Kauravas driven by Arjuna! | Karna-Parva-Section-80 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனின் படைகளைத் தவிர்த்துவிட்டு, பீமனைக் காக்க விரைந்த அர்ஜுனன்; அர்ஜுனனால் கௌரவப்படைக்கு ஏற்பட்ட அழிவு; தப்பி ஓடிய கௌரவர்கள்; பீமனுடன் சிறிது நேரம் ஆலோசித்த அர்ஜுனன்; கௌரவர்களை விரட்டி அவர்களைப் பூமியில் தள்ளிய அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குரு படையின் முதன்மையான வீரர்கள் பலரால் தாக்கப்பட்டு, (அந்தத் தாக்குதலால்) மூழ்குபவன் போலத் தெரிந்த குந்தியின் மகனான பீமனை மீட்க விரும்பிய தனஞ்சயன் {அர்ஜுனன்},(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} துருப்புகளைத் தவிர்த்துவிட்டு, (பீமனை எதிர்த்துக் கொண்டிருந்த) அந்தப் பகைவீரர்களைத் தன் கணைகளால் காலனின் உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினான்[1].(2) அர்ஜுனன் அடுத்தடுத்து பொழிந்த கணை மழையால், வானம் கணைகள் மூட்டத்துடன் காணப்பட்ட அதே வேளையில் உமது படையை {பாண்டவப் படையின்} பிறர் கொல்வதும் காணப்பட்டது.(3) இறகு படைத்த உயிரினங்களின் அடர்த்தியான கூட்டத்திற்கு ஒப்பான கணைகளால் ஆகாயத்தை நிறைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் குருக்களின் யமனாகவே ஆனான்.(4) தன் அகன்ற தலை மற்றும் தட்டைத் தலை கணைகள் {பல்லங்கள்}, கத்தி போன்ற கூர்மையான கணைகள் {க்ஷுரப்ரகங்கள்}, பிரகாசமாகப் பளபளப்பாக்கப்பட்டிருந்த துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} ஆகியவற்றால் பார்த்தன் {அர்ஜுனன்} தன் எதிரிகளின் உடல்களைச் சிதைத்து, அவர்களின் தலைகளையும் அறுத்தான்.(5)
[1] “2ம் ஸ்லோகத்தின் முதல் சொல் விஸ்ரிஜ்யமே Visrijya; பல உரைகளில் காணப்படுவதைப் போல விம்ரித்யம் Vimridya அல்ல. கர்ணனின் படைப்பிரிவைத் தவிர்த்த அர்ஜுனன், எதிரிகளின் அழுத்தத்தில் மூழ்குபவனைத் போலத் தெரிந்தவனான பீமனைத் தாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கொன்றான் என்பதே இந்த வாக்கியத்தின் வெளிப்படையான பொருளாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “மிகச் சிறப்புற்றவைகளான கௌரவர்களுடைய சேனைகளால் எதிர்க்கப்பட்டவனும், மூழ்குகின்றவனைப் போலிருப்பவனும், குந்தீபுத்திரனுமான பீமனை மேலே தூக்கிவிடக் கருதிய தனஞ்சயன், கர்ணனுடைய சேனையை அம்புகளால் அதிகமாக அடித்துச் சத்துரு வீரர்களை யமலோகத்துக்கு அனுப்பினான்” என்றிருக்கிறது. இதில் கர்ணனின் படையை அர்ஜுனன் தவிர்த்தான் என்று கொள்ளப்படவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “குருக்களில் முதன்மையானவன் {கர்ணன்}, மிகப் பலமாகப் பீமசேனனைத் தாக்கியதால் அவன் {பீமன்} மூழ்கப் போகிறவன் போலத் தெரிந்ததைத் தனஞ்சயன் கண்டான். அவனைக் காக்க விரும்பிய அவன், சூதன் மகனின் படைவீரர்களைக் கணைகளால் தாக்கினான்” என்றிருக்கிறது. இதிலும் கர்ணனின் படையை அர்ஜுனன் தவிர்த்தான் என்று கொள்ளப்படவில்லை.
உடல்கள் வெட்டி சிதைக்கப்பட்ட சிலரும், கவசமிழந்த சிலரும், தலைகளையிழந்த சிலரும் என விழுந்து கொண்டிருப்பவர்களும், வீழ்ந்தவர்களுமான போர்வீரர்களால் அந்தப் போர்க்களம் விரவிக் கிடந்தது.(6) (உயிருள்ளோர் உலகத்தையும், இறந்தோரின் உலகத்தையும் பிரிக்கும்) பெரும் வைதரணீயை {வைதரணீ ஆற்றைப்} போல அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, தனஞ்சயனின் கணைகளால் தாக்கப்பட்ட குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவை சிதைக்கப்பட்டு, துளைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, பல்வேறு வழிகளில் வெட்டப்பட்டதன் விளைவாகச் சமமற்றதாகவும், கடக்க முடியாததாகவும், காணச் சகியாததாகவும், பயங்கரமானதாகவும் ஆனது.(7,8) உடைந்த கணைகள், சக்கரங்கள், அச்சுகள் ஆகியவற்றாலும், குதிரைகளற்ற, அல்லது குதிரைகளுள்ள தேர்களாலும், சாரதியற்ற, அல்லது சாரதிகளுள்ள தேர்களாலும் பூமியானது மறைக்கப்பட்டிருந்தது.(9)
எப்போதும் சீற்றத்துடன் இருப்பவையும் {மதங்கொண்டவையும்}, கோபத்தால் தூண்டப்பட்டவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், தங்க வண்ண கவசம் தரித்தவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், கடுமையான பாகர்களின் குதிங்கால்களாலும், கட்டைவிரல்களாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டுத் தூண்டப்பட்டவையுமான நானூறு {400} யானைகள், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டு, உயிரினங்கள் வாழும் பெரும் மலைகளில் இருந்து தளர்ந்து விழும் சிகரங்களைப் போலக் கீழே விழுந்தன.(10,11) உண்மையில், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு விழுந்து (இன்னும் பிற) யானைகளாலும் பூமி மறைக்கப்பட்டது.(12) மேகத் திரள்களின் ஊடாகப் பிளந்து செல்லும் சூரியனைப் போல, அந்த அர்ஜுனனின் தேரானது, மேனியில் மதநீர் ஒழுகுபவையும், மேகத்திரள்களைப் போலத் தெரிபவையுமான யானைகளின் உடல்களின் அடர்த்தியினூடாகக் கடந்து சென்றது.(13) கொல்லப்பட்ட யானைகள், மனிதர்கள் மற்றும் குதிரைகளாலும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்களாலும், ஆயுதங்கள், கருவிகள், கவசங்கள், பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் கைகளில் தளர்ந்து கிடந்த உயிரற்ற வீரர்களாலும், பல்குனன் {அர்ஜுனன்}, தன் வழித்தடங்களைக் குவியச் செய்தான்.(14) காண்டீவத்தின் நாணொலியானது, ஆகாயத்தில் எழும் இடியினொலியைப் போல மகத்தான பேரொலியாக இருந்தது.(15)
அப்போது, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட (தார்தராஷ்டிரப்) படையானது, பெருங்கடலின் மத்தியில் புயலால் அடிக்கப்படும் பெரிய மரக்கலத்தைப் போலப் பிளந்தது.(16) எரிகொள்ளிகள், எரிகோள்கள், இடிகள் ஆகியவற்றுக்கு ஒப்பானவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையுமான பல்வேறு வகைகளிலான மரணக்கணைகள் உமது படையை எரித்தன.(17) தனஞ்சயனின் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்ட அந்த வலிமையான படை, இரவு நேரத்தில் மலையிலிருக்கும் மூங்கில்காடுகள் எரிவதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(18) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கணைகளால் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டு, சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்ட அந்த உமது படையானது அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(19) உண்மையில், சவ்யசச்சினால் எரிக்கப்பட்ட கௌரவர்கள், காட்டுத்தீயில் அச்சமடைந்து ஓடும் பெரும் வனத்தின் விலங்குகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கலைந்தோடின.(20)
(பீமசேனனைத் தாக்கிய) அந்தக் குரு படையானது, அந்த வலிமைமிக்க வீரனை {பீமனைக்} தவிர்த்துவிட்டு, கவலையால் நிறைந்து, போரில் புறமுதுகிட்டது.(21) குருக்கள் முறியடிக்கப்பட்ட பிறகு, வெல்லப்பட முடியாதவனான பீபத்சு {அர்ஜுனன்}, பீமசேனனை அணுகி, அங்கே ஒரு கணம் தங்கினான்.(22) பீமனைச் சந்தித்து, அவனோடு ஆலோசனை செய்த பல்குனன் [அர்ஜுனன்}, யுதிஷ்டிரனின் உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்டதையும், பின்னவன் {யுதிஷ்டிரன்} முற்றிலும் நலமாக இருப்பதையும் தன் அண்ணனிடம் {பீமனிடம்} தெரிவித்தான்.(23) பீமன் சென்றதும், தனஞ்சயன், ஓ! பாரதரே, இந்தப் பூமியையும், வானத்தையும் தன் தேரின் சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்தபடியே (மீண்டும் தன் எதிரிகளை எதிர்த்துச்) சென்றான்.(24) பிறகு, வீரர்களும், போர்வீரர்களில் முதன்மையானவர்களும், துச்சாசனனின் தம்பிகளுமான உமது மகன்களில் பத்து பேரால் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டான்.(25) எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைப் பீடிக்கும் வேடர்களைப் போலத் தங்கள் கணைகளால் அர்ஜுனனைப் பீடித்த அவ்வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை விரித்து விளைத்து (தங்கள் தேர்களில்) நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தெரிந்தனர்.(26)
அப்போது மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் தேரை வழிநடத்திய படியே அவர்கள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான் [2]. உண்மையில் அவன் {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரையும் விரைவில் அர்ஜுனன் யமனின் முன்னிலைக்கு அனுப்பிவிடுவான் என்று எதிர்பார்த்தான்.(27) அர்ஜுனனின் தேர் வேறு திசையில் செல்வதைக் கண்ட அந்த வீரர்கள் அவனை நோக்கி விரைந்தனர். எனினும், பார்த்தன் {அர்ஜுனன் / பீமன்}, எண்ணற்ற துணிக்கோல் கணைகளாலும் {நாராசங்களாலும்}, பிறைவடிவக் கணைகளாலும் {அர்த்தச்சந்திர பாணங்களாலும்} அவர்களது கொடிமரங்கள், குதிரைகள், விற்கள் மற்றும் கணைகளை வெட்டி வீழ்த்தி, அவர்களையும் பூமியில் விழச் செய்தான். பிறகு, கடிக்கப்பட்ட உதடுகளாலும், சினங்கொண்ட ரத்தச் சிவப்பான கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவர்களது தலைகளைச் சில அகன்ற தலை கணைகளால் அவன் {அர்ஜுனன் / பீமன்} வீழ்த்தினான்[3]. அம்முகங்கள், தாமரைக் கூட்டங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(28-30) எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பத்துக் கௌரவர்களை, பெரும் மூர்க்கத்தையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட பத்து அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கொன்றுவிட்டு முன்னேறத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(31)
[2] வேறொரு பதிப்பில், “மதுசூதனர் ரதத்தினால் அவர்களை இடமாகச் சுற்றிச் சென்றார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.[3] துரியோதனனும், அவனது தம்பிகள் அனைவரும் பீமசேனனின் சபதத்தின் படி அவனாலேயே கொல்லப்பட்டனர் என்று அறிகிறோம். ஆனால் அவர்களில் பத்து பேரை அர்ஜுனன் கொல்வதாக வருவது முரண்பட்டதாகத் தெரிகிறது. வழக்கமாகத் திருதராஷ்டிரன் மகன்கள், துரியோதனன் தம்பிகள் என்று குறிப்பிடப்படும் இவர்கள், இங்கே துச்சாசனனின் தம்பிகள் என்று குறிப்பிடப்படுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. எனினும், சஞ்சயனும் இங்கே திருதராஷ்டிரனிடம் அவர்களை “உமது மகன்கள்” என்றே குறிப்பிடுகிறான் என்பதையும் சேர்த்தே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
வேறொரு பதிப்பில், "மதுசூதனர் ரதத்தினால் அவர்களை இடமாகச் சுற்றிச் சென்றார். எனெனில், அவர் அவர்கள் கிரீடியினால் உடனே யமனிடம் அனுப்பப்பட்டுவிடுவார்களென்றே எண்ணினார். அவ்வாறு திரும்பிப் போகின்றவன் போலிருக்கின்ற அர்ஜுனனைப் பார்த்து **வேறு சில மூடர்கள்** உரக்க கர்ஜித்தார்கள். பார்த்தன், அடிக்கடி கர்ஜிக்கின்ற அந்த வீரர்களுடைய கொடிகளையும், குதிரைகளையும், விற்களையும், சாரதிகளையும், நாராசங்களாலும், பிறைக்கணைகளாலும் விரைவாக அறுத்தான். பிறகு, வேறு பத்துப் பல்லங்களால் அவர்களுடைய தலைகளைத் தள்ளினான்" என்றிருக்கிறது.
ஆங்கிலத்திற்கும், இதற்கும் உள்ள பாடபேதத்தைக் குறித்து வேறொரு பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் பின்வருமாறு: "தயாநெவாணுநுஸூயா" என்பது மூலம், "ததஹவாஉவநுஸூயா" என்பது நீலகண்ட வியாக்யான புஸ்டக பாடம்.
"திருதராஷ்டிர குமாரர்களில் பதின்மரை அர்ஜுனன் கொன்றான்" என்று பொருள் தரும்படியான நீலகண்ட வ்யாக்யான பாடமும், அதனைப் பின்பற்றிய இரண்டு இங்கிலீஷ்மொழிபெயர்ப்புகளும் பெருந்துமேற்கொள்க. நேரான பாடங்கொண்ட T.R.கிருஷ்ணாசார்யரவர்களும் அர்ஜுனன் அந்தப் பதின்மரைக் கொன்றதாகவே நிச்சயித்துக் குறிப்பு எழுதியிருக்கிறார்கள். இங்ஙனம் கொள்ளுதல், முன்பின் கதைத் தொடர்ச்சிக்கு விரோதமாகும். அர்ஜுனன் அப்படிக் கொன்றிருந்தால், பல தீங்குகள் விளையலாகும். அது யுத்த முறையும் அன்று. ஸர்வஜ்ஞனான வாஸுதேவன் தேரினை அவர்களுக்கு இடமாகச் செலுத்தியது இவற்றைத் திருவளத்திற்கொண்டே போலும். மேலும், "பொற்புங்கமுள்ள பத்து பாணங்களால் அவர்களையே திரும்பவும் அடித்தான்" என்றால், "தலையற்ற முண்டங்களை அடித்தான்" என்ற பொருள் தந்து, சுத்த வீரனான அர்ஜுனனுடைய பெருமைக்கு ஒரு பெருங்குறை தோன்றநிற்கும். இங்கே, ஸ்லோகங்களிலுள்ள சொல்லமைப்பும் ஆராயத்தக்கது.
திருதராஷ்டிரகுமாரர்களில் பதின்மரை அர்ஜுனன் கொன்றதாகப் பொருள்தரும் பாடமே கொள்வர் சிலர். அவர், "ஸ்ரீமஹாபாரதத்தில் எளிதிற் பொருள் செய்ய முடியாத பல விஷயங்கள் உள்ளன. எழுவகை பேதங்கள் முதலிய முறைகளைக் கொண்டு அவற்றிற்கு அர்த்தநிச்சயம் செய்ய வேண்டும். எழுவகை பேதங்களாவன - (1) வயதயாஸம், (2) பராதிலோமயம், (3) கோமூதா, (4) பரஹஸம், (5) உக்ஷ்ணம், (6) ஸுத்ரம், (7) ஸாது என்பன அவைகளுள், வயதயாஸம், {அ} தேசவயதயாஸம், {ஆ} காலவயதயாஸம், {இ} புருஷவயதயாஸம் என மூன்று வகைப்படும். தேசவயதயாஸமாவது, ஓரிடத்தில் நடந்ததை மற்றோரிடத்தில் நடந்ததாகச் சொல்வது; காலவயதயாஸமாவது ஒரு காலத்தில் நடந்ததை வேறொரு காலத்தில் நடந்ததாகச் சொல்வது; புருஷவயதயாஸமாவது ஒரு மனிதன் செய்ததை மற்றொரு மனிதன் செய்ததாகச் சொல்வது. இந்த வேறுபாடு பற்றிப் பீமஸேனன் செய்ததை அர்ஜுனன் செய்ததாக ஏதோ ஒரு காரணத்தால் சொல்லப்பட்டிருக்க வேண்டும்" என்று ஸமாதானம் கூறுவர். இது மத்வஸம்பிரதாயக் கொள்கை" என்றிருக்கிறது.
கர்ண பர்வம் பகுதி -80ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |