Kauravas took shelter of Karna! | Karna-Parva-Section-81 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை நோக்கி விரைந்த சம்சப்தகர்கள்; அவர்களைத் தவிர்த்துவிட்டுக் கர்ணனை நோக்கித் தேரைச் செலுத்திய கிருஷ்ணன், எனினும் பின் தொடர்ந்து வந்த சம்சப்தகர்களை வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்து வந்த கௌரவப் படை; அதை முறியடித்த அர்ஜுனன்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் பெரும் வேகம் கொண்ட தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த குரங்குக் கொடியோன் அர்ஜுனனை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தொண்ணூறு கௌரவத் தேர்வீரர்கள் {சம்சப்தகர்கள்} விரைந்தனர்.(1) அந்த மனிதர்களில் புலிகள், மறு உலகத்தைக் குறித்துப் பயங்கரச் சபதம் ஒன்றை [1] ஏற்றுக் கொண்டு, மனிதர்களில் புலியான அந்த அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) எனினும், (அவர்களைக் கண்டு கொள்ளாத) கிருஷ்ணன், பெரும் வேகம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முத்துச்சரங்களால் மறைக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் வெண்குதிரைகளைக் கர்ணனின் தேரை நோக்கித் தூண்டினான்.(3) அந்தத் தொண்ணூறு சம்சப்தகர்களும், கர்ணனின் தேரை நோக்கிச் செல்லும் தனஞ்சயனைப் பின்தொடர்ந்து சென்று, அவன் மீது கணைமாரியை இறைத்தனர்.(4) அப்போது அர்ஜுனன், பெரும் சுறுசுறுப்புடையவர்களும், தன்னைத் தாக்குபவர்களுமான அந்தத் தொண்ணூறு பேரையும், அவர்களது சாரதிகள், விற்கள் மற்றும் கொடிமரங்களையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(5) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் பல்வேறு வகைக் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், புண்ணியங்கள் தீர்ந்து சொர்கத்தில் இருந்து கீழே விழும் சித்தர்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து விழுந்தனர்.(6)
[1] “’அர்ஜுனனிடம் இருந்து தப்பி ஓடினால் நிலைத்த நரகில் நாம் மூழ்குவோம்” என்பது போன்ற சபதம். துரோண பர்வத்தின் தொடக்கத்தில் சம்சப்தகர்கள் செய்யும் சபதத்தைப் பார்க்கவும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இதன்பிறகு, தேர்கள், யானைகள், மற்றும் குதிரைகளோடு கூடிய கௌரவர்கள் பலர், குரு குலத்தில் முதன்மையானவனும், பாரதர்களின் தலைவனுமான அர்ஜுனனை அச்சமில்லாமல் எதிர்த்து சென்றனர்.(7) போராடும் மனிதர்கள் மற்றும் குதிரைகள் நிறைந்ததும், முதன்மையான யானைகள் பெருகியிருந்ததுமான உமது மகன்களின் அந்தப் பெரிய படையானது தனஞ்சயனின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவனைச் சூழ்ந்து கொண்டன.(8) அந்த வலிமைமிக்கக் கௌரவ வில்லாளிகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், சூலங்கள், கதாயுதங்கள், கத்திகள் மற்றும் கணைகளுடன் அந்தக் குரு குல வழித்தோன்றலை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(9) சூரியன் தன் கதிர்களால் இருளை அழிப்பது போலவே, அந்தப் பாண்டுவின், மகன் ஆகாயத்தில் சூழ்ந்திருந்த அந்தக் கணைமாரியைத் தன் கணைகளால் அழித்தான்.(10)
எப்போதும் மதப்பெருக்குடன் இருக்கும் ஆயிரத்து முன்னூறு {1300} யானைகளைச் செலுத்திக் கொண்டு வந்த மிலேச்சர்களின் படையானது, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பக்கங்களைத் தாக்கியது.(11) முள் பதித்த கணைகள் {கர்ணிகள்}, நாளீகங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, வேல்கள், சூலங்கள், ஈட்டிகள், கம்பணங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் தேரில் இருந்த பார்த்தனைப் பீடித்தனர்.(12) ஒப்பற்ற அந்தக் கணை மாரிகளில் யானைகளின் தந்தங்களால் ஏவப்பட்ட சிலவற்றைப் பல்குனன் {அர்ஜுனன்}, மிகக் கூர்மையான தன் அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} மற்றும் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் அறுத்தான்.(13) பல்வேறு வகைக் கணைகளுடன் கூடிய அவன் {அர்ஜுனன்}, அந்த யானைகளை அனைத்தும், அவற்றின் கொடிமரங்கள், கொடிகள், பாகர்கள் ஆகியவற்றையும், வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கும் இந்திரனைப் போலத் தாக்கினான்.(14) தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் பீடிக்கப்பட்டவையும், தங்கத்தாலான கழுத்தணிகளை அணிந்திருந்தவையுமான அந்தப் பெரும் யானைகள், எரிகுழம்புகளுடன் சுடர்விடும் மலைகளைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தன.(15)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளாலான அந்தப் படையின் முழக்கம், கூச்சல் மற்றும் ஓலங்களுக்கு மத்தியில் காண்டீவத்தின் நாணொலியானது உயர்ந்து எழுந்தது.(16) யானைகள், ஓ! மன்னா, (கணைகளால்) தாக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின. சாரதிரிகள் கொல்லப்பட்ட குதிரைகளும் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன.(17) ஓ! ஏகாதிபதி, வானத்தில் மாறிக்கொண்டே இருந்த நீராவி வடிவங்களை {மேகங்களைப்} போன்ற தேர்கள், சாரதிகளையும், குதிரைகளையும் இழந்தவையாக ஆயிரக்கணக்கில் தென்பட்டன.(18) அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்த குதிரைவீரர்கள், ஓ! ஏகாதிபதி, பார்த்தனின் கணைகளால் உயிரை இழந்து கீழே விழுவதும் காணப்பட்டது.(19) அந்த நேரத்தில் அர்ஜுனனின் கரவலிமையும் காணப்பட்டது. அந்தப் போரில், தனியொருவனாகவே அவன் (அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்தவர்களான) குதிரைவீரர்களையும், யானைகளையும், தேர்வீரர்களையும் வென்றான் (என்ற அளவுக்கு அவனது கரவலிமை பெரியதாக இருந்தது).(20)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன், மூவகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும் (கௌரவப்) படையால் சூழப்பட்டதைக் கண்ட பீமசேனன்,(21) கௌரவத் தேர்வீரர்களில் கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், தன்னோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான அந்தச் சிலரைத் தவிர்த்துவிட்டு, தனஞ்சயனின் தேர் இருந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தான்.(22) அதேவேளையில், அந்தப் பெரும் படுகொலைக்குப் பிறகும் எஞ்சியிருந்த அந்தக் கௌரவப்படை மிகவும் பவலீனமடைந்து தப்பி ஓடியது. (ஏற்கனவே சொன்னது போல) அர்ஜுனனைக் கண்ட பீமன், தன் தம்பியை நோக்கிச் சென்றான்.(23) களைப்படையாதவனும், கதாயுதம் தரித்தவனுமான அந்தப் பீமன், அர்ஜுனனால் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டும் எஞ்சியிருந்தவையும், பெரும் வலிமையைக் கொண்டவையுமான அந்தக் கௌரவக் குதிரைகளை {குதிரை வீரர்களை / குதிரைப் படையை} அந்தப் போரில் அழித்தான்.(24) மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும் மரண இரவைப் போலக் கடுமையானதும், சுவர்கள், மாளிகைகள், நகரங்களின் வாயில்கள் ஆகியவற்றை நொறுக்கவல்லதும், மிகப் பயங்கரமானதுமான தன் கதாயுதத்தைக் கொண்டு, தன்னைச் சுற்றியிருந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தொடர்ச்சியாகத் தாக்கினான். ஓ! ஐயா, அந்தக் கதாயுதம் எண்ணற்ற குதிரைகளையும், சாரதிகளையும் கொன்றது.(25,26)
அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தக் கதாயுதத்தைக் கொண்டு, இரும்பாலான கவசந்தரித்த மனிதர்களையும் குதிரைகளையும் நொறுக்கினான். அதனால் தாக்குண்ட அவர்கள் பேரொலியோடு கீழே விழுந்தனர்.(27) தங்கள் பற்களால் பூமியைக் கடித்து, குருதியில் குளித்தவர்களும், தங்கள் தலைகளில் இருந்த மகுடங்கள், விற்கள் மற்றும் அங்கங்களில் அடிப்பாகங்கள் நொறுக்கப்பட்டவர்களுமான அவர்கள், ஊனுண்ணும் விலங்குகள் அனைத்திற்கும் உணவாகி களத்தில் கிடந்தனர்.(28) குருதி, தசை, ஊனீர் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை வயிறு முட்ட உண்ட அந்த (பீமசேனனின்) கதாயுதம், மரண இரவை {காலனைப்} போலவே காணக் கடினமானதாக இருந்தது.(29) பத்தாயிரம் {10000} குதிரைகளையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொன்ற பீமன், கையில் தன் கதாயுத்துடனும், சினத்துடனும், களத்தில் இங்கேயும், அங்கேயும் ஓடினான்.(30)
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கையில் கதாயுதுத்துடன் பீமனைக் கண்ட உமது துருப்புகள், காலதண்டத்துடன் கூடிய யமனே தங்களுக்கு மத்தியில் இருப்பதாகக் கருதின.(31) அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பெருங்கடலுக்குள் நுழையும் ஒரு மகரத்தைப் போல, அந்தக் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவுக்குள் புகுந்தான்.(32) உறுதிமிக்கக் கதாயுதத்துடன் அந்த யானைப்படைக்குள் ஊடுருவியவனும், கோபத்துடன் கூடியவனுமான பீமன், மிகக் குறுகிய காலத்திற்குள் அதை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(33) தங்கள் உடல்களில் முள் பதித்த தகடுகளுடன் கூடிய அந்த மதங்கொண்ட யானைகள், தங்கள் பாகர்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன், சிறகு படைத்த மலைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விழுவதை நாங்கள் கண்டோம்.(34) அந்த யானைப்படையை அழித்த அந்த வலிமைமிக்கப் பீமசேனன், மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்டு, அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றான்.(35)
இவ்வாறு கொல்லப்பட்டதும், ஓடிப் போவதற்குத் தயாராக இருந்ததும் உற்சாகமின்மையால் நிறைந்து, கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் நின்ற அந்தப் பெரும்படையானது, ஓ! ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயுதங்களால் தாக்கப்பட்டது.(36) அடக்கமுடையதாகத் தெரிந்ததும், செயலற்று, கிட்டத்தட்ட அசைவற்று நின்றதுமான அந்தப் படையைக் கண்ட அர்ஜுனன், உயிரை எரிக்கும் கணைகளால் அதை மறைத்தான்.(37) அந்தப் போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைமாரியால் துளைக்கப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், இழைகளுடன் கூடிய கதம்ப மலர்களைப் போல அழகானவையாகத் தெரிந்தன.(38) ஓ! மன்னா, மனிதர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றை வேகமாகக் கொல்லும் அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்ட கௌரவப் படையில் இருந்து துன்ப ஓலங்கள் எழுந்தன.(39) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறி, மிகவும் அச்சப்பட்டு, ஒன்றோடொன்று நெருங்கி நின்ற உமது படையானது பெரும் வேகத்தோடு திரும்பத் தொடங்கியது.(40)
எனினும், குருக்களும், பெரும் வலிமை கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்தப் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. காயம்படாத எந்த ஒரு தேர்வீரனோ, குதிரைவீரனோ, யானைவீரனோ, குதிரையோ, யானையோ அங்கே இல்லை.(41) கணைகளால் துளைக்கப்பட்ட தங்கள் கவசங்களுடன் குருதியில் குளித்த அத்துருப்பினர், காடுகளில் மலர்ந்திருக்கும் அசோகங்களைப் போலச் சுடர்விடுபவர்களாகத் தெரிந்தனர்.(42) அந்தச் சந்தர்ப்பத்தில் வீரத்தை வெளிப்படுத்திய சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கண்ட கௌரவர்கள், கர்ணனின் உயிரில் நம்பிக்கையிழந்தவர்களாக ஆனார்கள்.(43) அர்ஜுனனுடைய கணைகளின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததாக உணர்ந்த கௌரவர்கள், அந்தக் காண்டீவதாரியால் வெல்லப்பட்டுக் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.(44) அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்டுப் பட்டு அந்தப் போரில் கர்ணனை விட்டுவிட்டு, (தங்களைக் காக்கும்படி) சூதன் மகனை உரக்க அழைத்துக் கொண்டே அனைத்துப் பள்ளங்களிலும் தப்பி ஓடினர்.(45)
எனினும், அவர்களைப் பின்தொடர்ந்த சென்ற பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பீமசேனனின் தலைமையிலான பாண்டவ வீரர்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(46) அப்போது, ஓ! ஏகாதிபதி, உமது மகன்கள் கர்ணனின் தேரை நோக்கிச் சென்றனர். அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவர்களைப் போலத் தெரிந்த அவர்களுக்கு, கர்ணன் ஒரு தீவாக ஆனான்.(47) ஓ! ஏகாதிபதி, நஞ்சற்ற பாம்புகளைப் போன்ற அந்தக் கௌரவர்கள், காண்டீவதாரியிடம் கொண்ட அச்சத்தால் கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(48) உண்மையில், செயல்பாடுகளுடன் கூடிய உயிரினங்கள், மரணத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அறத்திடம் தஞ்சமடைவதைப் போலவே,(49) உமது மகன்களும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பாண்டுவின் உயர் ஆன்ம மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(50)
அப்போது, அச்சத்தால் ஈர்க்கப்படாத கர்ணன், கணைகளால் பீடிக்கப்பட்டுக் குருதியில் குளித்து வேதனையில் இருந்த அந்தப் போர்வீரர்களிடம், “அஞ்சாதீர்கள்! என்னிடம் வாருங்கள்!” என்றான்.(51) பார்த்தனால் உமது படை மிக மூர்க்கமாகப் பிளக்கப்படுவதைக் கண்ட கர்ணன், எதிரியைக் கொல்ல விரும்பி தன் வில்லை வளைத்து நின்றிருந்தான்.(52) குருக்கள் களத்தைவிட்டு அகன்றதைக் கண்டவனும், ஆயுததாரிகளில் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், சற்றே சிந்தித்து, பார்த்தனைக் கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தி, நீண்ட பெருமூச்சுகளை விடத் தொடங்கினான்.(53) தன் உறுதிமிக்க வில்லை வளைத்த அந்த அதிரதன் மகன் விருஷன் {கர்ணன்}, சவ்யசச்சின் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(54) எனினும், இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட பூமியின் தலைவர்கள் பலர், மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமழையை விரைவாகப் பொழிந்தனர்.(55) அப்போது, ஓ! வாழும் உயிரினங்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, கர்ணனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள், பாஞ்சாலர்களில் பலரைத் தங்கள் உயிரை இழக்கச் செய்தன.(56) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நண்பர்களின் மீட்பனான அந்தச் சூதன் மகனால், தன் நண்பர்களின் நிமித்தமாக இவ்வாறு தாக்கப்பட்ட பாஞ்சாலர்கள் பேரோலங்களை வெளியிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(57)
---------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -81ல் உள்ள சுலோகங்கள் : 57
ஆங்கிலத்தில் | In English |