Arjuna proceeded against Karna! | Karna-Parva-Section-86 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனைக் கொல்ல அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டிய கிருஷ்ணன்; அன்றைக்கே கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை எனக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனை எதிர்த்துக் குதிரைகளைத் தூண்டிய கிருஷ்ணன்; கர்ணனை அடைந்த அர்ஜுனனின் தேர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரிய வடிவத்தைக் கொண்டவனும், முழங்கிக் கொண்டிருப்பவனும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவனுமான கர்ணன், பொங்கும் கடலென முன்னேறிவருவதைக் கண்ட மனிதர்களில் காளையான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(1) “வெண்குதிரைகளைக் கொண்டவனும், சல்லியனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான தேர்வீரனை {கர்ணனை} எதிர்த்தே நீ போரிடப் போகிறாய். எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}! உன் பொறுமை அனைத்தையும் அழைப்பாயாக {திரட்டுவாயாக}.(2) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நன்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள கர்ணனின் தேரைக் காண்பாயாக. வெண்குதிரைகள் இணைக்கப்பட்டுள்ள அதில் {அந்தத் தேரில்} ராதையின் மகனே {கர்ணனே} போர்வீரனாக நின்று கொண்டிருக்கிறான்.(3) கொடிகள் நிறைந்ததும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அது {அந்தத் தேர்}, வெண்ணிறம் கொண்ட குதிரைகளால், ஆகாயத்தில் தாங்கிச் செல்லப்படும் தெய்வீகத் தேரைப் போலவே தெரிகிறது.(4) யானை கட்டும் கயிற்றைப் பொறியாக {இலச்சனையாகக்} கொண்டதும், இந்திரனின் வில்லைப் போலத் தெரிவதும், ஆகாயத்தைத் தெளிவான கோட்டால் பிரிப்பதுமான அந்தக் கர்ணனின் கொடிமரத்தைக் காண்பாயாக.(5)
மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணை மாரியை ஏவி வருபவனும், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தால் முன்னேறி வருபவனுமான கர்ணனைக் காண்பாயாக.(6) அங்கே, அந்தத் தேரின் முதன்மைப் பகுதியில் வீற்றிருக்கும் மத்ரர்களின் அரசத் தலைவனே {சல்லியனே}, அளவிலா சக்தி கொண்ட ராதையின் மகனுடைய குதிரைகளை வழிநடத்தி வருகிறார்.(7) அவர்களுடைய {கௌரவர்களுடைய} பேரிகைகளின் முழக்கத்தையும், சங்குகளின் கடும் ஒலியையும் கேட்பாயாக. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அனைத்துப் பக்கங்களில் இருந்து வரும் பல்வேறு சிங்க முழக்கங்களைக் கேட்பாயாக.(8) அளவிலா சக்தி கொண்ட கர்ணனால் வளைக்கப்படுவதும், பிற பேரொலிகள் அனைத்தையும் அமைதியாக்குவதுமான (விஜயம் என்ற) வில்லின் பயங்கர நாணொலியைக் கேட்பாயாக.(9) அங்கே, அந்தப் பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பின்தொடர்ந்து வருபவர்கள், பெருங்காட்டில் உள்ள மான்கூட்டமொன்று கோபக்கார சிங்கமொன்றைக் கண்டது போலப் பிளந்து ஓடுகின்றனர்.(10)
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சூதன் மகனை {கர்ணனை} நீ மிகக் கவனமாகக் கொல்வதே உனக்குத் தகும். உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் கர்ணனின் கணைகளைத் தாங்கிக் கொள்ளத் துணிய மாட்டான்.(11) மூன்று உலகங்களையும், அவற்றில் உள்ள அசையும், மற்றும் அசையா உயிரினங்களையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் போரில் வெல்லத்தகுந்தவன் நீ என்பதை நான் நன்கு அறிவேன்.(12) கடுமையானவனும், பயங்கரமானவனும், பெருந்தேவனும், மூக்கண் சர்வனும், கபர்தின் என்று அழைக்கப்படுவபனுமான அந்த ஈசானனுடனே {சிவனுடனேயே} நீ போரிட்டாய் எனும்போது, வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது.(13) எனினும், உயிரினங்கள் அனைத்தின் அருளுக்கும் மூலகாரணனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுவனும், அந்தத் தேவர்களுக்குத் தேவனுமான சிவனையே நீ போரில் நிறைவு செய்திருக்கிறாய். பிற தெய்வங்கள் அனைவரும் உனக்கு வரங்களை அளித்திருக்கின்றனர்.(14) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்தத் தேவர்களுக்குத் தேவனும், திரிசூலம் தரித்தவனுமான அந்தத் தெய்வத்தின் {சிவனின்} அருளால், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, {அசுரன்} நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ கர்ணனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(15)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, என் வெற்றி உறுதியானதே. ஓ! மதுசூதனா, உலகங்கள் அனைத்திற்கும் ஆசானான நீ என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால் இஃதில் எந்தச் சந்தேகமும் இல்லை.(16) ஓ! ரிஷிகேசா, ஓ! பெரும் தேர்வீரா, என் குதிரைகளையும், தேரையும் தூண்டுவாயாக. இன்று கர்ணனைக் கொல்லாமல் போரில் இருந்து பல்குனன் {அர்ஜுனன்} திரும்பமாட்டான்.(17) இன்று கர்ணன் கொல்லப்படுவதையும், என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதையும் காண்பாயாக. அல்லது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, (கர்ணனின்) கணைகளால் நான் கொல்லப்படுவதை இன்று காண்பாயாக.(18) மூவுலங்கங்களையும் மலைக்கச்செய்ய வல்ல அந்தப் பயங்கப்போரானது நெருங்கி வருகிறது. இந்தப் பூமி உள்ளளவும் இதைக் குறித்து மக்கள் பேசப் போகின்றனர்” என்றான் {அர்ஜுனன்}.(19)
உழைப்பால் எப்போதும் களைக்காத கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பகையானையை எதிர்த்து விரையும் யானையொன்றைப் போலக் கர்ணனை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(20) பெரும் சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ரிஷிகேசா, காலங்கடக்கிறது, குதிரைகளைத் தூண்டுவாயாக” {என்று சொன்னான்}. இவ்வாறு பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்},(21) அவனை வெற்றியடையும்படி வாழ்த்தி, மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, பெரும் வேகத்தைக் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} தேரானது, கர்ணனின் தேருடைய முகப்பை அடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(22)
-------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -86ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |