Ashwatthama encountered Yudhishthira! | Karna-Parva-Section-55 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : நன்கு பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனை உற்சாகமாக எதிர்த்துச் சென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய சாத்யகியும், திரௌபதியின் மகன்களும்; பதிலுக்கு அவர்களைத் தாக்கிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் பேசிய யுதிஷ்டிரன் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றது; அஸ்வத்தாமனும் விலகிச் சென்றது; கௌரவப் படையை எதிர்த்துச் சென்ற யுதிஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} திரௌபதியின் வீர மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனைக் கண்டு, மன்னனை {யுதிஷ்டிரனை} உற்சாகமாக எதிர்த்துச் சென்று,(1) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கடுங்கணைகள் பலவற்றை இறைத்தபடியே, தன் தேரில் பல்வேறு வழிமுறைகளையும், தான் அடைந்த பெரும் திறனையும், தனது அதீத கரநளினத்தையும் வெளிக்காட்டினான்.(2) தெய்வீக ஆயுதங்களின் சக்தியால் ஈர்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு மொத்த ஆகாயத்தையே அவன் {அஸ்வத்தாமன்} நிறைத்தான்.(3) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்டதால் எதையும் காண முடியவில்லை. அஸ்வத்தாமனுக்கு முன்பு இருந்த பரந்த வெளியானது, கணைகளின் ஒரே பரப்பாக ஆனது.(4) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் இவ்வாறு மறைக்கப்பட்ட ஆகாயமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட கூடாரம் ஒன்று அங்கே விரிக்கப்பட்டதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிரகாசமான கணைமாரியால் மறைக்கப்பட்ட ஆகாயத்தில், மேகங்களைப் போன்ற ஒரு நிழல் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றியது.(6) இவ்வாறு கணைகளின் ஒரே பரப்பாக இருந்த வானத்தில் வானுலாவும் உயிரினமேதும் பறக்க முடியாததை அற்புதம் நிறைந்த காட்சியாக நாங்கள் கண்டோம்.(7)
அப்போது சாத்யகி, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் பிற போர்வீரர்கள் தீர்மானத்துடன் போராடினாலும், அவர்கள் அனைவராலும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை. துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட பெருங்கரநளினத்தைக் கண்ட (பாண்டவப் படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருக்கும் சூரியனைப் போல எரித்துக் கொண்டிருந்த அஸ்வத்தாமனைப் பார்க்கவும் இயலாதவர்களாக அந்த மன்னர்கள் அனைவரும் இருந்தனர். இவ்வாறு (பாண்டவத்) துருப்புகள் கொல்லப்பட்ட போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சாலப் போர்வீரர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, மரணம் குறித்த தங்கள் அச்சங்கள் அனைத்தையும் உதறித்தள்ளி, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(8-11)
அப்போது சாத்யகி, இருபத்தேழு கணைகளால் துரோணர் மகனைத் {அஸ்வத்தாமனைத்} துளைத்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மேலும் ஏழு நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்} அவனைத் துளைத்தான்.(12) யுதிஷ்டிரன் அவனை {அஸ்வத்தாமனை} எழுபத்து மூன்று கணைகளாலும், பிரதிவிந்தியன் ஏழாலும்; சுருதகர்மன் மூன்றாலும், சுருதகீர்த்தி ஐந்தாலும் அவனைத் துளைத்தனர்.(13) மேலும் சுதசோமன் ஒன்பது கணைகளாலும், சதானீகன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்[1]. மேலும் வேறு வீரர்கள் பலரும் அவனை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல கணைகளால் துளைத்தனர்.(14)
[1] திரௌபதியின் மகன்களில், பிரதிவிந்தியன் யுதிஷ்டிரனுக்குப் பிறந்தவன், சுதசோமன் பீமனுக்கும், சுருதகர்மன் அர்ஜுனனுக்கும், சதானீகன் நகுலனுக்கும், சுருதசேனன் சகாதேவனுக்கும் பிறந்தவர்களாவர். சுருதகர்மனும், சுருதகீர்த்தியும் ஒருவனே. அப்படியிருக்கையில் சுருதகீர்த்தி என்பதற்குப் பதில் சகாதேவன் மகனான சுருதசேனன் இருந்திருக்க வேண்டும். நான் ஒப்புநோக்கும் வேறு மூன்று பதிப்புகளிலும் இந்தப் பெயர்வரிசை மேற்கண்டவாறே இருக்கிறது.
அப்போது சினத்தால் நிறைந்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கல்லில் கூராக்கப்பட்ட இருபத்தைந்து கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(15) மேலும் அவன் சுருதகீர்த்தியை ஒன்பது கணைகளாலும், சுதசோமனை ஐந்தாலும்; சுருதகர்மனை எட்டாலும், பிரதிவிந்தியனை மூன்றாலும் துளைத்தான்.(16) மேலும் அவன் {அஸ்வத்தாமன்} சதானீகனை ஒன்பது கணைகளாலும், தர்மனின் மகனை (யுதிஷ்டிரனை) ஐந்தாலும் துளைத்தான். மேலும் பிற போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் அவன் இரண்டு இரண்டு கணைகளால் துளைத்தான். பிறகு அவன் சில கூரிய கணைகளைக் கொண்டு சுருதகீர்த்தியின் வில்லை அறுத்தான்.(17) அப்போது, பெருந்தேர்வீரனான பின்னவன் {சுருதகீர்த்தி} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு முதலில் மூன்று கணைகளாலும், பிறகு கூர்முனைகளைக் கொண்ட வேறு பிற கணைகள் பலவற்றாலும் துரோணரின் மகனைத் துளைத்தான்.(18) பிறகு, ஓ ஏகாதிபதி, ஓ! பாரதக் குலக் காளையே, துரோணரின் மகன் அந்தப் பாண்டவத் துருப்புகளை அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(19)
அளவிலா ஆன்மா கொண்டவனான அந்தத் துரோணர் மகன் சிரித்துக் கொண்டே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து, அடுத்ததாக மூன்று கணைகளால் அவனையும் {யுதிஷ்டிரனையும்} துளைத்தான்.(20) அப்போது, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்ட தர்மன் மகன் {யுதிஷ்டிரன்}, எழுபது கணைகளால் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(21) பிறகு அந்தப் போரில் சினத்தால் நிறைந்த சாத்யகி, பெரும் தாக்குதலைச் செய்பவனான துரோணர் மகனின் வில்லை ஓர் அர்த்தச் சந்திரக் கணையால் அறுத்து, உரக்க முழங்கினான்.(22) தன் வில் வெட்டப்பட்டவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓர் ஈட்டியால் சாத்யகியின் சாரதியை அவனது தேரில் இருந்து வேகமாக வீழ்த்தினான்.(23) அப்போது துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, மற்றொரு வில்லை எடுத்துக்கொண்டு, ஓ! பாரதரே, சினியின் பேரனை {சாத்யகியைக்} கணைமாரியால் மறைத்தான்.(24) அவனது சாரதி கொல்லப்பட்டதும், ஓ! பாரதரே, அந்தப் போரில் சாத்யகியின் குதிரைகள் அங்கும் இங்கும் ஓடுவதாகத் தெரிந்தது.(25)
அப்போது யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவப் போர்வீரர்கள் அனைவரும் கூரிய கணைகளை ஏவியபடி, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணர் மகனை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(26) எனினும், எதிரிகளை எரிப்பவனான அந்தத் துரோணர் மகன், தன்னை எதிர்த்து கோபத்துடன் வரும் போர்வீரர்களைக் கண்டு, அவர்கள் அனைவரையும் அந்தப் போரில் எதிர்கொண்டான்.(27) பிறகு, காட்டில் உலர்ந்த புற்கள் மற்றும் வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணர் மகன், தன் கணைமாரியையே தனது தழல்களாகக் கொண்டு, உலர்ந்த புல் மற்றும் வைக்கோல் குவியலுக்கு ஒப்பான பாண்டவத் துருப்புகளை அந்தப் போரில் எரித்தான்.(28) துரோணர் மகனால் இவ்வாறு எரிக்கப்பட்ட அந்தப் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே, திமிங்கலத்தால் கலக்கப்படும் ஆற்றின் முகத்துவாரத்தைப் போல மிகவும் கலக்கமடைந்தது.(29) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் மகனின் ஆற்றலைக் கண்ட மக்கள், பாண்டவர்கள் அனைவரும் அவனால் {அஸ்வத்தாமனால்} ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினர்.(30)
அப்போது, பெரும் தேர்வீரனும், துரோணரின் சீடனுமான யுதிஷ்டிரன், சினத்தாலும், பதிலடி கொடுக்கும் விருப்பத்தாலும் நிறைந்து, துரோணர் மகனிடம்[2],(31) “ஓ! மனிதர்களில் புலியே, இன்று நீர் என்னைக் கொல்ல விரும்புவதால், உம்மிடம் பற்று {அன்பு} மற்றும் நன்றியுணர்வு ஏதும் இல்லை. தவம், கொடை மற்றும் கல்வியே ஒரு பிராமணரின் கடமைகளாகும்.(32) வில்லானது க்ஷத்திரியனால் மட்டுமே வளைக்கப்பட வேண்டும். எனவே, நீர் பெயரளவில் மட்டமே பிராமணராக இருக்கிறீர் என்றே தெரிகிறது.(33) எனினும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்போரில் நான் கௌரவர்களை வெல்வேன். போரில் உம்மால் என்ன முடியுமோ அதைச் செய்யும். பிராமணர்களில் இழிந்தவர் என்றே நான் உம்மைச் சொல்வேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[3].(34)
[2] “இங்கே பம்பாய்ப் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கங்குலியில் சொல்லியிருப்பதில் “பிராமணரில் இழிந்தவர்” என்ற ஒரே ஒருவரியைத் தவிர, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும் கிட்டத்தட்ட மேற்கண்டவாறே இருக்கின்றன. வேறொரு பதிப்பில் சற்றே வேறுபாடு தெரிகிறது. அது பின்வருமாறு, ”யுதிஷ்டிரரோ விரைபவராகி மஹாரதரான துரோணபுத்திரரை அடித்துக் கோபத்தோடும், பொறாமையோடும் அவரைப்பார்த்துக் கூறலானார், ‘யுத்தத்தில் மேன்மைபெற்றவரே, உம்மை வீரியமுள்ளவரென்றும், பலமுள்ளவரென்றும், அஸ்திரங்களில் நல்ல தேர்ச்சியுள்ளவரென்றும் ஸமர்த்தரென்றும், அவ்வாறே அஸ்திரத்தேர்ச்சியுள்ளவரென்றும் அறிவேன். நீர் இந்தப் பலமனைத்தையும் பார்ஷதனிடத்தில் காண்பிப்பீராகில் அப்பொழுது உம்மைப் பலசாலியென்றும், அஸ்திரவித்தையில் தேர்ச்சியுள்ளவரென்றும் நாம் அறிவோம். யுத்தத்தில் பகைவர்களை நாஞ்செய்பவனான த்ருஷ்டத்யும்னனைப் பார்த்த பின் உமக்குப் பலம் சிறிதுமுண்டாகாது. உம்மைப் பிராம்மணரென்று நான் சொல்லவில்லை. மனிதர்களுள் சிறந்தவரே, நீர் என்னையே இப்பொழுது கொல்ல விரும்புகிறீராதலால் உமக்கு அன்பு இல்லை, நன்றியறிவும் இல்லை. பிராம்மணனுக்குத் தவமும், சமதமங்களும் வேண்டும். வில் க்ஷத்திரியனால் வளைக்கத்தக்கது. அப்படிப்பட்ட நீர் பிராம்மணோத்தமர். மஹாபாகுபலமுள்ளவரே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே யுத்தத்தில் கௌரவர்களை ஜயிப்பேன். பிராம்மணோத்தமரே, யுத்தத்தில் உமது விருப்பப்படி காரியத்தைச் செய்யக்கடவீர்’ என்று சொன்னார்” என இருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, எது முறையானது, எது உண்மையானது என்பதைச் சிந்தித்து மறுமொழியேதும் கூறாதிருந்தான். எதையும் சொல்லாத அவன், கோபத்தில் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கும் அந்தகனைப் போல அந்தப் போரில், கணைமாரியால் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான்.(36) இவ்வாறு துரோணர் மகனால் மறைக்கப்பட்ட அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! ஐயா, தன் பெரும்படையை விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாகச் சென்றான்.(37) தர்மனின் மகனான யுதிஷ்டிரன் சென்றதும், ஓ! மன்னா, உயர் ஆன்ம துரோணர் மகனும் அந்த இடத்தைவிட்டு அகன்றான். அப்போது, ஓ! மன்னா, அந்தப் பெரும்போரில் துரோணர் மகனைத் தவிர்த்த யுதிஷ்டிரன், கொடும்பணியான படுகொலைகளைச் செய்யத் தீர்மானித்து உமது படையை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(39)
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -55ல் உள்ள சுலோகங்கள் : 39
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -55ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |