The Advise of Aswatthama to Duryodhana ! | Karna-Parva-Section-88 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது; எதிரிகளை வீழ்த்திக் கர்ணனைத் துளைத்த அர்ஜுனன்; அர்ஜுனன் மீதி பொழிந்த மலர்மாரி; பாண்டவர்களிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு துரியோதனனை அறிவுறுத்திய அஸ்வத்தாமன்; இணங்க மறுத்த துரியோதனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் ஆகாயத்தில், தேவர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் கூட்டங்களாக இருந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், அரச முனிகள் ஆகியோரும் அற்புத இறகுகளைக் கொண்ட பறவைகள்[1] ஆகியனவும் அற்புதமான வடிவை ஏற்றன.(1) மனிதர்கள் யாவரும், வானத்தில் அற்புதத்தன்மையுடன் நின்றிருந்த அவர்களையும், இசைக்கருவிகள், பாடல்கள், புகழ் துதிகள், சிரிப்பு, ஆடல்களையும், மற்றும் பல்வேறு வகைகளினான இன்பமான ஒலிகளை எதிரொலித்திருக்கும் வானத்தையும் கண்டனர்.(2)
அப்போது மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவ மற்றும் பாண்டவப் போர்வீரர்கள், இசைக் கருவிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்களாலும், சிங்க முழக்கங்களாலும் பூமியையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கும்படி போராரவாரம் செய்து தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(3) மனிதர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் நிறைந்ததும், கதாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள், குத்துவாள்கள் ஆகியவற்றின் பாய்ச்சலின் விளைவாகப் போராளிகளால் தாங்கிக் கொள்ள முடியாததும், வீரர்களால் நிறைந்ததும், உயிரற்ற உடல்களால் நிறைந்ததுமான போர்க்களமானது, குருதியால் சிவப்பாகி மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.(4) உண்மையில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகியோருக்கிடையிலான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாக இருந்தது. தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் கடுமையான, பயங்கரமான போர் தொடங்கிய பிறகு, சிறந்த கவசம் தரித்திருந்த அவ்விரு வீரர்களில் ஒவ்வொருவரும், திசைகளின் பத்து புள்ளிகளையும், தன்னை எதிர்த்த படையையும் நேரான, கூரிய கணைகளால் மறைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏவப்பட்ட கணைகளால் அங்கே உண்டான இருளின் காரணமாக, உமது போர்வீரர்களையோ, எதிரிகளையோ அதற்கு மேலும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.(5,6)
அப்போது மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவ மற்றும் பாண்டவப் போர்வீரர்கள், இசைக் கருவிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்களாலும், சிங்க முழக்கங்களாலும் பூமியையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கும்படி போராரவாரம் செய்து தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(3) மனிதர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் நிறைந்ததும், கதாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள், குத்துவாள்கள் ஆகியவற்றின் பாய்ச்சலின் விளைவாகப் போராளிகளால் தாங்கிக் கொள்ள முடியாததும், வீரர்களால் நிறைந்ததும், உயிரற்ற உடல்களால் நிறைந்ததுமான போர்க்களமானது, குருதியால் சிவப்பாகி மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.(4) உண்மையில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகியோருக்கிடையிலான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாக இருந்தது. தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் கடுமையான, பயங்கரமான போர் தொடங்கிய பிறகு, சிறந்த கவசம் தரித்திருந்த அவ்விரு வீரர்களில் ஒவ்வொருவரும், திசைகளின் பத்து புள்ளிகளையும், தன்னை எதிர்த்த படையையும் நேரான, கூரிய கணைகளால் மறைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏவப்பட்ட கணைகளால் அங்கே உண்டான இருளின் காரணமாக, உமது போர்வீரர்களையோ, எதிரிகளையோ அதற்கு மேலும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.(5,6)
[1] கருடனும், அவனது சந்ததியினரும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆகாயத்தில் பரவியிருக்கும் ஒளிக்கதிர்கள், சூரியனையோ, சந்திரனையோ நோக்கிக் குவிவதைப் போல, அச்சமடைந்த போர்வீரர்கள் அனைவரும் கர்ணன், அல்லது அர்ஜுனனின் பாதுகாப்பை நாடினார்கள். பிறகு அந்த வீரர்கள் இருவரும், கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதைப் போலத் தன் ஆயுதத்தால் மற்றவனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கச் செய்து,(7) மேங்களால் உண்டானதும், ஆகாயத்தை மறைத்திருந்ததுமான இருளை விலக்கி எழும் சூரியனையோ, சந்திரனையோ போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர். தன் துருப்புக்கு உற்சாகமூட்டிய அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, “தப்பி ஓடாதீர்கள்” என்று சொன்னதால், களத்தைவிட்டு அகலாமல் இருந்த எதிரி மற்றும் உமது போர்வீரர்கள்,(8) வாசவனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் சுற்றி நிற்கும் தேவர்களையும், அசுரர்களையும் போல, அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சூழ்ந்து நின்றனர். அப்போது அந்த இரு படைகளும், மனிதர்களில் சிறந்த அவ்விருவரையும், பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளாலும், சிங்கமுழக்கங்களாலும் வரவேற்றதால்,(9) சுற்றித் திரண்டு முழங்கும் மேகங்களால் வரவேற்கப்படும் சூரியனையும், சந்திரனையும் போல அந்த மனிதர்களில் காளைகள் இருவரும் அழகாகத் தெரிந்தனர்[2]. முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட வில்லைத் தரித்து, (சூரிய, அல்லது சந்திர) ஒளிவட்டத்துடன் கூடியவர்களாகத் தெரிந்த அவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் கதிர்களாக அமைந்த ஆயிரக்கணக்கான கணைகளை அந்தப் போரில் ஏவி,(10) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரிக்கும் வகையில், யுக முடிவில் எழும் தாங்கிக் கொள்ளப்பட முடியாத இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களாகத் தெரிந்தார்கள்.
[2] “9ம் ஸ்லோகத்தின் இரண்டாவது வரி வங்க உரைகளில் தவறாகவும், பொருளற்றதாகவும் இருப்பதால், நான் பம்பாய் உரைகளையே இங்குப் பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில், “ம்ருதங்கங்கள், பேரிகைகள், பணவங்கள், ஆனகங்கள் இவைகளுடைய சத்தங்களாலும், வாகஙனங்கள், சங்கங்கள் இவற்றின் சத்தங்களாலும் ஒலியுள்ளதாகச் செய்யப்பட்ட அந்த யுத்தரங்கத்தில் (சத்துருக்களால் பொறுக்க முடியாதவர்களும், புருஷஸ்ரேஷ்டர்களுமான அவ்விரு வீரர்களும், ஸூரியசந்திரர்கள் போல ஸிம்மநாதங்களோடு விளங்கினார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “பேரிகைகள், சிறுபேரிகள், பணவங்கள் ஆகியவை ஒலிக்கப்பட்டன. சங்குகள் முழக்கப்பட்டன. இவை சிங்க முழக்கங்களாடு ஒன்றுகலந்தன. மனிதர்களில் மேன்மையான அவ்விருவரும், மேகத்திரள்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனையும், சூரியனைப் போலப் பிரகாசித்தனர்” என்றிருக்கிறது.
வெல்லப்பட முடியாதவர்களும், எதிரிகளை அழிக்கவல்லவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்களில் அடுத்தவரிடம் தன் திறனை வெளிக்காட்டியவர்களும்,(11) போர்வீரர்களுமான கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அவ்விருவரும், இந்திரனையும், அசுரன் ஜம்பனையும் போல, அந்தப் போரில் ஒருவரிடமொருவர் அச்சமில்லாமல் நெருங்கினர். அப்போது வலிமைமைமிக்க ஆயுதங்களை இருப்புக்கு அழைத்த அந்த உறுதிமிக்க வில்லாளிகள் இருவரும், தங்கள் பயங்கரக் கணைகளால்,(12) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லத் தொடங்கி, தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மீண்டும் அந்த மனிதர்களில் முதன்மையானவர்களாக இருவராலும் பீடிக்கப்பட்டவையும், யானைகள், காலாள்கள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களை உள்ளடக்கியவையுமான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் துருப்புகள், காட்டில் சிங்கத்தால் தாக்கப்பட்ட சிறுவிலங்குகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.
அப்போது, துரியோதனன், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, சுபலனின் மகன் {சகுனி}, கிருபர் மற்றும் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்},(13,14) ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களும், பெரும் வலியை உண்டாக்கவல்ல கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, கேசவனையும் {கிருஷ்ணனையும்} தாக்கினர். எனினும், தனஞ்சயன், அதே நேரத்தில், தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களின் விற்களையும், அம்பறாத்தூணிகளையும், குதிரைகளையும், யானைகளையும், சாரதிகளோடு கூடிய தேர்களையும் வெட்டி, சிறந்த கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் சிதைத்து, பனிரெண்டு கணைகளால் சூதன் மகனையும் {கர்ணனையும்} துளைத்தான். அப்போது நூறு யானைகளும், நூறு தேர்களும், எண்ணற்ற சகர்கள், துகாரர்கள் மற்றும் யவன குதிரைவீரர்களும், காம்போஜர்களின் முதன்மையான போராளிகள் சிலருடன் சேர்ந்து, அர்ஜுனனைக் கொல்ல விரும்பி, அவனை எதிர்த்து வேகமாக விரைந்தனர். தன் கையில் இருந்த கணைகள் மற்றும் கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்}, எதிரிகளின் சிறந்த ஆயுதங்களையும், அவர்களது தலைகளையும்,(15-17), குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களையும் வெட்டி வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் தன்னோடு மோதிய எதிரிகளையும் வீழ்த்தினான். அப்போது ஆகாயத்தில், சிறந்த தேவர்களால் இசைக்கப்பட்ட தெய்வீக பேரிகைகள் {தங்கள் ஒலிகளால்} வெடித்தன. இவை அர்ஜுனனின் துதிகளோடு கலந்தன.(18) மென்மையான தென்றலால் வீசப்பட்டதும், நறுமணமிக்கதுமான மலர் மாரி அங்கே (அர்ஜுனனின் தலை மீது) பொழிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சம்பவத்தைக் கண்ட தேவர்களும், மனிதர்களும், அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(19) ஒரே கருத்தைக் கொண்டவர்களாகையால், உமது மகனும் {துரியோதனனும்}, சூதன் மகனும் {கர்ணனும்} மட்டுமே ஆச்சரியத்தையோ, வலியையோ {துன்பத்தையோ} உணரவில்லை.
அப்போது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனின் கரங்களைப் பற்றிக் கொண்டு[3], தணிவான தொனியைப் பின்பற்றி உமது மகனிடம்,(20) “ஓ! துரியோதனா, நிறைவடைவாயாக. பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. இங்கே சச்சரவுக்கான எந்தத் தேவையும் இல்லை. போருக்கு ஐயோ {போரை நிந்திக்க வேண்டும்}. வலிமைமிக்க ஆயுதங்களான பிரம்ம ஆயுதத்தை அறிந்த ஆசான் {துரோணர்} கொல்லப்பட்டுவிட்டார். பீஷ்மரின் தலைமையிலானவர்களும், மனிர்களில் காளைகளுமான பிறரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(21) என்னைப் பொறுத்தவரையும், என் தாய்மாமனை {கிருபரைப்} பொறுத்தவரையும் நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள். பாண்டுவின் மகன்களோடு (அரசைப் பகிர்ந்து கொண்டு) எப்போதும் அரசாள்வாயாக. நான் தடுத்தால் தனஞ்சயன் விலகிவிடுவான். ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} பகைமையை விரும்பவில்லை.(22) யுதிஷ்டிரன் உயிரினங்கள் அனைத்தின் நன்மையிலும் எப்போதும் ஈடுபடுகிறான். விருகோதரன் {பீமன்} அவனுக்குக் கீழ்ப்படிந்தவனே ஆவான். அதே போலவே இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} கீழ்ப்படிந்தவர்களே. உனக்கும், பார்த்தர்களுக்கும் இடையில் அமைதி உண்டாக்கப்பட்டால், அந்த உன் விருப்பத்தின் மூலமே, அனைத்து உயிரினங்களும் நன்மையை அடைந்தன என்பது போலவும் தெரியும்.(23) இன்னும் உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லட்டும். துருப்புகள், தங்கள் பகைமையில் இருந்து விலகட்டும். ஓ! மன்னா {துரியோதனா} என் வார்த்தைகளை நீ கேட்கவில்லையென்றால், எதிரிகளால் போரில் நீ துன்பத்தில் எரிய வேண்டியிருக்கும்.(24) கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் தனி ஒருவனாக எவற்றை அடைந்தான் என்பதை நீயும் கண்டாய், இந்த அண்டமும் நன்றாகக் கண்டது. {அசுரன்} பலனைக் கொன்றவனாலேயே {இந்திரனாலேயே} கூட இதைப்போன்றதொரு காரியத்தைச் சாதிக்க முடியாது. அதே போல, யமனாலோ, பிரசேதகர்களாலோ, யக்ஷர்களின் புகழ்பெற்ற மன்னனாலோ {குபேரனாலோ} கூடச் சாதிக்க முடியாது.(25)
[3] “அப்போது கரங்களைத் தீண்டுவது வழக்கமில்லையாகையால், கரம் கரேனா Karam Karena என்பது போன்ற வார்த்தைகள், “தன் கரங்களையே பிசைந்து கொள்வது” என்ற பொருளைத் தரும் என நான் நினைக்கிறேன். இது கிட்டத்தட்ட வேதனையைக் குறிப்பிடும் ஒரே தன்மையுடன் கூடிய வெளிப்பாடாகும். அஸ்வத்தாமன் அந்தப் பேரழிவைக் கண்டு துன்புற்றான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “துரோணபுத்திரர் உமது புத்திரனுடைய கையைத் தம் கையினால் உறுதியாகப் பிடித்து” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கின்றன.
தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சாதனைகளைப் பொறுத்தவரை, அஃது இதைவிட மிக மேம்பட்டதாகும். நான் என்ன சொன்னாலும், அவன் ஒருபோதும் அதை மீற மாட்டான். அவன் உன்னை எப்போதும் பின்தொடர்வான். ஓ! மன்னா {துரியோதனா}, அண்டத்தின் நன்மைக்காக நீ நிறைவடைவாயாக.(26) நீ எப்போதும் என்னை மதிக்கிறாய். நானும் உன்னிடம் பெரும் நட்பைக் கொண்டுள்ளேன். இதன் காரணமாகவே, நான் உனக்கு இதைச் சொல்கிறேன். அமைதியை நீ ஏற்றால், கர்ணனையும் கூட நான் விலங்கச் செய்வேன்.(27) நுணுக்கமாகக் கண்டறியும் மனிதர்கள், இயல்பாகவே நண்பர்களாகுபவர்கள், மனவேற்றுமை நீக்கப்பட்டு {நல்ல வார்த்தைகளால்} உண்டாகுபவர்கள், செல்வத்தின் மூலம் உண்டாகுபவர்கள், இறுதியாகப் பலத்தை வெளிப்படுத்தி அடக்கி {நண்பர்களாகக்} கொள்ளப்படுபவர்கள் என நால்வகை நண்பர்களைக் குறித்துச் சொல்கிறார்கள்.[4] பாண்டுவின் மகன்களைப் பொறுத்தவரை இந்த அனைத்தும் உன்னிடம் இருக்கின்றன.(28) ஓ! வீரா, பாண்டவர்களோ, இயல்பாகவே உன் நண்பர்களாவர். {நல்ல வார்த்தைகளால்} மனவேற்றுமை நீக்கப்பட்டு மீண்டும் உறுதியாக அவர்களை நண்பர்களாக அடைவாயாக. நீ நிறைவு கொண்டால், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, அவர்களும் நண்பர்களாக ஏற்பார்கள், எனவே அவ்வழியிலேயே செயல்படுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(29)
[4] வேறொரு பதிப்பில், “கற்றறிந்தவர்கள், ஸ்னேகம் இயற்கையாக உண்டாகக் கூடியதென்றும், அவ்வாறே நல்ல வார்த்தையினால் தேடத்தக்கதென்றும், தனத்தினால் தேடத்தக்கதென்றும், பிரதாபத்தினால் நேரக்கூடியதென்றும் நான்குவிதமாகச் சொல்கின்றார்கள்” என்றிருக்கிறது.
தன் நண்பனின் {அஸ்வத்தாமனின்} மூலம் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் சிறிது நேரம் சிந்தித்தான். நீண்ட பெருமூச்சுகளை விட்ட அவன், உற்சாகமற்ற இதயத்துடன், “ஓ! நண்பரே {அஸ்வத்தாமரே}, நீர் சொன்னவாறே இஃது இருக்கிறது. எனினும், நான் உமக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளையும் கேட்பீராக.(30) தீய இதயம் கொண்ட விருகோதரன் {பீமன்}, ஒரு புலியைப் போலத் துச்சாசனனைக் கொன்று, தன் இதயத்தில் இன்னும் நீடித்திருக்கும் வார்த்தைகளைச் சொன்னான். நீரும் அதைக் கேட்டீர். பிறகு, எவ்வாறு அமைதி ஏற்பட முடியும்?(31) மேலும், புயலின் வேகமானது, வலிமைமிக்க மேரு மலைகளில் மோதி பலவீனமடைவதைப் போலவே, அர்ஜுனனால், போரில் கர்ணனைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் பலவந்தமான பகைமை கொண்ட (நான் அவர்களுக்கு இழைத்த) பல செயல்களை நினைத்துப் பார்த்து, பிருதையின் {குந்தியின்} மகன்களும் என்னிடம் சிறு நம்பிக்கையும் கொள்ள மாட்டார்கள்.(32) ஓ! மங்காப் புகழ் கொண்ட ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, “போரில் இருந்து விலகுவாயாக” என்று இப்போது கர்ணனிடம் சொல்வதும் உமக்குத் தகாது. பல்குனன் {அர்ஜுனன்} இன்று மிகவும் களைத்துப் போய் இருக்கிறான். கர்ணன் விரைவில் அவனைக் கொல்வான்” என்றான் {துரியோதனன்}.(33) பணிவோடு கூடிய இந்த வார்த்தைகளை ஆசான் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} மீண்டும் மீண்டும் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, தன் துருப்புகளை அழைத்து, “கணைகளைத் தரித்துக் கொண்டு, இந்த எதிரிகளை எதிர்த்து விரைந்து, அவர்களைக் கொல்வீராக. ஏன் செயலற்று நிற்கிறீர்கள்?” என்று ஆணையிட்டான் {துரியோதனன்}.”(34)
-------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -88ல் உள்ள சுலோகங்கள் : 34
-------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -88ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |