A being guarding the gate! | Sauptika-Parva-Section-06 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : முகாமின் வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்; அங்கே ஒரு பெரும்பூதத்தைக் கண்டது; அஸ்வத்தாமன் ஏவிய ஆயுதங்கள் அனைத்தையும் அந்தப் பூதம் விழுங்கியது; மஹாதேவனைத் துதிக்க நினைத்த அஸ்வத்தாமன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, முகாமின் வாயிலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நின்றதைக் கண்டதும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் என்ன செய்தனர். இதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கிருதவர்மனையும், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபரையும் அழைத்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் நிறைந்து முகாமின் வாயிலை அணுகினான்.(2) அங்கே, பெரும் உடற்கட்டைக் கொண்டதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தவல்லதும், சூரியன் அல்லது சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு பூதமானவன் அவ்வாயிலைப் பாதுகாப்பதைக் கண்டான்.(3) அவனது {அந்தப் பூதத்தின்} இடுப்பைச் சுற்றி குருதி சொட்டும் புலித்தோல் இருந்தது. மேலும் அவன் கருப்பு மானை {மானின் தோலை} மேலாடையாக அணிந்திருந்தான். அவன் ஒரு பெரும்பாம்பைத் தன் புனித நூலாக அணிந்திருந்தான்.(4) நீண்டவையாகவும், பருத்தவையாகவும் இருந்த அவனது கரங்கள் பல வகையிலான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்தன. அவன் தனது தோள்களைச் சுற்றிலும் ஒரு பெரும்பாம்பை அங்கதமாக {தோள்வளையாக} அணிந்திருந்தான். அவனது வாய் நெருப்பின் தழல்களுடன் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(5)
அவனது பற்கள் அவனது முகத்தைக் காணப் பயங்கரமானதாகச் செய்தன. அவனது வாய் திறந்திருந்ததாகவும், அச்சந்தருவதாகவும் இருந்தது. அவனது முகமானது ஆயிரக்கணக்கான அழகிய விழிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனது உடலும், ஆடைகளும் வர்ணிக்க இயலாதவையாக இருந்தன. அவனைக் கண்டால் மலைகளே கூட ஆயிரந்துண்டுகளாகச் சிதறிவிடும்.(7) அவனது வாய், மூக்கு, காதுகள் மற்றும் அந்த ஆயிரக்கணக்கான கண்கள் ஆகியவற்றில் இருந்து சுடர்மிக்க நெருப்பின் தழல்கள் வெளிப்படுவதாகத் தெரிந்தது.(8) அந்தச் சுடர்மிக்கத் தழல்களில் சங்குகள், சக்கரங்கள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரிஷிகேசர்கள் {கிருஷ்ணர்கள்} வெளிப்பட்டார்கள்.(9) மொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் அந்த இயல்புக்குமீறிய பூதமானவனைக் கண்ட துரோணர் மகன், எந்தக் கலக்கமும் அடையாமல், தெய்வீக ஆயுதங்களின் மழையால் அவனை மறைத்தான். எனினும் அந்தப் பூதமானவன், துரோணர் மகனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(10) கடல்நீரை விழுங்கும் வடவா நெருப்பைப் போல, அந்தப் பூதமானவன், துரோணர் மகன் ஏவிய கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(11)
தன் கணைமாரி கனியற்றதானதைக் கண்ட அஸ்வத்தாமன், நெருப்பின் தழலைப் போன்ற ஒரு நீண்ட ஈட்டியை {ரதசக்தியை} அவன் மீது ஏவினான்.(12) சுடர்மிக்க முனையைக் கொண்ட அந்த ஈட்டியானது, அந்தப் பூதத்தின் மீது மோதி, யுகமுடிவின்போது, ஒரு பெரும் எரிநட்சத்திரமானது {உற்கையானது} சூரியன் மீது மோதி உடைந்து, ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலத் துண்டுகளாக நொறுங்கி விழுந்தது.(13) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத அஸ்வத்தாமன், வானின் வண்ணத்தைக் கொண்டதும், தங்கக் கைப்பிடியைக் கொண்டதுமான தன் சிறந்த வாளை உறையில் இருந்து உருவினான். அந்த வாளும், பொந்துக்குள் இருந்து வெளிப்படும் சுடர்மிக்கப் பாம்பைப் போல வெளியே வந்தது.(14) பிறகு, துரோணரின் அந்தப் புத்திசாலி மகன் {அஸ்வத்தாமன்}, அந்தச் சிறந்த வாளை அந்தப் பூதத்தின் மீது வீசினான். அந்தப் பூதத்தை அடைந்த அந்த ஆயுதமானது, பொந்துக்குள் மறையும் கீரிப்பிள்ளையைப் போல, அவனது உடலுக்குள்ளேயே மறைந்து போனது.(15) அப்போது சினத்தில் நிறைந்த துரோணரின் மகன், இந்திரனைக் கௌரவிக்க நிறுவப்படும் கம்பின் {இந்திரத்வஜத்தின்} அளவு உள்ள ஒரு சுடர்மிக்கக் கதாயுதத்தை ஏவினான். அந்தப் பூதமானவன் அதையும் விழுங்கினான்.(16) இறுதியாக, தன் ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்து போன அஸ்வத்தாமன், சுற்றிலும் தன் கண்களைச் சுழல விட்டு, மொத்த ஆகாயமும் ஜனார்த்தனின் {கிருஷ்ணனின்} உருவங்களால் அடர்த்தியாக நிறைந்திருப்பதைக் கண்டான்.(17)
ஆயுதங்களை இழந்தவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அற்புதக் காட்சியைக் கண்டு, கிருபரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, துயரமடைந்து, {தனக்குள்ளேயே}, "அறிவுரை கூறும் நண்பர்களின் நன்மையான வார்த்தைகளைக் கேட்காத ஒருவன், நலன்விரும்பிகள் இருவரை அலட்சியம் செய்த மூடனான என்னைப் போலவே, பேரிடரில் மூழ்கி வருந்த வேண்டியிருக்கும்.(19) சாத்திரங்களில் சுட்டப்பட்டுள்ள வழியை அலட்சியம் செய்து, தன் எதிரிகளைக் கொல்ல முயலும் மூடன், அறத்தின் பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் பாதையற்ற காட்டில் தொலைந்து போகிறான்.(20) பசுக்கள், பிராமணர்கள், மன்னர்கள், பெண்கள், நண்பர்கள், தன் தாய், தன் ஆசான், பலவீனன், மடையன், குருடன், உறங்கிக் கொண்டிருக்கும் மனிதன், பயந்த மனிதன், உறக்கத்திலிருந்து அப்போதே எழுந்தவன், போதையில் இருப்பவன், பைத்தியக்காரன், மூளையற்றவன் ஆகியோர் மீது ஒருவன் ஆயுதங்களை ஏவக்கூடாது. பழங்காலத்தின் ஆசான்கள் எப்போதும் இந்த உண்மையை மனிதர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.(21,22) எனினும் நான், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள அழிவில்லாத வழியை அலட்சியம் செய்து, தவறான பாதையில் நடந்து, இந்தப் பயங்கரத் துயரில் விழுந்திருக்கிறேன்.(23)
ஒரு பெரும் செயலை அடைய முயன்று, அச்சத்தால் ஒருவன் விழுவதை {விலகிப் போவதைப்} பயங்கரப் பேரிடராக ஞானியர் அழைக்கின்றனர்.(24) என் திறன் மற்றும் வலிமையை மட்டுமே வெளிப்படுத்தி, என்னால் நான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியவில்லை. விதியை விட மனிதமுயற்சி எதிர்பார்த்த பலனைத் தரும் என்று ஒருபோதும் கருதப்படுவதில்லை.(25) தொடங்கப்பட்ட மனிதசெயலெதுவும் விதியால் வெல்லவில்லையென்றால், அதைச் செய்பவன், அறப்பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் காட்டில் தொலைந்து போகிறவன் ஆகிறான்.(26) ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அச்சத்தால் ஒருவன் விலகும்போது அந்தத் தோல்வியை மடமை என்று தவசிகள் சொல்கின்றனர்.(27) என் செயலுடைய தீய தன்மையின் விளைவால் இந்தப் பேரிடர் எனக்கு வந்திருக்கிறது. அல்லது துரோணரின் மகன், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.(28) மேலும், நான் என் முன்னே காணும் இந்தப் பூதமானவன், மிக அற்புதமானவனாக இருக்கிறான். உயர்த்தப்பட்ட தெய்வீக தண்டத்தைப் போலவே அவன் இங்கே நின்று கொண்டிருக்கிறான். இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், இந்தப் பூதத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை.(29)
நியாயமற்ற வகையில் நான் அடைய முயன்ற பாவம் நிறைந்த என் தீர்மானத்தின் பயங்கரக் கனியே இந்தப் பூதம் என்பதில் ஐயமில்லை. இவன் என் தீர்மானத்தைக் கலங்கடிக்கவே இங்கே நின்று கொண்டிருக்கிறான்.(30) எனவே, போரில் இருந்து நான் விலகுவது விதியால் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விதி என் நோக்கத்திற்குச் சாதகமாகாத வரையில் அஃதை என்னால் நிறைவேற்ற முடியாது.(31) எனவே, இந்நேரத்தில் நான் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடப்போகிறேன். என் முன்பாக உயர்த்தப்பட்டிருப்பதும், அச்சந்தருவதுமான இந்தத் தெய்வீகத் தண்டத்தை அவன் விலக்குவான்.(32) நன்மையனைத்தின் ஊற்றுக்கண்ணும், கபர்தின் {கபர்தி = அடர்ச்சடையன்} என்றும் அழைக்கப்படுபவனும், மனித மண்டையோடுகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும், ருத்ரன் என்றும், ஹரன் என்றும் அழைக்கப்படுபவனும், உமையின் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனை} நான் சரணடையப் போகிறேன்.(33) தவத்துறவுகள் மற்றும் ஆற்றலில் அவன் தேவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்பவனாவான். எனவே, திரிசூலபாணியான அந்தக் கிரிசனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடப்போகிறேன்" என்றான் {அஸ்வத்தாமன்}".(34)
சௌப்திக பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |