Nakula, made carless by Vrishasena! | Karna-Parva-Section-84 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களான பத்து பேரால் தாக்கப்பட்ட பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றது; பீமனின் ஆற்றலைக் கண்டு அச்சமடைந்த கர்ணன்; கர்ணனுக்கு உற்சாகமூட்டிய சல்லியன்; நகுலனுக்கும், கர்ணனின் மகனான விருஷசேனனுக்கும் இடையில் நடந்த மோதல்; விருஷசேனனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட நகுலன் பீமனின் தேரில் ஏறிக் கொண்டது; விருஷசேனனைக் கொல்லச் சொல்லி அர்ஜுனனை வற்புறுத்திய பீமனும், நகுலனும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் கொல்லப்பட்டபிறகு, போரில் பின்வாங்காதவர்களும், பெரும் தேர்வீரர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், கோபமெனும் நஞ்சு நிறைந்தவர்களுமான உமது மகன்களில் பத்து பேர், தங்கள் கணைகளால் பீமனை மறைத்தனர்.(1) நிஷாங்கின், கவசின், பாசின், தண்டதாரன், தானுகிரகன், அலோலூபன், சகன், ஷண்டன், வாதவேகன், சுவர்ச்சஸ் ஆகியனவே,(2) தங்கள் அண்ணன் கொலையால் பீடிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனனைத் தடுக்க ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான அந்தப் பத்து பேரின் பெயர்களாகும்.(3) அந்தப் பெரும் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட பீமன், சினத்தால் நெருப்பெனக் கண்கள் சிவந்து, கோபத்துடன் இருக்கும் அந்தகனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(4) எனினும் பார்த்தன் {பிருதையின் மகன்: பீமன் / அர்ஜுனன்}, தங்கக் கைவளைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பத்து இளவரசர்களை, தங்கச் சிறகுகளையும், பெரும் மூர்க்கத்தையும் கொண்ட பத்து அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்[1].(5)
[1] கர்ண பர்வம் பகுதி 80-ஐ மீண்டும் பார்க்கவும். அங்குள்ள சம்பவம் இங்கே மீண்டும் உரைக்கப்படுவதாகத் தெரிகிறது. அங்குக் குறிப்பிட்டப்பட்டிருக்கும் அடிக்குறிப்பு [3] உள்ள விளக்கம் இங்கும் பொருந்தும். கர்ண பர்வம் பகுதி 51வரை திருதராஷ்டிரன் மகன்களில் 74 / 73 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கர்ண பர்வம் பகுதி 83ல் துச்சாசனனையும், அதற்கடுத்த பகுதியான இந்த 84ம் பகுதியில் கொல்லப்படும் இந்தப் பத்து பேரையும் சேர்த்து, திருதராஷ்டிரன் மகன்களில் இதுவரை 85 / 84 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்தப் பத்து வீரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டவர்களால் உண்டான அச்சத்தினால் பீடிக்கப்பட்ட உமது படை, சூதன் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாழும் உயிரனங்களை அழிப்பவனுக்கு {காலனுக்கு) ஒப்பான பீமனின் ஆற்றலைக் கண்ட கர்ணனின் இதயத்திற்குள் பேரச்சம் நுழைந்தது.(7) சபைகளின் ரத்தினமான சல்லியன், கர்ணனின் தன்மைகளை ஆய்வு செய்து, அவனது மனநிலையைப் புரிந்து கொண்டு, அந்த நேரத்திற்கு ஏற்ற வார்த்தைகளை அந்த எதிரிகளைத் தண்டிப்பவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்:(8) “ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, வருந்தாதே. இஃது உனக்குத் தகாது. பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டே இம்மன்னர்கள் அனைவரும் ஓடுகின்றனர்.(9) உயர் ஆன்மப் பீமனால், துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்பட்டதன் விளைவாலும், அவனுக்கு நேர்ந்த பேரிடராலும் மிகவும் துன்புற்ற துரியோதனன் மலைப்படைந்திருக்கிறான்.(10)
கிருபரோடு கூடிய பிறரும், மன்னனின் தம்பியரில் இன்னும் எஞ்சியிருப்போரும்[2] பீடிக்கப்பட்ட இதயங்களுடனும், கவலையால் சினம் தணிவடைந்தும், துரியோதனனைச் சுற்றி அமர்ந்து அவனுக்கு ஆறுதலளிக்கின்றனர்.(11) தனஞ்சயன் {அர்ஜுனன்} தலைமையிலானவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களுமான அந்தப் பாண்டவ வீரர்கள் உன்னை எதிர்த்துப் போரிடவே வருகிறார்கள்.(12) இந்தக் காரணங்களுக்காக, ஓ! மனிதர்களில் புலியே, உன் ஆற்றல் அனைத்தையும் திரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை உன் கண் முன் நிறுத்தி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(13) (இந்தப் போரின்) மொத்த சுமையும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} உன் மீதே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, உன் பலத்திற்கும், சக்திக்கும் சிறந்தவாறு அந்தச் சுமையைச் சுமப்பாயாக.(14) வெற்றியிலேயே பெரும்புகழ் இருக்கிறது, தோல்வியிலோ, சொர்க்கம் நிச்சயமாக இருக்கிறது.(15) ஓ! ராதையின் மகனே, உன் மகனான விருஷசேனன், நீ மலைப்பில் மூழ்கியிருப்பதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து, பாண்டவர்களை நோக்கி அதோ விரைகிறான்” என்றான் {சல்லியன்}.(16) அளவிலா சக்தி கொண்ட சல்லியனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், ஆலோசித்தபடியே, போரானது தவிர்க்க இயலாததாகிவிட்டதென மாற்றமில்லாத தீர்மானத்தை அடைத்தான்.(17)
[2] நாம் கண்டு வரும் கணக்கின் படி துரியோதனனைத் தவிர்த்து திருதராஷ்டிர மகன்களில் இன்னும் 14/ 15 பேர் எஞ்சியிருக்க வேண்டும்.
அப்போது கோபத்தால் நிறைந்த விருஷசேனன், காலதண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பாகக் கதாயுதம் தரித்தவனும், உமது துருப்புகளைக் கொன்று கொண்டிருந்தவனும், பாண்டுவின் மகனுமான விருகோதரனை {பீமனை} நோக்கி விரைவாகத் தன் தேரைச் செலுத்தினான்.(18) வீரர்களில் முதன்மையான நகுலன், கோபத்தால் நிறைந்து, (அசுரன்) ஜம்பனை எதிர்த்து விரையும் வெற்றியாளன் மகவத்தை {இந்திரனைப்} போலக், கர்ணனின் மகனான தங்கள் எதிரியை நோக்கி மகிழ்ச்சியான இதயத்துடன் விரைந்து சென்று, கணைகளால் அவனைத் தாக்கினான்.(19) பிறகு, துணிச்சல்மிக்க அந்த நகுலன், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் கொடிமரத்தை, ஒரு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு அறுத்தான். அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு அவன் {நகுலன்}, தங்க வாருடன் இணைக்கப்பட்ட கர்ணன் மகனின் வில்லையும் அறுத்தான். (20)
அப்போது, வலிமையான ஆயுதங்களைக் கொண்ட கர்ணனின் மகன் {விருஷசேனன்}, துச்சாசனனுக்குத் தன் மரியாதையைக் காட்ட விரும்பி, மற்றொரு வில்லை வேகமாக எடுத்துக் கொண்டு, வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்கள் பலவற்றால், பாண்டுவின் மகனான நகுலனைத் துளைத்தான்.(21) பிறகு சினத்தால் நிறைந்த அந்த உயர் ஆன்ம நகுலன், சுடர்மிக்க எரிப்பந்தங்களுக்கு ஒப்பான கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான். ஆயுதங்களை நன்கறிந்தவனான கர்ணனின் மகனும், இதனால் நகுலன் மீது தெய்வீக ஆயுதங்களைப் பொழிந்தான்.(22) தனது எதிரியுடைய ஆயுதங்களின் வீச்சுகளால் கோபமடைந்ததாலும், தன் ஆயுதங்களின் சக்தியாலும், தன்னொளியாலும், தெளிந்த நெய்க் காணிக்கைகளால் ஊட்டப்படும் நெருப்பைப் போல அந்தக் கரண்ன் மகன் {விருஷசேனன்} சுடர்விட்டெரிந்தான்.(23) உண்மையில், ஓ! மன்னா, அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, வனாயு இனத்தைச் சேர்ந்தவையும், வெண்ணிறம் கொண்டவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மென்மையான நகுலனுக்குச் சொந்தமானவையுமான அழகிய குதிரைகளைத் தன் சிறந்த ஆயுதங்களால் கொன்றான்.(24) குதிரைகளற்ற தன் வாகனத்தில் இருந்து இறங்கிய நகுலன், பிரகாசமானதும், தங்க நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு கேடயத்தை எடுத்துக் கொண்டு, வானத்தைப் போன்ற நீலவண்ணம் கொண்ட வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, அடிக்கடி குதித்த படியே ஒரு பறவையைப் போல அங்கே திரிந்தான்.(25)
காற்றில் அழகிய பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டிய அந்தப் பாண்டுவின் மகன், முதன்மையான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் பலவற்றையும் வெட்டினான். அந்த வாளால் வெட்டப்பட்டவை, குதிரை வேள்வி ஒன்றில், {குதிரையை} வெட்டும் கடமையில் நியமிக்கப்பட்ட மனிதனால் வெட்டப்படும் விலங்குகளைப் போலப் பூமியில் விழுந்தன.(26) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், போரில் திளைப்பவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களும், நன்கு கூலி கொடுக்கப்பட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், சிறந்த சந்தனக் குழம்பை மேனியில் பூசியிருந்தவர்களுமான இரண்டாயிரம் வீரர்கள், வெற்றியின் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவனும், தனியொருவனுமான நகுலனால் வேகமாக வெட்டி வீழ்த்தப்பட்டனர்.(27) அப்போது, அந்தப் போரில் திடீரெனப் பெரும் வேகத்தோடு நகுலனை எதிர்த்து விரைந்த அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அவனைக் கொல்லும் விருப்பத்தால், பல கூரிய கணைகளைக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் துளைத்தான்.(28) இவ்வாறு (விருஷசேனனின்) கணைகளால் தாக்கப்பட்ட நகுலன், துணிச்சல்மிக்கத் தன் எதிராளியைப் பதிலுக்குத் தாக்கினான். பாண்டு மகனால் துளைக்கப்பட்ட அந்த விருஷசேனன், கோபத்தால் நிறைந்தான். எனினும், அந்தப் பயங்கரப் போரில், தன் அண்ணனான பீமனால் காக்கப்பட்ட உயர் ஆன்ம நகுலன், அந்தச் சந்தர்ப்பத்தில் பயங்கரச் சாதனைகளை அடைந்தான்.(29) சினத்தால் நிறைந்த கர்ணன் மகன், பிறகு, எந்த ஆதரவுமின்றி முதன்மையான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை அழித்துக் கொண்டு அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த வீர நகுலனை பதினெட்டு கணைகளால் துளைத்தான்.(30)
அந்தப் போரில் விருஷசேனனால ஆழத்துளைக்கப்பட்டவனும், பாண்டுவின் மகனும், மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டாவனுமான நகுலன், சினத்தால் நிறைந்து, கர்ணன் மகனைக் கொல்லும் விருப்பத்தோடு, அம்மோதலில் அவனை எதிர்த்து விரைந்தான்.(31) இறைச்சியில் விருப்பத்துடன் சிறகுகளை விரிக்கும் பருந்தொன்றைப் போலப் பெரும் சக்தி கொண்ட நகுலன், மிக வேகமாக எதிர்த்து சென்று கொண்டிருந்த போது, அவன் {நகுலன்} மீது கூரிய கணைமாரியை விருஷசேனன் பொழிந்தான்.(32) எனினும், தன் எதிராளியின் கணைமாரியைக் கலங்கடித்த நகுலன், பல்வேறு அழகிய அசைவுகளுடன் {கதிகளுடன்} திரிந்து கொண்டிருந்தான். ஓ! மன்னா, பெரும் சுறுசுறுப்புடனும், அந்த அழகிய அசைவுகளுடனும் நகுலன் திரிந்து கொண்டிருந்தபோது, அந்தப் பயங்கரப் போரில் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது {நகுலனின்} கேடயத்தைத் தன் வலிமைமிக்கக் கணைகளால் வெட்டினான்.(33) பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனை கொண்டதும், உருக்காலானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதும், எதிரிகளின் உடல்கள் அனைத்தையும் அழிக்கவல்லதும், பயங்கரமானதும், பாம்பின் நஞ்சைப் போலக் கடுமையானதும், உறையில் இருந்து உருவப்பட்டதுமான தன் வாளை நகுலன் மிக வேகமாகச் சுழற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு கணத்தையும் இழக்காத அந்த எதிரிகளைத் தடுப்பவன் (விருஷசேனன்), கூரிய கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆறால் அதை {அந்த வாளை} வெட்டினான். அதன் பிறகு, விருஷசேனன், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூர்முனை கொண்டவையுமான சில கணைகளால் தன் எதிராளியின் {நகுலனின்} நடுமார்பை ஆழமாகத் துளைத்தான்.(34,35)
உன்னதமான மனிதர்களால் பாராட்டப்பட்டவையும், வேறு மனிதனால் அடைய முடியாதவையுமான அந்த அருஞ்செயல்களை அவன் {விருஷசேனன்} அடைந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான நகுலன், பீமசேனனின் தேரை நோக்கிச் சென்றான்.(36) குதிரைகளற்றவனான அந்த மாத்ரியின் மகன், கர்ணனின் மகனால் இவ்வாறு பீடிக்கபட்டு, தனஞ்சயன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மலைச்சிகரத்தில் பாயும் சிங்கம் ஒன்றைப் போலப் பீமனின் தேர் மீது பாய்ந்தேறினான்.(37) அப்போது, உயர் ஆன்மா கொண்ட அந்த வீர விருஷசேனன், கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகன்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்தான்.(38) பாண்டு மகனின் (நகுலனின்) தேரானது அழிவடைந்த பிறகு, (விருஷசேனனால்) அவனது வாளும் வேகமாக வெட்டப்பட்ட பிறகு, குரு வீரர்களில் முதன்மையான பலர், ஒன்றாகச் சேர்ந்து, அந்தப் பாண்டவச் சகோதரர்களை அணுகி, கணைப் பொழிவால் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.(39)
அப்போது, தெளிந்த நெய்க்காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்புகள் இரண்டைப் போலக் கோபத்தால் நிறைந்தவர்களும், பாண்டுவின் மகன்களுமான அந்தப் பீமனும், அர்ஜுனனும், விருஷசேனன் மீதும், அவனைச் சுற்றிலும் கூடியிருந்த பிறர் மீதும் பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(40) அப்போது காற்று தேவனின் {வாயுத்தேவனின்} மகன் {பீமன்}, அந்தப் பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “நகுலன் பீடிக்கப்படுவதைப் பார். கர்ணனின் மகன் {விருஷசேனன்} எங்களைத் தடுக்கிறான். எனவே நீ அந்தக் கர்ணனின் மகனை எதிர்த்துச் செல்வாயாக” என்றான்.(41) இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் (அர்ஜுனன்), தன் அண்ணனான விருகோதரனின் {பீமனின்} தேரை அணுகினான். அவ்வீரன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்ட நகுலன் அவனிடம், “இவனை வேகமாகக் கொல்வீராக” என்றான்.(42) தன் எதிரே நின்று கொண்டிருந்த தன் தம்பி நகுலனால் அந்தப் போரில் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், உறுதிமிக்க வீரனுமான அந்த அர்ஜுனன், கேசவனால் {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்ட தன் குரங்குக் கொடி வாகனத்தை, விருஷசேனனை நோக்கி மிக வேகமாகச் செலுத்தச் செய்தான்” {என்றான் சஞ்சயன்}.(43)
ஆங்கிலத்தில் | In English |