Aswatthama's cruel plan! | Sauptika-Parva-Section-03 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : கிருபரை மறைமுகமாக நிந்தித்த அஸ்வத்தாமன்; தன் ஆதங்கத்தைக் கிருதவர்மனிடமும், கிருபரிடமும் சொன்னது; அன்றைய இரவில் தான் செய்யப் போகும் கோரச் செயலை அவ்விருவருக்கும் எடுத்துச் சொன்னது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மங்கலமானவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான கிருபரின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன் கவலையிலும், துயரத்திலும் மூழ்கினான்.(1) சுடர்மிக்க நெருப்பைப் போலத் துயரத்தில் எரிந்த அவன், ஒரு தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் {கிருபர் மற்றும் கிருதவர்மனிடம்},(2) "வெவ்வேறு மனிதர்களிடம் உள்ள அறிவுப்புலம் வெவ்வேறானவையே. எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னறிவில் மகிழ்ச்சி கொள்கிறான்.(3) ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னை அதிக அறிவு கொண்டவனான கருதிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னறிவை மதித்து, அதன்படியே பெரிதாக அதைப் புகழ்ந்து கொள்கிறான்.(4) ஒவ்வொருவரும் தன் ஞானத்தைப் புகழத்தக்க ஒன்றாகக் கருதுகிறான். ஒவ்வொருவனும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிறரின் ஞானத்தைப் பழித்து, தனதை நல்லதாகச் சொல்கிறான்.(5)
பல்வேறு கருத்துகள் இருந்தாலும், ஏதாவது அடையப்படாத நோக்கத்தை ஏற்கும் தீர்மானத்துடன் கூடிய மனிதர்கள், நிறைவை அடைந்து ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள்.(6) மேலும் அதே மனிதர்களின் தீர்மானங்கள், காலத்தின் ஆளுகையால் மாறுபட்டு ஒருவரையொருவர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.(7) மிகவும் குறிப்பாக, மனித அறிவுகளின் பன்முகத்தன்மையின் விளைவால் அறிவு மயக்கமடையும்போது தீர்மானங்கள் வேறுபடுகின்றன[1].(8) ஒரு திறன்மிக்க மருத்துவர், ஒரு நோயை முறையாகக் கண்டறிந்து, அதைக் குணப்படுத்துவதற்காகத் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருந்தைப் பரிந்துரைப்பது போலவே,(9) மனிதர்கள், தங்கள் செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் ஞானத்தின் {அறிவின்} துணையுடன் தங்கள் அறிவைப் {புத்தியைப்} பயன்படுத்துகின்றனர். அவர்கள் செய்வதும் பிறரால் ஏற்கப்படுவதில்லை.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "பெரும்பாலும் மனிதர்களுடைய சித்தங்கள் நிலையற்றிருப்பதனால் அவற்றிற்கு மெலிவுண்டாகவே அந்த அந்தப் புத்தி உண்டாகின்றது" என்றிருக்கிறது.
இளைஞன் ஒருவன், ஒருவகை அறிவைக் கொண்டிருக்கிறான். அவனே நடுவயதை அடையும்போது, அதே அறிவுக்கு இணங்குவதில்லை, முதுமையில் வேறு வகை அறிவே அவனுக்கு ஏற்புடையதாகிறது.(11) ஓ! போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ! போஜர்களின் தலைவா, மரணத்தைத் தரக்கூடிய காரியங்களில் கூட, அவற்றைத் தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகச் செயல்படத் தொடங்குகின்றனர்.(15)
தங்கள் தீர்மானங்களையும், ஞானத்தையும் நம்பும் மனிதர்கள் அனைவரும், பல்வேறு நோக்கங்களை நல்லவையாக அறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.(16) நமக்கு ஏற்பட்ட பேரிடரின் விளைவால் இன்று என் மனத்தை ஆக்கிரமித்த தீர்மானத்தை, என் துயரத்தை அகற்றவல்ல ஒன்றாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் அதைச் சொல்கிறேன்.(17) படைப்பாளன், உயிரினங்களைப் படைத்து அவை ஒவ்வொன்றிற்கும் உரிய தொழிலையும் நிர்ணயித்திருக்கிறான். பல்வேறு வகைகளை {வர்ணங்களைப்} பொறுத்தவரையில், அவன் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான பங்கைக் கொடுத்திருக்கிறான்.(18) பிராமணர்களுக்கு அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான வேதத்தை நிர்ணயித்திருக்கிறான். க்ஷத்திரியர்களுக்கு மேன்மையான சக்தியை நிர்ணயித்திருக்கிறான். வைசியர்களுக்குத் திறனையும், சூத்திரர்களுக்கு மூவகை வர்க்கங்களுக்குத் தொண்டாற்றும் கடமையையும் நிர்ணயித்திருக்கிறான்.(19) எனவே தன்னடக்கம் இல்லாத ஒரு பிராமணன் நிந்திக்கத் தகுந்தவனாவான். சக்தியற்ற க்ஷத்திரியன் இழிந்தவனாவான். திறனற்ற வைசியனும் (வேறு வகையினரிடம்) பணிவில்லாத சூத்திரனும் இகழத்தக்கவர்களாவார்கள்.(20)
போற்றுதலுக்குரிய உயர்ந்த பிராமணர்களின் குடும்பத்தில் நான் பிறந்தேன். எனினும், தீப்பேற்றால் நான் க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவனானேன்.(21) க்ஷத்திரியக் கடமைகளை அறிந்தவனானதால், இப்போது நான் பிராமணர்களின் கடமையைப் பின்பற்றி (இத்தகு தீங்குகளில் தன்னடக்கத்துடன்) உயர்ந்த நோக்கத்தை அடைந்தால், அவ்வழி பெருமைக்குத் தகுந்ததாக இராது.(22) நான் போரில் சிறந்த வில்லையும், சிறந்த ஆயுதங்களையும் தரிக்கிறேன். என் தந்தையின் படுகொலைக்கு நான் பழிதீர்க்கவில்லை என்றால், மனிதர்களுக்கு மத்தியில் என்னால் எவ்வாறு வாயைத் திறக்க முடியும்?(23) எனவே நான், எந்தத் தயக்கமும் இல்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை மதித்து என் உயர் ஆன்மத் தந்தை {துரோணர்} மற்றும் மன்னனின் {துரியோதனனின்} அடிச்சுவட்டில் இன்று நடக்கப் போகிறேன்.(24) வெற்றியால் ஊக்கமடைந்திருக்கும் பாஞ்சாலர்கள், தங்கள் கவசங்களை அகற்றி, தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சியடைந்து, களைப்படைந்தவர்களாக இன்றிரவு நம்பிக்கையுடன் உறங்குவார்கள்.(25)
அவர்கள் இவ்விரவில் தங்கள் முகாமில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, நான் அந்த முகாமில் பயங்கரத் தாக்குதலை நடத்தப் போகிறேன்.(26) தானவர்களைக் கொல்லும் மகவத்தை {இந்திரனைப்} போல நான், தங்கள் முகாமில் உணர்வற்றவர்களாக இறந்தவர்கள் போல உறங்கிக் கொண்டிருக்கும் அவர்களைத் தாக்கி, என் ஆற்றலை வெளிப்படுத்தி அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்.(27) வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தங்கள் தலைவனான திருஷ்டத்யும்னனின் தலைமையில் ஒரே இடத்தில் கூடியிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் கொல்லப் போகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருதவர்மா}, அந்தப் பாஞ்சாலர்களைக் கொன்று நான் மன அமைதியை அடையப் போகிறேன்.(28) அந்தப் படுகொலையில் ஈடுபடும்போது, உயிரினங்களுக்கு மத்தியில் திரியும் பினாகைதாரியான ருத்திரனைப் போல நான் அவர்களுக்கு மத்தியில் திரியப் போகிறேன்.(29) இன்று பாஞ்சாலர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்ற பிறகு, மகிழ்ச்சியுடன் நான் போரில் பாண்டுவின் மகன்களைப் பீடிக்கப் போகிறேன்.(30)
ஒருவர் பின் ஒருவராக அவர்களது உயிர்களை எடுத்து, பாஞ்சாலர்கள் அனைவரின் உடல்களையும் பூமியில் விரவிக் கிடக்கச் செய்து, என் தந்தைக்கு {துரோணருக்கு} நான் பட்டிருக்கும் கடனை அடைக்கப் போகிறேன்.(31) நான் இன்று, துரியோதனன், கர்ணன், பீஷ்மர், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் சென்ற கடினமான பாதையில் பாஞ்சாலர்களைப் பின்தொடரச் செய்யப் போகிறேன்.(32) என் வலிமையை வெளிப்படுத்தி, ஏதாவது ஒரு விலங்கின் தலையைப் போலப் பாஞ்சாலர்களின் மன்னனான திருஷ்டத்யும்னனின் தலையை முறிக்கப் போகிறேன்.(33) ஓ !கோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {கிருபரே}, இன்றிரவு உறக்கத்தில் மூழ்கியிருக்கும் பாஞ்சாலப்படையை நிர்மூலமாக்கி, என் கடமையைச் செய்தவனாக என்னைக் கருதிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடையப் போகிறேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(35)
சௌப்திக பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |