Monday, May 15, 2017

கர்ணனின் தலையைக் கொய்த அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 91

Arjuna cuts off Karna’s head! | Karna-Parva-Section-91 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அறம் மற்றும் நியாயமான போர் ஆகியவற்றை வேண்டிய கர்ணனைக் குற்றஞ்சாட்டிய கிருஷ்ணன், அவனாலும், துரியோதனனாலும் பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை நினைவூட்டியது; வெட்கத்தால் தலைகுனிந்த கர்ணன்; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த கர்ணன்; அந்த இடைவேளையில் தன் தேரை வெளிக்கொணர முயன்ற கர்ணனின் தலையைப் புலனுணர்வு மீண்ட அர்ஜுனன் வெட்டியது; கர்ணனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒளி சூரியனைச் சென்றடைந்தது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரில் நின்றிருந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தக் கர்ணனிடம், “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ அறத்தை நினைவு கூர்வது நற்பேறாலேயே. கீழ்த்தரமானவர்கள் {நீசர்கள்}, தாங்கள் துன்பத்தில் மூழ்கும்போது, தங்கள் தேவைக்குப் பழிப்பதும், தாங்கள் செய்யும் தீச்செயல்களின் போது பழிக்காததும் பொதுவாகக் காணப்படுகிறது.(1) நீ, சுயோதனன், துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், ஒற்றையாடையில் இருந்த திரௌபதியைச் சபைக்கு மத்தியில் கொண்டு வரச் செய்தீர்கள். ஓ! கர்ணா, அச்சந்தர்ப்பத்தில் உனது அறம் வெளிப்படவில்லை. பகடையில் திறன்பெற்ற சகுனி, அஃதை {பகடையை} அறியாத குந்தியின் மகனான யுதிஷ்டிரரை சபையில் வெற்றிக் கொண்ட போது, இந்த உனது அறம் {தர்மம்} எங்கே சென்றது?(3) உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது?(4) காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?(5)


உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?(6)

மாதவிடாயின் காரணமாகக் குறைந்த உடையில் இருந்தவளும், துச்சாசனனின் விருப்பப்படிக் கீழ்ப்படிந்திருந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபைக்கு மத்தியில் நின்றிருந்தபோது அவளைக் கண்டு சிரித்தாயே, ஓ! கர்ணா, அப்போது இந்த உனது அறம் எங்கே சென்றது?(7)

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி, அப்பாவியான கிருஷ்ணை {திரௌபதி} இழுக்கப்பட்டபோது, நீ தலையிடவில்லையே. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(8)

யானையின் நடை கொண்ட பெண்மணியாக மதிக்கப்பட்ட இளவரசி திரௌபதியிடம் நீ பேசியபோது, “ஓ! கிருஷ்ணையே, பாண்டவர்கள் தொலைந்தனர். அழிவில்லா நரகில் அவர்கள் மூழ்கிவிட்டனர். நீ வேறொரு கணவனைத் தேர்ந்தெடுப்பாயாக” என்றாயே. ஓ! கர்ணா, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(9)

அரசின் மீது பேராசை கொண்டும், காந்தாரர்களின் ஆட்சியாளனை {சகுனியை} நம்பியும் (பகடையாட) பாண்டவர்களை நீங்கள் அழைத்தீர்களே. அப்போது உனது அறம் எங்கே சென்றது?(10)

வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், சிறுவனான அபிமன்யுவைப் போரில் சூழ்ந்துகொண்டு, அவனைக் கொன்ற போது, உனது அறம் எங்கே சென்றது?(11)

இப்போது நீ இருப்புக்கு அழைக்கும் இந்த அறம், அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் எங்குமில்லையெனில், இப்போது அவ்வார்த்தையைச் சொல்லி உன் {வாயின்} மேலண்ணத்தை உலர்த்துவதால் யாது பயன்? ஓ! சூதா {கர்ணா}, நீயோ இப்போது அறத்தின் நடைமுறைகளைக் குறித்துப் பேசுகிறாய், ஆனாலும் நீ உயிரோடு தப்ப மாட்டாய்.(12) புஷ்கரனால் வீழ்த்தப்பட்ட நளன், மீண்டும் தன் ஆற்றலால் அரசை மீட்டதைப் போல, ஆசையிலிருந்து விடுபட்ட பாண்டவர்களும், தங்கள் கரங்களின் ஆற்றலாலும், தங்கள் நண்பர்கள் அனைவரின் உதவியாலும் தங்கள் அரசை மீட்பார்கள்.(13) தங்கள் பலமிக்க எதிரிகளைக் கொன்ற பிறகு, சோமகர்களுடன் சேர்ந்து தங்கள் அரசை அவர்கள் மீட்பார்கள். அறத்தால் எப்போதும் காக்கப்படும் இந்த மனிதர்களில் சிங்கங்களின் (பாண்டு மகன்களின்) கைகளால் தார்தராஷ்டிரர்கள் அழிவை அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}[1].”(14)

[1] வேறொரு பதிப்பில் கிருஷ்ணனின் பேச்சில் இன்னும் சில இருக்கின்றன. இங்கே இருப்பதில் விடுபட்டவை மட்டும் பின்வருமாறு: “எப்பொழுதுமே பாண்டவர்கள் தர்மத்தில் கட்டுப்பட்டவர்கள் ஆதலால், இவர்களுக்கு அந்தத் தர்மம் விருத்தியைக் கொடுக்கிறது. (இவர்களுக்கு) விரோதிகளான அந்தக் கௌரவர்கள் தர்மத்தை விட்டு விலகினவர்கள். அக்காரணத்தினால், கௌரவர்கள் விநாசத்தை அடைந்தார்கள். நீசர்கள், பெரும்பான்மையாக வ்யஸனத்தில் மூழ்கி தெய்வத்தை நிந்திக்கின்றார்கள்; தங்களுடைய பாவத்தை நிந்திக்கிறதில்லை…….. முற்காலத்தில் அயோக்யர்களால் பீடிக்கப்பட்டவளும், குற்றமற்றவளுமான த்ரௌபதியை நீயும் பக்கத்தில் நின்று பார்த்தாயே, அப்பொழுது உன்னுடைய தர்மம் எங்கே சென்றுவிட்டது?.......... ராதேய! யானைபோலச் செல்பவளான கிருஷ்ணையைப் பார்த்து, “கிருஷ்ணையே! பாண்டவர்கள் நாசமடைந்துவிட்டார்கள்; சாஸ்வதமான நரகத்தை அடைந்தார்கள். வேறு பர்த்தாவை வரித்துக்கொள்” என்று நீ சொல்லிக் கொண்டு பக்கத்திலிருந்து பார்த்தாயே, அப்பொழுது உன்னுடைய தர்மமானது எங்கே சென்றுவிட்டது? ……. கர்ண! எப்பொழுது நீ ராஜ்யத்தில் பேராசையுள்ளவனாகச் சகுனியை அடுத்துப் பாண்டவர்களைச் சூதாடுவதற்கு மீண்டும் அழைத்தாயோ, அப்பொழுது உனக்குத் தர்மம் எங்கே போய்விட்டது?....... இந்தத் தர்மானது அந்த விஷயங்களில் இல்லலாமற்போமாகில் எல்லாவிதத்தினாலும் வீணே வாய்வறட்சியை உண்டு பண்ணுகிற பேச்சினால் யாது பயன்?” என்றிருக்கிறது

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், எந்தப் பதிலையும் அளிக்காமல் தன் தலையைத் தொங்கவிட்டான்.(15) சினத்தால் உதடுகள் நடுங்க தன் வில்லை உயர்த்திய அவன் {கர்ணன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவன் ஆதலால், பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} தன் போரைத் தொடர்ந்தான்.(16) அப்போது பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பெரும் வலிமை கொண்டோனே, தெய்வீக ஆயுதத்தால் கர்ணனைத் துளைத்து, அவனைக் கீழே வீழ்த்துவாயாக” என்றான்.(17) அந்தப் புனிதமானவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் சினத்தால் நிறைந்தான். உண்மையில், கிருஷ்ணனால் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, சீற்றத்துடன் சுடர்விட்டெரிந்தான்.(18) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் இருந்த பார்த்தனுடைய உடலின் துளைகள் அனைத்திலும் நெருப்பின் தழல்கள் வெளிப்படுவதாகத் தெரிந்தது. அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமானதாக இருந்தது.(19) அதைக் கண்ட கர்ணன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தனஞ்சயன் மீது கணைமாரியைப் பொழிந்து, தன் தேரை வெளிக்கொணர மீண்டும் முயற்சித்தான்.(20)

பார்த்தனும் {அர்ஜுனனும்}, பிரம்மாயுதத்தின் துணையால் கர்ணன் மீது கணைமாரியைப் பொழிந்தான். அந்தப் பாண்டுவின் மகன், தன் ஆயுதத்தால் எதிரியின் ஆயுத்தைக் கலங்கடித்தபடியே தொடர்ந்து அவனைத் தாக்கினான்.(21) அப்போது அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கர்ணனைக் குறிபார்த்து, அக்னியின் சக்தியால் ஈர்க்கப்பட்டதும், தனக்குப் பிடித்தமானதுமான மற்றொரு ஆயுதத்தை ஏவினான். அர்ஜுனனால் ஏவப்பட்ட அந்த ஆயுதம், தன் சக்தியால் சுடர்விட்டெரிந்தது.(22) எனினும் கர்ணன் வருணாயுதத்தால் அந்த நெருப்பைத் தணித்தான். மேலும் அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தான் உண்டாக்கிய மேகங்களின் மூலம், மழை நாளில் காணப்படும் இருளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(23) பெரும் சக்தி கொண்ட அந்தப் பாண்டுவின் மகன், கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அச்சமில்லாமல் வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அம்மேகங்களை விலக்கினான்.(24) அப்போது அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பாண்டுமகனைக் {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(25)

புகழத்தக்க அந்தக் கணை நாண்கயிற்றில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமாதேவி, அவளது மலைகள், நீர்நிலைகள் மற்றும், காடுகளுடன் சேர்ந்து நடுங்கினாள்.(26) கடினமான கூழாங்கற்களுடன் கடுங்காற்று வீசத் தொடங்கியது. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் புழுதியில் மூழ்கியன. ஓ! பாரதரே, ஆகாயத்தில் தேவர்களுக்கு மத்தியில் துயரத்துடன் கூடிய ஓலங்கள் எழுந்தன.(27) சூதன் மகனால் {கர்ணனால்} குறிபார்க்கப்பட்ட அந்தக் கணையைக் கண்ட பாண்டவர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உற்சாகமற்ற இதயங்களுடன் பெருங்கவலையில் மூழ்கினர்.(28) கூர்முனை கொண்டதும், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்திற்கு ஒப்பான பிரகாசத்துடன் கூடியதுமான அந்தக் கணை கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டு, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பெரும்பாம்பைப் போலத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} மார்பில் பாய்ந்தது.(29) எதிரிகளைக் கலங்கடிப்பவனான அந்த உயர் ஆன்ம பீபத்சு {அர்ஜுனன்}, அம்மோதலில் இவ்வாறு துளைக்கப்பட்டுச் சுழலத் தொடங்கினான். அவனது பிடி தளர்ந்ததால், அவனது கரங்களில் இருந்த அவனது வில்லான காண்டீவம் விழுந்தது. நிலநடுக்கத்தால் நடுங்கும் மலைகளின் இளவரசனைப் போல அவன் {அர்ஜுனன்} நடுங்கினான்.(30)

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் விருஷன் {கர்ணன்}, பூமியால் விழுங்கப்பட்ட தன் தேரின் சக்கரத்தை வெளிக்கொணர விரும்பி, தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான். தன்னிரு கைகளாலும் சக்கரத்தைப் பற்றிய அவன் {கர்ணன்}, பெரும் பலத்துடன் அதை இழுக்க முயன்றாலும், விதி அவனது அம்முயற்சியைத் தோல்வியுறச் செய்தது.(31) அதே வேளையில் கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் உயர் ஆன்ம அர்ஜுனன், தன் உணர்வுகள் மீண்டு, காலதண்டத்தைப் போன்று மரணத்தைத் தரக்கூடிய அஞ்சலிகம்[2] என்றழைக்கப்படும் கணையொன்றை எடுத்தான் {எடுக்கத் தயாரானான்}. அப்போது பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, “உன் எதிரியான இந்த விருஷன் {கர்ணன்}, அவனது தேரில் ஏறுவதற்கு முன்னர், அவனது தலையை உன் கணையால் கொய்வாயாக” என்றான்.(32) தன் எதிரியின் சக்கரம் இன்னும் புதைந்த நிலையில், தலைவன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அவ்வார்த்தைகளை மெச்சியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட கத்தித் தலைக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றை எடுத்து, யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதும், களங்கமற்ற சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான (கர்ணனின்) கொடிமரத்தைத் தாக்கினான்.(33) அந்தக் கொடிமரமானது விலைமதிப்புமிக்க யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், ஞானத்தில் விஞ்சிய முதன்மையான கலைஞர்களால் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதும், பெரும் அழகைக் கொண்டதும் பசும்பொன்னின் வண்ணங்களைக் கொண்டதுமாக இருந்தது.(34) அந்தக் கொடிமரமானது, எப்போதும் உமது துருப்புகளுக்குப் பெரும் வீரத்தை அளிப்பதாகவும், எதிரிக்கு அச்சத்தை ஊட்டுவதுமாக இருந்தது. அதன் வடிவம் புகழத்தக்கதாக இருந்தது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அது {அந்தக் கொடிமரம்}, காந்தியில் சூரியனுக்கு ஒப்பானதாக இருந்தது. உண்மையில் அதன் பிரகாசமானது, நெருப்பு, சூரியன், அல்லது சந்திரனைப் போன்றதாக இருந்தது.(35)

[2] “இருகரங்கள் கூப்பிய நிலையின் வடிவத்தைக் கொண்ட அகன்ற தலை கொண்ட கணையாதலால் {அஞ்சலி [வணக்கம்] என்ற சொல்லின் அடிப்படையில்} இஃது அஞ்சலிகம் என்று அழைக்கப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் அர்ஜுனன், பெரும் தேர்வீரனான அதிரதன் மகனின் {கர்ணனின்} அந்தக் கொடிமரத்தைப் பெருங்கூர்மை கொண்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதும், தெளிந்த நெய்க்காணிக்கைகளால் ஊட்டப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டதும், சுடர்மிக்க அழகைக் கொண்டதுமான அந்தக் கத்தித் தலை கணையால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி வீழ்த்தினான்.(36) அப்படி விழுந்த அந்தக் கொடிமரத்தோடு சேர்ந்து, குருக்களின் இதயங்களும், அவர்களது புகழும், செருக்கும், வெற்றி மீதான நம்பிக்கையும், விரும்பத்தக்க அனைத்தும் விழுந்த போது (அந்தக் குரு படையில் இருந்து) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் உரத்த ஓலங்கள் எழுந்தன.(37) பெரும் கரநளினம் கொண்ட குரு குலத்து வீரனால் {அர்ஜுனனால்} அந்தக் கொடிமரம் வெட்டி வீழ்த்தப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வெற்றியில் இருந்த அனைத்து நம்பிக்கைகளையும் இழந்தனர்.(38) கர்ணனை அழிக்க விரைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, இந்திரனின் வஜ்ரத்திற்கோ, அக்னியின் தண்டத்திற்கோ ஒப்பானதும், ஆயிரங்கதிர் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான சிறந்த அஞ்சலிக ஆயுதத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து வெளியே எடுத்தான்.(39)

முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லதும், குருதியாலும், சதையாலும் பூசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனுக்கு ஒப்பானதும், விலைமதிப்புமிக்கப் பொருட்களால் செய்யப்பட்டதும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவை உண்டாக்குவதும், நேராகப் பெரும் மூர்க்கத்துடன் செல்லகூடியதுமான அது {அந்த அஞ்சலிகம்}, ஆறு அடி {சிறகுகள் என்று இருக்க வேண்டும்} மற்றும் மூன்று முழம் நீளத்தைக் கொண்டதாக இருந்தது.(40) ஆயிரங்கண் இந்திரனுடைய வஜ்ரத்தின் சக்தியைக் கொண்டதும், இரவில் தடுக்கப்பட முடியாத ராட்சசர்களைப் போன்றதும், பிநாகை அல்லது நாராயணனின் சக்கரத்திற்கு ஒப்பானதுமான அது மிகப் பயங்கரமானதாகவும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் அழிவை உண்டாக்குவதுமாக இருந்தது[3].(41) பார்த்தன் {அர்ஜுனன்}, கணையின் வடிவில் இருந்ததும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாததும், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எப்போதும் துதிக்கப்படுவதும், தேவர்களையும் அசுரர்களையும் வெல்ல வல்லதுமான அந்தப் பெரும் ஆயுதத்தை உற்சாகமாக எடுத்தான்.(42) அந்தப் போரில் பார்த்தனின் பிடியில் இருந்த அந்தக் கணையைக் கண்ட மொத்த அண்டமும், அதன் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் சேர்ந்து நடுங்கியது. உண்மையில், அந்தப் பயங்கரப் போரில் உயர்த்தப்படும் அவ்வாயுதத்தைக் கண்ட முனிவர்கள், “அண்டத்தில் அமைதியுண்டாகட்டும்” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(43) அப்போது அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, அந்த ஒப்பற்ற கணையைத் தன் வில்லில் பொருத்தி, வலிமைமிக்க உயர்ந்த ஆயுதம் ஒன்றில் அஃதை இணைத்தான். தன் வில்லான காண்டீவத்தை இழுத்த அவன் {அர்ஜுனன்}, வேகமாக,(44) “நான் தவத்துறவுகளை மேற்கொண்டவனாக, மூத்தவர்களை நிறைவுசெய்தவனாக, நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைக் கேட்பவனாக இருந்தால், இந்த எனது கணை, என் எதிரியின் உடலையும், இதயத்தையும் விரைவாக அழிக்கவல்ல வலிமைமிக்க ஆயுதம் ஒன்றைப் போல ஆகட்டும்.(45) என்னால் வழிபடப்படுவதும், பெரும் கூர்மை கொண்டதுமான இந்தக் கணை, அந்த உண்மையின் காரணமாக என் எதிரியான கர்ணனைக் கொல்லட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

[3] அஞ்சலிகாயுதம் குறித்து: வேறொரு பதிப்பில், “பிறகு பார்த்தன் கர்ணனுடைய வதத்தின் பொருட்டு விரைவுள்ளவனாகி மகேந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கும், அக்னியினுடைய தண்டத்துக்கும் ஒப்பானதும், சூரியனுடைய உத்தமமான கிரணம் போன்றதும், மர்மங்களைப் பிளக்கின்றதும், ரக்தத்தினாலும், மாம்ஸத்தினாலும் பூசப்பட்டதும், அக்னிக்கும், சூரியனுக்கும் ஒப்பானதும், பூஜிக்கத்தக்கதும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் இவர்களின் உயிரை வாங்குகின்றதும், மூன்று அரத்னி அளவுள்ளதும், ஆறு சிறகுகளுள்ளதும், விரைவாகச் செல்லுந்திறமையுள்ளதும், உக்கிரமான வேகத்துடன் கூடியதும் இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்ற வீரியமுள்ளதும், அதிகோரமாகப் பரவுகின்ற காலாக்னி போன்றதும், பிநாகத்துக்கும், விஷ்ணு சக்கரத்துக்கும் ஒப்பானதும், பிராணிகளுக்கெல்லாம் பயத்தை உண்டுபண்ணுகின்றதும், அழிப்பதுமான அஞ்சலிகம் என்கிற ஒரு பாணத்தை அம்பறாத்தூணியிலிருந்து எடுத்தான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே அஞ்சலிக ஆயுதத்தின் அளவும் மூன்று முழமும், ஆறு அடிகளும் கொண்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மனிதர்கள், குதிரைகள் யானைகளை அழிக்கக்கூடிய அது மூன்று முழ நீளம் கொண்டதாகவும், ஆறு கொத்துகளை {சிறகுகளைக்} கொண்டதாகவும் இருந்தது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் முழம் என்பதற்கு விளக்கமாக, "இங்கே ரத்னி என்று சொல்லப்பட்டிருக்கிறது. ரத்னி என்பது ஒரு முழம் அளவு கொண்டதாகும்" என்று இருக்கிறது. எனவே அஞ்சலிக ஆயுதம் மூன்று முழம் அளவு கொண்டதாகவே இருந்திருக்க வேண்டும்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, அங்கிரஸின் அதர்வணத்தில் பரிந்திரைக்கப்படும் சடங்கின் பலாலன்களைக் கொண்டதும், பிரகாசத்தால் சுடர்விடுவதும், போரில் காலனாலேயே பொறுத்துக்கொள்ள முடியாததும், கடுமையானதுமான அந்தப் பயங்கரக் கணையைக் கர்ணனின் அழிவுக்காக விடுத்தான். கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனைக் கொல்ல விரும்பி, பெரும் உற்சாகத்துடன், “இந்தக் கணை எனக்கு வெற்றியை அளிக்கட்டும். என்னால் ஏவப்படுவதும், நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்டதுமான இந்தக் கணையானது கர்ணனை யமனின் முன்னிலைக்குக் கொண்டு செல்லட்டும்” என்றான்.(47) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்படுபவனுமான அர்ஜுனன், கர்ணனிடம் கொண்ட பகைவுணர்ச்சியை வளர்த்து, அவனைக் கொல்லவிரும்பி, சூரியன், அல்லது சந்திரனின் காந்தியைக் கொண்டதும், வெற்றியை அளிக்கவல்லதுமான அந்த முதன்மையான கணையால் தன் எதிரியை {கர்ணனை} உற்சாகமாகத் தாக்கினான்.(48) இவ்வாறு அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்டதும், சூரியனின் சக்தியைக் கொண்ட அந்தக் கணை, திசைப்புள்ளிகளின் அனைத்தையும் எரியச் செய்தது. இந்திரன் வஜ்ரத்தால் விருத்திரனுடைய தலையை வீழ்த்தியது போல, அர்ஜுனன், அந்தக் கணையைக் கொண்டு, தன் எதிரியின் {கர்ணனின்} தலையை வீழ்த்தினான்.(49) உண்மையில் அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, வலிமைமிக்க ஆயுதமான மாற்றப்பட்ட அந்த அஞ்சலிக ஆயுதத்தைக் கொண்டு, பிற்பகலில் அந்த வைகர்த்தனனின் {கர்ணனின்} தலையை வெட்டினான்.(50)

இவ்வாறு அந்த அஞ்சலிகத்தால் வெட்டப்பட்ட கர்ணனின் உடல் பூமியில் விழுந்தது.(51) உதயச் சூரியனின் காந்திக்கு இணையானதும், கூதிர்கால நடுவான சூரியனுக்கு ஒப்பானதுமான அந்த (கௌரவப்) படைத்தலைவனின் {கர்ணனின்} தலையும், அஸ்த மலைகளில் விழும் குருதிவட்டில் கொண்ட சூரியனைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(52) உண்மையில், மிக அழகானதும், எப்போதும் ஆடம்பரமாகக் கவனிக்கப்பட்டதும், உன்னச் செயல்களைச் செய்யும் கர்ணனுடையதுமான அந்தத் தலையானது, பெரும் செல்வத்தில் நிறைந்த வசதியான மாளிகையைக் கைவிட விரும்பாத ஒருவனைப் போலவே விருப்பமில்லாமலேயே அந்த உடலைக் கைவிட்டது.(53) அர்ஜுனனின் கணையால் வெட்டப்பட்டதும், உயிரை இழந்ததும், பெரும் காந்தியுடன் கூடியதுமான கர்ணனின் நெடிய உடலானது, அனைத்துக் காயங்களில் இருந்தும் குருதி வெளியேற, மழைக்குப்பிறகு இடியால் பிளக்கப்பட்ட, தன் பக்கங்களில் செந்நீர் ஓடைகளுடன் கூடியசெஞ்சுண்ண மலைச் சிகரம் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது.(54) அப்போது வீழ்ந்துவிட்ட கர்ணனின் உடலில் இருந்து ஓர் ஒளியானது ஆகாயத்தினூடாகக் கடந்து சென்று சூரியனுக்குள் நுழைந்தது. கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, மனிதப் போர்வீரர்கள் அனைவராலும் இந்த அற்புதக் காட்சி காணப்பட்டது.(55)

அப்போது பல்குனனால் {அர்ஜுனனால்}, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட பாண்டவர்கள், தங்கள் சங்குகளை உரக்க முழக்கினர். அதேபோலவே, கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} கூட, மகிழ்ச்சியால் நிறைந்து, காலத்தை இழக்காமல் தங்கள் சங்குகளை முழக்கினர்.(56) சோமகர்கள், களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் கர்ணனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, (பாண்டவப் படையின்) பிற துருப்புகளுடன் சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டனர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் தங்கள் எக்காளங்களை முழக்கி, தங்கள் கரங்களையும் ஆடைகளையும் அசைத்தனர்.(57) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்கள் அனைவரும் பார்த்தனை {அர்ஜுனனை} அணுகி மகிழ்ச்சியாகப் புகழத் தொடங்கினர். வலிமைகொண்ட பிறரும், ஆடிக்கொண்டும், ஒருவரையொருவர் தழுவிக் கொண்டும் உரக்கக் கூச்சலிட்டபடியும், “கணைகளால் சிதைக்கப்பட்டுக் கர்ணன் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்தப்பட்டிருப்பது நற்பேறாலேயே” என்றனர்.(58) உண்மையில், வெட்டப்படக் கர்ணனின் தலையானது, புயலால் தளர்ந்து விழுந்த மலைச்சிகரம் ஒன்றைப் போலவோ, வேள்வி முடித்தும் அணைக்கப்பட்ட நெருப்பைப் போலவோ, அஸ்த மலைகளை அடைந்துவிட்ட சூரியனின் வடிவத்தைப் போலவோ அழகானதாக இருந்தது.(59) கணைகளையே கதிர்களாகக் கொண்ட கர்ண சூரியன், பகைவரின் படையை எரித்தபிறகு, இறுதியாக, வலிமைமிக்க அர்ஜுன காலத்தால் மறையச்செய்யப்பட்டது.(60)

அஸ்த மலைகளை நோக்கிச் செல்லும் சூரியன், தன் கதிர்கள் அனைத்தையும் தன்னோடு எடுத்துக் கொண்டு செல்வது போலவே, (அர்ஜுனனின்) அந்தக் கணையும், கர்ணனின் உயிர்மூச்சை எடுத்துக் கொண்டு {உடலைவிட்டு} வெளியே கடந்து சென்றது.(61) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகனின் மரணக் காலமானது, அந்நாளின் பிற்பகலாக இருந்தது[4]. அந்தப் போரில் அஞ்சலிக ஆயுதத்தால் வெட்டப்பட்ட கர்ணனின் தலையானது, அவனது உடலோடு சேர்ந்து கீழே விழுந்தது.(62) உண்மையில், அர்ஜுனனின் அந்தக் கணையானது, கௌரவத் துருப்புகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேகமாகக் கர்ணனின் தலையையும், உடலையும் வீழ்த்தியது.(63) வீரக்கர்ணன் வீழ்த்தப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்தப்பட்டதைக் கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கொடிமரமிழந்த அந்தத் தேருடன் அங்கிருந்து சென்றான்.(64) கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட கௌரவர்கள், காந்தியுடன் சுடர்விடும் அர்ஜுனனின் உயர்ந்த கொடிமரத்தின் மேல் தங்கள் கண்களை அடிக்கடி செலுத்தியபடியே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் களத்தை விட்டே தப்பி ஓடினர்.(65) ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரைக்கு ஒப்பான முகத்துடன் அருளப்பட்ட, ஆயிரங்கண் இந்திரனைப் போன்ற சாதனைகளைக் கொண்ட கர்ணனின் அழகிய தலையானது, நாளின் முடிவில் காணப்படும் ஆயிரங்கதிர் சூரியனைப் போலக் கீழே பூமியில் விழுந்தது” {என்றான் சஞ்சயன்}.(66)

[4] “இந்த வரியில் நான் பம்பாய் உரையையும், நீலகண்டரின் விளக்கத்தையும் பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “கடைசியான தினத்துடன் கூடின கர்ணனுடைய உயர்ந்த சரீரத்திலுள்ள தலையானது, பகலுடைய கடைசிப் பாகத்தில் அஞ்சலிகத்தினால் அறுக்கப்பட்டு யுத்தத்தில் விழுந்தது” என்றிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -91ல் உள்ள சுலோகங்கள் : 66

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்