Duryodhana entered the depths of a lake! | Shalya-Parva-Section-29 | Mahabharata In Tamil
(ஹிரதப் பிரவேச பர்வம்[*] - 1)
பதிவின் சுருக்கம் : தன் படையைத் தூண்டிய துரியோதனன்; எஞ்சியிருந்த கௌரவர்களை அழித்த பாண்டவர்கள்; பாண்டவர்களிடம் எஞ்சியிருந்த துருப்புகளின் எண்ணிக்கை; சஞ்சயனைக் கொல்ல எத்தனித்த சாத்யகி; சாத்யகியைத் தடுத்த வியாசர்; துரியோதனனைக் கண்ட சஞ்சயன்; தடாகத்தில் நுழைந்த துரியோதனன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைச் சந்தித்த சஞ்சயன்; கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவைக்கேட்டு முகாமில் இருந்த அரசகுடும்பத்து மகளிர் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் சென்ற யுயுத்சு; விதுரனைச் சந்தித்த யுயுத்சு; யுயுத்சுவின் அமைதியின்மை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி, சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள் சினத்தால் நிறைந்தனர். அந்தப் பயங்கரப் போரில் அவர்கள், தங்கள் உயிர்களையும் விட ஆயத்தமாகி, பாண்டவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.(1) சகாதேவனின் வெற்றிக்குத் துணை சேர்க்க விரும்பிய அர்ஜுனனும், பெரும் சக்தி கொண்ட பீமசேனனும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பாக அந்தப் போர்வீரர்களை வரவேற்க {எதிர்க்கத்} தொடங்கினர்.(2) தனஞ்சயன் {அர்ஜுனன்}, சகாதேவனைக் கொல்ல விரும்பியவர்களும், ஈட்டிகள், வாள்கள் வேல்கள் ஆகியவற்றைத் தரித்திருந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் கலங்கடித்தான்.(3) அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, கையில் ஆயுதங்களுடன் விரைந்து வந்த அந்தப் போராளிகளின் குதிரைகளையும், கரங்களையும், சிரங்களையும் தன் அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டி வீழ்த்தினான்.(4) பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களின் குதிரைகள் சவ்யசச்சினால்{அர்ஜுனனால்} தாக்கப்பட்டுப் பூமியில் விழுந்து தங்கள் உயிரை விட்டன.(5)
[*] சம்ஸ்க்ருதத்தில் ஹ்ரதம் என்றால் பெரிய நீர்நிலை என்ற பொருளாம். எனவே, தடாகநுழைவு என்று இந்த உபபர்வத்திற்குப் பொருள் கொள்ளலாம்.
தன் துருப்புகளின் பேரழிவைக் கண்ட மன்னன் துரியோதனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்தவனானான். இன்னும் பல நூறுகளாக இருந்த அவனது எஞ்சிய தேர்களையும்,(6) மேலும் தன் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்களையும் ஒன்றாகத் திரட்டிய உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(7) "நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரோடும், தன் துருப்புகளுடன் கூடிய பாஞ்சால இளவரசனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} மோதி வேகமாக அவர்களைக் கொன்றுவிட்டுப் போரில் இருந்து திரும்புவீராக" என்றான்.(8) அவனது ஆணையை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், உமது மகனுடைய ஆணையின் பேரில் அந்தப் போரில் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் சென்றனர்.(9) எனினும், பாண்டவர்கள், கௌரவப்படையில் எஞ்சியிருப்பவர்களும், அந்தப் பயங்கரப் போரில் தங்களை எதிர்த்து இவ்வாறு வேகமாக விரைந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களை, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் மறைத்தனர்.(10)
போரிட வந்த அந்தப் படையினர், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, ஒரு பாதுகாவலனை அடையத் தவறியவர்களாக, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஒரு கணத்தில் அழிக்கப்பட்டனர்.(11) அந்தப் படையால் எழுப்பப்பட்ட புழுதியுடன், (கௌரவக்) குதிரைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததன் விளைவால், முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை.(12) பாண்டவ வியூகத்தில் இருந்து வெளியே வந்த பல போர்வீரர்கள், ஓ! பாரதரே, அந்தப் போரில் ஒரு கணத்தில் உமது துருப்பினரைக் கொன்றனர்.(13) ஓ! பாரதரே, உமது மகனால் {துரியோதனனால்} பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகள் திரட்டப்பட்டிருந்தன. ஓ! தலைவா, அவையனைத்தும் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்பட்டன.(14) உமது தரப்பைச் சேர்ந்த பல்லாயிரம் உயர் ஆன்ம மன்னர்களில், ஓ! ஏகாதிபதி, இப்போது துரியோதனன் மட்டுமே அதிகக் காயங்களுடன் உயிரோடு காணப்பட்டான்.(15)
துரியோதனன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் சுழலவிட்டு, பூமி வெறுமையாக இருப்பதையும், துருப்புகள் அனைத்தையும் தான் இழந்து நிற்பதையும், அதே வேளையில், பாண்டவர்கள் தங்கள் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியதன் விளைவால் உரக்க முழங்கிக் கொண்டு அந்தப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும் கண்டு, ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஏவப்பட்ட கணைகளின் விஸ் ஒலிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திகைத்து நின்றான். துருப்புகளையும், விலங்குகளையும் இழந்த அவன், தன் இதயத்தைக் களத்தில் இருந்து பின்வாங்குவதில் நிலைநிறுத்தினான்" {என்றான் சஞ்சயன்}.(16-18)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "என் துருப்புகள் கொல்லப்பட்டு, நமது முகாம் முற்றிலும் வெறுமையானபோது, ஓ! சூதா {சஞ்சயா}, பாண்டவர்களிடம் எஞ்சியிருந்து துருப்புகளின் பலம் என்ன? நான் இஃதை அறிய விரும்புகிறேன். எனவே, ஓ! சஞ்சயா, (உரைப்பதில்) திறன்மிக்கவனான நீ எனக்கு அதைச் சொல்வாயாக.(19) மேலும், ஓ! சஞ்சயா, பூமியின் தலைவனும், பலரில் எஞ்சியிருக்கும் ஒரே ஒருவனும், எனது மகனுமான அந்தத் தீயத் துரியோதனன், தன் படை அழிக்கப்பட்டபோது என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(20)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களின் வலிமைமிக்கப் படையில் எஞ்சியிருந்தது இரண்டாயிரம் {2000} தேர்களும், எழுநூறு {700} யானைகளும், ஐயாயிரம் {5000} குதிரைகளும், பத்தாயிரம் {10,000} காலாட்படை வீரர்களும் ஆகும். திருஷ்டத்யும்னன், இந்தப் படையைக் கவனித்துக் கொண்டு, அந்தப் போரில் காத்திருந்தான்.(21,22) அதேவேளையில், ஓ! பாரதர்களின் தலைவரே, தேர்வீரர்களில் முதன்மையானவனான மன்னன் துரியோதனனோ, எந்தவொரு போர்வீரனையும் தன் தரப்பில் காணவில்லை.(23) பூமியின் தலைவனான அந்தத் துரியோதனன், ஓ! ஏகாதிபதி, தன் எதிரிகள் உரக்க முழங்குவதையும, தன் படையின் அழிவையும் கண்டு, எந்தத் துணைவனும் இல்லாதவனாக, கொல்லப்பட்ட தன் குதிரையைக் கைவிட்டுவிட்டு, களத்தைவிட்டுக் கிழக்குத் திசையை நோக்கித் தப்பி ஓடினான்.(24) பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் துரியோதனன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஒரு தடாகத்தை நோக்கி காலாளாகத் தப்பி ஓடினான்.(25)
காலாளாக அதிகத் தொலைவைக் கடப்பதற்கு முன், அம்மன்னன் {துரியோதனன்}, புத்திசாலியும், அறவோனுமான விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(26) ’பெரும் ஞானம் கொண்டவரான விதுரர், க்ஷத்திரியர்களுக்கும், நமக்கும் போரில் ஏற்படப்போகும் இந்தப் பேரழிவை முன்னறிந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை’(27) என்று நினைத்தவாறே, தன் படையின் அழிவைக் கண்டு துயரில் இதயம் எரிந்து கொண்டிருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, அத்தடாகத்தின் ஆழங்களுக்குள் ஊடுருவ விரும்பினான்.(28)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்கள், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, (எஞ்சியிருக்கும் மிகச்சிறிய) உமது படையை எதிர்த்து விரைந்தனர்.(29) தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் காண்டீவத்தைக் கொண்டு, ஈட்டிகள், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு உரத்து முழங்கிக் கொண்டிருந்த (கௌரவத்) துருப்புகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.(30) தன் கூரிய கணைகளால் அந்தத் துருப்புகளையும், அதன் கூட்டாளிகளையும், சொந்தங்களையும் கொன்ற அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் தேரில் நின்று கொண்டிருந்தபோது, மிக அழகானவனாகத் தெரிந்தான்.(31) குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சுபலனின் மகனும் {சகுனியும்} வீழ்ந்த பிறகு, உமது படையானது, (காற்றால்) வீழ்த்தப்பட்ட பெரும் காட்டைப் போலத் தெரிந்தது.(32) லட்சக்கணக்கான போர்வீரர்கள் இருந்த அந்தத் துரியோதனனின் படையில், துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், கௌதமரின் மகனான கிருபர் மற்றும் பூமியின் தலைவனான உமது மகன் {துரியோதனன்} ஆகியோரைத் தவிர மற்றொரு பெருந்தேர்வீரன் எவனையும் உயிரோடு காண முடியவில்லை.(34)
{சஞ்சயனான} என்னைக் கண்ட திருஷ்டத்யும்னன், சாத்யகியிடம் சிரித்துக் கொண்டே, "இவனைப் பிடித்து வைப்பதால் யாது பயன்? இவனை உயிரோடு வைத்திருப்பதால் எவ்வொன்றையும் ஈட்ட முடியாது" என்றான்.(35) திருஷ்டத்யும்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் தேர்வீரனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய வாளை உயர்த்திக் கொண்டு, என்னைக் கொல்ல ஆயத்தமானான்.(36) சரியாக அதே நேரத்தில், பெரும் ஞானியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் (கருப்பு நிறம் கொண்ட வியாசர்), அங்கே வந்து "சஞ்சயன் உயிரோடு செல்லட்டும். எவ்வகையிலும் அவன் கொல்லப்படக்கூடாது" என்றார்.(37) அந்தத் தீவில் பிறந்தவரின் {துவைபாயனரின்} வார்த்தைகளைக் கேட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, என்னை விடுவித்துவிட்டு, "ஓ! சஞ்சயா, உனக்கு அமைதியுண்டாகட்டும், நீ எங்கும் செல்லலாம்" என்றான்.(38) அவனால் அனுமதிக்கப்பட்ட நான், என் கவசத்தைக் கழற்றிவிட்டு, என் ஆயுதங்களையும் கைவிட்டுவிட்டு, குருதியில் குளித்திருந்த என் அங்கங்களுடன், நகரத்தை நோக்கிச் செல்லும் சாலையில் மாலைவேளையில் புறப்பட்டேன்.(39)
இரண்டு மைல்கள் {ஒரு குரோசம்} தொலைவுக்கு வந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, கையில் கதாயுதத்துடனும், அதிகமாகச் சிதைக்கப்பட்ட உடலுடனும் தனியொருவனாக நிற்கும் துரியோதனனை நான் கண்டேன்.(40) அவனது கண்கள், கண்ணீரால் நிரம்பியிருந்ததால், அவனால் என்னைப் பார்க்க முடியவில்லை. நான் அவன் முன்னிலையில் உற்சாகமற்றவனாக நின்றிருந்தேன். அவனும் அதேபோலவே என்னை {இன்னாரென} அறிந்து கொள்ளாமலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.(41) களத்தில் தனியொருவனாக நின்று துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அவனைக் கண்டு, கவலையில் மூழ்கிய என்னால், சிறிது நேரத்திற்கு ஒரே ஒரு வார்த்தையைக் கூடப் பேச முடியவில்லை.(42) பிறகு, கைப்பற்றப்பட்டு, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நான் விடுவிக்கப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் சொன்னேன்.(43) ஒரு கணம் சிந்தித்த அவன் {துரியோதனன்}, தன் உணர்வுகள் மீண்டதும், அவனது சகோதரர்கள் மற்றும் அவனது துருப்புகளைக் குறித்து என்னிடம் விசாரித்தான்.(44) என் கண்களால் அனைத்தையும் நான் கண்டிருந்ததால், அவனது தம்பிமார் அனைவரும் கொல்லப்பட்டது, அவனது துருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டது என அனைத்தையும் அவனுக்குச் சொன்னேன்.(45) (பாண்டவர்கள் இருந்த இடத்தில் இருந்து) நான் புறப்பட்டபோது, துவைபாயனர் {வியாசர்} என்னிடம் சொன்னது போலவே, அந்நேரத்தில் எங்களில் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக மன்னனிடம் நான் சொன்னேன்.(46)
ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியே, மீண்டும் மீண்டும் என்னைப் பார்த்த உமது மகன் {துரியோதனன்}, தன் கரத்தால் என்னைத் தீண்டி,(47) "ஓ! சஞ்சயா, இந்தப் போரில் ஈடுபட்டவர்களில், உன்னைத் தவிர வேறு எவரும் உயிரோடில்லை. உயிரோடிருக்கும் தங்கள் கூட்டாளிகளுடன் பாண்டவர்கள் இருக்கையில், (என் தரப்பில்) நான் ஒருவனையும் {உயிரோடு} காணவில்லை.(48) தலைவரான குருட்டு மன்னர் திருதராஷ்டிரரிடம், அவரது மகன் துரியோதனன், தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்துவிட்டதாகச் சொல்வாயாக.(49) நண்பர்கள், மகன்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்து, பாண்டவர்களால் தன் நாடு எடுத்துக் கொள்ளப்பட்டதையும் கண்டு, உயிரோடு வாழ விரும்புவதற்கு என்னைப் போன்ற எவன் இருக்கிறான்?(50) இவை அனைத்தையும் மன்னரிடம் சொல்லிவிட்டு, அந்தப் பயங்கரப் போரில் இருந்து நான் உயிரோடு தப்பியதையும், அதிகமாகக் காயமடைந்திருந்தாலும், இந்தத் தடாகத்தின் ஆழங்களுக்குள் உயிரோடு ஓய்ந்திருக்கப் போகிறேன் என்பதையும் அவருக்குச் சொல்வாயாக" என்றான்.(51)
இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் அந்தத் தடாகத்திற்குள் நுழைந்தான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்}, தன் மாய சக்தியைக் கொண்டு, அத்தடாகத்தின் நீரைக் கட்டி, அதற்குள் தனக்கென ஓர் இடைவெளியை உண்டாக்கிக் கொண்டான்.(52) அந்தத் தடாகத்திற்குள் அவன் நுழைந்த பிறகு, என் தரப்பில் எவரும் இல்லாத நான், (எங்கள் படையைச் சேர்ந்த) அந்த மூன்று தேர்வீரர்களும், களைத்துப் போன தங்கள் விலங்குகளுடன் ஒன்றாக வருவதைக் கண்டேன்.(53) சரத்வான் மகனான கிருபர், தேர்வீரர்களில் முதன்மையானவனான வீர அஸ்வத்தாமன், போஜர் குலத்தின் கிருதவர்மன் ஆகியோரே அவர்கள். கணைகளால் சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தனர்.(54)
என்னைக் கண்ட அவர்கள் அனைவரும், தங்கள் குதிரைகளை வேகமாகத் தூண்டி என்னிடம் வந்து, "ஓ! சஞ்சயா, நற்பேறாலேயே நீ இன்னும் வாழ்கிறாய்" என்றனர்.(55) பிறகு அவர்கள் அனைவரும் மனிதர்களின் ஆட்சியாளனான உமது மகனை {துரியோதனனைக்} குறித்து விசாரிக்கும் வகையில், "ஓ! சஞ்சயா, நமது மன்னன் துரியோதனன் உயிருடன் இருக்கிறானா?" என்று கேட்டனர்.(56) மன்னனின் உடல்நலம் நன்றாக இருப்பதை நான் அவர்களுக்குச் சொன்னேன். மேலும், துரியோதனன் என்னிடம் சொன்ன அனைத்தையும் அவர்களிடம் சொன்னேன். துரியோதனன் நுழைந்த தடாகத்தையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன்.(57) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், அந்தப் பரந்தத் தடாகத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, "ஐயோ, ஐயோ, நாங்கள் உயிரோடிருப்பதை மன்னன் அறிந்தானில்லை. அவனுடன் நாங்களும் இருந்தால், நம் எதிரிகளுடன் போரிடும் வல்லமை இன்னும் நமக்கிருக்கிறது" என்று சொல்லித் துயரத்தால் புலம்பத் தொடங்கினான்.(59) நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகன்களைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.(60) நமது எஞ்சிய படையைச் சேர்ந்தவர்களான அந்த மூன்று தேர்வீரர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிருபரின் தேரில் என்னை ஏற்றிக் கொண்டு, குரு முகாமுக்குச் சென்றனர்.(61)
சூரியன் சற்று முன்பே மறைந்தான். முகாமின் புறக்காவலில் இருந்த துருப்பினர், உமது மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டதை அறிந்து உரக்க அழுதனர்.(62) பிறகு, ஓ! ஏகாதிபதி, அரசகுடும்பத்தின் மகளிரைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த முதிர்ந்த மனிதர்கள், அந்த இளவரசிகளை அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிச் சென்றனர்.(63) மொத்த படையின் அழிவையும் கேட்டு அழுது கொண்டிருந்த மங்கையர், மேலும் உரக்க ஓலமிட்டு அழுதனர்.(64) ஓ! மன்னா, இடையறாமல் அழுதுகொண்டிருந்த பெண்கள், பெண் அன்றில்கூட்டங்களைப் போலத் தங்கள் குரல்களைப் பூமியில் எதிரொலித்தனர்.(65) அவர்கள் தங்கள் நகங்களால் தங்கள் உடல்களைக் கிழித்துக் கொண்டும், தங்கள் கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொண்டும், தங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொண்டும் உரக்க அழுது கொண்டே இருந்தனர்.(66) "ஓ!" மற்றும் "ஐயோ!" என்ற ஒலிகளால் காற்றை நிறைத்து, தங்கள் மார்புகளை அடித்துக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உரக்க அழுது கதறினர்.(67)
அப்போது, ஆழமாகப் பீடித்திருந்தவர்களான துரியோதனனின் நண்பர்கள் {அமைச்சர்கள்}, தங்கள் கண்ணீரால் குரலற்றவர்களாகி, அரசகுல மங்கையரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.(68) முகாமின் காவலர்கள், விலைமதிப்பு மிக்க விரிப்புகளால் மூடப்பட்ட பல வெண் படுக்கைகளை எடுத்துக் கொண்டு, நகரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(69) வேறு சிலர், பெண்கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட தேர்களில் தங்கள் மனைவியரை அமர்த்திக்கொண்டு, நகரத்தை நோக்கிச் சென்றனர். வீடுகளில் இருக்கும்போது சூரியனாலும் காணப்படாத அந்த மங்கையர், ஓ! ஏகாதிபதி, இப்போது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்பட்டனர்.(71) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மிக மென்மையானவர்களாக இருந்த அந்தப் பெண்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களையும், உறவினர்களையும் இழந்து, இப்போது நகரத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.(72) மாட்டிடையர்களும், ஆட்டிடையர்களும், பொதுமக்களும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் பீதியால் நிறைந்து, நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(73) இவர்களும் கூடப் பார்த்தர்களிடம் கொண்டிருந்த பேரச்சத்தால் நிறைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(74)
அச்ச சூழ்நிலையில் அவர்கள் தப்பி ஓடும்போது, துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தவனான யுயுத்சு, வந்திருக்கும் ஆபத்துக் காலத்தில் செய்யப்பட வேண்டியது என்ன என்பது குறித்துச் சிந்தித்தான்.(75) "பயங்கர ஆற்றலைக் கொண்ட பாண்டவர்களால் போரில் துரியோதனன் வெல்லப்பட்டான். அவன் தன்னிடம் பதினோரு அக்ஷௌஹிணிகளைக் கொண்டிருந்தான். அவனது சகோதரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(76) பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். விதியின் ஆதிக்கத்தால் நான் மட்டுமே காக்கப்பட்டிருக்கிறேன்.(77) குரு முகாமிலிருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். ஐயோ, சக்தியை இழந்து, பாதுகாவலர்களையும் இழந்து அவர்கள், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றனர்.(78) இத்தகு காட்சியை இதற்கு முன்பு ஒருபோதும் கண்டதில்லை. கவலையால் பீடிக்கப்பட்டுள்ள அவர்கள், அஞ்சும் கண்களுடன், மான் கூட்டங்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகிறார்கள்.(79) துரியோதனனின் ஆலோசகர்களில் {அமைச்சர்களில்} உயிரோடிருப்பவர்கள், அரச குடும்பத்தின் மகளிரைக் கூட்டிக் கொண்டு நகரத்தை நோக்கித் தப்பி ஓடுகின்றனர்.(80) ஓ! தலைவா[1], யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு நானும் அவர்களுடன் நகரத்தில் நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்" என்று நினைத்தான் {யுயுத்சு}. இக்காரணத்திற்காகவே அந்த வலிய கரங்களைக் கொண்ட இளவரசன் {யுயுத்சு}, அந்த வீரர்கள் இருவரிடமும் {யுதிஷ்டிரன் மற்றும் கிருஷ்ணனிடம்} சென்று, தன் நோக்கத்தை வெளிப்படுத்தினான்.(81)
[1] இங்கே யுயுத்சு தன்னைத் தானே "ஓ தலைவா" {அ} "ஓ பிரபுவே" என்று அழைத்துக்கொள்கிறான்.
எப்போதும் கருணை கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் மிகவும் மனநிறைவு கொண்டான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, வைசியத் தாய்க்குப் பிறந்த அந்தப் பிள்ளையை {யுயுத்சுவைத்} தழுவி கொண்டு, பாசத்துடன் அவனை அனுப்பிவைத்தான்.(82) தன் தேரைச் செலுத்திய அவன் {யுயுத்சு}, தன் குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டினான். பிறகு அவன் {யுயுத்சு}, அரச குடும்பத்தின் மகளிர் நகரத்துக்குச் செல்வதை மேற்பார்வையிட்டான்.(83) சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அந்தப் பெண்களுடன் சேர்ந்து, கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் தடைபட்ட குரலுடனும் யுயுத்சுவும் ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான்.(84)
அப்போது அவன் {யுயுத்சு} பெரும் ஞானியான விதுரன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். பெரும் சோகத்தால் இதயம் பீடிக்கப்பட்டதால், அவன் திருதராஷ்டிரனிடம் இருந்து அகன்று வந்திருந்தான்.(85) அவன் {யுயுத்சு}, விதுரனை வணங்கிவிட்டு, அவனது முன்னிலையில் நின்றான். உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன் அவனிடம் {யுயுத்சுவிடம்}, "ஓ! மகனே, குருக்களின் அழிவுக்கு மத்தியில் நீ உயிருடன் இருப்பது நற்பேறாலேயே.(86) எனினும், நீ துரியோதனனை உடன் அழைத்து வராதது ஏன்? இதன் காரணத்தை எனக்கு விரிவாகச் சொல்வாயாக" என்று கேட்டான்.(87)
அப்போது யுயுத்சு {விதுரனிடம்}, "ஓ! ஐயா, சகுனியும், அவரது உறவினர்களும், நண்பர்களும் வீழ்ந்த பிறகு, மன்னன் துரியோதனன், தான் செலுத்திய குதிரையைக் கைவிட்டுவிட்டு, அச்சத்தால் கிழக்குத் திசையை நோக்கி தப்பி ஓடினான்.(88) மன்னன் தப்பி ஓடிய பிறகு, (கௌரவ) முகாமில் இருந்த மக்கள் அனைவரும், அச்சத்தால் கலக்கமடைந்து நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(89) பிறகு, பெண்களின் பாதுகாவலர்கள், மன்னனுடைய {துரியோதனனின்} மனைவியரையும், அவனது தம்பிகளின் மனைவியரையும் வாகனங்களில் அமர்த்திக் கொண்டு, அச்சத்தால் தப்பி ஓடினர்.(90) இவ்வாறு தப்பி ஓடும் மக்களைப் பாதுகாப்பதற்காகவே, மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, நான் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு வந்தேன்" என்றான் {யுயுத்சு}.(91)
திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகன் {யுயுத்சு} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், அனைத்து நடைமுறைகளையும் அறிந்தவனுமான விதுரன், அந்த நேரத்திற்கு எது முறையானது என்பதை உணர்ந்து, சொல்திறமிக்க யுயுத்சுவைப் பாராட்டினான்.(92) மேலும் அவன் {விதுரன்}, "பாரதர்கள் அனைவருக்கும் நேர்ந்த இந்த அழிவைக் கருத்தில் கொண்டு, நீ முறையாகவே செயல்பட்டிருக்கிறாய். கருணையினால் நீ உனது குலத்தின் கௌரவத்தையும் தக்க வைத்திருக்கிறாய்.(93) சுடர்மிக்க மகிமை கொண்ட சூரியனைக் காணும் உயிரினங்களைப் போல[2], வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பெரும்போரில் இருந்து நீ மீண்டு வந்ததை நாங்கள் காண்பது எங்கள் நற்பேறாலேயே.(94) ஓ! மகனே, முன்னறிதிறனை இழந்தவரும், பேரிடரால் பீடிக்கப்பட்டவரும், விதியால் தாக்கப்பட்டவரும், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், தன் தீய கொள்கையைத் தொடர்வதை நிறுத்த முடியாதவருமான குருட்டு மன்னருக்கு {திருதராஷ்டிரருக்கு}, இப்போது அனைத்து வகையிலும் நீ ஒருவனே ஒரே ஊன்றுகோலாக இருக்கிறாய்.(95) இந்த நாள் இங்கு ஓய்ந்திருப்பாயாக. நாளை நீ யுதிஷ்டிரனிடம் திரும்பலாம்" என்றான் {விதுரன்}.
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "வீரர்களுக்கு அழிவை உண்டு பண்ணின இந்த யுத்தத்தினின்று பாக்கியத்தினால் மிஞ்சி இங்குப் பட்டணத்துக்கு வந்திருக்கிற உன்னை, ஸாகர்கள் மாண்ட பிறகு, மிகுந்திருந்த அம்சுமானைப் பிரஜைகள் பார்த்ததுபோலப் பார்க்கிறோம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.
இவ்வார்த்தைகளைச் சொன்ன விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன்,(96) யுயுத்சுவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, துயரால் பீடிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் கிராமவாசிகள், "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் செய்த கூச்சல்களை எதிரொலித்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்.(97) உற்சாகமற்ற அந்த மாளிகை, அதன் அழகனைத்தையும் இழந்ததாகத் தெரிந்தது; வசதிகளும், மகிழ்ச்சியும் அம்மாளிகையைக் கைவிட்டதாகத் தெரிந்தது. முழுவதும் வெறுமையாக இருந்த அம்மாளிகை முழுமையாகவே சீர்கெட்டிருந்தது. ஏற்கனவே சோகத்தால் நிறைந்திருந்த விதுரனின் துயரம், அக்காட்சியால் இன்னும் அதிகரித்தது.(98) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான விதுரன், நீண்ட பெருமூச்சுகளைவிட்டபடியே, சோகம் நிறைந்த இதயத்துடன் அரண்மனைக்குள் நுழைந்தான்.(99) யுயுத்சுவைப் பொறுத்தவரை, அவன் அந்த இரவைத் தன் வசிப்பிடத்திலேயே கழித்தான். துயரால் பீடிக்கப்பட்டிருந்த அவன் {யுயுத்சு}, துதிகளால் வரவேற்கப்பட்ட போது, எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை. ஒருவரின் கரங்களால் மற்றவர்களுக்கு நேர்ந்த பாரதர்களின் பயங்கர அழிவை நினைத்துக் கொண்டே அவன் காலத்தைக் கடத்தினான்" {என்றான் சஞ்சயன்}.(100)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 100-------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் | In English |