Bhima killed the brothers of Duryodhana! | Shalya-Parva-Section-26 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : எஞ்சியிருந்த துரியோதனனின் தம்பிகள் பீமனை எதிர்த்து வந்தது; பீமனைத் தாக்கிய சுருதர்வன்; துரியோதனனின் தம்பியரில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனால் {பீமனால்} அந்த யானைப்படை கொல்லப்பட்ட பிறகு, போரில் பீமசேனனால் உமது படை இவ்வாறு கொல்லப்பட்டபோது,(1) தண்டம் தரித்தவனும், சினத்துடன் கூடியவனுமான, அனைத்தையும் அழிப்பவனுமான அந்தகனைப் போலத் தெரிந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனைக் கண்டவர்களும்,(2) உடன்பிறந்த சகோதரர்களும், கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்களுமான உமது மகன்கள், குரு குலத்தவனான உமது மகன் துரியோதனன் காணப்படாத அந்த அந்த நேரத்தில் ஒன்றுகூடி பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) அவர்கள் துர்மர்ஷணன், சுருதாந்தன், ஜைத்ரன், பூரிபலன், ரவி, ஜயத்சேனன், சுஜாதன், எதிரிகளைக் கொல்பவனான துர்விஷகன்,(4) துர்விமோசனன் என்றழைக்கப்பட்ட ஒருவன், துஷ்பிரசாதன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சுருதர்வன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போரில் சாதித்தவர்களாக இருந்தனர்.(5)
இந்த உமது மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, பீமசேனனை எதிர்த்து விரைந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை அடைத்துக் கொண்டனர்.(6) பிறகு மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே, உமது மகன்களின் முக்கிய அங்கங்களின் மேல் கூரிய கணைகளை ஏவத் தொடங்கினான்.(7) அந்தப் பயங்கரப் போரில் பீமசேனனின் கணைகளால் மறைக்கப்பட்ட உமது மகன்கள், பாதையில் குறுக்கிடும் யானையை இழுக்கும் மனிதர்களைப் போல அந்தப் போர்வீரனை {பீமனை} இழுக்கத் தொடங்கினர்.(8) சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கத்தித் தலை கணையால் {க்ஷுரப்ரத்தால்} துர்மர்ஷணனின் தலையை வெட்டி விரைவில் அதைப் பூமியில் வீழ்த்தினான்.(9) அடுத்ததாகப் பீமன், அனைத்து கவசங்களையும் ஊடுருவவல்ல மற்றொரு அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் சுருதாந்தனைக் கொன்றான்.(10)
பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} ஜயத்சேனனை மிக எளிதாகத் துளைத்து, அந்தக் குரு குலக் கொழுந்தை அவனது தேரில் இருந்து வீழ்த்தினான். ஓ! மன்னா, கீழே விழுந்த அந்த இளவரசனும் உடனே இறந்தான்.(11) இதனால் சினம் தூண்டப்பட்ட உமது மகன் சுருதர்வன், கழுகின் இறகுகளால் சிறகமைந்த ஒரு நூறு நேரான கணைகளால் பீமனைத் துளைத்தான்.(12) அப்போது சினத்தால் எரிந்த பீமன், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான மூன்று கணைகளால் ஜைத்ரன், ரவி, பூரிபலன் ஆகிய மூவரையும் துளைத்தான்.(13) இவ்வாறு தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், வசந்தகாலத்தில் மலர்ந்திருப்பவையும், (விறகு வெட்டியால்) வெட்டப்படுபவையுமான கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர்.(14) பிறகு, அந்த எதிரிகளை எரிப்பவன் {பீமன்}, மிகக் கூர்மையான மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு துர்விமோசனனைத் தாக்கி, அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(15) இவ்வாறு தாக்கப்பட்ட அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {துர்விமோசனன்}, மலைச்சிகரத்தில் ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று காற்றால் முறிவதைப் போலத் தன் தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(16)
அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, படைகளின் தலைமையில் இருந்த உமது மற்ற மகன்களான துஷ்பிரசாதன் மற்றும் சுஜாதன் ஆகிய இருவரில் ஒவ்வொருவரையும் அந்தப் போரில் இருகணைகளைக் கொண்டு தாக்கினான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.(17) அடுத்ததாக உமது மற்றொரு மகனான துர்விஷகனை நோக்கி விரைந்த பீமன், அந்தப் போரில் ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவனைத் துளைத்தான். அந்த இளவரசன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(18) அந்தப் போரில் தனியொருவனான பீமனால் தன் சகோதரர்களில் பலர் கொல்லப்படுவதைக் கண்ட சுருதர்வன், சினம் கொண்டு, உறுதியானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லை வளைத்து, சக்தியில் நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான எண்ணற்ற கணைகளை ஏவியபடியே பீமனை நோக்கி விரைந்தான்.(19,20)
அந்தப் பயங்கரப் போரில் பாண்டு மகனின் {பீமனின்} வில்லை வெட்டிய அந்தக் குரு இளவரசன் {சுருதர்வன்}, வில்லற்றவனான பீமனை இருபது கணைகளால் துளைத்தான்.(21) அப்போது, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான பீமசேனன், "நில், நிற்பாயாக" என்று சொன்னபடியே உமது மகனை {சுருதர்வனைக்} கணைகளால் மறைத்தான்.(22) அவ்விருவருக்குள் நடைபெற்ற போரானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் வாசவனுக்கு {இந்திரனுக்கு}, அசுரன் ஜம்பனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல அழகியதாகவும், கடுமையானதாகவும் இருந்தது.(23) யமனின் மரணக் கோலுக்கு {காலதண்டத்திற்கு} ஒப்பானவையும், அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்டவையுமான கூரிய கணைகளால், பூமி, வானம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தும் மறைக்கப்பட்டன.(24) அப்போது சினத்தால் நிறைந்த சுருதர்வன், தன் வில்லை எடுத்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனின் கரங்களையும், மார்பையும் கணைகள் பலவற்றால் தாக்கினான்.(25)
வில்தரித்த உமது மகனால் {சுருதர்வனால்} ஆழத்துழைக்கப்பட்ட பீமன், முழு நிலவிலோ {பௌர்ணமியிலோ}, புதுநிலவிலோ {அமாவசையிலோ} கலங்கும் பெருங்கடலைப் போலப் பெருங்கலக்கமடைந்தான்.(26) அப்போது கோபத்தால் நிறைந்தவனான பீமன், ஓ! ஐயா, தன் கணைகளைக் கொண்டு, உமது மகனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(27) தேரற்றவனான அவனை {சுருதர்வனைக்} கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடியே, சிறகுகள் படைத்த கணைகளால் அவனை மறைத்தான்.(28) அப்போது, தேரற்றவனான சுருதர்வன், ஒரு வாளையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். எனினும், வாளுடனும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான கேடயத்துடனும் அந்த இளவரசன் திரிந்த போது, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு கத்தித் தலைக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {சுருதவர்மனது} தலையைத் தாக்கி, அதைப் பூமியில் வீழ்த்தினான்.(29) அந்தக் கத்தித் தலைக் கணையால் தலையற்றதாகச் செய்யப்பட்ட அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் உடலானது, பேரொலியோல் பூமியை நிறைத்தபடியே தேரில் இருந்து கீழே விழுந்தது[1].(30)
[1] கர்ண பர்வம் பகுதி 84 வரை திருதராஷ்டிரன் மகன்களில் 85/84 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 4ம் நாள் போரில் {பீஷ்ம்பர்வம் 64} 8 பேர், 8ம் நாள் போரில் (பீஷ்மபர்வம் 89, 97} 16 பேர், 14ம் நாள் போரில் {துரோணபர்வம் 126, 132, 133, 134, 135, 136, 154, 156} 44 பேர், 17ம் நாள் போரில் {கர்ணபர்வம் 51, 83, 84} துச்சாசனனையும் சேர்த்து 17 பேர் கொல்லப்பட்டனர். இப்போது இந்தப் பகுதியில் {சல்லியபர்வம் 26ல்} 11 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே 96/95 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் பீமனின் நோக்கம் {100 பேர்} நிறைவேறிவிட்டதாக இப்பகுதியில் ஒரு குறிப்பு வருகிறது. இதற்கடுத்த பகுதியிலோ துரியோதனனையும் சேர்த்து இன்னும் இருவர் மட்டுமே எஞ்சியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உமது துருப்புகள் அந்த வீரனின் வீழ்ச்சியால் அச்சமடைந்திருந்தாலும், அந்தப்போரில் பீமசேனனுடன் போரிட விரும்பி அவனை எதிர்த்து விரைந்தன.(31) வீரனும், கவசந்தரித்தவனுமான அந்தப் பீமசேனன், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த அந்தத் துருப்புகளின் பெருங்கடலுக்கு மத்தியில் இருந்து தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்தப் போர்வீரர்களை வரவேற்றான் {எதிர்த்தான்}. அவ்வீரனை அடைந்த அந்தப் போர்வீரர்கள், அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(32) இவ்வாறு உமது போர்வீரர்களால் சூழப்பட்ட பீமன், ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்}, அசுரர்களைப் பீடிப்பதைப் போல, கூரிய கணைகளால் அவர்கள் அனைவரையும் பீடிக்கத் தொடங்கினான்.(33) தேர்க்கூடுகளுடன் கூடிய ஐநூறு {500} பெருந்தேர்களை அழித்த அவன் {பீமன்}, அந்தப் போரில் மீண்டும் எழுநூறு {700} யானைகளைக் கொன்றான்.(34) அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன், தன் வலிமைமிக்கக் கணைகளால் பத்தாயிரம் {10000} காலாட்படைவீரர்களைக் கொன்று, மேலும் எண்ணூறு {800} குதிரைகளையும் கொன்று பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(35)
உண்மையில், குந்தியின் மகனான அந்தப் பீமசேனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்களைக் கொன்ற பிறகு, தன் நோக்கம் அடையப்பட்டதாகவும், தன் பிறப்பின் காரணம் நிறைவேறியதாகவும் கருதிக் கொண்டான்.(36) அந்நேரத்தில் உமது துருப்புகள், ஓ! பாரதரே, இவ்வகையில் போரிட்டவனும், உமது மக்களை இவ்வழியில் கொன்றவனுமான அந்தப் போர்வீரனைப் பார்க்கவும் துணியவில்லை.(37) குருக்கள் அனைவரையும் முறியடித்து, அவர்களின் தொண்டர்களையும் கொன்ற பீமன், தன் கக்கங்களை அறைந்து கொண்டதால் உண்டான ஒலியால் பெரும் யானைகளை அச்சுறுத்தினான்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களை இழந்ததும், அப்போதைக்குச் சொற்பமான படைவீரர்களையே கொண்டிருந்ததுமான உமது படையானது, ஓ! மன்னா, மிகவும் உற்சாகமற்றதாக ஆனது" {என்றான் சஞ்சயன்}.(39)
-------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 39
-------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |