Aswatthama reached the gate! | Sauptika-Parva-Section-05 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : உறங்குபவர்களைக் கொல்வது முறையாகாது என்று தடுத்த கிருபர்; அதை மறுத்து இரவிலேயே அவர்களைக் கொல்லப்போவதாகச் சொன்ன அஸ்வத்தாமன்; கிருபரும், கிருதவர்மனும் அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றது...
கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, "ஒருவன் பெரியோரிடம் கடமையுணர்வுடன் பணிசெய்பவனாக இருப்பினும், அறிவற்றவனாகவோ, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்காதவனாகவோ இருப்பின், அவனால் அறக்கருத்துகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இதுவே என் கருத்து.(1) அதேபோலவே, பணிவில்லாத அறிவாளியும், அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) துணிச்சல் கொண்ட ஒரு மனிதன், அறிவற்றவனானால், தன் வாழ்நாள் முழுவதும் கல்விமான்களிடம் பணிவிடை செய்தாலும், (கறியிலேயே {குழம்பிலேயே} மூழ்கியிருந்தாலும்) கறிச்சுவையறியாத மரக்கரண்டியைப்[1] போலவே தன் கடமைகளை அறிவதில் தவறுவான்.(3) எனினும், ஞானியான ஒரு மனிதன் கல்விமானிடம் ஒரு கணம் பணிசெய்தாலும், (கறியைத் தீண்டியதும்) கறிச்சுவையறியும் நாவைப் போலத் தன் கடமைகளை அறிவதில் வெல்கிறான்.(4) அறிவைக் கொண்ட மனிதன், பெரியோரிடம் பணிவிடை செய்து, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, அறநெறிகளின் விதிகளை அறிவதில் வென்று, அனைவராலும் ஏற்கப்பட்டவற்றில் ஒருபோதும் சச்சரவு கொள்ள மாட்டான்.(5)
[1] சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ - சிவவாக்கியம் 520
அடங்காதவனும், தொடர்பற்றவனும், தீய ஆன்மா கொண்டவனுமான பாவி, விதியை அலட்சியம் செய்து, தன்னலத்தை நாடினால் பாவத்தையே இழைக்கிறான்.(6) நலம்விரும்பிகள் தனது நண்பனைப் பாவத்தில் இருந்து தடுப்பார்கள். {அவ்வாறு} தடுக்கப்படும் ஒருவன் செழிப்பை வெல்கிறான். வேறுவகையில் செய்பவன் அவல நிலையையே அறுவடை செய்கிறான்.(7) மூளை கலங்கிய ஒருவன், ஆறுதல் தரும் வார்த்தைகளால் தடுக்கப்படுவதைப் போலவே, ஒரு நண்பனும் அவனது நலன்விரும்பிகளால் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படுபவன் ஒரு போதும் அவல நிலைக்கு இரையாகமாட்டான்.(8) ஒரு நல்ல நண்பன் தீச்செயலைச் செய்யப்போகும்போது, ஞானம் கொண்ட அவனது நலன் விரும்பிகள் தங்கள் சக்தி கொண்ட மட்டும் மீண்டும் மீண்டும் அவனைத் தடுக்க முயல வேண்டும்.(9) ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, உண்மையில் எது நன்மையானது என்பதில் உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பின்னால் நீ வருத்தப்படாத வகையில், நான் சொல்வதைச் செய்வாயாக.(10)
உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொல்வது அறவிதிகளுக்கு ஏற்ப இவ்வுலகில் மெச்சப்படுவதில்லை. தங்கள் ஆயுதங்களை வைத்துவிட்டவர்கள், தங்கள் தேர்கள் மற்றும் குதிரைகளில் இருந்து இறங்கியவர்கள் ஆகியோரின் வழக்கிலும் {அவர்கள் கொல்லப்படுவதும்} அவ்வாறே {மெச்சப்படுவதில்லை}.(11) "நாங்கள் உன்னவர்கள்" என்று சொல்பவர்கள், சரணடைந்தவர்கள், கேசம் கலைந்தவர்கள், தாங்கள் ஏறிவந்த விலங்குகள் கொல்லப்பட்டவர்கள், தேர்கள் நொறுக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கொல்லத்தகாதவர்களே.(12) ஓ! தலைவா {அஸ்வத்தாமா}, பாஞ்சாலர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றிவிட்டு இவ்விரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுடன் உறக்கத்தில் மூழ்கியிருப்பவர்கள், இறந்த மனிதர்களைப் போன்றவர்களாவர்.(13) கோணல்புத்தி கொண்ட எந்த மனிதன் அவர்களிடம் அப்போது பகைமை கொள்வானோ, அவன் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பமும் இல்லாதவனாக ஆழமான எல்லையற்ற நரகில் மூழ்கிப் போவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) இவ்வுலகில் நீ ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கொண்டாடப்படுகிறாய். ஒரு சிறு மீறலையும் நீ இதுவரை செய்ததில்லை.(15) அடுத்தச் சூரிய உதயத்தில், அனைத்துப் பொருட்களையும் ஒளி கண்டடையும்போது, பிரகாசம் கொண்ட இரண்டாவது சூரியனைப் போலப் போரில் நீ உன் எதிரிகளை வெல்வாயாக.(16) உன்னைப் போன்ற ஒருவனிடம் இருக்கத் தகாததும், நிந்திக்கத்தக்கதுமான இந்தச் செயலானது, வெண்பரப்பில் சிவப்புப் புள்ளியைப் போலத் தெரியும். இதுவே என் கருத்தாகும்" என்றார் {கிருபர்}.(17)
அஸ்வத்தாமன் {கிருபரிடம்}, "ஓ! அம்மானே {தாய்மாமனே}, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும், அறமெனும் அணையானது இதற்கு முன்பே பாண்டவர்களால் நூறு துண்டுகளாக நொறுக்கப்பட்டுவிட்டது.(13) மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உமது கண்களுக்கும் முன்பாகவே, ஆயுதங்களைக் கீழே வைத்த என் தந்தை {துரோணர்}, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனான கர்ணனும், தன் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்து, பெரும் துயரில் மூழ்கியிருந்தபோது, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.(20) அதேபோலவே, சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், தன் ஆயுதங்களைக் கீழே வைத்து, ஆயுதமற்றவராக ஆன பிறகு, சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்ட அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(21)
அதே போலவே, வலிமைமிக்க வில்லாளியான பூரிஸ்ரவஸ், போர்க்களத்தில் பிராய நோன்பை நோற்றுக் கொண்டிருந்தபோது, மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்தபடியே யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்டார்.(22) பீமனோடு கதாயுதப் போரில் மோதிய துரியோதனனும், பூமியின் தலைவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான்.(23) தன்னைச் சுற்றி நின்ற பெரும் எண்ணிக்கையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மன்னன் {துரியோதனன்} தனியொருவனாக நின்று கொண்டிருந்தான். அத்தகு சூழ்நிலையிலேயே அந்த மனிதர்களில் புலியானவன் {துரியோதனன்}, பீமசேனனால் கொல்லப்பட்டான்.(24) செய்தி சொல்லும் தூதர்கள் மூலமாக அறிந்தவையும், தொடைகள் முறிந்து பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த மன்னனுடையவையுமான அந்தப் புலம்பல்களைக் கேட்டு என் இதயத்தின் மையப் பகுதியே பிளக்கிறது.(25)
அறமெனும் அணையை முறித்தவர்களும், நியாயமற்றவர்களும், பாவிகளுமான பாஞ்சாலர்களும் அத்தகையவர்களே {வஞ்சகர்களே}. கருதுகோள்கள் அனைத்தையும் மீறியவர்களான அவர்களை நீர் ஏன் நிந்திக்கவில்லை.(26) இரவில் உறக்கத்தில் புதைந்திருப்பவர்களும், என் தந்தையைக் கொன்றவர்களுமான பாஞ்சாலர்களைக் கொன்ற பிறகு, அடுத்த வாழ்வில் {ஜென்மத்தில்} நான் ஒரு புழுவாகவோ, சிறகு படைத்த பூச்சியாகவோ பிறந்தாலும் எனக்குக் கவலையில்லை.(27) நான் எதைத் தீர்மானித்திருக்கிறேனோ, அஃதை நிறைவேற்ற என்னை அது விரைவுகொள்ளச் செய்கிறது. அதனால் பரபரப்பாக இருக்கும் நான் எவ்வாறு உறக்கத்தையோ, மகிழ்ச்சியையோ அடைய முடியும்?(28) அவர்களை அழிக்க நான் அமைத்திருக்கும் இந்தத் தீர்மானத்தைக் கலங்கடிக்கவல்லவன் இன்னும் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்" என்றான் {அஸ்வத்தாமன்}".(29)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு மூலையில் இருந்த தன் தேரில் குதிரைகளைப் பூட்டித் தன் எதிரிகள் இருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டான்.(30)
அப்போது, உயர் ஆன்மா கொண்டவர்களான போஜனும் {கிருதவர்மனும்}, சரத்வான் மகனும் {கிருபரும்} அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, "உன் தேரில் ஏன் குதிரைகளைப் பூட்டுகிறாய்? நீ என்ன செய்யப் போகிறாய்?(31) ஓ! மனிதர்களில் காளையே, நாளை உன்னோடு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உன் துன்ப துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். எங்களிடம் நம்பிக்கையின்மை கொள்வது உனக்குத் தகாது" என்றனர்.(32)
தன் தந்தையின் படுகொலையை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன், தான் செய்யத் தீர்மானித்திருக்கும் செயலை உண்மையாக அவர்களிடம் சினத்துடன் சொன்னான்.(33) அவன், "நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளால் கொன்ற என் தந்தை {துரோணர்}, தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(34) அவன் {திருஷ்டத்யும்னன்} தன் கவசத்தை அகற்றி இருக்கும் அதே நிலையில், இன்று நான் அவனைக் கொல்லப் போகிறேன். பாஞ்சால மன்னனின் பாவம் நிறைந்த மகனை ஒரு பாவச்செயலால் இன்று கொல்லப் போகிறேன்.(35) ஆயுதங்களால் கொல்லப்பட்டோர் ஈட்டும் உலகங்களைப் பாவியான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} அடையாதவாறு, ஒருவிலங்கைப் போல அவனைக் கொல்ல நான் தீர்மானித்திருக்கிறேன்.(36) தாமதமில்லாமல் உங்கள் கவசங்களை அணிவீராக, உங்கள் விற்களையும், வாள்களையும் எடுத்துக் கொள்வீராக. தேர்வீரர்களில் முதன்மையானவர்களே, எதிரிகளை எரிப்பவர்களே, எனக்காக இங்கேயே காத்திருப்பீராக" என்றான் {அஸ்வத்தாமன்}.(37)
இவ்வார்த்தைகளைச் சொன்ன அஸ்வத்தாமன், தன் தேரில் ஏறிக் கொண்டு, எதிரியிருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.(38) அந்த மூவரும் எதிரியை எதிர்த்துச் சென்றபோது, தெளிந்த நெய்யூட்டப்பட்ட சுடர்மிக்க மூன்று வேள்வி நெருப்புகளைப் போல ஒளிர்ந்தனர்.(39) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்கள், முகாமில் உறங்கிக் கொண்டிருந்தவர்களான பாஞ்சாலர்களை நோக்கிச் சென்றார்கள். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, {முகாமின்} வாயிலை அடைந்ததும் நின்றான்" {என்றான் சஞ்சயன்}.(40)
சௌப்திக பர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |