The irresistible Karna! | Karna-Parva-Section-48 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன், பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள், மற்றும் சேதிகளைக் கொன்றது; கர்ணனின் மகனான பானுசேனனைக் கொன்ற பீமசேனன்; கௌரவர்களைப் பீடித்த பீமன்; கர்ணனின் மற்றொரு மகனான சுஷேணனுக்கும் நகுலசகாதேவர்களுக்கும் இடையில் நடந்த போர்; கர்ணனின் மற்றொரு மகனான விருஷசேனனைத் தேரற்றவனாக, ஆயுதமற்றவனாகச் செய்த சாத்யகி; விருஷசேனனைக் காத்த துச்சாசனன்; துச்சாசனனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; பாண்டவ வீரர்களைக் கலங்கடித்த கர்ணன், தடுக்கப்பட முடியாதவனாக யுதிஷ்டிரனின் படைப்பிரிவை அடைந்தது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கர்ணன், ஓ! சஞ்சயா, பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் ஊடுருவி, பேரழிவை ஏற்படுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனைத் தாக்கிப் பீடித்தது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) கர்ணனைத் தடுத்த பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் யாவர்? அதிரதன் மகன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் பீடிப்பதில் வெல்வதற்கு முன்னர், அவனால் நொறுக்கப்பட்ட வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போருக்காக நின்றிருக்கும் திருஷ்டத்யும்னன் தலைமையிலான பார்த்தர்களைக் கண்டவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான கர்ணன், பாஞ்சாலர்களை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(3) அதே போலவே, வெற்றியடைய ஏங்கிய பாஞ்சாலர்கள், மோதலுக்கு முன்னேறிக் கொண்டிருந்த அந்த உயர்ஆன்மப் போர்வீரனை {கர்ணனை} எதிர்த்து, கடலை நோக்கி விரையும் அன்னங்களைப் போல வேகமாக விரைந்தனர்.(4) அப்போது, எதிரொலியால் இதயத்தைத் துளைத்துவிடுவதைப் போல முழங்கிய ஆயிரக்கணக்கான சங்குகளின் முழக்கங்களும், உரத்த மணியோசை போன்ற ஆயிரம் பேரிகைகளின் கடுமொலிகளும் இருபடைகளிலும் எழுந்தன.(5) அங்கே எழுந்த பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் உண்டான ஒலிகளும், வீரர்களின் சிங்க முழக்கங்களும் மிகுந்த அச்சமூட்டின.(6) மலைகள், மரங்கள், பெருங்கடல்கள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த பூமியும், காற்றால் விரட்டப்படும் மேகங்களால் மறைக்கப்பட்ட மொத்த வானமும், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றோடு சேர்ந்த மொத்த ஆகாயமும் அவ்வொலியால் நடுங்கியதாகத் தெரிந்தது.(7) அவ்வொலியைக் கேட்ட உயிரினங்கள் அனைத்தும் கலக்கமடைந்தன. அவற்றில் பலமற்ற சில இறந்தும் விழுந்தன.(8)
அப்போது, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட கர்ணன், தன் ஆயுதங்களை வேகமாக அழைத்து, அசுரர்களின் படையைத் தாக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல, அந்தப் பாண்டவப் படையைத் தாக்கத் தொடங்கினான்.(9) பாண்டவப் படைக்குள் ஊடுருவி, தன் கணைகளை ஏவிய கர்ணன், பிரபத்ரகர்களில் எழுபத்தேழு முதன்மையான போர்வீரர்களைக் கொன்றான்.(10) பிறகு அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {கர்ணன்}, நல்ல சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து கூரிய கணைகளால், இருபத்தைந்து பாஞ்சாலர்களையும் கொன்றான்.(11) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எதிரிகள் அனைவரின் உடல்களையும் துளைக்கவல்லவையுமான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் அந்த வீரன் {கர்ணன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சேதிகளை {சைத்யர்களைக்} கொன்றான்.(12) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட அந்த அருஞ்செயல்களை அவன் {கர்ணன்} செய்து கொண்டிருந்த போது, பாஞ்சாலர்களின் பெருந்தேர்க்கூட்டங்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் விரைவாகச் சூழ்ந்து கொண்டன.(13) ஓ! பாரதரே, வைகர்த்தனன் என்றும், விருஷன் என்றும் வேறுபெயர்களில் அழைக்கப்பட்ட அந்தக் கர்ணன், தடுக்கப்பட முடியாத ஐந்து கணைகளைக் குறிபார்த்து, ஐந்து பாஞ்சால வீரர்களைக் கொன்றான்.(14) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அவன் {கர்ணன்} கொன்ற அந்த ஐந்து பாஞ்சாலர்கள், பானுதேவன், சித்திரசேனன், சேனாபிந்து, தபனன், சூரசேனன் ஆகியோராவார்.(15)
அந்தப் பெரும்போரில் பாஞ்சால வீரர்கள் இவ்வாறு கணைகளால் கொல்லப்பட்ட போது, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அந்தப் பாஞ்சாலப் படைக்கு மத்தியில் பெரும் கூச்சல்கள் கேட்டன.(16) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களில் பத்துத் தேர்வீரர்கள் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர். கர்ணன் அவர்களையும் தன் கணைகளால் வேகமாகக் கொன்றான்.(17) கர்ணனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாத்தவர்களும், சுஷேணன், சத்யசேனன் என்ற பெயர்களைக் கொண்ட அவனது வெல்லப்பட முடியாத மகன்கள் இருவர், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போரிடத் தொடங்கினர்.(18) கர்ணனின் மூத்த மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விருஷசேனன், தன் தந்தையின் {கர்ணனின்} பின்புறத்தைப் பாதுகாத்து வந்தான்.(19)
அப்போது கவசம் தரித்தவர்களான திருஷ்டத்யும்னன், சாத்யகி, திரௌபதியின் ஐந்து மகன்கள், விருகோதரன் {பீமன்}, ஜனமேஜயன், சிகண்டி, பிரபத்ரகர்களில் முதன்மையான போர்வீரர்கள் பலர், சேதிகளில் {சைத்யர்களில்} பலர், கைகேயர்கள், பாஞ்சாலர்கள், இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}, மத்ஸ்யர்கள் ஆகியோர் தாக்குவதில் திறம்பெற்றவனான ராதையின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(20,21) அவன் {கர்ணன்} மீது பல்வேறு வகைகளிலான ஆயுதங்களையும், அடர்த்தியான கணைமாரியையும் பொழிந்த அவர்கள், மழைக்காலங்களில் மலைச்சாரல்களைப் பீடிக்கும் மேகங்களைப் போல அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22) தங்கள் தந்தையைக் காக்க விரும்பியவர்களும், திறன் மிகத் தாக்குபவர்களுமான கர்ணனின் மகன்கள் அனைவரும், உமது படையைச் சேர்ந்த இன்னும் பிற வீரர்களும் அந்த (பாண்டவ) வீரர்களைத் தடுத்தனர்.(23)
சுஷேணன், அகன்ற தலை கணையொன்றால் பீமசேனனின் வில்லை அறுத்து, ஏழு துணிக்கோல் கணைகளால் பீமனையும் துளைத்து, பெருமுழக்கம் செய்தான்.(24) பயங்கர ஆற்றலைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாக அதற்கு நாணேற்றி, சுஷேணனின் வில்லை அறுத்தான்.(25) சினத்தால் தூண்டப்பட்டு (தன் தேரில்) நர்த்தனம் ஆடுபவனைப் போலத் தெரிந்த அவன் {பீமன்}, பத்து கணைகளால் சுஷேணனைத் தாக்கி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக எழுபது கூரிய கணைகளால் கர்ணனையும் துளைத்தான்.(26) பீமன், வேறு பத்து கணைகளால் குதிரைகள், சாரதி, ஆயுதங்கள், கொடிமரம் ஆகியவற்றைக் கொண்ட கர்ணனின் மற்றொரு மகனான பானுசேனனை, அவனது நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீழ்த்தினான்.(27) சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்ட அந்த இளைஞனின் பார்வைக்குகந்த தலையானது, தண்டிலிருந்து கொய்யப்படும் தாமரையைப் போலக் கத்தி தலை கணை ஒன்றால் {க்ஷுரப்ரத்தால்} கொய்யப்பட்டது.(28) கர்ணனின் மகனை {பானுசேனனைக்} கொன்ற பீமன் , மீண்டும் உமது துருப்புகளைப் பீடிக்கத் தொடங்கினான். கிருபர் மற்றும் ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோரின் விற்களை அறுத்த அவன், அவ்விருவரையும் பீடிக்கத் தொடங்கினான்.(29) முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் துச்சாசனனையும், ஆறால் சகுனியையும் துளைத்த அவன் {பீமன்}, உலூகன் மற்றும் (அவனது தம்பி) பதத்திரி ஆகியோரைத் தேரிழக்கச் செய்தான்.(30)
அடுத்ததாகச் சுஷேணனிடம், இவ்வார்த்தைகளில், “நீ கொல்லப்பட்டாய்” என்று சொன்ன பீமன் ஒரு கணையை எடுத்துக் கொண்டான். இருப்பினும் கர்ணன் அந்தக் கணையை வெட்டி, மூன்று கணைகளால் பீமனையும் தாக்கினான்.(31) பிறகு, பெரும் சீற்றத்துடன் கூடிய மற்றொரு நேரான கணையை எடுத்துக் கொண்ட பீமன், அதைச் சுஷேணன் மீது ஏவினான். ஆனால் விருஷன் {கர்ணன்} அக்கணையையும் வெட்டினான்.(32) அப்போது தன் மகனைக் காக்க விரும்பிய கர்ணன், கொடூரனான பீமசேனனுக்கு ஒரு முடிவைக்கொண்டுவர விரும்பி, எழுபத்துமூன்று கடுங்கணைகளால் பின்னவனை {பீமசேனனைத்} தாக்கினான்.(33) பிறகு, பெருங்கடினத்தைத் தாங்கவல்ல சிறந்த வில்லொன்றை எடுத்துக் கொண்ட சுஷேணன், ஐந்து கணைகால் நகுலனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(34) அப்போதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்ல பலமான இருபது கணைகளால் தன் எதிராளியைத் துளைத்த நகுலன், பெருமுழக்கம் செய்து, கர்ணனை அச்சுறுத்தினான்.(35)
அடுத்ததாகச் சுஷேணனிடம், இவ்வார்த்தைகளில், “நீ கொல்லப்பட்டாய்” என்று சொன்ன பீமன் ஒரு கணையை எடுத்துக் கொண்டான். இருப்பினும் கர்ணன் அந்தக் கணையை வெட்டி, மூன்று கணைகளால் பீமனையும் தாக்கினான்.(31) பிறகு, பெரும் சீற்றத்துடன் கூடிய மற்றொரு நேரான கணையை எடுத்துக் கொண்ட பீமன், அதைச் சுஷேணன் மீது ஏவினான். ஆனால் விருஷன் {கர்ணன்} அக்கணையையும் வெட்டினான்.(32) அப்போது தன் மகனைக் காக்க விரும்பிய கர்ணன், கொடூரனான பீமசேனனுக்கு ஒரு முடிவைக்கொண்டுவர விரும்பி, எழுபத்துமூன்று கடுங்கணைகளால் பின்னவனை {பீமசேனனைத்} தாக்கினான்.(33) பிறகு, பெருங்கடினத்தைத் தாங்கவல்ல சிறந்த வில்லொன்றை எடுத்துக் கொண்ட சுஷேணன், ஐந்து கணைகால் நகுலனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(34) அப்போதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்ல பலமான இருபது கணைகளால் தன் எதிராளியைத் துளைத்த நகுலன், பெருமுழக்கம் செய்து, கர்ணனை அச்சுறுத்தினான்.(35)
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கவனான அந்தச் சுஷேணன், பத்து கணைகளால் நகுலனைத் துளைத்து, கத்தி தலை கணையொன்றால் பின்னவனின் வில்லையும் வேகமாக அறுத்தான்.(36) அப்போது சினத்தால் மதியிழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் ஒன்பது கணைகளால் சுஷேணனைத் தடுத்தான்.(37) பகைவீரர்களைக் கொல்பவனான அவன் {நகுலன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணை மாரியால் அனைத்து இடங்களையும் மறைத்து, சுஷேணனின் சாரதியைக் கொன்று, மூன்று கணைகளால் சுஷேணனையும் துளைத்து, பிறகு வெறு மூன்று அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} பெரும் பலம் கொண்ட அவனது {சுஷேனனின்} வில்லையும் மூன்று துண்டுகளாக வெட்டினான்.(38) சினத்தால் தன் உணர்வுகளை இழந்தவனான சுஷேணனும், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அறுபது கணைகளால் நகுலனையும், ஏழால் சகாதேவனையும் துளைத்தான்.(39) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த வீரர்களுக்கிடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததைப் போலக் கடும்போர் நேர்ந்தது.(40)
சாத்யகி, மூன்று கணைகளால் {கர்ணனின் மூத்த மகன்} விருஷசேனனின் சாரதியைக் கொன்று, பின்னவனின் வில்லை அகன்ற தலை கொண்ட கணையொன்றால் வெட்டி, ஏழு கணைகளால் அவனது குதிரைகளையும் தாக்கினான்.(41) மற்றொரு கணையால் அவனது கொடிமரத்தை நொறுக்கிய அவன் {சாத்யகி}, மூன்று கணைகளால் விருஷசேனனின் மார்பைத் தாக்கினான். இவ்வாறு தாக்கப்பட்ட விருஷசேனன், தன் தேரில் மயக்கமடைந்தாலும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மீண்டும் எழுந்து நின்றான்[1].(42) யுயுதானனால் {சாத்யகியால்}, தன் சாரதி, குதிரைகள், தேர் மற்றும் கொடிமரத்தை இழந்த விருஷசேனன், வேளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, யுயுதானனைக் {சாத்யகியை} கொல்லும் விருப்பதோடு அவனை எதிர்த்து விரைந்தான்.(43) எனினும் சாத்யகி, தன் எதிராளி தன்னை நோக்கி விரைந்துவந்த போது, பன்றியின் காதுகளைப் போன்ற தலைகளைக் கொண்ட பத்து கணைகளால் அவனது வாளையும், கேடயத்தையும் தாக்கினான்.(44) அப்போது துச்சாசனன், தேரற்றவனாகவும், ஆயுதங்களற்றவனாகவும் செய்யப்பட்ட விருஷசேனனைக் கண்டு, அவனை வேகமாகத் தன் தேரில் ஏறச் செய்து, அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அவனைக் கொண்டு சென்று, மற்றொரு வாகனத்தில் அவனைச் செல்லச் செய்தான்.(45)
[1] வேறொரு பதிப்பில், “பிறகு, அந்த விருஷசேனன் தனது தேரில் மூர்ச்சயடைந்து, ஒரு முகூர்த்த காலத்திற்குள் மறுபடியும் எழுந்திருந்தான்” என்றிருக்கிறது.
வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன், மற்றொரு வாகனத்தில் ஏறி வந்து, எழுபது கணைகளால் திரௌபதியின் மகன்களையும், ஐந்தால் யுயுதானனையும் {சாத்யகியையும்},(46) அறுபத்துநான்கால் பீமசேனனையும், ஐந்தால் சகாதேவனையும், முப்பதால் நகுலனையும், ஏழால் சதானீகனையும்,(47) பத்தால் சிகண்டியையும், நூறால் மன்னன் யுதிஷ்டிரனையும் தாக்கினான். ஓ! ஏகாதிபதி, வெற்றியடைய விரும்பிய இவர்களையும், இன்னும் பிற முதன்மையான வீரர்கள் பலரையும்,(48) கர்ணனின் மகனான அந்தப் பெரும் வில்லாளி {விருஷசேனன்}, தன் கணைகளால் தொடர்ந்து பீடித்தான். அப்போது அந்தப் போரில் வெல்லப்பட முடியாதவனான விருஷசேனன், தொடர்ந்து கர்ணனின் பின்புறத்தைப் பாதுகாத்தான்.(49)
சிநியின் பேரன் {சாத்யகி}, முழுக்க இரும்பாலான தொண்ணூற்றொரு கணைகளால் துச்சாசனனைச் சாரதியற்றவனாகவும், குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, பத்து கணைகளால் துச்சாசனனின் நெற்றியைத் தாக்கினான்.(50) (தேவையான அனைத்துடனும்) முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு தேரில் ஏறிவந்த அந்தக் குரு இளவரசன் {துச்சாசனன்}, கர்ணனின் படைப்பிரிவுக்குள் இருந்தபடியே பாண்டவர்களோடு மீண்டும் போரிடத் தொடங்கினான்.(51) பிறகு, திருஷ்டத்யும்னன் பத்துக் கணைகளாலும், திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், யுயுதானன் {சாத்யகி} ஏழாலும் கர்ணனைத் துளைத்தனர்.(52) பீமசேனன் அறுபத்துநான்கு கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். நகுலன் முப்பது கணைகளாலும், சதானீகன் ஏழாலும் அவனைத் துளைத்தனர். வீரச் சிகண்டி பத்தாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஒரு நூறு கணைகளாலும் அவனை {கர்ணனைத்} துளைத்தனர்.(53) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட இவர்களும், மனிதர்களில் முதன்மையானோரான இன்னும் பிறர் அனைவரும், பெரும் வில்லாளியான சூதன் மகனை {கர்ணனை} அந்தப் பயங்கரப் போரில் கலங்கடிக்கத் தொடங்கினர்.(54)
எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் தேரால் பல விரைவான பரிணாமங்களைச் செய்து, அந்தப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(55) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் பிறகு, உயர் ஆன்மக் கர்ணணால் வெளிக்காட்டப்பட்ட கரநளினத்தையும், அவனது ஆயுதங்களின் சக்தியையும் நாங்கள் கண்டோம்.(56) எப்போது அவனது கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை மக்களால் காண முடியவில்லை. அவனது கோபத்தின் விளைவால், அவனது எதிரிகள் வேகமாக இறப்பதை மட்டுமே அவர்கள் கண்டனர்.(57) வானம், ஆகாய விரிவு, பூமி, மற்றும் இடங்கள் அனைத்தும் கூரிய கணைகளால் முற்றாக மறைக்கப்பட்டதாகத் தெரிந்தது. செம்மேகங்களால் மறைக்கப்பட்டதைப் போல ஆகாயம் பிரகாசமாகத் தெரிந்தது.(58)
வில் தரித்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, (தன் தேரில்) நர்த்தனம் ஆடுபவனைப் போல, தன்னைத் துளைத்துத் தாக்கியவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று மடங்கு கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(59) மீண்டும் அவன் {கர்ணன்}, அவர்கள் ஒவ்வொருவரையும், அவர்களுடைய குதிரைகள், சாரதி, தேர் மற்றும் கொடிமரம் ஆகியவற்றையும் பத்து பத்து கணைகளால் துளைத்துப் பெருமுழக்கம் செய்தான். பிறகு, அவனைத் தாக்கியவர்கள் (அவன் கடந்து செல்லும் வகையில்) அவனுக்கு வழிவிட்டனர்.(60) கணைமாரிகளால் அந்த வலிமைமிக்க வில்லாளிகளை நொறுக்கியவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அந்த ராதையின் மகன், பாண்டவ மன்னனால் {யுதிஷ்டிரனால்} தலைமைதாங்கப்பட்ட படைப்பிரிவுக்கு மத்தியில் தடுக்கப்பட முடியாதவனாக ஊடுருவினான்.(61) பின்வாங்காதவர்களான சேதிகளின் முப்பது தேர்களை அழித்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, கூரிய கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(62) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிகண்டி, சாத்யகி ஆகியோரோடு கூடிய பாண்டவப் போர்வீரர்கள் பலர், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} இருந்து மன்னனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பி அவனை {யுதிஷ்டிரனைச்} சூழந்து கொண்டனர்.(63) அதே போலவே, உமது படையைச் சார்ந்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான அனைவரும், அந்தப் போரில் தடுக்கப்பட முடியாத கர்ணனை உறுதியான தீர்மானத்தோடு பாதுகாத்தனர்.(64) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும், துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் சிங்க முழக்கங்களும் விண்ணைப் பிளந்தன.(65) சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான குருக்களும், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களும் அச்சமில்லாமல் மீண்டும் ஒருவரோடொருவர் மோதினர்” {என்றான் சஞ்சயன்}.(66)
---------------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -48ல் உள்ள சுலோகங்கள் : 66
கர்ண பர்வம் பகுதி -48ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |