Kripa and Aswatthama converse! | Sauptika-Parva-Section-04 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : காலையில் போரிடலாம் என்று அஸ்வத்தாமனுக்குச் சொன்ன கிருபர்; தன் இதய வேதனை எத்தகையது என்று கிருபருக்கு எடுத்துரைத்த அஸ்வத்தாமன்...
கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, "ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் இதயம் இன்று பழிவாங்குவதில் நிலைத்திருப்பது நற்பேறாலேயே[1]. வஜ்ரபாணியாலேயே {இந்திரனாலேயே} கூட இன்று உன்னைத் தடுக்க முடியாது.(1) எனினும், காலையில் நாங்கள் இருவரும் உனக்குத் துணையாக வருகிறோம். உனது கவசத்தை அகற்றி, உனது கொடிமரத்தை இறக்கி இன்றிரவு ஓய்வெடுப்பாயாக.(2) நீ எதிரியை எதிர்த்துச் செல்லும்போது, கவசம் பூண்டவர்களான நானும், சாத்வத குலத்தின் கிருதவர்மனும், எங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு உனக்குத் துணையாக வருகிறோம்.(3) ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் ஒற்றுமையுடன் நம் ஆற்றலை வெளிப்படுத்தி, நாளைய போரின் அழுத்தத்தில் எதிரிகளான பாஞ்சாலர்களைக் கொல்வோம்.(4) உன் ஆற்றலை வெளிப்படுத்தினால் அந்த அருஞ்செயலை அடைய நீ தகுந்தவனே. எனவே இவ்விரவில் ஓய்ந்திருப்பாயாக. நீ பல இரவுகளாக விழித்திருக்கிறாய்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "பாக்கியத்தினால் செய்ததற்குப் பிரதி செய்வதில் உனக்கு இந்தப் புத்தி உண்டாகிவிட்டது" என்றிருக்கிறது.
ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, உறங்கி, ஓய்வெடுத்து, சிறிது புத்துணர்வை அடைந்த பிறகு, நீ போரில் எதிரியோடு மோதுவாயாக. அப்போது, நீ எதிரியைக் கொல்வாய் என்பதில் ஐயமில்லை.(6) ஓ! தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின் துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான்?(8) எனவே, இவ்விரவில் உறங்கி ஓய்வெடுத்து, களைப்பையுதறிய பிறகு, நாளை காலையில் நாம் எதிரியைக் கொல்வோம்.(9) நீ தெய்வீக ஆயுதங்களில் திறன் கொண்டவன். நானும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. இந்தச் சாத்வதக் குலத்து வீரன் {கிருதவர்மன்}, போரில் எப்போதும் திறன் கொண்ட வலிமைமிக்க வில்லாளியாக இருக்கிறான்.(10)
ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நம் வலிமையைப் போரில் வெளிப்படுத்தி, கூடியிருப்பவர்களான நம் எதிரிகளைக் கொல்வதில் வெல்வோம். உன் கவலைகளை அகற்றி, இவ்விரவில் ஓய்ந்து, மகிழ்ச்சியாக உறங்குவாயாக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நீ எதிரிகளை எதிர்த்து உன் தேரில் செல்லும்போது, விற்களைத் தரித்தவர்களும், எதிரிகளை எரிக்கவல்லவர்களுமான நானும் கிருதவர்மனும் கவசத்தைப் பூண்டு கொண்டு உன்னைப் பின்தொடர்வோம்.(12) எதிரிகளின் முகாமுக்குச் செல்லும் நீ, போரில் உன் பெயரை அறிவித்துக் கொண்டு, அவர்களைப் படுகொலை செய்வாயாக.(13) நாளை காலையில் தெளிவான வெளிச்சத்தில், பெரும் அசுரர்களைக் கொன்ற சக்ரனை {இந்திரனைப்} போல நீ அவர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்து விளையாடுவாயாக.(14) தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, சினத்தால் தானவப் படையைக் கொல்வதைப் போல நீயும் பாஞ்சாலப்படையை வெல்லத் தகுதவனே.(15)
போரில் என்னோடு சேர்ந்தும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் நீ வஜ்ரபாணியாலேயே தாக்குப்பிடித்துக் கொள்ளப்பட முடியாதவனாவாய்.(16) நானோ, கிருதவர்மனோ, பாண்டுக்களை வெல்லாமல் போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.(17) கோபக்காரப் பாஞ்சாலர்களைப் பாண்டவர்களோடு சேர்த்துக் கொல்வோம், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வோம்.(18) எங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் நாங்கள் இருவரும் நாளை காலையில் போரில் உனக்கு உதவிபுரிவோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்" என்றார் {கிருபர்}.(19)
ஓ! மன்னா, தன் தாய்மாமனால் இந்த நன்மையான வார்த்தைகள் சொல்லப்பட்ட போது, அஸ்வத்தாமன் சினத்தில் சிவந்த கண்களுடன், தன் மாமனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(20) "துன்பத்திலோ, சினத்தின் வசத்திலோ, காமத்தின் ஆதிக்கத்திலோ இருப்பவனும், செல்வத்தை அடைவதற்காக எப்போதும் திட்டங்களைச் சுழற்றும் இதயத்தைக் கொண்டவனுமான ஒருவனால் எங்கு உறக்கத்தை அடைய முடியும்?(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும்?(25)
போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் என் உயிரைத் தாங்கிக் கொள்ளும் எண்ணத்தையேகூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் தந்தை {துரோணர்} படுகொலை செய்யப்பட்டதன் விளைவால் அவனும் {திருஷ்டத்யும்னனும்}, அவனுடன் சேர்ந்திருப்போரும் என்னால் கொல்லத்தக்கவர்களாகிறார்கள்.(26) முறிந்த தொடைகளுடன் கிடக்கும் மன்னனின் {துரியோதனனின்} புலம்பல்களைக் கேட்ட பிறகும், எரியாத கடும் இதயம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்?(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்?(28) நான் எத்தரப்பினரைச் சேர்ந்தேனோ, அவர்கள் வெல்லப்பட்டார்கள். விரைந்து வரும் நீரானது கடலை அதிகரிப்பது போல இந்த என் எண்ணமே என் கவலையை அதிகரிக்கிறது.(29)
ஓ! மாமா {கிருபரே}, வாசுதேவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படும் அவர்கள் மஹேந்திரனாலும் தடுக்கப்பட முடியாதவர்களாவர் என்று நான் கருதுகிறேன்.(30) என் இதயத்தில் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனாக நான் இருக்கிறேன். என் கோபத்தைத் தணிக்கக்கூடிய மனிதன் எவனையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(31) என் நண்பர்களின் தோல்வியையும், பாண்டவர்களின் வெற்றியையும் தூதர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அஃது என் இதயத்தை எரிக்கிறது.(32) எனினும், என் எதிரிகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைக் கொன்ற பிறகு, ஓய்வெடுத்துக் கொண்டு, கவலையில்லாமல் உறங்குவேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(33)
சௌப்திக பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |