Saturday, May 13, 2017

கர்ணனை கைவிட்டு ஓடிய கௌரவர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 89

Kurus flew away deserting Karna! | Karna-Parva-Section-89 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் :  கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த பயங்கரமான போர்; அர்ஜுனன் ஏவிய கணைகள் அனைத்தையும் கலங்கடித்த கர்ணன்; இதைப் பொறுக்காத பீமன் அர்ஜுனனைக் கடிந்து கொண்டு, அவனுக்கு உற்சாகமூட்டியது; கிருஷ்ணனும் அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டியது; பிரம்மாயுதத்தை அழைத்த அர்ஜுனன்; அவ்வாயுதத்தைக் கலங்கடித்த கர்ணன்; இரண்டாவது முறையும் பிரம்மாயுதத்தை ஏவிய அர்ஜுனன்; அவ்வாயுதத்தால் கௌரவத் துருப்புகளுக்கு நேர்ந்த பேரழிவு; போரைக் காண களத்தில் வந்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அறுந்த காண்டீவத்தின் நாண்கயிறு; அந்தக் கணத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன், கிருஷ்ணன் மற்றும் பீமனைத் துளைத்த கர்ணன்; கர்ணனைத் தன் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; பாம்புகளை ஏவி கிருஷ்ணனைத் துளைத்த கர்ணன்; கணைகளாக மாறி வந்த அந்தப் பாம்புகளை வெட்டி, கர்ணனின் உடலை ஆயுதங்களால் நன்கு சிதைத்த அர்ஜுனன்; நடுக்கமடைந்த கர்ணன் மிகுந்த கடினத்தோடு தன் தேரில் நின்றது; அச்சத்தால் கர்ணனைக் கைவிட்டுத் தப்பி ஓடிய கௌரவர்கள்; இருப்பினும் வீரத்தோடு உற்சாகமாகப் போராடிய கர்ணன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சங்கு முழக்கங்களும், பேரிகையின் ஒலிகளும் பேரொலியாக எழுந்தபோது, வெண்குதிரைகளைக் கொண்டோரும், மனிதர்களில் முதன்மையானோருமான சூதன் மகன் வைகர்த்தனன் {கர்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் தீய கொள்கையின் விளைவால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(1) பெரும் மூர்க்கத்தைக் கொண்ட வீரர்களான தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகன் {கர்ணன்} ஆகிய இருவரும், முழுதாக வளர்ந்த தந்தங்களைக் கொண்டவையும், பருவகாலத்தில் உள்ள பிடிக்காக {பெண் யானைக்காக} மோதிக்கொள்பவையுமான, மதங்கொண்ட இமாலயக் களிறுகள் {ஆண் யானைகள்} இரண்டைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(2) மேகத்திரள் ஒன்று, மற்றொரு மேகத்திரளுடன், அல்லது மலையோடு மலை மோதிக் கொள்வதைப் போல அந்தப் போர்வீரர்கள் இருவரும், கணைமாரியைப் பொழிந்து கொண்டும், உரத்த நாணொலி எழுப்பும் தங்கள் விற்களுடனும், செவிடாக்கும் சடசடப்பொலியை உண்டாக்கும் தங்கள் தேர்சக்கரங்களுடனும், பேரொலிகளை வெளியிடும் தங்கள் நாண்கயிறுகள் மற்றும் உள்ளங்கைகளுடனும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(3) நெடிய சிகரங்களைக் கொண்டவையும், மரங்கள், செடி கொடிகள் நிறைந்தவையும், அவற்றுக்கு இயல்பான பல்வேறு காட்டுவாசிகளால் நிறைந்தவையுமான இரண்டு மலைகளைப் போல, அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஒரு மோதலுக்காக ஒருவரையொருவர் நோக்கி விரைந்து, வலிமைமிக்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(4) அந்த இரு வீரர்களுக்கு இடையிலான அம்மோதல், பழங்காலத்தில் தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனன் மகனுக்கும் {பலிக்கும்} இடையில் நடந்ததைப் போலச் சீற்றம் நிறைந்ததாக இருந்தது. பிறரால் தாங்கிக் கொள்ள முடியாதவையும், குருதியையே அருவருக்கத்தக்க சுவை கொண்ட தன் தண்ணீராகக் கொண்ட ஒரு நதியால் குறிக்கப்பட்டவையுமான, அவ்விரு வீரர்களின் அங்கங்களும், அவர்களது சாரதிகள் மற்றும் விலங்குகளின் அங்கங்களும் மிகவும் சிதைக்கப்பட்டன[1].(5)


[1] வேறொரு பதிப்பில், “அம்புகளால் விசேஷமாக உடல் பிளக்கப்பட்ட குதிரைகளும், ஸாரதிகளுமுள்ளவர்களும், பொறுத்தற்கு மிக அரிய அஸ்திரங்களால் எல்லாப் பக்கத்திலும் உடல் பிளக்கப்பட்டவர்களுமான அவ்விரண்டு ரதிகர்களும் முற்காலத்தில் இந்திரன் விரோசனன் இவ்விருவர்களுக்கும் யுத்தம் நடந்தது போலப் பெரும்போர் நடந்தது” என்றிருக்கிறது.

பல்வேறு வகைகளிலான தாமரைகள், மீன்கள், ஆமைகள் நிறைந்தவையும், பல்வேறு வகைகளிலான நீர்க்கோழிகளின் குரல்களை எதிரொலித்தவையும், காற்றால் மெதுவாகக் கலக்கப்பட்டவையுமான இரு பெரும் தடாகங்கள் ஒன்றையொன்று அணுகுவதைப் போலவே, கொடிமரங்களால் அருளப்பட்ட அந்தத் தேர்கள் இரண்டும் ஒன்றையொன்று அணுகின.(6) பெரும் இந்திரனுக்கு {மஹேந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் இந்திரனுக்கே ஒப்பானவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும், பெரும் இந்திரன் மற்றும் (அசுரன்) விருத்திரன் ஆகியோரைப் போலவே, அந்தப் பெரும் இந்திரனின் வஜ்ரத்திற்கு இணையான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(7) அழகிய கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்களைக் கொண்ட இரு படைகளும், அங்கே ஆகாயத்தில் இருந்தவர்களும், அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கிடையிலான அற்புதத் தன்மை கொண்ட அம்மோதலைக் கண்டு அச்சமடைந்தனர்.(8) மதங்கொண்ட யானைகள், ஒன்றையொன்று எதிர்த்து விரைவதைப் போல, அதிரதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன், அவனை {கர்ணனை} எதிர்த்து, அர்ஜுனன் விரைந்த போது, பார்வையாளர்களில் வேறு சிலர், மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்க முழக்கங்கள் செய்து, தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் விரல்களையோ, தாங்கள் பிடித்திருந்த துணித்துண்டுகளையோ அசைத்தனர்.(9)

அப்போது சோமகர்கள், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, வேகமாகச் சென்று கர்ணனைத் துளைப்பாயாக. தாமதமில்லாமல் அவனது தலையையும், (அதனோடு சேர்த்து) அரசை அடையும் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} ஆசையையும் வெட்டி வீழ்த்துவாயாக” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(10) அதே போல நமது போர்வீரர்கள் பலர், கர்ணனிடம், “செல், ஓ! கர்ணா, சென்று, கூரிய கணைகளால் அர்ஜுனனைக் கொல்வாயாக. பிருதையின் {குந்தியின்} மகன்கள் எப்போதும் காட்டிலேயே இருக்கும் வகையில் மீண்டும் செல்லட்டும்” என்றனர்.(11) அப்போது, அம்மோதலில் கர்ணன் முதலில் பத்து வலிமைமிக்கக் கணைகளால் பார்த்தனைத் துளைத்தான். பதிலுக்கு அர்ஜுனன், பெரும் மூர்க்கம் கொண்டவையான பத்துக் கூர்முனைக் கணைகளால் அவனது நடுமார்பைத் துளைத்தான்.(12) உண்மையில், அந்தச் சூதன் மகனும் {கர்ணனும்}, அர்ஜுனனும், நல்ல சிறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். அந்தப் பயங்கரப் போரில், தாங்கள் ஒவ்வொருவரும் செய்யும் தாமதத்தின் பயனை அடைய விரும்பிய அவர்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் ஒருவரையொருவர் எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்.(13) கடும் வில்லாளியான அர்ஜுனன், தன் இரு கைகளையும், காண்டீவத்தின் நாண்கயிற்றையும் தேய்த்துவிட்டு, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, நாளீகங்கள், பன்றியின் காது போன்ற தலைகளைக் கொண்ட கணைகள் {வராஹகர்ணங்கள்}, கத்தி தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அஞ்சலீகங்கள், பிறைவடிவக் கணைகள் {அர்த்தச்சந்திரக் கணைகள்} ஆகியவற்றின் மழையைப் பொழிந்தான்.(14) பார்த்தனின் அந்தக் கணைகள், ஆகாயமெங்கும் பரவி, மாலைவேளையில், இரவு ஓய்வுக்காக மரத்திற்குள் தலைதாழ்த்தி ஊடுருவும் பறவைக்கூட்டங்களைப் போலக் கர்ணனின் தேருக்குள் ஊடுருவின.(15)

எதிரிகள் அனைவரையும் வெல்பவனான அர்ஜுனன், சுருங்கிய புருவத்துடனும், கோபப் பார்வைகளுடனும், கர்ணன்மீது ஏவிய அந்தக் கணைகள் அனைத்தும், பாண்டு மகனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட தொடர்ச்சியான அந்தக் கணைமாரிகள் அனைத்தும், சூதன் மகனின் கணைகளால் வெட்டப்பட்டன.(16) அப்போது அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல நெருப்பாயுதம் {ஆக்னேயாஸ்திரம்} ஒன்றைக் கர்ணன் மீது ஏவினான். பூமியையும், வானத்தையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் மறைத்தபடி, சூரியப் பிரகாசத்துடன் சென்ற அஃது, அவனது உடலையே ஒளியால் சுடவிட்டெரியச் செய்தது.(17) போர்வீரர்களின் ஆடைகள் அனைத்திலும் நெருப்புப் பற்றியதால் அவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். மூங்கில் காடுகளில் தீப்படிக்கும்போது கேட்கப்படும் பேரொலிகள் அங்கே கேட்கப்பட்டன.(18) அந்த நெருப்பாயுதம் {ஆக்னேயாஸ்திரம்}, அனைத்துப் பக்கங்களிலும் செயல்படுவதைக் கண்டவனும், பெரும் வீரம் கொண்டவனுமான, சூதன் மகன் கர்ணன், அதைத் தணிப்பதற்காக வாருணாயுத்ததை அம்மோதலில் ஏவினான். கர்ணனுடைய ஆயுதத்தின் விளைவால் அந்த நெருப்பானது தணிவடைந்தது.(19)  திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் வேகமாக மறைத்த பெரும் மேகத்திரள்கள் அங்கே இருளை உண்டாக்கின. மலைகளின் தன்மைகளுடன் கூடிய முனைகளைக் கொண்ட அந்த மேகங்கள், அனைத்துப் பக்கங்களில் சூழ்ந்து கொண்டு, பூமியில் நீரைப் பாய்ச்சின.(20)

அந்தக் கடும் நெருப்பானது கடுமையாகவே இருந்தாலும், ஒரே கணத்தில் அந்த மேகங்களால் தணிக்கப்பட்டது. மொத்த ஆகாயமும், முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தும் அம்மேகங்களால் மறைக்கப்பட்டிருந்தன.(21) இவ்வாறு மேகங்களால் சூழப்பட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளடைந்ததால் அங்கே எதையும் காண முடியவில்லை. அப்போது அர்ஜுனன், கர்ணனால் உண்டான அம்மேகங்களை வாயவ்ய ஆயுதத்தால் {வாயவ்யாஸ்திரத்தால்} விலக்கினான்.(22) இதன்பிறகு, எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, காண்டீவத்தையும், அதன் நாண்கயிற்றையும், தன் கணைகளையும் மந்திரங்களால் ஈர்க்கச்செய்து, தேவர்கள் தலைவனுக்குப் பிடித்தமானதும், சக்தியிலும், ஆற்றலிலும் வஜ்ரத்திற்கு இணையானதுமான மற்றொரு ஆயுதத்தை {வஜ்ராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தான்.(23) அப்போது, வஜ்ரத்தின் சக்தியும், மூர்க்கமும் கொண்டவையான கத்தித்தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அஞ்சலீகங்கள், பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகள், நாளீகங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, பன்றியின் காது போன்ற தலைகளைக் கொண்டவை {வராஹகர்ணங்கள்} ஆகிய கூரிய கணைகள் அனைத்தும், காண்டீவத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளிப்பட்டன.(24) பெரும் சக்தியும், வலிமையும், கழுகின் சிறுகளையும் கொண்ட அந்த மூர்க்கமான கூரிய கணைகள், கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும், அவனது குதிரைகளையும், வில்லையும், நுகத்தடியையும், சக்கரங்களையும், கொடிமரத்தையும் துளைத்து, கருடனைக் கண்டஞ்சிய பாம்புகள் பூமிக்குள் ஊடுருவுவதைப் போலவே வேகமாக அவற்றுக்குள் ஊடுருவின.

மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அந்த உயர் ஆன்மக் கர்ணன், கோபத்தால் உருளும் கண்களுடன்,(25,26) தன் வில்லின் உறுதியான நாண்கயிற்றை வளைத்து, கடலின் முழக்கத்திற்கு ஒப்பான உரத்த நாணொலியை உண்டாக்கி, பார்க்கவ ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். (அர்ஜுனன் ஏவிய) இந்தரனின் ஆயுதத்துடைய {வஜ்ராயுதத்தின்} வாயிலிருந்து வெளிப்பட்ட பார்த்தனின் கணைமாரிகளை வெட்டி வீழ்த்திய கர்ணன்,(27) தன் ஆயுதத்தால் {பார்க்கவ ஆயுதத்தால்} எதிராளியின் ஆயுதத்தை (வஜ்ராயுதத்தைக்) கலங்கடித்து, (பாண்டவப் படையின்) தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும் அழித்தான். அந்தக் கடும் மோதலில் அர்ஜுனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் கர்ணன், பார்க்கவ ஆயுதத்தின் சக்தியால் இதைச் செய்தான்.(28)

கோபத்தால் நிறைந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, இரு கிருஷ்ணர்களையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} கண்டு சிரித்து, அந்தப் போரில் நன்கு ஏவப்பட்ட கணைகளால் பாஞ்சாலத் தேர்வீரர்களில் முதன்மையானோரைத் துளைத்தான்.(29) அப்போது ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கர்ணனின் கணைமாரியால் பீடிக்கப்பட்டு, கோபத்தால் நிறைந்த பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஒன்று சேர்ந்தவர்களாக நின்று, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சூதன் மகனை {கர்ணனைக்} கூரிய கணைகளால் துளைத்தனர்.(30) வேகமாகத் தன் கணைகளால் அவற்றை வெட்டிய சூதன் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவர்களைக் கலங்கடித்து, பாஞ்சாலர்களின் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் பல கணைகளால் பீடித்தான்.(31) கர்ணனின் அந்தக் கணைகளால் தங்கள் மேனி துளைக்கப்பட்ட அவர்கள், பயங்கரப் பலம் கொண்ட கோபக்கார சிங்கமொன்றால் கொல்லப்பட்ட வலிமைமிக்க யானைகளைப் போல, பேரொலிகளைச் செய்தபடியே உயிரையிழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(32) முதன்மையான போர்வீரர்களும், பெரும் பலம் கொண்ட வீரர்களும், எப்போதும் (போருக்குத்) தன்னை அறைகூவியழைத்தவர்களுமான அந்தப் பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளை ஏவுகையில், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தான்.(33)

அப்போது கர்ணன் வென்றுவிட்டதாக நினைத்த உமது போர்வீரர்கள், உரக்கக் கைத்தட்டியவாறே சிங்க முழக்கங்களை வெளியிட்டனர். ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாததான வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனின் வீரத்தைக் கண்ட அவர்கள் அனைவரும், கர்ணனின் ஆளுகைக்குள் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் வந்துவிட்டதாகவே கருதினர். போருக்கு மத்தியில் தனஞ்சயனின் அந்த ஆயுதம், கர்ணனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனான,(34,35) காற்று தேவனின் {வாயுத்தேவனின்} கோபக்கார மகன் {பீமன்}, கோபத்தால் சுடர்விட்டெரியும் கண்களுடன் தன் கைகளைப் பிசையத் தொடங்கினான். உண்மையில், கோபம் நிறைந்த அந்தப் பீமன், தன் கோபம் தூண்டப்பட்ட நிலையில், ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியே, துல்லிய இலக்கைக் கொண்ட அர்ஜுனனிடம்,(36) “ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, அறத்திலிருந்து விழுந்தவனான இந்தப் பொல்லாத சூதன் மகன் {கர்ணன்}, போரில் தன் வலிமையை வெளிப்படுத்தி, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாஞ்சாலப் போர்வீரர்களில் பலரைக் கொல்வது எவ்வாறு?(37) இதற்கு முன்பு நீ தேவர்களாலோ, காலகேயர்களாலோ வெல்லப்பட முடியாதவனாக இருந்தாய். ஸ்தாணுவுடைய {சிவனுடைய} கரங்களின் தீண்டலை நீ பெற்றிருக்கிறாய். ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, பிறகு, தேர்வீரர்கள் பயன்படுத்தும் பத்து நீண்ட கணைகளைக் {நாராசங்களைக்} கொண்டு சூதன் மகனால் {கர்ணனால்} உன்னை முதலில் துளைக்க முடிந்தது எவ்வாறு?(38) இன்று அந்தச் சூதன் மகன், உன்னால் ஏவப்பட்ட கணைகளைக் கலங்கடிப்பது எனக்கு மிக ஆச்சரியமானதாகத் தெரிகிறது. கிருஷ்ணையின் {கருப்பியான திரொபதியின்} துன்பங்களையும், இந்தத் தீய ஆன்மா கொண்ட சூதன் மகனால் {கர்ணனால்} “எள்ளுப்பதர்களே” என்று அச்சமில்லாமல் சொல்லப்பட்ட, ஏற்கமுடியாத, கூரிய வார்த்தைகளையும் நினைவுகூர்வாயாக. ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, இவை யாவற்றையும் நினைவுகூர்ந்து, பொல்லாதவனான கர்ணனை இன்றைய போரில் வேகமாகக் கொல்வாயாக”(39,40) ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, (இச்செயலில்) நீ இவ்வளவு அலட்சியமாக இருப்பது ஏன்? கர்ணனின் படுகொலையில் உன் அலட்சியத்தைக் காட்ட இது நேரமல்ல. எந்தப் பொறுமையால் உயிரினங்கள் அனைத்தையும் வென்று, காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னிக்கு உணவூட்டினாயோ,(41) அந்தப் பொறுமையால், இந்தச் சூதன் மகனை {கர்ணனை} நீ கொல்வாயாக. நானும் கூட என் கதாயுதத்தாலேயே இவனை நொறுக்கிவிடுவேன்” என்றான் {பீமன்}.

அப்போது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனின் கணைகள் கர்ணனால் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு, முன்னவனிடம் {அர்ஜுனனிடம்},(42) “ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, இன்று உன் ஆயுதங்களைக் கர்ணனின் ஆயுதங்களால் நொறுக்க முடிவது எவ்வாறு? ஓ! வீரா, நீ உன் அறிவை இழப்பது {மயங்கமடைவது} ஏன்? கர்ணனுக்குப் பின்னால் நிற்கும் கௌரவர்கள், இப்போது மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவதை நீ கவனிக்கவில்லையா?(43) உண்மையில், உன் ஆயுதங்கள் அனைத்தும் கர்ணனின் ஆயுதங்களால் கலங்கடிக்கப்பட்டதை அவர்கள் அனைவரும் அறிவார்கள். எந்தப் பொறுமையைக் கொண்டு,  இருள் தன்மையையே தங்கள் ஆயுதமாகக் கொண்ட மனிதர்களையும், பயங்கரமான க்ஷத்திரியர்களையும், செருக்கில் பிறந்த அசுரர்களையும் யுகம் யுகமாகப் பல போர்களில் கொன்றிருக்கிறாயோ, அந்தப் பொறுமையைக் கொண்டு, கர்ணனை இன்று கொல்வாயாக. சக்ரன் {இந்திரன்} தன் எதிரியான நமுசியின் தலையை வஜ்ரத்தால் தாக்கி வீழ்த்தியதைப் போல, உன் வலிமையை வெளிப்படுத்தி, நான் உனக்குத் தரும் கத்தி போன்ற கூர்முனை கொண்ட இந்தச் சுதர்சனத்தால் {சுதர்சனச் சக்கரத்தால்} உன் எதிரியின் தலையைத் தாக்கி வீழ்த்துவாயாக. எந்தப் பொறுமையைக் கொண்டு, வேடன் வடிவில் வந்த சிறப்புமிக்க தெய்வமான மகாதேவனை {சிவனை} நீ நிறைவு செய்தாயோ,(44-46) அந்தப் பொறுமையை மீண்டும் அழைத்து, ஓ! வீரா, சூதன் மகனையும் {கர்ணனையும்}, அவனைப் பின் தொடர்பவர்கள் அனைவரையும் கொல்வாயாக. அதன்பிறகு கடல்களையே கச்சையாகக் கொண்டவளும், நகரங்கள், கிராமங்கள், செல்வங்கள் ஆகியவற்றைக் கொண்டவளுமான பூமாதேவியின் பரப்பில் இருந்து எதிரிகள் அனைவரையும் நீக்கி மன்னர் யுதிஷ்டிரருக்கு அவளை {பூமியை} அளிப்பாயாக. அந்தச் செயலால், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஒப்பற்ற புகழையும் நீ வெல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}. இவ்வாறு (கிருஷ்ணனால்) சொல்லப்பட்டவனும், பெரும் வலிமையைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்மப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் இதயத்தில் சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலையை நிலைநிறுத்தினான்.(47,48)

உண்மையில், பீமனாலும், ஜனார்த்தனனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்டு, (தன் துன்பங்களை) நினைவுகூர்ந்து, தனக்குள்ளேயே உள் ஆய்வைச் செய்து, இவ்வுலகத்திற்குத் தான் வந்த காரணத்தை மனத்தில் நிறுத்தி, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவன்,(49) “நான் இப்போது, உலகத்தின் நன்மைக்காகவும், சூதன் மகனின் அழிவுக்காகவும் வலிமையும், சீற்றமும் கொண்ட ஓர் ஆயுதத்தை இருப்பு அழைக்கப் போகிறேன். உன் அனுமதியும், பிரம்மன் மற்றும் பவனின் அனுமதியும், பிரம்மத்தை அறிந்தோர் அனைவரின் அனுமதியும் அதற்கு வேண்டும்” என்று சொன்னான் {அர்ஜுனன்}.(50) புனிதமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, பிரம்மனை வணங்கியவாறு, சிறந்ததும், தடுக்கப்பட முடியாததும், மனத்தால் மட்டுமே பயன்படுத்த கூடியதுமான பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தான்.(51) எனினும், அவ்வாயுதத்தைக் {பிரம்மாஸ்திரத்தைக்} கலங்கடித்த கர்ணன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தன் கணைகளை ஏவியபடியே தொடர்ந்து அழகானவனாகத் தெரிந்தான். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் அவ்வாயுதமானது, போருக்கு மத்தியில் கர்ணனால் கலங்கடிக்கப்படுவதைக் கண்டவனும், கோபம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனுமான பீமன், சினத்தால் சுடர்விட்டெரிந்து, துல்லிய இலக்கைக் கொண்ட அர்ஜுனனிடம், “உயர்ந்த பிரம்ம ஆயுதத்தையும், (எதிரிகளின் அழிவை அடைய) அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் திறம்பட அறிந்தவன் என உன்னைக் குறித்து மக்கள் சொல்கின்றனர்.(53) ஓ! சவ்யசச்சின், அதே வகையிலான மற்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக” என்றான் {பீமன்}.

இவ்வாறு தன் அண்ணனால் {பீமனால்} சொல்லப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, அதே வகையைச் சேர்ந்த இரண்டாவது ஆயுதத்தைப் பயன்படுத்தினான். அளவிலா சக்தி கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அதைக் கொண்டு, பாம்புகளுக்கு ஒப்பான சீற்றத்துடன் கூடியவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போன்றவைகளுமான கணைகளால், முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான். அந்தப் பாரதக் குலத்தின் காளையால் உண்டாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், யுக நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்துடன் கூடியவையுமான அந்தக் கணைகள்,  கர்ணனின் தேரை ஒரு கணத்தில் மறைத்தன.(54,55) அதிலிருந்து வெளிப்பட்டவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான நூற்றுக்கணக்கான நீண்ட ஈட்டிகள், போர்க்கோடரிகள், சக்கரங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} ஆகியவற்றால் சுற்றியிலும் இருந்த பகைவரின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை இழக்கத் தொடங்கினர். பகைவரின் போர்வீரனான ஏதோ ஒருவனின் தலை, அவனது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுக் கீழே போர்க்களத்தில் விழுந்தது.(56,57) விழுந்து கொண்டிருக்கும் தன் தோழனைக் கண்ட மற்றொருவன் அச்சத்தால் பூமியில் இறந்து விழுந்தான். யானை துதிக்கையைப் போன்றதும் பருத்ததுமான மூன்றாமவனின் பெரிய (வலது) கரம், (பார்த்தனால்) வெட்டப்பட்டு, பிடியில் உள்ள வாளுடன் கீழே விழுந்தது.(58) கேடயத்துடன் கூடிய நான்காமவனின் இடக்கரம், கத்தித் தலைக் கணையொன்றால் வெட்டப்பட்டுக் கிழே விழுந்தது. இவ்வாறே, கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துரியோதனன் படையைச் சார்ந்த முதன்மையான போர்வீரர்கள் அனைவரையும், மரணத்தைத் தரும், தன் பயங்கரமான கணைகளால் காயப்படுத்தவும், கொல்லவும் செய்தான். வைகர்த்தனனும் {கர்ணனும்} அந்தப் போருக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான்.(59,60) இவை, உரத்த விஸ் ஒலியுடன், மேகங்களில் இருந்து பொழியும் மழைத்தாரைகளைப் போலப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தன.

அப்போது மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்த பீமசேனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மற்றும் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் ஆகிய ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்த அந்தப் பயங்கர வலிமையைக் கொண்ட கர்ணன், பயங்கரமான பேரொலியுடன் முழங்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், பீமனையும், ஜனார்த்தனனையும் (கிருஷ்ணனையும்} கண்டு,(61,62) (தன் எதிராளியின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாதவனானான். எனவே, மீண்டும் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, பதினெட்டு கணைகளை ஏவினான். அந்தக் கணைகளில் ஒன்றால் அவன் கர்ணனின் அழகிய கொடிமரத்தையும், நான்கால் சல்லியனையும், மூன்றால் கர்ணனையும் துளைத்தான்.(63) நன்கு ஏவப்பட்ட மற்ற பத்து கணைகளைக் கொண்டு அவன் {அர்ஜுனன்}, தங்கக் கவசம் பூண்ட, கௌரவப் போர்வீரனான சபாபதியைத் தாக்கினான். இதன்பேரில் அந்த இளவரசன் {சபாபதி}, தன் சிரம் {தலை}, கரங்கள், குதிரைகள், சாரதி, வில் மற்றும் கொடிமரம் ஆகியவற்றை இழந்து,(64) காயமடைந்து, கோடரியால் வெட்டப்பட்ட சாலமரம் ஒன்றைப் போலத் தன் முதன்மையான தேரில் இருந்து இறந்து விழந்தான். மீண்டும் கர்ணை மூன்று, எட்டு, பனிரெண்டு, நான்கு மற்றும் பத்துக் கணைகளால் துளைத்த பார்த்தன்,(65) பல ஆயுதங்களைக் கொண்டு நாறு யானைகளையும், எண்ணூறு தேர்வீரர்களையும், சாரதிகளோடு கூடிய ஓராயிரம் குதிரைகளையும், துணிச்சல்மிக்க எட்டாயிரம் காலாட்படைவீரர்களையும் கொன்றான்.

விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனையும், அவனது சாரதி {சல்லியன்}, தேர், குதிரைகள், கொடி மரம் ஆகியவற்றையும் தன் நேரான கணைகளைக் கொண்டு காட்சியில் இருந்து மறைத்தான் {கண்களுக்குப் புலப்படாதவையாகச் செய்தான்}. இவ்வாறு தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்தக் கௌரவர்கள் அப்போது அதிரதன் மகனிடம் {கர்ணனிடம்},(67) “உன் கணைகளை ஏவி, பாண்டு மகனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. ஏற்கனவே அவன் தன் கணைகளால் குருக்களை நிர்மூலமாக்கத் தொடங்கிவிட்டான்” என்றனர். இவ்வாறு தூண்டப்பட்ட கர்ணன், தன் சிறந்த முயற்சிகளால், கணைகள் பலவற்றை இடையறாமல் ஏவினான்.(68) முக்கிய அங்கங்களை வெட்ட வல்லவையும், கர்ணனால் நன்கு ஏவப்பட்டவையுமான அந்தக் குருதி குடிக்கும் கணைகள், எண்ணற்ற பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் கொன்றன. இவ்வாறே, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களும், பெரும் பலம் கொண்டவர்களும், எதிரிகள் அனைவரையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும்,(69) ஆயுதங்களை நன்கறிந்தவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், தங்களை எதிர்த்து வந்த போர்வீரர்களை வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றால் தாக்கினர்.

அப்போது, {தன் உடலில் இருந்து} கணைகள் பிடுக்கப்பட்டவனும், மந்திரங்களாலும், தன்னிடம் நல்ல மனநிலை கொண்ட அறுவைசிகிச்சை நிபுணர்களில் முதன்மையானவர்களால் மருந்தளிக்கப்பட்டும் நலமடைந்தவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான யுதிஷ்டிரன், (அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த) அம்மோதலைக் காண்பதற்காக அந்த இடத்திற்கு வேகமாக வந்தான். ராகுவின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து விடுபட்டதும், ஆகாயத்தில் எழுந்ததுமான பிரகாசமிக்க முழு நிலைவைப் போல அங்கே வந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்ட அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியால் நிறைந்தன. போர்வீரர்களில் முதன்மையானோரும், வீரர்களில் முதல்வர்களும், எதிரிகளைக் கொல்பவர்களுமான கர்ணன் மற்றும் பார்த்தன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் போரில் ஈடுபடுவதைப் பார்வையாளர்களாகக் கண்ட வானவாசிகள் {தேவர்கள்} மற்றும் நிலவாசிகள் {மனிதர்கள்] இருவரும், தாங்கள் செலுத்திய, அல்லது தங்கள் வாகனங்களில் பூட்டப்பட்ட, விலங்குகளை {குதிரைகள் / யானைகளைக்} கட்டுப்படுத்தியவாறு அசைவில்லாமல் நின்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் இருவரும், முதன்மையான கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் தாக்கியதால், தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகன் {கர்ணன்} ஆகிய இருவரின் விற்கள், வில்லின் நாண்கயிறுகள், உள்ளங்கைகள் ஆகியவற்றில் எழுந்த ஒலிகள் மகத்தானதாகவும், அவர்களால் நன்கு ஏவப்பட்ட கணைகள் உண்டாக்கிய விஸ்ஒலி செவிடாக்குவதாகவும் இருந்தன. அப்போது, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பலமாகத் தன் வில்லின் {காண்டீவத்தின்} நாணை இழுத்த போது, அது பேரொலியுடன் அறுந்தது.(70-74)

இவ்வாறு அளிக்கப்பட்ட இடைவேளையில், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூரியவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், பறவைகளின் இறகுகளால் சிறகமைந்தவையும், சட்டை உரித்த பாம்புகளுக்கு ஒப்பானவையுமான நூற்றுக்கணக்கான குறுங்கணைகளால் {பிண்டிபாலங்களால்} பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(75) மேலும் அவன் அறுபது கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} எட்டால் பல்குலனனையும் {அர்ஜுனனையும்} துளைத்தான். மேலும் அந்தச் சூரியன் மகன் {கர்ணன்}, ஆயிரமாயிரமான வலிமைமிக்கக் கணைகளால் பீமனைத் துளைத்தான்.(76) கிருஷ்ணனையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தையும் துளைத்த கர்ணன், பார்த்தனைப் பின்தொடர்ந்து வந்த சோமகர்களுக்கு மத்தியில் பலரை வீழ்த்தினான். எனினும், அவர்களும் பதிலுக்கு, ஆகாயத்தில் சூரியனை மறைக்கும் மேகங்களின் திரள்களைப் போல நேரான கணைமாரியால் கர்ணனை மறைத்தனர்.(77) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, முன்னேறிவரும் அந்தப் போர்வீரர்களைத் தன் கணைகளால் மலைக்கச் செய்து, அவர்களால் ஏவப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடித்து, அவர்களது தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளையும் அழித்தான்.(78)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அவர்களில் முதன்மையான தேர்வீரர்கள் பலரையும் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்ட அவர்களது உடல்களானவை, உயிரற்றுத் தரையில் விழும்போது பேரொலியை உண்டாக்கின.(79) உண்மையில் பயங்கரப் பலம் கொண்ட கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள், கோபக்கார சிங்கத்தால் பீடிக்கப்பட்ட நாய்களின் கூட்டத்தைப் போல அழிந்தன. இதன் பிறகு, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உள்ள போராளிகளில் முதன்மையான பலரும், (கௌரவர்களுக்கு மத்தியில் உள்ள) அதே போன்ற பலரும், கர்ணனாலும், தனஞ்சயனாலும் {அர்ஜுனனாலும்} கொல்லப்பட்டுக் கீழே விழுந்தனர்.(80)

வலிமைமிக்கக் கர்ணனால், பெரும்பலத்துடன் நன்கு ஏவப்பட்ட கணைகளால் தங்கள் குடல்களில் உள்ள உள்ளடக்கங்களைக் கழித்து {மலத்தை வெளியேற்றியபடியே} உயிரையிழந்து கீழே விழுந்தனர். அப்போது ஏற்கனவே வெற்றி தங்களுடையதானது எனக் கருதிய உமது {கௌரவ} துருப்பினர், தங்கள் கரங்களை வேகமாகத் தட்டி, உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(81) உண்மையில், அந்தப் பயங்கர மோதலில் கர்ணனின் ஆளுகைக்குள் கிருஷ்ணர்கள் இருவரும் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவே அவர்களில் அனைவரும் கருதினர். பிறகு தன் வில்லின் நாண்கயிற்றை வேகமாக வளைத்து, அந்த அதிரதன் மகனின் {கர்ணனின்} அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்த பார்த்தன்,(82) கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்ட தன் அங்கங்களின் விளைவால் சினத்தால் நிறைந்து, கௌரவர்களைத் தாக்கினான். தன் வில்லின் நாண்கயிற்றை உருவி, தன் உள்ளங்கைகளைத் தட்டி, தன்னால் ஏவப்பட்ட கணைகளின் மாரியால் அங்கே திடீரென இருளை உண்டாக்கினான்.(83) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அந்தக் கணைகளால் கர்ணனையும், சல்லியனையும், குருக்கள் அனைவரையும் துளைத்தான். அந்த வலிமைமிக்க ஆயுதத்தின் மூலம் இருண்ட ஆகாயத்தில், பறவைகளால் பறக்க முடியாதபோது நறுமணத்தைச் சுமந்தபடியே இனிய தென்றால் அங்கே வீசத்தொடங்கியது. சிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், பத்து கணைகளால் சல்லியனின் கவசத்தைப் பலமாகத் தாக்கினான்.(84) அடுத்ததாகக் கர்ணனைப் பனிரெண்டு கணைகளால் துளைத்த அவன், மேலும் ஏழாலும் அவனைத் துளைத்தான். பார்த்தனின் வில்லில் இருந்து பெரும்பலத்துடன் ஏவப்பட்டவையும், கடும் சக்தியைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன்,(85) சிதைந்த அங்கங்களுடன் குருதியில் குளித்த உடலுடன், அண்ட அழிவின் போது, நடுப்பகலிலோ, மாலையிலோ சுடலைக்கு மத்தியில், குருதியால் நனைந்த தன் உடலுடன் விளையாடும் {கூத்தாடும்} ருத்திரனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(86)

அப்போது அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தேவர்கள் தலைவனுக்கு (சக்தியிலும், வலிமையிலும்) ஒப்பானவனான தனஞ்சயனை மூன்று கணைகளால் துளைத்து, ஐந்து பாம்புகளுக்கு ஒப்பான சுடர்மிக்க வேறு ஐந்து கணைகளைக் கிருஷ்ணனின் உடலுக்குள் ஊடுருவச் செய்தான்.(87) பெரும்பலத்துடன் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், அந்த உயிரினங்களில் முதன்மையானவனின் {கிருஷ்ணனின்} கவசத்தைத் துளைத்து ஊடுருவி, அவனது உடலைக் கடந்து சென்று பூமியில் விழுந்தன. பெரும் சக்தி கொண்ட அவை, பூமிக்குள் நுழைந்து, (பாதாள உலகத்தில் உள்ள போகவதி ஆற்றின் நீரில்) குளித்து மீண்டும் கர்ணனிடமே திரும்பி வந்தன.(88) அந்தக் கணைகள் தக்ஷகனுடைய மகனின் (காண்டவ வனத்தில் பார்த்தனால் தன் அன்னை கொல்லப்பட்டவனான இந்த அஸ்வசேனனின்) தரப்பை ஏற்ற ஐந்து பெரும் பாம்புகளாகும். பெரும்பலத்துடன் ஏவப்பட்ட பத்து அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்}, அந்த ஐந்து பாம்புகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக அர்ஜுனன் வெட்டியதன் பேரில் அவை பூமியில் விழுந்தன.(89) கர்ணனின் கரங்களால் ஏவப்பட்டவையும், கணைகளாக மாறியிருந்தவையுமான அந்தப் பாம்புகளால் இவ்வாறு அங்கங்கள் துளைக்கப்பட்ட கிருஷ்ணனைக் கண்டவனும், கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(90)

பிறகு அவன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட சுடர்மிக்க மரணக் கணைகளால், கர்ணனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். (ஆழமாகத் துளைக்கப்பட்ட) கர்ணன், வலியால் நடுங்கினான். பெருங்கடினத்துடன் தன் பொறுமையனைத்தையும் திரட்டிக்கொண்டே அவன் {கர்ணன்} நின்று கொண்டிருந்தான்.(91) கோபத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏவிய கணைமாரியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தும், சூரியனின் காந்தியும், கர்ணனின் தேரும் கண்ணுக்குப் புலப்படாதவையாக ஆகின. அடர்த்தியான மூடு பனியால் மூடப்பட்டதைப் போல ஆகாயம் தெரிந்தது.(92) பிறகு எதிரிகளைக் கொல்பவனும், குரு குலத்தின் காளையும், வீரர்களில் முதன்மையானவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், குதிரைகள், சாரதிகள் ஆகியவற்றுடன் கூடியவர்களும், கர்ணனின் தேர்ச்சக்கரங்களுக்கும், சிறகுகளுக்கும் {பக்கங்களுக்கும்}, முன்புறத்திற்கும், பின்புறத்திற்கும் பாதுகாவலர்களாக இருந்தவர்களும், துரியோதனனின் தேர்ப்படையில் முக்கியமானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், துரியோதனனால் தூண்டப்பட்டுப் பெரும் சக்தியுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான குரு போர்வீரர்களில் முதன்மையான அந்த இரண்டாயிரம் பேரையும் கொன்றான்.(93-95)

அப்போது, உமது மகன்களும், உயிருடன் எஞ்சியிருந்த கௌரவர்களும் கர்ணனை விட்டுவிட்டும், இறந்து கொண்டிருந்தவர்களும், காயமடைந்தவர்களும், ஓலமிட்டுக் கொண்டிருந்தவர்களுமான தங்கள் மகன்கள் மற்றும் தந்தைமாரைக் கைவிட்டுவிட்டும் தப்பி ஓடினர்.(96) அச்சமடைந்த குருக்களால் கைவிடப்பட்டவனும், தன்னைச் சுற்றியிருந்த வெளி வெறுமையாக இருந்ததைக் கண்டவனுமான கர்ணன், ஓ!பாரதரே {திருதராஷ்டிரரே}, எந்தக் கலக்கத்தையும் அடையாமல், மறுபுறம் உற்சாகம் நிறைந்த இதயத்துடன் அர்ஜுனனை நோக்கி விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(97)

[2] “இந்தப் பகுதியின் சுலோக எண்களைக் குறிக்க நான் பம்பாய்ப் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் 95 ஸ்லோகங்களே இருக்கின்றன. வேறொரு பதிப்பும், பிபேக்திப்ராயின் பதிப்பும் எந்தப் பர்வத்திலும், பகுதியிலும் சுலோக எண்களைக் குறிப்பிடுபவை அல்ல.
-------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -89ல் உள்ள சுலோகங்கள் : 97

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்