Arjuna killed Karna's son Vrishasena! | Karna-Parva-Section-85 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : நகுலனைக் காக்க விரைந்த பாண்டவ வீரர்கள்; அவர்களை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; பாண்டவர்களுக்கு ஆதரவாக யானைப்படையுடன் வந்த குளிந்தர்கள்; குளிந்த இளவரசனைக் கொன்ற கிருபர்; குளிந்த இளவரசனின் தம்பியைக் கொன்ற சகுனி; சதானீகனின் குதிரைகளைக் கொன்ற கிருதவர்மன்; துரியோதனனின் மார்பைத் துளைத்த மற்றொரு குளிந்த இளவரசன், கிராதனையும் தாக்கி வீழ்த்தி, விருகனைத் துளைத்து, அவனது குதிரைகளைக் கொன்று, தேரை நொறுக்கியது; பப்ருவின் மகனான மகத இளவரசனைக் கொன்ற சதானீகன்; குளிந்த இளவரசனைக் கொன்ற சகுனி; கர்ணனின் மகனான விருஷசேனன் செய்த அருஞ்செயல்; அர்ஜுனனைத் தாக்கிய விருஷசேனன்; அபிமன்யுவை நினைத்து, கர்ணனை எச்சரித்து, விருஷசேனனைக் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனை நோக்கிக் கோபத்துடன் விரைந்த கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நகுலன் தேரிழந்ததையும், கர்ணன் மகனின் {விருஷசேனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டதையும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டதையும், அவனது கணைகள், வில், வாள் ஆகியன வெட்டப்பட்டதையும் அறிந்தவர்களும், எதிரிகள் அனைவரையும் தடுப்பவர்களுமான துருபதனின் ஐந்து வீரமகன்கள், ஆறாவதாகச் சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகிய பதினோரு பேரும், பேரொலியை எழுப்புபவையும், {அவற்றுடன்} பிணக்கப்பட்டுள்ள குதிரைகளால் இழுக்கப்படுபவையுமான தேர்களில், காற்றில் அசையும் கொடிகளுடனும், சாதித்த சாரதிகளால் வழிநடத்தப்பட்டும் வேகமாகச் சென்றனர். நன்கு ஆயுதம் தரித்திருந்த அந்தப் போர்வீரர்கள் {துருபதன் மகன்கள், சாத்யகி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோர்}, உமது யானைகள், தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளை, உறுதிமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் அழிக்கத் தொடங்கினர்.(1,2) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், சகுனியின் மகன் {சகுனியாகவே இருக்க வேண்டும்}, விருகன், கிராதன் மற்றும் தேவாவிரதன் ஆகிய முதன்மையான கௌரவத் தேர்வீரர்கள், தங்கள் விற்களைத் தரித்தும், யானைகள் அல்லது மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஆழமான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறியும் வேகமாக அவர்களை {அந்தப் பதினோரு பேரை} எதிர்த்துச் சென்றனர்.(3) மனிதர்களில் முதன்மையானவர்களும், தேர்வீரர்களில் முதல்வர்களுமான (பாண்டவப் படையின்) அந்தப் பதினோரை வீரர்களையும் தாக்கிய இந்தக் கௌரவ வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கணைகளால் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தனர். இதன் காரணமாக, மூர்க்கமும் வேகமும் கொண்டவையும், மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்தவையும், புதிதாய் எழுந்த மேகங்களின் வண்ணத்தைக் கொண்டவையுமான தங்கள் யானைகளைச் செலுத்திக் கொண்டு, கௌரவவீரர்கள் எதிர்த்து அந்தக் குளிந்தர்கள் {குணிந்தர்கள்} வந்தனர்.(4) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்டவையும், இமயப் பகுதிகளில் பிறந்தவையும், போருக்காக ஏங்கிய போர்வீரர்களால் {குளிந்தர்களால்}[1] செலுத்தப்பட்டவையுமான அந்த மதங்கொண்ட யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்டு ஆகாயத்திலிருக்கும் மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(5)
[1] கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் குளிந்தர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், வேறொரு பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் குணிந்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அப்போது அந்தக் குளிந்தர்களின் இளவரசன், முழுக்க இரும்பாலான பத்து கணைகளால் கிருபரையும், அவரது சாரதி மற்றும் குதிரைகளையும் மூர்க்கமாகத் தாக்கினான். (பதிலுக்கு) சரத்வான் மகனின் {கிருபரின்} கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசன் தன் யானையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(6) அப்போது அந்த இளவரசனின் தம்பியானவன், முழுக்க இருப்பாலானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்தவையுமான எண்ணற்ற வேல்களால் கிருபரின் தேரைத் தாக்கி உரத்த முழக்கங்களைச் செய்தான். எனினும், காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, முழங்கிக் கொண்டே இருந்த அந்தப் போர்வீரனின் தலையை {அவன் முழங்கிக் கொண்டிருக்கும்போதே} வெட்டினான்.(7) அந்தக் குளிந்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்த தங்கள் சங்குகளை முழக்கி, விற்களைத் தரித்துக் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(8) குருக்கள் ஒருபுறத்திலும், பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் மறுபுறத்திலுமென மீண்டும் நடந்த போரானது, கணைகள், கத்திகள், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றுடன் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் மாறி, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்குப் பெரும் அழிவைத் தந்தது.(9) தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோர், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, கீழே தரையில் விழுந்து, மின்னலின் சக்தியூட்டப்பட்டவையும், தொடர்ச்சியான இடி முழக்கத்தை உண்டாக்குபவையுமான மேகத்திரள்கள், காற்றால் அனைத்துப் பக்கங்களில் சிறடிக்கப்படும்போதான ஆகாயத்தைப் போல அந்தப் போர்க்களத்தை மாற்றினர்.(10)
அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, பெரும் யானைகளையும், தேர்வீரர்களையும், எண்ணிலா காலாட்களையும், சதானீகனின் குதிரையையும் தாக்கினான். கிருதவர்மனின் கணைகளால் தாக்கப்பட்ட இவை விரைவில் கீழே தரையில் விழுந்தன.(11) அதே நேரத்தில் அஸ்வத்தாமனின் கணைகளால் கொல்லப்பட்டவையும், அனைத்து வகை ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையும், சாதனை செய்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், உயர்ந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான மூன்று பெரும் யானைகள், இடியால் பிளக்கப்பட்ட பெரும் சிகரங்களைப் போல உயிரற்றுத் தரையில் விழுந்தன.(12) பிறகு, குளிந்தத் தலைவனின் மூன்றாவது சகோதரன், சிறந்த கணைகள் சிலவற்றால் உமது மகன் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். எனினும் உமது மகன் {துரியோதனன்}, அவனையும், அவனது யானையையும் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான்.(13) அப்போது, இளவரசனைத் தன் முதுகில் கொண்ட அந்த யானைகளின் இளவரசன், மழைக்காலங்களில், சச்சியின் தலைவனுடைய {இந்திரனுடைய} வஜ்ரத்தால் பிளக்கப்பட்டு விழும் செம்மலையொன்றின் சாரலில் செஞ்சுண்ண ஓடை பாய்வதைப் போல, தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் குருதியோடை வெளியேற கீழே விழுந்தது.(14) எனினும், அந்தக் குளிந்த இளவரசன், உரிய காலத்தில் தன்னைக் காத்துக் கொண்டு மற்றொரு யானையைச் செலுத்தினான். அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்த விலங்கானது {யானையானது}, கிராதனையும், அவனது சாரதி, குதிரைகள் மற்றும் தேரையும் தாக்கியது. எனினும், கிராதனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, இடியினால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலத் தன் சாரதியுடன் சேர்ந்து கீழே விழுந்தது.(15)
எனினும், மலைகளில் பிறந்தவனும், மற்றொரு யானையில் முதுகில் இருந்தவனுமான அந்த இளவரசனின் கணைகளால் தாக்கப்பட்ட வெல்லப்பட்ட முடியாத தேர்வீரனான அந்தக் கிராதர்களின் ஆட்சியாளன், தன் குதிரைகள், சாரதி, வில், கொடிமர்ம் ஆகியவற்றுடன், புயலால் வேரோடு பெயர்ந்து விழுந்த ஒரு பெரும் மரத்தைப் போலக் கீழே விழுந்தான்.(16) அப்போது விருகன், இமயத்தைத் தன் வசிப்பிடமாகக் கொண்டவனும், யானையில் நின்றிருந்தவனுமான அந்த இளவரசனின் பனிரெண்டு கணைகளால் துளைக்கப்பட்டான். அந்தப் பெரும் விலங்கு {யானை}, தன் நான்கு கால்களாலும், (கௌரவப் போர்வீரனான} விருகனின் குதிரைகளையும், தேரையும் வேகமாக நொறுக்கியது.(17) பிறகு தன் சாரதியுடன் கூடிய அந்த யானைகளின் இளவரசன், பப்ருவின் மகனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பின்னவனை {பப்ரு மகனை} எதிர்த்து மிக வேகமாக முன்னேறியது. எனினும் மகதர்களின் இளவரசனான அந்தப் பப்ருவின் மகனோ, சகாதேவன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்ட கீழே விழுந்தான்.(18) பிறகு அந்தக் குளிந்த இளவரசன், தன் தந்தங்களாலும், உடலாலும் முதன்மையான போர்வீரர்களைக் கொல்லவல்ல அந்த யானையுடன் சேர்ந்து, சகுனியைக் கொல்வதற்காக அவனை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான். அந்த மலைவாசி சகுனியைப் பீடிப்பதில் வெற்றியும் அடைந்தான். எனினும், விரைவில் அந்தக் காந்தாரர்களின் தலைவன் {சகுனி} அவனது {குளிந்த இளவரசனின்} தலையை அறுத்தான்.(19) அதே நேரத்தில் பெரும் யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்களின் பெருங்கூட்டமும் {நகுலனின் மகனான} சதானீகனால் தாக்கப்பட்டு, முடக்கமடைந்து, நொறுங்கி, கருடனின் சிறகுகளால் உண்டான புயல் தாக்கப்பட்ட பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(20)
அப்போது (கௌரவத் தரப்பைச் சார்ந்த) குளிந்த போர்வீரன் ஒருவன், சிரித்துக் கொண்டே, நகுலன் மகனான சதானீகனைக் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், நகுலன் மகனோ, தாமரைக்கு ஒப்பான தன் எதிராளியின் தலையை ஒரு கத்தித் தலைக் கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு, அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) அப்போது கர்ணனின் மகன் {விருஷசேனன்}, முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் சதானீகனையும், அதே அளவு கணைகளால் அர்ஜுனனையும் துளைத்தான். பீமனை மூன்று கணைகளாலும், நகுலனை ஏழாலும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} பனிரெண்டாலும் துளைத்தான்.(22) மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையும் அந்த விருஷசேனனின் அருஞ்செயலைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் பெரிதும் பாராட்டினர். எனினும், அவர்கள் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} ஆற்றலையும் அறிந்தவர்களாக இருந்ததால், நெருப்புக்குள் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே விருஷசேனனைக் கருதினர்.(23) அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மனிதர்களில் முதன்மையான மாத்ரியின் மகன் நகுலன் அனைவருக்கும் மத்தியில் தன் தேரை இழந்ததைக் கண்டும், கணைகளால் சிதைக்கப்பட்ட ஜனார்த்தனனைக் கண்டும், அந்தப் போரில் சூதன் மகனுக்கு (கர்ணனுக்கு) முன்பாக அப்போது நின்று கொண்டிருந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான்.(24) இந்திரனை எதிர்த்துச் செல்லும் நமுசியைப் போலவே பெருந்தேர்வீரனான அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, கடுமையானவனும், மனிதர்களில் முதன்மையானவனும், ஆயிரங்கணைகளைக் கொண்டவனும், தன்னை நோக்கி வருபவனுமான அர்ஜுனனை எதிர்த்து விரைந்தான்.(25)
எவருடைய ஆதரவுமற்ற அந்த உயர் ஆன்மக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அந்தப் போரில் ஒரு கணையால் வேகமாகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, பழங்காலத்தில் இந்திரனைத் துளைத்த பிறகு முழங்கிய நமுசியைப் போலவே பெருமுழக்கம் செய்தான்.(26) மீண்டு விருஷசேனன், உறுதிமிக்கக் கணைகள் பலவற்றால் பார்த்தனின் இடது கக்கத்தைத் துளைத்தான். அடுத்ததாக ஒன்பது கணைகளால் கிருஷ்ணனைத் துளைத்த அவன், மீண்டும் பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(27) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்த உறுதி மிக்கக் கணைகளால் விருஷசேனனால் துளைக்கப்பட்ட பிறகு, சற்றே கோபமடைந்து, கர்ணன் மகனை {விருஷசேனனைக்} கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(28) உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கோபத்தால் மூன்று கோடுகளுடன் பள்ளமாகிய புருவத்துடன், போரின் முன்னணியில் இருந்து, அம்மோதலில் விருஷசேனனின் அழிவுக்காக எண்ணற்ற கணைகளை விரைவாக ஏவினான்.(29)
யமனே போரிட்டாலும், அவனையும் கொல்ல வல்ல அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் சிவந்த கண்களுடன், பயங்கரமாகச் சிரித்தபடியே, கர்ணனிடமும், துரியோதனன் மற்றும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலிருந்த கௌரவர்களிடமும், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! கர்ணா, இந்தப் போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சீற்றமிக்க விருஷசேனனை என் கூரிய கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன். பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், தனியொருவனாக இருந்தவனும், ஆதரவற்றவனாகத் தன் தேரில் இருந்தவனுமான என் மகனை {அபிமன்யுவை}, நான் இல்லாத வேளையில், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்றதாக மக்கள் சொல்கின்றனர். எனினும் நான் உன் மகனை {விருஷசேனனை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். கௌரவத் தேர்வீரர்கள் அனைவரும் இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். சீற்றமிக்க விருஷசேனனை நான் கொல்வேன். அதன் பிறகு, ஓ! மூடா {கர்ணா}, அர்ஜுனனான நான் போருக்கு மத்தியில் வைத்து உன்னைக் கொல்வேன். இன்றைய போரில் நான் இந்தச் சச்சரவின் வேரும், துரியோதனனின் ஆதரவின் விளைவால் செருக்கடைந்திருப்பவனுமான உன்னைக் கொல்வேன். என் பலத்தை வெளிபடுத்தி, இந்தப் போரில் நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன், பீமசேனரோ, எவனது தீய கொள்கையின் மூலம், பகடையில் பிறந்த இந்தச் சச்சரவு எழுந்ததோ, அந்தத் துரியோதனனைக் கொல்லப் போகிறார்” என்றான் {அர்ஜுனன்}.(30-34) இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, அந்தப் போரில் விருஷசேனன் மீது இலக்கை வைத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ணன் மகனின் படுகொலைக்காக எண்ணற்ற கணைகளை ஏவினான்.(35)
அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அச்சமில்லாமலும், பெரும்பலத்துடனும், பத்து கணைகளால் விருஷசேனனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். கத்தித் தலை கொண்ட நான்கு கடுங்கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அவன் {அர்ஜுனன்}, விருஷசேனனின், வில், இரு கரங்கள் மற்றும் சிரத்தை அறுத்தான்.(36) பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கர்ணன் மகன் {விருசசேனன்}, கரங்களையும், சிரத்தையும் இழந்து, மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் மலர்களுடன் கூடிய ஒரு பெரும் சாலமரத்தைப் போலத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(37) தன் மகன் இவ்வாறு கணைகளால் தாக்கப்பட்டு, தன் வாகனத்தில் இருந்து விழுவதைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டுவனும், சூதன் மகனுமான கர்ணன், தன் மகனின் {விருஷசேனனின்} மரணத்தால் ஏற்பட்ட துயருடன் எரிந்து கோபத்தால் ஈர்க்கப்பட்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தனின் தேரை எதிர்த்து வேகமாத் தன் தேரில் சென்றான்.(38) உண்மையில், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனால் போரில் தன் மகன் {விருஷசேனன்} கொல்லப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்மக் கர்ணன், பெருங்கோபத்தால் நிறைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(39)
-------------------------------------------------------------------------------------[2] “மேலே காட்டப்பட்டிருப்பதுபோலப் பம்பாய்ப்பதிப்பில் 39 சுலோகங்கள் இருந்தாலும், இந்தப் பகுதியின் வரிகளுக்கு {சுலோகங்களுக்கு} எண்களைப் பொருத்தும் காரியத்தில், வங்க, அல்லது பம்பாய்ப் பதிப்புகளை நான் பின்பற்றவில்லை. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்து வங்க உரைகளும் பிழையானவையாகவே தெரிகின்றன” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பகுதியில் 9ம் சுலோகத்தோடு முடிந்துவிடுகிறது. அதாவது விருஷசேனன் வதம் அதில் சொல்லப்படவில்லை. நமக்கும் இந்தப் பகுதி முழுவதும் இயல்பான நடையுடன் இருப்பதாகத் தெரியவில்லை. பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இதே நிலைதான்.
கர்ண பர்வம் பகுதி -85ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |