Monday, May 15, 2017

கோபத்தால் கண்ணீர் சிந்திய கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 90

Karna shed tears from wrath! | Karna-Parva-Section-90 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அஸ்வசேனன் என்ற பாம்பின் வரலாறு; பாம்புக் கணையை நினைவுகூர்ந்து, அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்திய கர்ணன்; கிருஷ்ணன் தேரை அழுத்தியது; அர்ஜுனனின் கிரீடம் உடைந்தது; மீண்டும் தன்னை ஏவும்படி கேட்ட அஸ்வசேனனும், மறுத்த கர்ணன்; தானாக அர்ஜுனனைத் தாக்கச் சென்ற அஸ்வசேனனைத் துண்டுகளாக வெட்டிய அர்ஜுனன்; கர்ணனின் தேரை விழுங்கத் தொடங்கிய பூமாதேவி; தனக்கு நேரிடும் பேரிடர்களைக் கண்டு அறத்தைப் பழித்த கர்ணன்; அர்ஜுனனின் நாண்கயிறுகளைப் பதினோரு முறை வெட்டிய கர்ணன்; தன் சக்கரத்தை வெளிக்கொணரும் வரை, தன்னைத் தாக்கிக் கொல்ல வேண்டாம் என்று கோபத்துடனும், கண்ணீருடனும் அர்ஜுனனை வேண்டிய கர்ணன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனனின் கணைகள் பாய்ந்ததன் விளைவால் தப்பி ஓடிப் பிளந்த கௌரவப் படைப்பிரிவினர், தொலைவில் நின்று கொண்டு, அர்ஜுனனின் ஆயுதம் சக்தியில் பெருகுவதையும், மின்னலின் பிரகாசத்துடன் செல்வதையும் காணத் தொடங்கினர்.(1) எதிரியின் அழிவுக்காக அந்தக் கடும் மோதலில் பெரும் வீரியத்துடன் அர்ஜுனன் ஏவிய ஆயுதம் சென்று கொண்டிருந்தபோதே, அதைக் கர்ணன் தன் பயங்கரக் கணைமாரியால் கலங்கடித்தான்.(2) உண்மையில், சக்தியில் பெருகிய (பார்த்தனின்) அந்த ஆயுதம், குருக்களை எரித்துக் கொண்டிருந்தபோது, சூதன் மகன் {கர்ணன்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அதை நொறுக்கினான். பிறகு, கர்ணன், உறுதியான நாண்கயிற்றைக் கொண்டதும், உரத்த ஒலியெழுப்புவதுமான தன் வில்லை வளைத்துக் கணைமாரிகளைப் பொழிந்தான்.(3) அர்ஜுனனின் அந்த எரியும் ஆயுதத்தை, (பலாபலன்களில்) அதர்வணச் சடங்குக்கு ஒப்பானதும், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து பெற்றதும், பெரும் பலம் வாய்ந்ததும், எதிரியைக் கொல்லவல்லதுமான தன் ஆயுதத்தால் அந்தச் சூதன் மகன் {கர்ணன்} அழித்தான். மேலும் அவன் {கர்ணன்} பார்த்தனையும் {அர்ஜுனனையும்} எண்ணற்ற கூரிய கணைகளால் துளைத்தான்[1].(4)


[1] வேறொரு பதிப்பில், “பார்த்தன், விருத்தியடைகின்றதும், கௌரவர்களை எரிக்கின்றதுமான அந்த அஸ்திரத்தைத் தங்கக் கட்டுக்களுள்ள பாணங்களால் அடித்தான். கர்ணனோ, திடமான நாண்கயிற்றுடன் கூடினதும், பயனற்றதாகாததுமான வில்லை நாணொலியிடும்படி செய்து பாண ஸமூகங்களைப் பிரயோகித்தான். அவன் பரசுராமரித்தினின்று அடையப்பட்டதும், மஹாமகிமை பொருந்தியதும், பகைவர்களை நாசஞ்செய்கின்றதுமான அதர்வணவேதோகதமான அஸ்திரத்தினால் எரிக்கின்ற அந்த அர்ஜுனனுடைய அஸ்திரத்தை நாசஞ்செய்தான்; அர்ஜுனனையும் கூர்மையுள்ள பாணங்களால் அடித்தான்” என்றிருக்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுக்கும், அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிகப் பயங்கரமான நிலையை அடைந்தது. தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் கடுமையான இரு யானைகளைப் போல அவர்கள் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.(5) திசைகளின் புள்ளிகள் அனைத்தும் ஆயுதங்களால் மறைக்கப்பட்டன, சூரியனும் கூடக் கண்ணுக்குப் புலப்படாதவனானான். உண்மையில், கர்ணனும், பார்த்தனும் {அர்ஜுனனும்} தங்கள் கணைகளின் பொழிவால், ஆகாயத்தில் எந்த இடைவெளியும் இல்லாமல், அதைக் கணைகளின் ஒரே பரப்பாக ஆக்கினர்.(6) கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும், பரந்து விரிந்த ஒரு கணை வலையையே அப்போது கண்டனர். கணைகளால் உண்டாக்கப்பட்ட அந்த அடர்த்தியான இருளில், வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியவில்லை.(7) ஆயுதங்களில் சாதித்த மனிதர்களில் முதன்மையான அவ்விருவரும், இடையறாமல் குறிபார்த்து, எண்ணற்ற கணைகளை ஏவி, பல்வேறு வகைகளிலான அழகிய செயலாற்று வழிமுறைகளை வெளிப்படுத்தினர்.(8) போரில் அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஆற்றல், ஆயுதங்கள் மற்றும் கரநளினம் ஆகியவற்றில், சில வேளைகளில் சூதன் மகன் {கர்ணன்} தன் எதிராளியை விஞ்சி நின்றான், சில வேளைகளில் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} அவனை விஞ்சிநின்றான்.(9) ஒருவர் தாமதத்தை மற்றவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அந்த வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்றதும், பயங்கரமானதும், அச்சத்தை ஏற்படுத்தவதுமான அந்த ஆயுத வழியை {போரைக்} கண்டு, அந்தப் போர்க்களத்தில் இருந்த பிற போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்த உயிரினங்கள் கர்ணனையும், அர்ஜுனனையம் பாராட்டினர். உண்மையில் அவர்களில் பலர் ஒரே நேரத்தில், மகிழ்ச்சியால் நிறைந்து, சில நேரங்களில் “ஓ! கர்ணா, மிகச்சிறப்பு” என்றும், சில நேரங்களில் “ஓ! அர்ஜனா, மிகச்சிறப்பு” என்றும் கூச்சலிட்டனர்.(11)

அந்தக் கடும் மோதல் நடக்கையில், தேர்களின் கனமும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் நடையும் பூமியை ஆழமாக அழுத்திய போது, அர்ஜுனனுக்கு எதிரியான அஸ்வசேனன் எனும் பாம்பானவன், பாதாள உலகத்தில் தன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.(12) காண்டவத்தின் காட்டுத் தீயில் இருந்து தப்பிய அவன், (பாதாள உலகத்திற்குச் செல்வதற்காக) கோபத்தால் பூமியை துளைத்துச் சென்றான். அந்தத் துணிச்சல் மிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தன் தாயின் மரணத்தையும், அதன் காரணமாக அர்ஜுனனிடம் தான் கொண்ட பகைமையையும் நினைவு கூர்ந்து, பாதாளலோகத்தில் இருந்து எழுந்து வந்தான். வானத்தில் எழுக்கூடிய சக்தியைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான போரைக் காண்பதற்காகப் பெரும் வேகத்துடன் பறந்து சென்றான்.(13) தீய ஆன்மா கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தான் கொண்ட பகைமையை நிறைவு செய்ய இதுவே நேரம் என்று நினைத்த அவன் {அஸ்வசேனன்}, வேகமாகக் கர்ணனின் அம்பறாத்தூணிக்குள் ஒரு கணையின் வடிவில் புகுந்தான்.(14)

அந்த நேரத்தில், சுற்றிலும் ஒளியைப் பொழிந்த வண்ணம் கணைகளின் வலை ஒன்று அங்கே காணப்பட்டது. கர்ணனும், பார்த்தனும் தங்கள் கணைப் பொழிவால், அடர்த்தியான கணைகளின் ஒரே திரளாக ஆகாயத்தைச் செய்தனர்.(15) பரந்து, விரிந்த அந்தக் கணைகளின் பரப்பைக் கண்ட கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாகினர். கணைகளால் உண்டான அடர்த்தியான, பயங்கரமான அந்த இருளில் அவர்கள் வேறு எதையும் பார்க்கமுடியாதவர்களானார்கள்.(16) மனிதர்களில் புலிகளும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், போரில் தங்கள் முயற்சிகளால் களைப்படைந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(17) இளம் (பனை) இலைகளாலான சிறந்த விசிறிகளால் அவர்கள் இருவரும் வீசப்பட்டனர். ஆகாயத்தில் இருந்த அப்சரஸ்கள் பலரால் நறுமணமிக்கச் சந்தன நீரும் அவர்கள் மேல் தெளிக்கப்பட்டது. சக்ரனும் {இந்திரனும்}, சூரியனும், தங்கள் கரங்களால் அவ்விரு வீரர்களின் முகங்களையும் முழுமையாகத் துடைத்தனர்.(18)

இறுதியாகக் கர்ணன் தன்னால் பார்த்தனை {அர்ஜுனனை} விஞ்ச இயலவில்லை என்பதையும், அவனது {அர்ஜுனனின்} கணைகளால் தான் மிகவும் எரிக்கப்படுவதையும் கண்டபோது, தன் அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்ட அந்த வீரன், தன் அம்பறாத்தூணிக்குள் தனியாகக் கிடக்கும் அந்தக் கணையின் மீது தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(19) எதிரியைக் கொல்லக்கூடியதும், மிகக் கூரியதும், பாம்பின் வாயைக் கொண்டதும், சுடர்மிக்கதும், கடுமையானதுமான அந்தக் கணையை விதிப்படி பளபளப்பாக்கிய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பார்த்தனின் அழிவுக்காக வெகுகாலமாகத் தன்னிடம் வைத்திருந்த அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான்.(20) கடுஞ்சக்தி கொண்டதும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டதும், தங்க அம்பறாத்தூணியில் சந்தனத் தூளுக்கு மத்தியில் கிடந்ததும், எப்போதும் தன்னால் வழிபடப்பட்டதுமான அந்தக் கணையைப் பொருத்திய கர்ணன், தன் வில்லின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, பார்த்தன் மீது அதைக் குறி வைத்தான்.(21) உண்மையில், அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} தலையை வெட்டுவதற்காகவே, ஐராவதத்தின் குலத்தில் பிறந்த அந்தச் சுடர்மிக்கக் கணையைக் குறி வைத்தான். அப்போது திசைகளின் அனைத்துப் புள்ளிகளும், ஆகாயமும் எரிந்தன, பயங்கர எரிநட்சத்திரங்களும், இடிகளும் விழுந்தன.(22) வில்லின் நாண்கயிற்றில் கணையின் வடிவிலான அந்தப் பாம்பு பொருத்தப்பட்ட போது, சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய லோகபாலர்கள் உரக்க ஓலமிட்டனர். பாம்பான அஸ்வசேனன், யோக சக்திகளின் உதவியால் தன் கணைக்குள் நுழைந்திருப்பதைச் சூதன் மகன் {கர்ணன்} அறியவில்லை.(23)

வைகர்த்தன் {கர்ணன்} அந்தக் கணையைக் குறிபார்ப்பதைக் கண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “ஓ! கர்ணா, இந்தக் கணை அர்ஜுனனின் தலையை வீழ்த்தாது. கவனமாகத் தேடி, எதிரியின் தலையை வீழ்த்தக்கூடிய மற்றொரு கணையைப் பொருத்துவாயாக” என்றான்[2].(24) பெரும் சுறுசுறுப்புடைய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கோபத்தில் எரியும் கண்களுடன், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, கர்ணன் ஒரு போதும் ஒரு கணையை இரு முறை குறிபார்ப்பதில்லை. எங்களைப் போன்ற மனிதர்கள் ஒருபோதும் நேர்மையற்ற போர்வீரர்களாக மாட்டார்கள்” என்றான்.[3](25) இவ்வார்த்தைகளைச் சொன்ன கர்ணன், பல வருடங்களாகத் தான் வழிபட்ட அந்தக் கணையைப் பெருங்கவனத்துடன் ஏவினான். வெற்றியைப் பெற நினைத்த அவன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியிடம் {அர்ஜுனனிடம்} வேகமாக, “ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ கொல்லப்பட்டாய்” என்றான்[4].(26) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டதும், பயங்கரமான விஸ் ஒலியுடன் கூடியதும், நெருப்பு, அல்லது சூரியனுக்கு ஒப்பான காந்தியைக் கொண்டதுமான அந்தக் கணை, வில்லின் நாண்கயிற்றை விட்டகன்றதும், ஒரு பெண்ணின் கூந்தலைப் பிரிக்கும் வகுட்டைப் போல, ஒரு கோட்டால் ஆகாயத்தைப் பிரிப்பது போலத் தெரிந்து, ஆகாயத்தில் சுடர்விட்டெரிந்தது.(27)

[2] வேறொரு பதிப்பில், “மகாத்மாவான சல்யன், பாணத்தைப் பூட்டினவனும், உக்கிரஸ்வரூபமுள்ளவனுமான அந்தக் கர்ணனைப் பார்த்து, “கர்ண, (அர்ஜுனனுடைய) கழுத்தை லக்ஷ்யம் வைத்து உன்னால் இந்தப் பாணம் பூட்டப்படவில்லை. பகைவனைக் கொல்லக் கூடிய பாணத்தை நன்கு பார்த்துப் பூட்டுவாயாக” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ கர்ணா, இந்தக் கணையை ஏவுவதற்கு முன்னால் நன்றாகச் சிந்திப்பாயாக; இஃது அர்ஜுனனின் கழுத்தை அடையாது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தக் கணையால் அவனது கழுத்தை அடைய முடியாது. அவனது தலையைக் கொய்யக் கூடிய மற்றொரு கணையைப் பொருத்தி குறி பார்ப்பாயாக" என்றிருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில், “மனவுறுதியுள்ள ஸூதபுத்திரன், குரோதத்தினால் கண்கள் மிகச் சிவந்து, மத்திரராஜனைப் பார்த்து, “சல்ய! கர்ணன் இரண்டு தடவை பாணத்தைக் குறிபார்த்துப் பூட்டான். என்னைப் போன்றவர்கள் கபட யுத்தம் செய்யமாட்டார்கள்” என்றிருக்கிறது. மன்தநாததத்தரின் பதிப்பில்,”ஓ சல்லியரே, கர்ணன் ஒரு போதும் இருமுறை குறி வைப்பதில்லை; எங்களைப் போன்ற போர்வீரர்களுக்கிடையில் எப்போதும் நியாயமான போரே செய்யப்பட வேண்டும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ சல்லியரே, கர்ணன் இரண்டாவது கணையைப் பொருத்தமாட்டான். என்னைப் போன்ற ஒருவன் வஞ்சனையில் ஈடுபட மாட்டான்” என்றிருக்கிறது.

[4] வேறொரு பதிப்பில், “அடே, பல்குன, நீ மாண்டாய்” என்று கர்ணன் சொன்னதாக இருக்கிறது.

ஆகாயத்தில் சுடர்விடும் அந்தக் கணையைக் கண்டவனும், கம்சனைக் கொன்றவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, பெரும் வேகத்துடன், தன் பாதத்தால் அந்தச் சிறந்த தேரைக் கீழே அழுத்தி, மிக எளிதாக ஒரு முழம்[5] ஆழத்திற்கு அதை {அந்தத் தேரை} {பூமியில்} மூழ்கச் செய்தான்.(28) இதனால், சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தங்களைத் தரையில் கிடத்திக் கொண்டன {தரையில் விழுந்தன}. உண்மையில் கர்ணனால் குறிபார்க்க்கப்பட்ட (கணையின் வடிவில் இருந்த) அந்தப் பாம்பைக் கண்டவனும், வலிமையுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, தன் பலத்தைச் செலுத்தி இவ்வாறு தன் பாதத்தால் அந்தத் தேரைப் பூமிக்குள் அழுத்தியதால், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கி, அந்தத் தேர் மூழ்கிய அந்தப் பூமியில் தங்களைக் கிடத்திக் கொண்டன[6].(29,30) அப்போது ஆகாயத்தில் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பேரொலிகள் எழுந்தன. பல தெய்வீகக் குரல்கள் கேட்கப்பட்டன, கிருஷ்ணன் மீது தெய்வீக மலர்கள் பொழிந்தன, சிங்க முழக்கங்களும் செய்யயப்பட்டன. மதுசூதனின் {கிருஷ்ணனின்} முயற்சியால் இவ்வாறு அந்தத் தேரானது பூமிக்குள் அழுத்தப்பட்ட போது,(31) பெருங்கவனத்துடனும், கோபத்துடனும் ஏவப்பட்ட அந்தப் பாம்பாயுதத்தின் இயல்பின் விளைவால், சூதன் மகன் {கர்ணன்} அந்தக் கணையைக் கொண்டு உலகம், ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் போன்ற அனைத்திலும் கொண்டாடப்பட்ட ஆபரணமும், தன் எதிராளியான அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்த அற்புத மகுடத்தை வீழ்த்தினான்.(32)

[5] வேறொரு பதிப்பில் “ஐந்து அங்குல ஆழம்” என்று சொல்லப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் ஆழத்தின் அளவு செல்லப்படவில்லை.

[6] “29ம் சுலோகத்தின் கடைசி வரியும், 30ம் சுலோகத்தின் இரண்டு வரிகளும் பம்பாய்ப்பதிப்பில் இல்லை. இவை கூறியதுகூறலே என்பது தெளிவாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் மேற்கண்டபடி கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தக் கூறியது கூறல் இல்லை.

அந்தக் கிரீடமானது, சூரியன், அல்லது சந்திரன், அல்லது நெருப்பு, அல்லது ஒரு கோளின் காந்தியைக் கொண்டதும், தங்கம், முத்துகள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், புரந்தனுக்காகப் பலமிக்கத் தான்தோன்றியாலேயே {பிரம்மனாலேயே} பெருங்கவனத்துடன் செய்யப்பட்டதுமாகும்.(33) விலைமதிப்புமிக்கத் தோற்றத்தைக் கொண்டதும், எதிரிகளின் இதயங்களை அச்சங்கொள்ளச் செய்வதும், அதை அணிபவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதும், நறுமணத்தைப் பொழிவதுமான அந்த ஆபரணமானது {கிரீடமானது}, தேவர்களின் எதிரிகளைக் கொல்ல பார்த்தன் சென்ற போது, தேவர்களின் தலைவனாலேயே {இந்திரனாலேயே} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுக்கப்பட்டதாகும்.(34) அந்தக் கிரீடமானது, ருத்ரன், நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, சக்ரன் {இந்திரன்} மற்றும் குபேரன் ஆகியோராலும், பிநாகை, பாசம் {சுருக்குக் கயிறு}, வஜ்ரம் மற்றும் முதன்மையான கணைகளைக் கொண்டும் நொறுக்கப்பட முடியாததாக இருந்தது. தேவர்களில் முதன்மையானோராலேயே அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருந்தது.(35) பெரும் சுறுசுறுப்பு கொண்டவனும், தீய இயல்பைக் கொண்டவனும், போலி நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கிரீடத்தின் மீது பாய்ந்து, அர்ஜுனன் தலையிலிருந்து அதை அகற்றிவிட்டான்.(36)

அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் தலையில் இருந்து பலவந்தமாக அஃதை அகற்றி, மலர்களுடன் கூடிய உயர்ந்த, அழகிய மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் பிளக்கும் வஜ்ரத்தைப் போலப் பல ரத்தினங்களைக் கொண்டதும், அழகால் சுடர்விட்டதும், நன்கு வடிவமைக்கப்பட்டதுமான அந்த ஆபரணத்தைத் துண்டுகளாகக் குறைத்தான்.(37) அந்தச் சிறந்த ஆயுதத்தால் நொறுக்கப்பட்டதும், காந்தியுடன் கூடியதும், (பாம்பின்) நஞ்செனும் நெருப்பால் சுடர்விட்டதும், அழகு நிறைந்ததும், பார்த்தனால் மிகவும் விரும்பப்பட்டதுமான அந்தக் கீரடம், சூரியனின் சுடர்மிக்க வட்டில் அஸ்தமலைகளில் வீழ்வதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(38) உண்மையில், அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, அரும்பும் இலைகள் மற்றும் மலர்களுடனும் கூடிய உயர்ந்த மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய மலைச் சிகரத்தை வீழ்த்தும் இந்திரனின் வஜ்ரத்தைப் போல, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றினான்.(39) புயலால் கலங்கடிக்கப்படும்போது பூமி, ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் ஆகியவை உரக்க முழங்குவதைப் போலவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நேரத்தில் உலகங்கள் அனைத்திலும் முழக்கம் எழுந்தது. அந்த மகத்தான ஒலியைக் கேட்ட மக்கள், அமைதியாக இருக்கும் திறனை இழந்து, மிகவும் கலங்கிப் போய் நின்றபடியே சுழன்றனர்.(40)

கரிய நிறம் கொண்டவனும், இளமை நிறைந்தவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் கிரீடம் இல்லாதவனாக, உயர்ந்த சிகரத்தைக் கொண்ட ஒரு நீல மலையைப் போல அழகாகத் தெரிந்தான். அப்போது தன் குழல்களை {கேசத்தை} வெண்துணியால் கட்டிக் கொண்ட அர்ஜுனன், முற்றிலும் அசைவற்றவனாக நின்றான். தலையில் வெள்ளைத் தலைப்பாகையுடன் கூடிய அவன், சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(41) இவ்வாறு, (காண்டவத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்ட) சிறந்த வாயைக் கொண்ட அந்தப் பெண்பாம்பானவள், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட அந்த அர்ஜுனன், குதிரைகளின் கடிவாளங்களின் அளவு உயரத்தில் தன் தலையைக் கொண்டிருப்பதைக் கண்டு, நன்கு வடிவமைக்கப்பட்டதும், (முன்பொரு காலத்தில்) அதிதியின் மகனுக்கு {இந்திரனுக்குச்} சொந்தமானதும், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தக் கிரீடத்தை மட்டும், சூரியனின் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட கணையின் வடிவிலான தன் மகனின் {அஸ்வசேனன்} மூலமாக அகற்றினாள். ஆனால் அர்ஜுனனும் (பின் வரும் தொடர்விளைவில் தோன்றப் போவதைப் போல), அந்தப் பாம்பை யமனின் சக்திக்கு அடிபணியச் செய்யாமல் போரை விட்டுத் திரும்பவில்லை[7].(42) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான விலைமதிப்புமிக்கக் கணையானவனும், முன்பே அர்ஜுனனின் மிக முக்கிய எதிரியானவனுமான அந்த வலிமைமிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, இவ்வாறு பின்னவனின் {அர்ஜுனனின்} கிரீடத்தை நொறுக்கிச் சென்றான்.(43)

[7] “இந்தச் சுலோகமானது வியாச பதங்களில் {வியாகூடங்களில்} ஒன்றாகத் தெரிகிறது. நான் இதை விளக்க நீலகண்டரையே பின்பற்றியுள்ளேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தை எரித்த அவன் {அஸ்வசேனன்}, மீண்டும் பெரும் வேகத்தோடு அர்ஜுனனிடம் செல்ல விரும்பினான். எனினும், (அவனைக் கண்டவனும், ஆனால் அவனை அறியதவனுமான) கர்ணனால் கேட்கப்பட்ட அவன் {அஸ்வசேனன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ! கர்ணா, என்னைப் பாராமலேயே நீ என்னை ஏவினாய். இதன் காரணமாகவே என்னால் அர்ஜுனனின் தலையை வீழ்த்த முடியவில்லை. என்னை நன்றாகப் பார்த்த பிறகு, மீண்டும் என்னை வேகமாக ஏவுவாயாக. அப்போது, உன் எதிரியும், என் எதிரியுமான அவனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்” என்றான்.(45) இவ்வாறு அந்தப் போரில் அவனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, “பயங்கர வடிவைக் கொண்ட நீ யார்?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன் கர்ணனிடம்}, “பார்த்தனால் {அர்ஜுனால்} தீங்கிழைக்கப்பட்ட ஒருவனாக என்னை நீ அறிந்து கொள்வாயாக. என் அன்னையைக் கொன்றதால், நான் அவனிடம் பகை கொண்டேன்.(46) வஜ்ரதாரியே {இந்திரனே} பார்த்தனைக் காத்தாலும்கூட, பின்னவன் {அர்ஜுனன்} பித்ருக்களின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிக்குச் சென்றே ஆக வேண்டும். என்னை அலட்சியம் செய்யாதே. நான் சொல்வதைச் செய். நான் உன் எதிரியைக் கொல்வேன். தாமதமில்லாமல் என்னை ஏவுவாயாக” என்றான் {அஸ்வசேனன்}.(47)

அவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {அஸ்வசேனனிடம்}, “ஓ! பாம்பே {அஸ்வசேனா}, அடுத்தவனின் வலிமையை நம்பி போரில் வெற்றி பெற எப்போதும் கர்ணன் விரும்பியதில்லை. நூறு அர்ஜுனர்களை நான் கொல்ல வேண்டியிருந்தாலும், ஓ! பாம்பே, ஒரே கணையை இருமுறை நான் ஏவமாட்டேன்” என்றான்.(48) போருக்கு மத்தியில் மீண்டும் அவனிடம் பேசியவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சூரியன் மகன் கர்ணன், “பிற பாம்பாயுதங்களுடைய இயல்பின் துணையைக் கொண்டும், உறுதியான முயற்சி மற்றும் கோபத்தைக் கொண்டும் நான் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன். நீ மகிழ்வடைந்து, வேறெங்கும் செல்வாயாக” என்றான் {கர்ணன்}.(49) அந்தப் போரில் கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பாம்புகளின் இளவரசன் {அஸ்வசேனன்}, சினத்தால் அவ்வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு கணையின் வடிவையேற்று தானே பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்லச் சென்றான். பயங்கர வடிவைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, ஆவலுடன் காத்த விருப்பமானது தன் எதிரியினை அழிப்பதே ஆகும்.(50)

அப்போது கிருஷ்ணன் அம்மோதலில் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் பகை கொண்ட அந்தப் பெரும்பாம்பைக் கொல்வாயாக” என்றான். மதுசூதனனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், எதிரிகளுக்கு எப்போதும் கடுமையான வில்லாளியுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, அவனைக் குறித்து {கிருஷ்ணனிடம்} விசாரிக்கும் வகையில், “உண்மையில், கருடனின் வாயில் நேராகச் சென்று விழுவதைப் போல, என்னை எதிர்த்துத் தானே முன்னேறி வரும் அந்தப் பாம்பானவன் யார்?” என்று கேட்டான்.(51) அதற்குக் கிருஷ்ணன், “வில்தரித்து, காண்டவ வனத்தில் அக்னி தேவனை நிறைவு செய்வதில் நீ ஈடுபட்டிருந்த போது, இந்தப் பாம்பானவன், தன் தாயின் உடலுக்குள் பதுங்கி வானத்தில் இருந்தான், வானத்தில் இருப்பது ஒரே பாம்பு என்று நினைத்து நீ அந்தத் தாயைக் கொன்றாய்.(52) உன்னால் செய்யப்பட்ட அந்தப் பகைச்செயலை நினைத்துப் பார்த்தே, இன்று உன் அழிவுக்காக உன்னை நோக்கி இவன் வருகிறான். ஓ! எதிரிகளைத் தடுப்பவனே, சுடர்மிக்க எரிநட்சத்திரம் ஒன்று வானத்தில் இருந்து விழுவதைப் போல வரும் அவனைப் பார்ப்பாயாக” என்றான்.”(53)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது சினத்தால் முகம் மாறிய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, சாய்வான திசையில் ஆகாயத்தில் இருந்து தன்னை நோக்கி வந்த அந்தப் பாம்பை ஆறு கூரிய கணைகளைக் கொண்டு வெட்டினான். இவ்வாறு உடல் வெட்டப்பட்ட அவன் {அஸ்வசேனன்} பூமியில் விழுந்தான்.(54) அர்ஜுனனால் அந்தப் பாம்பானவன் வெட்டப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பருத்த கரங்களைக் கொண்டவனும், உயிரினங்களில் முதன்மையானவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, பூமியில் இருந்து அந்தத் தேரைத் தன் கரங்களைக் கொண்டு உயர்த்தினான்.(55) அந்நேரத்தில், தனஞ்சயனைச் சாய்வாகப் பார்த்த கர்ணன், கல்லில் கூராக்கப்பட்டவையும், மயிலின் இறகுகளைக் கொண்டவையுமான பத்து கணைகளால், மனிதர்களில் முதன்மையான அந்தக் கிருஷ்ணனைத் துளைத்தான்.(56) அப்போது தனஞ்சயன், பன்றியின் காதுகளைப் போன்ற தலையைக் கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான பனிரெண்டு கூரிய கணைகளால் {வராஹகர்ணங்களால்} கர்ணனைத் துளைத்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தன் காது வரை இழுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்பின் சக்தியைக் கொண்டவொரு துணிக்கோல் கணையையும் {நாராசத்தையும்} ஏவினான்.(57) அர்ஜுனனால் நன்கு ஏவப்பட்ட அந்த முதன்மையான கணை, கர்ணனின் கவசத்தை ஊடுருவிச் சென்று, அவனது உயிர் மூச்சை நிறுத்திவிடுவதைப் போல, அவனது குருதியைக் குடித்து, ஊனீரால் தன் சிறகுகள் நனைந்து, பூமிக்குள் நுழைந்தது.(58)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட விருஷன் {கர்ணன்}, தடியால் அடிக்கப்பட்ட பாம்பொன்றைப் போல அந்தக் கணையால் தாக்கப்பட்டதால் சினமடைந்து, நஞ்சைக் கக்கும் கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற வலிமைமிக்கக் கணைகள் பலவற்றை ஏவினான்.(59) அவன் {கர்ணன்}, ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} பனிரெண்டு கணைகளாலும், அர்ஜுனனை தொண்ணூற்றொன்பது கணைகளாலும் துளைத்தான். ஒரு பயங்கரக் கணையால் மீண்டும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்த கர்ணன், சிரித்துக் கொண்டே பெருமுழக்கம் செய்தான்.(60) எனினும், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} தன் எதிரியின் மகிழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனித உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் அறிந்தவனும், இந்திரனின் ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் சக்தி கொண்ட பலனைத் தாக்கிய இந்திரனைப் போல நூற்றுக்கணக்கான கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(61) பிறகு அர்ஜுனன், காலதண்டத்திற்கு ஒப்பான தொண்ணூறு கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். அக்கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், இடியால் பிளக்கப்பட்ட மலையைப் போல நடுங்கினான்.(62) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், விலைமதிக்க முடியாத வைரங்கள், பசும்பொன் {தூய தங்கம்} ஆகிவற்றால் அலங்கரிக்கப்பட்ட கர்ணனின் தலைக்கவசம், அவனது காதுகுண்டலங்கள் ஆகியவையும் கூட, சிறகு படைத்த கணைகளைக் கொண்டு அர்ஜுனனால் பூமியில் வீழ்த்தப்பட்டன.(63) விலைமதிப்புமிக்கதும், பிரகாசமானதும், நெடுங்காலத்திற்கு முதன்மையான கலைஞர்கள் பலரால், பெருங்கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதுமான சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தையும் கூட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு கணத்தில் பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான்.(64)

இவ்வாறு அவனைக் {கர்ணனைக்} கவசமற்றவனாக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, சினத்துடன், பெரும் சக்தி கொண்ட கூரிய கணைகள் நான்கால் கர்ணனைத் துளைத்தான். தன் எதிரியால் பலமாகத் தாக்கப்பட்ட கர்ணன், பித்தம், சளி, வாயு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளியைப் போல, பெரும் வலியால் துன்புற்றான்.(65) பெரும் வேகம் கொண்ட அர்ஜுனன், எண்ணற்றவையும், சிறந்தவையும், பெரும் கூர்மை கொண்டவையும், பெரும் பலம், வேகம் மற்றும் கவனத்துடன் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் மீண்டும் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(66) கூர்முனையையும், கடும் சக்தியையும் கொண்ட அந்தப் பல்வேறு கணைகளைக் கொண்டு பார்த்தனால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், தன் சாரலில் செந்நீர் ஓடைகள் பாயும் ஒரு செஞ்சுண்ண மலையைப் போல (குருதியால் மறைக்கப்பட்டு) மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(67) மீண்டும் அர்ஜுனன், நேராகச் செல்பவையும், முழுக்க இரும்பாலானவையும், பலமானவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையும், அந்தகனின் நெருப்புதண்டத்துக்கு ஒப்பானவையுமான கணைகளால், கிரௌஞ்ச மலைகளைத் துளைக்கும் அக்னியின் மகனைப்[8] போல அந்தக் கர்ணனை நடுமார்பில் துளைத்தான்.(68) பிறகு சூதன் மகன் {கர்ணன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு ஒப்பான தன் வில்லையும், அம்பறாத்தூணியையும் எறிந்து விட்டு, பெரும் வலியை உணர்ந்து, சுழன்று, தன் பிடி தளர்ந்து, பெரும் வேதனையை அடைந்து, செயலற்றவனாக மலைத்து நின்றான்[9].(69)

[8] “தாரகனைக் கொன்றவனும், தேவர்ப்படைத் தலைவனுமான கார்த்திகேயனே {முருகனே} அக்னியின் மகன். பிற மரபுகள் இவனை ஹரன் மற்றும் பார்வதியின் மகன் என்று சொல்கின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[9] வேறொரு பதிப்பில், “பிறகு, நன்றாக அடிக்கப்பட்ட ஸூதபுத்திரன், அம்புத்தூணியையும், இந்திரவில்லுக்கு ஒப்பான அந்த வில்லையும் எறிந்துவிட்டுப் பிறகு தடுமாற்றமுற்றவனாகிக் கைப்பிடி தளர்ந்து ரதத்திலிருந்தபடியே மூர்ச்சையடைந்தான்” என்றிருக்கிறது.

ஆண்மையின் கடமையை {ஆண்மை விரதத்தை} நோற்பவனான அறம்சார்ந்த அர்ஜுனன், அத்தகு துயரத்தில் வீழ்ந்த தன் எதிரியைக் கொல்ல விரும்பவில்லை. அப்போது இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்}, பெரும்பரபரப்புடன், அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏன் மறதி நிறைந்தவனாக இருக்கிறாய்?(70) உண்மையில் விவேகம் கொண்டோர், தங்கள் எதிரிகள் பலவீனமாக இருந்தாலும், ஒரு போதும் அவர்களை விடமாட்டார்கள். கற்றறிந்தவனான ஒருவன், துயரில் விழுந்த எதிரிகளைக் கொல்வதால் தகுதி {புண்ணியம்} மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் ஈட்டுகிறான்.(71) காலத்தை இழக்காமல், எப்போதும் உன்னிடம் பகை கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணனை வேகமாக நொறுக்குவாயாக. சூதன் மகன் {கர்ணன்} இயன்றவனானதும் {எழுந்ததும்}, முன்பைப் போலவே உன்னை எதிர்த்து விரைவான். எனவே, அசுரன் நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ அவனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(72) “ஓ! கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஜனார்த்தனனை வழிபட்டவனும், குருகுலத்தின் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன், அசுரன் சம்பரனைத் துளைத்த சொர்க்கத்தின் ஆட்சியாளனை {இந்திரனைப்} போல, சிறந்த கணைகள் பலவற்றால் மீண்டும் கர்ணனை வேகமாகத் துளைத்தான்.(73) கிரீடத்தில் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகள் {வத்ஸதந்தங்கள்} பலவற்றால் கர்ணனையும், அவனது தேர் மற்றும் குதிரைகளையும் மறைத்து, தன் வீரத்தை வெளிப்படுத்தி, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(74)

கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட அந்தக் கணைகளால் {வத்ஸதந்தங்களால்} துளைக்கப்பட்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மலர்கள் நிறைந்த அசோகம், பலாசம், சால்மலி {முள்ளிலவு} மரங்களைப் போலவோ, சந்தன மரக் காடுகளை அதிகம் கொண்ட ஒரு மலையைப் போலவோ பிரகாசமாகத் தெரிந்தான்.(75) உண்மையில், தன் உடலில் தைத்திருந்த அந்த எண்ணற்றக் கணைகளுடன் கூடிய கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மரங்கள் நிறைந்த உச்சிகளையும், தாழ்வரைகளையும் கொண்ட மலைகளின் இளவரசனைப் போலவோ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கர்ணிகார மரங்களைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(76) கணைமாரிகளைத் திரும்பத் திரும்ப ஏவியவனும், அந்தக் கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டவனுமான கர்ணன், அஸ்த மலைகளை நோக்கி, பிரகாசமான வட்டிலுடனும், சிவந்த கதிர்களுடனும் செல்லும் சூரியனைப் போலத் தெரிந்தான்.(77) எனினும், அர்ஜுனன் கரங்களில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகள், அதிரதன் மகனின் {கர்ணனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், வலிமைமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் ஆகாயத்தில் மோதி, அவை அனைத்தையும் அழித்தன.(78) பொறுமை மீண்டவனும், கோபக்கார பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றை ஏவியவனுமான கர்ணன், கோபக்காரப் பாம்புகளைப் போலத் தெரிந்த பத்து கணைகளால் பார்த்தனையும், அவ்வாறே தெரிந்த ஆறு கணைகளால் கிருஷ்ணனையும் துளைத்தான்.(79)

அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கதும், முழுக்க இரும்பாலானதும், பாம்பின் நஞ்சுக்கோ, நெருப்பின் சக்திக்கோ ஒப்பானதும், இந்திரனின் இடிமுழக்கத்திற்கு ஒப்பான விஸ் ஒலியைக் கொண்டதும், உயர்ந்த (தெய்வீக) ஆயுதத்தின் சக்தியால் ஈர்க்கப்பட்டதுமான பயங்கரக் கணை ஒன்றை ஏவ விரும்பினான்.(80) அந்நேரத்தில், கர்ணனின் மரணத்திற்கான அந்த நேரம் வந்த போது, கண்ணுக்குப்புலப்படாதவனாக {கர்ணனை} அணுகிய காலன், பிராமணனின் சாபத்தை[10] மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் வகையில், அவனது மரணம் நெருங்கிவிட்டது என்று கர்ணனுக்குத் தெரிவிக்க விரும்பி, அவனிடம் {கர்ணனிடம்}, “பூமாதேவி உன் சக்கரத்தை விழுங்குகிறாள்” என்றான்.(81) உண்மையில், கர்ணனின் மரணத்திற்கான நேரம் வந்தபோது, சிறப்புமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்} அவனுக்கு அளித்த உயர்ந்த பிரம்ம ஆயுதம் அவனது நினைவில் இருந்து தப்பியது. பூமியும் அவனுடைய தேரின் இடது சக்கரத்தை விழுங்கத் தொடங்கியது.(82) அந்த முதன்மையான பிராமணனின் சாபத்தின் விளைவால், பூமியில் ஆழமாக மூழ்கிய கர்ணனின் தேரானது சுழலத் தொடங்கி, மேட்டுப்பகுதியில் மலர்களின் கனத்துடன் நிற்கும் புனிதமான மரம் ஒன்றைப் போல அந்த இடத்திலேயே நிலைத்து நின்றது[11].(83)

[10] கர்ண பர்வம் பகுதி 42ல், சுலோகம் 41ல் கர்ணனுக்கு இந்தச் சாபம் கிடைக்கிறது.

[11] “கிராமங்களிலும், நகரங்களிலும் கூட இந்நாள்வரை, மரத்தின் தண்டைச் சுற்றி கற்களால் கட்டப்பட்ட, அல்லது மண்ணால் அமைக்கப்பட்ட மேடையில் ஆலம், அஸ்வதம் ஆகிய புனித மரங்களைக் காணலாம். இந்த மேடைகளில் கிராமத்தின் மூத்தவர்கள் அமர்ந்திருந்து முக்கியமான காரியங்களை விவாதிப்பதையும் காணலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிராமணனின் சாபத்தால் அவனது தேர் சுழலத் தொடங்கி, ராமரிடம் {பரசுராமரிடம்} பெற்ற அந்த உயர்ந்த ஆயுதமும், உள்ளொளியால் தன்னிடம் ஒளிராமல், பாம்பு வாய்க் கொண்ட அவனது பயங்கரக் கணையும் பார்த்தனால் வெட்டப்பட்ட போது, கர்ணன் கவலையால் நிறைந்தான்.(84) அந்த இடர்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {கர்ணன்}, தன் கரங்களை அசைத்தபடியே {உதறியபடியே} அறம் குறித்துப் பழிக்கத் தொடங்கி, “அறமானது நேர்மையாளர்களை {அறவோரைக்} காக்கும் என்று அறமறிந்தோர் எப்போதும் சொல்கின்றனர்.(85) நம்மைப் பொறுத்தவரை, நம்மால் இயன்றதிலும், அறிவிலும் சிறந்த அளவுக்கு அறம் பயிலவே எப்போதும் முயல்கிறோம். எனினும், இப்போதோ அறமானது, தனக்கு அர்ப்பணிப்புள்ள நம்மைக் காக்காமல் அழித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அறமானது எப்போதும் தன்னை வழிபடுபவர்களைக் காக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.(86) இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் அர்ஜுனனுடைய கணைகளால் தாக்குதலால் மிகவும் கலக்கமடைந்தான். அவனது குதிரைகளும், அவனது சாரதியும் {சல்லியனும்}, தங்கள் வழக்கமான நிலைகளை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். தன் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டுக் கருத்தில்லாதவனாக {தளர்ச்சியடைந்து} இருந்த அவன் {கர்ணன்}, அந்தப் போரில் மீண்டும் மீண்டும் அறத்தை {தர்மத்தைப்} பழித்தான்.(87) பிறகு அவன், கிருஷ்ணனின் கரங்களை மூன்று கணைகளாலும், பார்த்தனை ஏழாலும் துளைத்தான்.(88)

அப்போது அர்ஜுனன், முற்றிலும் நேரானவையும், கடும் மூர்க்கம் கொண்டவையும், நெருப்பின் காந்திக்கு ஒப்பானவையும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்தைப் போன்றவையுமான பயங்கரமான பதினேழு கணைகளை ஏவினான்.(89) அச்சந்தரத்தக்க மூர்க்கம் கொண்ட அந்தக் கணைகள் கர்ணனைத் துளைத்து, அவனது உடலைக் கடந்து சென்று பூமியின் பரப்பில் விழுந்தன. அதிர்ச்சியில் நடுங்கிய கர்ணன், கிட்டத்தட்ட தன் முழுச் சுறுசுறுப்பையும் அப்போது வெளிப்படுத்தினான்.(90) ஒரு பலமிக்க முயற்சியால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவன் {கர்ணன்}, பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்[12]. பிரம்மாயுதத்தைக் கண்ட அர்ஜுனன், ஐந்திர ஆயுதத்தை உரிய மந்திரங்களுடன் இருப்புக்கு அழைத்தான்.(91) காண்டீவத்தையும், அதன் நாண்கயிற்றையும், தன் கணைகளையும் மந்திரங்களால் ஈர்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், மழைத்தாரைகளைப் பொழியும் புரந்தரனை {இந்திரனைப்} போலக் கணை மாரியை ஏவினான்.(92) பெரும் சக்தியும், பலமும் கொண்ட அந்த ஆயுதங்கள், பார்த்தனின் தேரில் இருந்து வெளிப்பட்டு, கர்ணனின் வாகனத்தருகே கண்களுக்குக் காணப்பட்டன. வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், தன் முன்பு தெரிந்த அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(93)

[12] இந்தப் பகுதியின் 82ம் சுலோகத்துக்கு இது முரணாக இருக்கிறது. இப்போது பிரம்ம ஆயுதம் கர்ணனின் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அல்லது இது குறையுடன் கூடிய பிரம்மாயுதமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த ஆயுதம் அழிக்கப்பட்டதைக் கண்ட விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா, உயர்ந்த ஆயுதங்களை ஏவுவாயாக. ராதையின் மகன் உன் கணைகளைக் கலங்கடிக்கிறான்” என்றான்.(94) அர்ஜுனன், உரிய மந்திரங்களுடன், பிரம்ம ஆயுதத்தைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான். கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்த பார்த்தன், (இன்னும் பல) கணைகளால் கர்ணனைத் தாக்கினான்.(95) அப்போது கர்ணன், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற கூரிய கணைகளால் அர்ஜுனனுடைய வில்லின் நாண் கயிற்றை அறுத்தான். அதே போல இரண்டாவதாகப் பொருத்தப்பட்ட நாண்கயிற்றையும், மூன்றாவதையும், நான்காவதையும், ஐந்தாவதையும் கூட அறுத்தான்.(96) ஆறாவதும், ஏழாவதும், அதற்கடுத்து எட்டாவதும், ஒன்பதாவதும், பத்தாவதும், இறுதியாகப் பதினொன்றாவதும் அந்த விருஷனால் {கர்ணனால்} அறுபட்டது. நூற்றுக் கணக்கான கணைகளை ஏவ வல்ல கர்ணன், பார்த்தன் தன் வில்லுக்கு நூறு நாண்கயிறுகளைக் கொண்டிருந்தான் என்பதை அறியவில்லை[13].(97) தன் வில்லுக்கு மற்றொரு நாண்கயிற்றைக் கட்டி, பல கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சுடர்மிக்க வாய்களைக் கொண்ட பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் கர்ணனை மறைத்தான்.(98) எப்போது நாண்கயிறு அறுந்தது, எப்போது அது மாற்றப்பட்டது என்பதைக் கர்ணன் காணாத வகையில், அறுந்த அந்த நாண்கயிறுகளை அர்ஜுனன் வேகமாக மாற்றினான். அவனால் செய்யப்பட்ட அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(99)

[13] வேறொரு பதிப்பில், “நூறு தடவை அம்புதொடுத்து அர்ஜுனனுடைய நாண்கயிற்றை அறுத்த அந்தக் கர்ணன், அர்ஜுனன் நூறு நாண்கயிறுகளைப் பூட்டியதையும் அறியவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “நூற்றுக்கணக்கான கணைகளை ஏவ வல்ல கர்ணன், அர்ஜுனன் நூறு நாண்கயிறுகளைக் கொண்டிருந்தான் என்பதை அறியவில்லை” என்று கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தக் குறிப்புகளே இல்லை.

ராதையின் மகன் {கர்ணன்} தன் ஆயுதங்களால், சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} ஆயுதங்களைக் கலங்கடித்தான். தன் ஆற்றலை வெளிப்படுத்திய அவன், தனஞ்சயனை {அர்ஜுனனை} விட மேம்படுவதாக அந்த நேரத்திற்குத் தெரிந்தது.(100) கர்ணனின் ஆயுதங்களால் பீடிக்கப்படும் அர்ஜுனனைக் கண்ட கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “கர்ணனை {அருகில்} அணுகி, மேன்மையான ஆயுதங்களால் அவனைத் தாக்குவாயாக” என்றான்.(101) அப்போது சினத்தால் நிறைந்த தனஞ்சயன், நெருப்பைப் போன்றதும், பாம்பின் நஞ்சுக்கு ஒப்பாகத் தெரிந்ததும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதுமான மற்றொரு தெய்வீக ஆயுதத்தை மந்திரங்களால் ஈர்த்து,(102) அதனுடன் ரௌத்ர ஆயுதத்தையும் ஒன்றிணைத்து, அதைத் தன் எதிரியின் மீது ஏவ விரும்பினான்[14]. அந்த நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியானது, கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றை விழுங்கியது.(103) வேகமாகத் தன் வாகனத்தில் இருந்து இறங்கிய அவன் {கர்ணன்}, மூழ்கிய சக்கரத்தைத் தன்னிரு கரங்களாலும் பற்றி, அதைப் பெரும் முயற்சியுடன் உயர்த்த முயற்சித்தான்.(104) கர்ணனால் பலமாக உயரத் தூக்கப்பட்டவளும், அவனது சக்கரத்தை விழுங்கியவளுமான பூமாதேவியானவள், நான்கு விரல்களின் அளவு உயரத்திற்கு, தன் ஏழு தீவுகள், மலைகள், நீர் நிலைகள், காடுகள் ஆகியவற்றுடன் உயர எழுந்தாள்.(105)

[14] இந்த 101 மற்றும் 102ம் ஸ்லோகங்கள் வேறொரு பதிப்பில் முற்றிலும் வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: “கர்ணன், தன்னுடைய அஸ்திரங்களால் அர்ஜுனன் பீடிக்கப்பட்டதைக் கண்டு, அவனைப் பார்த்து, “அப்யாஸம் செய், அஸ்த்திரத்தை நன்றாகக் கற்றறிந்துகொள், போ” என்று மொழிந்தான். பிறகு, பகைவரை வாட்டுபவனான கர்ணன், நெருப்புக்கு ஒப்பானதும், கோரமாயிருப்பதும், ஸர்ப்பங்களுடைய விஷத்துக்கு ஒப்பானதும், உருக்குமயமானதும், தேவஸம்பந்தமுள்ளதுமான ஒரு பாணத்தில் ரௌத்ராஸ்திரத்தை அபிமந்திரணம் பண்ணி நன்றாக ஸந்தானம் செய்து கிரீடியின் மீது பிரயோகிக்க எண்ணங்கொண்டவனானான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

விழுங்கப்பட்ட தன் சக்கரத்தைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்ணீர் சிந்தி, அர்ஜுனனைக் கண்டு, சினத்தால் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(106) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஓ! பார்த்தா, மூழ்கிய இந்தச் சக்கரத்தை நான் உயர்த்தும்வரை ஒரு கணம் பொறுப்பாயாக.(107) ஓ! பார்த்தா, என் தேரின் இடது சக்கரம், தற்செயலாகப் பூமியால் விழுங்கப்பட்டதைக் கண்டும், கோழையால் மட்டுமே செய்யப்படக்கூடிய (என்னைத் தாக்கிக் கொல்லும்) இந்தக் காரியத்தைக (செய்யாமல்) கைவிடுவாயாக.(108) அற நடத்தைகளை நோற்கும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களாக இருப்பவர்கள், கலைந்த முடிகளைக் கொண்ட மனிதர்கள், போரில் இருந்து முகம் திருப்பிக் கொண்டோர், பிராமணன், கரங்கூப்பியவன், சரணடைந்தவன், இடத்தை இரந்து கேட்பவன், தன் ஆயுதத்தை விட்டவன், கணைகள் தீர்ந்து போனவன், கவசம் இடம்பெயர்ந்தவன், ஆயுதம் விழுந்துவிட்டவன், ஆயுதம் உடைந்துபோனவன் ஆகியோர் மீது ஒருபோதும் தங்கள் ஆயுதங்களை ஏவுவதில்லை.(109,110) நீ உலகின் துணிச்சல்மிக்க மனிதனாவாய். போர்விதிகளையும் நீ நன்கறிந்தவனாவாய். இந்தக் காரணங்களுக்காக நீ என்னை ஒரு கணம் பொறுப்பாயாக,(111) அஃதாவது, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} நான் என் சக்கரத்தைப் பூமியில் இருந்து வெளிக்கொணரும் வரை பொறுப்பாயாக. நீ தேரில் இருக்கவும், நான் பலவீனனாக, ஊக்கம் குன்றியவனாகப் பூமியில் நிற்கவும் கூடிய இந்த நேரத்தில் நீ என்னைக் கொல்வது உனக்குத் தகாது[15].(112) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வாசுதேவனாலோ {கிருஷ்ணனாலோ}, உன்னாலோ என்னைக் கிஞ்சிற்றும் அச்சுறுத்த இயலாது. நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். நீ உயர்ந்த குலம் ஒன்றைத் தழைக்க வைப்பவனாவாய். அறத்தின் படிப்பினைகளை நினைவுகூர்ந்து, ஒரு கணம் என்னைப் பொறுப்பாயாக” என்று சொன்னான் {கர்ணன்}.”(113)

[15] மண்ணில் புதைந்த தேரைக் கிருஷ்ணன் உயர்த்தும்போது, அவனைப் பத்து கணைகளால் கர்ணன் தாக்கிய விவரம் இந்தப் பகுதியின் 56ம் சுலோகத்தில் இருக்கிறது.
--------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -90ல் உள்ள சுலோகங்கள் : 113

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்