The prowess of Bhima! | Karna-Parva-Section-51 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனைக் காப்பதற்குத் தன் தம்பிகளை அனுப்பிய துரியோதனன்; திருதராஷ்டிரன் மகன்களில் அறுவரைக் கொன்ற பீமன்; பீமனோடு மீண்டும் மோதிய கர்ணன்; பீமனின் வில்லை அறுத்த கர்ணன்; பீமனால் தாக்கப்பட்டு உடல் நடுங்கிய கர்ணன்; பீமனின் கொடிமரம், சாரதி மற்றும் தேரை அழித்த கர்ணன்; தன் கதாயுதத்தால் எழுநூறுக்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்ற பீமன்; பீமனைக் கண்டு அஞ்சி ஓடிய கௌரவர்கள்; மூவாயிரம் குதிரைவீரர்களைத் தன் கதாயுதத்தாலேயே கொன்ற பீமன்; கர்ணனிடம் இருந்து தப்பி ஓடிய யுதிஷ்டிரன்; கர்ணன் யுதிஷ்டிரனைத் தொடர்வதைத் தடுத்து அவனோடு மோதிய பீமன்; பீமனின் துணைக்கு வந்த சாத்யகி; சூரியன் நடுவானை அடைந்தது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணனை நெடுஞ்சாண் கிடையாக அவனது தேரில் கிடக்கச் செய்த பீமனின் சாதனையானது அடைவதற்கு மிக அரிதானது.(1) “சிருஞ்சயர்களோடு சேர்த்துப் பாண்டவர்களைக் கொல்வதற்குக் கர்ணன் ஒருவனே இருக்கிறான்” என்பதையே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் என்னிடம் அடிக்கடி சொல்வது வழக்கம்.(2) எனினும், போரில் இப்போது பீமனால் வீழ்த்தப்பட்ட ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டு, என் மகன் துரியோதனன் அடுத்ததாக என்ன செய்தான்?” என்று கேட்டான்.(3)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பெரும் போரில் புறமுதுகிட்ட சூத வகையைச் சார்ந்த ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன்னுடன் பிறந்த தம்பிகளிடம்,(4) “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நீங்கள் வேகமாகச் சென்று, பீமசேனனிடம் உண்டான அச்சத்தால் அடியற்ற துன்பப் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் ராதையின் மகனை {கர்ணனைக்} காப்பீராக” என்றான்.(5) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்த இளவரசர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தில், சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்றனர்.(6) அவர்கள், சுருதர்வான் {சுருதாயு}, துர்த்தரன், கிராதன், விவித்ஸு, விகடன், சோமன் {ஸமன்}, நிஷங்கி, கவசி, பாசி, நந்தன், உபநந்தகன்,(7) துஷ்பிரதர்ஷன், சுபாஹு, வாதவேகன், சுவார்ச்சஸஸ், தனுக்ராஹன், துர்மதன், ஜலசந்தன், சலன், ஸஹன் ஆகியோர் ஆவர்[1].(8)
[1] இந்தப் பெயர்கள் துரியோதனனுடைய தம்பிமார்களின் வேறு பெயர்களாக இருக்க வேண்டும். இந்தப் பெயர்களில் சில முன்னர்ச் சொல்லப்பட்டுள்ள பெயர்களோடு ஒத்திசையவில்லை.
பெருந்தேர்ப்படையொன்றால் சூழப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் சக்தியோடும், வலிமையோடும், பீமசேனனை அணுகி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(9) அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை நோக்கிப் பல்வேறு வகைகளிலான கணைமாரிகளைப் பொழிந்தனர். இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமன்,(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னை எதிர்த்து வந்த அந்த உமது மகன்களுக்கு மத்தியில் இருந்த முதன்மையான ஐம்பது தேர்வீரர்களையும், வேறு ஐநூறு பேரையும் வேகமாகக் கொன்றான்[2].(11) பிறகு, சினத்தால் நிறைந்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்}, முழு நிலவுக்கு ஒப்பான முகத்தால் அருளப்பட்டதும், காதுகுண்டலங்கள் மற்றும் தலைக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான விவித்சுவின் தலையைத் தாக்கி வீழ்த்தினான். இவ்வாறு வெட்டப்பட்ட அந்த இளவரசன் கீழே பூமியில் விழுந்தான்.(12) தங்கள் வீரச் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட (பிற) சகோதரர்கள், ஓ! தலைவா, அந்தப் போரில் பயங்கரமான ஆற்றலைக் கொண்ட பீமனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து சென்றனர்.(13)
[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, "அரசரே, அவர்களால் அடிக்கப்படுகின்ற மஹாபலசாலியான பீமஸேனன் விரைவாக வருகின்ற அந்த உமது குமாரர்களுடைய ஐந்நூற்றைம்பது ரதங்களை நாசஞ்செய்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “இவ்வாறு அவர்களால் தாக்கப்பட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான பீமன், ஓ! மன்னா, முதன்மையான தேர்வீரர்களில் ஐம்பது பேரையும், உமது மகன்களுக்கு மத்தியில் இருந்த ஐநூறு பேரையும் கொன்றான்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஓ! மனிதர்களின் தலைவா, உமது மகன்கள் மிகப் பலவானான பீமசேனன் மீது பாய்ந்து அவனைத் தாக்கினர். அவன் {பீமன்}, தன்னை எதிர்த்து வந்தோரில் ஐநூறு ரதர்களையும் {தேர்வீரர்களையும்}, மேலும் ஐம்பது ரதவீரர்கள் பிறரையும் கொன்றான்" என்றிருக்கிறது.
பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், அந்தப் போரில் அகன்ற தலை கொண்ட வேறு கணைகள் {பல்லங்கள்} இரண்டால், உமது மகன்களில் மேலும் இருவரின் உயிரை எடுத்தான்.(14) இரண்டு தெய்வீக இளைஞர்களைப் போலத் தெரிந்த விகடன் மற்றும் சஹன் ஆகிய அவர்கள் இருவரும், புயலால் வேரோடு சாய்க்கப்பட்ட இரு மரங்களைப் போலப் பூமியில் விழுந்தனர்.(15) அப்போது ஒரு கணத்தையும் இழக்காத பீமன், கூர்முனை கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசம் ஒன்றால்} கிராதனை யமலோகம் அனுப்பி வைத்தான். அந்த இளவரசன் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.(16) அப்போது, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பெரும் வில்லாளிகளான உமது வீரமகன்கள் அனைவரும் இவ்வாறு கொல்லப்படுகையில் உரத்தத் துன்பக் கதறல்கள் அங்கே எழுந்தன.(17) அந்தத் துருப்புகள் மீண்டும் கலங்கடிக்கப்பட்டபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் பீமன், அந்தப் போரில், நந்தன் மற்றும் உபநந்தகன் ஆகியோரையும் யமலோகம் அனுப்பி வைத்தான்[3].(18) அதன் பேரில் உமது மகன்கள் மிகவும் கலங்கடிக்கப்பட்டு, யுக முடிவின் அந்தகனைப் போல அந்தப் போரில் நடந்து கொண்ட பீமசேனனைக் கண்டு அச்சமடைந்து தப்பி ஓடினர்.(19)
[3] பெரும்போர் தொடங்கிய நாள் முதல், துரோண பர்வம் 156ம் பகுதியில் வரும் 14ம் நாள் முடிவு வரை பீமசேனன், துரியோதனனின் தம்பிகளில் 68 பேரைக் கொன்றிருந்தான். அதில் ஒன்று சந்தேகத்திற்கிடமாக இருப்பதால் இதுவரை கொல்லப்பட்டிருப்பது 67ஆகவும் இருக்கலாம். இப்போது 17ம் நாளில் பிபித்சு, விகடன், சஹன், கிராதன், நந்தன், உபநந்தகன் ஆகிய இந்த அறுவரைக் கொன்றதன் மூலம் அந்த எண்ணிக்கை 74 ([அ]73) ஆகியிருக்கிறது.
அந்த உமது மகன்கள் கொல்லப்பட்டதைக் கண்டு, உற்சாகத்தை இழந்த இதயத்துடன் கூடிய சூதன் மகன் {கர்ணன்}, அன்னங்களின் வண்ணத்தைக் கொண்ட தன் குதிரைகளை மீண்டும் பாண்டுவின் மகன் {பீமன்} இருக்கும் இடத்திற்குத் தூண்டினான்.(20) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தூண்டப்பட்ட அக்குதிரைகள் பெரும் வேகத்துடன் பீமசேனனின் தேரை அடைந்து போரில் கலந்தது.(21) ஓ! ஏகாதிபதி, போரில் கர்ணனுக்கும், பாண்டுவின் மகனுக்கும் {பீமனுக்கும்} இடையில் மீண்டும் ஏற்பட்ட இந்த மோதல், ஓ! மன்னா, மிகக் கடுமையானதாகவும், அச்சம் நிறைந்ததாகவும், பெரும் ஆரவராம் நிறைந்ததாகவும் ஆனது.(22) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், அந்தப் போரில் மேற்கொண்டு நடப்பவற்றை அறிய மிகுந்த ஆவல் கொண்டவனானேன்.(23)
அப்போது, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொண்ட பீமன், ஓ! மன்னா, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிறகு படைத்த கணைமாரியால் கர்ணனை அம்மோதலில் மறைத்தான்.(24) பிறகு, மிக உயர்ந்த ஆயுதங்களை அறிந்த போர்வீரனான கர்ணன், கோபத்தால் நிறைந்து, முழுக்க இரும்பாலானவையும், அகன்ற தலை கொண்டவையும், நேரானவையுமான ஒன்பது கணைகளால் {பல்லங்களால்} பீமனைத் துளைத்தான்.(25) அதன்பேரில், வலிமைமிக்கக் கரங்களையும், பயங்கர ஆற்றலையும் கொண்ட பீமன், கர்ணனால் இவ்வாறு தாக்கப்பட்டதும், தன் காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்த ஏழு கணைகளை ஏவி தன்னைத் தாக்கியவனைத் துளைத்தான்.(26) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலப் பெருமூசுவிட்ட கர்ணன், அடர்த்தியான கணைமாரியால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) வலிமைமிக்கப் பீமனும், கௌரவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடர்த்தியான கணைப்பொழிவால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கர்ணனை} மறைத்துப் பெருமுழக்கம் செய்தான்.(28)
அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், தன் வில்லை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்க இறகுகளைக் கொண்டவையுமான பத்து கணைகளால் பீமனைத் துளைத்தான்.(29) பெருங்கூர்மை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} பீமனின் வில்லையும் அவன் {கர்ணன்} அறுத்தான். அப்போது வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்ட பீமன், சணல் கயிறுகளால் சுற்றிலும் கட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், காலனின் இரண்டாம் தண்டாயுதம் போன்றதுமான ஒரு பயங்கரமான பரிகத்தை எடுத்துக் கொண்டு கர்ணனை ஒரே அடியாகக் கொல்லும் விருப்பத்தோடு, பெருமுழக்கத்துடன் அதை அவன் மீது வீசினான்.(30,31) எனினும் கர்ணன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால், இடியைப் போலப் பெருமுழக்கம் செய்து கொண்டு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தப் பரிகத்தைப் பல துண்டுகளாக வெட்டினான்.(32) பிறகு, பகைவரின் துருப்புகளைக் கலங்கடிப்பவனான பீமன், பெரும்பலம் கொண்ட தன் வில்லைப் பிடித்து, கூரிய கணைகளால் கர்ணனை மறைத்தான்.(33) அந்தச் சந்திப்பில் கர்ணனுக்கும், பாண்டுவின் மகனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது, ஒன்றையொன்று கொல்ல விரும்பும் பெருஞ்சிங்கங்களின் இரண்டிற்கிடையிலான போரைப் போல ஒரு கணத்தில் அச்சந்தருவதாக மாறியது.(34)
அப்போது கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லைப் பெரும்பலத்தோடு வளைத்து, நாண்கயிற்றைத் தன் காது வரை இழுத்து மூன்று கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(35) கர்ணனால் ஆழத்துளைக்கப்பட்டவனும், பலம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, தன் எதிராளியின் உடலைத் துளைத்துச் செல்லக்கூடிய ஒரு பயங்கரக் கணையை எடுத்தான்.(36) அந்தக் கணையானது, கர்ணனின் கவசத்தைப் பிளந்து, அவனது உடலையும் துளைத்துக் கடந்து சென்று, எறும்புப்புற்றுக்குள் செல்லும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(37) அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், பெரிதும் வலியை உணர்ந்த கர்ணன் மிகவும் கலக்கமடைந்தான். உண்மையில் அவன் {கர்ணன்}, நிலநடுக்கத்தின் போது குலுங்கும் மலையெனத் தன் தேரில் நடுங்கினான்.(38)
அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், ஓ! மன்னா, பதிலடி கொடுக்க விரும்பி, இருபத்தைந்து கணைகளாலும், இன்னும் பலவற்றாலும் பீமனைத் தாக்கினான்.(39) பிறகு அவன் வேறு ஒரு கணையால் பீமசேனனின் கொடிமரத்தை அறுத்து, தான் விடுத்த மற்றொரு அகன்ற தலை கணையால் {பலத்தால்} பீமனின் சாரதியை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான்.(40) அடுத்ததாக மற்றொரு சிறகு படைத்த கணையால் பாண்டு மகனின் {பீமனின்} வில்லை வேகமாக அறுத்த கர்ணன், பயங்கரச் சாதனைகளைச் செய்த பீமனைத் தேரிழக்கச் செய்தான்.(41) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {திருதராஷ்டிரரே}, தன் தேரை இழந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், {ஆற்றலில்} காற்று தேவனுக்கு ஒப்பானவனுமான பீமன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் சிறந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(42) உண்மையில் பெருஞ்சீற்றத்துடன் தன் தேரில் இருந்து கீழே குதித்த பீமன், ஓ! மன்னா, கூதிர் கால மேகங்களை அழிக்கும் {விரட்டும்} காற்றைப் போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.(43)
எதிரிகளை எரிப்பவனும், கோபத்தால் நிறைந்தவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஏர்க்கலப்பைகளைப் போலப் பெரிய தந்தங்களைக் கொண்டவையும், பகைவரின் துருப்புகளைத் தாக்கும் திறன் கொண்டவையுமான எழுநூறு யானைகளைத் திடீரென முறியடித்தான் {தாக்கினான்}.(44) பெரும் பலத்தைக் கொண்டவனும், யானைகளின் முக்கிய அங்கங்கள் எவை என்தை அறிந்தவனுமான அவன், அவற்றின் நெற்றிப்பொட்டுகளையும், கும்பப் பகுதிகளையும், தந்தக் கட்டுகளிலும் தாக்கினான்.(45) அதன்பேரில் அச்சமடைந்த அவ்விலங்குகள் தப்பி ஓடின. ஆனால் தங்கள் சாரதிகளால் மீண்டும் தூண்டப்பட்ட அவை, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல மீண்டும் பீமசேனனைச் சூழ்ந்து கொண்டன.(46) தன் வஜ்ரத்தால் மலைகளை வீழ்த்தும் இந்திரனைப் போல அந்தப் பீமன், சாரதிகள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்களோடு கூடிய அந்த எழுநூறு யானைகளையும் தன் கதாயுதத்தால் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தினான்.(47) எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தக் குந்தியின் மகன் அடுத்ததாக, பெரும் பலத்தைக் கொண்டவையும், சுபலன் மகனுக்கு {சகுனிக்குச்} சொந்தமானவையுமான ஐம்பத்திரண்டு யானைகளை அடித்து வீழ்த்தினான்.(48)
உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பிறகு அந்தப் போரில், முதன்மையான தேர்களில் ஒரு நூறையும், காலாட்படை வீரர்களில் பல நூற்றுக்கணக்கானவர்களையும் அழித்தான்.(49) சூரியனாலும், உயர் ஆன்ம பீமனாலும் எரிக்கப்பட்ட உமது படையானது, நெருப்பில் பரப்பட்ட ஒரு தோல் துண்டைப் போலச் சுருங்கத் தொடங்கியது.(50) ஓ! பாரதக் குலத்தின் காளையே அந்த உமது துருப்புகள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தினால் கவலையில் நிறைந்து, அந்தப் போரில் பீமனைத் தவிர்த்துவிட்டு, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.(51) அப்போது சிறந்த கவசங்களைத் தரித்த ஐநூறு தேர்வீரர்கள், பெரும் முழக்கங்களைச் செய்தபடியும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தபடியும், பீமனை நோக்கி விரைந்தனர்.(52) அந்தப் பீமன், அசுரர்களை அழிக்கும் விஷ்ணுவைப் போலத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்களை, அவர்களது சாரதிகள், தேர்கள், கொடிகள், கொடிமரங்கள் மற்றும் ஆயுதங்களுடன் சேர்த்துத் தன் கதாயுதத்தால் அழித்தான்.(53)
அப்போது, சகுனியால் அனுப்பப்பட்டவர்களும், துணிச்சல்மிக்க மனிதர்களால் மதிக்கப்படுபவர்களுமான மூவாயிரம் குதிரைவீரர்கள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் வேல்களுடன் பீமனை நோக்கி விரைந்தனர்.(54) அவர்களை நோக்கி மூர்க்கமாகச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன், பல்வேறு வழித்தடங்களில் சென்று தன் கதாயுதத்தால் அவர்களைக் கொன்றான்.(55) பெரும்பாறைகளால் தாக்கப்படும்போது, யானை மந்தைகளுக்கு மத்தியில் எழுவதைப் போலப் பீமனால் தாக்கப்பட்ட அவர்களுக்கு மத்தியில் உரத்த கூச்சல்கள் எழுந்தன.(56) அவ்வழியில் சுபலன் மகனின் {சகுனியின்} மூவாயிரம் {3000} சிறந்த குதிரைகளைக் கொன்ற அவன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, சினத்தால் நிறைந்து ராதையின் மகனை எதிர்த்துச் சென்றான்.(57)
அதேவேளையில் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான தர்மன் மகனை {யுதிஷ்டிரனை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்து, அவனது சாரதியையும் வீழ்த்தினான்.(58) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கர்ணன்}, அந்தப் போரில் இருந்து யுதிஷ்டிரன் தப்பி ஓடுவதைக் கண்டு, கங்க இறகுகளாலானவையும், நேராகச் செல்லக்கூடியவையுமான கணைகள் பலவற்றை ஏவிக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(59) காற்றுதேவனின் மகன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, தன் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் மறைத்து, மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்ற கர்ணனை அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(60) பின்தொடர்வதில் இருந்து திரும்பியவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் பீமனை வேகமாக மறைத்தான்.(61) அப்போது அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் தேர் அருகே தன்னை நிறுத்திக் கொண்டு, பீமனின் முன்பு இருந்த கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினான்.(62) சாத்யகியால் அதிகம் பீடிக்கப்பட்டாலும், கர்ணன் பீமனையே அணுகினான். வில்தரித்தோர் அனைவருக்கு மத்தியில் காளைகளும், பெருஞ்சக்தி கொண்டவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் அணுகி அழகிய கணைகளை ஏவியபோது மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(63)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் அவர்களால் பரப்பப்பட்ட அந்தக் கணைகள், நாரைகளின் சுடர்மிக்க முதுகுகளைப் போல, மிகக் கடுமையாகவும், பயங்கரமாகவும் தெரிந்தன.(64) அந்த ஆயிரங்கணைகளின் விளைவால், ஓ! மன்னா, அதற்கும் சூரியக் கதிர்களையோ, முக்கிய, அல்லது துணைத் திசைப்புள்ளிகளையோ எங்களாலும், எதிரியாலும் காண முடியவில்லை.(65) உண்மையில், நடுப்பகலில் ஒளிரும் சுடர்மிக்கச் சூரியப் பிரகாசமானது, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனால் {பீமனால்} ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் விலக்கப்பட்டது.(66) சுபலனின் மகன் {சகுனி}, கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அதிரதன் மகன் {கர்ணன்}, கிருபர் ஆகியோர் பாண்டவர்களுடன் போரிடுவதைக் கண்ட கௌரவர்கள் திரண்டு மீண்டும் போரிடத் திரும்பி வந்தனர்.(67) ஓ! ஏகாதிபதி, தங்கள் எதிரிகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்த அந்தப் படையுண்டாக்கிய ஆரவாரமானது, மழைகளால் நிரம்பிய பெருங்கடல்களால் உண்டாக்கப்படும் பயங்கர ஒலிக்கு ஒப்பாக மகத்தானதாக இருந்தது.(68) போரில் சீற்றத்துடன் ஈடுபட்ட அவ்விரு படைகளும், போர்வீரர்களைக் கண்டு, அந்தப் பயங்கர ஆபத்தில் ஒன்றையொன்று பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தன.(69)
சூரியன் நடுவானை எட்டியபோது தொடங்கிய அந்தப் போரானது, இதுவரை நம்மால் கேள்விப்படாததைப் போலவும், காணப்படாததைப் போலவும் இருந்தது.(70) ஒரு பரந்த படையானது, பெரும் நீர்நிலையான ஒன்று பெருங்கடலை நோக்கி வரைவதைப் போல மற்றொரு பரந்த படையை எதிர்த்து விரைந்தது.(71) இரு படைகளும் ஒருவரையொருவர் நோக்கி முழங்கிய போது எழுந்த ஆரவாரமானது, பல பெருங்கடல்கள் ஒன்றோடொன்று கலந்தால் கேட்கப்பட்டவதைப் போல ஆழமானதாகவும் உரக்கவும் இருந்தது.(72) உண்மையில் அந்தச் சீற்றமிகு படைகள் இரண்டும், ஒன்றையொன்று நோக்கிப் பாயும் இரு சீற்றமிக்க ஆறுகள் ஒன்றாக ஒரே திரளாகக் கலக்கப்போகவதைப் போல ஒன்றையொன்று அணுகின.(73)
அதன் பிறகு, பெரும் புகழை வெல்ல விரும்பியவர்களான குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவருக்கிடையில் தொடங்கிய போரானது, பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் இருந்தது.(74) கூச்சலிட்ட போர்வீர்களின் முற்றிலும் குழப்பமான ஒலிகள், ஓ! பாரத அரசரே, அவர்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைத்தபோது இடையறாமல் கேட்கப்பட்டன.(75) ஒருவன், தனது தந்தை அல்லது தாயின் தரப்பிலிருந்தோ, செயல்கள் அல்லது நடத்தையிலிருந்தோ பெற்ற கேலிக்குரிய எந்தக் காரியமும், அவனது எதிரியால் அந்தப் போரில் அறிவிக்கப்பட்டது.(76) அந்தப் போரில் ஒருவரையொருவர் உரக்க நிந்தித்துக் கொள்ளும் அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களைக் கண்ட நான், ஓ! மன்னா, அவர்களது வாழ்நாள் காலம் முடிந்து விட்டது என்றே நினைத்தேன்.(77) அளவிலா சக்தி கொண்ட அந்தக் கோபக்கார வீரர்களின் உடல்களைக் கண்டு, வரப்போகும் பயங்கர விளைவுகளைக் குறித்த ஒரு பெரும் அச்சம் என் இதயத்திற்குள் நுழைந்தது.(78) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய அனைவரும், ஒருவரையொருவர் தாக்கித் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(79)
---------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -51ல் உள்ள சுலோகங்கள் : 79
ஆங்கிலத்தில் | In English |