The slaughter made by Aswatthama! | Sauptika-Parva-Section-08a | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : கிருபரையும், கிருதவர்மனையும் வாயிலில் அமர்த்திவிட்டு முகாமுக்குள் நுழைந்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தாக்கிக் கொன்றது; ருத்திர ஆயுதத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது. உறங்கிக் கொண்டிருந்த உத்தமௌஜஸைக் கொன்றது; திரௌபதியின் மகன்களைக் கொன்றது; சிகண்டியை இரண்டாகப் பிளந்து கொன்றது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} பகைவரின் முகாமை நோக்கிச் சென்ற போது, அச்சத்தால் கிருபரும், போஜனும் {கிருதவர்மனும்} நின்று விட்டார்களா?(1) பெரும் தேர்வீரர்களான அவர்கள் இருவரும், கோரமான காவலர்களால் தடுக்கப்பட்டு, எதிராளிகள் தடுக்கப்பட முடியாதவர்கள் என்று கருதி கமுக்கமாகத் தப்பி ஓடவில்லையா?(2) அல்லது சோமகர்கள் மற்றும் பாண்டவர்களின் முகாமை கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, துரியோதனன் சென்ற உயர்ந்த மகிமையான வழியிலேயே சென்றுவிட்டார்களா?(3) அந்த வீரர்கள் பாஞ்சாலர்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் சாதனை ஏதும் செய்தார்களா? ஓ! சஞ்சயா, இவையாவையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(4)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உயரான்ம துரோணர்மகன் {அஸ்வத்தாமன்} முகாமை நோக்கிச் சென்றபோது, கிருபரும், கிருதவர்மனும் வாயிலில் காத்திருந்தனர்.(5) ஓ! மன்னா, தங்களையும் {இம்முயற்சியில்} ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்ட அஸ்வத்தாமன், மகிழ்ச்சியில் நிறைந்து, அவர்களிடம் கிசுகிசுக்கும் தொனியில், "முயற்சி செய்தால், க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்லத்தக்கவர்கள் நீங்கள்.(6) எனவே, எஞ்சியிருக்கும் இந்தப் (பாண்டவப்) படையை என்ன சொல்வது? அதிலும் குறிப்பாக உறக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கும் போது அஃதை என்ன சொல்வது?(7) நான் முகாமுக்குள் நுழைந்து யமனைப் போலத் திரியப் போகிறேன். எம்மனிதனும் உயிரோடு தப்பிச் செல்லாத வகையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் உறுதி கொள்கிறேன்" என்றான்.(8) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகைச் சொல்லிவிட்டு, பார்த்தர்களின் பரந்த முகாமுக்குள் நுழைந்தான். அச்சமனைத்தையும் உதறிவிட்டு, எங்கே கதவு இல்லையோ அந்த இடத்தின் வழியாக அதற்குள் ஊடுருவினான்.(9) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன், முகாமுக்குள் நுழைந்ததும், அடையாளங்களால் வழிநடத்தப்பட்டு மெதுவாகத் திருஷ்டத்யும்னனின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(10)
சாதனைகளைச் செய்திருந்த பாஞ்சாலர்கள் போரால் மிகவும் களைத்திருந்தனர். ஒன்றாகக் கூடிய அவர்கள், ஒருவருக்கொருவர் அருகருகே நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.(11) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன், திருஷ்டத்யும்னனின் அறைக்குள் நுழைந்து, தன் எதிரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பாஞ்சால இளவரசனைக் கண்டான்.(12) விலைமதிப்புமிக்கதும், சிறந்ததுமான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த அழகிய பட்டு விரிப்பில் அவன் கிடந்தான். அந்தப் படுக்கையில் சிறந்த மலர்க்குவியல்கள் தூவப்பட்டு, தூபப்பொடிகளால் அது நறுமணமூட்டப்பட்டிருந்தது.(13) ஓ! மன்னா, அஸ்வத்தாமன், நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் தன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த உயர் ஆன்ம இளவரசனை {திருஷ்டத்யும்னனை} உதைத்து, அவனை விழித்தெழச் செய்தான்.(14) போரில் தடுக்கப்பட முடியாதவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உதையை உணர்ந்து, உறக்கத்தில் இருந்து விழித்து, தன் முன்னே நிற்கும் துரோணரின் மகனை அறிந்து கொண்டான்.(15)
அவன் தன் படுக்கையில் இருந்து எழுந்தபோதே, வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவனது {திருஷ்டத்யும்னனின்} தலைமுடியைப் பிடித்து, தன் கரங்களால் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். இவ்வாறு அஸ்வத்தாமனால் பெரும்பலத்துடன் அழுத்தப்பட்ட அந்த இளவரசன், அச்சத்தாலும், உறக்கக் கலக்கத்தாலும் அந்நேரத்தில் தன் பலத்தை வெளிப்படுத்த முடியாதவனாக இருந்தான்.(17) ஓ! மன்னா, தன் பலி {திருஷ்டத்யும்னன்} அலறித் துடித்துக் கொண்டிருந்தபோது, தன் காலால் அவனது தொண்டை மற்றும் மார்பில் மிதித்த துரோணரின் மகன், ஒரு விலங்கைப் போலக் கருதி அவனைக் கொல்ல முயற்சித்தான்.(18)
அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தன் நகங்களால் அஸ்வத்தாமனைக் கிழித்து, இறுதியாக மெதுவாக, "ஓ! ஆசான் மகனே, தாமதிக்காதீர் என்னை ஆயுதத்தால் கொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது செயலின் மூலமாக என்னை நீதியாளர்களின் {நல்லோரின்} உலகத்தை அடையச் செய்வீராக" என்றான்.(19) எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பாஞ்சால மன்னின் மகன் இவ்வளவே சொன்னபோது, அந்த வலிமைமிக்க வீரனின் பலத்தால் தாக்கப்பட்டு அமைதியடைந்தான்.(20) தெளிவில்லாத அந்த ஒலிகளைக் {திருஷ்டத்யும்னனின் குரலைக்} கேட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, "ஓ! உன் குலத்தில் இழிந்தவனே, ஆசான்களைக் கொன்றோருக்கு எவ்வுலகமும் கிடையாது. ஓ! தீய புரிதல் {துர்ப்புத்தி} கொண்டவனே, நீ எந்த ஆயுதத்தாலும் கொல்லப்படத் தகுந்தவனல்ல" என்றான்.(21) அப்படிச் சொன்னவாறே சினத்தில் நிறைந்த அஸ்வத்தாமன், தன் குதிகால்களின் வலிமையான உதைகளால் தன் பலியின் {பலியாடான திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்களைத் தாக்கத் தொடங்கி, மதங்கொண்ட யானையைக் கொல்லும் சிங்கத்தைப் போலத் தன் எதிரியைக் கொன்றான்[1].(22)
[1] கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் அஸ்வத்தாமன், திருஷ்டத்யும்னனை மிதித்தே கொன்றான் என்று பொருள்படும்படி வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. கும்பகோணம் பதிப்பிலோ, "குரூரபுத்தியுள்ளவரும், அதிகக் கோபமுள்ளவருமான துரோணபுத்திரர் பாஞ்சால ராஜகுமாரனை விரைவாகப் பூமியில் தேய்த்துப் பரபரப்புடன் வில்லிலுள்ள நாண்கயிற்றை அவிழ்த்து அவனுடைய கழுத்தில் அந்த நாண்கயிற்றைக் கட்டி விரைவுள்ளவராகவும், கோபமீறினவராகவும் மனத்தைக் குரூரமாகச் செய்துகொண்டு அப்பொழுது அவனைக் கொன்றார். மன்னரே, துரோணபுத்திரர் காலினால் அவனைக் கழுத்திலும் மார்பிலும் கால்களிலும் ஏறி மிதித்துக் கொண்டு அலறுகின்றவனும், துடிக்கின்றவனுமான அந்தத் திருஷ்டத்யும்னனை ஆட்டைக் கொல்வதுபோலக் கொன்றார்" என்றிருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} கொல்லப்படும்போது கதறியதைக் கேட்டு, பாசறையில் இருந்த அவனது மனைவியரும், பாதுகாவலர்கள் அனைவரும் விழித்தெழுந்தனர்.(23) மனித சக்திக்கு அப்பாற்பட்ட பலத்துடன் யாரோ ஒருவன் இளவரசனை நொறுக்குவதைக் கண்ட அவர்கள், தாக்குபவன் இயற்கையைக் கடந்த உயிரினம் {பூதம்} எனக் கருதி அச்சத்தால் கதறாமல் இருந்தனர்.(24) பெரும் சக்தி கொண்டவனான அஸ்வத்தாமன், இத்தகு வழியில் அவனை {திருஷ்டத்யும்னை} யமலோகம் அனுப்பி வைத்துவிட்டு, வெளியே சென்று, தன் அழகிய தேரில் ஏறி நின்றான்.(25) உண்மையில், ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனின் வசிப்பிடத்தில் இருந்து வெளிய வந்த அஸ்வத்தாமன், தன் முழக்கங்களால், திசைப்புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தபடியே தன் எதிரிகளைக் கொல்வதற்காக முகாமின் பிற பகுதிகளுக்குச் சென்றான்.(26)
வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சென்ற பிறகு, பெண்களும், பாதுகாவலர்கள் அனைவரும், துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(27) தங்கள் மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னனின் மனைவியர் அனைவரும், பெரும் சோகத்தால் நிறைந்து உரக்க அழுதனர்.(28) வலிமைமிக்க க்ஷத்திரியர்கள் பலர், அந்த ஓலத்தைக் கேட்டு விழித்தெழுந்து, தங்கள் கவசங்களைப் பூட்டிக் கொண்டு, அந்தக் கூச்சலின் காரணத்தை விசாரிக்க அங்கே வந்தனர்.(29) அஸ்வத்தாமனைக் கண்டு பீதியடைந்திருந்த அந்த மங்கையர், தாமதமில்லாமல் அவனைப் பின்தொடருமாறு பரிதாபகரமான தொனியில் அம்மனிதர்களைக் கேட்டுக் கொண்டனர்.(30) அவர்கள், "அவன் ராட்சசனோ? மனிதனோ? அவன் யாரென்று நாங்கள் அறியவில்லை. பாஞ்சால மன்னனை {திருஷ்டத்யும்னனைக்} கொன்றுவிட்டு அவன் இங்கே இருக்கிறான்" என்றனர்.(31) இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான போர்வீரர்கள் திடீரெனத் துரோணரின் மகனைச் {அஸ்வத்தாமனைச்} சூழ்ந்து கொண்டனர். பின்னவனோ {அஸ்வத்தாமனோ}, அவர்கள் அனைவரையும் ருத்திர ஆயுதத்தின் மூலம் கொன்றான்.(32)
திருஷ்டத்யும்னனையும், அவனது தொண்டர்களையும் கொன்ற பிறகு, படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தமௌஜஸை அவன் {அஸ்வத்தாமன்} கண்டான்.(33) தன் காலால் அவனது தொண்டையையும், மார்பையும் தாக்கிய துரோணரின் மகன், அந்தப் பெரும் வீரன் {உத்தமௌஜஸ்} வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போதே கொன்றான்.(34) அங்கே வந்த யுதாமன்யு, தன் தோழன் ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டான் என்று நம்பி, ஒரு கதாயுதத்தால் வேகமாகத் துரோணரின் மகனைத் தாக்கினான்.(35) அவனை {யுதாமன்யுவை} நோக்கி விரைந்து சென்ற அஸ்வத்தாமன், அவனைப் பிடித்துத் தரையில் சாய்த்து, அவன் உரக்கக் கதறிக் கொண்டிருக்கும்போதே ஒரு விலங்கைக் கொல்வதைப் போல அவனைக் {யுதாமன்யுவைக்} கொன்றான்.(36) இவ்வாறு யுதாமன்யுவைக் கொன்ற அந்த வீரன், உறங்கிக் கொண்டிருந்தவர்களும், மன்னனைச் சேர்ந்தவர்களுமான பிற தேர்வீரர்கள் அனைவரையும் எதிர்த்துச் சென்றான்.(37) அவன், நடுங்கிக் கூச்சலிட்டவர்களான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் வேள்வியில் விலங்குகளைக் கொல்வதைப் போலக் கொன்றான். அப்போது அவன், தன் வாளை எடுத்துக் கொண்டு வேறு பலரையும் கொன்றான்.(38)
வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன் ஒன்றன்பின் ஒன்றாக முகாமின் பல்வேறு பாதைகளில் சென்று, பல்வேறு குல்மங்களைக் கண்டு, அவற்றுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களும், ஆயுதமற்றவர்களும், களைத்தவர்களுமான போர்வீரர்களைக் கணப்பொழுதுக்குள் கொன்றான்.(39) அந்தச் சிறந்த வாளைக் கொண்டு அவன் போராளிகளையும், குதிரைகளையும், யானைகளையும் வெட்டிச் சாய்த்தான். மேனியெங்கும் குருதியால் நனைந்திருந்த அவன் {அஸ்வத்தாமன்}, காலத்தால் நியமிக்கப்பட்ட அந்தகனைப் போலவே அப்போது தெரிந்தான்.(40) {வலது, இடது அசைவுகள் மற்றும் சுழற்றுதல் ஆகிய} தன் மூவகை வாள்வீச்சுகளால் மீண்டும் மீண்டும் தன் எதிரிகளை நடுங்கச் செய்த அஸ்வத்தாமன் குருதியில் குளித்தவனானான்.(41) குருதியில் நனையும், சுடர்மிக்க வாளுடன் போரில் திரிந்து கொண்டிருந்த அவனது வடிவம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பயங்கரமானதாக இருந்தது.(42)
ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர்கள், (சுற்றிலும் தாங்கள் கேட்ட) உரத்த ஒலியால் திகைப்படைந்தனர். துரோணரின் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட அவர்கள், ஒருவரையொருவர் முகங்களைப் பார்த்துக் கொண்டு (அச்சத்தால்) நடுங்கினர்.(43) அந்த எதிரிகளை நொறுக்குபவனின் வடிவத்தைக் கண்ட க்ஷத்திரியர்கள், அவனை ராட்சசனாகக் கருதி தங்கள் கண்களை மூடிக் கொண்டனர்.(44) பயங்கர வடிவத்துடன் யமனைப் போல முகாமுக்குள் திரிந்து கொண்டிருந்த அவன், இறுதியாகத் திரௌபதியின் மகன்களையும், எஞ்சிய சோமகர்களையும் கண்டான்.(45) ஒலியைக் கேட்டு அஞ்சியவர்களும், திருஷ்டத்யும்னன் கொல்லப்பட்டதை அறிந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தத் திரௌபதியின் மகன்கள், விற்களைத்தரித்துக் கொண்டு, அச்சமில்லாமல் துரோணரின் மகன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(46) அவர்களது ஒலியால் விழித்தெழுந்த சிகண்டியின் தலைமையிலான பிரபத்ரகர்கள், தங்கள் கணைகளால் துரோணர் மகனைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.(47) துரோணரின் மகன் தன் மீது கணைகளைப் பொழியும் அவர்களைக் கண்டு உரக்க முழங்கி, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொல்லும் விருப்பம் கொண்டான்.(48) தன் தந்தையின் மரணத்தை நினைத்துப் பார்த்த அஸ்வத்தாமன் சினத்தால் நிறைந்தான். அவன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி (தன் எதிரிகளை எதிர்த்து) மூர்க்கமாக விரைந்தான்.(49) வலிமைமிக்கவனான அஸ்வத்தாமன், பளபளப்பானதும், ஆயிரம் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கேடயத்தையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெரிய வாளையும் எடுத்துக் கொண்டு, திரௌபதியின் மகன்களை எதிர்த்து விரைந்து, தன் ஆயுதத்தால் அவர்களைக் வீழ்த்தத் தொடங்கினான்.(50)
அப்போது அந்த மனிதர்களில் புலி {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் போரில் {அந்தவாளால், யுதிஷ்டிரனின் மகனான} பிரதிவிந்தியனை வயிற்றில் தாக்கினான். அதன்பேரின் அவன் {பிரதிவிந்தியன்} கீழே விழுந்து தன் உயிரை இழந்தான்.(51) வீரனான {பீமன் மகன்} சுதசோமன், ஈட்டியினால் துரோணர் மகனைத் துளைத்து, வாளை உயர்த்திக் கொண்டு அவனை நோக்கி விரைந்து சென்றான்.(52) எனினும், அஸ்வத்தாமன், கையில் வாளுடன் கூடிய சுதசோமனின் கரங்களை வெட்டி, மீண்டும் அவனை விலாப்புறத்தில் தாக்கினான். இதனால் சுதசோமன் உயிரை இழந்து கீழே விழுந்தான்[2].(53) நகுலனின் மகனான சதானீகன், தன் இரு கரங்களாலும் ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துக் கொண்டு, அஸ்வத்தாமனின் மார்பைத் தாக்கினான்.(54) மறுபிறப்பாளனான அஸ்வத்தாமன், தேர்ச்சக்கரத்தை சதானீகன் வீசியபிறகு, வன்மையுடன் அவனைத் தாக்கினான். மிகவும் கலங்கிப் போன நகுலனின் மகன் பூமியில் விழுந்தான். அப்போது துரோணரின் மகன் அவனுடைய {சதானீகனின்} தலையை அறுத்தான்.(55)
[2] கும்பகோணம் பதிப்பில் "மார்பு பிளக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான்" என்றிருக்கிறது.
அப்போது {அர்ஜுனன் மகன்} சுருதகர்மன், ஒரு பரிகத்தை எடுத்துக்கொண்டு அஸ்வத்தாமனைத் தாக்கினான். துரோணர் மகனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அவனது இடது நெற்றியில் பலமாகத் தாக்கினான்.(56) அப்போது அஸ்வத்தாமன் தன் சிறந்த வாளால் சுருதகர்மனின் முகத்தைத் தாக்கினான். அவன் {சுருதகர்மன்}, தன் உணர்வுகளை இழந்து, {கோரமாக} முகம் சிதைந்தவனாக உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(57) பெரும் தேர்வீரனும், {சகாதேவனின் மகன்} வீரனுமான சுருதகீர்த்தி இவ்வொலியைக் கேட்டு அங்கே வந்து, அஸ்வத்தாமன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(58) தன் கேடயத்தால் அந்தக் கணைமாரிகளைக் கலங்கடித்த அஸ்வத்தாமன், காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் {சுருதகீர்த்தியின்} தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(59)
பீஷ்மரைக் கொன்றவனான வலிமைமிக்கச் சிகண்டி, பிரபத்ரகர்கள் அனைவருடன் சேர்ந்து, பல்வேறு ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் அஸ்வத்தாமனைத் தாக்கினான். சிகண்டி, ஒரு கணையால் அஸ்வத்தாமனின் புருவங்களுக்கு மத்தியில் தாக்கினான்.(60) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிகண்டியை அணுகி, தன் வாளால் அவனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டான்.(61) சிகண்டியைக் கொன்ற பிறகு சினத்தால் நிறைந்தவனான அஸ்வத்தாமன், வேறு பிரபத்ரகர்களை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். அவன் எஞ்சியிருந்த விராடப் படையை எதிர்த்தும் சென்றான்.(62) பெரும் பலம் கொண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஒருவர் பின் ஒருவராகத் துருபதனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரைத் தனியாக்கி அவர்களுக்கு மத்தியில் பேரழிவை நிகழ்த்தினான்.(63) வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன், பிற போராளிகளை எதிர்த்து விரைந்து தன் சிறந்த வாளால் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.(64)
பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்கள், கரிய உருவம் கொண்டவளும், குருதி வழியும் வாய் மற்றும் கண்களுடன் கூடியவளும், சிவப்பு மாலை அணிந்தவளும், சிவப்பு வண்ண சந்தனத்தைப் பூசியிருந்தவளும், சிவப்புத் துணியாலான ஒற்றையாடையை உடுத்தியவளும், கையில் சுருக்குக் கயிற்றுடன் கூடியவளும், கிழவிக்கு ஒப்பாகத் தோன்றியவளும், பொலிவிழந்த குரலில் பாடுபவளும், தங்கள் கண்களுக்கு முன்னே முழுமையாக நிற்பவளும், தடித்த கயிற்றில் மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தையும் கட்டி இழுத்துச் செல்பவளுமாக உடல் கொண்டு வந்த அந்தக் கால இரவை {காளராத்ரியைக்} கண்டனர்.(65,66) அவள், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், கயிற்றில் ஒன்றாகக் கட்டப்பட்டவர்களுமான பல்வேறு வகைப் பூதங்களையும், ஆயுதங்களை இழந்த பல வலிமைமிக்கத் தேர்வீரர்களையும் கொண்டு செல்பவளாகத் தெரிந்தாள்.(67) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வேறு நாட்களில், பாண்டவ முகாமைச் சேர்ந்த அந்த முதன்மையான போர்வீரர்கள், உறங்கிக் கொண்டிருக்கும் போராளிகளையும், அவர்களைப் பின்னால் இருந்து தாக்கும் துரோணரின் மகனையும் வழிகாட்டி அழைத்துச் செல்லும் அந்த வடிவத்தை {காளராத்ரியைத்} தங்கள் கனவுகளில் வழக்கமாகக் கண்டு வந்தனர்.(68) அந்தப் பாண்டவப் படைவீரர்கள், முதலில் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் தொடங்கிய போதிலிருந்தே ஒவ்வொரு நாள் இரவிலும், அந்தப் பெண்ணையும், துரோணரின் மகனையும் தங்கள் கனவுகளில் கண்டு வந்தனர்.(69) முன்பே விதியால் பீடிக்கப்பட்ட அவர்கள் இப்போது அச்சந்தரும் வகையில் முழங்கி பீதியடையச் செய்த துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தாக்கப்பட்டனர்.(70) விதியால் பீடிக்கப்பட்டவர்களும், பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் தங்கள் கனவில் ஏற்கனவே கண்டவற்றை நினைத்துப் பார்த்து, இப்போது தாங்கள் காண்பதை அடையாளம் கண்டனர்" {என்றான் சஞ்சயன்}.(71)
சௌப்திக பர்வம் பகுதி – 08அ -வில் உள்ள சுலோகங்கள் : 71
ஆங்கிலத்தில் | In English |