Thighs bored by worm! | Shanti-Parva-Section-03 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிய பரசுராமர்; கர்ணனின் தொடையைத் துளைத்த புழு; குருதியில் நனைந்து விழித்தெழுந்த பரசுராமர்; பரசுராமரின் கோபத்தால் அப்புழு உயிரை விட்டது; புழுவிலிருந்து வெளிப்பட்ட ராட்சசன்; கர்ணனைச் சபித்த பரசுராமர்; தன் நகரத்திற்குத் திரும்பிய கர்ணன்...
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "கர்ணனின் கரவலிமை, (பரசுராமரிடம்) அவன் கொண்டிருந்த அன்பு, தற்கட்டுப்பாடு, தன ஆசானுக்கு அவன் செய்த தொண்டுகள் ஆகியவற்றில் அந்தப் பிருகு குலத்தின் புலி {பரசுராமர்} நிறைவு கொண்டார்.(1) தவநேன்புகளை நோற்றவரான ராமர் {பரசுராமர்}, தவம் நோற்ற தன் சீடனுக்கு உரிய வடிவிலான பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்களுடனும், அதைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களுடனும் உற்சாகமாகப் போதித்தார்.(2) அவ்வாயுதத்தைக் குறித்த அறிவை அடைந்த கர்ணன், பிருகுவின் {பிருகு முனிவரின் வாரிசான பரசுராமரின்} ஓய்வில்லத்தில் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான். அற்புத ஆற்றலைக் கொண்ட அவன் {கர்ணன்}, பெரும் ஆவலுடன் தன்னை அந்த ஆயுத அறிவியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டான்.(3)
ஒரு நாள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ராமர், தம் ஓய்வில்லத்தின் அருகிலேயே கர்ணனுடன் உலவிக் கொண்டிருந்தபோது, தாம் நோற்று வந்த நோன்புகளின் விளைவால் மிகவும் பலவீனமாகத் தம்மை உணர்ந்தார்.(4) களைப்படைந்திருந்த அந்த ஜமதக்னியின் மகன் {ராமர்}, நம்பிக்கையின் விளைவால் அடையப்பட்ட அன்பின் காரணமாகக் கர்ணனின் மடியில் தலை வைத்து நன்றாக உறங்கினார்.(5) அவனது ஆசான் இவ்வாறு அவனுடைய மடியில் (தலைவைத்து) உறங்கிக் கொண்டிருந்தபோது, கடித்தால் பெரும் வலியைத் தரக்கூடியதும், சளி, கொழுப்பு, சதை மற்றும் குருதியை உண்டு வாழக்கூடியதுமான ஒரு பயங்கரமான புழுவானது கர்ணனின் அருகில் வந்தது.(6) குருதி குடிக்கும் அந்தப் புழுவானது, கர்ணனின் தொடையை அணுகி, அதைத் துளைக்கத் தொடங்கியது. (விழித்தெழப் போகும்) தன் ஆசானிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகக் கர்ணன் அந்த விலங்கைத் தூக்கி வீசவோ, கொல்லவோ இல்லை.(7) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புழுவால் தன் அங்கம் துளைக்கப்பட்டாலும், தன் ஆசான் விழித்துவிடப் போகிறார் என்பதால் அது தன் விருப்பப்படிச் செய்யுமாறு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.(8) வலியானது தாங்கிக் கொள்ள முடியாததாக இருப்பினும், வீரக் கர்ணன் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, கொஞ்சமும் நடுங்கிவிடாதவாறும், வலியின் எந்த அடையாளத்தையும வெளிக்காட்டாமலும், பிருகுவின் மகனை {பரசுராமரைத்} தன் மடியில் தொடர்ந்து தாங்கினான்.(9)
இறுதியில், குருதியானது பெரும் சக்தி கொண்ட ராமரின் உடலைத் தீண்டிய போது, விழித்தெழுந்த அவர், அச்சத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(9) "ஐயோ, நான் தூய்மையற்றவனாக்கப்பட்டேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அச்சமனைத்தையும் விட்டு, இக்காரியத்தில் உண்மை என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றார்.(11) அப்போது கர்ணன் புழு கடித்துக் கொண்டிருப்பதை அவருக்குத் தெரிவித்தான். பன்றியின் வடிவத்திற்கு ஒப்பான அந்தப் புழுவை ராமர் கண்டார்.(12) அஃது எட்டு கால்களையும், மிகக்கூரிய பற்களையும் கொண்டிருந்தது. மேலும் அஃது ஊசிகளைப் போன்ற முனை கொண்ட தடித்த மயிரால் மறைக்கப்பட்டிருந்தது. அளர்க்கம் என்ற பெயரால் அழைக்கப்படும் அதன் அங்கங்கள் (அச்சத்தால்) சுருங்கிப் போயிருந்தன.(13) ராமர் {பரசுராமர்} தமது கண்களை அதன் மேல் செலுத்தியதும், அந்தப் புழுவானது தான் உறிஞ்சிய குருதியிலேயே உருகி உயிரைவிட்டது. இவையாவும் ஆச்சரியமானவையாகத் தெரிந்தன.(14) அப்போது, கரிய நிறம் கொண்டவனும், சிவந்த கழுத்தைக் கொண்டவனும், விருப்பப்படி எவ்வடிவையும் ஏற்கவல்லவனும், பயங்கர வடிவத்தைக் கொண்டவனுமான ஒரு ராட்சசன் ஆகாய மேகங்களில் நின்று கொண்டிருந்தான்.(15)
தன் நோக்கம் நிறைவேறிய அந்த ராட்சசன், கூப்பிய கரங்களுடன் ராமரிடம் {பரசுராமரிடம்}, "ஓ! தவசிகளில் சிறந்தவரே, இந்நரகில் இருந்து என்னை நீர் மீட்டீர். எனக்கு நன்மையைச் செய்திருக்கும் உம்மை நான் துதிக்கிறேன், நீர் அருளப்பட்டிருப்பீராக" என்றான்.(17)
பெரும் சக்தியையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்டவரான அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அவனிடம் {ராட்சசனிடம்}, "யார் நீ? ஏன் நீ நரகில் வீழ்ந்தாய்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(18)
அதற்கு அவன் {ராட்சசன் பரசுராமரிடம்}, "முற்காலத்தில் நான், தம்சன் என்ற பெயரைக் கொண்ட பெரும் அசுரனாக இருந்தேன். ஓ! ஐயா, கிருத யுகத்தில்*, நான் பிருகுவின் வயதைக் கொண்டவனாக இருந்தேன்.(19) அந்தத் தவசியின் {பிருகுவின்} அன்புக்குரிய மனைவியை நான் அபகரித்துச் சென்றேன். அவரது {பிருகுவின்} சாபத்தின் மூலமாக நான் புழுவின் வடிவில் கீழே விழுந்தேன்.(20)
கோபங்கொண்ட உமது அந்த மூதாதை {பிருகு}, "ஓ! இழிந்தவனே, சிறு நீர் மற்றும் சளியை உண்டு, நீ நரக வாழ்வை நோற்பாயாக" என்று சொன்னார். நான் அவரிடம் {பிருகுவிடம்}, "ஓ! பிராமணரே, எப்போது எனது சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்?" என்று கேட்டான். அதற்கு அவர் {பிருகு} என்னிடம், "என் குலத்தின் ராமன் {பரசுராமன்} மூலமாக இந்தச் சாபத்திற்கு முடிவேற்படும்" என்றார்.(22) இதன் காரணமாகவே நான், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனைப் போல இத்தகு வாழ்வின் போக்கை அடைந்தேன். ஓ! அறவோரே, எனினும் அந்தப் பாவகரமான வாழ்வில் இருந்து நான் உம்மால் மீட்கப்பட்டு விட்டேன்" என்றான்.(23) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பேரசுரன், ராமருக்குத் தலைவணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.
பிறகு கோபம் நிறைந்தவரான ராமர், அந்தக் கர்ணனிடம்,(24) "ஓ! மூடா, இத்தகு வலியை ஒரு பிராமணனால் தாங்கிக் கொள்ள முடியாது. உன் பொறுமையானது ஒரு க்ஷத்திரியனைப் போல இருக்கிறது. அச்சமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக" என்று கேட்டார்.(25) இவ்வாறு கேட்கப்பட்ட கர்ணன், சாபத்திற்கு அஞ்சியும், அவரை நிறைவு செய்ய வேண்டியும், இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! பிருகு குலத்தவரே, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் கலப்பில் உண்டான குலத்தில் பிறந்த ஒரு சூதனாக என்னை அறிந்து கொள்வீராக.(26) மக்கள் என்னை ராதையின் மகனான கர்ணன் என்றழைக்கிறார்கள். ஓ! பிருகு குலத்தவரே, ஆயுதங்களை அடையும் விருப்பத்துடன் இவ்வாறு செயல்பட்ட அடியேனிடம் நிறைவு கொள்வீராக.(27) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களை அறிந்த ஒரு மதிப்புக்குரிய ஆசான் ஒருவனுக்குத் தந்தையுமாவார் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகவே நான் என்னை உமது குலத்தைச் சேர்ந்தவனாக அறிமுகம் செய்து கொண்டேன்" என்றான்.(28)
அந்த முதன்மையான பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்திருந்தாலும், உற்சாகமற்றவனாக, நடுங்கிக் கொண்டிருப்பவனாகக் கரங்களைக் கூப்பி, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த கர்ணனிடம் புன்னகையுடன் {எரிச்சலுடன்}, "ஓ! இழிந்தவனே, ஆயுதங்கள் மீது கொண்ட பேராசையின் காரணமாக நீ பொய்யுரைத்ததால், இந்தப் பிரம்மாயுதம் உன் நினைவில் தங்காது[1].(30) நீ பிராமணனாக இல்லாததால், உனக்குச் சமமான ஒரு போர்வீரனுடன் நீ போரிட்டுக் கொண்டிருக்கும்போது, மரணம் உன்னை நெருங்கும்வரை இஃது உன்னிடம் தங்காது[2].(31) செல்வாயாக, பொய் நடத்தை கொண்டோருக்கான இடம் இஃதல்ல. இந்தப் பூமியில், உனக்கு இணையான எந்த க்ஷத்திரியனும் இருக்க மாட்டான்" என்றார்.(32)
[1] அஃதாவது, "உள்ளொளியின் மூலம் உனக்குத் தோன்றாது" என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] இதன் பொருளாவது, "இந்த ஆயுதமானது உனது இறுதி கணம் வரையில் உன்னுடன் தங்காது. நீ இதில் திறம்படைத்தவனாக இருப்பினும், உனக்கு மரணம் நெருங்கும்போது, இதை நீ மறப்பாய், அல்லது நீ அழைக்கும்போது இஃது உன்னிடம் தோன்றாது" என்பதாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ராமரால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், முறையாக அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். பிறகு துரியோதனனின் முன்னிலைக்கு வந்த அவன் {கர்ணன்}, "நான் ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிவிட்டேன்" என்று சொன்னான்".(33)
சாந்திபர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 33
யுகம் என்பது காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு பொதுவான அலகு. மொத்தம் 4,32,000 ஆண்டுகள் சேர்ந்தது ஒரு யுகம் என்று அழைக்கப்படும். இந்து புராணங்களின்படி நான்கு வகையான யுகங்கள் இருக்கின்றன. அவை முறையே கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்பனவாம். ஒவ்வொரு யுகமும் வெவ்வேறான கால அளவைக் கொண்டது.
இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார்.
சாந்திபர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 33
கிருத யுகத்தில் *:
கிருதயுகம் , திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்த நான்கு யுகமும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் அல்லது தேவயுகம் எனப்படும்.
பொதுவாக 1 யுகம் : 4,32,000 ஆண்டுகள்
கிருத யுகம் : 4 யுகங்கள் (17,28,000 ஆண்டுகள்)
த்ரேதா யுகம் : 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் : 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம் : 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)
பூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான "கலி"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.
த்ரேதா யுகம் : 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் : 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம் : 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)
பூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான "கலி"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.
கிருதயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான, இந்த ஒரு முழுமையான சுழற்சிக்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 10 யுகங்களின் கால அளவைக்கொண்டதே ஒரு சதுர்யுகம்.
1 சதுர்யுகம் = கிருதயுகம்(4) + த்ரேதாயுகம்(3) + துவாபரயுகம்(2) + கலியுகம்(1) = 10 யுகங்கள்.
1 சதுர்யுகம் = கிருதயுகம்(4) + த்ரேதாயுகம்(3) + துவாபரயுகம்(2) + கலியுகம்(1) = 10 யுகங்கள்.
ஒரு சதுர்யுகத்தின் மொத்த கால அளவை, ஆண்டுகளில் கூறினால் 43,20,000 ஆண்டுகள் வரும். இதைப்போல 72 சுழற்சிகள் நடந்து முடிந்தால் அது ஒரு மனுவந்தரம் என்று அழைக்கப்படும். அதாவது 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவந்தரம். அதேபோல 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். மற்றொரு 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு இரவு. ஆக மொத்தம் 28 மனுவந்தரங்கள் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள்.
1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72 சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14 மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14 மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு
1 பிரம்மா நாள் = (1 கல்பம் + 1 மகா பிரளயம்) = 28 மன்வந்தரங்கள்
1 மன்வந்தரம் = 72 சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14 மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14 மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு
1 பிரம்மா நாள் = (1 கல்பம் + 1 மகா பிரளயம்) = 28 மன்வந்தரங்கள்
இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார்.
ஆங்கிலத்தில் | In English |