Kalmashapada’s censure of Madrakas! | Karna-Parva-Section-45 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : காந்தாரர்கள், மத்ரகர்கள் பாஹ்கீலகர்ளைக் குறித்து ஒரு பிராமணர் சொன்னதைச் சஞ்சயனுக்கு விளக்கிச் சொன்ன கர்ணன்; ஆரட்டர்கள் மீது விழுந்த, கற்புடைய பெண் ஒருத்தியின் சாபம்; கல்மாஷபாதன் என்ற ஒரு ராட்சசன் மத்ரகர்களைக் குறித்துச் சொன்னதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; அதைத் தொடர்ந்து மேலும் மத்ரகர்களைப் பழித்த கர்ணன்; அனைவரையும் பழிக்கலாகாது எனக் கர்ணனுக்கு எடுத்துச் சொன்ன சல்லியன்; மேற்கொண்டு கர்ணனும், சல்லியனும் வாக்குவாதம் செய்யாதவாறு தடுத்த துரியோதனன்; கர்ணனும், சல்லியனும் போரிட ஒரே தேரில் புறப்பட்டது...
கர்ணன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “ஓ! சல்லியரே, இவை யாவையும் நீர் அறிந்திருக்க வேண்டும். எனினும் நான் உமக்கு மீண்டும் சொல்கிறேன். நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பீராக.(1) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். எங்கள் நடைமுறைகளைக் கண்டு மிகவும் மனம் நிறைந்த அவர், எங்களிடம்,(2) “நான் நீண்ட காலம் இமயச் சிகரமொன்றில் தனியாக வசித்திருந்தேன். அப்போதிருந்தே பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளை நான் கண்டிருக்கிறேன்.(3) எனினும், ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் நேர்மையில்லாமல் செயல்படுவதை நான் கண்டதே இல்லை. நான் சந்தித்த அனைத்து குலத்தவரும் வேதங்களை அறிந்தோரால் அறிவிக்கப்பட்டதே உண்மையான அறம் என்று ஏற்கிறார்கள்.(4) பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளின் வழியாகப் பயணித்த நான், ஓ! மன்னா {கர்ணா}, இறுதியாகப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் சென்றேன்.(5)
அங்கே முதலில் ஒருவன் பிராமணனாவதாகவும், பிறகு க்ஷத்திரியனாவதாகவும் நான் கேள்விப்பட்டேன். உண்மையில் அதன் பிறகே ஒரு பாஹ்லீகன், வைசியனாகவும், அதன்பிறகு, சூத்திரனாகவும், அதன் பிறகு நாவிதனாகிறான்.(6) நாவிதனாகும் அவன், பிறகு {அடுத்த பிறவியில்} மீண்டும் ஒரு பிராமணனாகிறான். பிராமண நிலைக்குத் திரும்பிய அவன், மீண்டும் ஓர் அடிமையாகவே ஆகிறான்.(7) ஒரே குடும்பத்தில், ஒருவன் பிராமணனானால்; மற்ற அனைவரும் அறத்தில் இருந்து விழுந்து, தாங்கள் விரும்பியபடி செயல்படுகின்றனர்.[1](8) அற்ப புத்தி கொண்ட காந்தாரர்கள், மத்ரகர்கள், பாஹ்லீகர்கள் ஆகியோர் இப்படியே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பயணித்து வந்த நான், பாவம் நிறைந்த ஒழுங்கின்மைகளால் அறத்திற்கு அழிவை உண்டாக்கும், இந்நடைமுறைகளைக் குறித்துப் பாஹ்லீகர்களிடமே கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.(9)
[1] வேறொரு பதிப்பில், “சிஷ்டர்களான பிராம்மணர்களும் ஒரு குலத்தில் காமசாரிகளாகயிருக்கின்றார்கள்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கே அறம்சார்ந்த ஒரு பிராமணன் இருக்கிறான். மற்றவர்கள் அனைவரும் அவரவர் ஆசைகளைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்” என்றிருக்கிறது.
ஓ! சல்லியரே இவை யாவையும் நீர் அறிந்திருக்க வேண்டும். எனினும், பாஹ்லீகர்களைக் குறித்து மேலும் ஒருவர் என்னிடம் சொன்ன இழிவார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன்.(10) பழங்காலத்தில் கற்புடைய ஒரு பெண் ஆரட்டா (ஆராட்டாவைச் சேர்ந்த) கள்வர்களால் கடத்திச் செல்லப்பட்டாள். பாவம் நிறைந்த வகையில் அவர்களால் அவள் களங்கப்படுத்தப்பட்டதும், அவர்களை அவள்,(11) “கணவனற்றவளும் {திருமணமாகாதவளும்}, ஆதரவற்றவளுமான ஒரு பெண்ணை நீங்கள் பாவகரமாகக் களங்கப்படுத்தியிருப்பதால், உங்கள் குடும்பங்களின் பெண்டிர் அனைவரும் கற்பற்று போகட்டும்.(12) மனிதர்களில் இழிந்தோரே, இந்தப் பயங்கரப் பாவத்தின் விளைவுகளில் இருந்து உங்களால் தப்பவே முடியாது” என்று சபித்தாள். ஓ! சல்லியரே, இதன் காரணமாகவே, ஆரட்டர்களுடைய சகோதரிகளின் மகன்கள் அவர்களுக்கு வாரிசுகளாகிறார்களே அன்றிச் சொந்த மகன்கள் அவர்களுடைய வாரிசுகளாவதில்லை[2].(13) பெரும் அருளைப் பெற்றவர்களான கௌரவர்கள், பாஞ்சாலர்கள், சால்வர்கள், {மத்ஸ்யர்கள்}, நைமிசர்கள், கோசலர்கள், காசப்பௌண்டிரர்கள் {காசர்கள், பௌண்டிரர்கள் [அல்லது காசிகள், அங்கர்கள்}, கலிங்கர்கள், மகதர்கள்,(14) சேதிகள் {சைத்யர்கள்} ஆகியோர் அனைவரும் நிலைத்த அறம் எதுவென அறிந்தவர்கள். பல்வேறு நாடுகளில் இருக்கக்கூடிய பொல்லாதவர்கள் கூட அறமெதுவென அறிகிறார்கள். எனினும், பாஹ்லீகர்கள் நீதியற்றே வாழ்கிறார்கள்.(15)
[2] வேறொரு பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் வாரிசாதல் குறித்த இந்தச் செய்தி இல்லை. “ஆகவே, அந்தப் பாஹ்லீக நாட்டுத் திருடர்களுடைய பாகத்தைப் பெற்றுக் கொள்ளுகின்ற நீ எவ்வாறு தர்மங்களைப் பேசுவாய்?” என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
மத்ஸ்யர்களில் தொடங்கி, குரு, பாஞ்சால நாட்டுவாசிகளும், நைமிசவாசிகளும், மதிப்பிற்குரிய பிற மக்களும், அனைத்துக் குலங்களில் உள்ள பக்திமான்களும், அறத்தின் நிலைத்த உண்மைகளை அறிகிறார்கள். {ஆனால்}, மத்ரகர்கள் மற்றும் ஐந்து ஆறுகள் பாயும் நாட்டில் வசிக்கும் கோணல் மனம் கொண்டோரைக் குறித்து இவ்வாறு சொல்ல முடியாது.(16) ஓ! மன்னா {சல்லியரே}, இக்காரியங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு, அறம் மற்றும் அறநெறியோடு தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும் சொற்களை இழந்த ஒருவனைப் போல உமது நாவை அடக்கிக் கொள்வீராக. நீரே அம்மக்களின் பாதுகாவலரும், மன்னரும் ஆவீர், எனவே, அவர்களது தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகள் {பாவங்கள்} ஆகியவற்றின் ஆறில் ஒரு பங்கைக் கொள்பவராகவும் நீரே இருக்கிறீர்.(17) அல்லது ஒருவேளை, நீர் அவர்களை எப்போதும் பாதுகாத்ததில்லை என்பதால், அவர்களது குறைகளில் {பாவங்களில்} மட்டுமே ஆறில் ஒரு பங்கைக் கொள்பவராவீர். பாதுகாக்கும் மன்னனே குடிமக்களின் தகுதிகளில் {புண்ணியங்களில்} பங்கு கொள்ள முடியும். நீர் அவர்களது தகுதிகளில் {புண்ணியங்களில்} பங்கு கொள்பவர் அல்ல.(18)
பழங்காலத்தில் நிலைத்த அறமானது அனைத்து நாடுகளிலும் போற்றி மதிக்கப்பட்ட போது, பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஐந்து ஆறுகளைக் கொண்ட நாட்டின் நடைமுறைகளை உற்று நோக்கி அவர்களை நிந்தித்தான்.(19) கிருத யுகத்திலேயே, பிறர் நிலத்தில் {பிறன் மனையிடம்} சூத்திரர்களால் பெறப்பட்டவர்களும், தீய செயல்பாடுகளைக் கொண்டவர்களும், வீழ்ந்துவிட்டவர்களுமான அம்மக்களின் நடைமுறைகளைப் பிரம்மன் நிந்தித்தான் என்றால், இப்போது {இக்காலத்தில் உள்ள} உலகின் மனிதர்களுக்கு நீர் என்ன சொல்வீர்?(20) இப்படியே பெரும்பாட்டன், ஐந்து ஆறுகள் பாயும் அந்த நாட்டின் நடைமுறைகளைக் கண்டித்தான். மக்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது, பெரும்பாட்டன் இம்மனிதர்களிடம் களங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.(21) ஓ! சல்லியரே, இவை யாவையும் நீர் அறிய வேண்டும். எனினும், நான் இன்னும் உமக்குச் சொல்வேன். கல்மாஷபாதன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், ஒரு குளத்தில் மூழ்கும்போது,(22) “பிச்சையெடுப்பது க்ஷத்திரியனுக்கு மாசு கற்பிக்கும், அதே போல நோன்புகளை நோற்காதிருப்பது பிராமணர்களுக்கு மாசு கற்பிக்கும். பாஹ்லீகர்கள் பூமியின் மாசாவார்கள், மத்ரப் பெண்டிர் மொத்த பெண்பாலினத்தின் மாசாவார்கள்” என்று சொன்னான்.(23) அப்படி ஓடையில் மூழ்கிய அந்த ராட்சசனை {கல்மாஷபாதனை} ஒரு மன்னன் காப்பாற்றினான். பின்னவனால் {மன்னனால்} கேட்கப்பட்ட முன்னவன் {ராட்சசன்}, இந்த {பின்வரும்} பதிலை சொன்னான். நான் சொல்வதைக் கேட்பீராக.(24) {அந்த ராட்சசன் கல்மாஷபாதன்}, “மனிதகுலத்தில் மிலேச்சர்கள் மாசடைந்தவர்கள்; மிலேச்சர்களைவிட எண்ணெய் விற்பவர்கள் மாசடைந்தவர்கள்; எண்ணெய்விற்பவர்களைவிட அலிகள் மாசடைந்தவர்கள்; தங்கள் வேள்விகளில், க்ஷத்திரியர்களைப் புரோகித வேலைக்கு வைத்துக் கொள்பவர்கள் அலிகளைவிட மாசடைந்தவர்களாவர்.(25) நீ என்னைக் கைவிடவில்லையென்றால், இறுதிப் பெயர்களைக் கொண்ட நபர்களை {க்ஷத்திரியர்களைத்} தங்கள் புரோகிதராகக் கொண்டோரும், மத்ரகர்களும் அடையும் பாபத்தை நீ அடைவாய்” என்றான் {கல்மாஷபாதன்}[3].(26)
[3] வேறொரு பதிப்பில், “மனுஷ்யர்களுள் மிலேச்சர்கள் பாபிகள், மிலேச்சர்களிலும் முஷ்டிகர்கள் {பொற்கொல்லர்கள்} பாபிகள்; முஷ்டிகர்களிலும் ஷண்டர்கள் {கடுஞ்சினம் கொண்டவர்கள்} பாபிகள்; ஷண்டர்களிலும், ராஜபுரோகிதர்கள் பாபிகள்; ராஜபுரோகிதனைச் சிஷ்யனாகக் கொண்டவர்களுக்கும், மத்ரகர்களுக்கும் எந்தப் பாபமுண்டோ, அந்தப் பாபமானது என்னை விடாமலிருந்தால் உனக்குச் சம்பவிக்கும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “மனிதர்களில் மிலேச்சர்கள் மாசானவர்கள். மிலேச்சர்களில் சண்டைக்காரர்கள் {அல்லது நாய்கள்} மாசானவர்கள். சண்டைக்காரர்களில் அலிகள் மாசானாவர்கள். புரோகிதராகச் செயல்படும் மன்னர்கள் அலிகளில் மாசானாவர்கள். புரோகிதராகச் செயல்படும் மன்னர்களில் மத்ரகர்கள் மாசானவர்கள். நீ என்னைக் காக்கவில்லையெனில் அனைத்து மாசுகளும் உனதாகும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
ஒரு ராட்சசனாலோ, நஞ்சின் சக்தியாலோ கொல்லப்பட்டவனை மீட்கும் சூத்திரமாக இதையே அந்த ராட்சசன் அறிவித்தான். பின்வரும் வார்த்தைகள் அனைத்தும் மிக உண்மையே.(27) வேதங்களில் சொல்லப்பட்ட கடமைகளைப் பாஞ்சாலர்கள் பின்பற்றுகிறார்கள்; கௌரவர்கள் உண்மையை {சத்தியத்தைப்} பின்பற்றுகிறார்கள்; மத்ஸ்யர்களும், சூரசேனர்களும் வேள்விகளைச் செய்கிறார்கள்; கிழக்கத்தியர் சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்; தெற்கத்தியர்கள் வீழ்ந்துவிட்டவர்களாவர்; பாஹ்லீகர்களோ திருடர்கள்; சௌராஷ்டிரர்கள் வேசி மகன்களாவர்[4].(28) நன்றிகெட்டத்தனம், திருட்டு, குடி, ஆசான்களின் மனைவியரோடு முறைபிறழ் புணர்ச்சியில் ஈடுபடுவது, கடுமொழி, பசுக்கொலை, இரவில் வீட்டைவிட்டு வெளியே காமத்தோடு திரிதல், பிறரின் ஆபரணங்களை அணிவது ஆகியவற்றால் தூய்மையற்றவர்களாக ஆனவர்களால் என்ன பாவத்தைத்தான் செய்ய முடியாது?(29)
[4] வேறொரு பதிப்பில், “பாஞ்சாலர்கள் பிரம்மதேஜஸையுடைவர்கள், கௌரவர்கள் தர்மத்தைவிட்டு விலகாதவர்கள்; மத்ஸ்ய தேசத்து ஜனங்கள் ஸத்யத்தில் நிலைபெற்றவர்கள். சூரசேனர்கள் யாகஞ்செய்விக்கத் தக்கவர்கள். கீழ்நாட்டிலுள்ளவர்கள் தாஸர்கள், தென்னாட்டிலுள்ளவர்கள் வருஷளர்கள், பாஹ்லீகர்கள் திருடர்கள், சுராஷ்டிரர்கள் ஸாங்காயமுள்ளவர்கள்” என்றிருக்கிறது.
மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “பாஞ்சாலர்கள் பிரம்மத்தைப் பின்பற்றுகிறார்கள். கௌரவேயர்கள் தன்னறத்தைப் பின்பற்றுகிறார்கள். மத்ஸ்யர்கள் உண்மையை நோற்கிறார்கள், சூரசேனர்கள் வேள்விகளைச் செய்கிறார்கள், கிழக்குப் பகுதிகளைச் சார்ந்தோர் அடிமைகளைப் போன்றாராவர். தெற்குப் பகுதிகளைச் சார்ந்தோர் அலட்சியம்செய்யத் தக்கவர்கள். பாஹ்லீகர்கள் திருடர்கள், சௌராஷ்டிரர்களோ கலப்பினத்தவராவர்” என்றிருக்கிறது.
பாஞ்சாலர்கள் தொடங்கி, கௌரவர்கள், நைமிசர்கள், மத்ஸ்யர்கள் ஆகிய இவர்கள் யாவரும், அறம் யாது என்பதை அறிவார்கள். வடக்கத்தியர்கள், அங்கர்கள், மகதர்கள் ஆகியோர் (அறநெறிகளை அறியவில்லையெனினும்) பக்திமான்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.(30) அக்னியின் தலைமையிலான தேவர்கள் பலர் கிழக்கில் வசிக்கின்றனர். அறச்செயல்களைச் செய்யும் யமனால் ஆட்சி செய்யப்படும் தெற்கில் பித்ருக்கள் வசிக்கின்றனர்.(31) மேற்கில் இருக்கும் பிற தேவர்களை வலிமைமிக்க வருணன் மேற்பார்வை செய்கிறான். வடக்கானது தெய்வீக சோமனாலும், பிராமணர்களாலும் பாதுகாக்கப்படுகிறது.(32) ராட்சசர்களும், பிசாசங்களும் மலைகளில் சிறந்த இமயத்தைப் பாதுகாக்கின்றனர். ஓ! பெரும் மன்னா {சல்லியரே}, குஹ்யர்களோ, கந்தமாதன மலைகளைப் பாதுகாக்கின்றனர். ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் விஷ்ணுவோ, உயிரினங்கள் அனைத்தையும் ஐயமறப் பாதுகாக்கிறான். (இவையாவும் இப்படி இருந்தாலும், பாஹ்லீகர்களோ தேவர்களில் தங்களைக் காக்க எவரையும் கொண்டிருக்கவில்லை).(33)
மகதர்கள் குறிப்புகளால் அறிந்து கொள்கிறார்கள்; கோசலர்கள், தாங்கள் காண்பவற்றால் அறிந்து கொள்கிறார்கள்; குருக்களும், பாஞ்சாலர்களும், பாதி உரைக்கப்பட்ட பேச்சில் அறிந்து கொள்கிறார்கள்; முழுமையாகப் பேசினாலும் சால்வர்களால் அறிந்து கொள்ள முடியாது.(34) சிபிக்களைப் போன்ற மலைவாசிகள் பெரும் மூடர்களாவர்[5]. யவனர்களோ அனைத்துமறிந்தவர்கள்; குறிப்பாகச் சூரர்களும் கிட்டத்தட்ட அதுபோலவே அனைத்துமறிந்தவர்களே.[6](35) பிற மக்களால் புரிந்து கொள்ள முடியாது; நன்மையான ஆலோசனைகளைச் சொன்னால் பாஹ்லீகர்கள் சினமடைவார்கள்; மத்ரகர்களைப் பொறுத்தவரை (மேலே குறிப்பிட்டவற்றில்) எவற்றிலும் அவர்கள் சேராதவர்கள். ஓ! சல்லியரே, நீரும் அவ்வாறானவரே. எனக்கு மறுமொழி சொல்லாதீர்.(36) மத்ரகர்கள் பூமியில் உள்ள அனைத்து நாடுகளைவிடவும் மாசடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதே போல மத்ர மகளிர் மொத்த பெண் பாலினத்திலேயே மாசடைந்தவர்களாக அழைக்கப்படுகிறார்கள்.(37) மது குடித்தல், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கப்படுத்தல், தவறான புணர்வால் உற்ற கருவை அழித்தல், அடுத்தவரின் செல்வத்தைக் களவாடுதல் ஆகியவற்றைத் தங்கள் நடைமுறைகளாகக் கொண்டவர்கள் செய்யாத பாவங்களே ஏதுமில்லை. ஆரட்டாகளுக்கும், ஐந்து ஆறுகள் பாயும் நாட்டின் மக்களுக்கும் ஐயோ.(38) இதை அறிந்து கொண்டு அமைதியடைவீராக. என்னை எதிர்க்க முயலாதீர். முதலில் உம்மைக் கொன்ற பிறகு, கேசவனையும், அர்ஜுனனையும் கொல்லும் நிலையை எனக்கு ஏற்படுத்திவிடாதீர்” {என்றான் கர்ணன்}.(39)
[5] “உண்மையில், ‘சற்றே சிரமப்பட்டால் பொருளைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள்” என்பதே சரியாக இருக்கும்” என இங்கே கங்குலி விளக்குகிறார்.[6] கிரேக்கர்களான யவனர்களுக்கும், சூரர்களுக்கும் இது மிகப் பெயரிய பாராட்டாகும். இந்த வாக்கியத்தின் சக்தியை விளக்கி அவநம்பிக்கைகொள்ள வைக்க நீலகண்டர் தீவிர முயற்சி செய்கிறார்; ஆனால் அதில் மிக மோகசாமாகத் தோற்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “நிச்சயம் மகதர்கள் இங்கிதத்தினால் அறிகிறவர்கள், கோஸலகர்கள் பார்வையினால் அறிகிறவர்கள். கௌரவர்களும், பாஞ்சாலர்களும் பாதிச் சொல்லுவதனால் தெரிந்து கொள்கிறவர்கள், மலைநாட்டில் வசிப்பவர்கள் மலைகளைப் போல் விஷமஸ்வபாவமுடையவர்கள். அரசனே, யவனர்கள் எல்லாம் அறிந்தவர்கள், முக்கியமாகச் சூரர்களும் அப்படியே. மிலேச்சர்கள் (சாஸ்திர வழியில் செல்லாமல்) தாங்கள் செய்து கொண்ட கட்டுப்பாட்டிலேயே நிற்பவர்கள். மற்றவர்கள் ஹிதத்தைச் சொல்லாமல் தெரிந்துகொள்ளுவதில்லை. பாஹ்லீகர்களோ குருத்துரோகிகள், மத்ரகர்கள் ஒருவித வகுப்பிலும் சேராதவர்கள்” என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கூட மேற்கண்டதைப் போலவும், கங்குலியில் உள்ளதைப் போலவுமே இருக்கிறது. இவ்வரிகளில் நான்கு பதிப்புகளும் ஒத்துப் போகின்றன.
சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, {நோயினால் பீடிக்கப்பட்டு} துன்புறுவோரைக் கைவிடுதல், மனைவியையும், மக்களையும் விற்பனை செய்தல் ஆகியன நீ மன்னனாக இருக்கும் அங்கர்களுக்கு மத்தியில் பரவலாக நடைபெறுகிறது.(40) பீஷ்மர், உனது அந்தக் களங்களைச் சிந்தித்தே, ரதர்களையும், அதிரதர்களையும் பட்டியலிட்டபோது, உன் கோபத்தைத் தூண்டினார். கோபங்கொள்ளாதே.(41) பிராமணர்களை எங்கும் காணமுடியும்; க்ஷத்திரியர்களும் எங்கும் காணப்படுகிறார்கள்; ஓ! கர்ணா, அதே போலத்தான் வைசியர்களும், சூத்திரர்களும் காணப்படுகிறார்கள். கற்புநிறைந்தவர்களும், சிறந்த நோன்புகளைக் கொண்டோருமான மகளிருங்கூட எங்கும் காணப்படுகிறார்கள்.(42) வேறு மனிதர்களைக் கேலி பேசுவதிலும், ஒருவரையொருவர் காயப்படுத்துவதிலும் எங்கும் மனிதர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். காமம்நிறைந்த மனிதர்களும் எங்கேயும் காணப்படவே செய்கிறார்கள்.(43) அனைவரும், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிறரின் குறைகளைப் பேசுவதில் திறம்பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். எனினும், தன் குறைகளை எவரும் அறிவதில்லை, அல்லது அவற்றை அறிந்து வெட்கப்படுவதில்லை.(44) எங்கும் மன்னர்கள் தங்கள் தங்களுக்குரிய அறங்களில் அர்ப்பணிப்புடன் இருந்து, தீயவர்களைத் தண்டிக்கவே செய்கிறார்கள். நல்ல மனிதர்கள் எங்கும் காணப்படுகிறார்கள்.(45) ஓ! கர்ணா, ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் பாவம் நிறைந்தவர்களாக இருக்க முடியாது. தேவர்களின் நடத்தையையே விஞ்சக்கூடிய மனிதர்களும், பல நாடுகளில் இருக்கிறார்கள்” என்றான் {சல்லியன்}.(46)
சஞ்சயன் {கர்ணனிடம்} தொடர்ந்தான், “அப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நண்பனாகப் பேசியும், சல்லியனிடம் கரங்கூப்பி வேண்டிக் கொண்டும், கர்ணனையும், சல்லியனையும் (தங்களின் சொற்போரைத் தொடர்வதிலிருந்து) தடுத்து நிறுத்தினான்.(47) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் அமைதிப்படுத்தப்பட்ட கர்ணன், வேறேதும் சொல்வதை நிறுத்திக் கொண்டான். சல்லியனும் எதிரியை எதிர்கொண்டான்.(48) ராதையின் மகன் சிரித்துக் கொண்டே, “செல்வீராக” என்று சல்லியனை மீண்டும் தூண்டினான்” {என்றான் சஞ்சயன்}.[7](49)
[7] இந்த ராட்சசன் கல்மாஷபாதனின் கதை ஆதிபர்வம் பகுதி 178 முதல் 184 வரை உரைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் | In English |