின் வேள்விகளில் துணை புரியும் சக்தி அற்றவர்களாகவே இருக்கின்றனர். வீழ்ந்துவிட்ட அவர்கள் அனைவரும், அவர்களில் பலரும், பிற மக்களின் பெண்களிடம் சூத்திரர்களால் பெறப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். தேவர்கள் அவர்களிடம் இருந்து எந்தக் கொடைகளையும் பெறுவதில்லை.(45) பிரஸ்தாலர்கள், மத்ரர்கள், காந்தாரர்கள், ஆரட்டாகள், காசர்கள் என்று அழைக்கப்படுவோர், வசாதிகள், சிந்துக்கள், சௌரவீரர்கள் ஆகியோர் அவர்களின் நடைமுறைகளுக்காகக் கிட்டத்தட்ட பழிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர்” என்றான் {கர்ணன்}.(46)
-----------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -44ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |