Monday, August 07, 2017

துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்! - சல்லிய பர்வம் பகுதி – 24

Arjuna censured Duryodhana! | Shalya-Parva-Section-24 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 24)


பதிவின் சுருக்கம் : துரியோதனனைக் குறித்து வீரர்களிடம் விசாரித்த சகுனி; துரியோதனன் இருக்குமிடம் அறிந்து அங்கே சென்ற சகுனி; சகுனியின் உற்சாகமிக்கப் பேச்சால் மகிழ்ந்த கௌரவவீரர்கள் பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றது; கிருஷ்ணனிடம் துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்; கௌரவப்படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு ஊக்கத்தை இழந்த கௌரவர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரின் பேரொலி ஒருவாறு தணிந்து, பாண்டவர்கள் பெரும் எண்ணிக்கையிலான தங்கள் எதிரிகளைக் கொன்ற பிறகு, எஞ்சியிருந்த தன் எழுநூறு {700} குதிரைகளுடன்[1] சுபலனின் மகன் {சகுனி} (மீண்டும்) போரிட வந்தான்.(1) தன் படைவீரர்களை வேகமாக அணுகி, அவர்களைப் போரிடத் தூண்டிய அவன், மீண்டும் மீண்டும், "எதிரிகளைத் தண்டிப்பவர்களே, கவனமாகப் போரிடுங்கள்" என்று சொன்னான்.(2) அவன் அங்கிருந்த க்ஷத்திரியர்களிடம், "பெரும் தேர்வீரனான மன்னன் {துரியோதனன்} எங்கே?" என்று கேட்டான். சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, "அதோ, முழு நிலவுக்கு இணையான பெரிய குடை இருக்குமிடத்தில், கவசம் தரித்த தேர்வீரர்கள் இருக்கும் இடத்தில், மேகங்களுக்கு ஒப்பான பேரொலி கேட்கும் இடத்தில் பெரும் தேர்வீரரான குரு மன்னன் {துரியோதனன்} இருக்கிறார். ஓ! மன்னா {சகுனியே}, வேகமாக அங்கே சென்றால், உம்மால் குரு ஏகாதிபதியை {துரியோதனனைக்} காண முடியும்" என்று பதிலுரைத்தனர்.(5)


[1] கும்பகோணம் பதிப்பில் ஏழாயிரம் குதிரைகள் என்றிருக்கிறது. மன்மதநாதத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே எழுநூறு குதிரைகள் என்றே இருக்கிறது. பத்தாயிரமாக இருந்த சகுனியின் குதிரைப்படை ஆறாயிரமாகக் குறைந்ததாகவும், அதன்பிறகும் சகுனி போரிட்டதாகவும் சென்ற பதிவில் கண்டோம். ஒருவேளை ஆறாயிரம் எழுநூறாகக் குறைந்திருக்கக்கூடும்.

துணிச்சல்மிக்க அந்தப் போர்வீரர்களால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பின்வாங்காத வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனாக உமது மகன் இருந்த இடத்திற்குச் சென்றான்.(6) அந்தத் தேர்ப்படைக்கு மத்தியில் இருந்த துரியோதனனைக் கண்ட சகுனி, அங்கே இருந்த உமது தேர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்,(7) ஓ! மன்னா, துரியோதனனிடம் உற்சாகமாக இவ்வார்த்தைகளைச் சொன்னான். உண்மையில் அவன் {சகுனி}, தன் காரியங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேறிவிட்டதைக் காட்டும் வகையில் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்[2].(8) "ஓ! மன்னா {துரியோதனா}, (பாண்டவர்களின்) தேர்ப்படைப்பிரிவினரைக் கொல்வாயாக. அவர்களது குதிரைகள் அனைத்தும் என்னால் வெல்லப்பட்டன. ஒருவன் தன் உயிரைக் கொடுக்காமல் போரில் யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை.(9) பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} பாதுகாக்கப்படும் அந்தத் தேர்ப்படை அழிக்கப்பட்ட பிறகு, யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் பிறர் அனைவரையும் நாம் கொல்வோம்" என்றான்.(10)

[2] கும்பகோணம் பதிப்பில், "தேர்ப்படையில் ஸன்னத்தனாக நிற்கின்ற துரியோதனனைக் கண்டு அந்தச் சகுனி அதிக ஸந்தோஷமுற்றுத் தன்னைக் காரியத்தை நிறைவேற்றியவன்போல எண்ணி உம்மைச் சேர்ந்த எல்லா ரதிகர்களையும், ஸந்தோஷிக்கச் செய்து கொண்டு துரியோதன ராஜனைப் பார்த்து இந்த வாக்கியத்தை உரைக்கலானான்" என்று இருக்கிறது.

அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது போர்வீரர்கள், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பாண்டவப்படையை நோக்கி உற்சாகமாக ஓடினர்.(11) தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணிகளுடனும், கைகளில் விற்களுடனும் கூடிய அவர்கள் அனைவரும் தங்கள் விற்களை அசைத்து, சிங்க முழக்கத்தைச் செய்தனர்.(12) ஓ! மன்னா, விற்களின் கடும் நாணொலிகளும், உள்ளங்கைகளை அறையும் ஒலிகளும், பலமாக ஏவப்பட்ட கணைகளான் விஸ் ஒலிகளும் மீண்டும் கேட்கப்பட்டன.(13)

அந்தக் குரு போராளிகள் உயர்த்தப்பட்ட விற்களுடன் பாண்டவப்படையை நோக்கி வருவதைக் கண்டவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(14) "அச்சமில்லாமல் குதிரைகளைத் தூண்டி, இந்தத் துருப்புகளின் கடலுக்குள் ஊடுருவுவாயாக. என் கூரிய கணைகளின் மூலம் இன்று நான் இந்தப் பகைமைகளின் எல்லையை {முடிவை} அடைவேன்.(15) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இரு தரப்புக்கிடையில் நடக்கும் இந்தப் பெரும்போரில் இது பதினெட்டாவது நாளாகும்.(16) உண்மையில் எண்ணற்றவையாக இருந்த அந்த உயர் ஆன்ம வீரர்களின் படையானது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. விதியின் வழியைப் பார்.(17) ஓ! மாதவா {கிருஷ்ணா}, பரந்த கடலைப் போல இருந்த திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} படையானது, நம்மோடு மோதிய பிறகு, பசுவின் குளம்புகளால் உண்டான தடத்தைப் போலாகிவிட்டது.(18)

பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைதி ஏற்படுத்தப்பட்டிருந்தால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, அனைத்தும் நன்றாக இருந்திருக்கும். எனினும், பலவீனமான அறிவைக் கொண்ட மூடனான துரியோதனன் அமைதியை ஏற்படுத்தவில்லை.(19) ஓ! மாதவா, பீஷ்மரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் நன்மை தருபவையும், பின்பற்றத் தகுந்தவையுமாகும். எனினும், அறிவை இழந்தவனான சுயோதனன், அதன்படி செயல்படவில்லை.(20) பீஷ்மர் தாக்கப்பட்டு, பூமியில் வீழ்த்தப்பட்ட பிறகும், போர் ஏன் தொடர்கிறது என்பதற்கான காரணத்தை நான் அறியவில்லை.(21) சந்தனு மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகும் தார்தராஷ்டிரர்கள் போரைத் தொடர்ந்ததால், அனைத்து வழிகளிலும் அவர்கள் மூடர்கள் என்றும், பலவீனமான அறிவைக் கொண்டவர்கள் என்றும் நான் கருதுகிறேன்.(22)

அதன்பிறகும், பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் வீழ்ந்த பிறகும், ராதையின் மகன் {கர்ணன்} வீழ்ந்த பிறகும், விகர்ணன் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லையே.(23) ஐயோ, மனிதர்களில் புலியான கர்ணன் தன் மகன்களுடன் வீழ்ந்து, சிறு (கௌரவப்) படை மட்டுமே எஞ்சியிருந்தபோதும் பேரழிவு நிற்கவில்லையே.(24) வீரனான சுருதாயுஷ், பூரு குலத்தின் ஜலசந்தன், மன்னன் சுருதாயுதன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் கூடப் பேரழிவு நிற்கவில்லை.(25) ஓ ஜனார்த்தனா, பூரிஸ்ரவஸ், சல்லியர், சால்வன், அவந்தியின் வீரர்கள் ஆகியோர் வீழ்ந்தபிறகும் பேரழிவு நிற்கவில்லை.(26) ஜெயத்ரதன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், சோமதத்தன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(27) வீரரான பகதத்தர், காம்போஜத் தலைவன் சுதக்ஷிணன், துச்சாசனன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(28) ஓ! கிருஷ்ணா, வீரமும், பெரும் நாடுகளைச் சொந்தமாகக் கொண்டவர்களும், வலிமையும் மிக்கவர்களுமான பல்வேறு மன்னர்கள் போரில் கொல்லப்பட்ட பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(29) போரில் பீமசேனரால் முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் கொல்லப்பட்ட பிறகும், தார்தராஷ்டிரர்களின் மடமையினாலோ, பேராசையாலோதான் இந்தப்பேரழிவு நிற்கவில்லை.(30)

நிச்சயம் மூடனான துரியோதனனைத் தவிர, குரு குலத்தைப் போன்ற உன்னதக் குலத்தில் பிறந்த வேறு எந்த மன்னன்தான், கனியற்ற {பலனற்ற} இந்தக் கடும் பகைமைகளைத் தொடர்வான்?(31) அறிவும், ஞானமும் கொண்டும், தீமையிலிருந்து நன்மையைப் பகுத்துப் பார்க்க வல்லவனுமாக இருந்தும், தகுதியிலும், பலத்திலும், துணிவுலும் தன் எதிரிகள் தன்னைவிட மேம்பட்டவர்கள் என்பதை அறிந்தும் இவ்வாறு போரைத் தொடுப்பவன் இங்கே எவன் இருக்கிறான்?(32) உன்னால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கீழ்ப்படிந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள மனமில்லாத ஒருவனால் உண்மையில் பிறரின் ஆலோசனைகளை எவ்வாறு கேட்க இயலும்?(33) சந்தனுவின் மகனான பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தூண்டியபோது அவர்களை அலட்சியம் செய்த அவனுக்கு என்ன மருந்துதான் இன்று ஏற்புடையதாக இருக்கக்கூடும்?(34) ஓ! ஜனார்த்தனா, வயது முதிர்ந்த தந்தையும், நல்ல அறிவு கொண்ட அவனது தாயும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னபோது, மூடத்தனத்தால் அவர்களை அலட்சியம் செய்து அவமதித்த அவனால் நல்ல ஆலோசனைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?(35)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் குலத்தை அழிப்பதற்காகவே துரியோதனன் பிறப்பை எடுத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! தலைவா, அவனது நடத்தையும், கொள்கையும் அதையே சுட்டுகிறது. இன்னும் கூட அவன், எங்களது நாட்டை எங்களுக்குக் கொடுக்க மாட்டான். ஓ! அச்யுதா, இதுவே என் கருத்தாகும்.(36) ஓ! ஐயா, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} உயிரோடுள்ளவரை, எங்கள் பங்கான நாட்டை அவன் எங்களுக்குக் கொடுக்க மாட்டான் என்று உயர் ஆன்ம விதுரர் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.(37) மேலும் விதுரர், "ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரர் உயிரோடுள்ளவரை, பொல்லாதவனான அந்தப் பாவி உங்களுக்குப் பாவத்தையே செய்வான்.(38) போரில்லாமல் உங்களால் துரியோதனனை வெல்லவே முடியாது" என்றார். ஓ! மாதவா, முன்னறிதிறம் கொண்டவரான விதுரர், இவ்வாறே என்னிடம் அடிக்கடி சொன்னார்.(39) தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனுமான அவன் செய்யும் செயல்கள் அனைத்தும், உயர் ஆன்ம விதுரர் சொன்னதற்கு முற்றிலும் சரியாக இருப்பதாக இப்போது நான் அறிகிறேன்.(40)

நன்மையைத் தரக்கூடியவையும், சரியானவையுமான ஜமதக்னி மகனின் {பரசுராமரின் வார்த்தைகளைக் கேட்டும், அவற்றை அலட்சியம் செய்த அந்தத் தீய புத்தியுள்ளவன், உறுதியாக அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வேண்டும்.(41) துரியோதனன் பிறந்ததும், அந்த இழிந்தவனின் விளைவால் மொத்த க்ஷத்திரிய வகையும் அழிவுக்குள்ளாகும் என்று தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பலர் சொன்னார்கள்.(42) துரியோதனனின் செயல்களால் க்ஷத்திரியர்கள் கிட்டத்தட்ட மொத்தமாக அழிவை அடைந்துவிட்டதால், ஓ! ஜனார்த்தனா, அம்முனிவர்களின் வார்த்தைகள் இப்போது {உண்மையென} உணரப்படுகின்றன. ஓ! மாதவா, நான் இன்று போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(43) க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, (கௌரவ) முகாம் வெறுமையான பிறகும், தன் அழிவுக்காகத் துரியோதனன் எங்களுடன் போரையே விரும்புவான்.(44) இந்தப் பகைமைகளை அதுவே {அந்தப் போரே} முடித்துவைக்கும். ஓ! மாதவா, ஓ விருஷ்ணி குலத்தோனே, விதுரரின் வார்த்தைகளை என் மனத்திற்குள்ளேயே நான் சிந்தித்துப் பார்த்தும், தீய ஆன்மா கொண்ட துரியோதனனின் செயல்களைக் கருத்தில் கொண்டும் நான் இந்தத் தீர்மானத்திற்கே வந்திருக்கிறேன். ஓ! வீரா {கிருஷ்ணா}, தீய ஆன்மா கொண்ட துரியோதனனையும், அவனது படையையும் இன்று என் கூரிய கணைகளால் நான் கொல்லப்போவதால் இந்தப் பாரதப் படைக்குள் ஊடுருவுவாயாக.(45,46) திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இந்தப் பலவீனமான படையைக் கொன்று, யுதிஷ்டிரருக்கு எது நன்மையோ அதை இன்று நான் செய்யப் போகிறேன்" என்றான் {அர்ஜுனன்}."(47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சவ்யசச்சினால் {அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, கைகளில் கடிவாளத்துடன், அச்சமில்லாமல் அந்தப் பரந்த எதிரி படைக்குள் போருக்காக ஊடுருவினான்.(48) (அவ்விரு வீரர்களும் நுழைந்த) அது விற்களாலான பயங்கரமான காடாக இருந்தது. ஈட்டிகளே அதன் முட்களாக இருந்தன. கதாயுதங்கள், முள்பதித்த தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியன அதன் பாதைகளாக இருந்தன. தேர்களும், யானைகளும் அதில் இருக்கும் பெரும் மரங்களாக இருந்தன.(49) குதிரைப்படையும், காலாட்படையும் அதில் இருக்கும் கொடிகளாக இருந்தன. சிறப்புமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தக் காட்டுக்குள் நுழைந்த போது, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(50) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அர்ஜுனனைச் சுமந்து சென்ற அந்த வெள்ளைக் குதிரைகள், தாசார்ஹ குலத்தோனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்ட நிலையில் எங்கும் திரிவதாகக் காணப்பட்டன.(51) அப்போது எதிரிகளை எரிப்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, மழையைப் பொழியும் மேகத்தைப் போல நூற்றுக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(52)

அந்த நேரான கணைகளால் உண்டான ஒலியும், அவற்றைக் கொண்டு அந்தப் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} மறைக்கப்பட்ட அந்தப் போராளிகள் உண்டாக்கிய ஒலியும் பேரொலியாக இருந்தன. போராளிகளின் கவசத்தைத் துளைத்துச் சென்ற அந்தக் கணைமாரிகள் பூமியில் விழுந்தன.(53) இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்டவையும், காண்டீவத்திலிருந்து ஏவப்பட்டவையுமான கணைகள், ஓ! மன்னா, அந்தப் போரில் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தாக்கி, சிறகு படைத்த பூச்சிகளைப் போன்ற ஒலியுடன் போரில் விழுந்தன.(54) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டன. அந்தப் போரில் முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(55) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் துவைக்கப்பட்டவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், பார்த்தனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான கணைகளால் மொத்த உலகமும் நிறைந்திருப்பதைப் போலத் தெரிந்தது.(56) அந்தக் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, தீப்பந்தங்களால் எரிக்கப்பட்ட யானைக்கூட்டத்தைப் போலப் பார்த்தனால் எரிக்கப்பட்ட கௌரவர்கள், ஊக்கம் குன்றியவர்களாகத் தங்கள் பலத்தை இழந்தனர்[3].(57)

[3] 57ம் சுலோகத்தின் இரண்டாம் வரியானது பம்பாய்ப்பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது என்று கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "நெருப்பினால் யானைகள் சுடப்படுவது போலப் பார்த்தனால் எரிக்கப்படுகின்றவர்களும், கூர்மையுள்ள பாணங்களால் வதஞ்செய்யப்படுகிறவர்களும், பயங்கரர்களுமான அந்த வீரர்கள் பார்த்தனை விட்டு விலகவில்லை" என்றிருக்கிறது.

விற்களும், கணைகளும் தரித்திருந்த பார்த்தன், சுடர்மிக்கச் சூரியனுக்கு ஒப்பாக, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அந்தப் போரில் பகைவரின் போராளிகளை எரித்தான்.(58) காட்டுவாசிகளால் காட்டில் விடப்பட்டதும், சுடர்மிக்கத் தழல்களும், (தணலில் இருந்து எழும்) பெரும் சக்தியும் கொண்டு முழங்குவதுமான நெருப்பானது, மரங்களும், உலர்ந்த கொடிகளின் குவியல்களையும் கொண்ட அந்தக் காட்டையே எரிப்பதைப் போலவே,(59) பெரும் சுறுசுறுப்பும், கடுஞ்சக்தியும் கொண்டவனும், கணைகளையே தன் தழல்களாகக் கொண்டவனும், ஆயுதங்களில் ஆற்றல் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் உமது மகனின் {துரியோதனனின்} துருப்புகள் அனைத்தையும் வேகமாக எரித்தான்.(60) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், மரணபலத்தைக் கொண்டவையும், கவனமாக ஏவப்பட்டவையுமான அவனது கணைகளை எந்தக் கவசத்தாலும் கலங்கடிக்க முடியவில்லை. அவன், எந்த மனிதன் மீதும், குதிரையின் மீதும், அல்லது பெரும் வடிவம் கொண்ட யானையின் மீதும் இரண்டாம் கணையை ஏவ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.(61) வஜ்ரதாரியான இந்திரன், தைத்தியர்களைத் தாக்கி வீழ்த்தியதைப் போலவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொண்ட அந்தப் படைப்பிரிவுக்குள் தனியொருவனாக நுழைந்த அர்ஜுனனும், பல்வேறு வடிவங்களிலான கணைகளால் அதை {அந்தப் படைப்பிரிவை} அழித்தான்" {என்றான் சஞ்சயன்}.(62)
-----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 62


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top