The craving of Yudhishthira! | Karna-Parva-Section-66 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்ட யுதிஷ்டிரன், கர்ணன் கொல்லப்பட்டதாக நினைத்து அவர்களிடம் விசாரித்தது; தன் இதயத்தில் இருந்த அச்சங்களை வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், கர்ணனை அர்ஜுனன் எவ்வாறு கொன்றான் என்று விசாரித்தது...
யுதிஷ்டிரன், “ஓ! தேவகியைத் தாயாகக் கொண்டவனே {கிருஷ்ணா}, நல்வரவு, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ! அச்யுதா {கிருஷ்ண}, ஓ! அர்ஜுனா, உங்கள் இருவரையும் கண்டது மிகவும் இனிமையான காட்சியாக இருக்கிறது.(1) கர்ணனின் எதிரிகளான நீங்கள் இருவரும், உங்கள் மேனியில் எந்தக் காயமுமின்றி, வலிமைமிக்கத் தேர்வீரனான அவனைக் {கர்ணனைக்} கொன்றிருக்கிறீர்கள் என்று காண்கிறேன்.(2) அவன் {கர்ணன்} இந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலவே இருந்தான். ஆயுதங்கள் அனைத்திலும் சாதித்தவனாகவும் அவன் இருந்தான். தார்தராஷ்டிரர்கள் அனைவரின் தலைவனாக இருந்த அவன், அவர்களது கவசமாகவும், பாதுகாவலனாகவும் இருந்தான்.(3) போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பெரும் வில்லாளிகளான விருஷசேனன் மற்றும் சுசேனன் ஆகிய இரு பெரும் வில்லாளிகளால் எப்போதும் பாதுகாக்கப்படுபவனாகவும் அவன் இருந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {கர்ணன்}, ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுத பாடங்களைக் கற்றான். போரில் அவன் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(4) உலகமனைத்திலும் முதன்மையான அவன், ஒரு தேர்வீரனாக, உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்பட்டான். அவன் {கர்ணன்}, தார்தராஷ்டிரர்களின் மீட்பனாகவும், அவர்களது படைக்கு முன்னணியில் செல்பவனாகவும் இருந்தான்.(5)
பகைவரின் துருப்புகளைக் கொல்பவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நசுக்குபவனாகவும் அவன் {கர்ணன்} இருந்தான். எப்போதும் துரியோதனனுக்கு நன்மை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவன், நமக்குத் துன்பத்தைக் கொடுக்கவும் எப்போதும் தயாராகவே இருந்தான்.(6) வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலேயே, போரில் வெல்லப்பட முடியாதவனாக அவன் இருந்தான். சக்தியிலும், வலிமையிலும் அவன் {கர்ணன்}, நெருப்பு தேவனுக்கும் {அக்னிக்கும்}, காற்று தேவனுக்கும் {வாயுவுக்கும்} நிகரானவனாக இருந்தான்.(7) ஈர்ப்பில் அவன் அளக்கமுடியாத கீழ் உலகம் {பாதாளம்} போலவே இருந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அவன், எதிரிகளுக்கு அந்தகனைப் போலவே இருந்தான். இந்தப் பயங்கரப் போரில் (இவ்வாறெல்லாம் இருந்த) கர்ணனைக் கொன்ற பிறகு, ஓர் அசுரனைக் கொன்ற தேவர்கள் இருவரைப் போல நீங்கள் இருவரும் வந்திருப்பது நற்பேறாலேயே.(8)
ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, அர்ஜுனா, இன்று வலிமையோடு போராடிக் கொண்டிருந்த எனக்கும், உயிரினங்களை அழிக்கும் அந்தகனுக்கு ஒப்பான அந்த வீரனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு பெரும்போர் நடந்தது.(9) என் கொடிமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. என் பார்ஷினி சாரதிகள் இருவரும் அவனால் {கர்ணனால்} கொல்லப்பட்டனர். யுயுதானன், திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), வீரச் சிகண்டி, திரௌபதியின் மகன்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் அவனால் {கர்ணனால்}, குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்யப்பட்டேன்.(10,11) இவர்களையும் {மேற்கண்டோரையும்}, தன் எதிரிகளில் எண்ணற்றோரையும் வென்ற பிறகு, வலிமையும், சக்தியும் கொண்டவனான அந்தக் கர்ணன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே {அர்ஜுனா}, போரில் உறுதியுடன் முயன்று கொண்டிருந்த என்னையும் வென்றான்.(12) அதன் பிறகு, என்னைப் பின்தொடர்ந்தே வந்து, என் பாதுகாவலர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் வென்ற அந்த முதன்மையான போர்வீரன் {கர்ணன்}, என்னிடம் பல்வேறு கடுமொழிகளைப் பேசினான்.(13) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பீமசேனனுடைய ஆற்றலின் காரணமாகவே நான் இன்னும் உயிரோடிருக்கிறேன். (அவனைக் குறித்து) இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டிய தேவையென்ன இருக்கிறது? அந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(14)
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கர்ணன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, பதிமூன்று {13} வருடங்களாக இரவில் தூக்கத்தையோ, பகலில் ஆறுதலையோ என்னால் அடைய முடிந்ததில்லை.(15) ஓ! தனஞ்சயா, கர்ணன் மீது கொண்ட வெறுப்பால் நிறைந்து நான் எரிகிறேன். வாத்ரிணசைப் பறவை போல, என் அழிவு நேரத்தை அறிந்தே நான் கர்ணனிடம் இருந்து தப்பி வந்தேன்[1].(16) போரில் கர்ணனின் அழிவை நான் எவ்வாறு சாதிக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே என் மொத்த காலமும் கடந்தது.(17) விழிப்பிலோ, உறக்கத்திலோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, (என் மனக்கண்ணால்) நான் எப்போதும் கர்ணனையே கண்டேன். நான் எங்கிருந்தாலும், இந்த அண்டமே கர்ணனால் நிறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது.(18) கர்ணனிடம் கொண்ட அச்சத்தால், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நான் எங்குச் சென்றாலும், அங்கே என் கண்களுக்கு எதிராகக் கர்ணன் நிற்பதையே கண்டேன்.(19) போரில் பின்வாங்காத அந்த வீரனால் {கர்ணனால்}, குதிரைகள் மற்றும் தேருடன் கூடிய நான் வெல்லப்பட்டாலும், அவனால் உயிரோடு விடப்பட்டேன்.(20)
[1] “என்னால் இந்த உவமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கறுத்த கழுத்தும், சிவந்த தலையும், வெளுத்த சிறகும் கொண்ட ஒரு வகைப் பறவை என்று வேறொரு பதிப்பில் அடிக்குறிப்பிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “தான் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்த ஒரு காண்டாமிருகத்தைப் போலவோ, யானையைப் போலவோ நான் இருந்தேன்” என்றிருக்கிறது. மேலும் பிபேக் திப்ராய் தன் அடிக்குறிப்பில், முதிர்ந்த யானைகளோ, காண்டாமிருகங்களோ இறப்பதற்காகக் கூட்டத்தை விட்டு விலகுவதைப் போல” என்று சொல்கிறார்.
போர்க்கள ரத்தினமான கர்ணன், இன்று என்னைச் “சீ” என்றதால், இந்த உயிரினாலோ, அரசாங்கத்தாலோ எனக்கு யாது பயன்?(21) போரில் பீஷ்மர், அல்லது கிருபர், அல்லது துரோணர் ஆகியோரிடம் எனக்கு நேராத ஒன்று, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நேர்ந்தது.(22) இதன் காரணமாகவே, ஓ! குந்தியின் மகனே, நான் உன்னிடம் உனது நலத்தைக் கேட்கிறேன். கர்ணனை நீ இன்று எவ்வாறு கொன்றாய் என்பதை எனக்கு விபரமாகச் சொல்வாயாக(23) போரில் கர்ணன், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனாவான். ஆற்றலில் அவன் யமனுக்கு நிகரானவனாவான். ஆயுதங்களில் அவன் ராமருக்கு {பரசுராமருக்கு} இணையானவனாவான். அவனை {கர்ணனை} எவ்வாறு நீ கொன்றாய்?(24) அவன் வலிமைமிக்கத் தேர்வீரனாகவும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கருதப்படுபவனாவான். அவன் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமாவான்.(25)
ஓ! இளவரசனே {அர்ஜுனா}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, திருதராஷ்டிரராலும், அவரது மகனாலும் {துரியோதனனாலும்}, உனக்காகவே எப்போதும் வழிபடப்பட்டான். அவனை எவ்வாறு நீ கொன்றாய்?(26) ஓ! அர்ஜுனா, ஓ! மனிதர்களில் காளையே, அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணனை உனக்குக் காலனாகவே கருதினான்.(27) ஓ! மனிதர்களில் புலியே, அந்தக் கர்ணன் போரில் எவ்வாறு உன்னால் கொல்லப்பட்டான்? ஓ! குந்தியின் மகனே, அந்தக் கர்ணன் எவ்வாறு உன்னால் கொல்லப்பட்டான்?(28) ஓ! மனிதர்களில் புலியே, அவனது நண்பர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ருரு மானின் தலையைக் கிழிக்கும் ஒரு புலியைப் போல, போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவனது தலையை நீ எவ்வாறு தாக்கி வீழ்த்தினாய்?(29) போரில் திசைப்புள்ளிகள் அனைத்திலும் எவன் உன்னைத் தேடினானோ, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உன்னைச் சுட்டிக் காட்டுபவனுக்கு யானையின் உடலளவுகளைக் கொண்ட ஆறு காளைகளால் இழுக்கப்படும் தேரைக் கொடுப்பதாக எவன் உறுதியளித்தானோ அந்தக் கர்ணன்,(30) தீய ஆன்மா கொண்டவனான அந்தக் கர்ணன், கங்க இறகுகளைக் கொண்ட உன் கூரிய கணைகளால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் கிடக்கிறானா என்று நான் உன்னைக் கேட்கிறேன். போரில் சூதன் மகனை {கர்ணனைக்} கொன்றதால், எனக்கு இனிமையான ஓர் உயர்ந்த பணியை நீ சாதித்திருக்கிறாய்.(31)
ஆணவம், செருக்கு, தன் வீரத்தில் தற்பெருமை ஆகியவற்றால் நிறைந்தவனும், போர்க்களத்தில் எங்கும் உன்னைத் தேடிக் கொண்டிருந்தவனுமான அந்தச் சூதன் மகனோடு {கர்ணனோடு} போரில் மோதி அவனை நீ கொன்றுவிட்டாயா?(32) ஓ! ஐயா, எப்போதும் உன்னை அறைகூவி அழைப்பவனும், உன் நிமித்தமாகவே, தங்கத்தாலானதும், எண்ணற்ற யானைகள், காளைகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான தேரைப் பிறருக்குக் கொடுக்க விரும்பிய அந்த இழிந்த பாவியை உண்மையில் போரில் நீ கொன்றுவிட்டாயா?(33) சுயோதனனின் {துரியோதனனின்} அன்புக்குரியவனும், வீரச்செருக்கால் போதையுண்டவனும், குருக்களின் சபையில் எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான அந்தப் பொல்லாத பாவியை இன்று உண்மையில் நீ கொன்றுவிட்டாயா?(34) போரில் மோதியவனும், குருதியில் நனைக்கப்பட்ட, உன் வில்லில் இருந்து உன்னால் ஏவப்பட்ட வானுலாவும் கணைகளால் தன் அங்கங்கள் சிதைக்கப்பட்டவனுமாக அந்த இழிந்தவன் இன்று களத்தில் கிடக்கிறானா? (இறுதியாக) திருதராஷ்டிரர் மகனின் இரு கரங்களும் முறிந்தனவா?(35)
செருக்கால் நிறைந்து, மன்னர்களின் சபையில், துரியோதனனை மகிழ்விப்பதற்காக “நான் பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்வேன்” என்று எப்போதும் தற்பெருமை பேசி மடமையினால் அவன் {கர்ணன்} உதிர்த்த அவ்வார்த்தைகள் நிறைவேறாமல் போயினவா?(36) ஓ! இந்திரனின் மகனே, “பார்த்தன் {அர்ஜுனன்} உயிரோடு வாழும் வரை தன் கால்களைக் கழுவுவதில்லை” என்று உறுதிமொழியேற்றவன் எவனோ, அந்தச் சூதன் மகன், சிறுமதிபடைத்த அந்தக் கர்ணன் இன்று உன்னால் கொல்லப்பட்டானா?(37) சபையில், குரு தலைவர்களுக்கு முன்னிலையில் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, வலிமையை இழந்தவர்களும், மிகவும் பலவீனமானவர்களும், வீழ்ந்துவிட்டவர்களுமான பாண்டவர்களை நீ ஏன் கைவிடக்கூடாது?” என்று பேசியவனும், தீய அறிவைக் கொண்டவனுமான அந்தக் கர்ணன்,(38) “கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} கொல்லாமல் போரில் இருந்து திரும்புவதில்லை“ என்று சொல்லி, உன் நிமித்தமாகச் சபதமேற்ற அந்தக் கர்ணன், பாவம் நிறைந்த அறிவைக் கொண்ட அந்தக் கர்ணன், கணைகளால் தன் உடல் துளைக்கப்பட்டு, இன்று போர்க்களத்தில் கிடக்கிறானா?(39) சிருஞ்சயர்களும், கௌரவர்களும், ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட போது நடந்ததும், போரில் என்னைப் பரிதாபமிக்க அந்த இழிந்த நிலையை அடையச் செய்ததுமான அந்தப் போரின் இயல்பை நீ அறிவாய். அந்தக் கர்ணனோடு மோதி, அவனை இன்று நீ கொன்றுவிட்டாயா?(40)
ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட சுடர்மிக்கக் கணைகளைக் கொண்டு, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கர்ணனின் பிரகாசமிக்கத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்துவிட்டாயா?(41) ஓ! வீரா {அர்ஜுனா}, இன்று கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்ட நான், (நீ அவனைக் கொன்றுவிடுவாய் என்று) உன்னை நினைத்தேன். கர்ணனைக் கொன்றதன் மூலம், அந்த என் நினைப்பை நீ உண்மையாக்கினாயா?(42) கர்ணனால் அளிக்கப்பட்ட பாதுகாப்பின் விளைவால், செருக்கால் நிறைந்திருக்கும் சுயோதனன் {துரியோதனன்} எப்போதும் நம்மைத் துச்சமாகவே கருதி வந்தான். உன் ஆற்றலை வெளிப்படுத்தி, நீ இன்று அந்தச் சுயோதனனின் புகலிடத்தை {துரியோதனனுக்குப் பாதுகாப்பை அளிக்கும் கர்ணனை} அழித்தாயா?(43) கௌவர்களின் முன்னிலையிலும், சபைக்கு மத்தியிலும், எள்ளுப்பதர்கள் என்று முன்பு எவன் நம்மை அழைத்தானோ, அந்தத் தீய ஆன்மா கொண்ட சூதன் மகனும், பெருகோபம் கொண்டவனுமான அந்தக் கர்ணனுடன் போரில் மோதி நீ இன்று அவனைக் கொன்றுவிட்டாயா?(44) சுபலன் மகனால் {சகுனியால்} சூதாட்டத்தில் வெல்லப்பட்ட யக்ஞசேனன் மகளை {திரௌபதியைப்} பலவந்தமாக இழுத்துவருமாறு துச்சாசனனுக்குக் கட்டளையிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தவன் எவனோ, அந்தத் தீய ஆன்மாகக் கொண்ட சூதன் மகன் இன்று உன்னால் கொல்லப்பட்டானா?(45)
பூமியில் உள்ள ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான நமது பாட்டன் பீஷ்மர், ரதர்களையும், அதிரதர்களையும் பட்டியலிட்டபோது, அவரால் அரைத் தேர்வீரனாக எவன் கணக்கிடப்பட்டானோ அந்தச் சிறுமதிகொண்ட கர்ணன் உன்னால் கொல்லப்பட்டானா?(46) ஓ! பல்குனா {அர்ஜுனா}, போரில் கர்ணனோடு மோதி இன்று நீ அவனைக் கொன்றாய் என்று என்னிடம் சொல்லி, பழி உணர்ச்சியில் பிறந்துதும், அவமானம் என்ற காற்றால் விசிறப்படுவதும், என் இதயத்தில் எரிந்து கொண்டிருப்பதுமான இந்த நெருப்பை நீ அணைப்பாயாக.(47) கர்ணன் கொல்லப்பட்ட செய்தியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். எனவே, அந்தச் சூதன் மகன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை எனக்குச் சொல்வாயாக. விருத்திரன் கொல்லப்பட்ட செய்தியுடன் வரும் இந்திரனின் வரவிற்காகக் காத்திருந்த தெய்வீக விஷ்ணுவைப் போலவே, ஓ! வீரா, நானும் உனக்காக இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்தேன்” என்றான் {யுதிஷ்டிரன்}".(48)
------------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -66ல் உள்ள சுலோகங்கள் : 48
ஆங்கிலத்தில் | In English |