Arjuna made Ashwatthama to swoon! | Karna-Parva-Section-56 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், பீமன் மற்றும் கர்ணன் ஆகியோர் ஏற்படுத்திய பேரழிவு; நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட துரியோதனன்; துரியோதனனைத் தடுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் வில்லை மீண்டும் மீண்டும் அறுத்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த திருஷ்டத்யும்னன்; துரியோதனைக் காத்த தண்டதாரன்; பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன்; கர்ணனோடு போரிட முன்னேறிய யுதிஷ்டிரன்; கர்ணனைத் தாக்கிய பாண்டவக்கூட்டம்; பீமனைக் கண்ட அச்சத்தால் உயிரைவிட்ட தேர்வீரர்கள்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்; கௌரவப் படையை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; அர்ஜுனனை விஞ்சி நின்ற அஸ்வத்தாமன்; அர்ஜுனனைக் கண்டித்த கிருஷ்ணன்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்; காயம் காரணமாக வெகுதூரம் விலகிச் சென்று ஓய்வெடுத்த யுதிஷ்டிரன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் வைகர்த்தனன் {கர்ணன்}, பாஞ்சாலர்களாலும், சேதிகளாலும், கைகேயர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனனைத் தடுத்துக் கணைகள் பலவற்றால் அவனை மறைத்தான்.(1) அந்தப் போரில் பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சேதிகள், காருஷர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கர்ணன் கொன்றான்.(2) அப்போது பீமசேனன், தேர்வீரர்களில் சிறந்தவனான கர்ணனைத் தவிர்த்துவிட்டு, உலர்ந்த புற்களை நோக்கிச் செல்லும் சுடர்மிக்க நெருப்பைப் போலக் கௌரவத் துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(3) சூதன் மகனும் {கர்ணனும்} அந்தப் போரில் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களில் ஆயிரக்கணக்கான வலிமைமிக்க வில்லாளிகளைக் கொல்லத் தொடங்கினான்.(4) உண்மையில், மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} மற்றும் கர்ணன் ஆகியோர் முறையே சம்சப்தகர்கள், கௌரவர்கள் மற்றும் பாஞ்சாலர்களைக் கொல்லத் தொடங்கினர்.(5) உமது தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்த மூன்று பெரும் போர்வீரர்களின் சிறந்த கணைகளால் எரிக்கப்பட்டு, அந்தப் போரில் அழியத் தொடங்கினர்.(6)
அப்போது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரியோதனன், ஒன்பது கணைகளால் நகுலனையும் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான்.(7) அடுத்ததாக அளவிலா ஆன்மாகக் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சகாதேவனின் தங்கக் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(8) கோபத்தால் நிறைந்த நகுலன், ஓ! மன்னா, அந்தப் போரில் உமது மகனை எழுபத்து மூன்று கணைகளால் தாக்கினான், சகாதேவனோ ஐந்தால் அவனைத் தாக்கினான்.(9) பாரதக் குலத்தின் முதன்மையான போர்வீரர்களும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும், சினங்கொண்ட துரியோதனின் ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளால் தாக்கப்பட்டனர்.(10) மேலம் அகன்ற தலை கொண்ட இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, அந்தப் போராளிகள் இருவரின் வில்லையும் அவன் {துரியோதனன்} அறுத்தான்; பிறகு அவன் எழுபத்து மூன்று கணைகளால் அந்த இரட்டையரில் ஒவ்வொருவரையும் திடீரெனத் துளைத்தான்.(11)
இந்திரனின் வில்லுக்கு ஒப்பானவையும், முதன்மையானவையுமான அழகிய இரு விற்களை எடுத்துக் கொண்ட அந்த வீரர்கள் {நகுலன் -சகாதேவன்} இருவரும், அந்தப் போரில் தெய்வீக இளைஞர்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(12) பிறகு, போரில் பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகத் திரள்கள் இரண்டைப் போலத் தங்கள் சகோதரன் {துரியோதனன்} மீது இடையறாத பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(13) அதன்பேரில், ஓ! மன்னா, பெரும் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த கணைகளின் மாரியால் இரு பெரும் வில்லாளிகளான அந்தப் பாண்டுவின் இரட்டை மகன்களைத் தடுத்தான்.(14) ஓ! பாரதரே, அந்தப் போரில் துரியோதனனின் வில்லானது தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது, அதிலிருந்து கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் இடையறாமல் வெளிவருவதும் காணப்பட்டது.(15) துரியோதனனின் கணைகளால் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும், மேகத்திரள்களால் மறைக்கப்பட்டுக் காந்தியை இழந்து ஆகாயத்தில் இருக்கும் சந்திரனையும், சூரியனையும் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.(16) உண்மையில், ஓ! மன்னா, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் சூரியனின் கதிர்களைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(17) ஆகாயம் இவ்வாறு மறைக்கப்பட்டு, காணும் அனைத்தும் ஒரே சீரான கணைகளின் பரப்பாகவே இருந்தபோது, இரட்டையரின் கூறுகள் {தன்மைகள்}, யுகமுடிவின் அந்தகனைப் போல வெளிப்பட்டன.(18) மறுபுறம், உமது மகனின் ஆற்றலைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், காலனின் முன்னிலையில் நிற்பதாகவே மாத்ரியின் இரட்டை மகன்களைக் கருதினர்.(19)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையின் தலைவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பார்ஷதன் {திருஷ்டத்யும்னன்} துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்தான்.(20) பெரும் தேர்வீரர்களான மாத்ரியின் மகன்கள் இருவரையும் கடந்து சென்று தனது கணைகளால் அவன் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(21) அளவிலா ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாகச் சிரித்துக் கொண்டே இருபத்தைந்து கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனைத் {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தான்.(22) அளவிலா ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாக மீண்டும் அந்தப் பாஞ்சால இளவரசனை அறுபது கணைகளாலும், அதன் பிறகு ஐந்தாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான்.(23) பிறகு அந்த மன்னன் {துரியோதனன்} கூரிய கத்தி முனை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால், ஓ! ஐயா, அந்தப் போரில் தன் எதிராளியின் கணைபொருத்தப்பட்ட வில்லையும், தோலாலான கையுறையையும் அறுத்தான்.(24) முறிந்த வில்லை வீசியெறிந்தவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, புதியதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(25) வேகத்தால் சுடர்மிக்கவனும், கோபத்தால் குருதி சிவப்பான கண்களைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தத் திருஷ்டத்யும்னன், தன் மேனியில் உள்ள காயங்கள் பலவற்றுடன் தன் தேரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(26)
ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கொல்ல விரும்பிய அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, சீறும் பாம்புகளுக்கு ஒப்பான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} பதினைந்தை ஏவினான்.(27) கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைப் பிளந்து, அவனது உடலினூடாகக் கடந்து சென்று, ஏவப்பட்ட சக்தியின் விளைவால் பூமிக்குள் நுழைந்தன.(28) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆழத்துளைக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, இளவேனிற்காலத்தில், மலர்களின் கனத்துடன் கூடிய ஒரு பெரிய கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போல மிக அழகாகத் தெரிந்தான்.(29) அக்கணைகளால் கவசம் பிளக்கப்பட்டு, தன் மேனியெங்கும் அடைந்த காயங்களால் மிகவும் உறுதியற்ற நிலையை அடைந்த அவன் {துரியோதனன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தான்.(30) ஓ! ஏகாதிபதி, தன் எதிராளியின் வில்லை அறுத்த மன்னன் {துரியோதனன்}, பெரும் வேகத்துடன், அவனது {திருஷ்டத்யும்னனின்} நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியிலும் பத்து கணைகளால் தாக்கினான்.(31) கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்ட அக்கணைகள், தேன் விரும்பும் வண்டுகள் முற்றும் மலர்ந்த தாமரையை அலங்கரிப்பதைப் போலத் திருஷ்டத்யும்னனின் முகத்தை அலங்கரித்தன.(32)
அந்த முறிந்த வில்லை வீசி எறிந்த உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், மற்றொரு வில்லையும், பதினாறு அகன்ற தலை கணைகளையும் வேகமாக எடுத்துக் கொண்டான்.(33) ஐந்தால் துரியோதனனின் நான்கு குதிரைகளையும், சாரதியையும் கொன்ற அவன் {திருஷ்டத்யும்னன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது வில்லை மற்றொன்றால் {கணையால்} அறுத்தான்.(34) எஞ்சியிருந்த பத்தை கணைகளால், உமது மகனுடைய தேரின் உபஷ்கரம் {உபகரணங்கள்}, குடை, ஈட்டி, வாள், கதாயுதம் மற்றும் கொடிமரத்தையும் அறுத்தான்.(35) உண்மையில், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட குரு மன்னனின் {துரியோதனனின்} அழகிய கொடிமரமும், ரத்தின வேலைப்பாடு செய்யப்பட்ட யானைப் பொறியும் {கொடியில் உள்ள இலச்சனையும்} பாஞ்சாலர்களின் இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} அறுக்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் கண்டனர்.(36) அப்போது துரியோதனனுடன் பிறந்த தம்பிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, தேரற்றவனும், அந்தப் போரில் தன் ஆயுதங்கள் அனைத்தும் அறுபட்டவனுமான துரியோதனனை மீட்டனர்.(37) திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஏகாதிபதி, அந்த மனிதர்களின் ஆட்சியாளனை {துரியோதனைத்} தன் தேரில் ஏறச் செய்த துருதரன் {குண்டதாரன், தண்டதாரன்},[1] வேகமாக அவனைப் போருக்கு வெளியே கொண்டு சென்றான்.(38)
[1] வேறொரு பதிப்பில், “குண்டதாரன் மனங்கலங்காமல் த்ருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே, மஹாரதனான அந்தத் துர்யோதனனைத் தன் ரதத்தின் மீதேற்றி வைத்துக் கொண்டு வேறு இடத்திற்குக் கொண்டு போனான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவனது பெயர் தண்டதாரன் என்றிருக்கிறது.
அதே வேளையில், வலிமைமிக்கக் கர்ணன், சாத்யகியை வென்றதும், (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பி, கடுங்கணைகளைக் கொண்டவனும், துரோணரைக் கொன்றவனுமான அந்தப் போர்வீரனை {திருஷ்டத்யும்னனை} முகத்துக்கு நேராக எதிர்த்துச் சென்றான்.(39) எனினும், சிநியின் பேரன் {சாத்யகி} அவனை வேகமாகப் பின் தொடர்ந்து வந்து, தன் எதிராளியைத் துரத்திச் செல்லும் யானையானது தன் தந்தங்களால் பின்னால் இருந்து தாக்குவதைப் போலத் தன் கணைகளால் அவனைத் தாக்கினான்.(40) அப்போது, ஓ! பாரதரே, கர்ணனுக்கும், பிருஷதன் மகனுக்கும் இடையில் இருந்த வெளியில் இரு படைகளின் உயர் ஆன்ம போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த போரானது மிகத் தீவிரமாக நடந்தது.(41) பாண்டவர்களிலோ, நம்மிலோ புறமுதுகிட்ட போர்வீரன் ஒருவன் கூட இல்லை. அப்போது கர்ணன் பாஞ்சாலர்களை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு சென்றான்.(42) சூரியன் உச்சி வானுக்கு உயர்ந்த வேளையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இருதரப்பிலும் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(43)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பாஞ்சாலர்கள் அனைவரும், பறவைகள் மரத்தை நோக்கிச் செல்வதைப் போலக் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(44) பெரும் சக்தி கொண்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சினத்தால் நிறைந்து, பாஞ்சாலர்களின் தலைவர்களான வியாக்ரகேது, சுசர்மன், சித்திரன், உக்ராயுதன், ஜயன், சுக்லன், ரோசமானன், வெல்லப்பட முடியாத சிங்கசேனன் ஆகியோரைத் தனித்தனியாகத் தன் கூர்முனைக் கணைகளால் தாக்கத் தொடங்கினான்.(45,46) தங்கள் தேர்களில் வேகமாக முன்னேறி வந்த அந்த வீரர்கள், கோபக்கார வீரனும், போர்க்கள ரத்தினமுமான அந்தக் கர்ணனைச் சூழ்ந்து கொண்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவன் மேல் தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(47) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னோடு போரில் ஈடுபட்ட அந்த எட்டு வீரர்களையும் எட்டு கூரிய கணைகளால் பீடித்தான்.(48) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா, போரில் திறம்பெற்ற பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் பிறரை அப்போது கொன்றான்.(49)
சினத்தால் நிறைந்த ராதையின் மகன் {கர்ணன்} அப்போது அந்தப் போரில், ஜிஷ்ணு, ஜிஷ்ணுகர்மன், தேவாபி, சித்திரன், சித்ராயுதன், ஹரி, சிங்ககேது, ரோசமானன், பெரும் தேர்வீரனான சலபன் மற்றும் சேதிகளின் தேர்வீரர்களில் பலரையும் கொன்றான்.(50,51) அந்த வீரர்களின் உயிரை எடுத்துக் குருதியில் குளித்திருந்த அதிரதன் மகனின் {கர்ணனின்} வடிவமானது, ருத்ரனின் பெருவடிவத்தைப் போலச் சக்தியிலும், செருக்கிலும் பெருகியிருந்தது.(52) ஓ! பாரதரே, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களுக்கும் தப்பி ஓடி, அந்தப் போர்க்களத்தில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தின.(53) கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட பிறர், பல்வேறு கூச்சல்களையிட்டவாரே இடியால் பிளக்கப்பட்ட மலைகளென விழுந்தனர்.(54) கர்ணன் சென்ற தடமெங்கும், விழுந்துவிட்ட யானைகள், குதிரைகள், மனிதர்கள் ஆகியோரின் உடல்களாலும், விழுந்துவிட்ட தேர்களாலும் பூமியானது விரவிக் கிடந்தது.(55)
உண்மையில் பீஷ்மரோ, துரோணரோ, உமது படையின் பிற போர்வீரர்கள் எவருமோ எப்போதும் சாதிக்காத அருஞ்செயல்களே அந்தப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்டன.(56) ஓ! மனிதர்களில் புலியே, யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அந்தச் சூதன் மகன் பேரழிவை உண்டாக்கினான்.(57) மான் கூட்டத்திற்கு மத்தியில் சிங்கமானது அச்சமற்றுத் திரிவதைப் போலவே, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் கர்ணன் அச்சமில்லாமல் திரிந்தான்.(58) சிங்கமானது அச்சத்திலிருக்கும் மான்கூட்டத்தைத் திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் சிதறடிப்பதைப் போலவே, கர்ணனும் பாஞ்சாலர்களின் தேர்க்கூட்டங்களை அனைத்துப் பக்கத்திற்கும் சிதறடித்தான்.(59) சிங்கத்தின் கோரப்பற்களை அடைந்து உயிருடன் தப்பவே முடியாத மானைப் போலவே கர்ணனை அணுகிய பெருந்தேர்வீரர்களால் தங்கள் உயிர்களுடன் தப்ப முடியவில்லை.(60) சுடர்மிக்க நெருப்பைத் தீண்டினால் உறுதியாக எரிந்துவிடும் மக்களைப் போலே, ஓ! பாரதரே, சிருஞ்சயர்களும், கர்ணநெருப்பின் அருகாமையை அடைந்ததும் எரிக்கப்பட்டனர்.(61) சேதிகள் மற்றும் பாஞ்சாலர்களின் போர்வீரர்களில் வீரர்களாகக் கருதப்பட்ட பலர், அவர்களோடு தனியனாகப் போரிட்ட கர்ணனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது பெயர் அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(62) கர்ணனின் ஆற்றலைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா, அதிரதன் மகனிடமிருந்து ஒரு பாஞ்சாலனும் அந்தப் போரில் தப்பமாட்டான் என்றே நினைத்தேன்.(63) உண்மையில் சூதன் மகன் {கர்ணன்} அந்தப் போரில் மீண்டும் மீண்டும் பாஞ்சாலர்களை முறியடித்தான்.(64)
அந்தப் பயங்கரப் போரில் இவ்வாறு பாஞ்சாலர்களைக் கொல்லும் கர்ணனைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனை நோக்கிக் கோபத்துடன் விரைந்தான்.(65) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், திரௌபதியின் மகன்களும், நூற்றுக்கணக்கான போர்வீரர்களும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ராதையின் மகனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(66) சிகண்டி, சகாதேவன், நகுலன், நகுலனின் மகன் {சதானீகன்}, ஜனமேஜயன், சிநியின் பேரன் {சாத்யகி}, பிரபத்ரகர்கள்(67) ஆகிய அளவிலா சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் திருஷ்டத்யும்னனைத் தங்கள் முன்னணியில் கொண்டு சென்று, கணைகளாலும், பல்வேறு ஆயுதங்களாலும் கர்ணனைத் தாக்கியபோது மிகச் சிறப்பானவர்களாகத் தெரிந்தனர்.(68) கருடன் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளின் மீது பாய்வதைப் போலவே, அந்த அதிரதன் மகனும் {கர்ணனும்} தனியனாகச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் மீதும் அம்மோதலில் பாய்ந்தான்.(69) ஓ! ஏகாதிபதி, அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதைப் போலக் கடுஞ்சீற்றத்துடன் நடந்தது.(70) சூழ்ந்திருக்கும் இருளை அழிக்கும் சூரியனைப் போலவே அச்சமற்றவனான கர்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வருபவர்களும், தன் மீது மீண்டும் மீண்டும் கணைமாரிகளைப் பொழிபவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளோடு தனியனாகவே மோதினான்.(71)
ராதையின் மகன் இவ்வாறு பாண்டவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது, சினத்தால் நிறைந்த பீமசேனன், யமதண்டத்திற்கு ஒப்பான கணைகளால் குருக்களைக் கொல்லத் தொடங்கினான்.(72) பாஹ்லீகர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வசாதிகள், மத்ரர்கள் மற்றும் சைந்தவர்களோடு தனியனாகவே போரிட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(73) பீமனின் துணிக்கோல் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்களில் தாக்கப்பட்ட யானைகள், தங்கள் சாரதிகளோடு கீழே விழுந்து, தங்கள் வீழ்ச்சியின் வன்மையால் பூமியை நடுங்கச் செய்தன.(74) தங்கள் சாரதிகள் கொல்லப்பட்ட குதிரைகளும், உயிரையிழந்த காலாட்படைவீரர்களும், கணைகளால் துளைக்கப்பட்டுப் பெரும் அளவிலான குருதியைக் கக்கியபடி கீழே கிடந்தனர்.(75) ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் தங்கள் கரங்களில் இருந்து தளர்ந்த ஆயுதங்களுடன் கீழே விழுந்தனர். காயங்களால் சிதைந்த உடல்களுடன் கூடிய அவர்கள், பீமன் மீது கொண்ட அச்சத்தால் ஈர்க்கப்பட்டுத் தங்கள் உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(76) தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், சாரதிகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவை அனைத்தும் பீமசேனனின் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பூமியில் விரவிக் கிடந்தன.(77)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படையானது, உற்சாகத்தை இழந்து, சிதைக்கப்பட்டும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால பீடிக்கப்பட்டு மலைத்துப் போய் நின்றது.(78) உண்மையில், ஓ! மன்னா, கூதிர்காலத்தில் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப் போலவே அந்தப் பயங்கரப் போரில் மனச்சோர்வையடைந்த அந்தப் படையும் அசைவற்று நின்றது.(79) அமைதியான பெருங்கடலைப் போலவே அந்தப் படையானது மலைத்து நின்றபோது, கோபம், சக்தி மற்றும் வலிமையைக் கொண்ட உமது மகனின் படையானது தன் செருக்கை இழந்து தன் காந்தி அனைத்தையும் இழந்தது. உண்மையில், இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் படையானது, ஊனீரில் நனைந்து, குருதியில் குளித்தது. ஓ! பாரதர்களின் தலைவா, குருதியில் நனைந்த போராளிகள் ஒருவரையொருவர் அணுகி கொன்றது அங்கே காணப்பட்டது.(80-82) சினத்தால் நிறைந்த சூதன் மகன் {கர்ணன்}, பாண்டவப் படைப்பிரிவை சிதறடித்த அதே வேள்யில் பீமசேனன் குருக்களைச் சிதறடித்தான்.(83)
காண்போர் ஆச்சரியத்தில் நிறையும் வகையில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, வெற்றியாளர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை அவர்களது வியூகத்திற்கு மத்தியில் கொன்ற பிறகு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சம்சப்தகர்களின் படையானது உடைந்துவிட்டது.(84,85) சிங்கத்தின் முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத மானைப் போல என் கணைகளைப் பொருத்துக் கொள்ள முடியாதவர்களும், சம்சப்தகர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுகின்றனர்.(86) இந்தப் பெரும்போரில் சிருஞ்சயர்களின் பெரும்படையும் உடைந்ததாகத் தெரிகிறது. நுண்ணறிவைக் கொண்ட கர்ணனின் யானைக் கயிறு பொறிக்கப்பட்ட கொடியானது, ஓ! கிருஷ்ணா,(87) அவன் {கர்ணன்} பெரும் சுறுசுறுப்புடன் திரிந்து வரும் யுதிஷ்டிரரின் படைப்பிரிவுக்கு மத்தியில் அதோ தெரிகிறது. (நமது படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறரால் கர்ணனை வெல்ல இயலவில்லை.(88) போராற்றலில் கர்ணன் பெருஞ்சக்தி வாய்ந்தவன் என்பதை நீ அறிவாய். கர்ணன் நமது படைகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்வாயாக.(89) போரில் (பிற வீரர்களைத்) தவிர்த்துவிட்டு, பெரும் தேர்வீரனான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக. ஓ! கிருஷ்ணா, இதையே நான் விரும்புகிறேன். எனினும், நீ விரும்புவதைச் செய்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(90) அவனது வார்த்தளைக் கேட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் புன்னகைத்தவாறே, “ஓ! பாண்டுவின் மகனே, தாமதமில்லாமல் கௌரவர்களைக் கொல்வாயாக” என்றான்.(91)
அப்போது, கோவிந்தனால் தூண்டப்பட்டவையும், அன்னங்களைப் போன்று வெண்மையானவையுமான அந்தக் குதிரைகள், கிருஷ்ணனையும், பாண்டு மகனையும் {அர்ஜுனனையும்} சுமந்து கொண்டு உமது பரந்த படைக்குள் ஊடுருவின.(92) உண்மையில், தங்கப் பட்டைகளைக் கொண்டவையும், கேசவனால் தூண்டப்பட்டவையுமான அந்த வெண்குதிரைகள் அதன் மத்தியில் ஊடுருவியதும், உமது படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது.(93) குரங்குக் கொடியைக் கொண்டதும், மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டதும், கொடிகளைக் காற்றில் அசைத்துச் சென்றதுமான அந்தத் தேரானது, ஆகாயத்தினூடாகக் கடந்து செல்லும் தெய்வீகத் தேரொன்றைப் போல அந்தப் படைக்குள் ஊடுருவியது.(94) சினத்தால் நிறைந்தவர்களும், குருதியெனக் கண்கள் சிவந்தவர்களுமான கேசவனும், அர்ஜுனனும், உமது பரந்த படையைத் துளைத்து ஊடுருவி சென்ற போது, தங்கள் காந்தியால் மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(95) போரில் திளைப்பவர்களும், குருக்களால் அறைகூவி அழைக்கப்பட்டுக் களத்திற்கு வந்தவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், ஒரு வேள்வியை நடத்தும் புரோகிதர்களால் முறையான சடங்குகள் செய்யப்பட்டு இருப்புக்கு அழைக்கப்பட்ட அசுவினி இரட்டையர்களைப் போலவே தெரிந்தனர்.(96) சினத்தால் நிறைந்ததும் மனிதர்களில் புலிகளான அவ்விருவரின் வேகமும், ஒரு பெருங்காட்டில் வேடர்களின் கரவொலியால் கோபம் தூண்டப்பட்ட யானைகள் இரண்டின் வேகத்தைப் போல அதிகரித்தது.(97)
அந்தத் தேர்ப்படை மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளுக்கு மத்தியில் ஊடுருவிய பல்குனன் {அர்ஜுனன்}, பாசக்கயிறுடன் செல்லும் யமனைப் போலவே அந்தப் படைப்பிரிவுகளுக்குள் திரிந்து கொண்டிருந்தான்.(98) தன் படையின் மீது அவன் {அர்ஜுனன்} இத்தகு ஆற்றலை வெளிப்படுத்துவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதரே, மீண்டும் சம்சப்தகர்களை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தூண்டினான்.(99) அதன் பேரில் ஓராயிரம் தேர்கள், முந்நூறு யானைகள், பதினாலாயிரம் குதிரைகள்,(100) வில் தரித்தவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான இருநாறாயிரம் காலாட்படைவீர்களுடன் கூடிய(101) சம்சப்தகர்களின் தலைவரகள், ஓ! ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரியால் அந்தப் பாண்டவனை மறைத்தபடியே, அந்தப் போரில் குந்தியின் மகனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர்.(102) இவ்வாறு அந்தப் போரில் கணைகளால் மறைக்கப்பட்டவனும், பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவனுமான பார்த்தன், பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப் போலவே கடும் வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பார்த்தன் அந்தச் சம்சப்தகர்களைக் கொல்லும்போது, அனைவராலும் பார்க்கத்தகுந்தவனாக ஆனான்.(103)
அப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் இடையறாமல் ஏவப்பட்டவையுமான கணைகளால் ஆகாயம் நிறைந்தது.(104) அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட வலிமைமிக்கக் கணைகளால் முற்றாக அடைக்கப்பட்ட அனைத்தும், சுற்றிலும் இடையறாமல் விழுந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாம்புகளால் மறைக்கப்பட்டவற்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(105) அளவிலா ஆன்மா கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கூரிய முனைகளைக் கொண்டவையுமான நேரான கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் ஏவினான்.(106) பார்த்தனின் உள்ளங்கை ஒலியின் விளைவாக, பூமி, அல்லது ஆகாயப் பெட்டகம், அல்லது திசைப்புள்ளிகள் அனைத்தும், அல்லது பல்வேறு பெருங்கடல்கள், அல்லது மலைகளே பிளந்துவிட்டனவோ என்றே மக்கள் நினைத்தனர்.(107) பத்தாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்ற வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அப்போது, சம்சப்தகர்களுடைய சிறகின் எல்லைக்கு வேகமாகச் சென்றான்.(108) காம்போஜர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தச் சிறகின் எல்லை அடைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, தானவர்களைக் கலங்கடிக்கும் வாசவனை {இந்திரனைப்} போலத் தன் கணைகளால் அவர்களைப் பலமாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(109) அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவன் {அர்ஜுனன்}, தன்னைக் கொல்ல விரும்பும் எதிரிகளின் ஆயுதங்களைப் பிடித்திருந்த கரங்களையும், சிரங்களையும் வேகமாக அறுத்தான்.(110) பல்வேறு அங்கங்களையும், ஆயுதங்களையும் இழந்த அவர்கள், சூறாவளியால் முறிக்கப்பட்ட பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர்.(111)
இவ்வாறு யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரை அவன் {அர்ஜுனன்} கொன்று கொண்டிருந்தபோது, (காம்போஜர்களின் தலைவனான) சுதக்ஷிணனின் தம்பி, அவன் மீது கணைமாரியைப் பொழியத் தொடங்கினான்.(112) அப்போது அர்ஜுனன், முள்பதித்த காதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையான தன்னைத் தாக்குபவனின் இரண்டு கரங்களை அர்த்தச்சந்திரக் கணைகள் இரண்டாலும், முழு நிலவைப் போல அழகாக முகத்தால் அருளப்பட்ட அவனது {சுதக்ஷிணனின் தம்பியின்} தலையைக் கத்தித் தலை கணையொன்றாலும் அறுத்தான்.(113) குருதியில் குளித்து, உயிரை இழந்த அவன், இடியால் பிளக்கப்பட்ட செஞ்சுண்ண மலையொன்றைப் போலத் தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான்.(114) உண்மையில், நெடியவனும், அழகானவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனுமான காம்போஜர் தலைவனின் தம்பி கொல்லப்பட்டு, தங்கத் தூண் ஒன்றைப் போலவோ, தங்கமயமான சுமேருவின் சிகரம் ஒன்றைப் போலவோ கீழே விழுவதை மக்கள் கண்டனர்.(115) பிறகு, கடுமையானதும், அற்புதம் நிறைந்ததுமான மற்றொரு போர் அங்கே தொடங்கியது. போராடும் போராளிகளின் நிலைகள் வேறு வேறாக இருந்தன.(116) காம்போஜர்கள், யவனர்கள், சக குலத்தவர் ஆகியோரின் குதிரைகள் மற்றும் போராளிகள் ஒவ்வொருவரும், ஓ! ஏகாதிபதி, ஒரே கணையால் கொல்லப்பட்டு, குருதியில் குளித்ததால், மொத்தப் போர்க்களமும் ஒரு சிவப்புப் பரப்பானது.(117) குதிரைகள் மற்றும் சாரதிகளை இழந்த தேர்வீரர்கள், சாரதிகளை இழந்த குதிரைகள், பாகர்களை இழந்த யானைகள், யானைகளை இழந்த பாகர்கள் ஆகியோர் ஒருவரோடொருவர் போரிட்டதன் விளைவால், ஓ! மன்னா, அங்கே ஒரு பெரும் அழிவு ஏற்பட்டது.(118)
சம்சப்தகர்களின் சிறகும் {படையின் சிறகு பகுதியும்}, சிறகின் எல்லைகளும் இவ்வாறு சவ்யசச்சனால் {அர்ஜுனனால்} நிர்மூலமாக்கப்பட்ட போது, வெற்றி அடையும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனை எதிர்த்து துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வேகமாக விரைந்தான்.(119) உண்மையில் அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டும், பயங்கரக் கணைகள் பலவற்றைத் தன்னுடன் எடுத்துக் கொண்டும் கதிர்களுடன் தோன்றும் சூரியனைப் போலவே சென்றான்.(120) சினத்தால் அகல விரித்த வாயுடனும், பதிலடி கொடுக்கும் விருப்பத்துடனும், சிவந்த கண்களுடனும் இருந்த அந்த வலிமைமிக்க அஸ்வத்தாமன், யுகமுடிவில் கோபத்தில் நிறைந்திருப்பவனும், கதாயுதம் தரித்திருப்பவனுமான காலனைப் போலவே அச்சமேற்படுத்துபவனாகத் தெரிந்தான்.(121) பிறகு அவன் {அர்ஜுனன்} கடுங்கணை மாரியை ஏவினான். தன்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அவன் பாண்டவப் படையைச் சிதறடிக்கத் தொடங்கினான்.(122) அவன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனைக் கண்டதும், ஓ! ஐயா, ஓ! மன்னா, அவன் மீது கடுங்கணை மாரியை மீண்டும் மீண்டும் பொழிந்தான்.(123) துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்டுப் பாய்ந்த வந்த அந்தக் கணைகளால் கிருஷ்ணன், தனஞ்சயன் ஆகிய இருவரும் தங்கள் தேரில் முற்றாக அடைக்கப்பட்டனர்.(124)
அப்போது வீர அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் அந்தப் போரில் மாதவன் {கிருஷ்னன்} மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் மலைக்கச் செய்தான்.(125) அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் பாதுகாப்பவர்களான அவ்விருவரும் கணைகளால் இவ்வாறு மறைக்கப்படதைக் கண்டு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டமானது “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியது.(126) சித்தர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டம் அங்கே வந்து, “உலகங்கள் அனைத்திற்கும் நன்மை விளையட்டும்” என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மனதார வேண்டிக் கொண்டனர்.(127) அந்தப் போரில் கணைகளால் கிருஷ்ணர்கள் இருவரையும் மறைத்த துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலைப் போன்ற ஓர் ஆற்றலை முன்பு எப்போதும் நான் கண்டதில்லை.(128) எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குவதும், சிங்கத்தின் முழக்கத்திற்கு ஒப்பானதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் ஒலியை, ஓ! மன்னா, அந்தப் போரில் நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டோம்.(129) அந்தப் போரில் திரிந்து தன் வலப்பக்கமும், இடப்பக்கமும் தாக்கிய போது, அவனது வில்லின் நாண்கயிறானது, மேகத் திரள்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தது.(130) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் உறுதியையும், கரநளினத்தையும் கொண்டவனாக இருப்பினும், துரோணரின் மகனை அவன் கண்டபோது பெரிதும் மலைப்படைந்தான்.(131) உண்மையில் அப்போது அர்ஜுனன், தன் ஆற்றலானது, தன்னைத் தாக்கும் உயர் ஆன்மாவால் அழிக்கப்பட்டதாகவே கருதினான்.(132)
துரோணர் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கும்}, பாண்டவனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையிலான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! ஏகாதிபதி, அதிலும் அந்த வலிமைமிக்கத் துரோணர் மகன், இவ்வாறு தன் எதிராளியிலும் மேம்பட்டு, குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் சக்தியை இழந்த போது, கிருஷ்ணன் சினத்தால் நிறைந்தவனானான். கோபத்துடன் இருந்த அவன் ஆழ்ந்த பெரு மூச்சுகளைவிட்ட படியே, அஸ்வத்தாமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் தன் கண்களாலேயே எரித்து விடுபவனைப் போல மீண்டும் மீண்டும் பார்த்தான். சினத்தால் நிறைந்த கிருஷ்ணன், பாசமிக்கத் தொனியில் அர்ஜுனனிடம்,(133-135) “ஓ! பார்த்தா, இன்று துரோணர் மகன் உன்னை விஞ்சுவதால், போரில் நான் உன்னை இவ்வாறு காண்பது மிக விநோதமானதாகத் தெரிகிறது.(136) முன்பு நீ கொண்டிருந்ததைப் போல இப்போது உன் கரங்களில் வலிமையும், சக்தியும் இல்லையா? உன் கரங்களில் இன்னும் காண்டீவம் இருக்கவில்லையா? உன் தேரில் இப்போது நீ நிற்கவில்லையா?(137) உன் இரு கரங்களும் பலமாக இல்லையா? உன் முட்டுகளில் காயமேதும் ஏற்பட்டிருக்கிறதா? பிறகு ஏன் போரில் உன்னைவிடத் துரோணர் மகன் விஞ்சுவதை நான் காண்கிறேன்?(138) ஓ! பார்த்தா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உன்னைத் தாக்குபவரை உன் ஆசானின் மகனாகக் கருதி விட்டுவிடாதே. அவரை விட்டுவிடத் தகுந்த நேரம் இதுவன்று” என்றான்.(139)
இவ்வாறு கிருஷ்ணனால் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, வேகமே முக்கியமான தேவையாக இருந்த அந்த நேரத்தில், பதினான்கு அகன்ற தலை கணைகளை எடுத்து, அஸ்வத்தாமனின் வில், கொடிமரம், குடை, கொடிகள், தேர், ஈட்டி மற்றும் கதாயுதம் ஆகியவற்றை அறுத்தான்.(140) கன்றின் பல் போன்ற மேலும் சில கணைகளை {வத்சதந்தங்களை} எடுத்துக் கொண்ட அவன், அவற்றைக் கொண்டு துரோணர் மகனின் தோளில் ஆழமாகத் தாக்கினான். அதன் பேரில் ஆழ்ந்த மயக்கமடைந்த அஸ்வத்தாமன், தன் கொடிக்கம்பத்தைத் தாங்கிக் கொண்டே கீழே அமர்ந்தான்.(141) ஓ!ஏகாதிபதி, பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேரோட்டி, அவனைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து காக்க விரும்பி, எதிரியால் இவ்வாறு ஆழமாகப் பீடிக்கப்பட்டு மயக்கமுற்றிருந்த அவனைக் கொண்டு சென்றான்.(142)
அதேவேளையில் எதிரிகளை எரிப்பவனான விஜயன் {அர்ஜுனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வீரனான உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.(143) இவ்வாறே, ஓ! மன்னா, உமது தீய கொள்கைகளால், எதிரியுடன் போரிடும் உமது போர்வீரர்களுக்கு ஒரு கொடூரமான, பயங்கரமான பேரழிவு தொடங்கியது.(144) குறுகிய காலத்திற்குள்ளாகவே பீபத்சு {அர்ஜுனன்} சம்சப்தகர்களை முறியடித்தான்; விருகோதரன் {பீமன்} குருக்களையும்; வசுசேனன் {கர்ணன்} பாஞ்சாலர்களையும் முறியடித்தனர்.(145) பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் போரில் சுற்றிலும் பல தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்றன.(146) அதே வேளையில், ஓ! பாரதர்களின் தலைவா, தன் காயங்களால் ஏற்பட்ட பெரும் வலியால் யுதிஷ்டிரன், போரில் இருந்து இரண்டு மைல்கள் பின்வாங்கிச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.
------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -56ல் உள்ள சுலோகங்கள் : 147
ஆங்கிலத்தில் | In English |