The great slaughter caused by Karna! | Karna-Parva-Section-47 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்ற அர்ஜுனன்; கர்ணனைப் பாதுகாத்த துரியோதனன்; பாஞ்சாலர்களுக்குப் பேரழிவை உண்டாக்கிய கர்ணன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “முறையாக அணிவகுக்கப்பட்ட அந்தப் படைகள் இரண்டும் போரிடுவதற்காக இவ்வாறு ஒன்றுகலந்த போது, ஓ!சஞ்சயா, பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களையும், கர்ணன் பாண்டவர்களையும் எவ்வாறு எதிர்த்தனர்?(1) உரைப்பதில் திறனுள்ளவனாக நீ இருப்பதால், போர் நிகழ்வுகளை எனக்குச் சொல்வாயாக. போரில் வீரர்களின் ஆற்றல்களைக் குறித்துக் கேட்பதில் நான் எப்போதும் முழு நிறைவையடைவதில்லை” என்று கேட்டான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவ்வகையில் நின்றிருந்த பகைவரின் பரந்த படையை உற்று நோக்கிய அர்ஜுனன், உமது மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், தன் துருப்புகளை முறையான வடிவில் அணிவகுக்கச் செய்தான்.(3) குதிரைவீரர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள், தேர்கள் ஆகியவை நிறைந்ததும், திருஷ்டத்யும்னன் தலைமையிலானதுமான அந்தப் பரந்த பாண்டவப் படையானது, அப்போது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) புறாக்களைப் போன்று வெண்மையான தன் குதிரைகளுடன் கூடியவனும், சூரியன் அல்லது சந்திரனுக்கு இணையான காந்தியைக் கொண்டவனும், வில் தரித்திருந்தவனுமான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, காலனே உடல் கொண்டு வந்ததைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(5) போரிடும் விருப்பத்துடன் கூடிய திரௌபதியின் மகன்கள், அந்தப் பார்ஷதனின் {திருஷ்டத்யும்னனின்} பக்கத்தில் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த கவசங்களைப் பூண்டவர்களாகவும், சிறந்த ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும், புலிகளின் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஒளிவீசும் உடல்களோடு கூடிய அவர்கள் சந்திரனோடு தோன்றும் விண்மீண்களைப் போலத் தங்கள் தாய்மாமனை {திருஷ்டத்யும்னனைப்} பின்தொடர்ந்தனர்.(6)
வியூகத்தில் நிற்கும் சம்சப்தகர்களைக் கண்ட அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லான காண்டீவத்தை வளைத்தபடி அவர்களை எதிர்த்து விரைந்தான்.(7) அப்போது அர்ஜுனனைக் கொல்ல விரும்பிய சம்சப்தகர்கள், வெற்றியடைய உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டும், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டும் பார்த்தனை எதிர்த்து விரைந்தனர்.(8) மனிதர்கள், குதிரைகள், மதங்கொண்ட யானைகள், தேர்கள் ஆகியவை நிறைந்ததும், வீரர்களைக் கொண்டதுமான அந்தத் துணிச்சல்மிக்கப் படையானது {சம்சப்தகப் படையானது}, மிக வேகமாக அர்ஜுனனைப் பீடிக்கத் தொடங்கியது.(9) கிரீடியுடனான {அர்ஜுனனுடனான} அவர்களது மோதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. நாம் கேள்விப்பட்ட அர்ஜுனன் மற்றும் நிவாதகவசர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக அந்த மோதல் இருந்தது.(10)
தேர்கள், குதிரைகள், கொடிமரங்கள், யானைகள், போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலாட்படைவீரர்கள், கணைகள், விற்கள், வாள்கள், சக்கரங்கள், போர்க்கோடரிகள், ஆயுதங்களைப் பிடியில் கொண்டு உயர்த்தப்பட்ட கரங்கள் மற்றும் எதிரிகளின் தலைகளையும் பார்த்தன் ஆயிரமாயிரமாக அறுத்துத் தள்ளினான்.(11,12) போர்வீரர்களின் ஆழமான சுழலில் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மூழ்கிப் போனதாகக் கருதிய சம்சப்தகர்கள், பெரும் முழக்கங்களைச் செய்தனர்.(13) எனினும், முன்னால் இருந்த தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பார்த்தன், அதையும் தாண்டி நின்றவர்களையும் கொன்று, அதன் பிறகு, உயிருடன் கூடிய அனைத்து உயிரினங்களையும் கோபத்தால் கொல்லும் ருத்திரனைப் போலத் தனக்கு வலப்புறத்திலும், பின்புறத்தில் இருந்தோரையும் கொன்றான்.(14)
பாஞ்சாலர்கள், சேதிகள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், உமது துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது மிக மூர்க்கமானதாக இருந்தது.(15) உற்சாகத்துடன் கூடியவையும், சினத்தால் நிறைந்தவையும், தேர்களின் அடர்த்தியான படையணிகளைத் தாக்கவல்லவையுமான துருப்புகளின் துணையுடன் கூடியவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமான வீரர்களுமான கிருபர், கிருதவர்மன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், பெரும் துணிவைக் கொண்டவர்களான கோசலர்கள், காசிகள், மத்ஸ்யர்கள், காருஷர்கள், கைகேயர்கள், சூரசேனர்கள் ஆகியோர் அனைவருடனும் போரிட்டனர்.(16,17) பெரும் படுகொலைகள் நிறைந்ததும், உடல் உயிர் மற்றும் பாவங்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்தப் போரானது, அதில் ஈடுபட்ட க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வீரர்களுக்குப் புகழ், சொர்க்கம் மற்றும் அறம் ஆகியவற்றை உண்டாக்குவதாக அமைந்தது.(18)
அதே வேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தம்பிகளுடன் கூடிய மன்னன் துரியோதனன், குரு வீரர்கள் பலராலும், வலிமைமிக்க மத்ரகத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் மற்றும் சாத்யகியுடன் போரிட்டுக் கொண்டிருந்த கர்ணனைப் பாதுகாத்தான்.(19,20) தன் கூரிய கணைகளால் அந்தப் பரந்த படைப்பிரிவையும், தேர்வீரர்களில் முதன்மையான பலரையும் அழித்த கர்ணன், யுதிஷ்டிரனைப் பீடிப்பதில் வென்றான்.(21) கவசங்கள், ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான எதிரிகளின் உடல்கள் ஆகியவற்றை வெட்டி, தன் எதிரிகளில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து, அவர்களைப் பெரும்புகழ் ஈட்டச் செய்த கர்ணன், தன் நண்பர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்.(22) இப்படியே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கு அழிவை உண்டாக்கியதும், குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடந்ததுமான அந்தப் போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(23)
ஆங்கிலத்தில் | In English |