Heroic Speech of Duryodhana! | Karna-Parva-Section-93 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன், பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோரைக் கண்டு அஞ்சி ஓடிய கௌரவர்கள்; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற துரியோதனன்; கௌரவர்களின் இருபத்தைந்தாயிரம் காலாட்படை வீரர்களைக் கொன்ற பீமேசேனன்; தேர்ப்படையை நோக்கி விரைந்த அர்ஜுனன்; போர்வீரர்களை அணிதிரட்ட வீர உரையாற்றிய துரியோதனன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கர நாளில், கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அம்மோதலில் கணைகளால் நொறுக்கப்பட்டும், (ஆயுதங்களால்) எரிக்கப்பட்டும் தப்பி ஓடும்போது குரு மற்றும் சிருஞ்சயப் படைகளின் தன்மை எவ்வாறு இருந்தது?”என்று கேட்டான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு அந்தப் போரில் பயங்கரமான பேரழிவு எவ்வாறு உண்டானது என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(2) கர்ணன் வீழ்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} செய்த சிங்க முழக்கங்களால், உமது மகன்களின் இதயங்களின் பேரச்சம் நுழைந்தது.(3) கர்ணன் வீழ்ந்ததும், உமது படையின் எந்தப் போர்வீரனும், துருப்புகளைத் திரட்டுவதையோ, ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தில் நிலைநிறுத்தவில்லை.(4) அர்ஜுனனால் தங்கள் புகலிடம் அழிக்கப்பட்ட அவர்கள், அடியற்ற பெருங்கடலில் உடைந்த மரக்கலத்தில் இருந்த தெப்பமற்ற வணிகர்களைப் போல, கடக்க முடியாததைக் கடக்க விரும்பினார்கள்.(5)
சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணைகளால் துளைக்கப்பட்டு, அச்சமடைந்த கௌரவர்கள் தலைவனற்றவர்களாக, சிங்கத்தால் பீடிக்கப்படும் யானை மந்தையைப் போலப் பாதுகாப்பை விரும்பினார்கள்.(6) அந்தப் பிற்பகலில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், முறிந்த கொம்புகளைக் கொண்ட காளைகளைப் போலவோ, உடைந்த நச்சுப்பற்களைக் கொண்ட பாம்புகளைப் போலவோ தப்பி ஓடினார்கள்.(7) தங்கள் முதன்மையான போர்வீரர்கள் கொல்லப்பட்டும், தங்கள் துருப்புகள் குழப்பத்தில் ஆழ்ந்தும், கூரிய கணைகளால் தாங்களே சிதைக்கப்பட்டும் இருந்த உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வீழ்ச்சிக்குப்பின்னால் அச்சத்தால் தப்பி ஓடினார்கள்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள், திசைகளை அறியாதவர்களாக, புலன் உணர்வை இழந்தவர்களாக ஓடும்போது ஒருவரையொருவர் நசுக்கி, அச்சத்தால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(9) “பீபத்சு {Vibhatsu-அர்ஜுனன்} வேகமாகத் துரத்தி வருவது என்னையே”, “விருகோதரன் {பீமன்} வேகமாகத் துரத்தி வருவது என்னையே” என்று நினைத்த கௌரவர்கள் ஒவ்வொருவரும், அச்சத்தால் ஒளியிழந்து, ஓடிக் கொண்டிருக்கும்போதே கீழே விழுந்தனர்.(10)
குதிரைகளில் சிலரும், தேர்களில் சிலரும், யானைகளில் சிலரும், கால்களில் சிலரும் என வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பெரும் வேகத்துடன் அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) யானைகளால் தேர்கள் நொறுக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கபட்டனர், குதிரைகள் அச்சத்தால் தப்பி ஓடும்போது காலாட்படை வீரர்களின் கூட்டம் நசுக்கப்பட்டது.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப்பிறகு உமது போர்வீரர்கள், இரைதேடும் விலங்குகள், கள்வர்கள் ஆகயோர் நிறைந்த காட்டில் இருக்கும் பாதுகாப்பற்ற மக்களைப் போல ஆகினர்.(13) பாகர்கள் இல்லாத யானைகளைப் போலவும், கரங்கள் இல்லாத மனிதர்களைப் போலவும் அவர்கள் இருந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், பார்த்தனால் நிறைந்திருப்பதைப் போலவே மொத்த உலகையும் கண்டனர்.(14)
பீமசேனனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கபட்டு அவர்கள் தப்பி ஓடுவதையும், உண்மையில், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூவியபடியே களத்தை விட்டு ஆயிரக்கணக்கில் அகன்ற தன் துருப்புகளையும் கண்ட துரியோதனன், தன் சாரதியிடம், (15) “கையில் வில்லுடன் நிற்கும் என்னைப் பார்த்தனால் மீறிச் செல்ல முடியாது. துருப்புகள் அனைத்திற்கும் பின்னால் மெதுவாகத் தூண்டுவாயாக.(16) படையின் பின்னால் இருந்து நான் போரில்லால், ஆழ்ந்த நீர்நிலைகளால் கரையைக் கடக்க முடியாததைப் போல அந்தக் குந்தியின் மகனால் என்னை மீறிச் செல்ல முடியாது.(17) அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் மற்றும் எஞ்சிய என் எதிரிகளைக் கொன்று, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்” என்றான் {துரியோதனன்}.(18) குரு மன்னனால் சொல்லப்பட்டவையும், வீரனுக்கும், கௌரவமிக்க மனிதனுக்கும் தகுந்தவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட தன் குதிரைகளை மெல்லத் தூண்டினான்.(19)
அப்போது உமது படையைச் சார்ந்த இருபத்தைந்தாயிரம் {25000} காலாட்படை வீரர்கள், அவர்களுக்கிடையில் தேர்களோ, குதிரைகளோ, யானைகளோ இல்லாமல், போருக்கு ஆயத்தமாகினர்.(20) கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், நால் வகைப் படைகளுடன் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கணைகளால் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.(21) பதிலுக்கு அந்தப் போர்வீரர்களும், பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} போரிட்டனர். அவர்களில் சிலர் அவ்விரு வீரர்களின் பெயர்களைச் சொல்லி அறைகூவியழைத்தனர்.(22) அப்போது பீமசேனன் சினத்தால் நிறைந்தான். கையில் கதாயுதத்துடன் தன் தேரை விட்டு இறங்கிய அவன் {பீமன்}, போருக்கு வந்த அந்தப் போர்வீரர்களுடன் போரிட்டான்.(23) நேர்மையான போருக்கான விதிகளை நோற்றவனும், குந்தியின் மகனுமான அந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து கீழே இறங்கி, தன் கரங்களின் வலிமையை மட்டுமே நம்பி, காலாள்களாக இருந்த அந்த எதிரிகளோடு காலாளாகவே போரிட்டான்.(24)
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்ட அவன் {பீமன்}, தண்டம் தரித்த யமனைப் போல, அவர்கள் அனைவரையும் கொல்லத் தொடங்கினான்.(25) காலாள்களாக இருந்த கௌரவப் போர்வீரர்கள், சினத்தால் நிறைந்து, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, சுடர்மிக்க நெருப்பை நோக்கிப் பாயும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை எதிர்த்து விரைந்தனர்.(26) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், மதங்கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், பீமசேனனை அணுகி, யமனைக் கண்ட உயிரினிங்களைப் போல அந்தப் போரில் மாண்டனர்.(27) கதாயுதம் தரித்த வலிமைமிக்கப் பீமன், ஒரு பருந்தைப் போலத் திரிந்து அந்த இருபத்தைந்தாயிரம் {25000} போராளிகள் அனைவரையும் அழித்தான்.(28) வீரப் போர்வீரர்களைக் கொண்ட அந்தப் படைப்பிரிவை அழிந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் வலிமையையும் கொண்ட பீமன், மீண்டும் திருஷ்டத்யும்னனைத் தன் முன்னால் கொண்டு நின்றான்.(29)
பெருஞ்சக்தி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, (கௌரவர்களில் எஞ்சிய) தேர்ப்படையை எதிர்த்துச் சென்றான்.(30) மாத்ரியின் இரு மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, சாத்யகியும், மகிழ்ச்சியால் நிறைந்து சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, அந்தச் சுபலன் மகனின் {சகுனியின்} துருப்புகளைக் கொன்றனர்.(31) அம்மோதலில் தங்கள் கூரிய கணைகளைக் கொண்டு அவனது {சகுனியின்} குதிரைப் படையையும், யானைகளையும் கொன்ற அவர்கள், சகுனியை எதிர்த்து மூர்க்கமாக விரைந்ததன் பேரில் அங்கே ஒரு பெரும்போர் நிகழ்ந்தது.(32) அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, உமது தேர்ப்படையை எதிர்த்துச் சென்று, மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தில் நாணொலி எழுப்பினான்.(33) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனை சாரதியாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்டும், அதில் இருந்த போர் வீரன் அர்ஜுனனே என்பதைப் பார்த்தும், உமது துருப்புகள் அச்சத்துடன் தப்பி ஓடின.(34)
தேர்களை இழந்திருந்த இருபத்தைந்தாயிரம் காலாட்படை வீரர்கள் (பீமன் மற்றும் திருஷ்டத்யும்னனின் கைகளில்) அழிவை அடைந்தனர்.(35) அவர்களைக் கொன்றவனும், மனிதர்களில் புலியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பெரும் தேர்வீரனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான அந்த உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், விரைவில் பீமேசேனன் முன்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான்.(36,37) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கோவிதார மரத்தால் {காட்டாத்தி [அ] குராமரம்} ஆன உயர்ந்த கொடிமரத்தைக் கொண்டதுமான திருஷ்டத்யும்னனின் தேரைக் கண்ட கௌரவர்கள் பேரச்சத்துடன் தப்பி ஓடினர்.(38) பெரும்புகழைக் கொண்ட இரட்டையர்களும் (நகுலன் மற்றும் சகாதேவனும்), சாத்யகியும், ஆயுத பயன்பாட்டில் கரநளினத்தைக் கொண்ட காந்தாரர்களின் மன்னனை {சகுனியைப்} பெரும் வேகத்தோடு துரத்திச் சென்று (பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில்) மீண்டும் தோன்றினர்.(39) சேகிதானான், சிகண்டி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது பரந்த படையைக் கொன்று தங்கள் சங்குகளை உரக்க முழங்கினர்.(40)
அந்த வீரர்கள் அனைவரும், களத்தைவிட்டுத் திரும்பிய முகங்களுடன் தப்பி ஓடும் உமது துருப்புகளைக் கண்டாலும், கோபக்காரக் காளைகளை வென்ற வேறு காளைகளைப் போல மேலும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.(41) பெரும் வலிமை கொண்டவனான பாண்டுவின் மகன் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையில் எஞ்சியோர் இன்னும் போரிட நிற்பதைக் கண்டு, கோபத்தால் நிறைந்தான்.(42) பெரும் சக்தி கொண்ட தனஞ்சயன் மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தை வளைத்தபடியே அந்தத் தேர்ப்படையை எதிர்த்து விரைந்தான். அதனால் எழுந்த புழுதியால் காட்சி இருளாகி, அதற்கும் மேலும் வேறெதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(44) இவ்வாறு பூமியானது புழுதியால் மறைக்கப்பட்டு, அனைத்தையும் இருள் மறைத்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(45)
குரு படையானது இவ்வாறு பிளந்த போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனான குரு மன்னன் {துரியோதனன்}, தன்னை எதிர்த்த எதிரிகளை அனைவரையும் எதிர்த்து விரைந்தான்.(46) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களை அறைகூவியழைத்த அசுரன் பலியைப் {மகாபலி} போலவே துரியோதனனும் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(47) இதனால் ஒன்றுசேர்ந்த பாண்டவர்கள் அனைவரும், துரியோதனன் மீது பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும், வீசியபடியும், அவனை மீண்டும் மீண்டும் கடிந்து கொண்டு அவனை எதிர்த்து விரைந்தனர்.(48) எனினும், சினத்தால் நிறைந்த துரியோதனன், கூரிய கணைகளைக் கொண்டு அந்த எதிரிகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அச்சமில்லாமல் கொன்றான்.(49) அப்போது, தனி ஒருவனாகவும், எந்த ஆதரவில்லாதவனாகவும், ஒன்றுசேர்ந்திருந்த பாண்டவர்கள் அனைவருடன் போரிட்ட உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(50)
அப்போது துரியோதனன், கணைகளால் சிதைக்கப்பட்டு, தப்பி ஓடுவதையே இதயங்களில் நிறுத்தியிருந்த தன் துருப்புகள் களத்தைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிடாததைக் கண்டான்.(51) அவர்களை அணிதிரட்டியவனும், தன் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்தவனுமான உமது மகன் {துரியோதன்ன}, அந்தப் போர்வீரர்களை மகிழ்ச்சிப்படுத்து விதமாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(52) “நீங்கள் தப்பி ஓடினாலும், பூமியிலோ, மலைகளிலோ பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத எந்த இடத்தையும் நான் காணவில்லை. அப்படியிருக்கையில், தப்பி ஓடுவதால் பயன் யாது?(53) பாண்டவர்கள் இப்போது கொண்டிருப்பது சிறு படையேயாகும். இரு கிருஷ்ணர்களும் கூட அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். நாம் அனைவரும் சேர்ந்து போரில் நின்றால் நிச்சயம் வெற்றி நமதேயாகும்.(54)
ஒற்றுமையின்றி நாம் தப்பி ஓடினால், நம்மைத் துரத்தி வரும் பாண்டவர்கள் நிச்சயம் நம் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். இதனால், நாம் போரிட்டு சாவதே சிறந்தது.(55) போரில் மரணமடைவது மகிழ்ச்சி நிறைந்ததாகும். க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுப் போரிடுவீராக. இறந்தவன் எந்தத் துயரையும் அறிய மாட்டான். மறுபுறம், அப்படிப்பட்டவன் இதன் பிறகு நித்தியமான அருளையே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பான்.(56) க்ஷத்திரியர்களே, இங்கே கூடியிருக்கும் நீங்கள் அனைவரும் கேட்பீராக. அழிப்பவனான யமன், வீரனையோ, கோழையையோ விடாத போது, நம்மைப் போன்று க்ஷத்திரிய நோன்பை நோற்றாலும், அறிவில்லாத எவன்தான் போரிடாமல் இருப்பான்?(57) கோபக்கார எதிரியான பீமசேனனுடைய சக்தியின் கீழ் நீங்கள் உங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறீர்களா? உங்கள் தந்தைமாரும், பாட்டன் மாரும் நோற்ற {க்ஷத்திரியக்} கடமையைக் கைவிடுவது உங்களுக்குத் தகாது.(58) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு பெரிய பாவம் க்ஷத்திரியனுக்கு வேறில்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிட, சொர்க்கத்திற்கான அருளப்பட்ட வழி வேறேதும் இல்லை. போர்வீரர்களே, போரில் கொல்லப்பட்டு, தாமதமில்லாமல் சொர்க்கத்தை அனுபவிப்பீராக” என்றான் {துரியோதனன்}."(59)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உமது மகன் இவ்வார்த்தைகளைச் சொன்ன போது, மிகவும் சிதைக்கப்பட்டிருந்த (கௌரவப்) போர்வீரர்கள், அந்தப் பேச்சையும் கருதிப் பாராமல் {அலட்சியம்} செய்து, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினார்கள்” {என்றான் சஞ்சயன்}”(60)
-------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -93ல் உள்ள சுலோகங்கள் : 60
ஆங்கிலத்தில் | In English |