An owl and the crows! | Sauptika-Parva-Section-01 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : ஆலமரத்தினடியில் அமர்ந்த மூவர்; ஆந்தையொன்று காக்கைகள் பலவற்றைக் கொல்வதைக் கண்ட அஸ்வத்தாமன்; கிருபரையும், கிருதவர்மனையும் விழித்தெழச் செய்து ஆலோசனை கேட்ட அஸ்வத்தாமன்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த வீரர்கள் {கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்} ஒன்றாகச் சேர்ந்து தெற்கு திசையை நோக்கிச் சென்றனர். சூரியன் மறையும் நேரத்தில் அவர்கள் (குரு) முகாமின் அருகாமையிலான ஓர் இடத்தை அடைந்தனர்.(1) {பாண்டவர்களைக் குறித்த} அச்சத்தால் மிகவும் பீடிக்கப்பட்ட நிலையில் தங்கள் விலங்குகளை {தங்கள் தேர்களில் இருந்து} விடுவித்தனர். பிறகு ஒரு காட்டை அடைந்து அதற்குள் கமுக்கமாக நுழைந்தனர்.(2) அவர்கள் (குரு) முகாமுக்கு, வெகு தொலைவில் அல்லாமல் அருகிலேயே தங்கினர். பல கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் பாண்டவர்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே சூடான நெடுமூச்சுகளைவிட்டுக் கொண்டிருந்தனர்.(3) பிறகு, வெற்றிபெற்ற பாண்டவர்களின் உரத்த கூச்சலைக் கேட்ட அவர்கள், தாங்கள் பின்தொடரப்படுவோம் என்று அஞ்சி கிழக்கு திசையை நோக்கித் தப்பி ஓடினர்.(4) சிறிது நேரம் சென்றதும், அவர்களது விலங்குகளும் களைத்து, அவர்களும் தாகத்தை அடைந்தனர். கோபத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளிகள், மன்னனின் படுகொலையால் (உண்டான துயரத்தில்) எரிந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். எனினும், அவர்கள் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலத்திற்குப் பேசாமல்} ஓய்வெடுத்தனர்" {என்றான் சஞ்சயன்}.(5)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனான எனது மகனை {துரியோதனனை} வீழ்த்திய பீமனின் அருஞ்செயல் நம்பத்தகாததாக இருக்கிறது.(6) ஆண்மையின் உச்சத்தில் இருந்தவனும், வஜ்ரம் போன்ற உடற்கட்டைக் கொண்டவனுமான அவன், எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாவான். ஐயோ, அப்படிப்பட்ட என் மகனே கூடப் போரில் பாண்டவர்களால் வீழ்த்தப்பட்டானே. ஓ! சஞ்சயா, எனது நூறு {100} மகன்களின் படுகொலையைக் கேட்ட பிறகும் ஆயிரந்துண்டுகளாகப் பிளக்காமல் இருக்கும் என் இதயம் வஜ்ரத்தாலானது என்பதில் ஐயமில்லை. ஐயோ, பிள்ளைகளை இழந்த முதிர்ந்த தம்பதியரான என் நிலையும், என் மனைவியின் {காந்தாரியின்} நிலையும் எவ்வளவும் பரிதாபமாக இருக்கப் போகிறதோ. பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ஆட்சிப்பகுதியில் வசிக்க நான் துணியமாட்டேன்.(7-10)
மன்னனின் தந்தையும், மன்னனுமான என்னால், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} கீழ்ப்படிந்த அடிமையாக[1] என் நாட்களை எவ்வாறு கழிக்க முடியும்?(11) மொத்த பூமியிலும் அதிகாரம் செலுத்தி, அனைவரின் தலைக்கு மேலும் இருந்த நான், ஓ! சஞ்சயா, இப்போது எவ்வாறு இழிந்த நிலையிலான அடிமையாக {பணியாளாக} வாழ முடியும்?(12) ஓ! சஞ்சயா, தனியொருவனாக முழுமையாக என் நூறு மகன்களைக் கொன்றவனான பீமனின் வார்த்தைகளை என்னால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?(13) உயர் ஆன்ம விதுரனின் வார்த்தைகள் என்னால் உணரப்படுகின்றன. ஐயோ, ஓ! சஞ்சயா, அந்த வார்த்தைகளை நான் கேட்கவில்லையே.(14) எனினும், என் மகன் துரியோதனன் நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்தப்பட்ட பிறகு, கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்ன செய்தனர்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அடிமை என்றே இருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், "பணியாள்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "நான் அரசனுக்குப் பிதாவாகவும், நானே அரசனாகவுமிருந்துவிட்டு, எவ்வாறு பாண்டுபுத்திரனுடைய கட்டளைப்படி கிங்கரனாக நடந்து கொள்வேன்?" என்றிருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா, அவர்கள் வெகு தொலைவுக்குச் செல்லும் முன்பே, மரங்களும், செடிகொடிகளும் நிறைந்த அடர்ந்த கானகம் ஒன்றைக் கண்டு நின்றனர்.(16) அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, தாகம் தணிக்கப்பட்ட தங்கள் சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களில் அந்தப் பெரும் காட்டிற்குள் நுழைந்தனர்.(17) அந்தக் காடானது, பல்வேறு வகை விலங்குகளும், பல்வேறு இனப் பறவைகளும் நிறைந்ததாக இருந்தது. பல மரங்களாலும், செடிகொடிகளாலும் மறைக்கப்பட்டிருந்த அஃது, ஊனுண்ணும் எண்ணற்ற உயிரினங்களால் மொய்க்கப்பட்டிருந்தது.(18) பல தடாகங்களால் மறைக்கப்பட்டு, பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, நீலத் தாமரைகள் {கருநெய்தல் மலர்கள்} நிறைந்த பல ஓடைகளைக் கொண்டிருந்தது.(19) அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும் செலுத்து, ஆயிரங்கிளைகளைக் கொண்டிருந்த ஒரு பெரும் ஆலமரத்தைக் கண்டனர்.(20)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பெரும் தேர்வீரர்கள், அந்த ஆலமரத்தின் நிழலுக்குச் சென்று, அந்தக் காட்டில் அதுவே பெரிய மரம் என்பதைக் கண்டனர்.(21) தங்கள் தேர்களில் இருந்து இறங்கி, தங்கள் விலங்குகளை {குதிரைகளை} விடுவித்த அவர்கள், முறையாகத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தங்கள் மாலைநேர வேண்டுதல்களைச் சொன்னார்கள்[2]. சூரியன் அஸ்த மலைகளை அடைந்ததும், அண்டத்தின் தாயான இரவும் வந்தாள்.(23) கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் விரவிக் கிடந்த ஆகாயமானது, சித்திர வேலைப்பாடுகளால் அமைந்த ஒரு துணியைப் போல ஒளிர்ந்து, மிக உயர்ந்த இனிமையான காட்சியைத் தந்தது.(24) பகலில் திரிவோர் உறக்கத்தின் ஆளுகைக்குள் இருக்கும்போது, இரவில் திரியும் உயிரினங்கள் தங்கள் விருப்பம்போல ஊளையிடவும், கதறவும் தொடங்கின.(25)
[2] கும்பகோணம் பதிப்பில், "அவர்கள் தங்கள் ரதங்களிலிருந்து இறங்கிக் குதிரைகளை அவிழ்த்துவிட்டு விதிப்படி ஆசமனம் செய்து ஸந்தியை உபாஸித்தார்கள்" என்றிருக்கிறது.
இரவில் திரியும் விலங்குகளின் ஒலி பயங்கரமாக இருந்தது. ஊனுண்ணும் விலங்கினங்கள் மகிழ்ச்சியில் நிறைந்ததும், இரவு அடர்ந்து பயங்கரத் தன்மையை அடைந்தது.(26) அந்த நேரத்தில், துயரிலும், கவலையிலும் நிறைந்தவர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.(27) அந்த ஆலமரத்திற்கடியில் அமர்ந்த அவர்கள், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்புக்கும் நடந்த அழிவைக் குறித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்த தொடங்கினர்.(28) உறக்கத்தின் கனத்தை உணர்ந்த அவர்கள், வெறுந்தரையிலேயே தங்களைக் கிடத்திக் கொண்டனர். அவர்கள் கணைகளால் பெரிதும் சிதைக்கப்பட்டவர்களாகவும், மிகவும் களைத்துப்போனவர்களாகவும் இருந்தனர்.(29) பெருந்தேர்வீரர்களான கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் உறக்கத்திற்கு அடிபணிந்தனர். மகிழ்ச்சிக்குத் தகுந்தவர்களும் துயருக்குத் தகாதவர்களுமான அவர்கள் வெறுந்தரையிலேயே நெடுஞ்சாண் கிடையாக நீண்டு கிடந்தனர்.(30)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளிலேயே எப்போதும் உறங்கியவர்களான அவர்கள் இருவரும், களைப்பாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டு ஆதரவற்ற மனிதர்களைப் போல வெறுந்தரையில் கிடந்தனர்.(31) எனினும், கோபம் மற்றும் பழியுணர்ச்சியின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தூங்க முடியாமல் ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(32) சினத்தில் எரிந்து கொண்டிருந்த அவனால் உறக்கத்திற்காகத் தனி விழியைத் தட்டக்கூட முடியவில்லை. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அவன், அந்தப் பயங்கரக் காட்டின் அனைத்துப் பக்கங்களிலும் தன் விழிகளைச் செலுத்தினான்.(33) அந்தப் பெருந்தேர் வீரன் {அஸ்வத்தாமன்}, பல்வேறு வகை உயிரினங்கள் நிறைந்த அந்தக் காட்டை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, காக்கைகள் நிறைந்த ஒரு பெரும் ஆலமரத்தைக் கண்டான்.(34) அந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் அவ்விரவில் வசித்திருந்தன. ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, அருகில் இருந்த மற்ற காக்கையிடமிருந்து தனித்தனியாகப் பிரிந்து இருந்த அந்தக் காக்கைகள் ஒவ்வொன்றும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தன.(35)
எனினும், அனைத்துப் பக்கங்களிலும் அப்பறவைகள் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கரத் தன்மை கொண்ட ஆந்தையொன்று {கோட்டான்} அங்கே தோன்றியதை அஸ்வத்தாமன் கண்டான்.(36) பச்சை நிறக் கண்களையும், பழுப்பு நிற இறகுகளையும் கொண்டதும், பெரும் உடல் படைத்ததும், அச்சந்தரும் வகையில் அலறிக் கொண்டிருந்ததுமான அதன் மூக்கு {அலகு} மிகப் பெரியதாகவும், அதன் நகங்கள் மீக நீண்டவையாகவும் இருந்தன. மேலும் அது வந்த வேகமானது கருடனுக்கு ஒப்பானதாக இருந்தது.(37) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இறகுபடைத்த அந்த உயிரினம் {ஆந்தை}, மென்மையான ஒலியையெழுப்பியபடியே அந்த ஆலமரத்தின் கிளைகளைக் கமுக்கமாக அணுகியது.(38) காக்கைகளைக் கொல்வதான அந்த வானுலாவி {ஆந்தை}, அந்த ஆலமரத்தின் கிளைகளில் ஒன்றில் இறங்கி, உறங்கிக் கொண்டிருக்கும் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றது.(39) அது, தன் கூரிய நகங்களால் சிலவற்றின் சிறகுகளைக் கிழித்து, சிலவற்றின் தலைகளை வெட்டி, பலவற்றின் கால்களை முறித்தது. பெரும்பலம் கொண்ட அது தன் கண்ணெதிரே வீழ்ந்த பலவற்றைக் கொன்றது.(40)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப்பக்கங்களிலும் அடர்த்தியாக விரிந்த ஆலமரத்தின் கிளைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தத் தரையானது, கொல்லப்பட்ட காக்கைகளின் அங்கங்கள் மற்றும் உடல்களால் நிறைந்தது.(41) பகைவர்களைக் கொல்லும் ஒருவன், தன் விருப்பப்படி பகைவர்களிடம் நடந்து கொண்ட பிறகு மகிழ்வதைப் போலவே காக்கைகளைக் கொன்ற அந்த ஆந்தையும் மகிழ்ச்சியால் நிறைந்தது.(42) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, உயர்ந்த பரிந்துரையாக இரவில் அந்த ஆந்தையால் செய்யப்பட்ட அந்தச் செயலைக் கண்டு, அந்த உதாரணத்தின் ஒளியில் தன் செயல்பாட்டை அமைத்துக் கொள்ள விரும்பி, அதைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(43)
அவன் தனக்குள், "இந்த ஆந்தையானது, போரில் எனக்கொரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது. எதிரியை அழிக்க முயலும் நான், செயல்படுவதற்குரிய நேரம் வந்துவிட்டது.(44) வெற்றியாளர்களான பாண்டவர்கள் என்னால் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர். வலிமையையும், விடாமுயற்சியையும் கொண்ட அவர்கள் இலக்கில் துல்லியமும், தாக்குவதில் திறமும் கொண்டிருக்கின்றனர்.(45) எனினும், அவர்களைக் கொல்வதாக மன்னனின் {துரியோதனனின்} முன்னிலையில் நான் சூளுரைத்திருக்கிறேன். சுடர்மிக்க நெருப்புக்குள் விரைந்து செல்லும் ஒரு பூச்சியைப் போலவே, தன்னழிவுக்கான செயலையே இவ்வாறு நான் சூளுரைத்திருக்கிறேன்.(46) நான் அவர்களோடு நியாயமான முறையில் போரிட்டால், நான் என் உயிரை விட வேண்டியதிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், வஞ்சச் செயல் ஒன்றால் வெற்றி எனதானால், என் எதிரிகள் பேரழிவை அடையக் கூடும்.(47) உறுதியற்ற வழிமுறைகளைவிட, உறுதியான வழிமுறைகளையே சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் மெச்சுகின்றனர்.(48)
இச்செயலால் எத்தகு நிந்தனையும், இழிபெயரும் நேர்ந்தாலும், க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்கும் ஒரு மனிதன் இதைச் செய்தே ஆக வேண்டும்.(49) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட பாண்டவர்கள், ஒவ்வொரு தருணத்திலும், மிக இழிவான, நிந்தனைக்குரிய, வஞ்சகம் நிறைந்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து வந்தனர்.(50) இக்காரியத்தைப் பொறுத்தவரை, உண்மையைக் காண்பவர்களும், அறம் நோற்பவர்களுமான மனிதர்களால் பாடப்பட்ட உண்மை நிறைந்த குறிப்பிட்ட புராதன வரிகள் கேட்கப்பட்டிருக்கின்றன.(51) அந்த வரிகள் {சுலோகங்கள்}, "எதிரியின் படையினர், களைத்திருந்தாலும், ஆயுதங்களால் காயமடைந்திருந்தாலும், உண்டு கொண்டிருந்தாலும், ஓய்ந்திருந்தாலும், தங்கள் முகாமில் இருந்தாலும் அவர்கள் தாக்கப்பட வேண்டும்.(52) அதே போலவே, அவர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தாலும், தலைவர்களற்றவர்களாக இருந்தாலும், பிளந்திருந்தாலும், பிழை செய்த தோற்றத்திலிருந்தாலும் அவர்களிடம் அதே வழிமுறையே பின்பற்றப்பட வேண்டும்" என்று சொல்கின்றன" என்று நினைத்தான் {அஸ்வத்தாமன்}.(53)
இவ்வழியில் சிந்தித்தவனான துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் கொல்லும் தீர்மானத்தை அடைந்தான்.(54) இந்தத் தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் அதைச் செய்வதாகத் தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்ட அவன், தனது தாய்மாமன் {கிருபர்} மற்றும் போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்} ஆகிய இருவரையும் விழித்தெழச் செய்தான்.(55) சிறப்புமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான கிருபர் மற்றும் போஜத் தலைவன் {கிருதவர்மன்} ஆகியோர் இருவரும் உறக்கத்திலிருந்து விழித்து, அஸ்வத்தாமனின் திட்டத்தைக் கேட்டனர். வெட்கத்தால் நிறைந்த அவர்கள் இருவரும், தகுந்த மறுமொழியைக் கொடுக்காதிருந்தனர்.(56)
சிறிது நேரம் சிந்தித்த அஸ்வத்தாமன், கண்ணீர் நிறைந்த கண்களுடன், "எவனுக்காக நாம் பாண்டவர்களிடம் பகைமை கொண்டோமோ, பெரும் வலிமை கொண்டவனும், வீரனுமான அந்த மன்னன் துரியோதனன் கொல்லப்பட்டான். பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைவனாக இருந்தாலும், யாருமற்றவனாகவும், தனியனாகவும் இருந்த அந்தக் களங்கமற்ற ஆற்றலையுடைய வீரன், பீமசேனனாலும், போரில் ஒன்றுகூடியவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான இழிந்தோர் பலராலும் தாக்கி வீழ்த்தப்பட்டான்.(57,58) புனித நீராட்டைப் பெற்றதும், மணிமுடி தரித்ததுமான ஒருவனுடைய தலையைத் தனது காலால் தீண்டியதன் மூலம், தீயவனான விருகோதரனால் {பீமனால்} மற்றுமொரு தீய செயல் செய்யப்பட்டிருக்கிறது.(59) பாஞ்சாலர்கள் உரக்க முழங்கிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும், உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்துக் கொண்டுமிருக்கின்றனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், தங்கள் சங்குகளையும், பேரிகைகளையும் முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.(60) காதுகளுக்கு அச்சத்தைத் தருவதும், சங்கொலிகளுடன் கலந்ததுமான அவர்களது இசைக்கருவிகளின் உரத்த ஒலியானது, காற்றினால் பரவும்படி செய்யப்பட்டுத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது.(61) அவர்களது குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறலும், போர்வீரர்களின் முழக்கமும் உரத்த ஆரவாரத்தை ஏற்படுத்துகின்றன.(62)
மகிழ்ச்சியால் நிறைந்த போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடங்களை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது காதுகளைச் செவிடாக்கும் வகையில் உண்டாகும் ஒலியும், அச்சத்தை ஏற்படுத்தும் அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும் கிழக்கில் இருக்கும் நம்மை வந்தடைகிறது.(63) தார்தராஷ்டிரர்களில் நாம் மூவர் மட்டுமே அந்தப் பேரழிவிலிருந்து உயிரோடு எஞ்சியிருக்கிறோம் என்ற அளவுக்கும் பாண்டவர்களால் தார்தராஷ்டிரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பேரழிவானது மிகப் பெரியதாகும்.(64) சிலர் நூறு யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாகவும், சிலர் அனைத்து ஆயுதங்களில் திறன் பெற்றவர்களாகவும் இருந்தனர். காலம் கொண்டு வந்த மாறுபாடுகளின் தருணமாகவே நான் இதைக் கருதுகிறேன்.(65) உண்மையில், அத்தகு செயல்கள் இந்த முடிவுக்கே வழிவகுக்கும். உண்மையில், பாண்டவர்கள் கடினமான சாதனைகளை அடைந்திருந்தாலும், அந்தச் சாதனைகளின் விளைவு இஃதாகவே இருக்க வேண்டும்[3].(66) திகைப்பினால் {மயக்கத்தினால்} உங்கள் அறிவு உங்களை விட்டு அகலாமல் இருக்குமேயானால், ஆபத்து நிறைந்த இந்த முக்கியக் காரியத்தில் நாம் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பதைச் சொல்வீராக" என்றான் {அஸ்வத்தாமன்}.(67)
[3] கும்பகோணம் பதிப்பில், "{பாண்டவர்களால்} செய்யமுடியாத முயற்சி செய்யப்பட்டிருந்த போதிலும், இந்தக் காரியத்துக்கு இவ்விதமாக முடிவு ஏற்பட்ட காரணத்தினால், நிச்சயமாக இந்தக் காரியம் உண்மையில் இவ்வாறு ஆகத்தக்கதே" என்று இருக்கிறது.
சௌப்திக பர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 67
ஆங்கிலத்தில் | In English |