The oaths of Arjuna! | Karna-Parva-Section-74 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனைக் கொல்வதாகக் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் செய்த உறுதிமொழிகள்; கர்ணனைக் கொன்ற பிறகு நேரக்கூடியவற்றைக் குறித்துக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; இறுதியாகக் கிருஷ்ணனின் அனுமதியுடன் மீண்டும் தற்புகழ்ச்சி செய்து கொண்ட அர்ஜுனன்; போரிடப் புறப்பட்டது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே, கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, தன் கவலையை விட்டு உற்சாகம் நிறைந்தவனானான்.(1) காண்டீவத்தின் நாணை உருவி, அதை வளைத்த அவன் {அர்ஜுனன்}, கர்ணனின் அழிவுக்காகத் தன் வில்லைப் பற்றிக் கொண்டு, அந்தக் கேசவனிடம் இவ்வாறு பேசினான்,(2) “ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, உன்னை என் பாதுகாவலனாகக் கொண்டிருக்கும்போதும், கடந்த காலம் மற்றும் வருங்காலத்தை அறிந்தவனான நீ என்னிடம் இன்று நிறைவுடன் இருக்கும்போதும், வெற்றி எனதாகவே இருக்க வேண்டும்.(3) ஓ! கிருஷ்ணா, உன் துணையுடன் கூடிய என்னால் பெரும்போரில் ஒன்று சேர்ந்து வரும் மூன்று உலகங்களையும் அழித்துவிட முடியும் எனும்போது, கர்ணனைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?(4) ஓ! ஜனார்த்தனா, பாஞ்சாலர்கள் தப்பி ஓடுவதையும், போரில் கர்ணன் அச்சமற்றவனாகத் திரிவதையும் நான் பார்க்கிறேன்.(5) சக்ரனால் அழைக்கப்பட்ட பலமிக்க வஜ்ரத்தைப் போல, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கர்ணனால் இருப்புக்கு அழைக்கப்பட்ட பார்க்கவ ஆயுதம் அனைத்துத் திசைகளிலும் செல்வதை நான் பார்க்கிறேன்.(6) ஓ விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கர்ணன் என்னால் கொல்லப்படப்போவதும் {இந்தப் போரே}, பூமியுள்ளவரை அனைத்து உயிரினங்களாலும் பேசப்படப்போவதும் இந்தப் போரே.(7)
ஓ! கிருஷ்ணா, என் கரங்களால் செலுத்தப்படுபவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்படுபவையுமான முள்ளற்ற கணைகள் {விகர்ணங்கள்}, கர்ணனைச் சிதைத்து, அவனை யமனிடம் இன்று கொண்டு செல்லும்.(8) அரசுரிமைக்குத் தகாதவனான துரியோதனனை அரியணையில் நிறுவிய தமது அறிவை மன்னர் திருதராஷ்டிரர் இன்று சபித்துக் கொள்ளப் போகிறார்.(9) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, தமது அரசுரிமை, இன்பம், செழிப்பு, அரசு, நகரம் மற்றும் மகன்களைத் திருதராஷ்டிரர் இன்று இழக்கப் போகிறார்.(10) நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், ஓ! கிருஷ்ணா, கர்ணன் கொல்லப்பட்டதும், துரியோதனன் வாழ்விலும், அரசிலும் இன்று நம்பிக்கையற்றவனாவான்.(11) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் இந்திரனால் வெட்டப்பட்ட விருத்தினரைப் போல, என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படும் கர்ணனைக் காணும் மன்னன் துரியோதனன், அமைதியைக் கொண்டு வர நீ பேசிய வார்த்தைகளை இன்று மனத்தில் நினைக்கப் போகிறான்.(12)
ஓ! கிருஷ்ணா, என் கணைகளே {பகடை} பாச்சிகைகள் என்றும், என் காண்டீவமே அவற்றை வீசும் {பகடைக்} களம் என்றும், என் தேரே {பகடை} கட்டம் போட்ட துணி என்றும் சுபலனின் மகன் {சகுனி} இன்று அறியப் போகிறான்.(13) ஓ! கோவிந்தா, கூரிய கணைகளால் கர்ணனைக் கொன்று, குந்தி மகனின் {யுதிஷ்டிரரின்} நீண்ட உறக்கமின்மையை நான் அகற்றுவேன்.(14) என்னால் சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதன் பேரில், குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரர்} நிறைவை அடைந்து, உற்சாகம் நிறைந்த இதயத்துடன் என்றென்றைக்குமான மகிழ்ச்சியையும் இன்று அடையட்டும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தடுக்கப்பட முடியாததும், ஒப்பற்றதும், கர்ணனை உயிரிழக்கச் செய்வதுமான ஒரு கணையை நான் இன்று ஏவப் போகிறேன்.(16)
ஓ! கிருஷ்ணா, என்னைக் கொல்வது குறித்துக் கர்ணன், “பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாதவரை நான் என் கால்களைக் கழுவமாட்டேன்” என்று சபதம் செய்திருக்கிறான்.(17) ஓ! மதுசூதனா, அந்த இழிந்தவனின் இந்தச் சபதத்தைப் பொய்க்கச் செய்து, நேரான கணைகளால் அவனது உடலை அவனது தேரில் இருந்து நான் இன்று தூக்கி வீசுவேன்.(18) பூமியில் உள்ள பிற மனிதர்கள் அனைவரையும் போரில் இகழும் அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியைப் பூமி இன்று குடிக்கப் போகிறது.(19) திருதராஷ்டிரரின் ஒப்புதலுடன், சூதன் மகன் கர்ணன் தன் தகுதிகளைத் தானே தற்புகழ்ச்சி செய்து கொண்டு, “ஓ! கிருஷ்ணையே, இப்போது உனக்குக் கணவன் எவனும் இல்லை” என்று சொன்னான்.(20) என் கூரிய கணைகள் அவனது அந்தப் பேச்சைப் பொய்க்கச் செய்யும். கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போல அவனது உயிர்க்குருதியை அவை குடிக்கும்.(21) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட என்னால் செலுத்தப்படுபவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்படுபவையுமான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} கர்ணனை அவனது இறுதிப் பயணத்திற்கு அனுப்பப் போகின்றன.(22)
சபைக்கு மத்தியில், பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்} பேசிய அந்தக் கொடூர வார்த்தைகளுக்காக ராதையின் மகன் {கர்ணன்} இன்று மனம் வருந்துவான்.(23) அந்தச் சந்தர்ப்பத்தில் எள்ளுப்பதர்களாக இருந்தவர்கள், தீய ஆன்மா கொண்டவனும், வைகர்த்தனன் என்று வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், சூதன் மகனுமான கர்ணன் வீழ்ந்த பிறகு எள்ளாவார்கள்.(24) திருதராஷ்டிரர் மகன்களிடம் தன் தகுதிகளைத் தானே புகழ்ந்து கொள்ளும் வகையில், “நான் உங்களைப் பாண்டுவின் மகன்களிடம் இருந்து காப்பேன்” என்ற வார்த்தைகளைச் சொன்னான். அவனது அந்தப் பேச்சை என் கூரிய கணைகள் பொய்க்கச் செய்யப் போகின்றன.(25) இன்று வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “பாண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள் அனைவரையும் நான் கொல்வேன்” என்று சொன்ன கர்ணனை நான் கொல்வேன்[1].(26) ஓ! மதுசூதனா, எவனுடைய ஆற்றலை நம்பி தீய புத்தி கொண்ட திருதராஷ்டிரரின் செருக்குமிக்க மகன்கள் எப்போதும் எங்களை அவமதித்தார்களோ, அந்த ராதையின் மகனை, அந்தக் கர்ணனை நான் இன்று கொல்வேன்.(27)
[1] வேறொரு பதிப்பில், “ராதேயன் பாண்டவர்களை நிந்தித்துக் கொண்டு பாஞ்சாலியைப் பற்றி ஸபையின் நடுவில் சொல்லி கடுஞ்சொற்களை (நினைத்து) இப்பொழுது தாபத்தை அடைவான். “கிருஷ்ணையே! இந்தப் பாண்டவர்கள் எள்ளுப்பதர்கள், வீரியமில்லாதவர்கள்; ஆண்மையை இழந்தவர்கள், நான் உங்களைப் பாண்டவர்களிடத்திலிருந்து உண்டான பயத்தினின்று காக்கப்போகிறேன்” என்றும் சொன்னான். “பாரத! நான் இப்பொழுது புத்திரர்களுடன் கூடின பாண்டவர்களனைவர்களையும் கொல்லப்போகிறேன்” என்று அவன் சொல்லிய வசனத்தை என்னுடைய கூரிய பாணங்கள் ஸூரியபுத்திரனும், ஸூதபுத்திரனும் துராத்மாவுமான அவனைக் கொன்று பொய்யாகச் செய்யப்போகின்றன.
ஓ! கிருஷ்ணா, கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தங்கள் மன்னனோடு கூடிய தார்தராஷ்டிரர்கள், சிங்கத்தைக் கண்டு அஞ்சும் மான்களைப் போலப் பீதியடைந்து அனைத்துத் திசைகளிலும் இன்று ஓடப் போகிறார்கள்.(28) போரில் என்னால் கர்ணன் கொல்லப்பட்டதன் பேரில், மன்னன் துரியோதனன், தன் மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி இன்று மனம் வருந்த போகிறான்.(29) ஓ! கிருஷ்ணா, இன்று கர்ணன் கொல்லப்படுவதைக் கண்டு, திருதராஷ்டிரரின் கோபம் நிறைந்த மகன் {துரியோதனன்} போரில் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்று என்னை அறியட்டும்.(30) மன்னர் திருதராஷ்டிரர் மற்றும் அவரது மகன்கள், பேரப்பிள்ளைகள், அமைச்சர்கள், பணியாட்கள் ஆகியோரை நான் இன்று உறைவிடமற்றவர்களாக்குவேன்.(31) ஓ! கேசவா, நாரைகளும், பிற ஊனுண்ணும் பறவைகளும், என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்ட கர்ணனின் அங்கங்களுடன் இன்று விளையாடப் போகின்றன.(32) ஓ! மதுசூதனா, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராதையின் மகனான கர்ணனின் தலையை நான் இன்று வெட்டப் போகிறேன்.(33) ஓ! மதுசூதனா, விபாடங்கள் மற்றும் கத்தி முகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆகியவற்றால் தீய ஆன்மா கொண்ட ராதையின் மகனுடைய அங்கங்களைப் போரில் இன்று நான் அறுக்கப் போகிறேன்.(34)
வீர மன்னர் யுதிஷ்டிரர் தம் இதயத்தில் நீண்ட காலமாக உள்ள பெரும் வலியிலிருந்தும் {துன்பத்த்திலிருந்தும்}, பெரும் கவலையிலிருந்தும் இன்று விடுபடப் போகிறார்.(35) ஓ! கேசவா, ராதையின் மகனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் கொன்று தர்மனின் மகனான யுதிஷ்டிரரை நான் இன்று மகிழ்ச்சியுறச் செய்வேன்.(36) ஓ! கிருஷ்ணா, சுடர்மிக்க நெருப்பு, அல்லது நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பான கணைகளால் போரில் உற்சாகமற்ற வகையில் கர்ணனைப் பின்தொடர்ந்து செல்வோரை நான் இன்று கொல்வேன்.(37) ஓ! கோவிந்தா, தங்கக் கவசம் பூண்டவர்களான மன்னர்களை (அவர்களின் உடல்களைக்) கழுகின் இறகுகளைக் கொண்ட என் நேரான கணைகளைக் கொண்டு இன்று பூமியில் விரவிக் கிடக்கச் செய்வேன்.(38) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அபிமன்யுவின் எதிரிகள் அனைவரின் உடல்களையும் என் கூரிய கணைகளால் நொறுக்கி, அவர்களது தலைகளை இன்று அறுப்பேன்.(39) ஓ! கேசவா, தார்தராஷ்டிரர்கள் {திருதராஷ்டிரனின் குல தோன்றல்கள்} அற்ற பூமியை என் அண்ணனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நான் இன்று அளிப்பேன், அல்லது ஒருவேளை அர்ஜுனன் இல்லாத பூமியில் நீ நடந்து கொண்டிருப்பாய்.(40)
ஓ! கிருஷ்ணா, வில்லாளிகள் அனைவருக்கும், என் கோபத்திற்கும், குருக்களுக்கும், என் கணைகளுக்கும், காண்டீவத்திற்கும் பட்டிருக்கும் கடனில் இருந்து நான் இன்று விடுபடுவேன்.(41) ஓ! கிருஷ்ணா, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போலப் போரில் கர்ணனைக் கொன்று, பதிமூன்று வருடங்களாக அனுபவித்த துயரில் இருந்து நான் இன்று விடுபடுவேன்.(42) தங்கள் கூட்டாளிகளின் பணியை நிறைவேற்ற விரும்பியவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான சோமகர்கள், போரில் நான் கர்ணனைக் கொன்ற பிறகு, தங்கள் பணி நிறைவடைந்ததாக இன்று கருதப் போகிறார்கள்.(43) ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான் இன்று கர்ணனைக் கொன்று வெற்றியை அடைந்ததும், சிநியின் பேரன் {சாத்யகி} கொள்ளும் மகிழ்ச்சியின் அளவை நான் அறியமாட்டேன்.(44) போரில் கர்ணனையும், வலிமைமிக்கத் தேர்வீரனான அவனது மகனையும் கொன்று, பீமர், இரட்டையர்கள் (நகுலன், சகாதேவன்) மற்றும் சாத்யகி ஆகியோருக்கு நான் இன்று மகிழ்ச்சியை அளிக்கப் போகிறேன்.(45) ஓ! மாதவா, பயங்கரப் போரில் கர்ணனைக் கொன்று, திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோருடன் கூடிய பாஞ்சாலர்களுக்கு நான் பட்டிருக்கும் கடனை நான் இன்று அடைக்கப் போகிறேன்.(46) போரில் கௌரவர்களுடன் போரிட்டு, சூதன் மகனைக் கொல்லும் கோபம் நிறைந்த தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைவரும் இன்று காணப் போகிறார்கள்.(47)
மீண்டும் உன் முன்னிலையில் என் சொந்த பெருமைகளை நானே சொல்ல {தற்புகழ்ச்சி செய்ய என்னை} அனுமதிப்பாயாக. ஆயுத அறிவியலில் இவ்வுலகில் எனக்கு நிகராக எவனும் கிடையாது. ஆற்றலிலும் கூட எனக்கு ஒப்பானவன் எவன் இருக்கிறான்? பொறுமையில் எனக்கு இணையான வேறு எந்த மனிதன் இருக்கிறான்? கோபத்திலும், எனக்கு நிகராக வேறு எவனும் கிடையாது.(48,49) ஒன்றுகூடியவர்களான அசுரர்கள், தேவர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும், வில் தரித்தவனும், என் கரங்களின் ஆற்றலைத் துணையாகக் கொண்டவனுமான என்னால் வெல்ல முடியும்.(50) தனி ஒருவனாக என் வலிமையை வெளிப்படுத்தி, காண்டீவத்தில் இருந்து வெளிப்படும் என் கணைகளின் நெருப்பைக் கொண்டு, குருக்கள் மற்றும் பாஹ்லீகர்கள் அனைவரையும் தாக்கி, குளிர்காலத்தின் நெருக்கத்தில் உலர்ந்த புற்குவியலின் மத்தியில் உள்ள நெருப்பைப் போல அவர்களைப் பின்தொடர்பவர்களையும் நான் எரிப்பேன்.(51) இந்த அம்புக்குறிகளும், நாணில் பொருத்தப்பட்ட கணையுடன் வளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறந்த விற்குறிகளையும் என் உள்ளங்கையில் நான் கொண்டிருக்கிறேன். என் உள்ளங்கால் ஒவ்வொன்றிலும் தேர் மற்றும் கொடிமரத்தின் குறியீடுகள் இருக்கின்றன. போரிடச் செல்லும் என்னைப் போன்ற மனிதன் ஒருவன், எவனாலும் வெல்லப்பட முடியாது” என்றான் {அர்ஜுனன்}.(52) ரத்தச் சிவப்பான கண்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனும், வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, அச்யுதனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பீமனை மீட்கவும், கர்ணனின் உடலில் இருந்து அவனது தலையைக் கொய்யவும் வேகமாகப் போரிடச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(53)
--------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி-74ல் உள்ள சுலோகங்கள் : 53
ஆங்கிலத்தில் | In English |