Karna sped the Bhargava Weapon! | Karna-Parva-Section-64 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்; கிருஷ்ணனின் வலக்கரத்தைத் துளைத்த அஸ்வத்தாமன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; ஐந்திராயுதம் ஏவிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் சாரதியை வீழ்த்திய அர்ஜுனன்; தேரைச் செலுத்திக் கொண்டே போரிட்ட அஸ்வத்தாமன்; கடிவாளங்களை அறுத்த அர்ஜுனன்; தப்பி ஓடிய கௌரவப் படை; தடுத்து நிறுத்திய கர்ணன்; பார்க்கவ ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கர்ணனிடம் போரிட கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் கண்ட பிறகு, கர்ணனோடு போரிடலாம் என்று அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் தேர்ப்படை சூழ திடீரெனப் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(1) சௌரியைத் {கிருஷ்ணனைத்} தன் துணைவனாகக் கொண்ட வீரப் பார்த்தன், பொங்கும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, இயல்பான தூண்டலுடன் விரைந்து வந்த அஸ்வத்தாமனை இயல்பான தூண்டலுடனே தடுத்து நின்றான்.(2) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தான்.(3) கணைகளால் மறைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களையும் கண்ட (பாண்டவப் படையின்) பெருந்தேர்வீரர்களும், குருக்களும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தனர்.(4) அப்போது அர்ஜுனன் சிரித்துக் கொண்டே ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும் பிராமணனான அஸ்வத்தாமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தை அந்தப் போரில் கலங்கடித்தான்.(5)
உண்மையில் அம்மோதலில், துரோணர் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கொல்லும் விருப்பத்தில் அர்ஜுனனால் ஏவப்பட்ட அந்த ஆயுதங்கள் அனைத்தும் அந்தப் பெரும் வில்லாளியால் கலங்கடிக்கப்பட்டன.(6) அச்சம் நிறைந்த அந்த ஆயுதமோதலானது நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அகன்ற வாயைக் கொண்ட அந்தகனுக்கு ஒப்பானவனாகவே அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} நாங்கள் கண்டோம்.(7) முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தையும் நேரான கணைகளால் மறைத்த அவன் {அஸ்வத்தாமன்}, வாசுதேவனின் வலக்கரத்தை மூன்று கணைகளால் துளைத்தான்.(8) அப்போது அர்ஜுனன், தன்னைத் தாக்கும் அந்த உயர் ஆன்மா கொண்டவனின் {அஸ்வத்தாமனின்} குதிரைகள் அனைத்தையும் கொன்று[1], அந்தப் போரில் அச்சம் ஏற்படுத்தக்கூடியதும், அடுத்த உலகத்தை நோக்கிச் செல்வதும், பல்வேறு வகைகளிலான உயிரினங்கள் மிதந்து சென்றதுமான இரத்த ஆற்றால் பூமியை மறைத்தான். பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட கணைகளின் மூலம் கொல்லப்பட்ட அஸ்வத்தாமனின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான அந்தத் தேர்வீரர்கள் அழிவடைவதைப் பார்வையாளர்கள் அனைவரும் கண்டனர். அஸ்வத்தாமனும், தன் எதிரிகளைக் கொன்று, யமனின் ஆட்சிப்பகுதிகளுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு பயங்கரமான இரத்த ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(9-11)
[1] இவை அஸ்வத்தாமனின் படையைச் சேர்ந்த குதிரைவீரர்களாக இருக்க வேண்டும்.
பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரானது, துரோணர் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒருவருக்கொருவர் எந்தக் கருணையும் காட்டாமல் போரிட்ட போராளிகள், அங்கேயும், இங்கேயும் விரைந்து கொண்டிருந்தனர்.(12) குதிரைகளும், சாரதிகளும், கொல்லப்பட்ட தேர்கள், சாரதிகள் கொல்லப்படக் குதிரைகள், பாகர்கள் கொல்லப்பட்ட யானைகள் ஆகியவற்றின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பார்த்தனால் ஒரு பயங்கரமான பேரழிவு ஏற்பட்டது.(13) பார்த்தனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் தேர்வீரர்கள் உயிரை இழந்து கீழே விழுந்தனர். தங்கள் கட்டுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட குதிரைகள், அங்கேயும், இங்கேயும் ஓடின.(14) போர்க்கள ரத்தினமான பார்த்தனின் அந்த அருஞ்செயல்களைக் கண்ட துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, வெற்றியாளர்களின் முதன்மையான முன்னவனை {அர்ஜுனனை} வேகமாக அணுகி,(15) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதிமிக்க வில்லை அசைத்து, கூரிய கணைகள் பலவற்றால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(16) மீண்டும் வில் வளைத்த அந்தத் துரோணர் மகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த ஒரு கணையால் மார்பைக் குறி பார்த்து அர்ஜுனனைக் கொடூரமாகத் தாக்கினான்.(17)
அம்மோதலில், துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட வீரனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணை மாரிகளால் துரோணர் மகனைப் பலவந்தமாக மறைத்து, அவனது வில்லையும் அறுத்தான்.(18) வில்லறுபட்ட துரோணர் மகன், இடிக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட ஒரு முள் பதித்த கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு, அம்மோதலில் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் மீது வீசினான்.(19) எனினும், ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததுமான அந்த முள் பதித்த கதாயுதத்ததைத் திடிரென அறுத்தான்.(20) இவ்வாறு, பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அஃது, ஓ! மன்னா, இடியால் தாக்கப்பட்டு நொறுங்கிய ஒரு மலையைப் போலப் பூமியில் விழுந்தது.(21)
இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் தேர்வீரனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஐந்திர ஆயுதத்துடைய சக்தியின் துணை கொண்டு பீபத்சுவை {அர்ஜுனனை} மறைக்கத் தொடங்கினான்.(22) ஐந்திர ஆயுதத்தின் மூலம் ஆகாயத்தில் பரப்பப்பட்ட கணைமாரியைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வில்லான காண்டீவத்தை எடுத்து, இந்திரனால் உண்டாக்கப்பட்ட வலிமைமிக்க ஓர் ஆயுதத்தை அவனது நாண்கயிற்றில் பொருத்தி, அந்த ஐந்திரக் கணைமாரியை அழித்தான்.(23) ஐந்திர ஆயுதத்தால் உண்டான கணைமாரியைக் கலங்கடித்த பார்த்தன், (தன் கணைகளால்) துரோணர் மகனின் தேரை வேகமாக மறைத்தான். எனினும், பார்த்தனின் கணைகளால் மறைக்கப்பட்டாலும் அந்தத் துரோணர் மகன்,(24) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட அந்தக் கணைமாரியின் ஊடாக ஊடுவி, பின்னவனை {அர்ஜுனனை} அணுகி, ஒரு வலிமைமிக்க ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, திடீரென நூறு {100} கணைகளால் கிருஷ்ணனையும், முன்னூறு {300} குறுங்கணைகளால் {பிண்டிபாலங்களால்} அர்ஜுனனையும் துளைத்தான்.(25)
அப்போது அர்ஜுனன், ஒரு நூறு கணைகளால் தனது ஆசானின் மகனை {அஸ்வத்தாமனை} அவனது முக்கிய அங்கங்கள் அனைத்திலும் துளைத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, உமது போர்வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, துரோணர் மகனின் குதிரைகள், சாரதி, வில்லின் நாண் கயிறு ஆகியவற்றின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(26) அனைத்து முக்கிய அங்கங்களிலும் துரோணர் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு தன் எதிராளியின் {அஸ்வத்தாமனின்} சாரதியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(27) எனினும், கடிவாளங்களைத் தானே பிடித்துக் கொண்ட துரோணர் மகன், கணைகள் பலவற்றால் கிருஷ்ணனை மறைத்தான். பல்குனனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டே தன் குதிரைகளை வழிநடத்தியதால், அப்போது துரோணர் மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றலுடன் கூடிய செயல்பாடு மிக அற்புதமானாதாக இருந்தது. அந்தப் போரில் அவனது இந்த அருஞ்செயலை, ஓ! மன்னா, போர்வீரர்கள் அனைவரும் பாராட்டினர்.(29)
ஜயன் என்றும் அழைக்கப்பட்ட பீபத்சு, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் கத்தி முகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால், அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வேகமாக அறுத்தான்.(30) இதன் காரணமாக, ஏற்கனவே அர்ஜுனனுடைய கணைகளின் சக்தியால் பீடிக்கப்பட்டிருந்த அந்தத் துரோணர் மகனின் குதிரைகள் தப்பி ஓடின. அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது.(31) அதே வேளையில், வெற்றியை அடைந்த பாண்டவர்கள், மேலும் அதை மேம்படுத்த விரும்பி, உமது துருப்புகளின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளை ஏவியபடி அவற்றை எதிர்த்து விரைந்து சென்றனர்.(32) அப்போது, தார்தராஷ்டிரர்களின் அந்தப் பரந்த படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, அனைத்துப் போர்முறைகளையும் அறிந்தவர்களான உமது மகன்கள், சுபலனின் மகனான சகுனி மற்றும் கர்ணன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட வீரப் பாண்டவர்களால், ஓ! மன்னா, மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டது.(33,34)
அந்தப் படையை உமது மகன்கள் தடுக்க முயற்சித்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்ட அது களத்தில் நிற்கவில்லை.(35) உண்மையில், அனைத்துப் பக்கங்களிலும் போர்வீரர்கள் பலர் தப்பி ஓடிக் கொண்டிருந்ததன் விளைவால் அச்சத்தை அடைந்த உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படைக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது.(36) சூதன் மகன் {கர்ணன்}, “நில்லுங்கள், நிற்பீராக” என்று உரக்கக் கூச்சலிட்டாலும், உயர் ஆன்மப் போர்வீரர்கள் பலரால் கொல்லப்பட்ட உமது படையானது களத்தில் நிற்கவில்லை.(37) அப்போது, ஓ! ஏகாதபதி, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தார்தராஷ்டிரப் படையைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பாண்டவர்களால் பேரொலிகள் எழுப்பப்பட்டன.(38)
அப்போது துரியோதனன், கர்ணனிடம் அன்புடன் பேசி, “ஓ! கர்ணா, பாண்டவர்களால் அதிகமாகப் பீடிக்கப்பட்ட நமது படையைப் பார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இந்நேரத்திற்கு ஏற்றதைச் செய்வாயாக.(39,40) பாண்டவர்களால் முறியடிக்கப்பட்டோரான (நமது) போர்வீரர்களில் ஆயிரக்கணக்கானோர், ஓ! வீரா {கர்ணா}, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன்னை மட்டுமே அழைக்கின்றனர்” என்றான்.(41)
துரியோதனனின் இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட ராதையின் மகன் {கர்ணன்}, சிரிப்பவன் போல இருந்து கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(42) “ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, என் கரங்களின் ஆற்றலையும், என் ஆயுதங்களின் சக்தியையும் பார்ப்பீராக. நான் இன்று பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டுக்கள் அனைவரையும் இந்தப் போரில் கொல்வேன். ஓ! மனிதர்களில் புலியே, குதிரைகளுடன் கூடிய என் தேரைச் செலுத்துவீராக. நான் சொன்னது போலவே அனைத்தும் நடக்கும் என்பதில் ஐயமில்லை” என்றான்.(43)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் வீரம் கொண்ட வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பழைமையானதும், விஜயம் என்று அழைக்கப்பட்டதுமான முதன்மையான வில்லை எடுத்து,(44) அதில் நாணேற்றி, அந்த நாணை மீண்டும் மீண்டும் தேய்த்தான். தன் உண்மைத் தன்மை மற்றும் ஓர் உறுதிமொழி ஆகியவற்றைச் சொல்லி உறுதிகூறி, துருப்புகளைக் களத்தில் நிற்கச் செய்தவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தக் கர்ணன், பார்க்கவம்[2] என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஆயுதத்தைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(45) அவ்வாயுதத்தில் இருந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோடிக்கணக்கான கூரிய கணைகள் பாய்ந்தன.(46) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளால் சிறகமைந்தவையும், சுடர்மிக்கவையும், பயங்கரமானவையுமான அந்தக் கணைகளால் முற்றாக மறைக்கப்பட்ட பாண்டவப் படையால் எதையும் காண முடியவில்லை.(47) வலிமைமிக்கப் பார்க்கவ ஆயுதத்தால் அந்தப் போரில் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஓலங்கள் எழுந்தன.(48) ஓ! மன்னா, அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்காக விழும் தேர்களாலும், உயிரை இழுந்து விழும் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களாலும், ஓ! ஏகாதிபதி, பூமியானது நடுங்கத் தொடங்கியது. பரந்த பாண்டவப் படையானது ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை கலக்கமடைந்தது.(49,50)
[2] “கர்ணனுடைய ஆசானும், பிருகு குலத்தவருமான {பரசு} ராமரின் பெயரால் அழைக்கப்பட்டதாகும் அவ்வாயுதம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அதே வேளையில், எதிரிகளை எரிப்பவனும், போர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியுமான அந்தக் கர்ணன், தன் எதிரிகளை எரித்துக் கொண்டிருந்த போது, புகையற்ற நெருப்பொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(51) இவ்வாறு கர்ணனால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள் மற்றும் சேதிகள், ஒரு காட்டுத்தீயில் உணர்வையிழக்கும் யானைகளைப் போல அந்தக் களமெங்கும் தங்கள் உணர்வுகளை இழக்கத் தொடங்கினர்.(52) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் புலிகளைப் போலவே முழங்கிக் கொண்டிருந்தனர். பீதியடைந்து, அச்சத்தால் நடுங்கியவாறே போர்க்களத்தின் அனைத்துப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டிருந்த போராளிகளால் உண்டாக்கப்பட்ட ஓலமானது, அண்ட அழிவின் போது வாழும் உயிரினங்களின் ஓலங்களைப் போலப் பேரொலியாக இருந்தது.(53,54) சூதன் மகனால் {கர்ணனால்} அவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதைக் கண்டவையான, விலங்குகள், பறவைகள் முதலான உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(55)
அப்போது சூதன் மகனால் இவ்வாறு கொல்லப்பட்ட சிருஞ்சயர்கள், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் இருப்பவையான இறந்தோரின் ஆவிகள், தங்களைக் காப்பதற்காக யமனை அழைப்பதைப் போலவே, அர்ஜுனனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} மீண்டும் மீண்டும் அழைத்தனர். கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்ட துருப்புகளின் அந்த ஓலங்களைக் கேட்டவனும், பயங்கரமான பார்க்கவ ஆயுதம் இருப்புக்கு அழைக்கப்பட்டதைக் கண்டவனும், குந்தியின் மகனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வார்த்தைகளை வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னான்:(56-58)) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பார்க்கவ ஆயுதத்தின் ஆற்றலைப் பார். எவ்வழியாலும் போரில் அதைக் கலங்கடிக்க முடியாது.(59) இந்தப் போரில், ஓ! கிருஷ்ணா, சினத்தால் நிறைந்தவனும், ஆற்றலில் அந்தகனுக்கே ஒப்பானவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கடுமையான இத்தகு அருஞ்செயலைச் செய்து கொடிருப்பதையும் பார்.(60) அடிக்கடி தன் குதிரைகளைத் தூண்டும் அவன் {கர்ணன்} மீண்டும் மீண்டும் தன் கோபப்பார்வைகளை என் மீது செலுத்துகிறான். இந்தப் போரில் ஒருபோதும் என்னால் கர்ணனிடம் இருந்து தப்ப இயலாது[3].(61) உயிருடன் வாழும் மனிதன் போரில் வெற்றியையோ, வீழ்ச்சியையோ சந்திக்கலாம். எனினும், ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, இறந்தவனுக்கோ, மரணமே கூட வெற்றியே ஆகும். இறந்தவனுக்கு எவ்வாறு தோல்வி ஏற்படக்கூடும்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}[4].(62)
[3] “வங்கப்பதிப்பில் கர்ணஸ்ய பிரபலாயிதும் என்றும், பம்பாய்ப்பதிப்பில் கர்ணம் பிரதிபலாயிதும் என்றும் இருக்கின்றன. இவற்றுக்கிடையிலான பொருள் வேறுபாடு சிறியதுதான்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “அவனுடைய யுத்தத்தில் நான் ஓடக்கூடியவனாக மாட்டேன்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “நான் இந்தப் போரில் கர்ணனிடம் இருந்து ஓடிச் செல்லும் எந்த வழிகளையும் காணவில்லை” என்றிருக்கிறது. ஒரு போதும் நான் கர்ணனிடம் இருந்து தப்பி ஓடமாட்டேன் என்பதே இங்கே பொருளாக இருக்க வேண்டும்.[4] “இந்த வாக்கியத்தின் பொருளானது, “உயிரோடு இருந்து கொண்டே நான் கர்ணனைத் தவிர்த்தால் தோல்வி எனதாகும். மறுபுறம் அவனோடு மோதி நான் மரணத்தையே அடைந்தாலும் தோல்வி எனதாகாது” என்பதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “மனிதன் பிழைத்திருப்பானாகில் யுத்தத்தில் வெற்றி தோல்விகளை அடைகிறான். மரித்தவனுக்கு நாசமேயொழிய ஜயமேது?” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “ஒரு மனிதன் போரில் பிழைத்திருந்தால், வெற்றியோ, தோல்வியோ அவனுக்கு ஏற்படும். ஓ! ரிஷிகேசா, வெற்றியின் நிமித்தமாக இறந்து போன ஒருவனால் எவ்வாறு வெற்றியாளனாக முடியும்?” என்று இருக்கிறது.
பார்த்தனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கிருஷ்ணன், புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவனிடம், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இவ்வார்த்தைகளால் மறுமொழி கூறினான்:(63) “குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, கர்ணனால் சிதைக்கப்பட்டு ஆழமாகக் காயமடைந்திருக்கிறார். முதலில் அவரைக் கண்டு ஆறுதலளித்த பிறகு, ஓ! பார்த்த {அர்ஜுனா}, நீ கர்ணனைக் கொல்லலாம்” {என்று சொன்னான்}.(64) பிறகு, யுதிஷ்டிரனைக் காண விரும்பி அவனை நோக்கிச் சென்ற அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனும் களைப்படையட்டும் என்று கேசவன் நினைத்தான்.(65) கணைகளால் பீடிக்கப்பட்ட யுதிஷ்டிரனைத் தானும் காண விரும்பிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவனுடைய {கிருஷ்ணனுடைய} ஆணையின் பேரில் போரைத் தவிர்த்துவிட்டு அந்தத் தேரில் வேகமாகச் சென்றான்.(66) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் காணும் விருப்பத்தில் இவ்வாறு சென்று கொண்டிருந்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, படையின் ஒவ்வொரு பகுதியில் தன் கண்களைச் செலுத்தினாலும், தன் அண்ணனைக் {யுதிஷ்டிரனைக்} காண்பதில் தவறினான்.(67) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆசானின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} போரிட்டு, வஜ்ரதாரியாலும் {இந்திரனாலும்} தடுக்கப்பட முடியாத அந்த வீரனை {அஸ்வத்தாமனை} வென்ற பிறகு, இவ்வாறு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(68)
-------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 64-ல் உள்ள சுலோகங்கள் :68
கர்ண பர்வம் பகுதி 64-ல் உள்ள சுலோகங்கள் :68
ஆங்கிலத்தில் | In English |