Duhshasana felled Bhima! | Karna-Parva-Section-82 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களை அழிக்கத் தொடங்கிய கர்ணன்; பாஞ்சால இளவரசர்களான ஜனமேஜயன், திருஷ்டத்யும்ன் ஆகியோரையும் மற்றும் சிநி குலத்து சாத்யகியையும் குதிரைகளற்றவர்களாகச் செய்தது; கைகேய இளவரசன் விசோகனையும், படைத்தலைவன் உக்ரகர்மனையும் கொன்ற கர்ணன்; கர்ணனின் மகனான பிரசேனனைக் கொன்ற சாத்யகி; சாத்யகியைக் கர்ணனிடமிருந்து காத்த சிகண்டி; திருஷ்டத்யும்னனின் மகனைக் கொன்ற கர்ணன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; கர்ணனை அசைக்க முடியாத பாஞ்சாலர்கள்; சாத்யகி செய்த போர்; பீமனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்து, அவனது சாரதியின் தலையையும் கொய்த பீமன்; துச்சாசனன் ஏவிய கணையொன்றால் துளைக்கப்பட்ட பீமன் உயிரை இழந்தவனைப் போலத் தன் தேரில் விழுந்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரன்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரை கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் குருக்கள் விரட்டப்பட்ட பிறகு, சூதன் மகனான கர்ணன், மேகத்திரள்களின் கூட்டத்தை அழிக்கும் புயலைப் போலத் தன் வலிமைமிக்கக் கணைகளால் பாஞ்சாலர்களின் மகன்களை அழிக்கத் தொடங்கினான்.(1) அஞ்சலிகங்கள் என்று அழைக்கப்படும் அகன்ற முகக் கணைகளால், {பாஞ்சால} ஜனமேஜயனின் சாரதியை வீழ்த்திய அவன் {கர்ணன்}, அடுத்ததாக அந்தப் பாஞ்சால வீரனின் குதிரைகளையும் கொன்றான். பிறகு எண்ணற்ற அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு சதானீகன் மற்றும் சுதசோமன் ஆகிய இருவரையும் துளைத்த அவன் {கர்ணன்}, பிறகு அவ்விரு வீரர்களின் விற்களையும் அறுத்தான்.(2) அடுத்ததாக, ஆறு கணைகளால் திருஷ்டத்யும்னனைத் துளைத்த அவன், பிறகு ஒரு கணத்தையும் இழக்காமல் அம்மோதலில அந்த இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளைக் கொன்றான். அடுத்ததாகச் சாத்யகியின் குதிரைகளைக் கொன்ற அந்தச் சூதன் மகன், கைகேயர்களின் ஆட்சியாளனுடைய மகனான விசோகனைக் கொன்றான்.(3) கைகேய இளவரசன் {விசோகன்} கொல்லப்பட்டதை அடுத்து, கைகேயப் படைத்தலைவனான உக்ரகர்மன் [1], வேகமாக விரைந்து, கர்ணனின் மகனான பிரசேனனை[2] சீற்றமிக்கக் கணைகள் பலவற்றால் மிக மூர்க்கமாகத் தாக்கி, அவனை நடுங்கச் செய்தான்.(4) அப்போது கர்ணன், தன் மகனைத் தாக்குபவனின் கரங்களையும், சிரத்தையும், பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகள் மூன்றால் வெட்டியதால், கோடரியால் கிளைகள் வெட்டப்பட்டு விழும் சால மரத்தைப் போலப் பின்னவன் {உக்ரகர்மன்} உயிரை இழந்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(5)
[1] வேறொரு பதிப்பில், “கேகயராஜகுமாரனும், ஸேனாபதியுமான மித்திரவர்மா, தன் புத்திரன் கொல்லப்படவே, அந்தக் கர்ணனை எதிர்த்து ஓடினான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், அவனது பெயர் உக்ரதன்வன் என்று சொல்லப்பட்டுள்ளது.[2] வேறொரு பதிப்பில், “{மித்திரவர்மன்} அதிக உக்கிரமான வேகமுள்ள அம்புகளால் அதிகமாக நடுங்கச் செய்து கொண்டு, கர்ணனுடைய புதல்வனான சுதேவனையும் கொன்றான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கர்ணனின் மகன் சுஷேணன் உக்கிரதன்வனால் தாக்கப்பட்டான் என்று இருக்கிறது. ஆனால் சுஷேணனோ ஏற்கனவே உத்தமௌஜசால் கொல்லப்பட்டதாக நாம் அறிந்திருக்கிறோம்.
அப்போது {கர்ணனின் மகன்} பிரசேனன், குதிரைகளற்றவனான சிநியின் பேரனை {சாத்யகியை}, நேராகச் செல்லும் கூரிய கணைகள் பலவற்றால் மறைத்து, தன் தேரில் நர்த்தனம் செய்பவனைப் போலத் தெரிந்தான். எனினும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} விரைவில் தாக்கப்பட்ட கர்ணனின் மகன் {பிரசேனன்} கீழே விழுந்தான் {கொல்லப்பட்டான்}.(6) கர்ணன், தன் மகன் கொல்லப்பட்டதையடுத்து, சினத்தால் நிறைந்த இதயத்துடன், சிநிக்களின் காளையை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்துடன் அவனிடம், “ஓ! சிநியின் பேரனே, நீ கொல்லப்பட்டாய்” என்று சொல்லி, எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல கணையொன்றை அவன் {சாத்யகியின்} மீது ஏவினான்.(7) அப்போது சிகண்டி, மூன்று கணைகளால் அக்கணையை வெட்டி, மேலும் மூன்று கணைகளால் கர்ணனையும் தாக்கினான். கடுஞ்சீற்றமுடைய அந்தச் சூதன் மகன், சிகண்டியின் வில்லையும் கொடி மரத்தையும் இரண்டு கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டி, ஆறு கணைகளால் சிகண்டியையும் தாக்கி, அதன்பிறகு திருஷ்டத்யும்னன் மகனின் தலையையும் வெட்டினான்.(8,9)
திருஷ்டத்யும்னனின் மகன் கொல்லப்பட்ட பிறகு, அந்தக் கடும் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னர்களில் சிங்கமே {திருதராஷ்டிரரே}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய கிருஷ்ணன், “பாஞ்சாலர்கள் நிர்மூலமாக்கப்படுகின்றனர். செல், ஓ! பார்த்தா, கர்ணனைக் கொல்வாயாக” என்றான்.(10) இப்படிச் சொல்லப்பட்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், புன்னகைத்து, தேர்வீரர்களின் தலைவனான கர்ணனால் அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் கொல்லப்படும் பாஞ்சாலர்களைக் காக்க விரும்பி, அதிரதன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கித் தன் தேரில் சென்றான்.(11) உரத்த நாணொலியைக் கொண்ட தன் காண்டீவத்தை நீட்டி, தன் வில்லின் நாண்கயிற்றைத் தன் உள்ளங்கையால் கடுமையாக அடித்து, தன் கணைகளின் மூலமாகத் திடீரென இருளை உண்டாக்கி, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் கொடிமரங்களை அழித்தான்.(12) (அந்நாணொலியின்) எதிரொலிகள் வானத்தில் எதிரொலித்தன. (காற்றில் நிலைக்க முடியாத) பறவைகள், மலைகளின் நிலக் குடைவுகளுக்குள் தஞ்சமடைந்தன. முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லுடன் அர்ஜுனன் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உண்மையில், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான பார்த்தன், அந்தப் பயங்கரக் கணத்தில் எதிரிகள் மீது பாய்ந்த போது,(13) வீரர்களில் முதன்மையான பீமசேனன், அந்தப் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} பின்புறத்தைப் பாதுகாத்தபடியே அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அப்போது அந்த இளவரசர்கள் இருவரும், வழியில் தங்கள் எதிரிகளோடு மோதிபடியே கர்ணனை நோக்கித் தங்கள் தேர்களில் பெரும் வேகத்தோடு சென்றனர்.(14) அந்த இடைவேளையின் போது, சூதன் மகன், சோமகர்களைக் கலங்கடித்தபடியே கடுமையாகப் போரிட்டான். எண்ணற்ற தேர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொன்ற அவன், தன் கணைகளால் திசைகளின் பத்து புள்ளிகளையும் மறைத்தான்.(15)
அப்போது, உத்தமௌஜஸ், {பாஞ்சால} ஜனமேஜயன், கோபமடைந்தவனான யுதாமன்யு, சிகண்டி ஆகியோர் பிருஷதன் மகனுடன் (திருஷ்டத்யும்னனுடன் சேர்ந்து) உரக்க முழங்கியபடியே கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைத்தனர்.(16) பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான அந்த ஐவரும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணனை எதிர்த்து விரைந்தாலும், துறவின் மூலம் தூய்மையான ஆன்மாவை அடைந்த மனிதர்களிடம் புலன்நுகர்பொருட்கள் தவறுவது போலவே[3], அவர்களால் அவனது தேரில் இருந்து அவனை அசைக்க முடியவில்லை.(17) அவர்கள் விற்கள், கொடிமரங்கள், குதிரைகள், சாரதிகள், கொடிகள் ஆகியவற்றைத் தனது கணைகளால் வேகமாக வெட்டி கர்ணன், சிங்கத்தைப் போல முழங்கிக் கொண்டே அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் தாக்கினான்.(18) வீரனான அந்தக் கர்ணன், தன் கையில் கணைகளுடன், வில்லின் நாண்கயிற்றைத் தீண்டி தன்னைத் தாக்குபவர்கள் மீது அவற்றை ஏவி தன் எதிரிகளைக் கொல்லும்போது ஏற்படும் அந்த வில்லின் நாணொலியால், மலைகள் மற்றும் மரங்களுடன் கூடிய பூமி பிளக்கப்போகிறது என்றெண்ணி மக்கள் மிகவும் உற்சாகமிழந்தவர்களாக ஆனார்கள்.(19) சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு ஒப்பானதும், பெரியதும், நீளமானதுமான தன் வில்லைக் கொண்டு கணைகளை ஏவிய அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஒளிவட்டத்துக்குள் சுடர்மிக்கக் கதிர்கள் பலவற்றுடன் கூடிய சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(20)
[3] வேறொரு பதிப்பில், “ஒன்றுசேர்ந்தவர்களும் விகர்த்தனகுமாரனான கர்ணனைக் குறித்து எதிர்த்துச் செல்லுகின்றவர்களுமான அந்த ஐந்து பாஞ்சால ரதிகர்களும், இந்திரிய விஷயங்கள் ஜிதேந்திரயனைத் தைரியத்தினிடமிருந்து நழுவச் செய்ய மாட்டாததுபோலக் கர்ணனை அந்த ரதத்தினின்று நழுவச் செய்வதற்கு சக்தியுள்ளவர்களாகவில்லை” என்றிருக்கிறது.
அப்போது சூதனின் மகன் {கர்ணன்}, பனிரெண்டு கூரிய கணைகளால் சிகண்டியைத் துளைத்து, ஆறால் உத்தமௌஜஸையும், மூன்றால் யுதாமன்யுவையும், சோமக மற்றும் பிருஷத மகன்கள் (ஜனமேஜயன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய) இருவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளாலும் துளைத்தான்.(21) அந்தப் பயங்கரப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வெல்லப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஐவரும், எதிரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தூய ஆன்மா கொண்ட மனிதனால் வெல்லப்படும் புலன் நுகர் பொருட்களைப் போல முற்றிலும் செயலற்றவர்களாக நின்றனர்.(22) அப்போது, திரௌபதியின் மகன்கள் ஐவரும், ஆழமான பெருங்கடலில் உடைந்த மரக்கலங்களில் உள்ள வணிகர்களைப் பிற மரக்கலங்களைக் கொண்டு மீட்கும் மனிதர்களைப் போலக் கர்ணக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களான தங்கள் தாய்மாமன்களை, நன்றாக ஆயத்தம் செய்யப்பட்ட பிற தேர்களுடன் வந்து மீட்டனர்.(23) பிறகு, அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, கர்ணனால் ஏவப்பட்ட எண்ணற்ற கணைகளைத் தன் கூரிய கணைகளால் வெட்டி, முற்றிலும் இரும்பாலான கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனையும் துளைத்து, எட்டு கணைகளால் உமது மூத்த மகனை {துரியோதனனைத்} துளைத்தான்.(24) பிறகு, கிருபர், போஜத் தலைவன் (கிருதவர்மன்), உமது மகன் {துரியோதனன்}, கர்ணன் ஆகியோர் பதிலுக்குச் சாத்யகியைக் கூரிய கணைகளால் தாக்கினர். எனினும் அந்த யது குலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, (நான்கு) திசைகளின் காவலர்களுடன் {திக்பாலர்களுடன்} போரிடும் தைத்தியர்களின் தலைவனைப் போல அந்த நான்கு போர்வீரர்களுடனும் போரிட்டான்.(25)
நாணொலிக்கும் தன் வில்லானது முழுமையான அளவுக்கு வளைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து இடையறாமல் பாய்ந்த கணைகளின் மூலம் அந்தச் சாத்யகி, கூதிர் கால வானின் நடுப்பகல் சூரியனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனானான்.(26) அப்போது எதிரிகளை எரிப்பவர்களான அந்த வலிமைமிக்கப் பாஞ்சாலத் தேர்வீரர்கள், மீண்டும் தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, கவசம் பூண்டு, ஒன்றாகச் சேர்ந்து, போரில் எதிரிகளைப் பீடிக்கும் சக்ரனை {இந்திரனைக்} காக்கும் மருத்துகளைப் போல அந்தச் சிநிக்களில் முதன்மையானவனை {சாத்யகியைப்} பாதுகாத்தனர்.(27) பிறகு உமது எதிரிகளுக்கும், உமது படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் படுகொலைகள் நிறைந்ததுமான அந்தப் போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பாகக் கடுமையை அடைந்தது.(28) பல்வேறு ஆயுத மழையால் மறைக்கப்பட்ட தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் ஓரிடத்தில் இருந்து மறு இடத்திற்கு நகரத் தொடங்கினர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், சூழன்றனர், அல்லது துன்ப ஓலங்களை வெளியிட்டனர், அல்லது உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(29)
காரியங்களின் நிலை அவ்வாறிருக்கையில், உமது மகனும், மன்னனுக்கு {துரியோதனனுக்குத்} தம்பியுமான துச்சாசனன், கணைமாரியை ஏவியபடியே அச்சமில்லாமல் பீமனை எதிர்த்து வந்தான். விருகோதரனும் {பீமனும்}, ஒரு பெரிய ருரு மானை நோக்கிப் பாயும் சிங்கம் ஒன்றைப் போல அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(30) அப்போது ஒருவரோடொருவர் பகை கொண்டவர்களும், உயிரையே பணயமாக வைத்துப் போர்விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தவர்களுமான அவ்விரு வீரர்களுக்குள்ளும் நேர்ந்த மோதலானது, பழங்காலத்தில் {அசுரன்} சம்பரனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப்போல மிகக் கடுமையான நிலையை அடைந்தது.(31) காமத்தால் தூண்டப்பட்டவையும், தங்கள் உடல்களில் தொடர்ச்சியாக மதநீர் பெருக்குபவையுமான பெருங்களிறுகள் {பெரும் ஆண் யானைகள்} இரண்டு, பருவ காலத்தில் உள்ள பிடியின் {பெண் யானையின்} அருகில் ஒன்றோடொன்று போரிட்டுக் கொள்வதைப் போல, பெரும் சக்தி கொண்டவையும், ஒவ்வொருவரின் உடலைத் துளைக்கவல்லவையுமான கணைகளால் அவ்விருவரும் ஒருவரையொருவர் ஆழத் தாக்கிக் கொண்டனர்.(32) பெரும் வேகம் கொண்ட விருகோதரன் {பீமன்}, கத்தி தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் உமது மகனின் {துச்சாசனனின்} வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். தன்னை எதிர்ப்பவனின் நெற்றியை, சிறகு படைத்த மற்றொரு கணையால் துளைத்து, அடுத்ததாக (நான்காவது கணையைக் கொண்டு) பின்னவனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(33)
மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட இளவரசன் துச்சாசனன், பனிரெண்டு கணைகளால் விருகோதரனைத் துளைத்தான். தானே தன் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்ட அவன், நேரான கணைகளின் மாரியை மீண்டும் பீமன் மீது பொழிந்தான்.(34) அப்போது துச்சாசனன், சூரியனின் கதிர்களைப் போன்ற பிரகாசமானதும், தங்கம், வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பில்லா ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டும், தன்னைத் தாக்குபவனின் உடலைத் துளைக்கவல்லதும், இந்திரனுடைய வஜ்ரத்தின் வீச்சைப் போலத் தடுக்கப்பட முடியாததுமான கணையொன்றை ஏவினான்.(35) அதனால் உடல் துளைக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, தளர்ந்த அங்கங்களுடன், விரித்து நீட்டிய கரங்களுடனும் உயிரை இழந்த ஒருவனைப் போலத் தன் சிறந்த தேரில் விழுந்தான். எனினும் உணர்வுகள் மீண்ட அவன் ஒரு சிங்கத்தைப் போல முழங்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(36)
----------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -82ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |