The seventeenth day war commenced! | Karna-Parva-Section-46 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பதினேழாம் நாள் போர் தொடங்கியதும், பாண்டவர்களின் வியூகத்தைக் கண்டு எதிர்வியூகம் அமைத்த கர்ணன், யுதிஷ்டிரனைத் தாக்கி வீழ்த்தியதாகத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; அர்ஜுனன் இருக்கும்போது கர்ணனால் எவ்வாறு யுதிஷ்டிரனைத் தாக்க முடிந்தது எனச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; வியூகங்களில் போர்வீரர்கள் ஏற்ற நிலைகளை வர்ணித்த சஞ்சயன்; அர்ஜனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு உறுதியளித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் தேரைக் கண்ட சல்லியன், அவனது திறனைக் குறித்தும், காணப்படும் தீய சகுனங்களைக் குறித்தும் கர்ணனிடம் சொன்னது; சல்லியனிடம் சம்சப்தகார்களால் மறைக்கப்பட்ட அர்ஜுனனைக் காட்டிய கர்ணன்; அர்ஜுனனை யாராலும் வெல்ல முடியாது என்று சொன்ன சல்லியன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பகைவரின் படைகள் அனைத்தையும் தடுக்கவல்லதும், திருஷ்டத்யும்னனால் அமைக்கப்பட்டதுமான பார்த்தர்களின் ஒப்பற்ற வியூகத்தைக் கண்ட கர்ணன்,(1) சிங்க முழக்கங்களைச் செய்தபடியும், தன் தேரில் உரத்த சடசடப்பொலியை எழுப்பியபடியும் சென்றான். மேலும் அவன் {கர்ணன்}, இசைக்கருவிகளின் உரத்த ஆரவாரத்தால் பூமியை நடுங்கச் செய்தான்.(2) போரில் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வீரன் சினத்தில் நடங்குவதாகத் தெரிந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளை எதிர் வியூகத்தில் முறையாக அணிவகுக்கச் செய்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த வீரன் {கர்ணன்},(3) அசுரர் படையைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போலப் பாண்டவப் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கினான். கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் தாக்கிய அவன், பாண்டுவின் அந்த மூத்த மகனைத் தன் வலப்புறத்தில் நிறுத்தினான்.”(4)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, திருஷ்டத்யும்னனின் தலைமையிலானவர்களும், பீமசேனனால் பாதுகாக்கப்பட்டவர்களும், தேவர்களாலேயே வெல்லப்பட முடியாதவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தப் பாண்டவர்கள் அனைவருக்கும் எதிராக ராதையின் மகன் {கர்ணன்} தன் படையை எவ்வாறு எதிர் வியூகத்தில் அணிவகுக்கச் செய்தான்?(5) ஓ! சஞ்சயா, நமது படையின் சிறகுகளிலும், சிறகுகளின் எல்லைகளிலும் நின்றவர் யாவர்? போர்வீரர்கள் எவ்வாறு முறையாகப் பிரிந்து நின்றனர்?(6) என் படையின் வியூகத்திற்கு எதிராகப் பாண்டுவின் மகன்கள் எவ்வாறு தங்கள் வியூகத்தை அமைத்தனர்? மகத்தானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் எவ்வாறு தொடங்கியது?(7) கர்ணன் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்கையில் பீபத்சு {அர்ஜுனன்} எங்கிருந்தான்? அர்ஜுனனின் முன்னிலையில் யுதிஷ்டிரனைத் தாக்குவதற்கு எவனால் முடியும்?(8) முன்பு காண்டவத்தில் அனைத்து உயிரினங்களையும் தனியனாக வென்ற அர்ஜுனனுடன், ராதையின் மகனை {கர்ணனைத்} தவிர உயிர்மீது விருப்பம் கொண்ட எவன் போரிடுவான்?” என்று கேட்டான்.(9)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியூகங்கள் அமைக்கப்பட்டதையும், அர்ஜுனன் வந்த விதத்தையும், இருதரப்பினராலும் தங்கள் தங்களுக்குரிய மன்னர்கள் சூழ எவ்வாறு அந்தப் போர் நடத்தப்பட்டது என்பதையும் இப்போது கேட்பீராக.(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சரத்வானின் மகனான கிருபர், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட மகதர்கள், சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் {உமது படையின்} வலது சிறகில் தங்கள் நிலைகளைக் கொண்டனர்.(11) இவர்களுக்கு வலப்புறத்தில், விட்டில் பூச்சிகளைப் போலப் பெரும் எண்ணிக்கையில் இருந்தவர்களும், பிசாசங்களைப் போன்ற கடும் தோற்றங்கொண்டவர்களும், அச்சமற்றவர்களுமான காந்தாரக் குதிரைவீரர்கள் பலர் மற்றும் வீழ்த்துவதற்குக் கடினமான மலைவாசிகள் பலர் ஆகியோரின் துணையுடன் சகுனி, வலிமைமிக்க உலூகன் ஆகியோர் நின்றிருந்தனர்.(12,13) போர்வெறிக் கொண்ட சம்சப்தகர்களின் {34,000} முப்பத்துநாலாயிரம் பின்வாங்காத தேர் வீரர்கள் அனைவரும், கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கொல்ல விரும்பி, உமது மகன்களைத் தங்கள் மத்தியில் கொண்டு (கௌரவப் படையின்) இடப்புறத்தைப் பாதுகாத்தனர்.(14) அவர்களுக்கு இடப்புறத்தில், காம்போஜர்கள், சகர்கள், யவனர்கள் ஆகியோர் தங்கள் தேர்கள், குதிரைகள், காலாட்கள் துணையுடன் சூதன் மகனின் {கர்ணனின்} உத்தரவின் பேரில் அர்ஜுனனையும், வலிமைமிக்கக் கேசவனையும் {கிருஷ்ணனையும்} அறைகூவி அழைக்கும்படி நின்றுகொண்டிருந்தனர்.(15)
அந்தப் படையின் தலைமையில்,, கவசம் தரித்து, அங்கதங்கள் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கர்ணன், மத்திய பகுதியைப் பாதுகாப்பதற்காக அங்கே நின்றான்.(16) தன் கோபக்கார மகன்களால் ஆதரிக்கப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த வீரன் {கர்ணன்}, தன் வில்லை மீண்டும் மீண்டும் வளைத்தபோது, அந்தப் படையின் தலைமையில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(17) வலிமைமிக்கக் கரங்களையும், சூரியன், அல்லது நெருப்பின் பிரகாசத்தையும், பழுப்பு நிறக் கண்களையும், அழகிய பண்புகளையும் கொண்டவனும், படையின் பின்புறத்தில் நின்றவனுமான துச்சாசனன், பல துருப்புகள் சூழ யானையின் கழுத்தில் ஏறிவந்து, படிப்படியாகப் போரில் முன்னேறினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அழகிய குதிரைகளில் ஏறி வந்தவர்களும், அழகிய கவசங்களைப் பூண்டவர்களுமான தன் தம்பிகளின் பாதுகாப்போடு அவனுக்கு {துச்சாசனனுக்குப்} பின்னால் வந்தான்.(18,19) ஒன்று சேர்ந்திருந்தவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான மத்ரகர்கள் மற்றும் கேகயர்களாலும் பாதுகாக்கப்பட்ட அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களால் சூழப்பட்ட நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(20)
அஸ்வத்தாமன் மற்றும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்களில் முதன்மையானோரும், மிலேச்சர்களால் செலுத்தப்பட்டவையும், மேகங்களைப போல மதநீர் பெருக்குபவையும், எப்போதும் மதம்பிடித்தவையாகவே இருப்பவையுமான பல யானைகளும் அந்தத் தேர்ப்படையைப் பின்தொடர்ந்து சென்றன.(21) வெற்றிக் கொடிகளாலும், சுடர்மிக்க ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பெரிய உயிரினங்கள், அவற்றின் முதுகில் இருந்து போரிடுவதில் திறம்பெற்ற போர்வீரர்களால் செலுத்தப்பட்டு, மரங்கள் அடர்ந்த மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(22) துணிச்சல்மிக்கவர்களும், பின்வாங்காதர்வர்களும், கோடரிகள் மற்றும் வாள்களைத் தரித்தவர்களுமான போர்வீரர்களே அந்த யானைகளின் பாதுகாவலர்களானார்கள்.(23) குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றால் கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த முதன்மையான வியூகம், தேவர்கள், அல்லது அசுரர்களின் வியூகத்தைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(24) போர் முறைகளை நன்கறிந்தவனான அதன் தலைவரால் பிருஹஸ்பதியின் திட்டப்படி அமைக்கபட்ட அந்த வியூகம், (முன்னேறிச் சென்ற போது) ஆடிக் கொண்டே செல்வதாகத் தெரிந்தது, மேலும் எதிரிகளின் இதயங்களில் அச்சம் நுழைந்தது.(25) மழைக்காலங்களில் எப்போதும் தோன்றும் மேகங்களைப் போல, போருக்காக ஏங்கியிருந்த காலாட்படைவீரர்கள், குதிரைவீரர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரும், யானைகளும் அந்த வியூகத்தின் சிறகுகளில் இருந்தும், அவ்வியூகத்தின் எல்லைகளில் இருந்தும் வெளிப்படத் தொடங்கினர்.(26)
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், (பகைவரின்) படையின் தலைமையில் இருக்கும் கர்ணனைக் கண்டு, எதிரிகளைக் கொல்பவனும், உலகத்தின் வீரனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! அர்ஜுனா, போரில் கர்ணனால் அமைக்கப்பட்ட வலிமைமிக்க வியூகத்தைப் பார். பகைவரின் படையானது, அதன் சிறகுகளிலும், சிறகின் எல்லைகளிலும் பிரகாசமாகத் தெரிகிறது.(28) பரந்து விரிந்திருக்கும் இந்தப் படையைக்கண்டு, அது நம்மை வென்றுவிடாத அளவுக்கான நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்” {என்றான் யுதிஷ்டிரன்}. மன்னனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் கூப்பிய கரங்களோடு, “நீர் சொன்னதுபோலவே அனைத்தும் செய்யப்படும். வேறுவிதமாக ஆகாது.(30) ஓ! பாரதரே, எதனால் எதிரிக்கு அழிவு ஏற்படுமோ, அதை நான் செய்வேன். அவர்களது முதன்மையான வீரர்களைக் கொல்வதால், நான் அவர்களது அழிவைச் சாதிப்பேன்” என்றான்.(31)
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “அதே நோக்கோடு நீ ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக, பீமசேனன் சுயோதனனை {துரியோதனனை} எதிர்த்துச் செல்லட்டும், நகுலன் விருஷசேனனை எதிர்த்தும், சகாதேவன் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்தும், சதாநீகன் துச்சாசனனை எதிர்த்தும், சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, ஹிருதிகள் மகனை {கிருதவர்மனை} எதிர்த்தும், பாண்டியன் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்தும் செல்லட்டும். நான் கிருபருடன் போரிடுவேன்.(32,33) திரௌபதியின் மகன்களும், சிகண்டியும், எஞ்சிய தார்தராஷ்டிரர்களை எதிர்த்துச் செல்லட்டும். நமது படையின் பிற போர்வீரர்கள் நமது பிற எதிரிகளோடு மோதட்டும்” என்றான்.(34)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “நீதிமானான யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தன் துருப்புகளிடம் (தேவையானதைச் செய்யச்சொல்லி) ஆணையிட்டும், படையின் தலைமையில் சென்றான்.(35) பிரம்மத்தில் இருந்து பிரகாசத்தை அடைந்தவனும், அண்டத்தின் தலைவனுமான அக்னி எந்தத் தேருக்குக் குதிரைகளாக ஆனானோ, பிரம்மத்தில் இருந்தே முதலில் தோன்றியதால், அது பிரம்மனுக்குச் சொந்தமானது எனத் தேவர்களால் எந்தத் தேர் அறியப்படுகிறதோ,(36) பழங்காலத்தில் பிரம்மன், இந்திரன், வருணன் ஆகியோரை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து எந்தத் தேர் தாங்கியதோ, அந்த ஆதித் தேரிலேயே கேசவனும், அர்ஜுனனும் போருக்குச் செல்கிறார்கள்.(37)
அற்புதத் தன்மையைக் கொண்ட அந்தத் தேர் முன்னேறி வருவதைக் கண்ட சல்லியன், போரில் பெருஞ்சக்தி கொண்ட போர்வீரனான அதிரதன் மகனிடம் {கர்ணனிடம்} மீண்டும்,(38) “வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், செயலின் தவிர்க்கப்பட முடியாத கனியைப் போல {வினைப்பயனைப் போலத்} துருப்புகள் அனைத்தாலும் தடுக்கப்படமுடியாத வாகனமுமான அந்தத் தேர் அதோ வருகிறது. நீ யாரைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தாயோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வழியில் தன் எதிரிகளைக் கொன்றபடியே அதோ வருகிறான்.(39) கேட்கப்படும் பெருமுழக்கங்கள் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமாக, மகத்தானதாகக் கேடப்படுவதால், அவர்கள் உயர் ஆன்மாக்களைக் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தான் என்பதில் ஐயமில்லை.(40)
கூடாரம் போல ஆகாயத்தில் பரவும் புழுதிப்படலம் அதோ உயர்கிறது. ஓ! கர்ணா, அர்ஜுனனுடைய சக்கரங்களின் சுற்றளவால் ஆழமாக வெட்டப்பட்டு மொத்த பூமியும் நடுங்குவதைப் போலத் தெரிகிறது.(41) உன் படையின் இரு பக்கங்களிலும் கடுங்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஊனுண்ணும் விலங்குங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன, மேலும் இவ்விலங்குகள் அச்சத்தையூட்டும் வகையில் கதறுகின்றன.(42) ஓ! கர்ணா, பயங்கரமானதும், தீமைக்குறியீடானதும், ஆவி {நீராவி} வடிவம் கொண்டதுமான கேது, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் சூரியனை மறைத்தபடி தோன்றுகிறது[1].(43) வலிமைமிக்க ஓநாய்கள் பலவும், புலிகளும் சுற்றிலும் உள்ள பல்வேறு வகை விலங்குக் கூட்டங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(44) பயங்கரமான கங்கங்களும், கழுகுகளும் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபடுவதைப் போல ஒன்றையொன்று நோக்கி அமர்ந்திருப்பதைக் காண்பாயாக.(45)
[1] கேது என்ற பெயரில் அறியப்படுவது வீரியமிக்க ஒரு கோளாகும் {கிரகமாகும்} எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உன் தேரில் இணைக்கப்பட்டுள்ள வண்ணந்தோய்ந்த சாமரங்கள் அமைதியற்றுப் பறக்கின்றன. உன் கொடிமரமும் நடுங்குகிறது.(46) பருத்த பெரிய அங்கங்களைக் கொண்டவையும், பறக்கும் பறவைகளுக்கு ஒப்பான பெரும் வேகம் கொண்டவையுமான உன் அழகிய குதிரைகளும் நடுங்குவதைக் காண்பாயாக.(47) ஓ! கர்ணா, இந்தச் சகுனங்களால் மன்னர்கள் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நிலைத்த உறக்கம் கொள்வதற்காக உயிரையிழந்து தரையில் கிடப்பார்கள் என்பது உறுதி.(48) மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் சங்குகளின் உரத்த பெருமுழக்கம் கேட்கப்படுகிறது. ஓ! ராதையின் மகனே, பேரிகைகள் மற்றும் மிருதங்கங்களின் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்படுகின்றன.(49) பல்வேறு வகைகளிலான கணைகளின் விஸ் ஒலிகளும், தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டும் ஆரவாரங்களும் கேட்கப்படுகின்றன. ஓ! கர்ணா, உயர் ஆன்மப் போர்வீரர்களுடைய விற்களின் நாண்கயிறுகளால் உண்டாக்கப்படும் உரத்த நாணொலியையும் கேட்பாயாக. (50)
ஓ! கர்ணா, மணிவரிசைகளைக் கொண்டதும், தங்க நிலவுகள் மற்றும் விண்மீண்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் அந்தக் கொடிகளைப் பார். திறன்மிக்கக் கலைஞர்களால் தங்கத்தில் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டவையும், பல்வேறு வண்ணங்களில் இருப்பவையுமான அவை, காற்றில் அசையும்போது, மேகத்திரள்களில் உள்ள மின்னலின் கீற்றுகளைப் போல அர்ஜுனனின் தேரில் பிரகாசத்துடன் சுடர்விடுகின்றன.(51,52) காற்றில் அசைகையில் கூரிய ஒலிகளை உண்டாக்கும் (வேறு) கொடிகளையும் பார். ஓ! கர்ணா, தங்கள் வாகனங்களில் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களுடன் கூடியவர்களான உயர் ஆன்மப் பாஞ்சாலர்களின் தேர்வீரர்கள், தெய்வீகத் தேர்களில் இருக்கும் தேவர்களைப் போலவே பிரகாசமாகத் தெரிகின்றனர்.(53) குந்தியின் வீரமகனும், தன் கொடிமரத்தில் முதன்மையான குரங்கைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, பகைவரை அழிப்பதற்காக முன்னேறி வருவதைப் பார்.(54) பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில், எதிரிகளின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் (போர்வீரர்களின்) பார்வையை ஈர்ப்பதுமான அந்தப் பயங்கரக் குரங்குக் காணப்படுகிறது.(55)
நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணனின் சக்கரம், கதாயுதம், சாரங்கம் என்றழைக்கப்படும் வில், (பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும்) சங்கு, மேலும் அவனது கௌஸ்து ரத்தினம் ஆகியன அவனில் மிக அழகாகத் தெரிகின்றன.(56) சாரங்கம் மற்றும் கதையுதம் தரித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, காற்றின் வேகத்தைக் கொண்ட அந்த வெண்குதிரைகளைத் தூண்டியபடி வந்து கொண்டிருக்கிறான்.(57) சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வளைக்கப்படும் காண்டீவம் அதோ நாணொலிக்கிறது. அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரனால் ஏவப்படும் கூரிய கணைகள் அவனது எதிரிகளை அழிக்கின்றன.(58) முழு நிலவைப்போன்று அழகான முகங்களைக் கொண்டவையும், தாமிரவண்ணம் கொண்ட நீண்ட பெரிய கண்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பின்வாங்காத மன்னர்களின் தலைகளால் பூமி விரவிக்கிடக்கிறது.(59) பரிகங்களைப் போலத் தெரிபவையும், ஆயுதங்களைப் பிடியில் {தம் கைப்பிடியில்} கொண்டவையும், சிறந்த நறுமணப் பொருட்களால் பூசப்பட்டவையும், உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் போரில் திளைக்கும் போர்வீரர்களின் கரங்கள் அங்கே விழுந்து கொண்டிருக்கின்றன.(60)
கண்கள், நாவுகள், உள்ளுறுப்புகள் ஆகியன பிதுங்கிய குதிரைகள் தங்கள் சாரதிகளுடன் விழுகின்றன, விழுந்து உயிரையிழந்து பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கின்றன.(61) மலைச்சிகரங்களைப் போன்று பெரிய உயிரற்ற யானைகள், பார்த்தனால் கிழித்துச் சிதைத்துத் துளைக்கப்பட்டுப் பெரும் மலைகளைப் போலக் கீழே விழுகின்றன.(62) வானத்தில் மாறிக் கொண்டே இருக்கும் ஆவி வடிவங்களைப் போலத் தெரியும் அந்தத் தேர்கள், அவற்றின் அரச சாரதிகள் கொல்லப்பட்டு, சொர்க்கவாசிகளின் புண்ணியங்கள் தீர்ந்ததால் விழும் தெய்வீகத் தேர்களைப் போலக் கீழே விழுகின்றன.(63) பிடரி மயிர் கொண்ட சிங்கம் ஒன்றால் எண்ணற்ற கால்நடைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் மிகவும் கலங்கடிக்கப்படும் இந்தப் படையைப் பார்.(64) அதோ தாக்குவதற்காக முன்னேறிவரும் பாண்டவ வீரர்கள், போரில் ஈடுபட்டுவரும் மன்னர்களையும், உன் படையின் பெரும் எண்ணிக்கையிலான யானைகளையும், குதிரைகளையும், தேர்வீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோரையும் கொல்கிறார்கள்.(65)
அதோ, மேகங்களால் மறைக்கப்படும் சூரியனைப் போலவே, (நண்பர்கள் மற்றும் எதிரிகளாலும், ஆயுதங்கள் மற்றும் புழுதியாலும்) மறைக்கப்பட்டிருக்கும் பார்த்தனைக் {அர்ஜுஅனனைக்} காண முடியவில்லை. அவனது கொடிமரம் மட்டுமே காணப்படுகிறது, அவனது வில்நாண்கயிற்றின் நாணொலி மட்டுமே கேட்கப்படுகிறது.(66) ஓ! கர்ணா, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டவனும், போரில் தன் எதிரிகளைக் கொன்று வருபவனுமான அந்த வீரனை நீ இன்று உறுதியாகக் காண்பாய். நீ எவனைக் குறித்து விசாரித்தாயோ, அவனை நிச்சயம் நீ காண்பாய்.(67) ஓ! கர்ணா, மனிதர்களில் புலிகளும், கண்கள் சிவந்தவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் இருவரும் ஒரே தேரில் நிற்பதை நீ இன்று உறுதியாகக் காண்பாய்.(68) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, கேசவனைத் {கிருஷ்ணனைத்} தன் சாரதியாகவும், காண்டீவத்தைத் தன் வில்லாகவும் கொண்டவனைக் கொல்வதில் நீ வென்றுவிட்டால், நீயே எங்கள் மன்னனாவாய்.(69) சம்சப்தகர்கள் அறைகூவியதால் பார்த்தன் {அர்ஜுனன்} இப்போது அவர்களை எதிர்த்துச் செல்கிறான். அந்த வலிமைமிக்கப் போர்வீரன், போரில் தன் எதிரிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறான்” என்றான் {சல்லியன்}.(70)
இப்படிச் சொன்ன மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} கர்ணன் சினத்துடன், “கோபக்கார சம்சப்தகர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்படும் பார்த்தனைக் காண்பீராக.(71) மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலப் பார்த்தனை இப்போது காணவில்லை. ஓ சல்லியரே, போர்வீரர்கள் எனும் பெருங்கடலுக்குள் மூழ்கிய அர்ஜுனன் அழியப்போவது உறுதி” என்றான்.(72)
சல்லியன், “நீரால் வருணனைக் கொல்பவனோ, எரிபொருளால் {விறகால்} நெருப்பைத் தணிப்பவனோ இங்கே எவன் இருக்கிறான்? காற்றைப் பிடிக்கவோ, பெருங்கடலைக் குடிக்கவோ இங்கே எவன் இருக்கிறான்?(73) பார்த்தனைப் பீடிக்குஞ்செயலும் அவ்வாறே என்றே நான் கருதுகிறேன். தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து தங்கள் தலைமையில் இந்திரனையே கொண்டு போரிட்டாலும், அர்ஜுனன் வெல்லப்பட முடியாதவனாவான்.(74) அல்லது, அவ்வார்த்தைகளை (பார்த்தனைக் கொல்லவல்ல உன் திறனைச்} சொல்லி நிறைவடைந்து, உன் மனத்தைச் சுமையைக் குறைத்துப் பாதிப்பை அடைவாயாக. பார்த்தனைப் போரில் வெற்றிக் கொள்ள முடியாது. உன் மனத்தில் கொண்டிருக்கும் வேறேதும் காரியத்தைச் சாதிப்பாயாக.(75)
எவன் இந்தப் பூமியைத் தன் இரு கரங்களால் தூக்குவானோ, எவன் தன் கோபத்தால் உயிரினங்கள் அனைத்தையும் எரிப்பானோ, எவன் தேவர்களைச் சொர்க்கத்தில் இருந்து வீசி எறியவல்லவனோ, அவனாலேயே அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியும்.(76) உழைப்பால் எப்போதும் களைப்படையாதவனும், பிரகாசத்தால் சுடர்விடுபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், மற்றொரு மேருவைப் போல நிற்பவனும், குந்தியின் மற்றொரு வீர மகனுமான பீமனைக் காண்பாயாக.(77) எப்போதும் கோபம் தூண்டப்பட்டவனும், பழிதீர்க்க ஏங்கிக் கொண்டிருப்பவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தப் பீமன், போரில் வெற்றியடைய விரும்பியும், தன் காயங்கள் அனைத்தையும் நினைத்தபடியும் அங்கே நின்று கொண்டிருக்கிறான்.(78) பகை நகரங்களை அடக்குபவனும், போரில் எதிரிகளால் தடுக்கப்படக் கடினமானவனும், அறவோர்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் அதோ நிற்கிறான்.(79) மனிதர்களில் புலிகளும், அசுவினி இரட்டையர்களும், வெல்லப்படமுடியாதவர்களும், உடன் பிறந்தவர்களுமான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் அதோ நிற்கின்றனர்.(80)
பாஞ்சால இளவரசர்களின் குணங்களைக் கொண்ட அந்தக் கிருஷ்ணையின் ஐந்து மகன்களையும் அங்கே காணலாம். போரில் அர்ஜுனனுக்கு நிகரான அவர்கள் அனைவரும் போரிட விரும்பியே அங்கே நின்று கொண்டிருக்கின்றனர்.(81) செருக்கிலும் சக்தியிலும் பெருகுபவர்களும், திருஷ்டத்யும்னனின் தலைமையிலானவர்களும், பெரும் சக்தி கொண்ட வீரர்களுமான துருபதன் மகன்கள், அங்கே தங்கள் நிலையை ஏற்றிருக்கின்றனர்.(82) சாத்வதர்களில் முதன்மையானவனும், இந்திரனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, போரிடும் விருப்பத்தால், அந்தகன் கோபத்தோடு அந்தகன் நம் கண்முன்னே வருவதைப் போல அதோ நம்மை எதிர்த்து வருகின்றான்” என்றான் {சல்லியன்}.(83) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, கங்கை மற்றும் யமுனையின் ஊற்றுகளைப் போலக் கடும்போரில் இருபடைகளும் ஒன்று கலந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(84)
கர்ண பர்வம் பகுதி -46ல் உள்ள சுலோகங்கள் : 84
[2] பதினேழாம் நாளில் இரு படைகளும் அமைத்த வியூகங்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை. எனினும் சிலர் கௌரவர்கள் சூரிய வியூகத்தையும், பாண்டவர்கள் யம வியூகத்தையும் வகுத்ததாகச் சொல்கிறார்கள். இது பின்வரப்போகும் பகுதிகளிலோ, பர்வங்களிலோ சொல்லப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.-----------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -46ல் உள்ள சுலோகங்கள் : 84
ஆங்கிலத்தில் | In English |