The cavalry of Shakuni! | Shalya-Parva-Section-23 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : கிருதவர்மனின் குதிரைகளைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை எதிர்க்க எழுநூறு தேர்வீரர்களை அனுப்பிய துரியோதனன்; துரியோதனன் அனுப்பிய வீரர்கள் அனைவரையும் கொன்ற சிகண்டியின் பாஞ்சாலப் படை; பயங்கரச் சகுனங்கள் தோன்றின; பாண்டவர்களை எதிர்த்த சகுனி; சகுனியை எதிர்க்க சகாதேவனை அனுப்பிய யுதிஷ்டிரன்; பத்தாயிரம் குதிரைகளைக் கொண்ட சகுனியின் குதிரைப்படை ஆறாயிரமாகச் சுருங்கியது; தலையற்ற முண்டங்கள் ஒரு கையில் தலையுடனும், மறுகையில் வாளுடனும் எழுந்து நின்றது; சகுனியைச் சூழ்ந்த கொண்ட பாண்டவர்கள்; சகுனியின் உதவிக்குச் சென்ற கௌரவர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அச்சத்தையேற்படுத்தும் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பிளக்கப்பட்டது.(1) எனினும், பெரும் முயற்சி செய்து தங்கள் பெரும் தேர்வீரர்களை அணிதிரட்டிய உமது மகன்கள், பாண்டவப் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தனர்.(2) உமது மகனின் நலனை விரும்பிய (குரு) போர்வீரர்கள், திடீரென மீண்டும் திரும்பி வந்தனர். அவர்கள் திரும்பி வந்ததும், உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான போர் மிகப் பயங்கரமாக நடந்தது.(3,4) போர்வீரர்கள், அனுமானம் மற்றும் அங்கே சொல்லப்பட்ட பெயர்களின் துணை கொண்டு போரிட்டனர். இவ்வாறு அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டபோது ஏற்பட்ட அழிவானது பெரிதானதாக இருந்தது.(5)
பெரும் கோபத்தில் நிறைந்த மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வெல்லும் விருப்பத்தால்,(6) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சரத்வான் மகனை {கிருபரைத்} துளைத்து, அடுத்ததாக வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) அப்போது அஸ்வத்தாமன், கொண்டாடப்பட்டவனான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அங்கிருந்து கொண்டு சென்றான். சரத்வானின் மகன் {கிருபர்} பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தார்.(8) பிறகு மன்னன் துரியோதனன், மன்னன் யுதிஷ்டிரன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு எழுநூறு {700} தேர்களை அனுப்பினான்.(9) சிறந்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், காற்று அல்லது எண்ணத்தின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தத் தேர்கள், குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தன.(10)
அனைத்துப் பக்கங்களிலும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனைக் காட்சியில் இருந்து மறைக்கும் மேகங்களைப் போல, அவனைக் காட்சியில் இருந்து மறைத்தனர்.(11) அப்போது, சிகண்டியின் தலைமையிலான வீரர்கள், கௌரவர்களால் அவ்வாறு தாக்கப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, சினத்தால் நிறைந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள்.(12) குந்தியின் மகனான யுதிஷ்டிரனைக் காக்க விரும்பிய அவர்கள், பெரும் வேகம் கொண்டவையும், மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் அந்த இடத்திற்கு வந்தனர்.(13) அப்போது, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில், யமனின் ஆட்சிப்பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், குருதியே நீராகப் பாயும் வகையிலும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(14) பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், எதிரிகளான குரு படையின் அந்த எழுநூறு தேர்வீரர்களையும் கொன்று, மீண்டும் (ஒட்டுமொத்த குரு படையையும்) தடுத்தனர்.(15)
அங்கே உமது மகனுக்கும் {துரியோதனனுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதற்குமுன் நாங்கள் அதுபோன்றதொரு போரை கேட்டதோ பார்த்ததோ கிடையாது.(16) எவராலும் யாருக்கும் கருணையே காட்டப்படாத அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது படை மற்றும் எதிரி படையின் போர்வீரர்கள் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கும்போது,(17) போராளிகள் அனைவரும் கூச்சலிட்டு, தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டிருக்கும்போது, வில்லாளிகள் முழக்கம் செய்து கொண்டும், பல்வேறு வகைகளினான ஒலிகளை எழுப்பிக் கொண்டு இருக்கும்போது,(18) உண்மையில், அந்தப் போர் கடுமையாக நடந்து, போராளிகளின் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவர்களான துருப்புகள் வேகமாக விரைந்து கொண்டிருந்தபோது,(19) உலகில் உள்ள அனைத்தும் பயங்கரமான பேரழிவுக்கு உட்பட்டபோது, நற்பிறவியும், அழகும் கொண்ட எண்ணற்ற பெண்மணிகள் விதவைகளாக்கப்பட்டபோது,(20) உண்மையில், நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் போர்வீரர்களால் எந்தக் கருணையும் காட்டப்படாமல் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, அனைத்தின் அழிவுக்கான முன்னறிவிப்பாகப் பயங்கரச் சகுனங்கள் தோன்றின.(21)
மலைகள், காடுகளுடன் கூடிய பூமியானவள், பேரொலியை உண்டாக்கியபடி நடுங்கினாள். கைப்பிடிகளுடன் கூடிய எரிப்பந்தங்களைப் போன்ற எரிநட்சத்திரங்கள், சூரிய வட்டிலில் இருந்து விழுவதைப் போல, வானத்தில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன.(22) சூறாவளி எழுந்து, கடுங்கூழாங்கற்களைச் சுமந்து கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தாழ்வாக வீசியது. யானைகள் அபரிமிதமான கண்ணீரைச் சொரிந்து, அதிகமாக நடுங்கின.(23) இந்தப் பயங்கரமான கடுஞ்சகுனங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த க்ஷத்திரியர்கள், ஒருவரோடொருவர் கலந்தாலோசித்துக் கொண்டு, சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால், குருவின் பெயரால் அழைக்கப்பட்டதும், அழகானதுமான அந்தப்புனிதக் களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மீண்டும் போரிடுவதற்காக உற்சாகமாக நின்றனர்.(24)
அப்போது காந்தார மன்னனின் மகனான சகுனி, "நீங்கள் அனைவரும் முன்னால் இருந்து போரிடுங்கள். நானோ, பின்னால் இருந்து பாண்டவர்களைக் கொல்வேன்" என்றான்.(25) பிறகு, பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களான மத்ரகப் போர்வீரர்களில், நமது தரப்பில் இருந்து முன்னேறிச் சென்றவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, பல்வேறு மகிழ்ச்சியான ஒலிகளை வெளியிட்டனர்.(26) எனினும், வெல்லப்பட முடியாதவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மீண்டும் நம்மை எதிர்த்து வந்து, கணைமாரியால் நம்மை மறைத்தனர்.(27) அப்போது எதிரியால் மத்ரகப் படையினர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டு, துரியோதனனின் துருப்புகள் மீண்டும் போரில் இருந்து புறமுதுகிட்டன.(28) எனினும், காந்தாரர்களின் வலிமைமிக்க மன்னன் {சகுனி}, மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "பாவிகளே! நில்லுங்கள்! (எதிரியோடு) போரிடுங்கள்! போரால் என்ன பயன்?" என்றான்.(29) அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, பளபளப்பான வேல்களுடன் போரிட வல்லவர்களாகப் பத்தாயிரம் {10000} குதிரை வீரர்களை முழுமையாகத் தன்னிடம் கொண்டிருந்தான்.(30)
அந்தப் பேரழிவு நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெரும்படையின் துணையுடன் கூடியவனான சகுனி, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பின்புறத்தில் இருந்து பாண்டவப்படையைத் தாக்கி, தன் கூரிய கணைகளால் அவர்களைக் கொன்றான்.(31) அப்போது பாண்டுக்களின் அந்தப் பரந்த படையானது, ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்கக் காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் கலைக்கப்படும் மேகத்திரளைப் போலவே பிளந்தது.(32) அப்போது யுதிஷ்டிரன், தன் படை முறியடிக்கப்படுவதை அருகிலிருந்து கண்டு, வலிமைமிக்கச் சகாதேவனைத் தூண்டும்வகையில் அமைதியாக, "அதோ சுபலனின் மகன் {சகுனி}, கவசம் பூண்டவனாக நமது படையின் பின்புறத்தைப் பீடித்து நிற்கிறான். அவன் நமது படைகளைப் படுகொலை செய்கிறான். ஓ! பாண்டுவின் மகனே {சகாதேவா}, பொல்லாதவனான அத்தீயவனைக் காண்பாயாக.(34) திரௌபதி மகன்களின் துணையுடன், சுபலனின் மகனான அந்தச் சகுனியை நோக்கிச் சென்று, அவனைக் கொல்வாயாக. அதேவேளையில் நான், ஓ! பாவமற்றவனே, பாஞ்சாலர்களின் ஆதரவுடன் எதிரியின் தேர்ப்படையை அழிக்கப்போகிறேன்.(35) உன்னுடன் யானைகள் அனைத்தையும், குதிரைகள் அனைத்தையும், மூவாயிரம் காலாட்படைவீரர்களையும் அழைத்துச் செல்வாயாக. இவற்றின் துணையுடன் சகுனியைக் கொல்வாயாக" என்றான்.(36)
அதன் பிறகு, வில்தரித்த போராளிகளால் செலுத்தப்பட்ட எழுநூறு யானைகள், ஐயாயிரம் குதிரைகள், வீரனான சகாதேவன்,(37) மூவாயிரம் காலாட்படை வீரர்கள், திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும், போரில் வீழ்த்தக் கடினமானவனான சகுனியை எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் பெரும் வீரம் கொண்டவனான அந்தச் சுபலனின் மகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை விஞ்சி நின்று, வெற்றிக்கான ஏக்கத்துடன், அவர்களது படையைப் பின்புறத்தில் இருந்து கொல்லத் தொடங்கினான்.(39)
பாண்டவப் படையைச் சேர்ந்தவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், சினத்தால் மதங்கொண்டவர்களுமான குதிரைவீரர்கள், சுபலன் மகனின் தேர்வீரர்களை விஞ்சி அவனது படைக்குள் ஊடுருவினர்.(40) வீரம் கொண்டவர்களான அந்தக் குதிரைவீரர்கள், தங்கள் யானைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, கணைமாரியால் சுபலன் மகனின் பெரும்படையை மறைத்தனர்.(41) உமது தீய ஆலோசனைகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, கதாயுதங்களும், வேல்களும் பயன்படுத்தப்பட்டதும், வீரர்கள் மட்டுமே பங்கேற்றதுமான அந்தப் பயங்கரப் போர் நிகழ்ந்தது.(42) அந்தப் போரில் தேர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றுவிட்டதால், அங்கே வில்-நாண்கயிறுகளின் நாணொலிகள் அதற்கு மேலும் கேட்கவில்லை. அந்நேரத்தில் போரிட்ட தரப்புகளுக்கு எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(43) ஓ! பாரதக் குலத்தின் காளையே, குருக்கள் மற்றும் பாண்டவர்களாகிய இரு தரப்பினரும், வீரர்களின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட ஈட்டிகளை ஆகாயத்தில் இருந்து வரும் எரிநட்சத்திரங்களைப் போலவே கண்டனர்.(44)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பளபளப்பைக் கொண்டவையும், விழுபவையுமான வாள்களால் மறைக்கப்பட்ட மொத்த ஆகாயமும் மிக அழகாகத் தெரிந்தது.(45) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் வீசப்பட்ட வேல்களின் தன்மையானது, ஆகாயத்தில் செல்லும் வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆனது.(46) கணைகளால் காயமடைந்த குதிரைவீரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்களின் விளைவால், குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய குதிரைகள், அனைத்துப் பக்கங்களிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விழுந்தன.(47) ஒன்றோடொன்று மோதிக் கொண்டு நொறுங்கிய அவற்றில் பல சிதைக்கப்பட்டவையாகத் தெரிந்தன, மேலும் பல தங்கள் வாய்களில் இருந்து குருதியைக் கக்கின. துருப்புகள் புழுதிமேகத்தால் மறைக்கப்பட்ட போது, அங்கே அடர்த்தியான இருள் பரவியது.(48) அந்த இருளானது அனைத்தையும் மறைத்தபோது, ஓ! மன்னா, அந்த இடத்திலிருந்து, துணிச்சல்மிக்கப் போராளிகளும், குதிரைகளும், மனிதர்களும் நகர்வதை நாங்கள் கண்டோம்.(49)
சிலர் பூமியில் விழுந்து அதிகமாகக் குருதியைக் கக்குபவர்களாகக் காணப்பட்டனர். வேறு சில போராளிகள், ஒருவரையொருவர் தலைமுடியைப் பற்றி இழுத்து, அசைய முடியாமல் இருந்தனர்.(50) பெரும் பலத்தைக் கொண்ட பலர், குதிரைகளின் முதுகுகளில் இருந்து ஒருவரையொருவர் இழுத்து, அவர்களோடு மோதி, மற்போரில் ஈடுபடும் போராளிகளைப் போல ஒருவரையொருவர் கொன்றனர்.(51) உயிரை இழந்தவர்களான பலர், தாங்கள் செலுத்தி வந்த குதிரைகளின் முதுகுகளிலேயே கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் வீரத்தில் செருக்குக் கொண்டு, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பலர், கீழே பூமியில் விழுபவர்களாகக் காணப்பட்டனர்.(52) குருதியில் குளித்து, அங்கங்களை இழந்து, தலைமயிரற்றவர்களாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போராளிகள் பூமியில் விரவிக் கிடந்தனர்.(53) யானைவீரர்கள், குதிரைவீரர்கள், கொல்லப்பட்ட குதிரைகள், போராளிகள், இரத்தக்கறைபடிந்த கவசங்கள், ஆயுதந்தரித்த பிறர், பல்வேறு வகைகளிலான பயங்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் கொல்ல முயன்ற சிலர், ஆகியோர் அனைவரும் அச்சந்தருவதும், பயங்கரப் பேரழிவை ஏற்படுத்தியதுமான அந்தப் போரில் ஒருவரையொருவர் நெருக்கமாகக் கட்டிக் கொண்டு கிடந்ததால் பூமியின் பரப்பு மறைக்கப்பட்டதன் விளைவாக, எந்தப் போர்வீரனாலும் தன் குதிரையில் வெகுதொலைவுக்குச் செல்ல முடியவில்லை.(54,55)
சிறிது நேரம் போரிட்டுக் கொண்டிருந்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, எண்ணிக்கையில் ஆறாயிரமாக {6000} எஞ்சியிருந்த தன் குதிரைப்படையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.(56) அதேபோல, பாண்டவப் படையும், குருதியில் நனைந்தும், அதன் விலங்குகள் களைப்படைந்தும், எஞ்சியிருந்தவையான ஆறாயிரம் {6000} குதிரைகளுடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டது.(57) இரத்தக்கறை படிந்திருந்த பாண்டவப் படையின் குதிரைவீரர்கள், போரிடும் நோக்கோடும், தங்கள் உயிரையே விடத் துணிந்தும்,(58) "இனியும் இங்கே தேர்களில் போரிடுவது இயலாது; பிறகு, இங்கே யானைகளில் போரிடுவது எவ்வளவு கடினமானதாக இருக்கும். தேர்கள் தேர்களை எதிர்த்தும், யானைகள் யானைகளை எதிர்த்தும் செல்லட்டும்.(59) பின்வாங்கிச் சென்ற சகுனி தன் படைப்பிரிவின் உள்ளே நிற்கிறான். சுபலனின் அரச மகன் {சகுனி} போரிடுவதற்காக மீண்டும் வரமாட்டான்" என்று சொன்னார்கள்.(60)
அப்போது திரௌபதியின் {ஐந்து} மகன்களும், மதங்கொண்ட யானைகளும், பெரும் தேர்வீரனான பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன் இருந்த இடத்திற்குச் சென்றனர்.(61) சகாதேவனும் கூட, புழுதி மேகம் எழுந்தபோது, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தனியாகச் சென்றான்.(62) இவ்வாறு அனைவரும் சென்றுவிட்ட பிறகு, சுபலனின் மகனான சகுனி, கோபத்தால் தூண்டப்பட்டு, மீண்டும் திருஷ்டத்யும்னனுடைய படைப்பிரிவின் மேல் பாய்ந்து, அதைத் தாக்கத் தொடங்கினான்.(63) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்கள் உயிரையே துச்சமாக மதித்தவர்களுமான உமது படையின் வீரர்களுக்கும், எதிரி படையின் வீரர்களுக்கும் இடையில் அங்கே மீண்டும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(64) வீரர்களுக்கிடையிலான அம்மோதலில், ஒருவரையொருவர் நிலைத்த கண்களுடன் பார்த்த போராளிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஒருவர்மீதொருவர் பாய்ந்தனர்.(65)
அழிவை ஏற்படுத்தும் அந்தப் பெரும் படுகொலையில், வாள்களால் வெட்டப்பட்ட தலைகள் கீழே விழும்போது, பனம்பழம் விழும் ஒலியை உண்டாக்கின.(66) கவசங்களை இழந்து, ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு, கீழே தரையில் விழும் உடல்கள், கரங்கள், உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட தொடைகள் ஆகியன மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேரொலியை ஏற்படுத்தின.(67) சகோதரர்களையும், மகன்களையும், தந்தைமாரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிய போராளிகள், இறைச்சித் துண்டுகளுக்காகப் போரிடும் பறவைகளைப் போலக் காணப்பட்டனர்.(68) சினத்தால் தூண்டப்பட்ட ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் ஒருவர் மீதொருவர் பாய்ந்து, அந்தப் போரில் பொறுமையில்லாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(69) நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான போராளிகள், கொல்லப்பட்டுத் தங்கள் குதிரைகளில் இருந்து கீழே விழும் குதிரைவீரர்களின் கனத்தால் கொல்லப்பட்டுக் கீழே களத்தில் விழுந்தனர்.(70)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால் ஒருவரையொருவர் முக்கிய அங்கங்களில் துளைக்க விரும்பிய போராளிகளின் ஈட்டிகளும், வாள்களும் கீழே விழும் ஒலிகளும், ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட குதிரைகளின் கனைப்பொலிகளும், கவசம் தரித்த மனிதர்களின் கூச்சல்களும் பேரொலியாகின.(71,72) அந்நேரத்தில் களைப்பை அடைந்து உமது படைவீரர்கள், சினம் தீர்ந்தவர்களாக, தங்கள் விலங்குகள் களைப்படைந்தவர்களாக, தாகத்தால் உலர்ந்தவர்களாக, கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டவர்களாகப் போரில் இருந்து புறமுதுகிடத் தொடங்கினர்.(73) குருதிமணத்தால் மதங்கொண்ட {இரத்த வாசனையால் வெறிகொண்ட} பலர், நண்பர்களையே எதிரிகளைப் போலக் கொல்லத்தக்கவர்களாகவும், உண்மையில், அகப்பட்ட எவரையும் கொல்லத்தக்கவர்களாகவும் மதியிழந்தவர்களானார்கள்.(74) பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, கணைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தனர்.(75)
ஓநாய்கள், கழுகுகள், நரிகள் ஆகியன ஊளையிடவும், மகிழ்ச்சியால் அலறவும் செய்து, பேரொலியை உண்டாக்கின. உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படை பேரிழப்பை அடைந்தது.(76) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, இரத்த ஓடைகளால் மறைக்கப்பட்டு, மருண்டோரை அச்சங்கொள்ளச் செய்தது.(77) ஓ! பாரதரே, வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள் ஆகியவற்றால் மீண்டும் மீண்டும் தாக்கிச் சிதைக்கப்பட்ட உமது போர்வீரர்களும், பாண்டவப் போர்வீரர்களும் ஒருவரையொருவர் அணுகுவதை நிறுத்தினர்.(78) தங்கள் தங்கள் பலத்திற்குத் தக்க ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இறுதிச் சொட்டுக் குருதியுள்ளவரை போரிட்ட போராளிகள், தங்கள் காயங்களில் இருந்து குருதி வழிய கீழே விழுந்தனர்.(79) தலையற்ற வடிவங்கள், (ஒரு கரத்தில்) தங்கள் தலைகளின் மயிரைப் பற்றியபடியும், (மறுகரத்தில்) உயர்த்தப்பட்டவையும், இரத்தம் தோய்ந்தவையுமான வாள்களோடும் காணப்பட்டன.(80)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு பல தலையற்ற வடிவங்கள் எழுந்து, குருதிமணம் போராளிகளைக் கிட்டத்தட்ட உணர்வற்றவர்களாகச் செய்து,(81) அந்தப் போரொலியானது சற்றே தணிவடைந்தபோது, சுபலனின் மகன் {சகுனி}, எஞ்சிய தனது சிறு குதிரைப்படையுடன், பாண்டவர்களின் பெரும்படையை (மீண்டும்) அணுகினான்.(82) வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்பையுடையவர்களுமான பாண்டவர்கள், காலாட்படையினர், யானைகள் மற்றும் குதிரைப்படைகளுடனும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடனும் சகுனியை நோக்கி விரைந்தனர்.(83) பகைமையின் எல்லையை {முடிவை} அடைய விரும்பிய பாண்டவர்கள், ஒரு சுவராக அணிவகுத்து அனைத்துப் பக்கங்களிலும் சகுனியைச் சூழ்ந்து கொண்டு, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அவனை {சகுனியைத்} தாக்கத் தொடங்கினர்.(84)
அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்படும் உமது படையைக் கண்ட கௌரவர்களும், குதிரைகள், காலாட்படையினர், யானைகள் மற்றும் தேர்களுடன் பாண்டவர்களை நோக்கி விரைந்தனர்.(85) பெரும் துணிவுமிக்கவர்களான காலாட்படைவீரர்கள் சிலர், ஆயுதங்களே இல்லாதவர்களாக, தங்கள் கால்களாலும், முட்டிகளாலும் அந்தப் போரில் எதிரிகளைத் தாக்கி வீழ்த்தினர்.(86) தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், யானைவீரர்கள் யானைகளிலிருந்தும், புண்ணியமற்ற மனிதர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் தங்கள் தெய்வீக வாகனங்களில் இருந்து வீழ்வதைப் போல விழுந்தனர்.(87) இவ்வாறு, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்ட போராளிகள், தந்தைமாரையும், சகோதரர்களையும், நண்பர்களையும், மகன்களையும் கொன்றனர்.(88) ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, எவருக்கும் எவராலும் எந்தக் கருணையும் காட்டப்படாததும், அனைத்துப் பக்கங்களிலும் வேல்கள், வாள்கள், கணைகள் வேகமாக வீழ்த்தப்பட்டுக் காணும் காட்சியைப் பயங்கரமாக்கியதுமான அந்தப் போர் இவ்வாறே நிகழ்ந்தது" {என்றான் சஞ்சயன்}.(89)
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 89
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 89
ஆங்கிலத்தில் | In English |