Arjuna and Krishna blew their conchs! | Karna-Parva-Section-94 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : களத்தில் நேர்ந்த பேரழிவைத் துரியோதனனுக்கு விளக்கிச் சொன்ன சல்லியன்; இரவு ஓய்வுக்காகத் துருப்புகளைத் திரும்ப அழைக்குமாறு சொன்ன சல்லியன்; கர்ணனின் நிமித்தமாகத் துரியோதனன் அடைந்த துயரம்; கர்ணன் வீழ்ந்ததும் தென்பட்ட சகுனங்கள்; தங்கள் சங்குகளை முழக்கிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்; வீரத்திற்காக அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் வழிபட்ட தேவர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முகத்தில் பயத்துடன் கூடியவனும், துயரத்தால் இதயம் மலைத்திருந்தவனும், துருப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்தவனுமான உமது மகனை {துரியோதனனைக்} கண்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தத் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1)
சல்லியன் {துரியோனனிடம்}, “ஓ! வீரா {துரியோதனா}, கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் குவியல்களால் மறைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயங்கரமான போர்க்களத்தைப் பார். மலைகளைப் போலப் பெரியவையும், அதிகமாகச் சிதைக்கப்பட்டவையும், கணைகளால் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டவையும், ஆதரவற்று கிடப்பவையும், உயிரை இழந்தவையும், கவசம் இடம்பெயர்ந்தவையுமான விழுந்துவிட்ட யானைகளாலும், அவை தரித்திருந்தவையும், இப்போது சிதறிக்கிடப்பவையுமான ஆயுதங்கள், கவசங்கள், வாள்கள் ஆகியவற்றால் சில பாதைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. விழுந்துவிட்ட இந்த விலங்குகள், இடியால் பிளக்கப்பட்டு, பாறைகள், உயர்ந்த மரங்கள், கொடிகள் ஆகியவை தளர்ந்து, சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பெரும் மலைகளுக்கு ஒப்பாக இருக்கின்றன.(2,3) அந்தப் பெரும் விலங்குகள் தரித்திருந்த மணிகள், இரும்பு அங்குசங்கள், வேல்கள், கொடிமரங்கள் ஆகியவை தரையில் சிதறிக் கிடக்கின்றன. தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்ட அவற்றின் உடல்கள் இப்போது குருதியில் குளித்திருக்கின்றன. மேலும் கணைகளால் சிதைக்கப்பட்டு, வலியால் கடினமாக மூச்சுவிட்டுக் கொண்டு, குருதியைக் கக்குபவையும் விழுந்துவிட்டவையுமான குதிரைகளால் சில பாதைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.(4) அவற்றில் சில பலவீனமான ஒலியுடன் ஓலமிடுகின்றன, உருளும் கண்களுடன் சில பூமியைக் கடிக்கின்றன, சில பரிதாபகரமாகக் கனைக்கின்றன. குதிரைவீரர்களாலும், தங்கள் விலங்குகளில் இருந்து விழுந்துவிட்ட யானைவீரர்களாலும், தங்கள் தேர்களில் இருந்து பலவந்தமாகத் தூக்கி வீசப்பட்ட தேர்வீரர்களின் கூட்டங்களாலும் களத்தின் சில பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.(5)
அவற்றில் சில ஏற்கனவே இறந்துவிட்டன, மேலும் சில மரணத்தருவாயில் இருக்கின்றன. தேர்களாலும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் சடலங்களாலும், துதிக்கைகளும், அங்கங்களும் வெட்டப்பட்ட பெரும் யானைகளாலும் மறைக்கப்பட்ட பூமியானது, (யமனின் ஆட்சிப்பகுதியில் பாயும்) பெரும் வைதரணீயை {வைதரணீ நதியைப்} போலப் பயங்கரமாகத் தெரிகிறது.(6) நடுங்கும் உடல்களுடன் தரையில் கிடப்பவையும், தந்தங்கள் உடைந்தவையும், குருதி கக்குபவையும், வலியால் தீனமாக அழுபவையும், தங்கள் முதுகுகளில் இருந்த போர்வீரர்களை இழந்தவையும், தங்கள் அங்கங்களை மறைத்திருந்த கவசங்களை இழந்தவையும், தங்கள் பக்கங்கள் மற்றும் பின்புறத்தைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களை இழந்தவையும், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள் இடம்பெயர்ந்தவையும், தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் உடல்கள் எதிரியின் ஆயுதங்களால் ஆழமாகத் தாக்கப்பட்டவையுமான யானைகள் சிதறிக் கிடந்த பூமியானது அவ்வாறே {வைதரணீ நதியைப் போலப் பயங்கரமானதாக} இருக்கிறது.(7) விழுந்துவிட்டவர்களும், பெரும் புகழைக் கொண்டவர்களுமான யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், முகத்துக்கு முகமாகப் போரிட்டு எதிரிகளால் கொல்லப்பட்டவர்களும், கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை இழந்தவர்களுமான காலாட்படைவீரர்கள் ஆகியோரின் உடல்கள் சிதறிக் கிடப்பதன் விளைவாகப் பூமியானது, மேகங்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்தைப் போலத் தெரிகிறது.(8) கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், காட்சியில் முழுமையாக வெளிப்பட்டவர்களும், சுயநினைவை இழந்திருந்தவர்களும், விழுந்துவிட்டவர்களும், மெல்ல மூச்சு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்களுமான ஆயிரக்கணக்கான போராளிகளால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, அணைக்கப்பட்ட நெருப்புகளால் மறைக்கப்பட்டதைப் போலத் தெரிகிறது.(9) கணைகளால் துளைக்கப்பட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கர்ணனால் உயிரையிழந்த குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இரு தரப்பு முதன்மையான வீரர்களுடன் கூடிய பூமியானது, ஆகாயத்தில் இருந்து விழுந்த சுடர்மிக்கக் கோள்களால் விரவிக் கிடப்பதைப்போல, அல்லது, சுடர்மிக்கக் கோள்கள் சிதறிக் கிடக்கும் இரவு நேர வானத்தைப் போலத் தெரிகிறது[1].(10)
[1] “வங்க பதிப்புகளில் உள்ள 9 மற்றும் 10ம் சுலோகங்கள் பம்பாய்ப் பதிப்புடன் இணங்கவில்லை. 1 முதல் 8 வரையிலான ஸ்லோகங்கள் ஒவ்வொன்றிலும் கூடப் பல்வேறு வேறுபாடுகள் தென்படுகின்றன. நான் வங்க உரைகளையே பின்பற்றியிருக்கிறேன், சில இடங்களில் மட்டும் பம்பாய்ப்பதிப்பின் துணையுடன் திருத்தம் செய்திருக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கர்ணன் மற்றும் அர்ஜுனனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட கணைகள், யானைகள், குதிரைகள் மனிதர்கள் ஆகியோரின் உடல்களைத் துளைத்து, அவற்றின் உயிர்களை நிறுத்தி, கீழ்நோக்கிய தலையுடன் தங்கள் பொந்துக்குள் நுழையும் பெரும்பாம்புகளைப் போலப் பூமிக்குள் சென்றன.(11) கொல்லப்பட்டுக் குவிந்து கிடக்கும் மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளாலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைகளால் உடைக்கப்பட்ட தேர்களாலும், அவர்களால் ஏவப்பட்ட எண்ணற்ற கணைகளாலும் பூமியானது கடக்கப்பட முடியாததாக இருக்கிறது.(12) வலிமைமிக்கக் கணைகளால் நொறுக்கப்பட்டவையும், அவற்றில் இருந்த போர்வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்களுடன் கூடியவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்கள், தங்கள் இணைப்புகள் உடைந்து, அச்சுகள், நுகத்தடிகள், திரிவேணு ஆகியவை துண்டுகளாகக் குறைக்கப்பட்டு, சக்கரங்கள் தளர்ந்து, உபஷ்கரங்கள் அழிக்கப்பட்டு, அனுஷ்கரங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு, அம்பறாத்தூணிகளின் இணைப்புகள் வெட்டப்பட்டு, தேர்த்தட்டுகள் உடைந்து களத்தில் விரவி கிடக்கின்றன. தங்கம் மற்றும் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த வாகனங்களால் விரவிக் கிடக்கும் பூமியானது, கூதிர்கால மேகங்களால் விரவிக் கிடக்கும் ஆகாயத்தைப் போலத் தெரிகிறது.(13,14) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அரசத் தேர்கள், தங்கள் சாரதிகளை இழந்து, குதிரைகளால் வேகமாக இழுக்கபடுவதன் விளைவாலும், மிக வேகமாகத் தப்பி ஓடும் மனிதர்கள், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளின் விளைவாலும் படையானது பல்வேறு வழிகளில் பிளக்கின்றது.(15)
தங்க மணிகளைக் கொண்ட முள் பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, போர்க்கோடரிகள், கூரிய வேல்கள், கனமான தண்டங்கள், உலக்கைகள், உரையிலிருந்து உருவப்பட்ட பிரகாசமான வாள்கள், தங்கத் துணியால் மறைக்கப்பட்ட கதாயுதங்கள் ஆகியன களத்தில் விழுந்து கிடக்கின்றன.(16) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விற்கள், பசும்பொன்னால் ஆன அழகிய சிறகுகளைக் கொண்ட கணைகள், மிகக் கடினமானவையும், நீளமானவையுமான குத்து வாள்கள், வேல்கள், தங்கத்தைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய கத்திகள், குடைகள், விசிறிகள், சங்குகள், சிறந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், யானை அம்பாரிகள், கொடிமரங்கள், தேர்க்கூடுகள், கிரீடங்கள், கழுத்தணிகள், பிரகாசமான மகுடங்கள்,(18) ஓ! மன்னா {துரியோதனா}, வெண்சாமரங்கள், முத்து மற்றும் வைடூரியங்களால் ஒளிரும் மாலைகள், தலையில் உள்ள தலைப்பாகைகள், மணிக்கட்டு மற்றும் தோள்களுக்கான வளைகள், தங்க இழைகளுடன் கூடிய கழுத்தணிகள்,(19] பல்வேறு வகைகளிலான விலைமதிப்புமிக்க வைரங்கள், ரத்தினங்கள், முத்துக்கள், ஆடம்பரத்தில் வளர்ந்த உடல்கள், சந்திரனைப் போன்ற அழகான தலைகள் ஆகியன அங்கே சிதறிக் கிடக்கின்றன.(20) உடல்கள், ஆடைகள், பல்வேறு வகைகளிலான இன்ப விளையாட்டுகள் ஆகியவற்றைக் கைவிட்டு, அர்ப்பணிப்புடன் பெரும் தகுதியை அடைந்து, தங்கள் வகைக்கான அறத்தை வெளிப்படுத்திய அவர்கள் {போர்வீரர்கள்}, புகழ்ச்சுடரோடு கூடியவர்களாக வேகமாக அருள் உலகங்களுக்குச் சென்றனர்.(21) ஓ! துரியோதனா, திரும்புவாயாக. துருப்புகளும் ஓயட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவங்களை அளிப்பவனே, உன் முகாமை நோக்கிச் செல்வாயாக. ஓ! மனிதர்களில் ஆட்சியாளனே, நீயே இவை யாவற்றுக்கும் காரணமாவாய்” என்றான் {சல்லியன்}.
துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன சல்லியன், இதயம் நிறைந்த வேதனையுடன் அங்கேயே நின்றான். எனினும், அந்நேரத்தில் மிகவும் பீடிக்கப்பட்டவனான துரியோதனன், தன் புலன்களை இழந்து, கண்ணீரால் குளித்த கண்களுடன், “ஓ! கர்ணா! ஓ! கர்ணா!” என்று சொல்லி சூதன் மகனுக்காக {கர்ணனுக்காக} அழுதான்.(23) அப்போது துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலான மன்னர்கள் அனைவரும், மீண்டும் மீண்டும் துரியோதனனுக்கு ஆறுதலளித்து, புகழால் சுடர்விடுவதாகத் தெரிந்த அர்ஜுனனின் உயர்ந்த கொடிமரத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே தங்கள் முகாம்களுக்குச் சென்றனர்.(24) அனைத்தும் பிரகாசமாகத் தெரிந்த அந்தப் பயங்கர வேளையில், அடுத்த உலகிற்குச் செல்லத் தீர்மானித்தவர்களும், குருதியால் மறைக்கப்பட்டதன் விளைவால், தங்கள் குணங்களை உணர முடியாதவர்களுமான கௌரவர்கள் அனைவரும், சிவப்பு ஆடைகள், மலர் மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அரசவை மங்கையைப் போல, மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் உடல்களில் இருந்து பாய்ந்த குருதியில் குளித்திருந்த பூமியைக் கண்டு அங்கே நிற்க இயலாதவர்களானார்கள்.(25,26)
கர்ணன் கொல்லப்பட்டதால் கவலையில் நிறைந்த அவர்கள், “ஐயோ கர்ணா! ஐயோ, கர்ணா!” என்று உரக்க அழுது புலம்பினர். சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்பதைக் கண்ட அவர்கள் அனைவரும், வேகமாகத் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(27) கர்ணனைப் பொறுத்தவரை, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டதும், குருதி தோய்ந்த இறகுகளைக் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், தங்கச் சிறகைக் கொண்டதுமான கணையால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாலும், அந்த வீரன் பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் தரையில் கிடந்தான்.(28) தன்னை வழிபடுவோரிடம் எப்போதும் அன்புடன் இருக்கும் சிறப்புமிக்கச் சூரியன், குருதியால் நனைந்த கர்ணனின் உடலைத் தீண்டி, துயரத்தால் சிவந்த தன்மையை அடைந்து, நீராட விரும்பி வேறு {மேற்கு} கடலுக்குச் சென்றதைப் போலவே அப்போது தெரிந்தது[2].(29) அப்படியே நினைத்துக் கொண்டு, (அந்தப் போரைக் காண அங்கே வந்திருந்த) தேவர்கள் மற்றும் முனிவர்களின் கூட்டங்களும், காட்சியை விட்டகன்று தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். மற்ற உயிரினங்களின் பெருங்கூட்டமும், அதையே நினைத்துக் கொண்டு, சொர்க்கத்திற்கோ, பூமிக்கோ சென்றனர்.(30)
[2] “இந்தியாவில் இந்த நாள் வரை, இறப்பு செய்தி கிடைத்ததும் குளத்திற்கோ, ஓடைக்கோ சென்று நீராடும் இறந்தோரின் உறவினர்களால் நோற்கப்படும் சடங்கை நினைவுகூர்ந்தால், இந்த உவமையின் அழகைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் சடலத்தைத் தீண்டினாலும், தூய்மைப்படுத்தும் அதே சடங்கு செய்யப்பட வேண்டும். இங்கே, சூரியன் கர்ணனின் தந்தையாகவும், மேலும் கர்ணனும் தந்தையை அர்ப்பணிப்புடன் வழிபடுபவனாகவும் இருக்கிறான். எனவே, மறையும் சூரியன், தன் மகனான கர்ணனின் மரணத்தைக் கண்டும், தன் கதிர்களால் தன் பிள்ளையின் உடலைத் தீண்டியும் மேற்குக் கடலில் நீராடச் செல்வதாகவும் சொல்லப்படுகிறது. கதிர் என்பதற்கான சம்ஸ்கிருத வார்த்தை கரமாகும், அதுவே கைகளைச் சொல்வதற்கும் பயன்படும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “அந்தத் தேவஸ்ரேஷ்டர்களும், “புத்திரனிடத்தில் தயையுள்ளவனான ஸூர்யபகவான் ரக்தஜலத்தினால் நனைக்கப்பட்டிருக்கிற கர்ணனுடைய தேகத்தை ரக்தம்போலச் சிவந்த நிறமுள்ள கராக்ரங்களால் தொட்டு ஸ்நானம் செய்வதற்காக அப்போது மேற்கு சமுத்திரத்தை அடைந்தானோ” என்று எண்ணித் தத்தம் இருப்பிடத்தைக் குறித்துப் புறப்பட்டார்கள்” என்றிருக்கிறது. கராக்ரங்கள் என்பது கிரணங்கள்; கைகள் என்ற பொருள்படும் என்பது அங்கே விளக்கப்பட்டிருக்கிறது.
குரு வீரர்களில் முதன்மையானோரும் கூட, தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகனுக்கு {கர்ணனுக்கு} இடையில் நடைபெற்றதும், அனைத்து உயிரினங்களுக்கும் அச்சத்தையூட்டியதுமான அற்புதமான போரைக் கண்டு, ஆச்சரியத்தால் நிறைந்து, (அம்மோதலைப்) புகழ்ந்து (தங்கள் இரவு வசிப்பிடத்திற்கு) சென்றனர்.(31) கணைகளால் கவசம் வெட்டப்பட்டிருந்தாலும், அந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த ராதை மகனின் அழகான தன்மைகள் எதுவும் இறந்தபின்னும் அவனை விட்டு அகலவில்லை.(32) உண்மையில், அந்த வீரனின் உடலானது, புடம்போட்ட தங்கத்துக்கு ஒப்பாக இருப்பதை அனைவரும் கண்டனர். உயிருடன் கூடியதாகவும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதாகவும் அது தெரிந்தது.(33) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களத்தில் இறந்து கிடக்கும் சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட போர்வீரர்கள் அனைவரும் சிங்கத்தைக் கண்ட வேறு விலங்குகளைப் போல அச்சமடைந்தனர்.(34) உண்மையில், அந்த மனிதர்களில் புலி இறந்து கிடந்தாலும், தன் உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தயாராக இருப்பவனைப் போலவே {அப்போதும்} தெரிந்தான். அந்தச் சிறப்புமிக்கச் சடலத்தில் எதுவும் மாறியிருப்பதாகத் தெரியவில்லை.(35)
அழகிய ஆடையுடுத்தி, மிக அழகிய கழுத்துடன் கூடிய சூதன் மகனின் முகமானது, காந்தியுடன் கூடிய முழு நிலவுக்கு ஒப்பானதாக இருந்தது.(36) பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரகாசமான தங்கத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்படிருந்த அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, கொல்லப்பட்டாலும், கிளைகள் மற்றும் கொப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மரம் ஒன்றைப் போலவே நீண்டு கிடந்தான்.(37) உண்மையில், அந்த மனிதர்களில் புலி, பசும்பொன்னின் குவியலைப் போலவோ, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கணை எனும் நீர் கொண்டு அணைக்கப்பட்ட சுடர்மிக்க நெருப்பைப் போலவோ இருந்தான்.(38) நீரின் தீண்டலால் அணைந்த காட்டுத் தீயைப் போலவே அந்தப் போரில் கர்ணத்தீயானது அர்ஜுன மேகத்தால் அணைக்கப்பட்டது.(39) கணைமாரிகளை ஏவி, திசைகளின் பத்து புள்ளிகளையும் எரித்தவனும், மனிதர்களில் புலியுமான அந்தக் கர்ணன், தன் மகன்களுடன் சேர்த்து பார்த்தனின் சக்தியால் அமைதிப்படுத்தப்பட்டான். பூமியில் நியாயமான போரால் ஈட்டிய மகிமையையும் புகழையும் எடுத்துக் கொண்டு அவன் {கர்ணன்} அடுத்த உலகத்திற்குச் சென்றான்.(40)
தன் ஆயுதங்களின் சக்தியால் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் எரித்துக் கணைமாரிகளைப் பொழிந்து, பகைவரின் படையணிகளை எரித்து,(41) பேரழகுடைய ஆயிரங்கதிர் சூரியனால் வெப்பமூட்டப்பட்ட அண்டத்தைப் போலவே, வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட அந்தக் கர்ணன், தன் மகன்கள் மற்றும் தொண்டர்களுடன் இந்த உலகை விட்டுச் சென்றான்.(42) தகுந்தோரான இந்தப் பறவை கூட்டங்களுக்குக் கல்ப மரமாக இருந்த அந்த வீரன் இவ்வாறே வீழ்ந்தான். தகுந்தோரால் வேண்டப்படும்போது அவன் {கர்ணன்}, “நான் தருகிறேன்” என்றே எப்போதும் சொன்னானேயன்றி, “என்னிடம் இல்லை” என்ற வார்த்தைகளை ஒரு போதும் சொன்னதே இல்லை.(43) நல்லோர் எப்போதும் அவனை அறவோனாகவே கருதினர். அந்தத் தனிப்போரில் வீழ்ந்த விருஷன் {கர்ணன்}, இவ்வாறானவனாகவே இருந்தான். அந்த உயர் ஆன்மா கொண்டோனின் செல்வங்கள் அனைத்தும் பிராமணர்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அவன் பிராமணர்களுக்குக் கொடுக்க மாட்டான் என்று சொல்ல ஏதுமில்லை, ஏன் அவன் உயிரையே கூடப் பிராமணர்களுக்காகக் கொடுப்பான்.(44) அவன் எப்போதும் மாதர்களுக்குப் பிடித்தமானவனாகவும், மிகவும் தாராளம் வாய்ந்தவனாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அவன், இவ்வாறு உயர்ந்த முடியவையே அடைந்தான்[3].(45)
[3] “சில வங்க உரைகளில் 45ம் சுலோகத்தின் முதல் வரி வேறு விதமாக இருக்கிறது. அந்த உரையைப் பின்பற்றினால், “அவன் எப்போதும் மனிதர்களுக்குப் பிடித்தமானவனாக இருந்தான். அவன் மிகவும் தாராளம் வாய்ந்தவனாக இருந்தான். உண்மையில் கொடுப்பதற்கும் எப்போதும் விரும்பும் அவன், இறுதியில் மரணமடைந்தான்” என்று மொழிபெயர்க்க வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எவனை நம்பி உமது மகன் {துரியோதனன்} பகைமைகளைத் தூண்டினானோ, அவன் {கர்ணன்} தன்னுடன் கௌரவர்களின் வெற்றி நம்பிக்கை, மகிழ்ச்சி, கவசம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இவ்வாறே சொர்க்கத்திற்குச் சென்றான்.(46) கர்ணன் வீழ்ந்தபோது, ஆறுகள் அசையாமல் நின்றன. மங்கிய நிறத்துடன் சூரியன் மறைந்தான். சோமனின் மகனான, புதன் கோளானவன், நெருப்பு, அல்லது சூரியனின் வண்ணத்தை ஏற்று, ஆகாயத்தில் சாய்வுக்கோணத்தில் செல்வதைப் போலத் தெரிந்தது.(47) ஆகாயமே இரண்டாகப் பிளந்ததைப் போலவும் தெரிந்தது; பூமி உரக்க முழங்கியது; பலமானதும், பயங்கரமானதுமான காற்று வீசத் தொடங்கியது. அடிவானின் புள்ளிகள் அனைத்தும் புகையால் மறைக்கப்பட்டு எரிவதாகத் தெரிந்தது. பெருங்கடல்கள் கலங்கி பயங்கரமான ஒலிகளை எழுப்பின.(48) காடுகளுடன் கூடிய மலைகள் நடுங்கத் தொடங்கின, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்களும் வலியை உணர்ந்தன {துன்புற்றன}. வியாழன் கோளானது, ரோஹினி நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்து, சந்திரன், அல்லது சூரியனின் வண்ணத்தை ஏற்றது.(49) கர்ணனின் வீழ்ச்சியால் துணைத்திசைகளும் கூட எரிந்தன. ஆகாயம் இருளால் மூடப்பட்டது. பூமி நடுங்கியது. சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய எரிநட்சத்திரங்கள் வீழ்ந்தன. ராட்சசர்களும், பிற இரவு உலாவிகளும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50)
அர்ஜுனன், அந்தக் கத்திமுனைக் கணையை {அஞ்சலிகத்தைக்} கொண்டு, சந்திரனைப் போன்ற அழகான முகத்தால் அலங்கரிக்கப்பட்ட கர்ணனின் தலையைத் தாக்கி வீழ்த்திய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கம், ஆகாயம் மற்றும் பூமியில் உள்ள உயிரினங்கள் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறுவது கேட்டது.(51) தேவர்கள், கந்தவர்கள் மற்றும் மனிதர்களால் வழிபடப்பட்டவனும், தன் எதிரியுமான கர்ணனைப் போரில் கொன்ற பிறகு, பிருதையின் மகனான அர்ஜுனன், விருத்திரனைக் கொன்ற ஆயிரங்கண் தேவனை {இந்திரனைப்} போலச் சக்தியில் பிரகாசமாகத் தெரிந்தான்.(52) மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலியைக் கொண்டதும், கூதிர்காலத்தின் நடுவான சூரியனைப் போன்ற காந்தியைக் கொண்டதும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், அடிக்கடி பயங்கர ஒலியை உண்டாக்கும் கொடிமரத்தைக் கொண்டதும், பனி, அல்லது சூரியன், அல்லது சங்கு அல்லது பளிங்குக்கு ஒப்பான பிரகாசம் கொண்டதும்,(53) இந்திரனின் குதிரைகளைப் போன்ற குதிரைகளையே கொண்டதுமான அந்தத் தேரில் சென்று கொண்டிருந்தவர்களும், பெரும் இந்திரனுக்கு ஒப்பான சக்தியைக் கொண்டவர்களும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், நெருப்பு, அல்லது சூரியனைப் போன்ற காந்தி கொண்டவர்களுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மற்றும் கேசினைக் கொன்றவன் {கிருஷ்ணன்} ஆகிய அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், ஒரே தேரில் செல்லும் விஷ்ணுவையும், வாசவனையும் போல அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் சென்று கொண்டிருந்தனர்.(54,55)
காண்டீவத்தின் நாணொலியாலும், உள்ளங்கை அறைகளாலும் எதிரியைக் காந்தியிழந்தவனாகச் செய்தவர்களும், கணைமாரிகளால் குருக்களைக் கொன்றவர்களும், அளவிலா சக்தியைக் கொண்டவர்களுமான குரங்குக் கொடியோன் அர்ஜுனன், கருடக் கொடியோன் கிருஷ்ணன்(56) ஆகிய அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பனியைப் போன்று வெண்மையானவையும், பேரொலி எழுப்புபவையுமான சங்குகளைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் உதடுகளில் பொருத்தி, எதிரிகளின இதயங்களைத் துளைக்கும் ஒலியுடன் தங்கள் அழகிய வாய்களால் அவற்றை மீண்டும் மீண்டும் முழக்கினர்.(57) பாஞ்சஜன்யம் மற்றும் தேவதத்தத்தின் சங்குலிகள், பூமி, ஆகாயம் மற்றும் சொர்க்கம் ஆகியவற்றை நிறைத்தன.(58) வீர மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் அந்தச் சங்கொலிகளால், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்.(59) தங்கள் சங்கொலிகளால், காடுகள், மலைகள், ஆறுகள், திசைப்புள்ளிகள் ஆகியவற்றை எதிரொலிக்கச் செய்த அந்த மனிதர்களில் முதன்மையானோர், அவ்வொலியால் யுதிஷ்டிரனை மகிழச் செய்தனர்.(60)
இவ்வாறு முழக்கப்பட்ட அந்தச் சங்கொலிகளைக் கௌரவர்கள் கேட்டதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவரும், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் பாரதர்களின் தலைவனான துரியோதனன் ஆகியோரை விட்டுவிட்டு பெரும் வேகத்துடன் களத்தை விட்டகன்றனர்.(61) அப்போது ஒன்று சேர்ந்திருந்த பல்வேறு உயிரினங்கள், உதயச் சூரியன்கள் இரண்டைப் போலத் தெரிந்தவர்களும், போர்க்களத்தில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான வீரர்களான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வாழ்த்தின.(62) கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் இருவரும், பல கதிர்களைக் கண்ட சந்திரனையும் சூரியனைப் போல இருளை அகற்றிப் பிரகாசமாக ஒளிர்வதாகத் தெரிந்தனர்.(63) அந்தக் கணைகளைப் பிடுங்கியவர்களும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டு, வேள்விப் புரோகிதர்களால் முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் வாசவனையும் {இந்திரனையும்}, விஷ்ணுவையும் போலத் தங்கள் பாசறைக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தனர்.(64) அந்தப் பயங்கரமான போரில் கர்ணன் கொல்லப்பட்டதும், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், சாரணர்கள், பெருமுனிவர்கள், யக்ஷர்கள், பெரும் நாகர்கள் ஆகியோர் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பெருமதிப்புடன் வழிபட்டு, (அனைத்து காரியங்களிலும்) அவர்கள் வெற்றியடைய வாழ்த்தினர்.(65) அப்போது தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் வயதுக்கத்தக்கபடி வரவேற்று, பதிலுக்கு அந்த நண்பர்களால் தங்கள் ஒப்பற்ற சாதனைகளுக்காகப் பாராட்டப்பட்ட அந்த வீரர்கள் இருவரும், பலியை {மகாபலியை} வீழ்த்திய பிறகு இருந்த தேவர்கள் தலைவனையும் {இந்திரனும்}, விஷ்ணுவையும் போலத் தங்கள் நண்பர்களுடன் மகிழ்ந்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(66)
-------------------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி -94ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English |