Bhima killed onemore! | Shalya-Parva-Section-27 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்சியிருந்த இருவர்; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன்; திரிகர்த்தப் படையை நோக்கிச் சென்று சுசர்மனைக் கொன்ற அர்ஜுனன்; திருதராஷ்டிரன் மகனான சுதர்சனனைக் கொன்ற பீமன்; பீமனுக்கும் கௌரவப்படைக்கும் இடையில் ஏற்பட்ட போர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது பிள்ளைகளில் இன்னும் கொல்லப்படாதவர்களான துரியோதனன் மற்றும் உமது மகன் சுதர்சனன் ஆகிய இருவர் மட்டுமே அந்நேரத்தில் (கௌரவ) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் இருந்தனர்.(1) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த துரியோதனனைக் கண்ட தேவகியின் மகன் (கிருஷ்ணன்), குந்தியின் மகனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(2) "நமது பாதுகாப்பைப் பெற்றிருந்த உறவினர்களான பெரும் எண்ணிக்கையிலான நமது எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதோ, சஞ்சயனைக் கைப்பற்றிக் கொண்டு சிநியின் பேரன் {சாத்யகி} திரும்பி வருகிறான்.(3) நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், ஓ! பாரதா, தார்தராஷ்டிரர்களுடனும், அவர்களின் தொண்டர்களுடனும் போரிட்டு களைத்துப் போயிருக்கின்றனர்.(4) கிருபர், கிருதவர்மன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் ஆகியோர் துரியோதனனின் தரப்பைவிட்டு, வேறெங்கோ தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளனர்.(5) துரியோதனனின் துருப்புகளைக் கொன்றுவிட்டு, அதோ பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரபத்ரகர்களுக்கு மத்தியில் பேரழகுடன் நிற்கிறான்.(6)
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ, தலைக்குமேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டபடியே தன் குதிரைப்படைக்கு மத்தியில் துரியோதனன் நிற்கிறான்.(7) அவன், (எஞ்சியிருக்கும் தன்) படையை மீண்டும் அணிவகுத்திருக்கும் தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறான். உனது கூரிய கணைகளால் இவனைக் கொன்றுவிட்டால், உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைந்தவனாவாய்.(8) இந்தத் துருப்புகள், தங்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னைக் கண்டும், தங்கள் யானைப்படையின் அழிவைக் கண்டும் தப்பி ஓடாதவரை, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ துரியோதனனைக் கொல்ல முயற்சிப்பாயாக.(9) யாராவது ஒருவர் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} சென்று, அவனை இந்த இடத்திற்கு வரச் சொல்லட்டும். ஓ! ஐயா, கௌரவத் துருப்புகள் அனைத்தும் களைத்துப் போயிருக்கின்றன. பாவியான துரியோதனனால் ஒருபோதும் தப்ப இயலாது.(10) போரில் பெரும் எண்ணிக்கையிலான உன் துருப்புகளைக் கொன்றிருக்கும் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்கள் வெல்லப்பட்டதாக நம்பி செருக்கை வெளிப்படுத்துகிறான்.(11) அவனது துருப்புகள் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டு, அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, அவனது அழிவுக்காகவே நிச்சயம் போரிட வருவான்" என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12)
"ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரரின் மகன்களில் கிட்டத்தட்ட அனைவரும் பீமரால் கொல்லப்பட்டுவிட்டனர். இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் எஞ்சியிருக்கின்றனர். எனினும், ஓ! கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ! கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ! கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ! ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, துரியோதனனின் எஞ்சிய படையாக இருக்கின்றன. உண்மையில் இவ்வுலகத்தில் எவராலும் மரணத்தில் இருந்து தப்பிக்க இயலாது.(17)
"ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரரின் மகன்களில் கிட்டத்தட்ட அனைவரும் பீமரால் கொல்லப்பட்டுவிட்டனர். இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் எஞ்சியிருக்கின்றனர். எனினும், ஓ! கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ! கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ! கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ! ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, துரியோதனனின் எஞ்சிய படையாக இருக்கின்றன. உண்மையில் இவ்வுலகத்தில் எவராலும் மரணத்தில் இருந்து தப்பிக்க இயலாது.(17)
இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் துரியோதனன் உயிரோடிருப்பதைப் பார். எனினும், மன்னன் யுதிஷ்டிரர் இன்று தன் எதிரிகள் அனைவரிடம் இருந்தும் விடுபடுவார். எதிரிகளில் எவரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.(18) மனிதர்களைவிடவும் சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பினும், போர்க்களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடாமலிருந்தால், போர் எவ்வளவு மூர்க்கமாக நடைபெற்றாலும் நான் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(19) இன்றைய போரில் கோபத்தால் நிறையும் நான், என் கூரிய கணைகளால் காந்தார இளவரசனைக் {சகுனியைக்} கொல்வதன் மூலமாக, நீண்ட காலமாக அவதிப்பட்டு வரும் மன்னருடைய {யுதிஷ்டிரருடைய} தூக்கமற்ற நிலையை விலக்குவேன்.(20) சபையில் நடந்த சூதாட்டத்தில் தீய நடத்தை மூலமாக எங்களிடம் இருந்து சுபலனின் மகன் {சகுனி} வென்ற விலைமதிப்புமிக்க அனைத்துப் பொருட்களையும் மீண்டும் நான் வென்றெடுப்பேன்.(21) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திலிருக்கும் {ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்} பெண்கள் அனைவரும், பாண்டவர்களின் கரங்களால் தங்கள் கணவர்கள், மகன்கள் ஆகியோர் போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு உரக்க ஓலமிடப் போகின்றனர்.(22)
ஓ! கிருஷ்ணா, இன்று நமது பணி முடிவை அடையும். இன்று துரியோதனன் சுடர்மிக்கத் தன் செழிப்பனைத்தையும், தன் உயிர் மூச்சையும் கூட விட்டுவிடுவான்.(23) ஓ! விருஷ்ணி குலத்தோனே, இன்று என்னால் தொடுக்கப்படும் போரில் இருந்து அவன் தப்பி ஓடவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, திருதராஷ்டிரரின் மூட மகன் {துரியோதனன்} இறந்துவிட்டதாகவே கருதிக் கொள்வாயாக.(24) அந்தக் குதிரைகள், என் வில்லின் நாணொலியையும், உன் உள்ளங்கையொலியையும் தாங்கிக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, அவற்றை நான் கொல்லும் வகையில், நீ அங்கே செல்வாயாக" {என்றான் அர்ஜுனன்}.(25)
பெரும் மனோவலிமை கொண்ட அந்தப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படைப்பிரிவை நோக்கித் தன் குதிரைகளைத் தூண்டினான்.(26) (துரியோதனன் இருந்த) அந்தப் படையைக் கண்டு, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் சகாதேவன் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அதைத் தாக்குவதற்காகத் தங்களை ஆயத்தம் செய்து கொண்டு, துரியோதனனைக் கொலும் விருப்பத்தால் உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே அதை {அந்தப் படையை} எதிர்த்து ஒன்றாக விரைந்து சென்றனர்.(27) உயர்த்திய விற்களுடன் ஒன்றாகச் சேர்ந்து விரைந்து வரும் அம்மூன்று போர்வீரர்களையும் கண்ட சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளான பாண்டவர்களை எதிர்த்து அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(28) உமது மகன் சுதர்சனன் பீமசேனனை எதிர்த்து விரைந்து சென்றான். சுசர்மனும், சகுனியும் கிரீடியுடன் {அர்ஜுனனுடன்} மோதினார்கள். குதிரையின் முதுகில் இருந்து உமது மகன் துரியோதனன் சகாதேவனை எதிர்த்துச் சென்றான்.(29)
அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கவனத்துடனும், பெரும் வேகத்துடனும், பலத்துடனும், ஒரு வேலால் சகாதேவனின் தலையைத் தாக்கினான்.(30) உமது மகனால் இவ்வாறு தாக்கப்பட்ட சகாதேவன், அங்கமெங்கும் குருதியால் குளித்து, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(31) பிறகு, தன் உணர்வுகள் மீண்ட சகாதேவன், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, கூரிய கணைகளால் துரியோதனனை மறைத்தான்.(32) பார்த்தன் என்றும் வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, குதிரைமுதுகுகளில் இருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலரின் தலைகளை வெட்டினான்.(33) உண்மையில் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கூரிய கணைகள் பலவற்றால் அந்த (குதிரைப்) படையை அழித்தான். குதிரைகள் அனைத்தையும் வீழ்த்திய அவன், அடுத்ததாக, திரிகர்த்தர்களின் தேர்களை எதிர்த்துச் சென்றான்.(34) இதன் காரணமாக ஒன்று சேர்ந்த திரிகர்த்தர்களில் பெரும் தேர்வீரர்கள், கணைமாரிகளால் அர்ஜுனனையும், வாசுதேவனையும் மறைத்தனர்.(35)
பெரும்புகழைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} சத்தியகர்மனைத் தாக்கி, தன் எதிராளியுடைய தேரின் ஏர்க்கால்களையும் அறுத்தான்.(36) அந்தக் கொண்டாடப்பட்ட வீரன் சிரித்துக் கொண்டே, ஓ! தலைவா, பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிராளியின் {சத்தியகர்மனின்} தலையை மற்றொரு கத்தித் தலைக் கணையால் அறுத்தான்.(37) அடுத்ததாக அவன், போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பசித்திருந்த சிங்கமொன்று காட்டில் ஒரு மானைத் தாக்குவதைப் போலச் சத்யேஷுவைத் தாக்கினான்.(38) அவனைக் கொன்ற பார்த்தன், மூன்று கணைகளால் சுசர்மனையும் துளைத்து, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் கொன்றான்.(39) பிறகு அவன், வெகுகாலம் பேணிக் காக்கப்பட்ட கோபமெனும் கடும் நஞ்சைக் கக்கியபடியே பிரஸ்தலத்தின் ஆட்சியாளனான சுசர்மனை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(40)
ஓ! பாரதக் குலத்தின் காளையே, முதலில் ஒரு நூறு கணைகளால் அவனை மறைத்த அர்ஜுனன், பிறகு அந்த வில்லாளியின் குதிரைகள் அனைத்தையும் கொன்றான்.(41) பிறகு, தனது வில்லின் நாண்கயிற்றில், யமதண்டத்திற்கு ஒப்பான வலிமைமிக்கக் கணையொன்றைப் பொருத்திய பார்த்தன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே சுசர்மனைக் குறி பார்த்து அவன் மீது வேகமாக அதைத் தொடுத்தான்.(42) கோபத்தால் சுடர்விட்ட அந்த வில்லாளியால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, சுசர்மனை அடைந்து, அந்தப் போரில் அவனது இதயத்தைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலும், உமது போர்வீரர்கள் அனைவரையும் துன்புறச் செய்யும் வகையிலும் அந்தச் சுசர்மன் உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(44) அந்தப் போரில் சுசர்மனைக் கொன்ற பார்த்தன், பிறகு பெரும் தேர்வீரர்களான, அந்த மன்னனின் {சுசர்மனின்} முப்பத்தைந்து {35} மகன்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(45) சுசர்மனின் தொண்டர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், எஞ்சியிருக்கும் பாரதப் படையை எதிர்த்துச் சென்றான்.(46)
அந்தப் போரில் சினத்தால் நிறைந்த பீமன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சிரித்துக் கொண்டே உமது மகனான சுதர்சனனைக் காணமுடியாதபடி மறைத்தான்.(47) சினத்தால் நிறைந்தவனான அந்தப் பாண்டுவின் மகன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} தன் எதிராளியின் {சுதர்சனனின்} தலையைக் கொய்தான்[1].(48) அந்த (குரு) வீரனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் அவனது {சுதர்சனனின்} தொண்டர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டு கூரிய கணைகளின் மாரியை அவன் மீது ஏவினார்கள்.(49) எனினும் விருகோதரன் {பீமன்}, தன்னைச் சுற்றிலும் மறைத்திருந்த படையை, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட தன் கூரிய கணைகளால் மறைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாவே பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(50)
[1] நமது கணக்கின்படி சுதர்சனனோடு சேர்த்து இதுவரை பீமனால் 97 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு அழிவை அடைந்து கொண்டிருந்தபோது, பெரும் வலிமை கொண்ட கௌரவ வீரர்கள் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனை அணுகி அவனோடு போரிடத் தொடங்கினர்.(51) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் மறைத்தான். அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, உமது வீரர்களும் அனைத்துப்பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களை மறைத்தனர்.(52) அப்போது இரு தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டபடியே மிகவும் கலக்கமடைந்தனர்.(53) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரு படைகளின் போராளிகளும், ஓ! மன்னா, (இறந்து போன) தங்கள் உறவினர்களுக்காக உரத்த ஓலமிட்டபடியே கீழே விழத் தொடங்கினர்" {என்றான் சஞ்சயன்}.(54)
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 54
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 54
ஆங்கிலத்தில் | In English |