The Kaurava army became strenghless! | Karna-Parva-Section-52 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : இரு படைகளுக்கும் இடையில் நடந்த கடும்போர்; உயிரினங்களின் ருத்ரசூனைக்கு ஒப்பான பயங்கரத்தை அடைந்த போர்க்களம்; நால்வகைப் படைகளும் தங்களுக்குள் மோதிக்கொண்ட விதம்; பலவீனமடைந்த கௌரவப் படை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் பகை உணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(1) ஓ! மன்னா, தேர்க்கூட்டங்கள், குதிரைகளின் பெரும்படைகள், காலாட்படைப்பிரிவுகள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் ஆகியவை அந்தப் போரில் ஒன்றோடொன்று கலந்தன.(2) அந்தப் பயங்கரப் போரில், ஒருவர் மீதொருவர் வீசிக்கொண்ட கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள் {பரிகங்கள்}, குணபங்கள் {சக்திகள்}, வேல்கள் {பராசங்கள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, ஏவுகணைகள் {முசுண்டிகள்} ஆகியவை விழுவதை நாங்கள் கண்டோம்.(3) காணப் பயங்கரமான கணைமாரிகள், விட்டிற்பூச்சிகளைப் போலப் பறந்தன. யானைகளை அணுகிய யானைகள், ஒன்றையொன்று முறியடித்தன.(4)
அந்தப் போரில் குதிரைவீரர்களோடு மோதிய குதிரைவீரர்கள், தேர்வீரர்களோடு மோதிய தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடு மோதிய காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்களைச் சந்தித்த காலாட்படைவீரர்கள்,(5) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்றும் யானைகளைச் சந்தித்த காலாட்படைவீரர்கள், யானைகள் மற்றும் குதிரைவீரர்களைச் சந்தித்த தேர்கள், பிற மூன்று வகைப் படைகளைப் பெரும் வேகத்தோடு சந்தித்த யானைகள் ஆகியன ஒன்றையொன்று நசுக்கிக் கலங்கடிக்கத் தொடங்கின.(6) அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, தங்கள் குரல்களின் உச்சியில் கூச்சலிட்டதன் விளைவால், அந்தப் போர்க்களமானது உயிரினங்களின் (உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனின்) சூனைக்கு {இறைச்சிக் கொட்டிலுக்கு} ஒப்பான அச்சத்தைத் தருவதாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருதியால் மறைக்கப்பட்ட பூமியானது, மழைக்காலங்களில் செம்பட்டுப்பூச்சிகளால் {இந்திரகோபங்களால்} மறைக்கப்பட்ட பரந்த நிலத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(8) உண்மையில் பூமியானது, செக்கச்சிவந்த சாயம் பூசப்பட்ட வெண்ணிற ஆடைகளை உடுத்தியிருக்கும் பேரழகு இளங்கன்னிகையின் குணங்களையே அப்போது ஏற்றிருந்தது.(9) சதை, குருதி ஆகியவற்றால் பன்னிறங்கொண்ட அந்தப் போர்க்களமானது, எங்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதைப் போல இருந்தது. உடலிலிருந்து அறுக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சிரங்களும், ஓ! பாரதரே, கரங்கள், தொடைகள், காதுகுண்டலங்கள், போர்வீரர்களின் உடல்களில் இடம்பெயர்ந்திருந்த பிற ஆபரணங்கள்,(10) கழுத்தணிகள், மார்புக்கவசங்கள், துணிவுமிக்க வில்லாளிகளின் உடல்கள், கவசங்கள், கொடிகள் ஆகியனவும் தரையில் சிதறிக் கிடந்தன.(11)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகளை எதிர்த்து வந்த யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று கிழித்துக் கொண்டன. எதிராளியின் தந்தங்களால் தாக்கப்பட்ட யானைகள் மிக அழகாகத் தெரிந்தன.(12) குருதியில் குளித்த அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் சாரல்களில் ஓடைகளாகப் பாயும் தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட அசையும் மலைகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(13) குதிரைவீரர்களால் வீசப்பட்ட வேல்கள், அல்லது பகை போராளிகளால் பக்கவாட்டில் கொள்ளப்பட்டவற்றை {வேல்களைப்}, பிடித்துக் கொண்ட அவ்விலங்குகளில் பல, அவ்வாயுதங்களை வளைத்து முறித்தன.(14) கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட பல யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குளிர்காலத்தின் தொடக்கத்தில் மேகங்களற்றுக் காணப்படும் மலைகளைப் போலத் தெரிந்தன.(15) பல முதன்மையான யானைகள், தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்டு, ஓ! ஐயா, சுடர்மிக்கப் பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(16) மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்வுயிரினங்களில் சில, பகையானைகளால் தாக்கப்பட்டு அந்தப் போரில் சிறகு படைத்த மலைகளைப் (சிறகு படைத்த மலைகள் தங்கள் சிறகுகள் வெட்டப்பட்டதும் விழுவதைப்) போலக் கீழே விழுந்தன.(17) கணைகளால் பீடிக்கப்பட்ட இன்னும் பிற {யானைகள்}, தங்கள் காயங்களால் மிகவும் வலியை உணர்ந்து, தங்கள் மத்தகம், அல்லது தங்கள் தந்தங்களுக்கு இடையிலான பகுதிகளால் பூமியைத் தீண்டி கீழே விழுந்தன {தலைகுப்புற விழுந்தன}.(18) வேறு சில யானைகளோ சிங்கங்களைப் போல முழங்கின. இன்னும் பலவோ, பயங்கர ஒலிகளை வெளியிட்டபடியே அங்கேயும், இங்கேயும் ஓடின, மேலும் பல, ஓ! மன்னா, வலியால் கதறின.(19)
தங்க இழைகளுடன் கூடிய குதிரைகளும், கணைகளால் தாக்கப்பட்டு, கீழே விழவோ, பலவீனமடையவோ, அனைத்துத் திசைகளிலும் ஓடவோ செய்தன.(20) கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்டு, அல்லது, கீழே இழுக்கப்பட்ட வேறு சில {குதிரைகள்}, பூமியில் விழுந்து, பல்வேறு வகைகளிலான அசைவுகளைச் செய்து, வலியால் வேதனையுடன் நெளிந்தன.(21) ஓ! ஐயா, மனிதர்களும் பூமியில் விழுந்து, வலியால் பல்வேறு கூச்சல்களையிட்டனர். தங்கள் உறவினர், தந்தைமார், மற்றும் பாட்டன்மார்,(22) மற்றும் வேறு சிலரைக் கண்ட பிறர், தங்கள் எதிரிகள் பின்வாங்குவதைக் கண்டு, அவர்களுக்கு நன்கறிந்த பெயர்களையும், அவர்களது குலப் பெயர்களையும் சொல்லி ஒருவருக்கொருவர் உரக்கக் கதறினர்.(23) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட போராளிகள் பலரின் கரங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் வெட்டப்பட்டு, பல்வேறு வகை அசைவுகளைச் செய்தபடி தரையில் நெளிந்தன.(24) இப்படி ஆயிரக்கணக்கான கரங்கள் கீழே விழுந்து, மேலே எழுந்தன, மேலும் பல, ஐந்து தலை பாம்புகளைப் போல முன்னோக்கி நகர்வதாகத் தெரிந்தது.(25) சிறுத்துச் செல்லும் பாம்புகளின் உடல்களைப் போலத் தெரிந்தவையும், சந்தனத்தால் பூசப்பட்டவையுமான அக்கரங்கள், ஓ! மன்னா, குருதியில் நனைந்த போது, தங்கத்தாலான சிறு கொடிமரங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(26) அனைத்துப் பக்கங்களிலும் போரானது மூர்க்கமாகவே நடைபெறுவதே இயல்பாக மாறியதும், போர்வீரர்கள் தாங்கள் போரிடுவோருடனோ, தாக்குவோருடனோ தனித்த உணர்வுகள் ஏதும் இல்லாமல் போரிட்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(27)
போர்க்களத்தில் புழுதி மேகம் பரவி, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அடர்த்தியான மழையாகப் பொழிந்தன. இவ்வாறு காட்சி இருளடைந்ததும், போராளிகளால் அதற்கு மேலும் நண்பர்களிடமிருந்து எதிரிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(28) உண்மையில், கடுமையானதும், அச்சத்தை உண்டாக்குவதுமான அந்தப் போரானது இவ்வாறே நடந்தது. விரைவில் குருதிப் புனல்களால் அங்கே பெரும் ஆறுகள் பல பாயத் தொடங்கின.(29) தங்கள் பாறைகளாக அமைந்த போராளிகளின் தலைகளால் அவை {அந்த ஆறுகள்} நிறைந்திருந்தன. போர்வீரர்களின் மயிர், அவற்றின் மேல் மிதக்கும் பாசிகளாகவும், புற்களாகவும் அமைந்தன. எலும்புகளே அவற்றின் மீன்களாகின. விற்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியன அவற்றைக் கடக்கும் தெப்பங்களாகின.(30) சதையையும், குருதியையும் அவற்றின் சேறாகக் கொண்டவையும், பயங்கரமானவையும், அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆறுகள், அங்கே இவ்வாறு உண்டான குருதியோடையால் பெருகி,(31) மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தின. அச்சத்தைத் தரும் அந்த ஆறுகள் யமனின் வசிப்பிடத்திற்கு வழிகாட்டிச் சென்றன. க்ஷத்திரியர்களை அச்சமடையச் செய்த பலர் அந்த ஓடைகளில் மூழ்கி மாண்டனர்.(32)
ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஊனுண்ணும் பல்வேறு உயிரினங்களின் முழக்கம் மற்றும் ஊளையின் விளைவால், அந்தப் போர்க்களமானது, இறந்தோரின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிகளை {நரகத்தைப்} போலப் பயங்கரத்தை அடைந்தது.(33) அனைத்துப் பக்கங்களிலும் தலையற்ற முண்டங்கள் எண்ணற்றவை எழுந்து நின்றன. பயங்கரமான உயிரினங்கள், ஓ! பாரதரே, சதை மற்றும் குருதியைக் கழுத்துவரை உண்டு, குருதி மற்றும் கொழுப்பைக் குடித்துச் சுற்றிலும் ஆடத்தொடங்கின.(34) காகங்கள், கழுகுகள், நாரைகள் ஆகியன, கொழுப்பு, மஜ்ஜை மற்றும் பிற விலங்குகளின் சதை ஆகியவற்றால் நிறைவடைந்து, மகிழ்ச்சியாகத் திரிவது தெரிந்தது.(35)
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்களாக இருந்த உம்மவர், விடுவதற்குக் கடினமான அச்சங்கள் அனைத்தையும் விட்டு, போர்வீரர்களின் உறுதியை நோற்று, அச்சமற்ற வகையில் தங்கள் கடமைகளைச் செய்தனர்.(36) உண்மையில், எண்ணற்ற கணைகளும், ஈட்டிகளும் காற்றில் எங்குப் பாய்ந்தனவோ, ஊனுண்ணும் பல்வேறு வகை உயிரினங்கள் எங்கு நிறைந்திருந்தனவோ அந்தக் களத்தில், துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், அச்சமில்லாமல் திரிந்து தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.(37) ஓ! பாரதரே, ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட அவர்கள், தங்கள் பெயர்களையும், குடும்பங்களையும் அறிவித்தனர். தங்கள் தந்தைமார் மற்றும் குடும்பங்களை அறிவித்துக் கொண்ட அவர்களில் பலர், ஓ! தலைவா, ஓ! மன்னா, ஈட்டிகள், வேல்கள் மற்றும் போர்க்கோடரிகளால் ஒருவரையொருவர் நொறுக்கத் தொடங்கினர்.(38,39) கடுமையானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது கௌரவபடையானது, பெருங்கடலின் ஆழத்தில் நொறுக்கப்பட்ட மரக்கலம் ஒன்றைப் போல அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை அடையும் வகையில் பலவீனமடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(40)
---------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -52ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |