Arjuna sped a weapon called Naga! | Karna-Parva-Section-53 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களோடு போரிட்ட அர்ஜுனன்; நெருக்கமாகப் போரிட்ட அந்தப் போர்வீரர்கள் அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டது; நாகாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அதனால் கட்டுண்ட சம்சப்தகர்கள்; கருடாஸ்திரத்தை ஏவிய சுசர்மன்; சம்சப்தகர்களின் கட்டுகள் விலகியது; ஐந்திராயுதத்தை ஏவி சம்சப்தகர்களை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அச்சம் நிறைந்ததாக அமைந்த போர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் பலர் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஓ! ஐயா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஆரவாரத்திற்கும் மேலாகக் காண்டீவத்தின் உரத்த நாணொலியானது, சம்சப்தகர்கள், கோசலர்கள், மற்றும் நாராயணப் படைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எங்குக் கொன்று கொண்டிருந்தானோ, அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.(1,2) சினத்தால் நிரம்பியும், வெற்றிக்கான விருப்பத்துடனும் இருந்த சம்சப்தகர்கள் அந்தப் போரில் அர்ஜுனனின் தலையில் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(3) எனினும், பலமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, அந்தக் கணைமாரியை வேகமாகத் தடுத்து, அந்தப் போரில் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொல்லத் தொடங்கினான்.(4) அந்தத் தேர்ப் படைப்பிரிவுக்குள் மூழ்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்டதும், கங்க இறகுகளைக் கொண்டதுமான கணைகளின் உதவியுடன் கூடியவனாகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த சுசர்மனிடம் வந்தான்.(5)
அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனோ {சுசர்மனோ}, அர்ஜுனன் மீது அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தான். அதே வேளையில் சம்சப்தகர்களும் தங்கள் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர்.(6) அப்போது பத்து கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்த சுசர்மன், மூன்றால் ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைத் துளைத்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அர்ஜுனனின் கொடிமரத்தையும் துளைத்தான்.(7) அதன்பேரில், பெரும் வடிவிலானதும், தெய்வீகத் தச்சனின் கைவண்ணத்தில் உருவானதுமான அந்த முதன்மையான குரங்கு, பேரொலிகளை வெளியிடத் தொடங்கி, மிக மூர்க்கமாக முழங்கி உமது துருப்பினரை அச்சுறுத்தியது.(8) குரங்கின் முழக்கங்களைக் கேட்ட உமது படை அச்சமடைந்தது. உண்மையில், பேரச்சத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்த அந்த வியூகமே {படையே} முற்றிலும் செயலற்றுப் போனது.(9) அப்படிச் செயலற்று நின்ற உமது படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு மலர்களால் பூத்துக் குலுங்கும் சைத்ரரதக் காடு போல அழகாகத் தெரிந்தது.(10)
பிறகு, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் உணர்வுகள் மீண்ட அந்தப் போர்வீரர்கள், மலைகளை நனைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியால் அர்ஜுனனை நனைத்தனர்.(11) அப்போது அவர்கள் அனைவரும் அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பெருந்தேரைச் சூழ்ந்து கொண்டனர். அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கிய அவர்கள், எப்போதும் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டாலும் கூடப் பெருமுழக்கங்களைச் செய்து கொண்டே இருந்தனர்.(12) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனது {அர்ஜுனனின்} குதிரைகள், தேர்ச்சக்கரங்கள், தேரின் ஏர்க்கால், மற்றும் அந்த வாகனத்தின் பிற அங்கங்கள் ஆகியவற்றைப் பெரும்பலத்தோடு தாக்கியபடியே அவர்கள் சிங்க முழக்கங்கள் பலவற்றைச் செய்தனர்.(13) அவர்களில் சிலர் கேசவனின் {கிருஷ்ணனின்} பருத்த கரங்களைப் பற்றினர், மேலும் அவர்களில் வேறு சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நின்று கொண்டிருந்தவனான பார்த்தனை {அர்ஜுனனைப்} பெரும் மகிழ்ச்சியோடு பிடித்தனர்.(14) அப்போது, அந்தப் போர்க்களத்தில் தன் கரங்களை அசைத்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் முதுகில் உள்ள சாரதிகள் {பாகர்கள்} அனைவரையும் உடல் குலுக்கிக் கீழே தள்ளும் பொல்லாத யானையொன்றைப் போலத் தன்னைப் பிடித்த அனைவரையும் கீழே வீசினான்.(15) பிறகு அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேர் தாக்கப்படுவதையும், கேசவன் தாக்கப்படும் அந்த முறையையும் கண்டு, சினத்தால் நிறைந்து, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும், காலாட்படைவீரர்களையும் தூக்கி வீசினான்.(16)
மேலும் அவன் {அர்ஜுனன்}, நெருக்கமான போருக்குத் தகுந்தவாறு, தனக்கு நெருக்கமாக இருந்த போராளிகள் அனைவரையும் கணைகள் பலவற்றால் மறைத்தான். கேசவனிடம் பேசிய அவன் {அர்ஜுனன்},(17) “ஓ! கிருஷ்ணா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆயிரகணக்கில் கொல்லப்பட்டாலும், ஒரு பயங்கரக் காரியத்தை நிறைவேற்றுவதில் ஈடுபடுபவர்களும், எண்ணற்றவர்களாய் இருப்பவர்களுமான இந்தச் சம்சப்தகர்களைப் பார். (18) ஓ! யதுக்களில் காளையே {கிருஷ்ணா}, தன் தேரில் இத்தகைய நெருக்கமான தாக்குதலைத் தாங்கிக் கொள்ளக்கூடியவன் என்னைத் தவிர இவ்வுலகில் வேறு எவனும் இல்லை” என்றான்.(19) பீபத்சு {அர்ஜுனன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தன் சங்கை முழக்கினான். அப்போது கிருஷ்ணனும் தன் சங்கை முழக்கி, அதன் முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(20) அம்முழக்கத்தைக் கேட்ட சம்சப்தகர்களின் படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கிப் பேரச்சம் கொண்டது.(21) பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி, நாகம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {நாகாஸ்திரத்தை} அழைத்து, சம்சப்தகர்களின் கால்களை மீண்டும் மீண்டும் முடக்கினான்.(22) கால்களைக் கட்டும் அந்தப் பட்டைகளை {நாகாஸ்திரக் கணைகளைக்} கொண்டு, அந்த உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} இவ்வாறு கட்டப்பட்ட அவர்கள் அனைவரும் கல்லாகிப் போனவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.(23) பிறகு, பழங்காலத்தில் தாரகனுடனான போரில் அசுரர்களைக் கொன்ற இந்திரனைப் போல, அசைவற்றிருந்த அந்தப் போர்வீரர்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கொல்லத் தொடங்கினான்.(24) போரில் இவ்வாறு கொல்லப்பட்ட அவர்கள், அந்தத் தேரை விட்டுவிட்டுத் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வீசத் தொடங்கினர்.(25) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கால்கள் முடக்கப்பட்ட அவர்களால், ஓர் அடியேனும் நகர முடியவில்லை. அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் அவர்களைக் கொன்றான்.(26) உண்மையில் அந்தப் போரில், காலைக் கட்டும் ஆயுதத்தை அழைத்துப் பார்த்தன் {அர்ஜுனன்} எவர் மீது குறி வைத்து ஏவினானோ, அந்தப் போர்வீரர்கள் அனைவரும், தங்கள் கீழ் அங்கங்களில் பாம்புகளால் கட்டப்பட்டனர்.(27)
அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான சுசர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் படை இவ்வாறு முடக்கப்பட்டதைக் கண்டு, சுபர்ணம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {கருடாஸ்திரத்தை} விரைவாக அழைத்தான்.(28) அதன்பேரில் எண்ணற்ற பறவைகள் கீழே வந்து, அந்தப் பாம்புகளை விழுங்கத் தொடங்கின., அந்த வானுலாவிகளைக் கண்ட பின்னவையும் {பாம்புகளும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடத் தொடங்கின.(29) கால்களைக் கட்டும் அவ்வாயுதத்தில் இருந்து விடுபட்ட அந்தச் சம்சப்தகப் படையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களில் இருந்து விடுபட்டு அனைத்து உயினரங்களுக்கும் ஒளியைத் தரும் சூரியனைப் போலத் தெரிந்தது.(30) இவ்வாறு விடுபட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணைகளை மீண்டும் ஏவி, அர்ஜுனனுடைய தேரின் மீது தங்கள் ஆயுதங்களையும் வீசினர். அவர்கள் அனைவரும் பார்த்தனை எண்ணற்ற கணைகளால் துளைத்தனர்.(31) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த வாசவன் மகன் {இந்திரனின் மகனான அர்ஜுனன்}, அந்த வலிமைமிக்க ஆயுதங்களைத் தன் கணைமாரியால் அறுத்து, அந்தப் போர்வீரர்களையும் கொல்லத் தொடங்கினான்.(32)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சுசர்மன், நேரான கணை ஒன்றால் அர்ஜுனனின் மார்பைத் துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(33) அதனால் ஆழத்துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த அர்ஜுனன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். அப்போது துருப்புகள் யாவும், “பார்த்தன் கொல்லப்பட்டான்” என்றே உரக்கக் கூச்சலிட்டன.(34) இதனால், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியும், உரத்த சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(35) அளவிலா ஆன்மா கொண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான பார்த்தன், தன் உணர்வுகள் மீண்டு, வேகமாக ஐந்திர ஆயுதத்தை அழைத்தான்.(36) ஓ! ஐயா ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, அவ்வாயுதத்தில் இருந்து வெளிப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால், மன்னர்களும், யானைகளும் கொல்லப்படுவது அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டது.(37) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணகான குதிரைகள், தேர்கள் ஆகியவையும் அவ்வாயுதத்தால் அந்தப் போரில் கொல்லப்படுவதும் (அழிக்கப்படுவதும்) காணப்பட்டது. அத்துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, ஓ! பாரதரே ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, சம்சப்தகர்கள் மற்றும் கோபாலர்கள் ஆகியோர் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது. அர்ஜுனனோடு போரிட அவர்களில் ஒரு மனிதனும் இருக்கவில்லை.(38,39)
அங்கே, வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அர்ஜுனன் உமது துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அந்தப் படுகொலையை அனைவரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தாமல் முற்றிலும் செயலற்றவர்களாகவே நீடித்தனர்.(40) அப்போது, அந்தப் போரில் முழுமையாகப் பத்தாயிரம் {10000} போராளிகளைக் கொன்ற அந்தப் பாண்டுவின் மகன், ஓ! ஏகாதிபதி ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகையற்ற சுடர்மிக்க நெருப்பொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(41) மேலும் அவன் பதினாலாயிரம் {14000} போர்வீரர்களையும், மூவாயிரம் {3000} யானைகளையும் முழுமையாகக் கொன்றான்.(42) பிறகு, மரணத்தையோ, வெற்றியையோ தங்கள் இலக்காக்கிக் கொண்ட சம்சப்தகர்கள் மீண்டும் தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(43) அப்போது, உமது போர்வீரர்களுக்கும், வலிமைமிக்க வீரனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பாண்டுவின் மகனுக்கும் இடையில் நடந்த போரானது அச்சம் நிறைந்ததாக அமைந்தது” {என்றான் சஞ்சயன்}.(44)
-----------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -53ல் உள்ள சுலோகங்கள் : 44
கர்ண பர்வம் பகுதி -53ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |