The oath by Ashwatthama! | Karna-Parva-Section-57 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கௌரவர்களுக்கு உற்சாகமளித்த துரியோதனன்; திருஷ்டத்யும்னன் செய்த அநீதியை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன் ஒரு சபத்தைச் செய்தது; போர்க்களத்தின் முதன்மையான போர்வீரர்களைக் காண வந்த தேவர்களும், அப்சரஸ்களும்; அப்சரஸ்கள் சிந்திய தெய்வீக நறுமணத்தை நுகர்ந்த வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு இறந்தது; மூர்க்கமடைந்த போர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ! கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வலிமையிலும், ஆற்றலிலும் தங்களுக்கு நிகரான துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்களுடன் போரிடும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் பெரும் நன்மையையே அடைகிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் அவ்வாறே வாய்த்திருக்கிறது.(3) இந்தத் துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்கள் போரில் பாண்டவர்களைக் கொன்று அகன்ற பூமியை அடையட்டும், அல்லது எதிரியால் போரில் கொல்லப்பட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அருள் உலகங்களை வெல்லட்டும்” என்றான் {துரியோதனன்}.(4) துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த க்ஷத்திரியக் காளைகள், உற்சாக நிறைவுடன் உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் இசைக்கருவிகளை இசைத்து, முழக்கினர்.(5)
துரியோதனனின் படை இவ்வாறு மகிழ்ச்சியில் நிறைந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உமது போர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், “துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உங்கள் அனைவரின் கண்களுக்கும் முன்னால் என் தந்தை {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்த பிறகு, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(6,7) மன்னர்களே, இத்தகு நடத்தை தூண்டிவிடும் கோபத்தாலும், என் நண்பனுக்காகவும் உண்மையில் உங்கள் அனைவரின் முன்பும் நான் உறுதிமொழி ஏற்கிறேன். அந்த எனது உறுதிமொழியைக் கேட்பீராக.(8) திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் நான் என் கவசத்தை அகற்ற மாட்டேன். இந்த எனது உறுதிமொழி நிறைவேற வில்லையென்றால் சொர்க்கத்திற்கு நான் செல்லாதிருப்பேனாக.(9) அர்ஜுனனாகட்டும், பீமசேனனாகட்டும், அல்லது வேறு எவருமாகட்டும், என்னை எதிர்த்து வரும் அவனை, அல்லது அவர்கள் யாவரையும் நான் நசுக்கிவிடுவேன். இதில் ஐயமேதுமில்லை” என்றான் {அஸ்வத்தாமன்}.(10)
அஸ்வத்தாமன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மொத்த பாரதப் படையும் ஒன்றாகச் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்து விரைந்தன, பின்னவர்களும் {பாண்டவப் படையும்} முன்னவர்களை {கௌரவர்களை} எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ! பாரதரே, தேர்ப்படைப்பிரிவின் துணிவுமிக்கத் தலைவர்களுக்கு இடையில் நடந்த மோதலானது மிகவும் அச்சத்தைத் தருவதாக அமைந்தது. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களுக்கு முன்னணியில் நிறுவப்பட்ட வாழ்வின் அழிவானது, இறுதியான பெரும் அண்ட அழிவின் போது ஏற்படுவதற்கு ஒப்பாக இருந்தது.(12) அந்த ஆயுத வழி {போர்} தொடங்கியதும், தேவர்களுடனும், அப்சரஸ்களின் துணையுடனும் கூடிய பல்வேறு (மேன்மையான) உயிரினங்கள் அந்த மனிதர்களில் முதன்மையானோரைக் காண அங்கே வந்தனர்.(13) மகிழ்ச்சியால் நிறைந்த அப்சரஸ்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்போடு இருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோரை தெய்வீக மலர்மாலைகளாலும், பல்வேறு வகையான தெய்வீக நறுமணப் பொருட்களாலும், பல்வேறு ரத்தின இனங்களாலும் மறைத்தனர்.(14) அந்த அற்புதமான நறுமணங்களைப் போர்வீரர்களில் முதன்மையான அனைவரின் நாசிகளுக்கும் மென்மையான தென்றல் கொண்டு சேர்த்தது. காற்றுடைய செயல்பாட்டின் விளைவால் அந்த நறுமணங்களை நுகர்ந்த போர்வீரர்கள் மீண்டும் போரில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பூமியில் விழத் தொடங்கினர்.(15) தெய்வீக மலர்கள், தங்கச் சிறகுகளைக் கொண்ட அழகிய கணைகள் மற்றும் போர்வீரர்களில் முதன்மையான பலரால் விரவிக்கிடந்த பூமியானது, நட்சத்திரக்கூட்டங்களால் விரவிக் கிடந்த ஆகாயத்தைப் போலத் தெரிந்தது.(16) ஆகாயத்தில் இருந்து வந்த மகிழ்ச்சி மற்றும் இசைக்கருவிகள் ஒலி ஆகியவற்றின் விளைவால், வில்லின் நாணொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள் மற்றும் போர்வீரர்களின் கூச்சல்கள் நடந்த அந்தச் சீற்றமிகு ஆயுதவழியானது மிக மூர்க்கமானதாக ஆனது” {என்றான் சஞ்சயன்}.(17)
-----------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -57ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |