Arjuna made Ashwatthama to swoon once again! | Karna-Parva-Section-59 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : தனியனான கர்ணனுக்கும், பாண்டவப் படையினருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த போர்; திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைத் தடுத்த சாத்யகி; திருஷ்டத்யும்னனை எதிர்த்து வந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனும், திருஷ்டத்யும்னனும் கடுமொழியில் பேசிக் கொண்டது; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்து, அவனைக் கொல்வதற்காக இழுத்துச் சென்ற அஸ்வத்தாமன்; அந்தக் காட்சியைக் காட்டி, அஸ்வத்தாமனிடம் இருந்து திருஷ்டத்யும்னனைக் காக்குமாற அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய அர்ஜுனன்; மீண்டும் தேரில் ஏறிய அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சகாதேவன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு மீண்டும் மயக்கமடைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுக் கொண்டு சென்ற அவனது சாரதி; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கிச் செல்ல விரும்பிய அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில், யுதிஷ்டிரனின் தலைமையில் பார்த்தர்களும், சூதன் மகன் {கர்ணன்} தலைமையில் நாங்களும் இருந்தபோது, குருக்களும், சிருஞ்சயர்களும் அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர்.(1) அப்போது, கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில், யமனின் அரசாங்கத்தைப் பெருகச் செய்வதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(2) துணிச்சல்மிக்கச் சம்சப்தகர்களில் சொற்பமானவர்களே கொல்லப்படாமல் எஞ்சிய போது, குருதிப்புனலை உண்டாக்கிய அந்த மூர்க்கமான போர் தொடங்கியதும்,(3) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, (பாண்டவத் தரப்பு) மன்னர்கள் அனைவருடன் கூடிய திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவரும் கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) பெரும் அளவிலான நீர்த்தாரைகளை ஏற்கும் மலையைப் போல எவரின் துணையும் இல்லாத கர்ணன், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களும், அந்தப் போரில் முன்னேறி வருபவர்களுமான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் {தனியாக} எதிர்கொண்டான்.(5) கர்ணனோடு மோதிய அந்த வலிமைமிக்க வீரர்கள், மலையுடன் மோதி அனைத்துப் பக்கங்களிலும் சிதறும் நீர்த்திரள்களைப் போலச் சிதறி பிளந்தனர்.(6) எனினும், அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த அந்தப் போர் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
அப்போது அந்தப் போரில் திருஷ்டத்யும்னன் நேரான கணை ஒன்றால் ராதையின் மகனை {கர்ணனைத்} தாக்கி, அவனிடம், “நில்லும், நிற்பீராக” என்றான்.(7) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், சினத்தால் நிறைந்து, விஜயம் என்று அழைக்கப்பட்ட தன் முதன்மையான வில்லை அசைத்து, திருஷ்டத்யும்னனின் வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனது கணைகளையும் வெட்டி, ஒன்பது கணைகளால் திருஷ்டத்யும்னனையும் தாக்கினான். ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கவசத்தைத் துளைத்த அந்தக் கணைகள்,(8,9) குருதியில் குளித்து, செம்பட்டுப்பூச்சிகள் {இந்திரகோபங்கள்} பலவற்றைப் போல அழகாகத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், உடைந்துபோன அந்த வில்லை வீசிவிட்டு,(10) மற்றொரு வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றையும் எடுத்துக் கொண்டான். எண்ணிக்கையில் எழுபதாக இருந்த அந்த நேரான கணைகளால் கர்ணனைத் துளைத்தன.(11) அதே போலக் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எதிரிகளை எரிப்பவனான அந்தப் பிருஷதன் மகனைக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றால் மறைத்தான். துரோணரைக் கொன்றவனான அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைத்துப் பதிலடி கொடுத்தான்.(12)
அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இரண்டாவது யமதண்டத்தைப் போன்றதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையொன்றைத் தன் எதிராளியின் மீது ஏவினான்.(13) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரமான கணையானது, பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி மூர்க்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரன் {சாத்யகி}, தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டும் விதமாக அதை ஏழு துண்டுகளாக அறுத்தான்.(14) சாத்யகியின் கணைகளால் கலங்கடிக்கப்பட்ட தன் கணையைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா, கணைமாரிகளால் சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்தான்.(15) அம்மோதலில் அவன் ஏழு துணிக்கோல் கணைகளால் சாத்யகியைத் துளைத்தான். எனினும் அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பதிலுக்குத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு வீரர்களுக்குள் நடந்த போரானது, பார்வையாளர்கள் மற்றும் போராளிகள் ஆகிய இருவரையும் அச்சத்தில் நிறைந்தது. அஃது {அந்தப் போர்} அச்சந்தருவதாக இருந்தாலும், அழகானதாகவும், காணத் தகுந்ததாகவும் இருந்தது.(17) அந்தப் போரில் கர்ணன் மற்றும் சிநியின் பேரன் ஆகியோரின் அருஞ்செயல்களைக் கண்டு மயிர்ச்சிலிர்த்து நிற்பதாக அனைத்து உயிரினங்களும் தெரிந்தன.(18)
அதே வேளையில் வலிமைமிக்கத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைத் தண்டிப்பவனும், எதிரிகள் அனைவரின் ஆற்றலையும் தணிப்பவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து விரைந்தான்.(19) சினத்தால் நிறைந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, திருஷ்டத்யும்னனிடம், “ஓ! பிராமணனைக் {துரோணரைக்} கொன்றவனே, நில், நிற்பாயாக, நீ இன்று என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது” என்றான்.(20) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் கரநளினம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அஸ்வத்தாமன்}, உறுதியுடன் முயன்று, பெரும் வேகத்துடன் கூடியவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளைக் கொண்டு, கிட்டத்தட்ட தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்திப் போராடிய துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனை ஆழமாகத் துளைத்தான். துரோணர் (உயிரோடு இருந்தபோது), ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனைக் கண்டு, தன் காலன் வந்துவிட்டதாகக் கருதியதைப் போலவே, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகனும், அந்தப் போரில் துரோணர் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கண்டதும், தன் காலன் வந்துவிட்டதாகவே கருதினான்.(21-23) எனினும், போரில் ஆயுதங்களால் தான் கொல்லப்படாதவன் என்பது நினைவுகூர்ந்த அவன், அண்ட அழிவின் போது அந்தகனை எதிர்க்கும் அந்தகனைப் போலத் துரோணரின் மகனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(24)
எனினும், துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் முன் நிற்கும் திருஷ்டத்யும்னனைக் கண்டு, கோபத்தால் ஆழ்ந்த பெருமூச்சுகளைவிட்டபடியே அவனை நோக்கி விரைந்தான்.(25) ஒருவரையொருவர் கண்டு இருவருமே பெருஞ்சினத்தால் நிறைந்தனர். அப்போது, பெரும் சுறுசறுப்பைக் கண்ட துரோணரின் வீர மகன், ஓ! ஏகாதிபதி, தன்னிடம் இருந்து தொலைவில் இல்லாத திருஷ்டத்யும்னனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பாஞ்சாலர்களில் இழிந்தவனே, நான் இன்று உன்னை யமனிடம் அனுப்புவேன்.(26,27) பார்த்தனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்படாமல் போரில் நீ நின்றாலோ, ஓ! மூடா, தப்பி ஓடாமல் நீ இருந்தாலோ, முன்பு துரோணரைக் கொன்றதால் நீ இழைத்த பாவமானது, அந்த உனது பெருந்தீமைக்காக இன்று உன்னை வருத்தத்தால் நிறைக்கும். {இதை உனக்கு} நான் உண்மையாகவே சொல்கிறேன்” {என்றான் அஸ்வத்தாமன்}.(28,29)
இவ்வாறு சொல்லப்பட்ட வீரத் திருஷ்டத்யும்னன், “உறுதியுடன் போரிட்டுக் கொண்டிருந்த உமது தந்தைக்குப் பதிலளித்த என் அதே வாள், இந்த உமது பேச்சுக்கும் இன்று பதிலளிக்கும்.(30) ஓ! பெயரளவில் மட்டுமே பிராமணராக இருப்பவரே {அஸ்வத்தாமரே}, துரோணரை என்னால் கொல்ல முடிந்ததென்றால், என் ஆற்றலை வெளிப்படுத்தி இன்று உம்மை நான் ஏன் கொல்ல மாட்டேன்?” என்று மறுமொழி கூறினான்.(31) பாண்டவப் படைகளின் கோபக்காரத் தலைவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, கூரிய கணையொன்றால் துரோணர் மகனைத் துளைத்தான்.(32) பிறகு, சினத்தால் நிறைந்த துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நேரான கணைகளைக் கொண்டு திருஷ்டத்யும்னனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தான்.(33) ஆயிரக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டதால், ஓ! ஏகாதிபதி, அதற்கு மேலும் ஆகாயமோ, திசைப்புள்ளிகளோ, சுற்றிலும் உள்ள போராளிகளோ காணப்படவில்லை.(34) அதே போலப் பிருஷதன் மகனும், ஓ! ஏகாதிபதி, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போர்க்கள ரத்தினமான அந்தத் துரோணர் மகனைக் கணைகளால் மறைத்தான்.(35)
ராதையின் மகனும் {கர்ணனும்} கூட, ஓ! ஏகாதிபதி, பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், யுதாமன்யு, தன் அருஞ்செயலின் விளைவால் அனைவரின் கண்களுக்கு வடமீனாக {அருந்ததி நட்சத்திரமாகத்} தெரிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்யகி ஆகியோரைத் தனியாகவே தடுத்தான்.(36) அப்போது திருஷ்டத்யும்னன் அந்தப் போரில், மிகக் கடினமானதும் உறுதியானதுமான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனது கணைகள் அனைத்தையும் அறுத்தான்.(37) எனினும், துரோணர் மகன் கண்ணிமைப்பதற்குள் தன் கணைகளால், பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} வில், ஈட்டி, கதாயுதம், கொடிமரம், குதிரைகள், சாரதி மற்றும் தேர் ஆகியவற்றை அழித்தான்.(38) வில்லற்று, தேற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன அந்தப் பிருஷதன் மகன் ஒரு பெரிய கத்தியையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுடர்மிக்கக் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(39) பெரும் கரநளினத்தையும், வலிமைமிக்க ஆயுதங்களையும் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா, அந்தப் போரில் அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, திருஷ்டத்யும்னன் தன் தேரின் அருகே வருவதற்கு முன்பே பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} அந்த ஆயுதங்களையும் வேகமாக அறுத்தான்.(40) இவை யாவும் அற்புதமானவையாகத் தெரிந்தன.
எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் விறுவிறுப்பாகப் போராடினாலும், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் துளைத்துச் சிதைக்கப்பட்டவனாகவும், தேரற்று, குதிரைகளற்று, வில்லற்றவனாகவும் இருந்த திருஷ்டத்யும்னனை அவனால் கொல்ல முடியவில்லை.(41,42) எனவே, ஓ! மன்னா, தன் எதிரியைக் கணைகளால் கொல்ல முடியவில்லை என்பதைத் துரோணர் மகன் கண்டபோது, அவன் தன் வில்லை வைத்துவிட்டு, பிருஷதன் மகனை நோக்கி வேகமாக {தேரை விட்டு இறங்கி நடந்து} சென்றான்.(43) அந்த உயர் ஆன்மா கொண்டவன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரியை நோக்கி விரைந்த வேகமானது, ஒரு பெரிய பாம்பைப் பிடிப்பதற்காகப் பாயும் கருடனுக்கு ஒப்பாக இருந்தது.(44)
அதே வேளையில், மாதவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா, பிருஷதன் மகனின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் துரோணர் மகன் எவ்வாறு விரைகிறார் என்பதைப் பார். அந்த இளவரசனை அவர் கொன்றுவிடுவார் என்பதில் ஐயமில்லை.(45) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! எதிரிகளை நொறுக்குபவனே, காலனின் கோரப் பற்களுக்கிடையில் அகப்பட்டிருப்பதைப் போல இப்போது துரோணர் மகனின் கோரப் பிடிக்குள் இருக்கும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மீட்பாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன வீர வாசுதேவன் {கிருஷ்ணன்} துரோணர் மகன் இருந்த இடத்தை நோக்கி குதிரைகளைத் தூண்டினான்.(46,47) நிலவின் காந்தியைக் கொண்ட அந்தக் குதிரைகள், கேசவனால் தூண்டப்பட்டு, வானத்தையே விழுங்கிவிடுவதைப் போலத் துரோணர் மகனின் தேரை நோக்கிப் பாய்ந்தன.(48) பெரும் சக்தியைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்ட வலிமைமிக்க அஸ்வத்தாமன், திருஷ்டத்யும்னனை விரைவாகக் கொல்வதற்கான பெரும் முயற்சிகளைச் செய்தான்.(49)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தன் எதிரியால் இழுக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி கணைகள் பலவற்றை ஏவினான்.(50) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள், துரோணர் மகனை அணுகி, எறும்புப் புற்றைத் துளைக்கும் பாம்புகளைப் போல அவனை ஆழமாகத் துளைத்தன.(51) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரக் கணைகளால் இவ்வாறு துளைக்கப்பட்ட துரோணரின் வீரமகன், அளவிலா சக்தி கொண்ட அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்டான்.(52) உண்மையில் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்ட அந்த வீரன், தன் தேரில் {மீண்டும்} ஏறித் தன் சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, கணைகள் பலவற்றால் பார்த்தனைத் துளைக்கத் தொடங்கினான்.(53) அதேவேளையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வீரச் சகாதேவன், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பிருஷதன் மகனைத் தன் தேரில் சுமந்து சென்றான்.(54) அப்போது அர்ஜுனன், ஓ! மன்னா, துரோணர் மகனைப் பல கணைகளால் துளைத்தான். சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான்.(55)
இவ்வாறு கோபம் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, காலனின் இரண்டாவது தண்டம் போன்றதோ, ஒருவேளை காலனையே போன்றதோவான ஒரு நீண்ட கணையை அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} மீது ஏவினான். பெரும் காந்தியைக் கொண்ட அந்தக் கணையானது அந்தப் பிராமண வீரனின் தோள்களில் பாய்ந்தது.(56) அந்தப் போரில் அடைந்த அந்தத் தாக்குதலின் பலத்தால் மிகவும் கலக்கமடைந்து அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி, தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயங்கிப் போனான்.(57) அப்போது கர்ணன், ஓ! ஏகாதிபதி, தன் வில்லான விஜயத்தை அசைத்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அர்ஜுனனோடு தனிப்போரில் ஈடுபடும் விருப்பத்துடன் அந்தப் போரில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.(58) அதேவேளையில் துரோணர் மகன் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட பின்னவனின் {அஸ்வத்தாமனின்} சாரதி, வேகமாகப் போர்க்களத்தில் இருந்து அவனைக் கொண்டு சென்றான்.(59)
பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீட்கப்பட்டதையும், துரோணர் மகன் பீடிக்கப்பட்டதையும் கண்ட பாஞ்சாலர்கள், ஓ! மன்னா, வெற்றியடையும் எதிர்பார்ப்பில் உரக்க முழங்கத் தொடங்கினர்.(60) ஆயிரக் கணக்கான இனிய கருவிகள் {இசைக் கருவிகள்} ஒலிக்கத் தொடங்கின. போரில் இத்தகு அற்புதமான அருஞ்செயல்களைக் கண்ட போராளிகள் சிங்க முழக்கம் செய்தனர்.(61) அந்தச் சாதனையைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, சம்சப்தகர்களை நோக்கிச் செல்வாயாக. அதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றான்.(62) பாண்டு மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தசார்ஹ குலத்தோன், பல கொடிகளால் அருளப்பட்டதும், காற்று, அல்லது மனத்தின் வேகத்தைக் கொண்டதுமான அந்தத் தேரில் முன்னேறிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(63)
........................................................................................
கர்ண பர்வம் பகுதி -59ல் உள்ள சுலோகங்கள் : 63
........................................................................................
கர்ண பர்வம் பகுதி -59ல் உள்ள சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |