The good counsel of Kripa! | Sauptika-Parva-Section-02 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனால் கேட்கப்பட்ட கிருபர், செயலின் வெற்றி தோல்வி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைச் சொல்வது; துரியோதனனின் தீச்செயல்களையும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பேரிடரையும் எடுத்துச் சொல்வது; கிருபர் அஸ்வத்தாமனுக்குச் சொன்ன நல்லாலோசனை...
கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, "ஓ! பலமிக்கவனே {அஸ்வத்தாமா}, நீ சொன்னதனைத்தையும் நாங்கள் கேட்டோம். எனினும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் சிலவற்றையும் கேட்பாயாக.(1) விதி மற்றும் முயற்சி ஆகிய இந்த இரண்டு சக்திகளுக்கும் மனிதர்கள் அனைவரும் கட்டுப்பட்டு, அவற்றால் ஆளப்படுகிறார்கள்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, விதியின் விளைவால் மட்டுமே, அல்லது முயற்சியால் மட்டுமே நமது செயல்பாடுகள் வெற்றியை அடைவதில்லை. அவ்விரண்டின் ஒருங்கிணைப்பிலேயே வெற்றி எழுகிறது.(3) உயர்ந்தவை மற்றும் இழிந்தவை ஆகிய நோக்கங்கள் அனைத்தும் இவ்விரண்டின் ஒருங்கிணைப்பைச் சார்ந்தே இருக்கின்றன. இந்த உலகம் முழுவதிலும், மனிதர்கள் செயல்படுவதும், செயலைத் தவிர்ப்பதும் இவ்விரண்டின் மூலமே நடக்கிறது.(4)
மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களால் என்ன விளைவு உண்டாகிறது? உழப்பட்ட நிலத்தில் பொழிவதால் என்ன விளைவுகள் உண்டாகவில்லை?(5) எங்கே விதி மங்கலமாக இல்லாமல், முயற்சி இருக்கிறதோ, எங்கே விதி மங்கலமாயிருந்தும் முயற்சி இல்லையோ அவ்விரண்டு இடங்களும் கனியற்றவையாகும் {பலனற்றவையாகும்}. (அவ்விரண்டின் ஒருங்கிணைப்பு குறித்து) நான் முன்பே சொன்னதுதான் உண்மை[1].(6) நன்கு உழப்பட்ட மண்ணை மழையானது முறையாக நனைத்தால் வித்துகள் பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன. மனிதவெற்றியானது இவ்வியல்பைக் கொண்டதே.(7) சிலவேளைகளில், விதியானது, நிகழ்வுகளின் வழிகளைத் தீர்மானித்துக் கொண்டு, (முயற்சிக்காகக் காத்திராமல்) தானே செயல்படுகிறது. இவை அனைத்திற்காகவும்தான், ஞானிகள் திறனின் துணை கொண்டு முயற்சியில் {உழைப்பில்} ஈடுபடுகிறார்கள்.(8) ஓ! மனிதர்களில் காளையே, மனித செயல்களின் அனைத்து நோக்கங்களும், இவ்விரண்டின் துணையாலேயே நிறைவேறுகின்றன. இவ்விரண்டின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டே மனிதர்கள் உழைப்பதாகவோ, {உழைப்பைத்} தவிர்ப்பதாகவோ காணப்படுகிறார்கள்.(9) முயற்சியானது செய்யப்படலாம். ஆனால், அம்முயற்சி விதியின் மூலமே வெற்றியை அடைகிறது. விதியின் விளைவாலேயே, முயற்சியை நம்பி ஒருவன், தன்னைச் செயலில் ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியை அடைகிறான்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "தனித்த மனித முயற்சியும், முயற்சியில்லாத தெய்வமும் எல்லா இடத்திலும் பயனற்றனவாகின்றன. அவ்விரண்டில் முந்தின பக்ஷமானது சிறந்தது என்பது நிச்சயம்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
எனினும், முயற்சியானது, தகுந்த மனிதர்களால் செய்யப்பட்டு, நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியின் இசைவின்றிக் கனியை உண்டாக்காமல் போவதும் இவ்வுலகில் காணப்படுகிது.(11) எனவே, மனிதர்களில் சோம்பேறிகளும், அறிவற்றவர்களும்தான் முயற்சியை {உழைப்பை} ஏற்க மறுக்கின்றனர். எனினும், இது ஞானியரின் கருத்தல்ல.(12) செய்யப்பட்ட செயலானது கனியை உண்டாக்காமல் போவது பொதுவாக இவ்வுலகில் காணப்படவில்லை. மேலும், செயலின்மையானது, பெருந்துன்பத்தை உண்டாக்குவதையும் காணமுடிகிறது.(13) எந்த முயற்சியும் செய்யாமல் ஒன்றை அடைபவனும், முயன்ற பிறகு எதையும் அடையாதவனையும் காண முடிவதில்லை.(14) செயலில் எப்போதும் மும்முரமாக இருப்பவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளவல்லவனாவான். மறுபுறம், சோம்பேறியோ ஒருபோதும் மகிழ்வை அடையமாட்டான். மனிதர்களின் இவ்வுலகில், செயலுக்கு அடிமையாக இருப்போர், எப்போதும் நன்மையை ஈட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களாகவே பொதுவாகக் காணப்படுகிறார்கள்[2].(15)
[2] "அப்படிப்பட்ட ஒரு மனிதனை மனக்கசப்போ {மனத்தளர்ச்சியோ}, மானிட வெறுப்போ ஒருபோதும் அணுகாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
செயலில் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவன், தன் நோக்கத்தை அடைவதில் வெற்றி கொண்டாலோ, தன் செயல்களுக்கான கனியை அடையத் தவறினாலோ, எவ்வகையிலும் அவன் நிந்திக்கத்தகுந்தவனாக மாட்டான்.(16) எந்தச் செயலையும் செய்யாமல், செயலின் கனிகளை அனுபவித்துக் கொண்டு, இவ்வுலகில் ஆடம்பரமாகக் காணப்படும் ஒருவன், கேலிக்கும், வெறுப்புக்கும் உள்ளாவது பொதுவாகவே காணப்படுகிறது.(17) செயலைக் குறித்த இவ்விதியை அலட்சியம் செய்யும் ஒருவன், வேறுவகையில் வாழ்வதால், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இதுவே நுண்ணறிவைக் கொண்டோரின் கருத்தாகும்.(18) விதியிருந்தும் கடும் முயற்சியில்லாமை மற்றும் கடும் முயற்சியிருந்தும் விதியில்லாமை ஆகிய இவ்விரண்டு காரணங்களின் விளைவாகவே முயற்சிகள் கனிகளை உண்டாக்குவதில்லை[3].(19) முயற்சியில்லாமல் இவ்வுலகில் எச்செயலும் வெற்றியடையாது. எனினும், தேவர்களை வணங்கி, செயல்பாட்டில் அர்ப்பணிப்பு, திறம் ஆகியவற்றைக் கொண்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் ஒருவன் ஒருபோதும் வீழ்வதில்லை {வெற்றியடையாமல் போவதில்லை}.(20)
[3] கும்பகோணம் பதிப்பில், "தெய்வம் புருஷகாரத்தினாலாவது, புருஷகாரம் தெய்வத்தினாலாவது விடுபட்டிருக்குமேயாகில் இந்த இரண்டு காரணங்களாலும் முயற்சியானது பயனற்றதாகவிடும்" என்றிருக்கிறது.
வெற்றியை விரும்பும் ஒருவன், பெரியோருக்குப் பணிவிடை செய்து, தனக்கு நன்மையானதை வேண்டி, அவர்களது நல்ல ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவனுக்கும் அதே நிலையே ஏற்படுகிறது {அவனும் வெற்றியடையாமல் போவதில்லை}.(21) ஒருவன் முயற்சியில் ஈடுபடும்போது, பெரியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்களின் ஆலோசனைகளை எப்போதும் வேண்டிக் கேட்க வேண்டும். இம்மனிதர்களே பிழையற்ற வழிமுறைகளின் வேர்களாவர், மேலும் வெற்றியானது வழிமுறைகளையே நம்பி இருக்கிறது.(22) பெரியோரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, முயற்சியில் ஈடுபடும் ஒருவன், அம்முயற்சிகளில் இருந்து அபரிமிதமான கனிகளை அறுவடை செய்கிறான்.(23) மதிப்பில்லாமல், (தனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வல்ல) யாரையும் மதிக்காமல் இருக்கும் மனிதன், விருப்பம், கோபம், அச்சம், பேராசை ஆகியவற்றால் உந்தப்பட்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் போது, விரைவாகத் தன் செழிப்பை இழக்கிறான்.(24)
பொருளில் பேராசை கொண்டவனும், முன்னறிதிறமற்றவனுமான துரியோதனன், ஆலோசனைகளை ஏற்காமல், செரிக்க முடியாத திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூடத்தனமான முயற்சியைத் தொடங்கினான்.(25) தனது நலன்விரும்பிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, {அவர்களால்} தடுக்கப்பட்டும், தீயவர்களின் ஆலோசனையை மட்டுமே ஏற்று, நல்ல குணங்கள் அனைத்திலும் தனக்கு மேம்பட்டவர்களான பாண்டவர்களிடம் பகைமை கொண்டான்.(26) தொடக்கத்திலிருந்தே அவன் மிகத் தீயவனாகவே இருந்தான். அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நண்பர்கள் கேட்டுக் கொண்டதை அவன் செய்யவில்லை. அவை அனைத்தின் காரணமாகவே அவன் இப்போது பேரிடருக்கு மத்தியில் துயரில் எரிந்து கொண்டிருக்கிறான்.(27) நம்மைப் பொறுத்தவரை, அந்த இழிந்த பாவியை நாம் பின்பற்றியதால் நம்மையும் இந்தப் பேரிடர் வந்தடைந்தது.(28) இந்தப் பேரிடர் என் அறிவை எரிக்கிறது. சிந்தனையில் மூழ்கினாலும், நமக்கான நன்மையைக் காண்பதில் நான் தவறுகிறேன்.(29)
{மயக்கத்தினால்} திகைப்படைந்திருக்கும் ஒருவன், தன் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். அத்தகு நண்பர்களிலேயே அவன், தன் அறிவையும், பணிவையும், செழிப்பையும் கொண்டிருக்கிறான்.(30) ஒருவனின் செயல்பாடுகள் அவர்களிலேயே வேர்விட்டிருக்க வேண்டும்[4]. நுண்ணறிவுமிக்க நண்பர்கள் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டுத் தங்கள் அறிவைக் கொண்டு தீர்மானித்து அவற்றை {அந்தச் செயல்பாடுகளைச்} செய்ய வேண்டும்.(31) எனவே, திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் உயர் ஆன்ம விதுரனிடம் சென்று நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்போம்.(32) நம்மால் கேட்கப்பட்டதும் அவர்கள் என்ன சொல்வார்களோ, அது நமது நன்மைக்கானதாகவே இருக்கும். அவர்கள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும்.(33) நன்கு முயற்சி செய்தும் செயல்கள் வெற்றிபெறாத மனிதர்கள், விதியால் பீடிக்கப்பட்டவர்களாகவே கருதப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை" என்றார் {கிருபர்}".(34)
[4] "ஒருவன் அவர்கள் சொல்வதைப் போலவே செயல்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சௌப்திக பர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |