Arjuna ensured Yudhishthira ! | Karna-Parva-Section-67 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : நடந்தவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; சம்சப்தகர்களுடன் தான் போரிட்டதையும், அஸ்வத்தாமன் குறுக்கிட்டதையும், தன்னால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் நுழைந்ததையும், கர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதத்தைத் தான் கண்டதையும் யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் கொல்வதாக யுதிஷ்டிரனிடம் உறுதிகூறிய அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கோபத்தில் நிறைந்திருந்த நேர்மையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், உயர் ஆன்ம அதிரதனும், எல்லையில்லா சக்தி கொண்டவனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பெரும் வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த யுதிஷ்டிரனிடம் மறுமொழியாக,(1) “இன்று சம்சப்தகர்களுடன் போரிடுகையில், குரு துருப்புகளின் முகப்பில் எப்போதும் செல்லும் துரோணர் மகன் {அஸ்வத்தாமர்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளை ஏவியபடியே திடீரென என் எதிரில் வந்தார்[1].(2) மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட என் தேரைக் கண்டதும், துருப்புகள் அனைத்தும் அதைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கின. அவர்களில் முழுமையாக ஐநூறு பேரைக் கொன்ற நான், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமரை} எதிர்த்துச் சென்றேன்.(3) பெரும் உறுதியோடு என்னை அணுகிய அந்த வீரர், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே} சிங்கத்தை எதிர்த்து வரும் யானைகளின் இளவரசனைப் போல என்னை எதிர்த்து விரைந்து, என்னால் கொல்லப்பட்டு வந்த கௌரவத் தேர்வீரர்களை மீட்க விரும்பினார்.(4) அப்போது, ஓ! பாரதரே, குருவீரர்களில் முதன்மையானவரும், நடுங்கச் செய்யப்பட இயலாதவருமான அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தப் போரில், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான கூரிய கணைகளால் என்னையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} பீடிக்கத் தொடங்கினார்.(5)
[1] “வங்க உரையில் இரண்டாம் சுலோகத்தின் இறுதிச்சொல் தவறாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. குருசைனியேராஜன் Kurusainyeraajan என்று பம்பாய் பதிப்பில் காணப்படுவதே சரியானதாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “நான் இப்போது ஸம்சப்தகர்களோடு போர்புரிந்து கொண்டிருக்கும் ஸமயத்தில், என் முன்னிலையில், குருசேனைக்கு முன்பாகத்தில் செல்லுந்தன்மையுள்ள அஸ்வத்தாமா சஸ்ப்பங்கள் போல விளங்குகிற பாணஸமூகங்களை இறைத்துக் கொண்டு விரைவாகத் தோன்றினார்” என்றிருக்கிறது.
என்னோடு {அவர்} போரிட்டபோது, எட்டு இளங்காளைகளால் இழுக்கப்படும் எட்டு வண்டிகள் அவரது நூற்றுக்கணக்கான கணைகளைச் சுமந்து வந்தன. அவை அனைத்தையும் அவர் என் மீது ஏவினார். ஆனால் நானோ, மேகங்களை அழிக்கும் காற்றைப் போல என் கணைகளால் அவரது கணைமாரியை அழித்தேன்.(6) பிறகு, திறன், பலம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவற்றோடு கூடிய அவர், மழைக்காலங்களில் நீர்த்தாரைகளைப் பொழியும் கார்மேகத்தைப் போலத் தன் காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட ஆயிரகணக்கான கணைகளை என் மீது ஏவினார்.(7) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளை இடப்புறத்தில் இருந்து ஏவுகிறாரா, வலப்புறத்தில் இருந்து எவுகிறாரா என்பதை நாங்கள் அறியாத வண்ணம் அவர் அந்தப் போரில் திரிந்தார், அதே போல அவர் {அஸ்வத்தாமர்} தமது கணைகளை எப்போது எடுத்தார், அவற்றை எப்போது விடுத்தார் என்பதையும் நாங்கள் அறியவில்லை.(8) உண்மையில், துரோணர் மகனின் வில்லானது இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே எங்களால் காணப்பட்டது. இறுதியாகத் துரோணர் மகன் ஐந்து கூரிய கணைகளால் என்னையும், மேலும் ஐந்து கூரிய கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தார்.(9) எனினும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, வஜ்ரத்தின் சக்தியைக் கொண்ட முப்பது கணைகளால் நான் அவரைப் பீடித்தேன். என்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {அஸ்வத்தாமர்}, விரைவில், ஒரு முள்ளம்பன்றியின் வடிவை ஏற்றார்.(10)
அவரது {அஸ்வத்தாமரது} அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்திருந்தன. போர்வீரர்களில் முதன்மையானோரான தன் துருப்பினர் குருதியால் மறைக்கப்பட்டு, என்னால் மூழ்கடிக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர், சூதன் மகனின் {கர்ணனின்} தேர்ப்படைப் பிரிவிற்குள் நுழைந்துவிட்டார்.(11) (பகைவரின் படைகளை) கலங்கடிப்பவனான கர்ணன், போரில் என்னால் மூழ்கடிக்கப்பட்ட துருப்புகளைக் கண்டு, யானைகளும், குதிரைகளும் அச்சமடைந்து ஓடுவதைக் கண்டு, ஐம்பது பெருந்தேர்வீரர்களுடன் என்னை வேகமாக அணுகினான். கர்ணனைத் தவிர்த்து, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வேகமாக வந்தேன்[2].(12) பாஞ்சாலர்கள் அனைவரும் கர்ணனைக் கண்டதால், சிங்கத்தின் மணத்தை {வாசனையை} அறிந்த பசுக்களைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கர்ணனை அணுகிய பிரபத்ரகர்களும், அகன்று விரிந்திருக்கும் காலனின் வாய்க்குள் நுழைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள்.(13) துன்பத்தில் இருந்த அந்தத் தேர்வீரர்களில், முழுமையாக ஆயிரத்து எழுநூறு பேரைக் கர்ணன் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவிட்டான். உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்} நம்மைக் காணும் வரை தன் உற்சாகத்தை இழக்கவில்லை.(14) முதலில் நீர் அஸ்வத்தாமருடன் போரிட்டு, அவரால் மிகவும் சிதைக்கப்பட்டீர். கர்ணனால் நீர் காணப்பட்ட பிறகே அதை நான் கேள்விப்பட்டேன். ஓ! நினைத்துப் பார்க்க முடியாத அருஞ்செயல்களைச் செய்பவரே, கொடூரனான கர்ணனினிடம் இருந்து வந்த பிறகு, (முகாமில்) நீர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பீர் என்றே நான் நினைத்தேன்.(15)
[2] வேறொரு பதிப்பில், “நான் அவர்களை நாசஞ்செய்து கர்ணனைத் துரத்திவிட்டு உம்மைப் பார்ப்பதற்காக விரைவுடன் வந்தேன்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரின் முன்னணியில் கர்ணனால் வெளிப்படுத்தப்பட்ட பேரற்புதமான (பார்க்கவ) ஆயுதத்தை நான் கண்டேன். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணனைத் தடுக்கச் சிருஞ்சயர்களில் எந்தப் போர்வீரனாலும் இப்போது இயலாது.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகியும், திருஷ்டத்யும்னனும், என் தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். வீர இளவரசர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜசும் என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(17) ஓ! பெரும் மகிமை கொண்டவரே, பகைவரின் படையில் இருப்பவனும், வீரனும், வெல்லப்பட முடியாத தேர்வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, இன்றைய இந்தப் போரில் காணப்பட்டால், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! பாரதரே, விருத்திரனுடன் மோதிய சக்ரனை {இந்திரனைப்} போலவே அவனுடன் {கர்ணனுடன்} நான் போரிடுவேன். வெற்றிக்கான போரில் நானும், சூதன் மகனும் போராடுவதை வந்து பாரும்.(18,19) வலிமைமிக்கக் காளையின் முகத்தை நோக்கி ஓடும் மனிதர்களைப்[3] போல அங்கே அந்தப் பிரபத்ரகர்கள் கர்ணனை நோக்கி விரைகின்றனர். அங்கே, ஓ! பாரதரே, ஆறாயிரம் இளவரசர்கள், சொர்க்கத்திற்காகப் போரில் தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(20)
[3] ஒரு பலமிக்கக் காளையை முன்னால் இருந்து எதிர்க்கக்கூடாது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் பலத்தை வெளிப்படுத்தி, கர்ணனோடு போரிட்டு, அவனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் இன்று நான் கொல்லவில்லையெனில், ஓ! மன்னர்களில் சிங்கமே {யுதிஷ்டிரரே}, தான் செய்த உறுதிமொழியை நிறைவேற்றாத ஒருவனுக்கு என்ன முடிவு ஏற்படுமோ, அதே முடிவு என்னையும் அடையட்டும்.(21) போரில் வெற்றி எனதே என எனக்கு ஆசி வழங்குமாறு நான் உம்மை இரந்து கேட்கிறேன். அதோ, தார்தராஷ்டிரர்கள் பீமரை விழுங்கப் போகின்றனர். ஓ! மன்னர்களில் சிங்கமே, சூதன் மகனையும் {கர்ணனையும்}, அவனது துருப்புகளையும், நம் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}".(22)
ஆங்கிலத்தில் | In English |