The Krishnas behel Yudhishthira! | Karna-Parva-Section-65 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : போர்வீரர்களை உற்சாகப்படுத்திய அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் குறித்துப் பீமனிடம் விசாரித்த அர்ஜுனன்; யுதிஷ்டிரன் உயிருடன் இருப்பது ஐயமே என்று அர்ஜுனனிடம் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் கண்டு வருமாறு பீமனுக்குச் சொன்ன அர்ஜுனன்; பகைவரைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், யுதிஷ்டிரனை அர்ஜுனனே கண்டு வர வேண்டும் என்றும் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்; அவர்களைக்கண்டு மகிழ்ந்த யுதிஷ்டிரன் கர்ணன் கொல்லப்பட்டு விட்டதாகக் கருதியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வீழ்த்தி, வலிமைமிக்கதும், வீரம் நிறைந்ததும், அடைவதற்கரிதானதுமான ஓர் அருஞ்செயலைச் செய்தவனும், எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கைகளில் வளைக்கப்பட்ட வில்லுடன், தன் துருப்புகளுக்கு மத்தியில் கண்களைச் செலுத்தினான்.(1) துணிச்சல்மிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தங்கள் படைப்பிரிவுகளின் முகப்புகளில் போரிட்டுக் கொண்டிருந்த போர்வீரர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், அவர்களில் தங்கள் முந்தைய சாதனைகளுக்காகக் கொண்டப்படுவோரைப் பாராட்டி, தன் படையின் தேர்வீரர்களைத் தங்கள் நிலைகளில் தொடர்ந்து நிலைக்கச் செய்தான்.(2) கிரீடத்தாலும், தங்கக் கழுத்தணியாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அர்ஜுனன், தன் அண்ணனான ஆஜமீட குலத்து யுதிஷ்டிரனைக் காணாததால், வேகமாகப் பீமனை அணுகி, “மன்னர் {யுதிஷ்டிரர்} எங்கிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டு, மன்னன் இருக்குமிடத்தை அவனிடம் விசாரித்தான்.(3)
இவ்வாறு கேட்கப்பட்ட பீமன் {அர்ஜுனனிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரன், கர்ணனின் கணைகளால் தன் அங்கங்கள் எரிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டார். அவர் இன்னும் உயிருடன் இருப்பது ஐயத்திற்கிடமானதே” என்றான்.(4)
இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் {பீமனிடம்}, “இந்தக் காரணத்திற்காக, குருவின் வழித்தோன்றல்கள் அனைவரிலும் சிறந்தவரான மன்னரை {யுதிஷ்டிரரைக்} குறித்து அறிந்து வருவதற்காக இவ்விடத்தில் இருந்து வேகமாகச் செல்வீராக. கர்ணனின் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட மன்னர் {யுதிஷ்டிரர்} {நம்} முகாமுக்கே சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.(5) அந்தக் கடும் ஆயுதவழியில் கூரிய கணைகளைக் கொண்டு துரோணரால் ஆழத்துளைக்கப்பட்ட போதும், வெற்றியை எதிர்பார்த்தவரும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவருமான மன்னர் {யுதிஷ்டிரர்}, அந்தத் துரோணர் கொல்லப்படும்வரை போரிலேயே நிலைத்திருந்தார்.(6) பாண்டவர்களில் முதன்மையானவரான அந்தப் பெருந்தன்மைமிக்கவர், இன்றைய போரில் கர்ணனால் பேராபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். எனவே, ஓ! பீமரே, அவரது {யுதிஷ்டிரரது} நிலையை உறுதி செய்து கொள்வதற்காக, அவர் இருக்கும் இடத்திற்கு வேகமாகச் செல்வீராக. நம் எதிரிகள் அனைவரையும் தடுத்துக் கொண்டு நான் இங்கே நிற்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(7)
இவ்வாறு சொல்லப்பட்ட பீமன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பெரும் மகிமை கொண்டவனே, பாரதர்களில் காளையான மன்னரின் {யுதிஷ்டிரரின்} நிலையை உறுதி செய்வதற்கு நீயே செல்வாயாக. நான் சென்றால், ஓ! அர்ஜுனா, வீரர்களில் முதன்மையானோரான பலர், போரில் நான் அச்சமடைந்துவிட்டதாகச் சொல்லக்கூடும்” என்றான்.(8) அப்போது அர்ஜுனன், பீமசேனனிடம், “என் படைப்பரிவுக்கு எதிரில் சம்சப்தகர்கள் இருக்கின்றனர். கூடித் திரண்டிருக்கும் அந்த எதிரிகளை முதலில் கொல்லாமல், இந்த இடத்தில் இருந்து அகல்வது எனக்கு இயலாத காரியமாகும்” என்றான்.(9) அப்போது பீமன், அர்ஜுனனிடம், “ஓ! குருக்களில் முதன்மையானவனே, என் சொந்த வலிமையைக் கொண்டு நான் சம்சப்தகர்கள் அனைவருடனும் போரிடுவேன். எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீயே செல்வாயாக” என்றான்.(10)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகைவர்களுக்கு மத்தியில் தன் அண்ணனான பீமசேனனின் அடைவதற்கரிதான அவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காண விரும்பி, அந்த விருஷ்ணி வீரனிடம் {கிருஷ்ணனிடம்},(11) “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, இந்தத் துருப்புகளின் கடலை விட்டுவிட்டு, குதிரைகளைச் செலுத்துவாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, மன்னர் அஜாதசத்ருவை {யுதிஷ்டிரரைக்} காண நான் விரும்புகிறேன்” என்றான்.(12)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தசார்ஹர்களில் முதன்மையான கேசவன் {கிருஷ்ணன்}, சரியாகக் குதிரைகளைச் செலுத்தப்போகும் தருணத்தில் பீமனிடம் அவன் {கிருஷ்ணன்}, “ஓ! பீமரே, இந்த அருஞ்செயல் உமக்கு அற்புதமானதன்று. நான் (அங்கே) செல்லப் போகிறேன். திரண்டிருக்கும் இந்தப் பார்த்தனுடைய எதிரிகளைக் கொல்வீராக” என்றான்.(13) பிறகு ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமனைப் படையின் முன்னணியில் நிறுத்தி, (சம்சப்தகர்களுடன்) போரிடுமாறு ஆணையுமிட்டு, ஓ! ஏகாதிபதி, கருடனுக்கு ஒப்பான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான்.(14,15)
பிறகு, தங்கள் தேரில் சென்ற அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, தன் படுக்கையில் கிடந்த மன்னனை {யுதிஷ்டிரனை} அடைந்தனர். அந்தத் தேரில் இருந்து இறங்கிய இருவரும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களை வழிபட்டனர்.(16) அந்த மனிதர்களில் காளை, அல்லது புலி {யுதிஷ்டிரன்}, பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதைக் கண்ட அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும், வாசவனை {இந்திரனைக்} கண்ட அசுவினி இரட்டையரைப் போல மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(17)
அப்போது மன்னன் {யுதிஷ்டிரன்}, அசுவினி இரட்டையரை வாழ்த்தும் விவஸ்வானைப் போலவோ, வலிமைமிக்க அசுரன் ஜம்பனைக் கொன்ற பிறகு, சக்ரனையும் {இந்திரனையும்} விஷ்ணுவையும் பாராட்டிய பிருஹஸ்பதியைப் போலவோ அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} வாழ்த்தினான்.(18) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கர்ணன் கொல்லப்பட்டதாக நினைத்து மகிழ்ச்சியால் நிறைந்தான். அந்த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, மகிழ்ச்சியால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(19)
----------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 65-ல் உள்ள சுலோகங்கள் :19
ஆங்கிலத்தில் | In English |