Shalya consoled Duryodhana! | Karna-Parva-Section-92 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணன் கொல்லப்பட்டதில் துரியோதனன் அடைந்த துயரம்; உரத்த முழக்கங்களைச் செய்து கௌரவர்களை அச்சுறுத்திய பீமன்; வீழ்ந்துவிட்ட கர்ணனைக் காணச் சென்ற படைவீரர்கள்; துரியோதனனைத் தேற்றிய சல்லியன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான அம்மோதலில் கணைகளால் நொறுக்கப்பட்ட துருப்புகளைக் கண்ட சல்லியன், கோபத்தால் நிறைந்து கருவிகளை இழந்த அந்தத் தேரில் சென்றான்.(1) சூதன் மகனை {கர்ணனை} இழந்த தன் படையையும், அதன் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அழிக்கப்பட்டதையும் கண்ட துரியோதனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், கவலையின் வடிவாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(2) கணைகளால் துளைக்கப்பட்டவனும், குருதியில் குளித்தவனும், விருப்பத்துடன் வானத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பவனுமான வீரக் கர்ணனைக் காண விரும்பிய போர்வீரர்கள், அங்கே வந்து, வீழ்ந்துவிட்ட அந்த வீரனை {கர்ணனைச்} சூழ்ந்து நின்றனர்.(3) இவ்வாறு அங்கே நின்றிருந்த எதிரிப்படையினர் மற்றும் நமது படையினருக்கு மத்தியில், தங்கள் இயல்புக்குத் தக்கபடி, சிலர் மகிழ்ச்சிக் குறிகளை வெளிக்காட்டினர், சில அச்சத்தையும், சிலர் கவலையையும், சிலர் ஆச்சரியத்தையும் வெளிக்காட்டினர், சிலரோ பெரும் துயரில் வீழ்ந்தனர்.(4) கௌரவர்களில் சிலர், வலிமைமிக்கக் கர்ணன், கவசம், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெயரச் செய்யப்பட்டு, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கேட்டு, காளையை இழந்து பேரச்சம் கொண்ட பசுக்கூட்டத்தைப் போல அச்சத்தால் தப்பி ஓடினர்.(5)
அப்போது பீமன், பெருமுழக்கங்களைச் செய்து, அந்த அச்சந்தரத்தக்க, மகத்தான கூச்சல்களால் ஆகாயத்தை நடுங்கச் செய்தபடி, தன் கக்கங்களை அறைந்து கொள்ளவும், குதிக்கவும், ஆடவும் தொடங்கி, அந்த அசைவுகளால் தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தினான்.(6) சோமகர்களும், சிருஞ்சயர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்கினர். அவ்வேளையில் சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.(7) பயங்கரமான போரைச் செய்த கர்ணன், சிங்கத்தால் கொல்லப்படும் யானையைப் போல அர்ஜுனனால் கொல்லப்பட்டான். மனிதர்களில் காளையான அந்த அர்ஜுனன், இவ்வாறே தன் சபதத்தை நிறைவேற்றினான். உண்மையில், இவ்வாறே பார்த்தன் {அர்ஜுனன்}, (கர்ணனிடம்) தான் கொண்ட பகைமையில் எல்லையை அடைந்தான்.(8)
மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மலைப்படைந்த இதயத்துடன் கொடிமரமிழந்த அந்தத் தேரில், துரியோதனனின் பக்கத்தை வேகமாக அடைந்து, கவலையால் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “உன் படையின் யானைகள், குதிரைகள் மற்றும் முதன்மையான போர்வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் மலைகளைப் போன்ற பெரும் யானைகள் ஒன்றோடொன்று மோதி கொல்லப்பட்டதன் விளைவால், உன் படையானது யமனின் ஆட்சிப்பகுதியைப் போலத் தெரிகிறது.(10) ஓ! பாரதா {துரியோதனா}, இன்று கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததைப் போன்ற போர் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. இன்று கர்ணன் அந்த இரு கிருஷ்ணர்களையும், உன் பிற எதிரிகள் அனைவரையும் பலமாகத் தாக்கினான்.(11) எனினும், விதியானது நிச்சயம் பார்த்தனால் {அர்ஜுனனால்} கட்டுப்படுத்தப்பட்டு இதை நடத்தியிருக்கிறது. இதனாலேயே விதியானது பாண்டவர்களைப் பாதுகாக்கவும், நம்மைப் பலவீனமடையவும் செய்கிறது. உன் நோக்கங்களை நிறைவேற்றத் தீர்மானித்த பல வீரர்கள் எதிரியால் பலவந்தமாகக் கொல்லப்பட்டனர்.(12) சக்தி, துணிவு, வலிமை ஆகியவற்றில் குபேரன், அல்லது யமன், அல்லது வாசவன் {இந்திரன்}, அல்லது நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} ஆகியோருக்கு இணையானவர்களும், அனைத்துத் தகுதிகளைக் கொண்டவர்களும், கிட்டத்தட்ட கொல்லப்பட முடியாதவர்களும், உன் நோக்கத்தை அடைய விரும்பியவர்களுமான துணிச்சல் மிக்க மன்னர்கள், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். ஓ! பாரதா {துரியோதனா}, இதற்காக நீ வருந்தாதே. இதுவே விதி. ஆறுதலை அடைவாயாக. வெற்றி என்பது எப்போதும் அடையப்படுவதில்லை[1]” என்றான் {சல்லியன்}.(13-14)
[1] “பதினான்காம் ஸ்லோகத்தின் இறுதி வரியில் நான் பம்பாய் உரையைப் பின்பற்றியிருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “பாரத! ஆதலால், நீ துயரமடைய வேண்டாம். இது தெய்வ ஸங்கல்பம். கார்யஸித்தியானது, மாறி மாறி உண்டாகிறது, (ஒருவனுக்கே) நிச்சயம் உண்டாகாது” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ பரதனின் வழித்தோன்றலே {துரியோதனா}, வருந்தாதே. இது விதியே. ஒவ்வொரு நோக்கமும் எப்போதும் வெற்றியால் மகுடம் சூடப்படுவதில்லை” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ பரதகுல வழித்தோன்றலே, வருந்தாதே. இதுவே விதி ஆகும். வெற்றிக்கு மாற்றேதும் கிடையாது. எனினும், எப்போதும் வெற்றி அடையப்படவும் முடியாது" என்றிருக்கிறது.
மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} அவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தீச்செய்கைகளை நினைவுகூர்ந்த துரியோதனன், உற்சாகமற்ற இதயத்துடன், கிட்டத்தட்ட புலனுணர்வை இழந்தவனாக, கவலையின் வடிவமாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டான்” {என்றான் சஞ்சயன்}.(15)
------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -92ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |