Kripa killed Suketu! | Karna-Parva-Section-54 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)
அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, கௌதமர் மகனுக்கு {கௌதமரின் பேரனும், சரத்வானின் மகனுமான கிருபருக்கு} எதிராக வேகமாகச் சென்று, அந்தப் பிராமணக் காளையின் மேல் தன் கணைமாரியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பொழிந்தான்.(5) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான கிருபர், அந்தக் கணைப்பொழிவைத் தடுத்து, அந்தப் போரில் கோபத்துடன் பத்து கணைகளால் சிகண்டியைத் துளைத்தார்.(6) அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, நேரானவையும், கங்க இறகுகளைக் கொண்டவையுமான ஏழு கணைகளால் அம்மோதலில் கிருபரை ஆழத் துளைத்தான்.(7) பிறகு, பெரும் தேர்வீரரும், இரு பிறப்பாளருமான {பிராமணருமான} அந்தக் கிருபர், அந்தக் கூரிய கணைகளால் ஆழத் துளைக்கப்பட்டு, சிகண்டியை அவனது குதிரைகள், சாரதி மற்றும் தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தார்.(8) குதிரைகளற்ற தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (சிகண்டி), ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் பிராமணரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(9) அம்மோதலில் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} முன்னேறிச் செல்கையில் அவனை நேரான கணைகள் பலவற்றால் கிருபர் மறைத்தது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாக இருந்தது.(10) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வாறு தாக்கப்பட்ட) சிகண்டி, முற்றிலும் செயல்பாடின்றியிருக்கும் பறக்கும் (மிதக்கும்) பாறைகளைப் போல இருந்த காட்சியை அந்தப் போரில் நாங்கள் மிக அற்புதம் நிறைந்ததாகவே கண்டோம்.(11)
ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருபரால் (கணைகளைக் கொண்டு) மறைக்கப்பட்ட சிகண்டியைக் கண்ட திருஷ்டத்யும்னன், கிருபரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) எனினும் பெரும் தேர்வீரனான கிருதவர்மன், மூர்க்கமாக விரைந்து சரத்வான் மகனை {கிருபரை} எதிர்த்துச் செல்லும் திருஷ்டத்யும்னனை எதிர்கொண்டான்.(13) சரத்வான் மகனின் {கிருபரின்} தேரை நோக்கித் தன் மகன் மற்றும் துருப்புகளுடன் விரைந்த யுதிஷ்டிரனைத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} தடுத்தான்.(14) உமது மகன் துரியோதனன், கணைமாரியை ஏவி கொண்டு, பெரும் வேகத்தைக் கொண்டவர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரையும் எதிர்கொண்டு தடுத்தான்.(15) வைகர்த்தனன் என்று வேறு பெயரில் அழைக்கப்படும் கர்ணனும், ஓ! பாரதரே, அந்தப் போரில் பீமசேனன், காருஷர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களைத் தடுத்தான்.(16)
அதேவேளையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சரத்வான் மகன் {கிருபர்}, பெரும் சுறுசுறுப்புடன், சிகண்டியை எரிக்கும் நோக்கோடு, அவன் மீது கணைகள் பலவற்றை ஏவினார்.(17) எனினும் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} தன் வாளை மீண்டும் மீண்டும் சுழற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை நோக்கிக் கிருபரால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் அனைத்தையும் வெட்டினான்.(18) அப்போது கௌதமர் மகன் {கிருபர்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பிருஷதன் மகனுடைய {சிகண்டியுடைய} கேடயத்தைத் தன் கணைகளால் வேகமாக வெட்டினார்.(19) ஓ! ஏகாதிபதி, தன் கேடயத்தை இழந்து கிருபருடைய சக்தியின் ஆளுகைக்குள் இருந்த சிகண்டி, காலனின் கோரப் பற்களுக்கிடையே சிக்கிய நோயாளியைப் போல (கிருபரை நோக்கி) கையில் வாளுடன் விரைந்து சென்றான்.(20)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரகேதுவின் மகன் சுகேது [1], அவ்வாறு கிருபரின் கணைகளால் தாக்கப்பட்டுத் துயரில் மூழ்கியிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை நோக்கிச் சென்றான்.(21) உண்மையில் அளவிலா ஆன்மா கொண்டவனும், இளைஞனுமான அந்த இளவரசன், கௌதமரின் தேரை நோக்கி விரைந்து, அந்தப் பிராமணரின் மீது பெருங்கூர்மை கொண்ட எண்ணற்ற கணைகளை அந்தப் போரில் பொழிந்தான்.(22) நோன்புகள் நோற்கும் அந்தப் பிராமணர், போரில் (வேறொருவனுடன்) ஈடுவதைக் கண்ட சிகண்டி, ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அந்த இடத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கினான்.(23) அதே வேளையில் சுகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்பது கணைகளால் கௌதமரின் மகனைத் {கிருபரைத்} துளைத்து, மேலும் எழுபதாலும், அதன் பிறகு மீண்டும் மூன்றாலும் துளைத்தான்.(24) ஓ! ஐயா, அதன் பிறகு அந்த இளவரசன் {சுகேது} கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்து, மற்றொரு கணையால், பின்னவருடைய {கிருபருடைய} சாரதியின் முக்கிய அங்கத்தைக் கடுமையாகத் தாக்கினான்.(25)
[1] இவனும் ஒரு பாஞ்சால இளவரசனே.
சினத்தால் நிறைந்த கௌதமர் மகன் {கிருபர்}, மிக உறுதியான புதிய வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, முப்பது கணைகளால் சுகேதுவின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் தாக்கினார்.(26) அங்கங்கள் அனைத்தும் மிகப் பலவீனமடைந்த அந்த இளவரசன் {சுகேது}, நிலநடுக்கத்தின் போது நடுங்கும் ஒரு மரத்தைப் போலத் தன் சிறந்த தேரில் நடுங்கினான்.(27) அப்போது, கத்தி தலை கணையொன்றை எடுத்த கிருபர், அவ்விளவரசன் நடுங்கிக் கொண்டே இருக்கையில், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள், தலைப்பாகை மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது {சுகேதுவின்} தலையை, அவனது உடலில் இருந்து வீழ்த்தினார்.(28) அதன்பேரில் அந்தத் தலையானது, பருந்தின் நகங்களில் இருந்து விழும் இறைச்சித் துண்டைப் போலப் பூமியில் விழுந்ததும், ஓ! பெரும் புகழ் கொண்டவரே, அவனது உடலும் கீழே விழுந்தது.(29) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுகேதுவின் வீழ்ச்சியின் பேரில் அச்சமடைந்த அவனது துருப்புகள் கிருபரைத் தவிர்த்துவிட்டு, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(30)
வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து கொண்ட கிருதவர்மன், அவனிடம் உற்சாகமாக, “நில், நிற்பாயாக” என்றான்.(31) அந்த விருஷ்ணி மற்றும் பாஞ்சாலப் போர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது, ஓர் இறைச்சித் துண்டுக்காக இரு பருந்துகளுக்கிடையில் நடைபெறுவதைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது.(32) சினத்தால் நிறைந்த திருஷ்டத்யும்னன் அந்தப் போரில் ஒன்பது கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தாக்கி, அவனைப் பெரிதும் பீடிப்பதில் வென்றான்.(33) பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்ட கிருதவர்மன், அந்தப் போரில் தன்னைத் தாக்குபவனுடைய குதிரைகள், தேர் மற்றும் அவனது கணைகள் ஆகியவற்றை {தன் கணைகளால்} மறைத்தான்.(34) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தேரோடு மறைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், மழைநிறைந்த மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலக் கண்ணுக்குப் புலப்படாதவனாக ஆனான்.(35) பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்த திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, அந்தப் போரில் தன் காயங்களோடு பிரகாசமாகத் தெரிந்தான்.(36)
பாண்டவப் படைத்தலைவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் நிறைந்து, கிருதவர்மனை அணுகி, கடும் கணைமாரியை அவன் மீது பொழிந்தான்.(37) எனினும் ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் தன்னை நோக்கிப் பெரும் மூர்க்கத்துடன் வந்து கொண்டிருந்த அந்தக் கடுங்கணை மாரியை பல்லாயிரக்கணக்கான தன் கணைகளால் அழித்தான்.(38) தாங்கிக் கொள்ள முடியாத தன் கணைமாரியானது அந்தப் போரில் கிருதவர்மனால் தடுக்கப்பட்டதைக் கண்ட பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் எதிராளியை அணுகி அவனைத் {கிருதவர்மனைத்} தடுக்கத் தொடங்கினான்.(39) விரைவில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணை ஒன்றால் கிருதவர்மனின் சாரதியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(40) வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தன் எதிராளியை வீழ்த்திய பிறகு, ஒரு கணமும் தாமதிக்காமல் தன் கணைகளால் கௌரவர்களைத் தடுக்கத் தடுங்கினான்.(41) அப்போது, ஓ! மன்னா, உமது போர்வீரர்கள், பெரும் சிங்க முழக்கங்களைச் செய்து கொண்டு திருஷ்டத்யும்னனை நோக்கி விரைந்தனர். இதனால், அவர்களுக்கிடையில் மீண்டும் ஒரு போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(42)
--------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -54ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |