Friday, May 12, 2017

ஆகாயத்தில் நின்ற தேவாசுரர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 87

Celestials and Asuras stationed in the firmament! | Karna-Parva-Section-87 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நேரப்போகும் போரைக் காண ஆகாயத்தில் கூடிய தேவாசுரர்கள்; முறையே இரண்டு தரப்பாகத் தேவாசுரர்கள் பிரிந்தது; கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் வெற்றியானது சமமானதாக இருக்க வேண்டும் என்று உயிரினங்களால் பிரம்மனிடம் விரும்பிக் கேட்கப்பட்டது; அர்ஜுனனுக்கே வெற்றி என இந்திரனும்; கர்ணனுக்கே வெற்றி எனச் சூரியனும் விரும்பி கேட்டது; அர்ஜுனனே வெற்றிபெறுவான் என்று சொன்ன பிரம்மனும், ஈசானனும்; கர்ணன், சல்லியன் உரையாடல்; அர்ஜுனன், கிருஷ்ணன் உரையாடல்; கர்ணனை நிச்சயம் கொல்லப்போவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{தன் மகன்} விருஷசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், துயரத்தாலும், சினத்தாலும் நிறைந்து, தன் மகனின் மரணத்திற்காகக் கண்களில் கண்ணீரைச் சிந்தினான்.(1) பெரும் சக்தியையும், சினத்தால் தாமிரமெனச் சிவந்த கண்களையும் கொண்ட கர்ணன், தன் எதிரியான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போருக்கழைத்து, அவன் முகத்திற்கு நேராகச் சென்றான்.(2) அப்போது சூரியப் பிரகாசம் கொண்டவையும், புலித் தோல்களால் மூடப்பட்டவையுமான அந்தத் தேர்கள் இரண்டும், அருகருகே இருக்கும் இரு சூரியன்களைப் போலத் தெரிந்தன.(3) வெண் குதிரைகளைக் கொண்டவர்களும், எதிரிகளை நொறுக்கும் போர்வீரர்களும், பெரும் வில்லாளிகளும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, ஆகாயத்திலுள்ள சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(4) இந்திரனுக்கும், விரோசனன் மகனுக்கும் (பலிக்கும்) ஒப்பான அவ்வீரர்கள் இருவரும், மூவுலகையும் வெற்றிக் கொள்ளப் போருக்குத் தயாராவதைக் கண்டு, உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தில் நிறைந்தன.(5)


தேர்ச்சக்கரச் சடசடப்பொலிகள், வில்லின் நாணொலிகள், உள்ளங்கை ஒலி, கணைகளின் விஸ் ஒலி, சிங்க முழக்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர் வீரர்கள் இருவரும், ஒருவரையொருவர் எதிர்த்து விரைவதைக் கண்டும், கர்ணனின் யானை கட்டும் கயிற்றையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} குரங்கையும் கொண்ட கொடிமரங்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் அணுகுவதைக் கண்டும், பூமியின் தலைவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் நிறைந்தனர்.(6,7) ஒருவரோடொருவர் மோதப்போகும் அவ்விரு தேர்வீரர்களைக் கண்ட மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிங்க முழக்கங்களைச் செய்தபடியே அவர்களை மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தினர்.(8) பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கர்ணனுக்கு இடையிலான தனிப்போரைக் கண்ட ஆயிரக்கணக்கான போராளிகள், தங்கள் கக்கங்களை அறையவும், தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைக்கவும் செய்தனர்.(9) கௌரவர்கள், கர்ணனை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் இசைக்கருவிகளை இசைத்து, எண்ணற்ற சங்குகளை முழக்கினர்.(10) அதே போல, பாண்டவர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக எக்காளங்கள் மற்றும் சகங்களைக் கொண்டு திசைகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தனர்.(11)

கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கு இடையிலான அந்த மோதல் நேர்ந்த சமயத்தில், துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் செய்த அந்தச் சிங்க முழக்கங்கள், கக்க அறைதல்கள், பிற உரத்த கூச்சல்கள் மற்றும் முழக்கங்கள் பேராற்றல் வாய்ந்தனவாக இருந்தன.(12) மனிதர்களில் புலிகளும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவர்கள் {கர்ணனும், அர்ஜுனனும்} தங்கள் உறுதிமிக்க வில், கணைகள் மற்றும் ஈட்டிகளை ஆயத்தம் செய்து கொண்டு, நெடுங்கொடிமரங்களுடன் கூடிய தங்கள் தேர்களில் நின்று கொண்டிருப்பதை மக்கள் கண்டனர்.(13) கவசம் பூண்டு, கத்திகளைக் கச்சையில் கட்டிக் கொண்டு, வெண்குதிரைகளில் வந்த அவ்விருவரும், சிறந்த சங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். ஒருவன் {அர்ஜுனன்} கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டிருந்தான், மற்றவனோ {கர்ணனோ} சல்லியனைத் தன் சாரதியாகக் கொண்டிருந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் இருவரும் ஒருவர் போலவே தெரிந்தனர்.(14) சிங்கக் கழுத்துகளையும், நீண்ட கரங்களையும், சிவந்த கண்களையும் கொண்ட அவர்கள் இருவரும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மின்னலின் கீற்றுகளைப் போலத் தெரிந்த விற்களைத் தரித்துக் கொண்ட அவர்கள் இருவரும், ஆயுத செல்வத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.(15)

வெண்சாமரங்களால் வீசப்பட்டு, தங்கள் தலைக்கு மேலே வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டவர்களாக அவ்விருவரும் இருந்தனர். சிறந்த அம்பறாத்தூணிகளைக் கொண்ட அவர்கள் இருவரும், மிகவும் அழகாகத் தெரிந்தனர்.(16) அவ்விருவரும் செஞ்சந்தனக் குழம்பால் பூசப்பட்டு, மதங்கொண்ட இரு காளைகளைப் போலத் தெரிந்தனர். சிங்கத்தைப் போல அகன்ற கழுத்தையும், அகன்ற மார்பையும் கொண்டவர்களான அவ்விருவரும், பெரும்பலத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் அறைகூவி அழைத்த அவர்களில் ஒவ்வொருவரும், அடுத்தவனைக் கொன்றுவிட விரும்பினர். மாட்டுக் கொட்டகையில் உள்ள வலிமைமிக்கக் காளைகளைப் போல, அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(18) மதங்கொண்ட இரு யானைகளைப் போலவோ, கோபத்துடன் கூடிய மலைகளைப் போலவோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்குட்டிகளைப் போலவோ, அனைத்தையும் அழிக்கும் யமன்களைப் போலவோ அவர்கள் இருந்தனர்.(19) இந்திரனையும், விருத்திரனையும் போல ஒருவரோடொருவர் சினம் கொண்ட அவர்கள், காந்தியில் சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர். கோபத்தால் நிறைந்த அவர்கள், யுக முடிவின் போது, உலகை அழிக்க எழும் வலிமைமிக்கக் எரிக்கோள்கள் இரண்டுக்கு ஒப்பாக இருந்தனர்.(20)

அவர்கள் இருவரும் தெய்வீகத் தந்தைமாருக்குப் பிறந்தவர்களாகவும், அழகில் தேவர்களுக்கு ஒப்பானவர்களாகவும், சக்தியில் தேவர்களைப் போன்றவர்களாகவும் இருந்தனர். உண்மையில் தாமாகவே அந்தப் போர்க்களத்தில் சூரியனாகவும், சந்திரனாகவும் அவர்கள் தெரிந்தனர்.(21) அவ்விருவரும், பெரும் வலிமை கொண்டவர்களாகவும், போரில் செருக்கு நிறைந்தவர்களாவும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும் இருந்தனர். புலிகளின் மூர்க்கத்தைக் கொண்டவர்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விரு வீரர்களையும் கண்ட உமது துருப்பினர், ஓ! ஏகாதிபதி, பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(22) மனிதர்களில் புலிகளான கர்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிருவரும் போரிடுவதைக் கண்ட அனைவரின் இதயங்களுக்குள்ளும், அவர்களில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற ஐயம் நுழைந்தது.(23) மேன்மையான ஆயுதங்களைக் கொண்டவர்களும், போரில் நன்கு பயிற்சி பெற்றவர்களுமான அவ்விருவரும், தங்கள் கக்கங்களை அறைந்து {அவ்வொலியால்} ஆகாயத்தை எதிரொலிக்கச் செய்தனர்.(24) ஆற்றல் மற்றும் வலிமையின் விளைவால் பெரும் வேகத்தைக் கொண்ட அவர்களின் போர்த்திறனைப் பொறுத்தவரை, அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பானவர்களாக அவ்விருவரும் இருந்தனர்.(25)

அவ்விருவரும் போரில் கார்த்தவீரியனுக்கோ, தசரதன் மகனுக்கோ {இராமனுக்கோ} இணையானவர்களும், சக்தியில் விஷ்ணுவுக்கோ, போரில் பவனுக்கோ {சிவனுக்கோ} இணையானவர்களாக இருந்தனர்.(26) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்ட அவ்விருவரும், முதன்மையான தேர்களால் சுமக்கப்பட்டார்கள். மேலும் அந்தப் போரில் அவ்விருவரும் முதன்மையான சாரதிகளைக் கொண்டிருந்தனர்.(27) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தேர்களில் பிரகாசமாகத் தெரிந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரையும் காண அங்கே வந்திருந்த சித்தர்கள் மற்றும் சாரணர்கள் கூட்டம் ஆச்சரியத்தால் நிறைந்தது.(28) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கள் துருப்புகளுடன் கூடிய தார்தராஷ்டிரர்கள், காலம் எதையும் இழக்காமல், போர்க்கள ரத்தினமான உயர் ஆன்மக் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(29) அதேபோலவே, திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாண்டவர்களும், மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் நிகரில்லாதவனான உயர் ஆன்மப் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், உமது படையின் பணயப் பொருளாகக் கர்ணனும், பாண்டவர்களின் பணயப் பொருளாகப் பார்த்தனும் {அர்ஜுனனும்} ஆனார்கள்.(31) அந்தச் சபையின் உறுப்பினர்களான இருதரப்புப் படைவீரர்களும், அவ்விளையாட்டின் பார்வையாளர்களானார்கள். உண்மையில், அந்தப் போர்விளையாட்டில் ஈடுபட்டோரைப் பொறுத்தவரை, வெற்றியோ, தோல்வியோ உறுதியானதாகவே இருந்தது.(32) கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய அவ்விருவரும் வெற்றிக்காவோ, நேர்மாறான நிலைக்காகவோ நமக்கும், பாண்டவர்களுக்குமான போர்க்கள விளையாட்டை நின்றபடியே தொடங்கினார்கள்.(33) போரில் திறம்பெற்றவர்களான அவ்விருவரும், ஓ! ஏகாதிபதி, அம்மோதலில் ஒருவரோடொருவர் மிகவும் கோபம் கொண்டு, ஒருவரையொருவர் கொல்ல விலும்பினர்.(34) இந்திரன் மற்றும் விருத்திரனைப் போல, ஒருவரையொருவர் உயிரெடுக்க விரும்பிய அவர்கள், பயங்கர வடிவம் கொண்ட இரு பெரும் எரிநட்சத்திரங்களைப் போல ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(35)

அப்போது ஆகாயத்தில் இருந்த உயிரினங்களுக்கு மத்தியில், கர்ணன் மற்றும் அர்ஜுனன் குறித்த காரியத்தில் தூற்றுதல்களுடன் கூடிய வேற்றுமைகளும், சர்ச்சைகளும் எழுந்தன. உலகவாசிகள் அனைவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்களுக்குள் வேறுபடுவது கேட்கப்பட்டது.(36) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள் {நாகர்கள்}, ராட்சசர்கள் ஆகியோர் கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான அம்மோதலில் எதிரெதிர் பக்கங்களை எடுக்க நேர்ந்தது.(37) விண்மீன்களுடன் கூடிய ஆகாயமானது, ஓ! ஏகாதிபதி, கர்ணனின் காரியத்தில் ஆவல் கொண்ட அதே வேளையில், இந்தப் பரந்த பூமியானது {பூமியானவள்}, மகனிடம் தாய்க் கொள்ளும் ஆவலைப் போல, பார்த்தனின் {அர்ஜுனனின்} காரியத்தில் ஆவல்கொண்டது {ஆவல்கொண்டாள்}[1].(38) ஆறுகள், கடல்கள், மலைகள், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மரங்கள், இலையுதிர்க்கும் செடிகள் மற்றும் கொடிகள் ஆகியன கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் தரப்பை ஏற்றன.(39) அசுரர்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள், ஓ! எதிரிகளை எரிப்பவரே, கருங்காக்கைகள் மற்றும் பிற வானுலாவிகள் ஆகியன கர்ணனின் தரப்பை ஏற்றன.(40)

[1] வேறொரு பதிப்பில், “இந்த யுத்தத்தில் நக்ஷத்திரங்களுடன் கூடிய ஆகாயமானது கர்ணனுடைய பக்ஷத்திலிருந்தது. பார்த்தனுக்கு மாதாவான விசாலமான பூமியானது புத்திரனுக்கு ஜயத்தை விரும்பிற்று” என்றிருக்கிறது.

ரத்தினங்கள், விலைமதிக்கமுடியாத செல்வங்கள் அனைத்தும், வரலாறுகளை ஐந்தாவதாகக் கொண்ட நான்கு வேதங்கள், உபவேதங்கள், உபநிஷத்துகளுடன் கூடிய அதன் புதிர்களும், தொகுப்புகளும்,(41) வாசுகி, சித்திரசேனன், தக்ஷகன், உபதக்ஷகன், மலைகள் அனைத்தும், தங்கள் பிள்ளைகளுடன் கூடிய கத்ருவின் வாரிசுகள் அனைவரும், நஞ்சுடன் கூடிய பெரும்பாம்புகள் அனைத்தும், நாகர்களும் அர்ஜுனன் தரப்பை ஏற்றன.(42) ஐராவதனும் அவனது பிள்ளைகளும், சுரபியின் வாரிசுகள், வைசாலியின் வாரிசுகள், போகினிகள் ஆகியோரும் அர்ஜுனனை ஏற்றன. சிறு பாம்புகள் அனைத்தும் கர்ணனின் தரப்பை அடைந்தன. ஓநாய்கள், காட்டு மான்கள், மங்கலகரமான அனைத்து வகை விலங்குகள், பறவைக் ஆகியன, ஓ! மன்னா, பார்த்தனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பின.(44) வசுக்கள், மருத்துக்கள், சத்யஸ்கள், ருத்திரர்கள், விஸ்வதேவர்கள், அசுவினிகள், அக்னி, இந்திரன், சோமன், பவனன் ஆகியோரும் மற்றும் திசைகளின் பத்து புள்ளிகளும் தனஞ்சயனின் ஆதரவாளர்களானார்கள், அதே வேளையில் ஆதித்யர்கள் அனைவரும் கர்ணனின் தரப்பை ஏற்றனர்.(45)

வைசியர்கள், சூத்திரர்கள், சூதர்கள், பிறப்பால் கலப்பு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அனைவரும், ஓ! மன்னா, ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} தரப்பை ஏற்றனர்.(46) எனினும், தேவர்கள், பித்ருக்கள், அவர்களோடிருந்தவர்கள், அவர்களைப் பின்தொடர்பவர்கள், யமன், வைஸ்ரவணன் {குபேரன்}, வருணன் ஆகியோர் அர்ஜுனனின் தரப்பிலிருந்தனர். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரும், வேள்விகள், தக்ஷிணைகள் என்றழைக்கப்படும் கொடைகள் ஆகியனவும் அர்ஜுனனின் தரப்பை ஏற்றன.(47) பிரேதங்கள், பிசாசங்கள், ஊனுண்ணும் பல விலங்குகள் மற்றும் பறவைகள், கடல்வாழ் அசுரர்களுடன் கூடிய ராட்சசர்கள், நாய்கள், நரிகள் ஆகியன கர்ணனின் தரப்பை ஏற்றன.(48) தெய்வீக, மறுபிறப்பாள, அரச முனிகளின் பல்வேறு இனங்கள், பாண்டு மகனை {அர்ஜுனனை} ஏற்றனர். தும்புருவின் தலைமையிலான கந்தர்வர்கள், ஓ! மன்னா, அர்ஜுனன் தரப்பில் இருந்தனர்.(49) ஓநாய்கள், மான்கள், யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள், மேகங்கள், காற்று ஆகியவற்றைத் தங்கள் வாகனங்களாகக் கொண்ட பிராதா மற்றும் மௌனி ஆகியோரின் வாரிசுகள், கந்தர்வர்களில் பல்வேறு வகையினர், அப்சரஸ்கள், விவேகிகளான தவசிகள் பலர் ஆகியோர், கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான அம்மோதலைக் காண அங்கே வந்தனர்.(50,51)

தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பறவைகள், வேதங்களை அறிந்தவர்களான பெரும் முனிவர்கள், ஸ்வாதா என்றழைக்கப்படும் கொடைகளில் வாழும் பித்ருக்கள்,(52) தவம், அறிவியல்கள், பல்வேறு நன்மைகளைக் கொண்ட (தெய்வீக) மூலிகைகள் ஆகியன, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே வந்து நிலைகொண்டு பேரொலியை எழுப்பின.(53) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களுடன் கூடிய பிரம்மனும், உயிரினங்களின் தலைவனும், தேரில் இருந்தவனுமான பவனும் {சிவனும்}, ஆகாயத்தின் அந்தப் பகுதிக்கு வந்தனர்.(54) உயர் ஆன்மா கொண்டோரான கர்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் மோதப்போவதைக் கண்டு சக்ரன் {இந்திரன்}, “அர்ஜுனன், கர்ணனை வெல்லட்டும்” என்றான். எனினும் சூரியனோ, “கர்ணன், அர்ஜுனனை வெல்லட்டும்.(55) உண்மையில், என் மகன் கர்ணன், அர்ஜுனனைக் கொன்று இந்தப் போரில் வெற்றியை அடையட்டும்” என்றான்.(56)

அங்கே இருந்த சூரியன் மற்றும் வாசவன் {இந்திரன்} ஆகிய அந்தப் புகழ்பெற்ற இருவரும், எதிரெதிர் தரப்புகளை ஏற்று, இவ்வாறே ஒருவரோடொருவர் சர்ச்சை செய்து கொண்டனர்.(57) உயர் ஆன்மா கொண்டோரான கர்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும் போரிடப் போவதைக் கண்டு தேவர்களும், அசுரர்களும் எதிரெதிர் தரப்புகளை ஏற்றனர்.(58) தெய்வீக முனிவர்கள், தேவர்கள் அனைவரும், உயிரினங்கள் அனைத்துடனும் கூடிய மூவுலகமும் அந்தக் காட்சியைக் கண்டு நடுங்கினர்.(59) தேவர்கள், பார்த்தனின் தரப்பிலிருந்தனர், அசுரர்களோ, கர்ணனின் தரப்பிலிருந்தனர். இவ்வாறே அம்மோதலில் விருப்பம் கொண்ட உயிரினங்கள் அனைத்தும், இங்கோ, அங்கோ எனத் தேர்வீரர்களில் தலைவர்களான குரு அல்லது பாண்டவ வீரனின் தரப்பை ஏற்றன.(60)

தான்தோன்றியான படைப்புத்தலைவனை (பிரம்மனைக்) கண்ட தேவர்கள், அவனிடம், “ஓ! தேவா, மனிதர்களில் சிங்கங்களான இவ்விருவருக்கும் வெற்றிச் சமமானதாக இருக்கட்டும். கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கு இடையிலான இம்மோதலின் விளைவாக இந்தப் பரந்த அண்டம் அழியாதிருக்கட்டும். ஓ! தான்தோன்றியே, இவ்விருவருக்கும் இணையான வெற்றியே கிட்டட்டும் என்ற வார்த்தையை மட்டும் சொல்வீராக” என்றனர்.(62) இவ்வார்த்தைகளைக் கேட்ட மகவத் {இந்திரன்}, பெரும்பாட்டனை வணங்கி, நுண்ணறிவு கொண்ட அனைத்திலும் முதன்மையான அந்தத் தேவர்களுக்குத் தேவனிடம் {பிரம்மனிடம்}, “கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் எப்போதும் வெற்றியை அடைவது உறுதியென நீரே முன்பு சொல்லியிருக்கிறீர். நீர் சொன்னவாறே (இப்போது) ஆகட்டும். ஓ! புனிதமானவரே {பிரம்மனே}, என்னிடம் நிறைவு கொள்வீராக” என்று சொன்னான்.(64)

இதைக் கேட்ட பிரம்மனும், ஈசானனும், அந்தத் தேவர்களின் தலைவனிடம் {இந்திரனிடம்}, “வேள்விக் கொடைகளை உண்பவனை {அக்னிதேவனைக்} காண்டவ வனத்தில் நிறைவு செய்தவனும், ஓ! சக்ரா {இந்திரா}, சொர்க்கத்திற்கு வந்து உனக்கு உதவியவனும், சவ்யசச்சினும் {இரு கரங்களைப் பயன்படுத்துபவனும்}, உயர் ஆன்மா கொண்டவனுமான அந்த விஜயனின் {அர்ஜுனனின்} வெற்றி உறுதியானதே.(65,66) கர்ணன், தானவர்களின் பக்கத்தில் இருக்கிறான். எனவே, அவன் தோல்வியடைய வேண்டும் என்பதே சரி. இதனால் தேவர்களின் காரியங்கள் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.(66) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, ஒருவனின சொந்தக் காரியமானது எப்போதும் முக்கியமானதாக இருக்க வேண்டும். உயர் ஆன்மப் பல்குனன் {அர்ஜுனன்}, உண்மைக்கும், அறநெறிக்கும் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறான். அவன் எப்போதும் வெல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை.(68) உயர் ஆன்மா கொண்டவனும், தன் கொடிமரத்தில் காளையைக் கொண்ட புனிதமான தேவன் {சிவன்}, எவனால் நிறைவு செய்யப்பட்டானோ, அண்டத்தின் தலைவனான விஷ்ணுவையே தன் தேரின் சாரதியாக எவன் கொண்டுள்ளானோ, ஓ! ஆயிரங்கண் கொண்டோனே {இந்திரா}, அவன் ஏன் வெற்றியடையமாட்டான்? பெரும் மனோசக்தியும், பெரும்பலமும் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் சாதித்த, தவத்தகுதி கொண்ட ஒரு வீரனாவான்.(70) பெரும் உடல் சக்தியைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, மொத்த ஆயுத அறிவியலையும் தன்னிடம் கொண்டிருக்கிறான் {அறிந்திருக்கிறான்}. உண்மையில், பார்த்தன் அனைத்து சாதனைகளையும் செய்தவனாவான். தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுபவனாகையால் அவன் வெற்றியே அடைய வேண்டும்.(71) சாதகமவோ, பாதகமாகவோ இருக்கக்கூடிய விதியையே, தன் மகிமையின் விளைவால் மீறக் கூடியவன் பார்த்தன்; அவன் அவ்வாறு செய்கையில், உயிரினங்களுக்குப் பேரழிவு ஏற்படும்.(72) இருகிருஷ்ணர்களும் கோபத்தால் தூண்டப்படும் போது, எதைக் குறித்தும் கவலைகொள்ள மாட்டார்கள். உயிரினங்களில் காளைகளான இவ்விருவருமே, உண்மை மற்றும் உண்மையற்ற பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்கள் ஆவர்.(73) இவ்விருவரும், புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான நரநாராயணர்கள் ஆவர். அவர்களை ஆட்சி செய்ய எவரும் கிடையாது. அவர்களே அனைவரையும் ஆட்சி செய்பவர்கள் ஆவர். முற்றிலும் அச்சமற்றவர்களான அவர்கள், எதிரிகள் அனைவரையும் எரிப்பவர்களாக இருக்கிறார்கள்.(74) சொர்க்கத்திலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அவர்களுக்கு இணையான எவரும் கிடையாது. மூவுலகங்களும், தெய்வீக முனிவர்களும், சாரணர்களும் இவர்கள் இருவரின் பின்னால் இருக்கின்றனர்.(75)

தேவர்களும், உயிரினங்கள் அனைத்தும் இவர்களின் பின்னால் நடந்து செல்கின்றனர். இவ்விருவருடைய சக்தியின் விளைவாலேயே மொத்த அண்டமும் நிலைத்திருக்கிறது.(76)

மனிதர்களில் காளையான கர்ணன், இங்கிருக்கும் இந்த முதன்மையான உலகங்களை அடையட்டும். அவன் வசுக்கள், அல்லது மருத்துக்கள் ஆகியோரின் அடையாளத்தை அடையட்டும். விகர்த்தனன் {சூரியன்} மகன் {கர்ணன்}, துணிச்சல் மிக்கவனும், வீரனுமானதால், சொர்க்கத்தில் துரோணர் மற்றும் பீஷ்மருடன் சேர்த்து அவனும் வழிபடப்படட்டும். எனினும், வெற்றியானது இரு கிருஷ்ணர்களையே அடையட்டும்” என்றார் {பிரம்மனும், சிவனும்}.(78) தேவர்களில் முதன்மையான அவ்விருவரும் (பிரம்மனும், ஈசானனும்) இவ்வாறு சொன்னதும், ஆயிரம் கண்களைக் கொண்ட தேவன் {இந்திரன்}, உயிரினங்கள் அனைத்தையும் வணங்கி,(79) “அண்டத்தின் நன்மைக்காக அந்தத் தேவர்கள் இருவரால் சொல்லப்பட்டதை நீங்கள் கேட்டீர்கள். அஃது அப்படியே ஆகும், வேறாகாது. உற்சாகமிக்க இதயங்களுடன் நிற்பீராக” என்றான் {இந்திரன்}.(80)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயிரினங்கள் அனைத்தும், ஓ! ஐயா, ஆச்சரியத்தால் நிறைந்து, அந்தத் தேவனைப் புகழ்ந்தனர்.(81) அப்போது தேவர்கள் பல்வேறு வகைகளிலான நறுமணமிக்க மலர்களைப் பொழிந்து, தங்கள் எக்காளங்களை முழக்கினர்.(82) உண்மையில், தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்குள் நேரப்போகும் அந்த ஒப்பற்ற தனிப்போரைக் காண அங்கே காத்திருந்தனர்.(83) ஓ! மன்னா, கர்ணனும், அர்ஜுனனும் இருந்த இரண்டு தேர்களிலும் வெண்குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. இரண்டும் {அந்த இரண்டு தேர்களும்} சிறந்த கொடிமரங்களைக் கொண்டவையாகவும், உரத்த சடசடப்பொலியை உண்டாக்குபவையாகவும் இருந்தன.(84) துணிச்சல்மிக்க வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும், சல்லியனையும், கர்ணனையும் அணுகிய முதன்மையான வீரர்கள் பலரில் ஒவ்வொருவரும் தங்கள் சங்கை முழக்கினர்.(85)

அப்போது (அந்தப் போர்வீரர்கள் இருவருக்குள்ளும்) தொடங்கிய போரானது, மருண்டோர் அனைவரையும் அச்சுறுத்தியது. சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவர்கள் ஒருவரையொருவர் கடுமையுடன் அறைகூவியழைத்தனர்.(86) முற்றிலும் பிரகாசமானவையாக இருந்த அந்த வீரர்கள் இருவரின் கொடிமரங்களும், அண்ட அழிவின் போது ஆகாயத்தில் எழுந்த ராகு மற்றும் கேது கோள்களைப் போல, அவர்களின் தேர்களில் மிக அழகாகத் தெரிந்தன.(87) யானை கட்டும் கயிற்றைக் கொண்டதும், ரத்தினங்களால் ஆனதும், மிக உறுதியானதும், இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், பாம்பைப் போலத் தெரிந்ததுமான கர்ணனின் கொடியானது, (காற்றில் அசைகையில்) பிரகாசமாகத் தெரிந்தது.(88) மேலும், அகன்ற வாயைக் கொண்டதும், பயங்கரமானதும், சூரியனைப் போலப் பார்க்கக் கடினமானதுமான பார்த்தனுக்குச் சொந்தமான முதன்மையான குரங்கு, {அதைப் பார்ப்பவர்களைத்} தன் உறுதிமிக்கப் பல்லால் அச்சுறுத்தியது.(89)

காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கொடிமரத்தில் இருந்த மூர்க்கமான குரங்கானது, போரிட விரும்பி, தன் நிலையில் இருந்து {அகன்று} விரைந்து, கர்ணனுடைய கொடிமரத்தின் மீது பாய்ந்தது.(90) பெரும் மூர்க்கத்தைக் கொண்ட அந்தக் குரங்கு, பாம்பின் மீது கருடன் பாய்வதைப் போல முன்னோக்கிப் பாய்ந்து, தன் நகங்களாலும், பற்களாலும், அந்த யானை கட்டும் கயிற்றைத் தாக்கியது.(91) சிறு மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பைப் போலக் கடினமானதும், (யமன் அல்லது வருணனின் கைகளிலிருக்கும்) மரணச் சுருக்குக்கு {பாசக்கயிற்றுக்கு} ஒப்பானதுமான அந்த யானை கட்டும் கயிறானது, கோபத்தால் நிறைந்து குரங்கை நெருங்கியது.(92) இவ்வாறு அவ்விரு வீரர்களுக்கிடையிலானதும், பகடையாட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவற்றின் விளைவாக வந்ததுமான அந்தக் கடுமையான தனிப்போரில், அவர்களின் கொடிமரங்களே முதலில் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன. அதே வேளையில், ஒருவனின் குதிரைகள் மற்றவனின் குதிரைகளைப் பார்த்துக் கனைத்தன.(93) தாமரைக் கண் கேசவனோ {கிருஷ்ணனோ}, தன் கூரிய பார்வையால் சல்லியனைத் துளைத்தான். பின்னவனும் {சல்லியனும்}, முன்னவனை {கிருஷ்ணனைக்} கண்டு, அதே போன்ற பார்வைகளை வீசினான்.(94) எனினும், குந்தி மகனான தனஞ்சயன் தன் பார்வைகளால் கர்ணனை வென்ற அதே வேளையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} சல்லியனை வென்றான்.(95)

அப்போது சூதன் மகன் {கர்ணன்}, புன்னகைத்தவாறே சல்லியனிடம், “ஓ! நண்பரே, இன்று பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வகையிலாவது என்னை கொன்றுவிட்டால், அதன் பிறகு நீர் என்ன செய்வீர் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.

அதற்குப் பதிலுரைத்த சல்லியன் {கர்ணனிடம்}, “நீ கொல்லப்பட்டால், கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் நான் கொல்வேன்” என்றான்.(96,97) மீண்டும் அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “ஓ! கர்ணா, இன்றைய போரில் வெண்குதிரை கொண்ட அர்ஜுனன் உன்னைக் கொன்றால், ஒரே தேரில் செல்லும் நான் மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கொல்வேன்” என்றான்.”(98)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அர்ஜுனனும், கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} இதே போன்ற கேள்வியைக் கேட்டான். எனினும் கிருஷ்ணன் புன்னகைத்தவாறே பார்த்தனிடம், பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(99) “சூரியன் தன் இடத்தில் இருந்து தளர்ந்து வீழலாம், பூமாதேவி ஆயிரம் துண்டுகளாகச் சிதறிப் போகலாம்; நெருப்புக் குளுமையாகலாம், இருப்பினும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கர்ணனால் உன்னைக் கொல்ல இயலாது.(100) எனினும், அதுபோல் ஏதேனும் நடந்தால், அண்டமே அழியும் என்பதை அறிவாயாக. என்னைப் பொறுத்தவரை, என் வெறுங்கைகளைக் கொண்டே, போரில் கர்ணன் மற்றும் சல்லியன் ஆகிய இருவரையும் கொல்வேன்” என்றான்.(101)

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், சிரித்துக் கொண்டே, முயற்சியால் களைப்பேதும் அடையாதவனான கிருஷ்ணனுக்கு மறுமொழியாக,(102) “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சல்லியர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருவரும் ஒன்று சேர்ந்தாலும், தனியனான எனக்கு ஈடாகமாட்டார்கள். தன் கொடிமரம், கொடிகள் ஆகியவற்றுடனும், சல்லியனுடனும், தனது தேர் மற்றும் குதிரைகளுடனும், தனது குடை, கவசம், ஈட்டிகள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றுடனும் கூடிய கர்ணன், போரில் என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதை நீ இன்று காண்பாய்.(103,104) தன் தேர், குதிரைகள், ஈட்டிகள், கவசம், ஆயுதங்களுடன் கூடிய அவன் {கர்ணன்}, தந்தமுடைய யானையால் காட்டில் நொறுக்கப்படும் மரத்தைப் போல என்னால் தூசாகக் குறைக்கப்படப் போவதை நீ இன்று காண்பாய்.(105)

இன்று ராதை மகனின் {கர்ணனின்} மனைவிமார் விதவைகளாகப் போகின்றனர். உண்மையில், ஓ! மாதவா, அவர்கள் (கடந்த இரவின்) கனவுகளில், தங்களை அணுகும் தீமையின் அறிகுறிகளைக் கண்டிருப்பார்கள்.(106) உண்மையில், கர்ணனின் மனைவியர் விதவைகளாவதை நீ இன்று காண்பாய். முன்னறிவற்ற இந்த மூடன் {கர்ணன்}, சபைக்குள் கிருஷ்ணை {திரௌபதி} இழுத்து வரப்படுவதைக் கண்டு, மீண்டும் மீண்டும் சிரித்து, தீய வார்த்தைகளால் எங்களை நிந்தித்ததை நினைத்து உண்டாகும் கோபத்தை என்னால் அடக்கிக் கொள்ளவே முடியாது.(107,108) ஓ! கோவிந்தா, ஒரு மதங்கொண்ட யானையால் நொறுக்கப்படும் மலர்கள் நிறைந்த மரத்தைப் போல, என்னால் நொறுக்கப்படும் கர்ணனை நீ இன்று காண்பாய்.(109) ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, கர்ணன் வீழ்ந்த பிறகு, “ஓ! விருஷ்ணி குலத்தோனே, நற்பேற்றாலேயே வெற்றி உனதானது” என்ற அந்த இனிய வார்த்தைகளை நீ இன்று கேட்பாய்.(110) எதிரிக்குக் கடனைச் செலுத்தி, இதயத்தின் கனத்தைக் குறைத்துக் கொண்டு, அபிமன்யுவின் அன்னைக்கு {சுபத்திரைக்கு} நீ இன்று ஆறுதலை அளிப்பாய். மகிழ்ச்சியால் நிறையும் நீ, உன் தந்தைவழி அத்தையான குந்திக்கு இன்று ஆறுதலை அளிப்பாய்.(111) ஓ! மாதவா {கிருஷ்ணா}, கண்ணீர் நிறைந்த முகத்துடன் கூடிய கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரருக்கும், அமுதம் போன்ற இனிய வார்த்தைகளால் நீ இன்று ஆறுதலை அளிப்பாய்” என்றான் {அர்ஜுனன்}.”(112)
---------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -87ல் உள்ள சுலோகங்கள் : 112


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்