Bhima drunk blood ripping open the chest! | Karna-Parva-Section-83 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பீமனின் வில்லை அறுத்து, அவனது சாரதியைத் துளைத்த துச்சாசனன், பீமன் ஏவிய ஈட்டியை வெட்டி, மற்றொரு கணையால் பீமனை ஆழமாகத் துளைத்த துச்சாசனன்; துச்சாசனனுக்குத் தன் சபதத்தை நினைவுப்படுத்திய பீமன்; துச்சாசனனின் தலையைத் தாக்கி, அவனுடைய குதிரைகள், தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தது; தரையில் விழுந்து துடித்த துச்சாசனன்; கர்ணன், துரியோதனன், கிருபர், அஸ்வத்தாமன், கிருதவர்மன் ஆகியோரைக் கூவியழைத்து, அவர்களின் கண்ணெதிரிலேயே துச்சாசனனின் மார்பைப் பிளந்து அவனது உதிரத்தைக் குடித்த பீமன்; கர்ணனின் தம்பியான சித்திரசேனனைக் கொன்ற யுதாமன்யு; கர்ணனை எதிர்த்து விரைந்த நகுலன்; தன் சபதம் நிறைவேறியதை கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் சொன்ன பீமன்; துரியோதனனைக் கொல்லப் போவதாகச் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மிக மூர்க்கமாகப் போரிட்ட இளவரசன் துச்சாசனன், அடைவதற்கு மிக அரிதான சாதனையை அம்மோதலில் அடைந்தான். ஒரு கணையால் பீமனின் வில்லை அறுத்த அவன், ஆறு கணைகளால் தன் எதிரியின் சாரதியைத் துளைத்தான்.(1) அந்த அருஞ்செயல்களைச் செய்தவனும், பெரும் சுறுசறுப்பைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {துச்சாசனன்}, ஒன்பது கணைகளால் பீமனையும் துளைத்தான். உண்மையில் அப்போது, அந்த உயர் ஆன்ம போர்வீரன், ஒரு கணத்தையும் இழக்காமல், பெரும் சக்தி கொண்ட பல கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(2) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பீமசேனன், உமது மகனின் {துச்சாசனனின்} மீது கடுமையான ஓர் ஈட்டியை ஏவினான். சுடர்விடும் பந்தமெனத் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் அந்தப் பயங்கர ஈட்டியைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துச்சாசனன்}, முழுதாக வளைத்த தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட பத்து கணைகளால் அதை வெட்டினான்.(3) அவன் அந்தக் கடுஞ்சாதனையை அடைவதைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை உயர்வாகப் புகழ்ந்தனர். பிறகு உமது மகன் {துச்சாசனன்}, மற்றொரு கணையால் பீமனை ஆழத் துளைத்தான்.(4) துச்சாசனனைக் கண்டதும் கோபத்தால் சுடர்விட்டெரிந்த பீமன், அவனிடம், “ஓ! வீரா, வேகமாகவும், ஆழமாகவும், உன்னால் நான் துளைக்கப்பட்டேன். எனினும், மீண்டும் என் கதாயுதத்தின் வீச்சைத் தாங்கிக் கொள்வாயாக” என்றான்.(5)
இதைச் சொன்னவனும், சினத்தோடிருந்தவனுமான பீமன், துச்சாசனனைக் கொல்வதற்காகத் தனது பயங்கரமான கதாயுதத்தை எடுத்தான். மீண்டும் அவனிடம் {துச்சாசனனிடம்} பேசியவன் {பீமன்}, “ஓ! தீய ஆன்மா கொண்டவனே, இன்று இந்தப் போர்க்களத்தில் நான் உனது உதிரத்தைக் குடிப்பேன்” என்றான்.(6) இவ்வாறு சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, காலனுக்கே ஒப்பான ஒரு கடும் ஈட்டியைப் பெரும்பலத்தோடு பீமன் மீது வீசினான். கோபத்தால் நிறைந்த வடிவத்துடன் கூடிய பீமனும், தனது பயங்கரக் கதாயுதத்தைச் சுழற்றி, தன் எதிராளியின் மீது வீசினான்.(7) அந்தக் கதாயுதம், துச்சாசனனின் ஈட்டியை வேகமாக முறித்து, உமது மகனின் தலையைத் தாக்கியது. உண்மையில், உடலில் வழிந்தோடும் மதநீரோடு கூடிய யானையொன்றைப் போல வியர்த்துக் கொண்டிருந்த பீமன், அந்தப் பயங்கரப் போரில் தன் கதாயுதத்தை அந்த இளவரசன் {துச்சாசனன்} மீது வீசினான்.(8) பீமசேனன், அவ்வாயுதத்தைக் கொண்டு, பத்து விற்களின் நீளத்தின் அளவைக் கொண்ட தொலைவுக்குத் துச்சாசனனை அவனது தேரில் இருந்து பலமாக வீசியெறிந்தான். மூர்க்கமான அந்தக் கதாயுதத்தால் தாக்கப்பட்ட துச்சாசனன், தரையில் வீசியெறியப்பட்டு நடுங்கத் தொடங்கினான்.(9) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதம் வீழ்ந்ததால், அவனது குதிரைகள் அனைத்தும், அவனது தேரும் கூட அணுக்களாகக் குறைந்து போகின. துச்சாசனனைப் பொறுத்தவரையில், அவனது கவசம், ஆபரணங்கள், ஆடை, மாலைகள் ஆகியன இடம்பெயர்ந்திருந்தன, அவன் வலியால் பீடிக்கப்பட்டு நெளியத் தொடங்கினான்.(10)
பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட பீமசேனன், அப்போது, அந்தப் பயங்கரப் போரில், குரு படையின் முதன்மையான போர்வீரர்கள் பலருக்கு மத்தியில் நின்று கொண்டு, உமது மகன்களால் (பாண்டவர்களுக்கு) இழைக்கப்பட்ட பகையான அனைத்துச் செயல்பாடுகளையும் நினைவுகூர்ந்தான்.(11) நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைச் செய்தவனான வலிய கரங்களைக் கொண்ட பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அந்த அவல நிலையில்) துச்சாசனனைக் கண்டு, திரௌபதியின் குழல்கள் {கேசம்} பற்றப்பட்டதையும், அவள் நோயுற்றிருந்த போது ஆடை களையப்பட்டதையும்[1] நினைத்துப் பார்த்தான்.(12) உண்மையில், அக்காட்சியில் இருந்து கணவர்கள் முகம் திருப்பி அமர்ந்திருக்கையில் அந்த இளவரசிக்கு இழைக்கப்பட்ட பல்வேறு தீமைகளை நினைத்துப் பார்த்த அப்பாவி பீமன், நெருப்பில் ஊட்டப்பட்ட தெளிந்த நெய்க் காணிக்கையைப் போல[2] கோபத்தில் சுடர்விட்டெரிந்தான்.(13) கர்ணன், சுயோதனன், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன் ஆகியோரோடு பேசிய அவன், “இன்று நான் இந்தப் பொல்லாத துச்சாசனனைக் கொல்லப் போகிறேன். அனைத்துப் போர்வீரர்களும் (அவர்களால் முடிந்தால்) இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்” என்றான்.(14) இதைச் சொன்னவனும், பெரும் பலமும் சுறுசுறுப்பும் கொண்டவனுமான பீமன், துச்சாசனனைக் கொல்லும் விருப்பத்தால் திடீரென விரைந்தான்.(15)
[1] அநேகமாக, சபா பர்வத்திற்குப் பிறகு, ஆடை களையப்பட்ட நிகழ்வு இங்குச் சுட்டப்படுகிறது. ஆனால் அதுவும் பீமன் நினைத்ததாகவே சொல்லப்படுகிறது.[2] பிரசிக்தம் என்பது மூல வார்த்தை, அதற்கு நனைக்கப்பட்ட என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கடுமையும், மூர்க்கமும் கொண்ட சிங்கம் ஒன்று வலிமைமிக்க யானையை நோக்கி வரைவதைப் போலவே, வீரர்களில் முதன்மையான அந்த விருகோதரன் {பீமன்}, அந்தப் போரில் துச்சாசனனை நோக்கி விரைந்து, சுயோதனனும், கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்கினான். தன் தேரில் இருந்து கீழே குதித்துத் தரையில் இறங்கிக் கீழே விழுந்து கிடந்த எதிரியின் மீது கண்களைப் பொருத்தி நிலைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.(16) கூர்தீட்டப்பட்டதும், கூர்முனை கொண்டதுமான தன் வாளை உருவி, சினத்தால் நடுங்கிய அவன் {பீமன்}, தன் காலைத் துச்சாசனனின் தொண்டையில் வைத்து, தரையில் நீட்டிக் கிடந்த அந்தத் தன் எதிரியின் {துச்சாசனனின்} மார்பைப் பிளந்து, சூடான அவனது உயிர்க்குருதியைக் குடித்தான்.(17) பிறகு அவனைக் கீழே வீசி, உமது மகனின் தலையை அந்த வாளால் வெட்டியவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பி, சுவையில் இன்புறுவதற்காகத் தன் எதிரியின் உதிரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான். பிறகு கோபம் நிறைந்த கண்களுடன் அவனைப் துச்சாசனனைப்} பார்த்த அவன் {பீமன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(18,19) “என் எதிரியின் இந்த உதிரதத்தை, என் தாயின் பாலுக்கோ, தேனுக்கோ, தெளிந்த நெய்க்கோ, தேனில் இருந்து உண்டாக்கப்பட்ட நல்ல மதுவுக்கோ, நல்ல நீருக்கோ, {பசுவின்} பாலுக்கோ, தயிருக்கோ, மோருக்கோ, அமுதத்தைப் போன்ற மேன்மையான இனிய சுவையைக் கொண்ட அனைத்து வகையிலான பிற பானங்களுக்கோ சுவையில் மேம்பட்டதாக நான் கருதுகிறேன்” என்றான்.(20,21) கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய பீமன், கோபத்தால் தன் இதயம் நிறைந்து, இறந்து போன துச்சாசனனை மீண்டும் கண்டு, மெல்லப் புன்னகைத்து, “இதற்கு மேல் நான் உன்னை என்ன செய்ய முடியும்? மரணம் உன்னை என் கைகளில் இருந்து தப்பிக்க வைத்தது” என்றான்.(22)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், தன் எதிரியின் உதிரத்தைக் குடித்ததில் மகிழ்ச்சியில் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொல்லிப் போர்க்களத்தில் அச்சமூட்டியபோது, பின்னவனை {பீமனைக்} கண்டவர்கள் அச்சத்தால் கீழே விழுந்தனர்.(23) அக்காட்சியைக் கண்டும் கீழே விழாதவர்கள், தங்கள் கரங்களில் இருந்து ஆயுதங்கள் கீழே விழுவதைக் கண்டனர். அச்சத்திலிருந்த பலர், பலவீனமாகக் கதறி, பாதி மூடிய கண்களுடன் பீமனைப் பார்த்தனர்.(24) உண்மையில் பீமனைச் சுற்றி நின்றோர் அனைவரும், அவன் துச்சாசனனின் உதிரத்தைக் குடிப்பதைக் கண்டதும், அச்சத்தில் மூழ்கி, “இவன் மனிதனல்ல” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.(25) பீமன் இவ்வடிவத்தை ஏற்ற போது, அவன் தன் எதிரியின் உதிரத்தைக் குடிப்பதைக் கண்ட மக்கள், “இந்தப் பீமன் ராட்சசனாகவே இருக்க வேண்டும்” என்று ஒருவருக்கொருவர் சொன்னபடியே {கர்ணனின் தம்பியான} சித்திரசேனனோடு சேர்ந்து தப்பி ஓடினர்.(26)
அப்போது, (பாஞ்சால) இளவரசனும், தன் துருப்புகளின் தலைமையில் நின்று கொண்டிருந்தவனுமான யுதாமன்யு, பின்வாங்கிச் செல்லும் சித்திரசேனனை அச்சமில்லாமல் பின்தொடர்ந்து சென்று, ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கூரிய கணைகளால் அவனை வேகமாகத் துளைத்தான்.(27) மிதிபட்டதும், பெரும் சக்தியைக் கொண்டதுமான ஒரு பாம்பு, தன் நஞ்சைக் கக்க விரும்பி மீண்டும் மீண்டும் தன் நாவை வெளியே நீட்டுவதைப் போல, சித்திரசேனனும் திரும்பி மூன்று கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனையும் {யுதாமன்யுவையும்}, ஆறால் அவனது சாரதியையும் துளைத்தான்.(28) அப்போது துணிச்சல்மிக்க யுதாமன்யு, நல்ல சிறகைக் கொண்டதும், மிகக் கூரிய முனையைக் கொண்டதுமான ஒரு கணையை முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து மிகக் கவனமாக ஏவி, தன் எதிரியின் {சித்திரசேனனின்} தலையை வீழ்த்தினான்.(29) தன் தம்பியான சித்திரசேனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கோபத்தால் நிறைந்த கர்ணன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, அந்தப் பாண்டவப் படையை ஓடச் செய்ததால், நகுலன் அளவிலா சக்தி கொண்ட அவ்வீரனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(30)
பீமனும், (கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே) பழியுணர்ச்சி கொண்ட துச்சாசனனைக் கொன்ற பிறகு, அவனது உதிரத்தைச் சிறிதளவு எடுத்து, மிக ஓங்கிய நுரையீரலைக் {மூச்சுக் காற்றினைக்} கொண்ட அவன், உலகின் முதன்மையான வீரர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(31) “ஓ! மனிதர்களில் இழிந்தோரே, இதோ உங்கள் தொண்டையில் இருந்து உயிர்க்குருதியை நான் குடிக்கிறேன். (நீங்கள் முன்பு செய்ததைப் போலவே) மகிழ்ச்சியால் நிறைந்து எங்களை “விலங்கு, விலங்கு” என்று நிந்தியுங்கள்” என்று சொன்னான்.(32) மேலும் தொடர்ந்த அவன், “அப்போது, “விலங்கு, விலங்கு” என்று சொல்லி எங்களைப் பார்த்து ஆடியவர்கள், தங்கள் வார்த்தைகளை மீண்டும் சொன்னபடியே இப்போது ஆடப்போகிறார்கள்.(33) பிரமாணக்கோடி அரண்மனையில் எங்கள் உறக்கும், எங்கள் உணவில் கலக்கப்பட்ட நஞ்சு, கருநாகங்களின் கடிகள், அரக்கு வீட்டில் இடப்பட்ட நெருப்பு,(34) சூதாடித் திருடப்பட்ட எங்கள் நாடு, காடுகளுக்குள் நாங்கள் நாடுகடத்தப்பட்டது, கொடூரமாக பற்றி இழுக்கப்பட்ட திரௌபதியின் அழகிய கூந்தல்,(35) போரில் கணைகள் மற்றும் ஆயுதங்களின் வீச்சுகள், வீட்டில் நாங்கள் அடைந்த துயரங்கள், விராடனின் வசிப்பிடத்தில் நாங்கள் அடைந்த பிற துன்பங்கள் ஆகிய(36) அனைத்து துயரங்களும், சகுனி, துரியோதனன் மற்றும் ராதையின் மகனுடைய ஆலோசனைகளின் மூலமாக உங்களையே காரணமாக வைத்து நடந்தன.(37) திருதராஷ்டிரர் மற்றும் அவரது மகனின் {துரியோதனனின்} தீய குணங்களின் மூலமாகவே நாங்கள் இந்தக் கடுந்துயரங்களை அடைந்தோம். மகிழ்ச்சி எப்போதும் எங்களுடையதாக இருந்ததில்லை” என்றான் {பீமன்}.(38)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த வெற்றியாளன் விருகோதரன் {பீமன்}, மீண்டும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(39) உண்மையில் குருதியில் குளித்து, தன் காயங்களில் இருந்து உதிரம் பாய, மிகவும் சிவந்திருந்த முகத்துடன் பெரும் கோபத்தில் நிறைந்திருந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பீமசேனன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “வீரர்களே, போரில் துச்சாசனன் சம்பந்தமாக நான் என்ன சபதம் செய்திருந்தேனோ, அதை இன்று நிறைவேற்றிவிட்டேன்.(40) இரண்டாவது விலங்கான துரியோதனனையும், இந்தப் போர் வேள்வியில் கொன்று என் மற்றொரு சபதத்தையும்[3] நான் நிறைவேற்றுவேன். கௌரவர்களின் முன்னிலையில் அந்தத் தீய ஆன்மாக் கொண்டவனின் தலையை என் காலால் உதைத்த பிறகே நான் அமைதியை அடைவேன்” என்றான் {பீமன்}.(41) இவ்வார்த்தைகளைச் சொன்ன பீமன், பெரும் மகிழ்ச்சியில் நிறைந்து, குருதியில் நனைந்து, (அசுரனான) விருத்திரனைக் கொன்ற பிறகு முழங்கிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கவனும், உயர் ஆன்மா கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனுமான இந்திரனைப் போல உரக்க முழங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(42)
[3] வீமனெழுந்துரை செய்வான்; -- ‘இங்குவிண்ணவ ராணை, பராசக்தி யாணை;தாமரைப் பூவினில் வந்தான் -- மறைசாற்றிய தேவன் திருக்கழ லாணை;மாமகளைக் கொண்ட தேவன் -- எங்கள்மரபுக்குத் தேவன் கண்ணன்பதத் தாணை;காமனைக் கண்ணழ லாலே -- சுட்டுக்காலனை வென்றவன் பொன்னடி மீதில் 99‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்: -- இந்தஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,பேணும் பெருங்கன லொத்தாள் -- எங்கள்பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்நாணின்றி “வந்திரு” என்றான் -- இந்தநாய்மக னாந்துரி யோதனன் றன்னை,மாணற்ற மன்னர்கண் முன்னே, -- என்றன்வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே, 100‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் -- தம்பிசூரத் துச்சாதனன் தன்னையு மாங்கேகடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -- அங்குகள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.நடைபெறுங் காண்பி ருலகீர்! -- இதுநான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, -- இதுசாதனை செய்க, பராசக்தி!’ என்றான்
-மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பீமன் சபதம்
ஆங்கிலத்தில் | In English |