Karna commended Arjuna unto Salya! | Karna-Parva-Section-79 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனைக் கண்டு களத்தில் குருதிப்புனலை உண்டாக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று கிருஷ்ணனனிடம் சொன்னது; அர்ஜுனனைக் கண்டு கர்ணனுக்குத் தகவல் தெரிவித்த சல்லியன் கர்ணனை அர்ஜுனனிடம் போரிட வற்புறுத்தியது; சல்லியனின் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்த கர்ணன், அர்ஜுனனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று சல்லியனுக்கு உறுதியளித்தது; சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு இணையான போர்வீரன் எவனும் இவ்வுலகில் இல்லை என்று சொன்ன கர்ணன்; அர்ஜுனனைக் கண்டதும் தன் இதயத்திற்குள் அச்சம் நுழைகிறது என்றும், பார்த்தனே வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்றும் சொன்னது; அர்ஜுனனைத் தடுக்கக் கௌரவர்களை ஏவிய கர்ணன்; அவர்கள் அனைவரையும் தாக்கிய அர்ஜுனன்; அஸ்வத்தாமனையும், கிருபரையும் தேரற்றவர்களாகச் செய்தது; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில நடந்த கடும் மோதல்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, (எதிரியின்) நால்வகைப் படைகளையும் கொன்று, அந்தப் பயங்கரப் போரில் கோபக்கார சூதன் மகனையும் {கர்ணனையும்} கண்டு,(1) சதை, ஊனீர் மற்றும் எலும்புகளுடன் கூடிய பழுப்பு நிறக் குருதி ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(2) மனிதத் தலைகளே அதன் பாறைகளும், கற்களுமாகின. யானைகளும், குதிரைகளும் அதன் கரைகளாக அமைந்தன. வீரப் போராளிகளின் எலும்புகளால் நிறைந்த அது, கருங்காக்கைகள் மற்றும் கழுகுகளின் அலறல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது. குடைகள் அதன் அன்னங்களாகின, அல்லது தெப்பங்களாகின. அந்த ஆறானது, தன் ஓடைகளில் மரங்களை இழுத்துச் செல்வதைப் போல வீரர்களைக் கொண்டு சென்றது.(3) (வீழ்ந்து கிடந்த) கழுத்தணிகள் அதன் தாமரைக்கூட்டங்களாகவும், தலைப்பாகைகள் அதன் சிறந்த நுரைகளாகவும் ஆகின. விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின; மனிதர்களால் நொறுக்கப்பட்ட கிரீடங்கள் அதன் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன[1].(4) கேடயங்களும், கவசங்களும் அதன் சுழல்களாகின, தேர்கள் அதன் படகுகளாகின. வெற்றியை விரும்பும் மனிதர்களால் எளிதாகக் கடக்கத்தக்கதாகவும், கோழைகளால் கடக்கப்பட முடியாததாகவும் அஃது இருந்தது.(5)
[1] “நரக்ஷுத்ரகபாலினிம் Narkshudrakapaalinim என்பது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கருத்தறிவதற்கான தற்காலிகமான ஏற்பாடாகவே இதை நான் அளிக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “ஹாரங்களாகிற தாமரை மடுக்களையுடையதும், சிறந்த தலைப்பாகைகளாகி நுரைகளுள்ளதும், விற்களும், பாணங்களும் த்வஜங்களுமுள்ளதும், மனிதர்களாகிற சிறிய ஓடுகளுடன் கூடியதும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “குழத்தணிகள் அந்த ஓடையில் தாமரைகளைப் போலிருந்தன; தலைப்பாகைகள் நுரைகளாக இருந்தன, நொறுங்கிய மண்டையோடுகள் மிதந்து கொண்டிருந்தன; விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் குருதியாறு பாய்ந்தது என்பதோடு அர்ஜுனன் கிருஷ்ணனிடம் பேசும் பகுதி வந்துவிடுகிறது.
அந்த ஆற்றைப் பாயச் செய்தவனும், பகைவரைக் கொல்பவனும், மனிதர்களில் காளையுமான பீபத்சு {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(6) “ஓ! கிருஷ்ணா, அதோ சூதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம் தெரிகிறது. அங்கே பீமசேனரும், பிறரும் அந்தப் பெரும் தேர்வீரனுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அங்கே கர்ணனிடம் அச்சம் கொண்ட பாஞ்சாலர்கள் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அங்கே கர்ணனோடு கூடிய மன்னன் துரியோதனன், பாஞ்சாலர்களை முறியடிக்கையில், தன் தலைக்கு மேல் வெண்குடையுடன் மிகப் பிரகாசமாகத் தெரிகிறான்.(8) அங்கே சூதன் மகனால் பாதுகாக்கப்படும் கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} ஆகியோர் அம்மன்னன் துரியோதனனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) ஓ! கிருஷ்ணா, அங்கே கடிவாளத்தைப் பிடிப்பதை நன்கறிந்தவரான சல்லியர், கர்ணனின் தேர்த்தட்டில் அமர்ந்து, அந்த வாகனத்தை வழிநடத்தியபடியே மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்.(10) நான் பேணிக்காத்த விருப்பமாகையால், என்னை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனிடம் கொண்டு செல்வாயாக. கர்ணனைக் கொல்லாமல் நான் இந்தப் போரில் திரும்புவதில்லை. அல்லது, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த ராதையின் மகன் {கர்ணன்}, நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் அழித்துவிடுவான்” என்றான் {அர்ஜுனன்}.(12)
இவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் தேரை உமது படைக்கு எதிராகவும், கர்ணனுக்கும், சவ்யசச்சினுக்கும் {அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு தனிப்போரை உண்டாக்கவும், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனை நோக்கிச் சென்றான்.(13) உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹரி {கிருஷ்ணன்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆணையின் பேரில், பாண்டவத் துருப்புகள் அனைத்திற்கும் (அந்தச் செயலால்) உறுதியளித்தபடியே தன் தேரில் சென்றான்.(14) பிறகு அர்ஜுனனுடைய வாகனத்தின் சடசடப்பொலியானது, வாசவனின் {இந்திரனின்} பேராற்றல் வாய்ந்த வஜ்ரத்தின் ஒலியைப் போல அந்தப் போரில் உரக்க எழுந்தது.(15) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியோடு உமது படையை வென்றான் {வென்றபடியே} (வந்தான்).(16)
வெண்குதிரைகளையும், கிருஷ்ணனைச் சாரதியாகவும் கொண்ட அர்ஜுனன் இவ்வாறு முன்னேறி வருவதைக் கண்ட மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் கொடிமரத்தையும் கண்டு, கர்ணனிடம்,(17) “தன் வாகனத்தில் வெண்குதிரைகளைப் பூட்டியவனும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டவனுமான அந்தத் தேர்வீரன் {அர்ஜுனன்}, போரில் தன் எதிரிகளைக் கொன்றவாறே அதோ வருகிறான். நீ யாரை விசாரித்தாயோ அவன் அதோ வருகிறான்.(18) அதோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இன்று உன்னால் அவனைக் {அர்ஜுனனைக்} கொல்ல முடியுமென்றால், அஃது எங்களுக்குப் பெரும் நன்மையைச் செய்ததாகும்.(19) ஓ! கர்ணா, உன்னோடு மோத விரும்பி, நமது போர்வீரர்களில் தலைமையானவர்களைக் கொன்றபடியே அவன் வருகிறான். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வேறு எவனாலும் அவன் தடுக்கப்பட முடியாதவனாவான். பாரதக் குலத்தின் அந்த வீரனை எதிர்த்து நீ செல்வாயாக.(20)
தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொல்லும் அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அங்கே தார்தராஷ்டிரப்படை அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பிளக்கிறது.(21) நம் போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, சினத்திலும், சக்தியிலும் பெருகி பெரும் வேகத்தோடு வரும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தோற்றத்திலிருந்து, அவன் உன்னோடு மோதவே {இவ்வாறு} வருகிறான் என நான் நினைக்கிறேன்.(22) கோபத்தில் சுடர்விடும் பார்த்தன் {அர்ஜுனன்}, உன்னையன்றி வேறு யாராலும்; அதிலும் குறிப்பாக (உன்னால்) விருகோதரன் {பீமன்} மிக அதிமாகப் பீடிக்கப்படும்போது தன் போர்விருப்பத்தை விடவே மாட்டான்.(23) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் உன்னால் மிக அதிகமாகச் சிதைக்கப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான் என்பதை அறிந்தும், சிகண்டி, சாத்யகி, பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன்,(24) திரௌபதியின் மகன்கள் (ஐவர்), யுதாமன்யு, உத்தமௌஜஸ், சகோதரர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை(25) {ஆகியோரின் அவலநிலையைக்} கண்டும், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} உன்னை எதிர்த்துத் தனித்தேரில் மூர்க்கமாக வந்து கொண்டிருக்கிறான்.(26)
பிற போராளிகளைத் தவிர்த்துவிட்டு அவன் {அர்ஜுனன்} நம்மை எதிர்த்தே மிக வேகமாக வருகிறான் என்பதில் ஐயமில்லை. ஓ! கர்ணா, (நம்மில் அவனை எதிர்க்கக் கூடியவர் எவரும் இல்லை என்பதால்) நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக.(27) (பொங்கும் கடலைத் தடுக்கும்) கரையைப் போல, போரில் அந்தக் கோபக்கார அர்ஜுனனைத் தடுக்க உன்னைத் தவிர வேறு எந்த வில்லாளியையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(28) அவனது பக்கங்களுக்கோ, பின்புறத்திற்கோ எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக நான் காணவில்லை. அவன் தனி ஒருவனாகவே உன்னை எதிர்த்து வருகிறான். இப்போது நீ வெற்றியடைய முயற்சிப்பாயாக.(29) போரில் இரு கிருஷ்ணர்களுடனும் {கருப்பர்களுடன்} மோத நீ ஒருவனே இயன்றவன். ஓ! ராதையின் மகனே, அ்ஃது உன் பொறுப்பேயாகும். எனவே தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(30) பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன், கிருபர் ஆகியோருக்கு நீ இணையானவனாவாய். இந்தப் பெரும்போரில் முன்னேறி வரும் அந்தச் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நீ தடுப்பாயாக.(31)
உண்மையில், ஓ! கர்ணா, தன் நாவை அடிக்கடி வீசும் பாம்புக்கோ, முழங்கும் காளைக்கோ, காட்டுப் புலிக்கோ ஒப்பான இந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனை} நீ கொல்வாயாக.(32) அங்கே அந்த மன்னர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒருவரையொருவர் கருதிப்பாராமல் வேகமாகத் தப்பி ஓடுகின்றனர்.(33) ஓ! சூதன் மகனே, ஓ! வீரா {கர்ணா}, போரில் பின்வாங்கிச் செல்லும் அந்த வீரர்களின் அச்சங்களை அகற்ற உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(34) ஓ! மனிதர்களில் புலியே, போரில் உன்னையே தஞ்சமாக அடைந்த அந்தக் குருக்கள் அனைவரும், உன் பாதுகாப்பை விரும்பி உன்னையே நம்பி நிற்கின்றனர்.(35) ஓ! ராதையின் மகனே, கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்களான வைதேஹர்கள், அம்பஷ்டர்கள், காம்போஜர்கள், நக்னஜித்கள் மற்றும் காந்தாரர்கள் ஆகியோரைப் போரில் வீழ்த்திய உன் துணிவைத் திரட்டிக் கொண்டு அந்தப் பாண்டுவின் மகனை எதிர்த்து நீ செல்வாயாக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் பெரும் ஆற்றலைத் திரட்டிக் கொண்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) எப்போதும் நிறைவுடன் இருக்கும் விருஷ்ணி குலத்து வாசுதேவனை {கிருஷ்ணனை} எதிர்த்துச் செல்வாயாக” என்றான் {சல்லியன்}. 37
கர்ணன் {சல்லியனிடம்}, “நீர் இப்போது வழக்கமான மனநிலையை அடைந்துவிட்டதாகவும், இப்போது உம்மை எனக்கு ஏற்புடையவராகவும் நான் காண்கிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} எந்த அச்சமும் அடைய வேண்டாம்.(38) என் கரங்களின் வலிமையை இன்று பாரும், என் திறனையும் பாரும். பாண்டவர்களின் வலிமைமிக்கப்படையையும், மனிதர்களில் சிங்கங்களான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் நான் இன்று தனியொருவனாகவே கொல்வேன்.(39) நான் இன்று அந்த வீரர்கள் இருவரையும் கொல்லாமால் களத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். அல்லது அவ்விருவரால் இன்று கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் நான் தூங்குவேன். போரில் வெற்றியானது உறுதியில்லாததாகும். கொன்றோ, கொல்லப்பட்டோ நான் இன்று என் காரியத்தை நிறைவேற்றுவேன்” என்றான் {கர்ணன்}.(40,41)
சல்லியன், “ஓ! கர்ணா, இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (அர்ஜுனன்) தனியொருவனாக இருந்தாலும் வெல்லப்பட்டமுடியாதவன் என்றே பெரும் தேர்வீரர்கள் அனைவரும் சொல்கின்றனர். மேலும், கிருஷ்ணனால் அவன் பாதுகாக்கப்பட்டிருக்கும்போது, அவனை வெல்ல எவன் துணிவான்?” என்றான்.(42)
கர்ணன், “நான் கேட்விப்பட்டவரை, இத்தகு மேன்மையான தேர்வீரன் எவனும் பூமியில் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட பார்த்தனை எதிர்கொள்ளப்போகும் என் ஆற்றலைக் காண்பீராக.(43) தேர்வீரர்களில் முதன்மையான இந்தக் குருகுல இளவரசன் {அர்ஜுனன்}, அவனது வெண்ணிறக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் போரில் திரிந்து வருகிறான். ஒருவேளை அவன் {அர்ஜுனன்} இன்று என்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கலாம். எனினும், கர்ணனின் மரணத்தோடு இவர்கள் (குருக்கள்) அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்பதை அறிவீராக.(44) இந்த இளவரசனின் கரங்கள் இரண்டும் எப்போதும் வியர்வையால் மறைக்கப்படுவதில்லை. அவை ஒருபோதும் நடுங்குவதுமில்லை. அவை பருத்தவையாகவும், வடுக்களோடு கூடியவையாகவும் இருக்கின்றன. ஆயுதப் பயன்பாட்டில் உறுதியாக இருக்கும் அவன், பெரும் திறனையும், பெரும் கரநளினத்தையும் கொண்டிருக்கிறான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு) இணையான போர்வீரன் எவனும் இல்லை.(45)
அவன் {அர்ஜுனன்} பெரும் எண்ணிகையிலான கணைகளை எடுத்து, அவை ஏதோ ஒன்று என்பதைப் போல அவன் அவற்றை ஏவுகிறான். வேகமாக வில்லின் நாண்கயிற்றில் அவற்றைப் பொருத்தி, இரு மைல்கள் {ஒரு குரோச} தொலைவிற்கு அவன் அவற்றை ஏவுகிறான். அவை எப்போதும் எதிரியின் மீது பாய்கின்றன. அவனுக்கு இணையாக வேறு எந்த வீரன் இவ்வுலகத்தில் இருக்கிறான்?(46) பெரும் சுறுசுறுப்புடன் கூடிய அந்த அதிரதன், கிருஷ்ணனைத் தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டவத்தில் தேவன் அக்னியை நிறைவு செய்தான். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயர் ஆன்மக் கிருஷ்ணன் தன் சக்கரத்தையும், பாண்டுவின் மகனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தையும் அடைந்தனர்.(47) அழிவேதும் அறியாதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அவன் அங்கேதான் வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் பயங்கரத் தேரையும், தெய்வீகமானவையும், வற்றாதவையுமான தன்னிரு அம்பறாத்தூணிகளையும், இன்னும் பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் நெருப்புத் தேவனிடம் {அக்னி தேவனிடம்} இருந்து அடைந்தான்.(48) இந்திரலோகத்தில் அவன் தன் சங்கான தேவதத்தத்தை அடைந்து, எண்ணற்ற தைத்தியர்களையும், காலகேயர்கள் அனைவரையும் கொன்றான். அவனுக்கு மேன்மையானவனாக இவ்வுலகில் எவன் இருக்கிறான்?(49) மகிமைமிக்க ஆன்மா கொண்ட அவன், நல்லதொரு போரில் மகாதேவனை {சிவனை} நிறைவு செய்து, அவனிடமிருந்து பயங்கரமானதும், வலிமைமிக்கதும், மூவுலகங்களையும் அழிக்கவல்லதுமான பாசுபத ஆயுதத்தை அடைந்தான்.(50)
பல்வேறு லோகபாலர்களும் ஒன்றாக இணைந்து அளவிலா சக்தியைக் கொண்ட தங்கள் ஆயுதங்களை அவனுக்குக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டே அந்த மனிதர்களில் சிங்கம் போரிட ஒன்றாகச் சேர்ந்து வந்த அசுரர்களான காலகஞ்சர்களை வேகமாக அழித்தான்.(51) அதே போலவே, விராடனின் நகரத்திலும், ஒரே தேரில் தனியொருவனாக வந்து நம் அனைவரையும் வென்று, நம்மிடமிருந்த கால்நடைச் செல்வத்தைப் பறித்து, முதன்மையான தேர்வீரர்களின் ஆடைகளையும் (அவற்றின் பகுதிகளையும்) எடுத்துக் கொண்டான்.(52) விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், இத்தகு சக்தியையும், பண்புகளையும் கொண்டவனுமான அந்த வீரனை அறைகூவி அழைப்பதால், ஓ! சல்லியரே, துணிவின் எல்லையில் உலகம் அனைத்திலும் முதன்மையான ஒருவனாக நான் என்னைக் கருதிக் கொள்கிறேன்.(53) மேலும், எவன் நாராயணனோ, எவன் எதிரியற்றவனோ, எவனது பண்புகள், உலகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பத்தாயிரம் வருடங்களானாலும் சொல்லி முடியாதோ, அந்த மதங்கொண்ட சக்தியை உடையவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு எப்போதும் வெற்றியடைபவனுமான அந்தக் கேசவனால் {கிருஷ்ணனால்} அவன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான். ஒரே தேரில் அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் கண்டு, வீரத்துடன் சேர்ந்து என் இதயத்திற்குள் அச்சமும் நுழைகிறது[2].(54,55)
[2] “சில வங்க உரைகளில் ஜாயதே அசாத்தியசஞ்சா Jayate – asaaddhyasancha என்று இருக்கிறது. உச்சரிப்பில்லா a ஆ என்ற அந்த இறுதி எழுத்துக்கு எதிர்மறை பொருளுண்டு. கர்ணன் வீரத்திற்குறைந்தவனில்லை என்றாலும், அவனது இதயத்துக்குள்ளும் அச்சம் நுழைந்தது என்பதே இங்கே பொருள். ஒரே தேரில் கிருஷ்ணர்கள் இருவரையும் காணும் அவனது உணர்வு குழப்பமானதாக இருக்கிறது என்று கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், ஒரு ரதத்தில் சேர்ந்திருப்பவர்களான கிருஷ்ணார்ஜுனர்களைப் பார்த்தும் எனக்குப் பயமும் நடுக்கமும் உண்டாகவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் ஒரே தேரில் கண்டதும், நம்பிக்கையின்மையாலும், துணிவாலும் நான் வழிநடத்தப்படுகிறேன்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “இரு கிருஷ்ணர்களையும் சேர்ந்தாற்போல ஒரே தேரில் காண்பதால், அச்சம் மற்றும் வீரம் ஆகிய இரண்டும் என் இதயத்தில் உற்பத்தியாகிறது" என்றிருக்கிறது.
பார்த்தனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன், அதே வேளையில், சக்கரத்தைக் கொண்ட மோதல்களில் நாராயணன் ஒப்பற்றவனாவான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} இவ்வாறானவர்களே. உண்மையில், இமய மலைகள் அவற்றின் இருப்பில் இருந்து நகரலாம், ஆனால் இவ்விரு கிருஷ்ணர்களும் நகரார்கள்.(56) அவ்விருவரும் வீரர்களாகவும், பெரும் திறனைக் கொண்டவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் உறுதிமிக்கவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வைரத்தாலான உடலைக் கொண்டவர்களாக {பலசாலிகளாக} இருக்கிறார்கள்.(57) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டு மகனுடன் போரிட வேண்டும் என்று நான் பேணிக்காத்து வந்த விருப்பம் இன்று தாமதமில்லாமல் நிறைவேறப் போகிறது. அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதும், அழகானதுமான அந்தப் போர் விரைவில் நடக்க இருக்கிறது. போரில் இன்று அவ்விருவரையும் நான் வீழ்த்துவேன், அல்லது அந்த இரு கிருஷ்ணர்களும் இன்று என்னை வீழ்த்துவார்கள்” என்றான் {கர்ணன்}.(58) இவ்வார்த்தைகளைச் சல்லியனிடம் சொன்னவனும், பகைவர்களைக் கொல்பவனுமான கர்ணன், அந்தப் போரில் மேகங்களின் கர்ஜனையைப் போல உரத்த முழக்கங்களைச் செய்யத் தொடங்கினான். பிறகு, குருக்களில் முதன்மையான உமது மகனை {துரியோதனனை} அடைந்து, அவனால் மரியாதையாக வணங்கப்பட்ட கர்ணன், அந்த இளவரசனிடமும் {துரியோதனனிடமும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்களான கிருபர் மற்றும் போஜத் தலைவன் கிருதவர்மன் ஆகியோரிடமும், தன் மகனோடு கூடிய காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் சொந்தத் தம்பி மற்றும் காலாட்படை, குதிரை, மற்றும் யானை வீரர்கள் ஆகியோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(60)
அவன் {கர்ணன்}, “அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனை நோக்கி விரைவீராக, பூமியின் தலைவர்களே, சுற்றிலும் உள்ள பாதைகளை மறைத்து, முயற்சியால் அவர்களைக் களைப்படையச் செய்து, ஆழமாக அவர்களைச் சிதைத்தப்பிறகு, எளிதாக அவர்களைக் கொல்லலாம்” என்றான்.(61) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்த முதன்மையான வீரர்கள், அர்ஜுனனைக் கொல்லும் விருப்பத்துடன் அவனை எதிர்த்து வேகமாகச் சென்றனர். அப்போது கர்ணனின் ஆணைக்குக் கீழ்ப்படிந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்தப் போரில் எண்ணற்ற கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கத் தொடங்கினர்.(62) பெரும் அளவிலான நீரைக் கொண்ட பெருங்கடல் ஆண் {நதிகள்} மற்றும் பெண் {நதங்கள் = ஓடைகள்} ஆறுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதைப் போலவே, அர்ஜுனன் அந்தப் போரில் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் எதிர்கொண்டான்.(63) அவன் எப்போது தன் சிறந்த கணைகளை வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை அவனது எதிரிகளால் காண முடியவில்லை. தனஞ்சயனால் ஏவப்பட்ட கணைகளால் துளைக்கப்பட்டுத் தொடர்ச்சியாக உயிரையிழந்து கீழே விழும் மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் மட்டுமே அங்கே காணக்கூடியனவாக இருந்தன.(64) நோயுற்ற கண்களைக் கொண்ட மனிதர்களால் சூரியனைப் பார்க்க முடியாததைப் போலவே, அந்தச் சந்தர்ப்பத்தில் காண்டீவத்தையே அழகான வட்டிலாகவும், கணைகளையே தன் கதிர்களாகவும் கொண்டவனும், யுக முடிவில் எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனின் சக்தியைக் கொண்டவனுமான ஜயனை {அர்ஜுனனைக்} கௌரவர்களால் பார்க்கவும் முடியவில்லை.(65)
சிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், தன் கணை மாரியால், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் தன் மீது ஏவப்பட்ட சிறந்த கணைகளை அறுத்தான். பதிலுக்கு அவன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை முழுமையான வட்டமாக வளைத்து எண்ணற்ற கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(66) சூரியனின் கடுங்கதிர்கள், ஜியேஷ்ட {ஆனி} மற்றும் ஆஷார {ஆடி} மாதங்களில் (பூமியின்) நீரை எளிதாக வற்ற செய்வதைப் போலவே, ஓ மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனும், தன் எதிரிகளின் கணைகளைக் கலங்கடித்து உமது துருப்புகளை எரித்தான்.(67) அப்போது கிருபர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் கணை மாரிகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} தன் கணைகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். உண்மையில், அவர்கள் அனைவரும், மலை மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அவன் மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர்.(68) எனினும் அந்தப் பாண்டுவின் மகன், பெரும் சுறுசுறுப்புடனும், வேத்துடனும் கூடியவனாக, தன்னைக் கொல்லும் விருப்பத்துடன் கூடிய அந்தச் சாதனைப் போர்வீரர்களால் அந்தப் பயங்கரப் போரில் பெருங்கவனத்துடன் தன் மீது ஏவப்பட்ட அந்தச் சிறந்த கணைகளைத் தன் கணைகளால் அறுத்து, தன் எதிராளிகள் ஒவ்வொருவரின் மார்பையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(69) கணைகளையே தன் கடுங்கதிர்களாகக் கொண்ட அந்த அர்ஜுனச் சூரியன், பிரகாசமான ஒளிவட்டமாக அமைந்த காண்டீவத்தை முழுதாக வளைத்து, தன் எதிரிகளை எரித்த போது, ஜியேஷ்ட மற்றும் ஆஷார மாதங்களில் தன் பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(70)
அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பத்து முதன்மையான கணைகளால் தனஞ்சயனையும், மூன்றால் கேசவனையும், நான்கால் தனஞ்சயனின் நான்கு குதிரைகளையும் துளைத்து, அர்ஜுனனின் கொடியிலிருந்த குரங்கின் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்தான்.(71) இவையாவற்றுக்காகவும் தனஞ்சயன் தன் எதிராளியின் கையில் முழுமையாக வளைக்கப்பட்டிருந்த வில்லை அறுத்து, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {அஸ்வத்தாமனின்} சாரதியுடைய தலையையும், நான்கு பிற கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி, இறுதியாகத் தன் எதிரியின் தேரில் இருந்த கொடிமரத்தை மூன்று பிற கணைகளால் வீழ்த்தினான்.(72) அப்போது கோபத்தால் நிறைந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தக்ஷகனின் உடலைப் போலப் பிரகாசமானதும், விலைமதிப்புமிக்கதும், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் மலையின் அடிவாரத்தில் பிடிபட்ட ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(73) பூமியில் நின்றவாறே அந்த வில்லுக்கு நாண்பொருத்தி, ஒன்றன் பின் ஒன்றாகக் கணைகளையும், ஆயுதங்களையும் வெளியே எடுத்தவனும், பல சாதனைகள் விஞ்சி நின்ற போர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அவ்விருவரையும் மிக அருகில் இருந்து பல கணைகளால் துளைத்தான்.(74) வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர், போஜன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் போரின் முகப்பில் நின்று கொண்டு, அந்தப் பாண்டவர்களில் காளை மீது பாய்ந்து, இருளை அகற்றுபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போல அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(75)
ஆயிரங்கரங்கள் கொண்டோனுக்கு (கார்த்தவீரியனுக்கு) இணையான ஆற்றலைக் கொண்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் தன் கணைகளை (அசுரன்) பலியின் மீது பொழிந்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலக் கணை பொருத்தப்பட்ட கிருபரின் வில், அவரது குதிரைகள், அவரது கொடிமரம் மற்றும் அவரது சாரதியின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(76) பார்த்தனின் கணைகளால் ஆயுதங்கள் அழிக்கப்பட்டவரும், அந்தப் பெரும்போரில் தன் கொடிமரமும் நொறுக்கப்பட்டவருமான கிருபர், முன்பு கங்கையின் மைந்தனான பீஷ்மர், (அவர் வீழ்ந்த நாளில்) இதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரனுடைய எத்தனை கணைகளால் தாக்கப்பட்டாரோ அதே அளவுக்கு ஆயிரக்கணக்கான பல்வேறு கணைகளால் அர்ஜுனானால் பீடிக்கப்பட்டார்.(77) அப்போது அந்த வீரப் பார்த்தன், முழங்கிக் கொண்டிருந்த உமது மகனின் கொடிமரத்தையும், வில்லையும் தன் கணைகளால் அறுத்தான். அடுத்ததாகக் கிருதவர்மனின் அழகிய குதிரைகளை அழித்த அவன், பின்னவனின் {கிருதவர்மனின்} கொடிமரத்தையும் அறுத்தான்.(78) பிறகு அவன், பகைவரின் படையில் இருந்த யானைகளையும், குதிரைகளோடு கூடிய தேர்களையும், சாரதிகளையும், விற்கள் மற்றும் கொடி மரங்களையும் பெரும் வேகத்தோடு அழிக்கத் தொடங்கினான். அதன் பேரில் அந்த உமது பரந்த படையானது, நீர் மோதும் ஏரிக்கரைகளைப் போல நூறு பகுதிகளாகப் பிளந்தது.(79)
அப்போது அர்ஜுனனின் தேரை வேகமாகத் தூண்டிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனால் பீடிக்கப்பட்ட எதிரிகள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான்.(80) பிறகு ஒரு மோதலை விரும்பிய பிற வீரர்கள், விருத்திரனைக் கொன்று சென்ற இந்திரனைப் போலப் பெரும் வேகத்தோடு சென்று கொண்டிருந்த தனஞ்சயனை, உயர்ந்த கொடிமரங்களுடன் நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தேர்களோடு பின்தொடர்ந்து சென்றனர்.(81) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரர்களான சிகண்டி, சாத்யகி, இரட்டையர்கள் ஆகியோர் தனஞ்சயனின் திசையிலேயே சென்று, எதிரிகளைத் தடுத்து, கூரிய கணைகளால் அவர்களைத் துளைத்து, பயங்கரமான முழக்கங்களைச் செய்தனர்.(82) பிறகு குரு வீரர்களும், சிருஞ்சயர்களும் சினத்தால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு, பழங்காலத்தின் பெரும்போர் ஒன்றில் அசுரர்களும், தேவர்களும் போலப் பெரும் சக்தி கொண்ட நேரான கணைகளால் ஒருவரையொருவர் கொன்றனர்.(83) எதிரிகளைத் தண்டிப்பவர்களான யானைவீரர்கள், குதிரை வீரர்கள், தேர் வீரர்கள் ஆகியோர் அனைவரும் வெற்றி பெரும் விருப்பத்தாலோ, சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டிய பொறுமையின்மையாலோ ஈர்க்கப்பட்டு, வேகமாகக் களத்தில் விழுந்தனர். பெரும் முழக்கங்களைச் செய்தபடியே அவர்கள் நன்கு ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் துளைத்துக் கொண்டனர்.(84) பெரும் துணிச்சலைக் கொண்ட அந்த உயர்ஆன்ம போர்வீரர்கள், அங்கே அந்தப் பயங்கரப் போரில் இருளை உண்டாக்கியதன் விளைவால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் இருளில் மூழ்ந்து அந்தச் சூரியனின் பிரகாசமே முற்றாக முறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(85)
--------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -79ல் உள்ள சுலோகங்கள் : 85
ஆங்கிலத்தில் | In English |