Krishna’s description of the field situation! | Karna-Parva-Section-58 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் குறித்துக் கவலையடைந்த அர்ஜுனன் அதைக் கிருஷ்ணனிடம் தெரிவிப்பது; கள நிலவரத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு கிருஷ்ணனைத் தூண்டிய அர்ஜுனன்; களநிலவரத்தை மீண்டும் விவரித்தபடியே யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்குத் தேரைச் செலுத்திய கிருஷ்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் கோபத்தை அடைந்தபோது பூமியின் தலைவர்களுக்கு இடையே நடந்த அந்தப் போரானது இவ்வாறே நடந்தது.(1) துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பெரும் தேர்வீரர்களான பிறரையும் வென்ற அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பாண்டவப் படை தப்பி ஓடுவதைப் பார். இந்தப் போரில் கர்ணன், நமது பெரும் தேர்வீரர்களைக் கொல்வதைப் பார்.(3) ஓ! தசார்ஹ குலத்தோனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை நான் காணவில்லை. மேலும், ஓ! போர்வீரர்களின் முதன்மையானவனே, தர்மன் மகனின் {யுதிஷ்டிரரின்} கொடிமரத்தையும் காணவில்லை.(4) ஓ! ஜனார்த்தனா, நாளின் மூன்றாவது பகுதி இன்னும் இருக்கிறது. தார்தராஷ்டிரர்களில் எவரும் என்னை எதிர்த்துப் போரிட வரவில்லை.(5)
எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, யுதிஷ்டிரர் எங்கிருக்கிறாரோ அங்கே செல்வாயாக. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} பாதுகாப்பாகவும், போரில் தன் தம்பிகளுடன் நலமாக இருப்பதையும் கண்ட பிறகு,(6) ஓ! விருஷ்ணி குலத்தோனே, நான் எதிரியோடு மீண்டும் போரிடுவேன்” என்றான் {அர்ஜுனன்}. பீபத்சுவின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹரி {கிருஷ்ணன்}, மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு, எதிரியோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களும், வலிமைமிக்கவர்களும், பெரும் பலமிக்கத் தேர்வீரர்களுமான சிருஞ்சய வீரர்களுடன், மன்னன் யுதிஷ்டிரன் எங்கிருந்தானோ, அங்கே தன் தேரில் வேகமாகச் சென்றான்.(7,8)
அந்தப் பேரழிவு நடந்து கொண்டிருந்தபோது, போர்க்களத்தைக் கண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, சவ்யசச்சினிடம் {அர்ஜுனனிடம்},(9) “ஓ! பாரதா, துரியோதனனின் நிமித்தமாகப் பூமியில் உள்ள க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் நேரும் இந்தப் பயங்கரப் பேரழிவைப் பார்.(10) ஓ! பாரதா {அர்ஜுனா}, கொல்லப்பட்ட வீரர்களுக்குச் சொந்தமான தங்கப் பின்புறம் கொண்ட விற்களையும், தங்கள் தோள்களில் இருந்து இடம் பெயர்ந்திருக்கும் விலைமதிப்புமிக்க அவர்களது அம்பறாத்தூணிகளையும் பார்.(11) தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்த நேரான கணைகளையும் {நாராசங்களையும்}, எண்ணெயில் கழுவப்பட்டவையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான அந்தத் துணிக்கோல் கணைகளையும் பார்.(12) ஓ! பாரதா, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், தந்தப் பிடிகளைக் கொண்டவையுமான அந்தக் கத்திகளையும், தங்கம் பதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருக்கும் அந்தக் கேடயங்களையும் பார்.(13) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த வேல்களையும், தங்க ஆபரணங்களைக் கொண்ட அந்த ஈட்டிகளையும் {சக்திகளையும்}, சுற்றிலும் தங்கத்தால் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட அந்தப் பெரும் கதாயுதங்களையும் பார்.(14) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வாள்களையும், தங்க ஆபரணங்களைக் கொண்ட அந்தக் கோடரிகளையும் {பரசுகளையும்}, தங்கள் தங்கக் கைப்பிடிகளில் இருந்து விழுந்த போர்க்கோடரிகளின் தலைகளையும் பார்.(15)
அந்த இரும்பு குந்தங்களையும், மிகக் கனமான அந்தக் குறுந்தண்டங்களையும், அந்த அழகிய ஏவுகணைகளையும், முள்பதித்த தலைகளைக் கொண்ட அந்தப் பெரும் தடிகளையும், சக்கரதாரிகளின் கரங்களில் இருந்து இடம்பெயர்ந்திருக்கும் சக்கரங்களையும், இந்தப் பயங்கரப் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்தச் சூலங்களையும் பார்.(16) (உயிரோடு இருந்தபோது) போருக்கு வந்தவர்களான பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட போர்வீரர்கள், பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உயிரை இழந்து கீழே கிடந்தாலும் இன்னும் உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிகிறார்கள்.(17) கதாயுதங்களால் நசுக்கப்பட்ட அங்கங்களையும், கனமான தண்டங்களால் உடைக்கப்பட்ட தலைகளையும், யானைகள், குதிரைகள் மற்றும தேர்களால் கிழித்துச் சிதைக்கப்பட்ட உடல்களையும் கொண்டு போர்க்களத்தில் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(18) போர்க்களமானது, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், கோடரிகள், கத்திகள், முள்பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, வேல்கள், இரும்புக் குந்தங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றாலும், காயங்கள் பலவற்றால் வெட்டப்பட்டு, குருதிப்புனலால் மறைக்கபட்டு உயிரை இழந்த மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்களாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.(19,20)
ஓ! பாரதா {அர்ஜுனா}, சந்தனத்தால் பூசப்பட்டு, தங்க அங்கதங்களாலும் {தோள்வளைகளால்}, கேயூரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், தங்கள் {கைகளின்} முனைகள் தோலுறைகளால் மறைக்கப்பட்டவையுமான கரங்களுடன் கூடிய பூமியானது அழகானதாகத் தெரிகிறது.(21) தோலுறைகள் பூட்டப்பட்ட கரங்கள், இடம்பெயர்ந்திருக்கும் ஆபரணங்கள், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகள் ஆகியவற்றுடன் கூடிய சுறுசுறுப்பான போர்வீரர்கள் பலராலும்,(22) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், காது குண்டலங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அகன்ற பெரிய கண்களைக் கொண்டவையுமான போர்வீரர்களின் விழுந்துவிட்ட தலைகளாலும் விரவிக்கிடக்கும் இந்தப் பூமியானது மிக அழகானதாகத் தெரிகிறது.(23) மேனியெங்கும் குருதியால் பூசப்பட்ட தலையற்ற உடல்கள், வெட்டப்பட்ட அங்கங்கள், தலைகள், உதடுகள் ஆகியவற்றுடன் கூடிய பூமியானது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நெருப்பு அணைக்கப்பட்டுச் சிதறிக் கிடக்கும் ஒரு வேள்விப் பீடத்தைப் போலத் தெரிகிறது.(24) தங்க மணிவரிசையைக் கொண்ட அந்த அழகிய தேர்கள், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டிருப்பதையும், களத்தில் பரவிக் கிடக்கும் கொல்லப்பட்ட குதிரைகளின் உடல்களில் இன்னும் கணைகள் ஒட்டிக் கொண்டிருப்பதையும் பார்.(25) அந்தத் தேர்த்தட்டுகளும், அந்த அம்பறாத்தூணிகளும், அந்தக் கொடிகளும், பல்வேறு வகைகளிலான அந்தக் கொடிமரங்களும், தேர்வீரர்களின் பெரிய வெண்சங்குகளும் களமெங்கும் சிதறிக் கிடப்பதைப் பார்.(26)
மலைகளைப் போலப் பெரியவையான அந்த யானைகள், நாக்கு வெளியே தள்ளியவாறு பூமியில் கிடப்பதையும், வெற்றிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்த யானைகள், மற்றும் குதிரைகள் தங்கள் உயிர்களை இழந்து கிடப்பதையும் பார்.(27) அந்த யானை அம்பாரிகளையும், அந்தத் தோல்கள் மற்றும் விரிப்புகளையும், பலவண்ணங்களுடன் அழகாக இருக்கும் அந்தக் கிழிந்துபோன விரிப்புகளையும் பார்.(28) பெரும் வடிவிலான யானைகள் விழுந்ததன் விளைவால், பல்வேறு வழிகளில் உடைந்து, கிழிந்திருக்கும் அந்த மணிவரிசைகளையும், வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்ட அந்த அழகிய மாவெட்டிகளையும், தரையில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும் பார்.(29) தங்கத்தாலும், பலவண்ண ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், (கொல்லப்பட்ட) குதிரைவீரர்களின் பிடியில் இன்னும் இருப்பவையுமான அந்தச் சாட்டைகளையும், குதிரையின் முதுகில் இருக்கைகளாகப் பயன்பட்டு இப்போது தரையில் கிடப்பவைகளான அந்த விரிப்புகளையும், ரங்கு மான் தோல்களையும் பார்.(30) மன்னர்களின் கிரீடங்களை அலங்கரிக்கும் அந்த ரத்தினங்களையும், தங்கத்தாலான அந்த அழகிய கழத்தணிகளையும், இடம்பெயர்ந்து கிடக்கும் அந்தக் குடைகளையும், விசிறுவதற்கான சாமரங்களையும் பார்.(31) அழகிய காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளுடனும், நிலவு மற்றும் நட்சத்திரங்களின் காந்தியுடனும் கூடிய வீரர்களின் முகங்களால், குருதிச் சேற்றுடன் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்[1].(32)
[1] வேறொரு பதிப்பில், “சந்திரன் போலும், நக்ஷத்திரங்கள் போலும் பிரகாசிப்பவைகளும், அழகிய குண்டலங்களணிந்தவைகளும், ஒழுங்கபடுத்தப்பட்ட மீசையுள்ளவைகளும் நன்றாக அலங்கரிக்கப்பட்டவைகளுமான வீரர்களுடைய முகங்களால் நன்கு மூடப்பட்டதும், ரத்தச்சேறுள்ளதுமான யுத்தபூமியைப் பார்” என்றிருக்கிறது.
காயமடைந்தாலும், உயிர் இன்னும் போகாமல் துன்பத்தால் ஓலமிட்டுக் கொண்டே சுற்றிலும் கிடக்கும் அந்தப் போர்வீரர்களைப் பார். ஓ! இளவரசே {அர்ஜுனா}, அவர்களது உறவினர்கள் தங்கள் ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, அவர்களைப் பராமரித்துக் கொண்டு இடையறாமல் அழுது கொண்டிருக்கின்றனர்.(33) கணைகளால் போர்வீரர்களை மறைத்து, அவர்களின் உயிரை எடுத்த பிறகும், சுறுசுறுப்புடன் கூடியவர்களும், வெற்றியடையும் ஏக்கம் கொண்டவர்களும், சினம் பெருகியவர்களுமான அந்தப் போராளிகள் பிற எதிரிகளை எதிர்த்து மீண்டும் போரிடச் செல்வதைப் பார்.(34) சிலர் களத்தில் இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் உறவினர்களான வீழ்ந்துவிட்ட வீரர்களால் இரந்து கேட்கப்பட்ட தண்ணீரைத் தேடி சிலர் செல்கின்றனர்.(35) அதே வேளையில், ஓ! அர்ஜுனா, பலர் தங்கள் இறுதி மூச்சை சுவாசிக்கின்றனர். திரும்பி வரும் அவர்களது உறவினர்கள், உணர்வற்றுக் கிடக்கும் அவர்களைக் கண்டு,(36) தாங்கள் கொண்டு வந்த நீரை வீசிவிட்டு, ஒருவரை நோக்கி ஒருவர் கதறிக் கொண்டே மூர்க்கமாக ஓடுகின்றனர். ஓ! பாரதா {அர்ஜுனா}, பலர் தங்கள் தாகம் தணிந்ததும் இறக்கின்றனர், பலர் தாங்கள் {நீரைக்} குடித்துக் கொண்டிருக்கும்போதே இறக்கின்றனர்.(37) சிலர் தங்கள் உறவினர்களிடம் பாசத்தைக் கொண்டிருந்தாலும், {இறந்து போன} தங்கள் அன்புக்குரிய உறவினர்களை விட்டுவிட்டு அந்தப் பெரும்போரில் எதிரிகளை நோக்கி ஓடுகின்றனர்.(38) மேலும் சிலர், ஓ! மனிதர்களில் சிறந்தவனே, தங்கள் கீழுதடுகளைக் கடித்துக் கொண்டு, தங்கள் புருவங்கள் சுருங்கியதன் விளைவாக, பயங்கரத்தை அடைந்த முகங்களுடன் சுற்றிலும் களத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.
இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாசுதேவன் {கிருஷ்ணன்} யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றான். அர்ஜுனனும், அந்தப் பெரும்போரில் மன்னனை {யுதிஷ்டிரனைப்} பார்ப்பதற்காக, “செல், செல்வாயாக” என்று கோவிந்தனை மீண்டும் மீண்டும் தூண்டிக் கொண்டிருந்தான்.(40) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} போர்க்களத்தைக் காட்டிய பிறகு, வேகமாகச் சென்ற மாதவன் {கிருஷ்ணன்}, மீண்டும் பார்த்தனிடம் மெதுவாக, “மன்னர் யுதிஷ்டிரரை நோக்கி விரைந்து செல்லும் அந்த மன்னர்களைப் பார். போர் அரங்கத்தில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பாகத் திகழும் கர்ணனைப் பார்.(42) அதோ வலிமைமிக்க வில்லாளியான பீமர் போரிடச் சென்று கொண்டிருக்கிறார். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்களில் முதன்மையானவர்கள் யாவரோ, திருஷ்டத்யும்னனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்கள் யாவரோ, அவர்களே பீமரைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.(43) விரைந்து செல்லும் பார்த்தர்களால் எதிரியின் பரந்த படையான மீண்டும் பிளக்கிறது. ஓ! அர்ஜுனா, தப்பி ஓடும் கௌரவர்களை அணிவகுக்கச் செய்ய முயலும் கர்ணனைப் பார்.(44) ஓ! குரு குலத்தோனே, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமர்}, வேகத்தில் யமனுக்கும், ஆற்றலில் இந்திரனுக்கும் ஒப்பாக அதோ செல்கிறார். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்த வீரரை {அஸ்வத்தாமரை} எதிர்த்து விரைகிறான். சிருஞ்சயர்கள் திருஷ்டத்யும்னனின் வழிகாட்டுதலின் பேரில் பின்தொடர்கிறார்கள். {அதோ} சிருஞ்சயர்கள் வீழ்வதைப் பார்” என்றான் {கிருஷ்ணன்}.(46)
இவ்வாறே வெல்லப்பட முடியாதவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அர்ஜுனனிடம் அனைத்தையும் விவரித்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கரமானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு போர் தொடங்கியது.(47) ஓ! ஏகாதிபதி, அவ்விரு படைகளும் மரணத்தையே இலக்காகக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது உரத்த சிங்க முழக்கங்கள் எழுந்தன.(48) இவ்வாறே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவால், உமது மற்றும் எதிரியின் போர்வீரர்களான அந்த அழிவு பூமியில் ஏற்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(49)
-------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -58ல் உள்ள சுலோகங்கள் : 49
-------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -58ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |