Fie on thy Gandiva ! | Karna-Parva-Section-68 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணன் உயிரோடிருப்பதை அறிந்து கோபமடைந்த யுதிஷ்டிரன் அர்ஜுனனை நிந்தித்தது; அர்ஜுனன் பிறந்த போது அசரீரி சொன்னதை நினைவுபடுத்தியது; பீமனைக் கைவிட்டு வந்தமைக்கு அர்ஜுனனை நிந்தித்துக் காண்டீவத்தைக் கிருஷ்ணனிடம் கொடுத்து, அர்ஜுனன் சாரதியாக வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; அர்ஜுனன் கருவிலேயே கலைந்திருக்கலாம் என நிந்தித்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் காண்டீவம், வலிமை, வீரம், தேர் ஆகிவயற்றை நிந்தித்த யுதிஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்டவனும் பிருதையின் மகனுமான அந்த யுதிஷ்டிரன், வலிமையும், சக்தியும் கொண்ட கர்ணன் இன்னும் உயிரோடு இருப்பதைக் கேட்டு, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} பெருங்கோபமடைந்தும், கர்ணனின் கணைகளால் எரிந்தும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! ஐயா, உன் படையானது, கௌரவமற்ற வழியில் வீழ்த்தப்பட்டுத் தப்பி ஓடியிருக்கிறது. கர்ணனைக் கொல்ல முடியாததால். அச்சமடைந்து, பீமனைக் கைவிட்டுவிட்டு இங்கே நீ வந்திருக்கிறாய்.(2) குந்தியின் கருவறைக்குள் நுழைந்து, அவளது கருவைத் தோல்வியுறச் செய்திருக்கிறாய். சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல இயலாமல், பீமனைக் கைவிட்டு வந்து முறையற்ற செயலைச் செய்திருக்கிறாய்.(3) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துவைத வனத்தில் இருக்கும்போது, ஒரே தேரில் சென்று கர்ணனைக் கொல்லப்போவதாக நீ என்னிடம் சொன்னாய். கர்ணன் மீது கொண்ட அச்சத்தால், கர்ணனைத் தவிர்த்து, பீமனைக் கைவிட்டுவிட்டு ஏன் இங்கு வந்தாய்?(4) துவைதவனத்தில், நீ என்னிடம், “ஓ! மன்னா, கர்ணனோடு என்னால் போரிட இயலாது” என்று சொல்லியிருந்தால், ஓ! பார்த்தா , சூழ்நிலைக்குத் தகுந்த வேறு ஏற்பாடுகளை நாங்கள் செய்திருப்போமே.(5)
ஓ! வீரா {அர்ஜுனா}, கர்ணனைக் கொல்வதாக உறுதியளித்துவிட்டு, நீ அந்த உறுதியைக் காத்தாயில்லை. எதிரிகளுக்கு மத்தியில் எங்களைக் கொண்டு வந்து, கடும் மண்ணில் {தரையில்} தூக்கி வீசி எங்களை ஏன் நீ நொறுக்குகிறாய்?(6) ஓ! அர்ஜுனா, நாங்கள் உன்னிடம் இருந்து பல்வேறு நல்ல பொருட்களையும், நன்மைகளையும் எதிர்பார்த்தே உனக்கு எப்போதும் ஆசிகளைச் சொன்னோம். எனினும், ஓ! இளவரசனே, ஒரு மரத்திடம் கனியை எதிர்பார்த்திருந்து, மலர்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றதைப் போல, அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீணானவை என்று {இப்போது} மெய்ப்பிக்கப்பட்டன.(7) அரசின் மீது பேராசை கொண்ட நாங்கள், இறுதியில் ஏமாற்றமடையும் வகையில், இறைச்சித் துண்டிற்குள் மறைந்திருக்கும் மீன்-முள்ளை {தூண்டில் முள்ளைப்} போலவோ, உணவில் பூசப்பட்ட நஞ்சைப் போலவோ, {இருப்பவனான} நீ அரசின் வடிவில் அழிவையே சுட்டியிருக்கிறாய்.(8) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பருவகாலத்தில் தேவர்களால் அனுப்பப்படும் மழையை எதிர்பார்த்துப் பூமியில் நம்பிக்கையுடன் தூவப்படும் விதையைப் போலவே உன்னை நம்பியே இந்தப் பதிமூன்று வருடங்களாக நாங்கள் வாழ்ந்துவிட்டோம்.(9)
ஓ! மூட அறிவைக் கொண்டோனே {அர்ஜுனா}, நீ பிறந்து ஏழு நாட்களில் வானத்தில் இருந்து ஒரு குரல் பிருதையிடம் {குந்தியிடம்}, இந்த வார்த்தைகளையே சொன்னது, “பிறந்திருக்கும் இந்த உனது மகன், வாசவனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருப்பான். தனது வீரப் பகைவர்கள் அனைவரையும் இவன் வெல்வான்.(10) உயர்ந்த சக்தியைக் கொண்ட இவன், காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்றாகத் திரண்டிருக்கும் தேவர்கள் அனைவரையும், பல்வேறு உயிரினங்களையும் வெல்வான். மத்ரர்கள், கலிங்கர்கள் மற்றும் கைகேயர்களை இவன் அடக்குவான். பல மன்னர்களுக்கு மத்தியில் வைத்துக் குருக்களை இவன் கொல்வான்.(11) இவனுக்கும் மேன்மையான வில்லாளி எவனும் இருக்க மாட்டான், எந்த உயிரினத்தாலும் இவனை வெல்ல இயலாது. புலன்களைத் தன் கட்டுக்குள்கொண்டு, அறிவின் கிளைகள் அனைத்திலும் திறனைப் பெறும் இவன் விரும்பிவிட்டால், உயிரினங்கள் அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவான்.(12) ஓ! குந்தி, உனக்குப் பிறந்திருக்கும் இந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன், அழகில் சோமனுக்கும், வேகத்தின் காற்றின் தேவனுக்கும் {வாயுவுக்கும்}, பொறுமையில் {உறுதியில்} மேருவுக்கும் {மேரு மலைக்கும்}, மன்னிக்கும் தன்மையில் {பொறுமையில்} பூமிக்கும், காந்தியில் சூரியனுக்கும், செழிப்பில் பொக்கிஷத் தலைவனுக்கும் {குபேரனுக்கும்}, வீரத்தில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, வலிமையில் விஷ்ணுவுக்கும் போட்டியாளனாக இருப்பான். அதிதியின் மகனான விஷ்ணுவைப் போலவே இவன் எதிரிகள் அனைவரையும் கொல்வான். அளவிலா சக்தி கொண்ட இவன், தன் எதிரிகளுக்கு ஏற்படுத்தும் அழிவினாலும், நண்பர்களுக்காகப் பெறும் வெற்றியாலும் கொண்டாடப் படுபவனாக இருப்பான். அதையும் தவிர, இவன் ஒரு குலத்தின் நிறுவுனனாக இருப்பான்” {என்றது வானத்தில் இருந்து வந்த அந்தக் குரல்}.(13,14)
சதசிருங்க மலைகளின் சிகரத்தில் தவசிகள் பலர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வானத்தில் இருந்து அந்தக் குரல் இவ்வாறு பேசியது. எனினும் அவையாவும் கடந்து விட்டன. ஐயோ, தேவர்களும் பொய்மைகளைப் பேசுவார்கள் என்பதையே இது காட்டுகிறது.(15) முனிவர்களில் முதன்மையானோர் பலரால் உன்னைக் குறித்து எப்போதும் புகழ்ச்சியாகச் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்ட நான், வெற்றியையும், செழிப்பையும் சுயோதனன் {துரியோதனன்} அடைவான் என்பதையோ, கர்ணனிடம் நீ அச்சங்கொள்வாய் என்பதையோ எதிர்பார்க்கவில்லை.(16) தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} கட்டமைக்கப்பட்டதும், கீச்சொலி கேட்காத அச்சுகளைக் கொண்டதும், குரங்கைச் சுமக்கும் கொடிமரத்தைக் கொண்டதுமான சிறந்த தேரில் நீ செல்கிறாய். வாரில் தங்கமும் பட்டும் இணைக்கப்பட்ட வாளை நீ தரித்திருக்கிறாய். இந்த உனது வில்லான காண்டீவம், முழுமையாக ஆறு முழம் நீளம் கொண்டதாகும். மேலும் கேசவனை {கிருஷ்ணனை} நீ சாரதியாகக் கொண்டிருக்கிறாய்.[1] ஓ! பார்த்தா, பிறகு ஏன் நீ கர்ணனிடம் கொண்ட அசத்தால் போரில் இருந்து வெளியே வந்தாய்.(17)
[1] வேறு பதிப்பில் இந்த இடத்தில் இன்னும் அதிகமான வரிகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு: “அர்ஜுனா, “நான் எவ்விதத்தினாலும் ஸூதபுத்திரனை எதிர்த்துப் போர்புரியமாட்டேன்” என்று அப்பொஉதே நீ எனக்குச் சொல்லியிருக்க வேண்டுமன்றோ? அவ்வாறு நீ சொல்லியிருந்தால் நான் ஸ்ருஞ்சயர்களையும், கேகயர்களையும் மற்ற நண்பர்களையும் யுத்தத்துக்கு அழைத்து வந்திருக்க மாட்டேன். இவ்வாறு நடந்து போன பிறகு, இப்பொழுது ஸூதபுத்திரனையும் அவ்வாறே அரசனான துரியோதனனையும் மற்றும் ஒன்று சேர்ந்து என்னை எதிர்த்துப் போர்புரிவதில் விருப்பமுள்ளவர்களாயிருப்பவர்களையும் அடக்குவதிலும் நான் எதைச் செய்யக் கூடியவனாவேன்? கோவிந்தரே, துர்யோதனனுடன் கூடின கௌரவர்களும் யுத்தஞ்செய்ய எண்ணங்கொண்டவர்களாக ஒன்றுசேர்ந்திருக்கிற மற்றவர்களுமாகிய இவர்களின் மத்தியில் நான் ஸூதபுத்திரனுடைய வசத்தை அடைந்தமையால், நான் உயிரோடிருப்பது இப்பொழுது நிந்திக்கத்தக்கது. எந்தப் பீமனால் மஹா பயங்கரமான யுத்தத்தில் நான் ரக்ஷிக்கப்பட்டேனோ அவன் ஒருவனே எனக்கு இப்பொழுது நாதன். அவன் ரோஷத்தோடு என்னையும் விடுவிதுப் பிறகு கூர்மையான பாணத்தால் கர்ணனையும் பிளந்தான். பீமஸேனன் கதாயுதத்தை நுனிக்கையிற்கொண்டு இரத்தத்தினால் நனைக்கப்பட்ட மேனியுடையவனாகிப் பிரளய காலத்தில் காலன் போல ரணகளத்தில் ஸஞ்சரித்துக் கொண்டு போரில் உயிரில் ஆசையைவிட்டு, ஒன்று சேர்ந்திருக்கிற கௌரவ முக்கியர்களோடு போர்புரிந்தான். இதோ பீமனுடைய பெரியசபதமானது தார்த்தராஷ்டிரர்களால் அடிக்கடி கேட்கப்படுகிறது. பார்த்தா, மஹாரதர்களுள் சிறந்தவனும் புரஷஸ்ரேஷ்டனும் யுத்தத்தில் பகைவர்களைக் கொல்பவனும் உன்னுடைய புதல்வனுமான அபிமன்யு இப்பொழுது ஜீவித்திருப்பானாகில் நான் யுத்தத்தில் அவமானத்தை அடையமாட்டேன். மேலும், யுத்தத்துக்கு முந்திச் செல்பவனும் மஹாஅஸ்திரங்களை அறிந்தவனும் உன்னையொத்தவனும் பீமனுடைய குமாரனுமான கடோத்கசன் யுத்தத்தில் உயிரோடிருப்பானாயின் நான் யுத்தத்தில் புறங்கொடுப்பவனாயிருக்கமாட்டேன். எவனை எதிர்த்து நமது பகைவர்களுடைய படையானது பயத்தினால் கவரப்பட்டதும் கண்களை மூடிக்கொண்டதுமாயிற்றோ, எவன் ஒருவனாக இருந்து கொண்டு இரவில் யுத்தம் செய்தானோ எவனிடமிருந்து பயந்து (பகைவர்கள்) யுத்தத்தை விட்டு ஓடினார்களோ அந்த மஹானுபாவனும், யுத்தத்தில் கர்ணனை எதிர்த்துப் பாணஸமூகங்களால் நன்றாக மயங்கச் செய்து, பிறகு தைரியத்தில் நிலைபெற்றிருக்கிற அந்த ஸூதபுத்திரனால் இந்திரனால் கொடுக்கப்பட்ட அந்தச் சக்தியினால் கொல்லப்பட்டான். (எல்லாம்) என்னுடைய பாக்கியமே. பூர்வஜன்மத்தில் செய்யப்பட்ட பாபங்கள் நிச்சயமாக யுத்தத்தில் பலிக்கின்றன. யுத்தத்தில் உன்னைத் துரும்பாக எண்ணித் துராத்மாவான கர்ணனால் நான் இவ்வண்ணம் துன்புறுத்தப்பட்டேன். சக்தியற்றவனும், பந்துக்களை இழந்தவனுமான ஒரு மனிதன் எவ்வாறு செய்யப்பட்டுவனோ அவ்வாறே நான் கர்ணனாலேயே செய்யப்பட்டேன். எந்த மனிதன் ஆபத்தை அடைந்திருப்பவனை விடுவிப்பனோ அவனே பந்து; ஸ்னேகத்துடன் கூடின ஸுஹ்ருத்து. இவ்வாறு புராதனர்களான ரிஷிகள் சொல்லுகிறார்கள். பெரியோர்களால் இந்தக் காரியம் எப்பொழுதும் செய்யப்பட்டுமிருக்கிறது. பொற்பிடியிடன் கூடின கத்தியையும், தனுர்வேதத்தையும் பனைமர அளவுள்ள காண்டீவத்தையும் தரித்தவனும் கேசவரால் நடத்தப்படுகின்றவனும் குந்தீபுத்திரனுமான நீ எவ்வாறு கர்ணனிடத்தினின்று விலகுவதற்கு எண்ணங்கொண்டாய்?” என்றிருக்கிறது.
ஓ! தீய ஆன்மா கொண்டவனே {அர்ஜுனா}, இந்த வில்லைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} கொடுத்துவிட்டு, நீ சாரதியானால், மருத்தர்களின் தலைவன் (சக்ரன் {இந்திரன்}) தன் வஜ்ரத்தால் அசுரன் விருத்திரனைக் கொன்றதைப் போல, கடுமைமிக்கக் கர்ணனைக் கேசவன் (இந்நேரம்) கொன்றிருப்பான்.(18) போரில் திரிபவனும், கடுமையானவனுமான ராதையின் மகனை உன்னால் தடுக்க முடியவில்லையெனில், ஆயுதங்களில் (அவற்றைப் பயன்படுத்துவதிலும், அவற்றின் அறிவிலும்) மேன்மையான வேறு மன்னர் எவருக்கும் இந்த உனது காண்டீவத்தை இன்று கொடுத்துவிடுவாயாக.(19) அது செய்யப்பட்டால், மகன்கள் மற்றும் மனைவியரற்றவர்களாகவும், அரசை இழந்து மகிச்சியற்றவர்களாகவும், அடியாழமற்ற நரகப் பேரிடரில் மூழ்கியவர்களாகவும் உலகம் நம்மைக் காணாது.(20) ஓ! இளவரசனே, போரில் இருந்து இவ்வாறு வெளியேறியதை விட, நீ குந்தியின் கருவறையில் உன் பிறப்பை அடையாமல் இருந்திருக்கலாம், அல்லது, ஓ! பொல்லாத ஆன்மாவே, கருவறையில் ஐந்தாவது மாதத்திலேயே கலைந்திருக்கலாம், அப்படியிருந்தால் அஃது உனக்கு நன்மையானதாக அமைந்திருக்கும்.(21) உன் காண்டீவத்திற்கு ஐயோ, உன் கரங்களின் வலிமைமைக்கு ஐயோ, வற்றாத உன் கணைகளுக்கு ஐயா. உன் கொடியில் இருக்கும் பெருவடிவக் குரங்கிற்கு ஐயோ, நெருப்புத் தேவனால் {அக்னியால்} உனக்கு வழங்கப்பட்ட உன் தேருக்கு ஐயோ” என்றான் {யுதிஷ்டிரன்}”[2].(22)
---------------------------------------------------------------------------[2] பம்பாய் பதிப்பில் இந்தப் பகுதியில் இன்னும் அதிகமாக 8 சுலோகங்கள் இருக்கின்றன. அவை உண்மையானவையா என்பதைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது. எனினும், நான் இத்தகு காரியங்களில் வங்க உரைகளைப் பின்பற்றுவதையே தேர்ந்தெடுத்திருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அந்த அதிகப்படியான வரிகள்தான் [1]ம் அடிக்குறிப்பில் இருக்கின்றன.
கர்ண பர்வம் பகுதி -68ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |