Duryodhana retreated riding on horseback! | Shalya-Parva-Section-25 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனிடம் தோல்வியடைந்த துரியோதனன் ஒரு குதிரையில் தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனிடம் தப்பிய சஞ்சயன் சாத்யகியிடம் உயிரோடு அகப்பட்டது; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் துரியோதனனைத் தேடிக்கொண்டு சகுனி இருக்கும் இடத்திற்குச் சென்றது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் போராடிக் கொண்டிருந்தவர்களும், பின்வாங்காதவர்களுமான அந்த வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் வீணாகும்படி செய்தான்.(1) அர்ஜுனனால் ஏவப்பட்டவையும், தடுக்கப்பட முடியாதவையும், பெரும் சக்தி கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தீண்டலைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் மேகத்தால் பொழியப்படும் மழைத்தாரைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிரீடியால் {அர்ஜுனனால்} இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(3)
சிலர் தங்கள் தந்தைமாரையும், சகோதரர்களையும் கைவிட்டனர்; வேறு சிலர், தங்கள் தோழர்களைக் கைவிட்டனர். சில தேர்வீரர்கள் தங்கள் விலங்குகளை இழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிலருடைய அச்சுகளோ, நுகத்தடிகளோ, சக்கரங்களோ உடைந்தன.(4) சிலருக்குக் கணைகள் தீர்ந்து போயின. சிலர் கணைகளால் பீடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். காயம்படாதவர்களாக இருப்பினும் சிலர், அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கூட்டமாகத் தப்பி ஓடினர்.(5) தங்கள் சொந்தங்கள் அனைவரையும், விலங்குகளையும் இழந்த சிலர், தங்கள் மகன்களைக் காக்க முயன்றனர். சிலர் தங்கள் தந்தைமாரை உரக்க அழைத்தனர், சிலர் தங்கள் தோழர்களையும், தொண்டர்களையும் அழைத்தனர்.(6) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, சிலரோ, தங்கள் உறவினர்கள, சகோதரர்கள் மற்றும் பிற சொந்தங்களைக் கைவிட்டுத் தப்பி ஓடினர்.(7)
பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாக, கடினத்துடன் மூச்சுவிடுபவர்களாகத் தென்பட்டனர்.(8) அவர்களைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்ட வேறு சிலர், சிறிது நேரம் அவர்களின் துயராற்றி, அவர்களை ஓய்வெடுக்கச் செய்து, நீர் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணித்து, மீண்டும் போரிடச் சென்றனர்.(9) போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களான சிலர், காயம்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு, உமது மகனின் கட்டளைகளைக்குக் கீழ்ப்படிய விரும்பி மீண்டும் போரிடச் சென்றனர்.(10) தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டோ, விலங்குகளைக் களைப்பாறச் செய்தோ சிலரும், ஓ! பாரதர்களின் தலைவரே, (புதிய) கவசம் அணிந்து கொண்ட சிலரும்,(11) தங்கள் சகோதரர்கள், மகன்கள் மற்றும் தந்தைமாருக்கு ஆறுதலளித்து, அவர்களை முகாமில் விட்டுவிட்டு மீண்டும் போரிட வந்தனர்.(12) மூத்தோர், சிறியோர் வரிசையில் தங்கள் தேர்களை அணிவகுத்துக் கொண்ட சிலர், மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்.(13) (தங்கள தேர்களில்) மணிவரிசைகளால் மறைக்கப்பட்ட அந்த வீரர்கள், மூன்று உலகங்களையும் வெற்றிகொள்ளும் நோக்குடன் செல்லும் தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(14) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வாகனங்களில் பதற்றத்துடன் விரைந்த சிலர், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் இருந்த திருஷ்டத்யும்னனுடன் போரிட்டனர்.(15)
பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், பெரும் தேர்வீரனான சிகண்டி, நகுலனின் மகனான சதானீகன் ஆகியோர் எதிரியின் தேர்ப்படையோடு போரிட்டனர்.(16) அப்போது சினத்தால் நிறைந்தவனும், ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டம்யும்னன்}, கோபக்காரர்களான உமது துருப்பினரைக் கொல்லும் விருப்பத்தோடு அவர்களை நோக்கி விரைந்தான்.(17) பிறகு, உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, இவ்வாறு தன்னை நோக்கி விரைந்து வந்த அந்தப் பாஞ்சால இளவரசன் மீது கணைமாரிகள் பலவற்றை ஏவினான்.(18) அப்போது திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, வில்லைக் கொண்டு போரிட்டு வந்த உமது மகனின் {துரியோதனனின்} கணைகள் பலவற்றால் மார்பிலும், கரங்களிலும் வேகமாகத் துளைக்கப்பட்டான்.(19) கூரிய வேல்களால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல ஆழத்துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கணைகளைக் கொண்டு துரியோதனனின் நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அடுத்ததாக, மற்றோர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, அவன் தன் எதிரியுடைய {துரியோதனனுடைய} சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தெடுத்தான்.(20)
எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துரியோதனன், இவ்வாறு தன் தேரை இழந்து, ஒரு குதிரையின் முதுகில் ஏறிக்கொண்டு, ஒரு தொலைவான இடத்திற்குப் பின்வாங்கிச் சென்றான்.(21) தன் படையானது ஆற்றலை இழந்ததைக் கண்டவனும், வலிமைமிக்கவனுமான உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றான்.(22) கௌரவத் தேர்கள் நொறுக்கப்பட்டபோது, தேர்வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் மூவாயிரம் பெரும் யானைகள் சூழ்ந்து கொண்டனர்.(23) யானைப்படையால் சூழப்பட்டவர்களான அந்த ஐந்து சகோதரர்களும், ஓ! பாரதரே, ஓ! மனிதர்களில் புலியே, மேகங்களால் மறைக்கப்பட்ட கோள்களை {கிரகங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர்.(24) வலிமைமிக்கக் கரங்களையும், வெண்குதிரைகளையும், இலக்கில் துல்லியத்தையும் கொண்டவனான அர்ஜுனன், ஓ! மன்னா, கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டு தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(25)
மலைகளைப் போன்ற அந்தப் பெரும் யானைகளால் சூழப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கூரியவையும், பளபளக்கப்பட்டவையுமான தன் கணைகளால் அவ்விலங்குகளை அழிக்கத் தொடங்கினான்.(26) தனித்தனி கணைகளால் கொல்லப்பட்ட பெரும் யானைகள் ஒவ்வொன்றும், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவையாகவோ, வீழ்ந்து கொண்டிருப்பவையாகவோ, சிதைக்கப்படுபவையாகவோ இருப்பதை நாங்கள் கண்டோம்.(27) மதங்கொண்ட யானையைப் போன்றவனான பீமசேனன், அந்த ஆனைகளைக் கண்டு, உறுதிமிக்கத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தண்டந்தரித்த யமனைப் போலத் தன் தேரில் இருந்து கீழே குதித்து அவற்றை நோக்கி விரைந்து சென்றான்.(28) பாண்டவர்களில் பெரும் தேர்வீரனான அவன் {பீமன்}, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் வருவதைக் கண்ட உமது படைவீரர்கள் அச்சத்தால் நிரம்பியவர்களாக மலமும், சிறுநீரும் கழித்தனர்.(29) அப்போது நாங்கள், பீமனின் கதாயுதத்தால் மத்தகம் பிளக்கப்பட்டு, அங்கமெல்லாம் குருதியால் நனைக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருப்பவையாக மலைகளைப் போன்ற அந்தப் பெரிய யானைகளைக் கண்டோம்.(30)
பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகள், வலியால் கதறிக் கொண்டே அவனிடம் இருந்து அப்பால் ஓடிச்சென்று, சிறகிழந்த மலைகளைப் போலக் கீழே விழுந்தன.(31) மத்தகம் பிளக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பவையோ, கீழே விழுந்து கொண்டிருப்பவையோவான அந்த யானைகள் எண்ணிக்கையில் பலவாக இருப்பதைக் கண்டு உமது படைவீரர்கள் அச்சத்தை அடைந்தனர்.(32) பிறகு, யுதிஷ்டிரனும், மாத்ரியின் இரு மகன்களும் {நகுல, சகாதேவன்} கோபத்தால் நிறைந்து, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட கணைகளால் அந்த யானைவீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.(33) போரில் தோல்வியடைந்த (குரு) மன்னன் {துரியோதனன்} அவ்விடத்தில் இருந்து குதிரையின் முதுகிலேறி தப்பிச் சென்ற பிறகு, (கௌரவ) யானைகளால் பாண்டவர்கள் அனைவரும் சூழப்பட்டிருப்பதைத் திருஷ்டத்யும்னன் கண்டான்.(34) ஓ! ஏகாதிபதி, பாஞ்சால மன்னனின் மகனான திருஷ்டத்யும்னன் இதைக் கண்டு, அந்த யானைகள் அனைத்தையும் கொல்ல விரும்பி அவற்றை நோக்கிச் சென்றான்.(35)
அதேவேளையில், தேர்ப்படைக்கு மத்தியில் துரியோதனனைக் காணாதவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், "துரியோதனன் எங்குச் சென்றுவிட்டான்?" என்று அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அனைவரிடமும் கேட்டனர்.(36) அந்தப் பேரழிவுக்கு மத்தியில் மன்னனை {துரியோதனனைக்} காணாதவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், உமது மகன் கொல்லப்பட்டதாக நினைத்தனர். எனவே, துன்பம் நிறைந்த முகங்களுடன் அவர்கள் அவனைக் குறித்து விசாரித்தனர்.(37) அவனுடைய சாரதி வீழ்ந்ததும் அவன் {துரியோதனன்} சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} சென்று விட்டதாகச் சிலர் அவர்களிடம் சொன்னார்கள்.(38) காயங்களுடன் அங்கே மிகவும் சிதைக்கப்பட்டிருந்த சில க்ஷத்திரியர்கள், "துரியோதனனால் இங்கே என்ன தேவை இருக்கிறது? அவன் இன்னும் உயிரோடிருந்தால் பாருங்கள். ஒற்றுமையுடன் நீங்கள் அனைவரும் போரிடுவீராக. மன்னன் உங்களுக்கு என்ன செய்யப் போகிறான்?" என்று சொன்னார்கள்.(39)
மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தவர்களும், எதிரியின் கணைகளால் இன்னும் பீடிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுமான வேறு சில க்ஷத்திரியர்கள், "நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தப் படைகளைக் கொல்வோம். யானைகளைக் கொன்றதும் பாண்டவர்கள் இங்கே வருகிறார்கள் பாருங்கள்" என்று தெளிவற்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(40,41) அவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், பாஞ்சால மன்னனின் தடுக்கப்படமுடியாத படையைத் துளைத்துக் கொண்டு, கிருபருடனும், கிருதவர்மனுடனும் சேர்ந்து சுபலனின் மகன் {சகுனி} இருக்குமிடத்திற்குச் சென்றான். உண்மையில், உறுதிமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் தேர்ப்படையை விட்டுவிட்டு (துரியோதனனைத் தேடி) சென்றனர்.(42,43) அவர்கள் அங்கிருந்த சென்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யுமன்ன தலைமையிலான பாண்டவர்கள் தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(44) வீரமும், துணிச்சலும் கொண்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவர்களை உற்சாகமாக விரைவதைக் கண்டவர்களும், முகம் வெளிறியவர்களுமான உமது துருப்பினர், தங்கள் உயிர்களில் நம்பிக்கையிழந்தனர்.(45)
கிட்டத்தட்ட ஆயுதங்களை இழந்தவர்களும், (எதிரியால்) சூழப்பட்டவர்களுமான நமது படைவீரர்களைக் கண்டவனும், இரு வகைப் படைகளை மட்டுமே கொண்டவனுமான {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதித்து,(46) நமது படையின் ஐந்து தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, சரத்வான் மகன் {கிருபர்} நின்று கொண்டிருந்த இடத்தில் நம் மனிதர்களை நிறுத்தி, பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} படைகளோடு போரிட்டேன்.(47) கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் நாங்கள் பீடிக்கப்பட்டோம். இருப்பினும், எங்களுக்கும், திருஷ்டத்யும்னனின் படைப்பிரிவுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. இறுதியில் பின்னவனால் {திருஷ்டத்யும்னனால்} வெல்லப்பட்ட நாங்கள் அனைவரும் அம்மோதலில் இருந்து பின்வாங்கிச் சென்றோம்.(48) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி எங்களை எதிர்த்து விரைந்து வருவதை நான் கண்டேன். அந்தப் போரில் நானூறு {400} தேர்களுடன் அந்த வீரன் எங்களைப் பின்தொடர்ந்து வந்தான்.(49) குதிரைகள் களைத்துப் போயிருந்த திருஷ்டத்யும்னனிடம் இருந்து பெருங்கடினத்துடன் தப்பித்த நான், நகரத்திற்குள் வீழும் பாவியைப் போல மாதவனின் {சாத்யகியின்} படைகளுக்கு மத்தியில் விழுந்தேன். அங்கே குறுகிய காலத்திற்குச் சீற்றமும் கடுமையும் கொண்ட ஒரு போர் நடந்தது.(50)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, என்னை உயிரோடு பிடிக்க விரும்பி என் கவசத்தை வெட்டினான். உணர்விழந்தவனாகத் தரையில் கிடந்த என்னை அவன் {சாத்யகி} கைப்பற்றினான் {உயிரோடு பிடித்தான்}.(51) அப்போது குறுகிய காலத்திற்குள்ளாகவே பீமசேனனின் கதாயுதத்தினாலும், அர்ஜுனனின் கணைகளாலும் அந்த யானைப்படையானது அழிக்கப்பட்டது.(52) மலைகளைப் போன்று பெரியவையான அந்த வலிமைமிக்க யானைகள், நொறுங்கிய அங்கங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்ததன் விளைவால், தங்கள் வழி முற்றிலும் அடைக்கப்பட்டதைப் பாண்டவப் போர்வீரர்கள் கண்டனர்.(53) அப்போது வலிமைமிக்கப் பீமசேனன், ஓ! ஏகாதிபதி, அந்தப் பெரும் யானைகளை இழுத்துத் தள்ளி, பாண்டவர்கள் வெளியே வருவதற்கான வழியை உண்டாக்கினான்.(54) அதேவேளையில், அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், தேர்ப்படைக்கு மத்தியில் எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனைக் காணாமல், உமது அரச மகனைத் தேடினர்.(55) அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்ட அவர்கள், மன்னனைக் காணும் ஆவலால் சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.(56)
-------------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 25ல் உள்ள் சுலோகங்கள் : 56-------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் | In English |